Quotable Quotes Part II

#025. பின்னே திரிந்து​


# 25. உன்னை மறவேன்!

பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணிப் பிறப்பு அறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே? இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே!


மும்மூர்த்திகளின் அன்னையே! மூன்று உலகங்களிலும் அபிராமி என்று போற்றப்படும் அருமருந்தே! உன் அடியார்களைப் பின்பற்றிப் போற்றிப் பிறவிப் பிணியை அறுக்க, முற்பிறவியில் நான் தவங்கள் செய்தேன். உன்னை என்றும் மறவேன். உன் புகழ் பாடி உன்னை ஏத்துவேன்.
 

#026. ஏத்தும் அடியவர்​


# 26. எத்தனை கருணை!

ஏத்தும் அடியவர், ஈரேழ் உலகினையும் படைத்ததும்
காத்தும் அழித்தும் திரிபவராம்; கமழ் பூக் கடம்பு
சாத்தும் குழல் அணங்கே! மணம் நாறும் நின் தாளிணைக்கு என்
நாத் தங்கும் புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே!


மணம் கமழும் கடம்ப மலர்களைச் சூடிய கூந்தைலை உடைய அன்னையே! உன்னைப் போற்றும் அடியார்கள் பதினான்கு உலகங்களையும் படைத்ததும், காத்தும், அழித்தும் திரியும் மும்மூர்த்திகள் ஆவர். ஆயினும் மணம் மிகுந்த உன் திருவடிகளுக்கு, நான் சாத்தும் புன்மொழிகளால் ஆன என் பாமாலையையும் நீ ஏற்றுக் கொள்வது எனக்கே நகைப்பைத் தருகின்றதே!



REPORT THIS AD
 

#027. உடைத்தனை​


# 27. எங்ஙனம் புகழ்வேன்?

உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட் புனலால்
துடைத்தனை சுந்தரி, நின் அருள் ஏதென்று சொல்லுவதே!


அபிராம சுந்தரியே! உள்ளம் உருகும் அன்பை என்னிடம் படைத்துவிட்டாய்.
உன் பதகமலங்களைச் சென்னியில் சூடும் பணியை என்னிடம் ஒப்படைத்துவிட்டாய்.
நெஞ்சில் உள்ள மாசுக்களை எல்லாம் உன் அருட்புனால் துடைத்துவிட்டாய்.
மாயப் பிறவி என்னும் கடலின் கரையை உடைத்துவிட்டாய்.
உன் அருளை நான் எங்ஙனம் புகழ்வேன்?
 

#028. சொல்லும் பொருளும்​


# 28. அடியவர் அடையும் பேறுகள்

சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே! நின் புது மலர்த்தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே, அழியா அரசும்,
செல்லும் தவ நெறியும், சிவலோகமும் சித்திக்குமே!


சொல்லும் பொருளும் போல, நடனம் ஆடும் ஈசனுடன் இணைந்துள்ள, நறுமணம் கமழும் பூங்கொடியே! இரவும், பகலும், உன் புதுமலர் போன்ற அடிகளைத் தொழும் அன்பர்களுக்கே அழியாத அரசும், தவ ஒழுக்கமும், சிவலோகமும் சித்திக்கும்.
 

#029. சித்தியும், சித்தி தரும்​


# 29. திருமேனியின் சிறப்பு!

சித்தியும், சித்தி தரும் தெய்வமும் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும் புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.


அணிமா முதலான அஷ்டசித்திகளும்; அந்த சித்திகளின் தெய்வமாகத் திகழும் பராசக்தியும்; அந்த சக்தி தழைக்கும் பரமசிவனும்; அந்த சிவத்தைக் குறித்துத் தவம் செய்பவர் அடையும் முக்தியும்; அந்த முக்தியின் விதையும்; அந்த விதையிலிருந்து முளைத்து எழுந்த ஞானமும்; அந்த ஞானத்தில் வியாபித்துக் காக்கும் பெருமையும்;
ஆகிய அனைத்துமே அபிராமியே!
 

#030. அன்றே தடுத்து என்னை​


# 30. எல்லாம் உன் கடமை.

அன்றே தடுத்து என்னை ஆண்டு கொண்டாய்! கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செய்யினும், நடுக்கடலுள்
சென்றே வீழினும், கரை ஏற்றுகை நின் திருவுளமே!
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே!


ஓர் உருவமாகவும், பல உருவமாகவும், அருவமாகவும் திகழும் உமை அன்னையே! என்னை நீ என்றோ தடுத்து ஆடக்கொண்டு விட்டாய். அதனை மறப்பது உனக்கு நன்றாகுமா? இனி நான் என்ன பிழை செய்தாலும் பொறுப்பதும், கடலின் நடுவே சென்று நான் வீழ்ந்தாலும் என்னைக் கரை ஏற்றுவதும் உன் கடமையே!
 

#031. உமையும் உமையொரு​


# 31. ஆட்கொண்ட திறம்.

உமையும், உமையொரு பாகனும், ஏக உருவில் வந்து இங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமயங்களுமில்லை, ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.


உமையும், உமையொருபாகனும் என் கனவில் தோன்றி என்னை அவர்கட்க்கு மெய்யன்பர் ஆக்கினர். எனவே இனி நான் சிந்திப்பதற்கு வேறு சமயங்கள் ஏதும் இல்லை. என்னை ஈன்று எடுத்த தாயும் வேறில்லை. மங்கையர் மீது எனக்கு காதலும் இல்லை.
 
Back
Top