• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

#1315 to #1318

#1315. வழிபடும் முறை

பூசிக்கும் போது புவனா பதிதன்னை

ஆசற் றகத்தினில் ஆவா கனம்பண்ணிப்
பேசிப் பிராணப்பிர திட்டை யதுசெய்து
தேசுற் றிடவே தியான மதுசெய்யே.


புவனாபதி அம்மையை வழிபடும் விதம்:

முதலில் மனத்தில் உள்ள காமம் ஆதி குற்றங்களை நீக்கித் தூய்மையுடையதாகப் பண்ணவேண்டும். அகத்தில் அம்மையின் உருவத்தை நினைவு கூர வேண்டும். வெளியில் கும்பம், பிம்பம், சக்கரம் இவற்றில் அவற்றுக்கு உரிய மந்திரங்களால் ஆவாகனம், தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம் என்பவற்றைச் செய்ய வேண்டும். எல்லா உபசாரங்களையும் செய்து முடித்த பின் ஒளிமிக்க அம்மையின் வடிவம் மனத்திலே நன்கு பொருந்தும்படி அவளை நன்கு தியானிக்க வேண்டும்.


#1316. அம்மையின் வடிவம்


செய்ய திருமேனி செம்பட் டுடைதானும்

கையில் படைஅங் குசபாசத் தோடபயம்
மெய்யில் அணிகலன் ரத்தின மாம்மேனி
துய்ய முடியும் அவயவத் தோற்றமே.


புவனாபதி அம்மையின் வடிவம்:

அவள் நிறம் செம்மை; அணியும் உடை செம்பட்டு; இரு கரங்களில் ஏந்துபவை அங்குசம், பாசம்; இரு கரங்கள் அளிப்பது அபய வரதம்; மற்றும் அங்கங்களுக்கு ஏற்ற அழகிய அணிகலன்கள், தலையில் இரத்தின கிரீடம்.


#1317. பால் அடிசில் நிவேதனம்


தோற்போர்வை நீக்கித் துதித்தடைவில் பூசித்துப்

பாற்போ னகம்மந் திரத்தால் பயின்றேத்தி
நாற்பால “நாரதாயா சுவாகா` என்று
சீர்ப்பாகச் சேடத்தை மாற்றியபின் சேவியே.


புவனாபதிக்கு வழிபாடு செய்யும் பொழுது, மேலாடையை எடுத்து அரையில் கச்சு போலக் கட்டிக் கொள்ள வேண்டும். நிவேதனம் பால் அடிசில். நிவேதிக்கும் மந்திரம் “ஓம் நாரதாயா சுவாஹா:” இந்த மந்திரத்தால் நான்கு திசைகளிலும் நிவேதனம் செய்தல் வேண்டும். வழிபாடு முடிந்த பின்பு பாரங்முக அர்க்கியத்தால் அம்மையை முகம் மாற்றிய பின்பே நிர்மாலிய நிவேதனத்தைக் கைக்கொள்ளல் வேண்டும்.


#1318. விரும்பியது கிடைக்கும்


சேவிப் பதன்முன்னே தேவியைஉத் வாபனத்தால்

பாவித் திதய கமலம் பதிவித்தங்
கியாவர்க்கு மெட்டா இயந்திர ராசனை
நீவைத்துச் சேமி நினைந்த தருமே.


நிவேதனப் பொருளைக் கைக் கொள்வதற்கு முன்னர், கும்ப விம்ப சக்கரங்களில் நிறுவப்பட்ட தேவியை உரிய மந்திரம், கிரியை, பாவனைகளால் தன் இருதயத்தில் ஒடுக்க வேண்டும். யாவர்க்கும் அணுகுதற்கு அரிய மேலான சக்கரத்தை நீ உள்ளத்திலே மறவாது வைத்தால் பின்பு இது நீ விரும்புகின்ற எல்லாம் உனக்குக் கொடுக்கும்.

 
13. நவாக்கரி சக்கரம்

13. நவாக்கரி சக்கரம்

#1319 to #1322

#1319. ஒன்பது ஒன்பது எழுத்துக்கள்

நவாக்கரி சக்கரம் நான்உரை செய்யின்
நவாக்கரி ஒன்று நவாக் கரியாக
நவாக்கரி எண்பத் தொருவகை யாக
நவாக்கரி அக்கிலீம் சௌம்முதல் ஈறே.


நவாக்கரி சக்கரத்தின் இயல்பை நான் உனக்குச் சொல்லுவேன்.
ஒன்பது எழுத்துத் தொகுதியில் ஒவ்வொன்றும் ஒன்பது எழுத்தாகின்ற முறையால், ஒன்பது ஒன்பது எழுத்துக்கள், எண்பத்தோரெழுத்து என்னும்படி நிற்கும். அந்தத் தொகுதி `ஸௌம்` என்று தொடங்கி, `க்லீம்` என்று முடியும்.


#1320. நவாக்கரியின் உரு


சௌம்முதல் அவ்வொடும் ஔவுடன் ஆம்கிரீம்
கௌவுமும் ஐமும் கலந்திரீம் சிரீம்என்
றொவ்வில் எழும்கிலீம் மந்திர பாதமாச்
செவ்வுள் எழுந்து சிவாயநம என்னவே.

The Nine Mantras: 1) Srim 2) Hrim 3) Aim 4) Gaum 5) Krim 6) Haum 7) Aum 8) Saum 9) Klim

ஒவ்வொரு முறையும் முடிவில் `சிவாய நம` என்று சொன்னால் நவாக்கரி சக்கர வழிபாடு கைவரும்.


#1321. நலம் தருவாள்


நவாக் கரியாவதும் நானறி வித்தை
நவாக் கரியுள்எழும் நன்மைகள் எல்லாம்
நவாக் கரிமந்திரம் நாவுளே ஓத
நவாக் கரிசத்தி நலந்தருந் தானே.

நவாக்கரி சக்கர வழிபாடு நான் அறிந்த சிறந்த வழிபாடாம். அதனால் நலங்கள் விளையும். நவாக்கரி மந்திரத்தை நாம் உருச் செய்தால் அந்த மந்திரத்திற்குரிய சத்திதேவி நமக்கு எல்லா நன்மைகளையும் தருவாள்.


#1322. தீவினைகள் ஓடி விடும்


நலந்தரு ஞானமும் கல்வியும் எல்லாம்
உரந்தரு வல்வினை உம்மைவிட் டோடிச்
சிரந்தரு தீவினை செய்வ தகற்றி
வரந்தரு சோதியும் வாய்த்திடுங் காணே.


நவாக்கரி சக்கர வழிபாடு பெரும் நன்மை புரியும் அனுபவ ஞானம் தரும். அதற்கு ஏதுவாகிய கலா ஞானம் வலியுறும். உம் வல்வினைகள் உம்மை விட்டு ஓடிவிடும். இந்த வழிபாட்டினால், வேண்டுபவர் வேண்டுவதைத் தருகின்ற சிவனது திருவருள் கைக்கூடும். அது உமக்குத் துன்பத்தைத் தரவிருந்த தீய வினைகளை ஓட்டி விடும்




 
திருமந்திரம் - நான்காம் தந்திரம்

#1323 to # 1325


#1323. நினைத்த மாத்திரத்தில் பயன்கள்

கண்டிடும் சக்கரம் வெள்ளிபொன் செம்பிடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடும் மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கு மளவே.


நவாக்கரி சக்கரத்தை வெள்ளி அல்லது பொன் அல்லது செம்புத் தகட்டிலே அமையுங்கள். பின்பு மனத்தில் அதை ஊன்றி நினையுங்கள். உள்ளத்தில் நிலை பெறுகின்ற அந்தச் சக்கரம் உம்மை நோக்கி வருகின்ற வினைகளை நீங்கள் வெல்ல உதவும். உம்மால் உலகத்தை வெற்றி கொள்ள இயலும். அது நினைத்த அளவிலே நினைத்த பயன்களைத் தரும்.


#1324. தேவிக்கு உகந்த அர்ச்சனை


நினைத்திடும் அச்சிரீம் அக்கிலீம் ஈறா
நினைத்திடும் சக்கரம் ஆதியும் அந்தமும்
நினைத்திடும் நெல்லொடு புல்லினை உள்ளே
நினைத்தி (டு) அருச்சனை நேர்தரு வாளே.


நினைக்கத் தகுந்த ‘க்லீம்’ என்பதை ஈறாக உடைய நவாக்கரங்களை, நினைக்கின்ற சக்கரத்தின் முதலெழுத்து முதல் ஈற்றெழுத்து முடிய, இந்தச் சக்கரத்தின் சக்தி விரும்புகின்ற செந்நெல், அறுகம்புல் என்பவற்றைக் கொண்டு அருச்சனை செய்தால் அந்த அருச்சனையை அந்த சக்தி ஏற்றுக்கொள்வாள்.


#1325. எண்ணிய எண்ணியாங்கு எய்தலாம்


நேர்தரு மந்திர நாயகி யானவள்
யாதொரு வண்ணம்? அறிந்திடு பொற்பூவை
கார்தரு வண்ணம் கருதின கைவரும்
நார்தரு வண்ணம் நடந்திடு நீயே.


வழிபடுபவருக்கு நேரே வந்து அருள் புரிகின்ற அந்தச் சக்கரத்தின் சக்தி என்ன நிறத்தை உடையவள்? அழகிய தேவியாகிய அவள் மேகம் போன்ற நிறத்தை உடையவள். இதனை அறிந்து கொண்டு அவளிடம் மாறாத அன்பு செலுத்து. அப்பொழுது நீ எண்ணியவற்றை எண்ணியவாறு எய்தலாம்.




 
திருமந்திரம் - நான்காம் தந்திரம்

#1326 to #1330


#1326. பராசக்தி பொருந்திட நடந்து கொள்!

நடந்திடும் பாரினில் நன்மைகள் எல்லாம்
கடந்திடும் காலனும் எண்ணிய நாளும்
படர்ந்திடும் நாமமும் பாய்கதிர் போல
அடைந்திடும் வண்ணம் அடைந்திடு நீயே.


உலகில் எல்லா நன்மைகளும் கிடைக்கும். காலன் விதித்த வாழ்நாட்கள் கடந்திடும். பரவிச் செல்லும். கதிரவன் கதிர்கள் போல உன் புகழ் புகழ் நாற்றிசையும் பரவிச் செல்லும். இவை அனைத்தும் நிகழப் பராசக்தி உன்னிடம் வந்து பொருந்தும் வண்ணம் நீ நடந்து கொள்ள வேண்டும்.


#1326. பராசக்தி பொருந்திட நடந்து கொள்!


அடைந்திடு பொன் வெள்ளி கல்லுடன் எல்லாம்
அடைந்திடும் ஆதி அருளும் திருவும்
அடைந்திடும் அண்டத்து அமரர்கள் வாழ்வும்
அடைந்திடும் வண்ணம் அறிந்திடு நீயே.

பொன்னும், வெள்ளியும், மணியும் உன்னிடம் தாமே வந்து சேரும். பராசக்தியின் அருளும், ஞானமும் தாமே கைவரும். அமரர்களின் வாழ்வினை நீ அடையலாம். இதற்கு அந்தப் பராசக்தியை அடையும் வழியை முதலில் நீ அறிந்து கொள்ள வேண்டும்.


#1328. சிவனை அடைய முயற்சி செய்


அறிந்திவார்கள் அமரர்களாகத்
தெரிந்திடு வானோர் தேவர்கள் தேவன்
பரிந்திடும் வானவன் பாய் புனல் சூடி
முறிந்திடு வானை முயன்றிடு நீரே


அமர வாழ்வு பெறுவதற்காக மக்கள் நவாக்கரியை அறிந்து கொள்கின்றார்கள். தன்னைத் தெரிந்து கொண்ட தன் அன்பர்களுக்குத் தேவர்களின் தேவன் சிவபெருமான் பரிந்து வந்து அருள்வான். பாய்ந்து வந்த கங்கையின் பொங்கும் நீரைத் தன் புரிசடையால் முறித்த அந்தச் சிவபெருமானை அடைவதற்கு நீ முயற்சி செய்வாய்.


#1329. மேக மண்டலத்தில் காணலாம்


நீர்பணி சக்கரம் நேர்தரு வண்ணங்கள்
பாரணி யும்’ஹ்ரீம்’ முன் ‘ஸ்ரீம்’ ஈறாகத்
தார்அணி யும்புகழ்த் தையல்நல் லாள்தன்னைக்
கார்அணி யும்பொழில் கண்டு கொள்ளீரே.


நீங்கள் வணங்கும் இந்த நவாக்கரிச் சக்கரத்தில் பொருந்தியுள்ளன பாரோர் பணியும் ‘ஹ்ரீம்’ முதல் ‘ஸ்ரீம்’ ஈறாக ஒன்பது எழுத்துக்கள். இதனை நீங்கள் நன்கு வழி பட்டால், தார் அணிந்த, புகழ் மிகுந்த, தையல் நல்லாளைக் கார்மேகம் போன்ற மண்டலத்தில் உங்களால் காண முடியும்.

சரியான உச்சரிப்பு இதோ!

(1). Hrim, (2). Aim, (3). Gaum, (4). Krim, (5). Haum, (6). Aum, (7). Saum, (8). Klim, (9). Srim.


#1330. முகம் வசீகரம் அடையும்


கண்டு கொள்ளுந் தனிநாயகி தன்னையும்
மொண்டு கொளும் முக வசியம தாயிடும்
பண்டு கொளும் பரமாய பரஞ்சுடர்
நின்று கொளுந் நிலை பேறுடையாளையே.


தனக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லாத அந்தத் தனிநாயகி சக்தி தேவியைக் கண்டு கொண்டால், அள்ளி அருந்தும் வண்ணம் அழகிய முகப் பொலிவு உண்டாகும். மேன்மை பொருந்திய பரமசிவன் மஞ்சமாக இருந்து தாங்குகின்ற பேறு பெற்ற சக்தி தேவியை நிலையாக உங்கள் உள்ளத்தே கொள்ளுங்கள்.




 

4. திருமந்திரம் - நான்காம் தந்திரம்

#1331 to #1335

#1331. மன்னன் வசமாகிப் பகை அழியும்

பேறுஉடை யாள் தன் பெருமையை எண்ணிடல்
நாடுஉடை யார்களும் நம்வசம் ஆகுவர்,
மாறுஉடை யார்களும் வாழ்வது தான் இலை;
கூறுஉடை யாளையும் கூறுமின் நீரே.


நீங்கள் அடையும் பேற்றினால் நாட்டை ஆளும் மன்னன் உங்கள் வசமாவான். உங்கள் பகைவர் அழிவர். ஆகையால் தன் உடலின் ஒரு பாதியில் இறைவனைக் கொண்டுள்ள அந்தச் சக்தி தேவியைத் இடையறாது துதியுங்கள்.


#1332. பிறவிப் பிணி அறுப்பீர்


கூறுமின் எட்டு சைதலைவியை,
ஆறுமின் அண்டத்து அமரர்கள் வாழ்வுஎன,
மாறுமின் வையம் வரும்வழி தன்னையும்,
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.


எட்டு திசைகளுக்கும் தலைவியாகிய சக்திதேவியை வழிபடுங்கள். அமரர்களின் வாழ்வை பெறக் கொண்ட அவாவினை மாற்றி விடுங்கள். மீண்டும் மீண்டும் பிறந்து இந்த பூமிக்குத் திரும்பும் வழியினை அகற்றி விடுங்கள். நாயகியின் சேவடிகளைச் சேர்ந்து பிறவியில் முன்னேற்றமடையுங்கள்.


#1333. திருவடிகளைக் காணுவர்.


சேவடி சேரச் செறிய இருந்தவர்
நாவடி யுள்ளே நவின்று நின்றேத்துவர்
பூவடியிட்டுப் பொலிய இருந்தவர்
மாவடி காணும் வகையறி வாரே.


சக்திதேவியின் திருவடிகளை இடையறாது நினைவில் கொள்ளுபவர்கள் அவள் திருநாமத்தை நாவசையாமல் மௌனமாக மனதில் செபம் செய்வர். அங்ஙனம் தங்கள் பார்வையும் அகத்துள்ளே செலுத்தி இருப்பவர்கள் அவள் பெருமை வாய்ந்த திருவடிகளைக் காணும் பேறு பெறுவார்.


#1334. நவாக்கரியின் பீச மந்திரம்


ஐம் முதலாக வளர்ந்து எழு சக்கரம்
‘ஐம்’ முதலாக அமர்ந்து, ‘இரீம்’ ஈறாகும்;
ஐ முதலாகிய யவர்க்கு உடையாள் தனை
‘ஐம்’ முதலாக வழுத்திடு நீயே.


‘ஐம்’ முதலாக வளர்ந்து தோன்றும் இந்தச் சக்கரம். ஐம் முதலாகப் பிற பீசங்களுடன் இறுதியில் ‘ஹ்ரீம்’ என்ற பீசம் வரும். அகர எழுத்தின் பொருளாகிய சிவனுக்கு உரிய சக்தி தேவியை மாயைக்கு முதல்வியாகப் போற்றுவாய் நீ!


#1335. வாகீஸ்வரி தோன்றுவாள்


வழுத்திடும் நாவுக்கரசு இவள் தன்னைப்
பகுத்திடும் வேதம் மெய் ஆகமம் எல்லாம்
தொகுத்து ஒரு நாவிடை சொல்ல வல்லாளை
முகத்துளும் முன் எழக் கண்டு கொளீரே.


வாகீஸ்வரியாகிய சக்தி தேவியை, வேதங்களும் ஆகமங்களும் போற்றிப் புகழ்ந்திடும். அந்த வேதங்களையும், ஆகமங்களையும் நாம் பயின்றிட வாகீஸ்வரியின் அருள் மிகவும் அவசியம். அவளைத் துதித்து அவளை நாம் முகத்தின் உள்ள அண்ணாக்குக்கு முன்னே எழச் செய்ய இயலும்.




 
திருமந்திரம் - நான்காம் தந்திரம்

#1336 to #1340


#1336. எல்லாம் அறியும் அறிவு தரும்

கண்ட இச்சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்ட இம் மந்திரம் கூத்தன் குறியதாம்;
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய்
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே.


இந்தச் சக்கரத்தை ஒருவர் நாவில் எழுதினால் அது கூத்த பிரானின் வடிவமாகிவிடும். பொன்மன்றில் விளங்கும் உயரிய சபாவித்தையும் கைகூடும். மெல்லியல் நங்கையாகிய நவாக்கரியின் அருள் இருந்தால் ஒருவர் உலகையே வெல்ல இயலும்.


#1337. நல்லியல்பாகிய நாட்களை நல்கும்


மெல்லியல் ஆகிய மெய்ப்பொருளாள் தன்னைச்
சொல்இயலாலே தொடர்ந்து அங்கு இருந்திடும்
பல்லியல் ஆகப் பரந்துஎழு நாள் பல
நல்லியல் பாலே நடந்திடும் தானே.


மெல்லியல் ஆகிய அந்த மெய்ப்பொருள் சக்தி தேவியைக் குருவின் உபதேசத்தின்படி நீங்கள் இடையறாது தியானம் செய்யுங்கள். இன்பமும், துன்பமும் கலந்த மனித வாழ்வு அப்போது துன்பம் அற்ற, இன்பம் உற்ற வாழ்வாக மாறிவிடும்.


#1338. சொல்லும் வண்ணம் செயல்கள் நிகழும்


நடந்திடும் நாவினுள் நன்மைகள் எல்லாம்
தொடர்ந்திடும் சொல்லொடு சொற்பொருள் தானும்
கடந்திடும் கல்விக்கு அரசு இவனாகப்
படர்ந்திடும் பாரில் பகை இல்லை தானே.


நல்ல செயல்கள் பல இவன் நாவால் கூறிய வண்ணம் நிகழும். இவன்
செப்பியவாறே செயல்களின் பயன்களும் விளையும். கல்வியின் அரசி இவன் நாவில் குடி இருப்பாள். எனவே இவனும் நாவரசனாகத் திகழ்ந்திடுவான். பரந்து விரிந்த இந்த உலகில் இவனுக்கு பகைவர் என்று எவரும் இரார்.


#1339. வந்து வணங்கி நிற்கும்


பகை இல்லை ‘கௌ’ முதல் ‘ஐ’ ஈறா
நகை இல்லை சக்கர நன்று அறிவார்க்கு
மிகை இல்லை சொல்லிய பல் உரு எல்லாம்
வகை இல்லை ஆக வணங்கிடும் தானே.

பகையைக் கெடுக்கும் ‘கௌம்’ முதல் ‘ஐம்’ இறுதியாய் உள்ள இந்தச் சக்கரத்தை நன்கு அறிந்த ஒருவனை, எவரும் இகழ்ந்து பேச மாட்டார். பல வேறுபட்ட வடிவங்களாக இருப்பவை எல்லாம் இவருக்கு மாறுபட்டவை அல்ல. அவை வேறு வழியின்றி வந்து இவரை வணங்கி நிற்கும்.


#1340. எண்ணிய எண்ணிய வண்ணம் எய்துவர்


வணங்கிடுந் தத்துவ நாயகி தன்னை
நலங்கிடு நல்லுயிரானவை யெல்லாம்
கலங்கிடும் காம வெகுளி மயக்கம்
துலங்கிடும் சொல்லிய சூழ்வினை தானே.


இந்தத் தத்துவ நாயகியை எல்லோரும் வணங்கி நிற்பர். நல்ல சீவன்கள் எல்லாம் அவளுடன் நன்கு பொருந்தி நிற்கும். அவர்களைக் கலங்கச் செய்யும் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களும் அகன்று விடும். அவர்கள் எண்ணியவற்றை எண்ணிய வண்ணம் எய்துவர்.




 
The increase in the traffic in this thread means that some people are realizing that these are from Thiru Moolar's Thiru Manthiram.
Here are the links to all the nine thanthirams of Thiru manthiram.

Thiru Moolar's Thirumanthiram blogs:


1. திருமந்திரம் - முதலாம் தந்திரம்

2. திருமந்திரம் - இரண்டாம் தந்திரம்

3. திருமந்திரம் - மூன்றாம் தந்திரம்

4. திருமந்திரம் - நான்காம் தந்திரம்

5. திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

6. திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

7. திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

8. திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

9. திருமந்திரம் - ஒன்பதாம் தந்திரம்


திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறை ஆகும். தமிழில் முதல் முதலில் தோன்றிய யோக நூல் இது என்பது இதன் தனிச் சிறப்பு. முதல் சித்தர் திருமூலரே ஆவார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர் மட்டுமல்ல. அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் ஒருவர் ஆவார் திருமூலர். திருவாவடுதுரையில் ஓர் அரச மரத்தின் கீழ் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். ஆண்டுக்கு ஒரு பாடல் என்று மூவாயிரம் பாடல்களை இவர் இயற்றினார் என்பர்.
 
#1341 to #1345

#1341. நினைத்ததைப் பேசுவான்

தானே கழறித் தணியவும் வல்லனாய்,
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனி நடம் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனும் ஆமே.


மேற்
கூறிய மனிதன் தானே தனக்கு மேலே எவரும் இல்லாத வண்ணம் பேசுவான். தானே எண்ணியவற்றை எல்லாம் ஒளிக்காமல் பேசுவான். தானே ஊழிக் காலத்தில் சிவபெருமானின் சங்காரத் தாண்டவம் காண்பான். தானே வணங்கித் தலைவனும் ஆவான்.

#1342. தீ வினைகள் போகும் புண்ணியம் வரும்


ஆமே யனைத்துயி ராகிய அம்மையும்
தாமே சகலம் ஈன்றவத் தையலும்
ஆமே யவளடி போற்றி வணங்கினால்
போம் வினைகளும் புண்ணிய னாகுமே.


சக்தியே அனைத்து உயிர்களாகவும் தோன்றி உள்ளாள். அனைத்து உயிர்களின் அன்னையும் அவளே ஆவாள். அவள் திருவடிகளைப் போற்றிப் பணிந்தால் நம் தீ வினைகள் அகன்று செல்லும். புண்ணியம் வந்து சேரும்.

#1343. அவனியில் இனியவன் ஆவான்


புண்ணியன் ஆகிப் பொருந்தி உலகெங்கும்
கண்ணியன் ஆகிக் கலந்து அங்கு இருந்திடும்
தண்ணியன் ஆகித், தரணி முழுதுக்கும்
அண்ணியன் ஆகி அமர்ந்திருந் தானே.


புண்ணியன் ஆனவன் உலகம் முழுவதும் பொருந்தும் ஒரு கண்ணியன் ஆவான். அனைவருடன் கலந்து சிறந்து விளங்குவான். அவன் அனைத்துயிர்களின் மீதும் தண்ணருள் கொண்டிருப்பான் . அவனியில் அனைவருக்கும் அவன் மிகவும் இனியவனாக இருப்பான்.

#1344. வையம் கிளர் ஒளியாவாள்


தான் அது கிரீம் ‘கௌ’ – அது ஈறாம்
நான் அது சக்கரம், நன்று அறிவார்க்கு எல்லாம்
கான் அது கன்னி கலந்த பராசத்தி
கேள் அது வையம் கிளர் ஒளியானதே.


நவாக்கரிச் சக்கரத்தின் பீசம் ‘கிரீம்’ முதல் ‘கௌம்’ வரை ஆகும். “அது நானாக உள்ள சக்கரம்” என்ற உண்மையை நன்கு அறிந்தவர்களுக்கு; அஞ்ஞானம் என்கின்ற வனத்தில் இருள் மயமாக இருந்து வந்த த சக்தி தேவி அழியாத உறவாக ஆகிவிடுவாள். அவள் அறிவு நிலையில் ஒளியாகி எல்லா உயிர்களிடமும் பொலிவாள்.

#1345. அறிந்து கொண்டவர் அருள் பெறுவர்


ஒளிக்கும் பராசக்தி உள்ளே அமரில்
களிக்கும் இச்சிந்தையில் காரணம் காட்டித்
தெளிக்கும் மழையுடன் செல்வம் உண்டாக்கும்
அளிக்கும் இவளை அறிந்து கொள்வார்க்கே.


ஒளிரும் பராசக்தி உள்ளத்தில் ஒருவரின் எழுந்தருளினால், அவர் மனம் களிக்கும்வண்ணம் உண்மைப் பொருள் அவருக்கு நன்கு விளங்கும். நல்ல தெளிவு பிறக்கும். அருள் மழை பொருட் செல்வதை உண்டாக்கும். இவளை நன்கு அறிந்து கொண்டவருக்கு இவை அனைத்தும் நிகழும்.
 
திருமந்திரம் - நான்காம் தந்திரம்

#1346 to #1350


#1346. வழிபாடு தரும் நன்மைகள்

அறிந்திடும் சக்கரம் அர்ச்சனையோடே
எறிந்திடும் வையத்து இடர் அவை காணின்;
மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்யும்
பொறிந்திடும் சிந்தை புகையில்லை தானே.


நவாக்கரிச் சக்கரத்தைப் பூசித்து இவற்றை நீ அறிந்து கொள்ளலாம். அதனால் உன்னுடைய உலகத் துன்பம் விலகும். அது உன் பகைவர்களைத் தடுத்து நிறுத்தும். மன்னனும் தேடி வந்து உன்னை வணங்குமாறு செய்யும். சிந்தையைக் கலக்கும் துன்பங்கள் உனக்கு நேரா.

#1347. பகை, புகை, சினம் வாரா


புகையில்லை சொல்லிய பொன்னொளி யுண்டாம்
குகையில்லை கொல்வ திலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாம்
சிகையில்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே.


நவாக்கரிச் சக்கர வழிபாடு செய்பவர்களுக்கு மனவருத்தம் ஏற்படாது. அவர்களின் உடல் பொன் போன்ற ஒளி பெறும். அவர்கள் பிற உயிர்களை கொல்லாதவர்கள். ஆதலால் மீண்டும் கர்ப்ப வாசம் என்னும் குகை அவர்களுக்கு இல்லை. வாழ விரும்பும் உயிர்களுக்கு இதைவிடச் சிறந்த வகை வேறு ஒன்றும் இல்லை. அவர்களுக்கு முடிவும் என்பதும் இல்லை.

#1348. ஞான ஒளி படரும்


சேர்ந்தவர் என்றும் திசை ஒளி ஆனவர்
காய்ந்தெழும் மேல்வினை காண்கிலாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரினில் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறு ஒளி தானே.

நவாக்கரிச் சக்கரத்தைத் தியானித்தவர் சிறந்த ஒளியுடல் பெறுவார். காய்ந்து எழுகின்ற தீ வினைப் பயன்களை இவர் அனுபவிக்க மாட்டார். இவர் உடலில் எழும் உள்ளொளி அவர் இருக்கும் இடத்தில் படர்ந்து செல்லும். அங்கு நிலவிய அஞ்ஞானம் மறைந்து விடும். ஞானமயமாக ஆகிவிடுவார் அங்கு உள்ள மனிதர்கள்
எல்லோருமே.

#1349. தெளிவடையும் ஞானமும் சிந்தையும்!


ஒளியது ஹௌமுன் கிரிமது ஈறாம்
களியது சக்கரம் கண்டறி வார்க்குத்
தெளிவது ஞானமும் சிந்தையும் தேறப்
பணியது பஞ்சாக் கரமது வாமே.


‘ஹௌம்’ என்ற பீசம் முதல் ‘கிரீம்’ என்னும் பீசம் இறுதியாக உள்ள, மகிழ்ச்சி தரவல்ல, நவாக்கரிச் சக்கரத்தை நன்கு கண்டு அறிந்து கொண்டவர்களுக்குத் தெளிந்த சிந்தையும் ஞானமும் உண்டாகும். சிவபெருமானின் பஞ்சாக்கரத்துடன் கூடிய நவாக்கரியை அவர்கள் வணங்கி வழிபடுகின்றார்கள் அல்லவா?

#1350. அறிவும் ஆற்றலும் அடைவர்


ஆமே சதாசிவ நாயகி ஆனவள்;
ஆமே அதோமுகத்து உள்அறிவு ஆனவள்;
ஆமே சுவை ஒளி ஊறு ஓசை கண்டவள்;
ஆமே அனைத்துயிர் தன்னுளும் ஆமே.


இவளே சதாசிவ மூர்த்தியின் அருள்சக்தி ஆனவள். இவளே கீழ் நோக்கில் இருந்து கொண்டு அனைத்து உயிர்களையும் செயல் புரியும்படிச் செலுத்துபவள். சுவை, ஒளி, ஊறு, ஓசை இவற்றை உணர உதவிடும் அறிவு வடிவானவள் இவளே. அருவ நிலையில் உள்ளபோது அனைத்து படைப்பினையும் தனக்குள் அடக்கிக் கொள்பவள் இவளே.
 


#1351 to #1355


#1351. எங்கும் எதிலும் நிறைந்தவள்

தன்னுளும் ஆகித் தரணி முழுதும் கொண்டு
என்னுளும் ஆகி இடம் பெற நின்றவள்
மண்ணுளும், நீர், அனல், காலுளும் வானுளும்
கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே.


எல்லா உலகங்களையும் தன்னுள் கொண்ட ஈசன் வடிவில் அவள் என்னுள் இடம் பெற்று நின்றாள். அந்த தேவியை நாம் மண்ணிலும், நீரிலும், ஒளியிலும், காற்றிலும், விண்ணிலும், கண்ணின் கருமணியிலும், உடலிலும் காண இயலும்.


#1352. கருத்துற நிற்கவேண்டும்


காணலு மாகும் கலந்துயிர் செய்வன
காணலு மாகும் கருத்துள் இருந்திடின்
காணலு மாகும் கலந்து வழிசெயக்
காணலு மாகும் கருத்துற நில்லே
.


உயிருடன் கலந்து நிற்கும் சக்தி அந்த உயிர்களுக்குச் செய்யும்
நன்மைகளைக் காண இயலும். அவளைக் காண வேண்டும் என்பதில் ஒரே குறியாக இருப்பவர்கள் சீவ பேதம் அழிந்து அவளைக் காணவும் இயலும். உயிருடன் கலந்து நிற்கும் அவளை முன்னிட்டுக் கொண்டு சீவன்கள் செயல் படுவதையும் காண முடியும். இவை அனைத்தும் நிகழ்ந்திட நீ அவளுடன் பிரியாத வண்ணம் உன் கருத்தைப் பொருத்தி இருப்பாய்.


#1353. மெய்ப் பொருள் ஆகிவிடுவர்


நின்றிடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டிடும் உள்ளம் கலந்து எங்கும் தானாகக்
கொண்டிடும் வையம் குணம் பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொருள் ஆகுமே.


இந்தப் பயிற்சியாளருக்கு ஏழு உலகங்களும் ஒன்றாகத் தோன்றும். எல்லாப் பொருட்களிலும் அவர் தன்னையே காண்பார். உலகில் நிலவும் எல்லா இயல்புகளையும் உள்ளவற்றை உள்ளவாறு அவர் அறிவார். செய்த வல்வினைப் பயன்கள் வந்து எய்தாத வண்ணம் விலக்கும் மெய்ப் பொருளாகி விடுவார்.


#1354. நற்பொருளாகி நடுவில் இருப்பாள்


மெய்ப்பொருள் ‘ஔ’ முதல் ‘ஹௌ ‘ அது ஈறாகக்
கைப்பொருளாகக் கலந்து எழு சக்கரம்
தற்பொருளாகச் சமைந்து அமுதேசுவரி
நற்பொருளாக நடு இருந்தாளே.


மெய்ப் பொருளான ‘ஔம் ‘ முதல் ‘ஹௌம் ‘ ஈறாக உள்ள எழுத்துக்கள் விளங்கும் இந்த நவாக்கரிச் சக்கரத்தில் சிவன் விளங்குவான். அவனுடன் நன்மைகள் புரியும் அமுதேசுவரியும் நடுவில் விளங்குவாள்.


#1355. காயம் அது அழியாது


தாள்அதின் உள்ளே சமைந்த அமுதேசுவரி
கால்அது கொண்டு கருத்து உற வீசிடில்
நாள்அது நாளும் புதுமைகள் கண்டபின்
கேள்அது காயமும் கேடுஇல்லை காணுமே.

உடலில் மூலாதாரம் முதல் பிர
ரந்திரம் வரை பேரொளியாக விளங்கும் அமுதசுவரியுடன், மூலாதாரத்தில் இருக்கும் மூல வாயுவை மேலே கொண்டு வந்து பொருந்தச் செய்ய வேண்டும். அப்போது நாள் தோறும் புதுமைகளைக் காணலாம். அத்துடன் அந்தப் பயிற்சியாளனின் உடலுக்குக் கேடு எதுவும் விளையாது. காயம் அழியாது.



 

#1356. அருள் வரும் வழி காண்பீர்


கேடு இல்லை காணும் கிளர்ஒளி கண்டபின்,
நாடு இல்லை காணும் அந்நாள் முதல் அற்றபின்,
மாடு இல்லை காணும் வரும் வழி கண்டபின்,
காடு இல்லை காணும் கருத்துற்றி டத்துக்கே.


மூலாதாரத்தில் இருந்து கிளர்ந்து மேலே எழும் பேரொளியைக் கண்ட பின்னர் ஒருவருக்கு எந்தக் கேடும் வராது. பேரொளியைக் கண்டவருக்கு நாடு முதலிய பேதங்கள் இரா. கால வேறுபாடு மறைந்த பின்னர் மேலே, கீழே, முன்னே, பின்னே என்ற வேறுபாடுகள் எதுவும் இரா. அமுதேசுவரியின் அருள் வரும் வழியைக் கண்டறிந்து கொண்டவருக்கு துன்பம் என்னும் காடு இராது.

#1357. சலிப்பு அற நின்றிடு!


உற்றிடம் எல்லாம் உலப்பு இலி பாழ் ஆக்கி
சுற்றிடம் எல்லாம் சுடுவெளி யானது
மற்றிடம் இல்லை, வழி இல்லை, தான் இல்லைச்
சற்று இடம் இல்லை, சலிப்பு அற நின்றிடே.


தான் வந்து அடைந்த உலகம் தோன்றாதபடிப் பாழ் செய்தால், அங்கு இருந்த எல்லாப் பொருட்களும் மறைந்து உலகம் வெட்ட வெளி ஆகிவிடும். தானே எங்கும் நிறைந்து நிற்பதால் வேறு இடம் என்று எதுவும் இராது. உலவுவதற்கும் வழியும் இராது. தான் என்பது இராது. சலித்துக் கொள்ளாமல் நீ இந்த அனுபவத்தில் நிலை பெற்று நிற்பாய்.

#1358. சிரசின் மேல் ஒளி அமையும்


நின்றிடும் ஏழ்கடல் ஏழ் புவி எல்லாம்
நின்றிடும் உள்ளம் நினைத்தவை தானே
நின்றிடும் சத்தி நிலை பெறக் கண்டிட,
நின்றிடும் மேலை விளக்கொளி தானே.


சாதனையாளருக்கு முன்னால் ஏழு கடலும், ஏழு உலகங்களும் வந்து நிற்கும். அவர் எண்ணியதெல்லாம் கண்ணெதிரே வந்து தோன்றும். சக்தி தேவி தன்னிடம் நிலை பெற்றதைக் கண்பவரின் சிரசின் மேல் ஓர் ஒளி அமையும்.

#1359. மின்னாற் கொடியாள்


விளக்கொளி சௌமுதல் ஔவது ஈறா
விளக்கொளிச் சக்கரம் மெய்ப் பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடியாளை
விளக்கொளியாக விளங்கிடு நீயே.

ஒளிரும் ‘சௌம்’ முதல் ‘ஔம்’ வரை உள்ள ஒன்பது பீசங்களைக் கொண்ட நவாக்கரி சக்கரம் இதுவே மெய்ப் பொருளாகும். அதில் விளங்குகின்ற மின்னற் கொடியாளை உன் ஞானத்தால் நீ அறிந்து கொள்வாய்!

#1360. இந்த அறிவே மெய் ஞானம்


விளங்கிடும் மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடும் மெல்லிய லானது ஆகும்
விளங்கிடும் மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.


இவற்றால் விளங்கும் உண்மை இதுவே. எங்கும் விளங்குபவள் சக்தி தேவியே ஆவாள். இவ்வாறு பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்து விளங்குபவள் சக்தி தேவி என்னும் மெய்ப்பொருளை அறிந்து கொண்டவரே உண்மையில் மெய்ஞானம் பெற்றவர் ஆவார்.


 
#1361 to #1365

#1361. அவளே அனைத்தும் ஆனவள்

தானே வெளி என எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளி அது ஆனவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்;
தானே அனைத்து உள அண்ட சகலமே.


சக்தி தேவி நுண்ணிய வானத்தைப் போல எங்கும் நீக்கமற நிறைந்திருப்பாள். அவளே பரமாகாசம் ஆகி நிற்பாள். அவளே அனைத்துப் பொருட்களையும் ஆக்குபவள், அழிப்பவள், தனக்குள் அடக்குபவள். எல்லா அண்டங்களாகவும் காட்சி தருபவள் சக்தி தேவியே ஆவாள்.


#1362. சிரசின் மேல் விளங்குவாள் சக்தி


அண்டத்தினுள்ளே அளப்பரிது ஆனவள்
பிண்டதினுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தின் உள்ளே குணம் பல காணினும்
கண்டத்தின் நின்ற கலப்பு அறியார்களே.


அனைத்து அண்டங்களிலும் அளப்பதற்கு அறியவளாக இருப்பவள் இவள். பிண்டம் ஆகிய சீவனின் உடலில் ஞானம் விளங்கும் பெருவெளியில் இருப்பவள் இவள். குண்டத்தில் செய்யும் ஓமங்கள் மூலம் பல நன்மைகள் பெறுபவர்களும் கண்டத்துக்கு மேலே இவள் கலந்து உறைவதை அறியாது இருக்கின்றார்களே!


#1363. நாதத்தை அறியாது நலிந்தவர்


கலப்பு அறியார் கடல் சூழ் உலகு எல்லாம்
உலப்பு அறியார் உடலோடு உயிர் தன்னைச்
சிலப்பு அறியார், சில தேவரை நாடித்
தலைப் பறியாகச் சமைந்தவர் தானே.


கடல் சூழ்ந்த உலகம் எங்கும் சக்தி தேவி கலந்திருப்பதை சிலர் அறியார். உடலுடன் கூடிய உயிர் ஒரு நாள் உடலை விட்டுப் பிரிந்துவிடும் என்பதை அவர்கள் அறியார். சிறு சிறு தெய்வங்களை நாடியதால் அவர்கள் நாதத்தை அறியார். இங்ஙனம் அவர்கள் நடந்து கொள்வதற்குக் காரணம் அவர்களின் தலையெழுத்து


#1364. நவாக்கரி சக்கரத்தின் அமைப்பு


தானே எழுந்த அச்சக்கரம் சொல்லிடின்
மானே மதி வரை பத்து இட்டு வைத்தபின்
தேனே இரேகை திகைப்பு அற ஒன்பதில்
தானே கலந்த அறை எண்பத்தொன்றுமே.


மானே! தானே தோன்றிய இந்தச் சக்கரத்தின் அமைப்பு இதுவே. குறுக்கும் நெடுக்குமாகப் பத்துப் பத்துக் கோடுகள் கீறி வரைக.தேனே! இந்த ரேகைகளுக்குள் ஒன்பது ஒன்பது என எண்பத்தொரு அறைகள் அமையும்.


#1365. சக்கரத்தில் அமையும் நிறங்கள்


ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்,
வென்றிகொள் மேனி மதி வட்டம் பொன்மையாம்;
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்,
என்று இயல் அம்மை எழுத்து அவை பச்சையே


கட்டங்களுக்கு வெளியான மதி மண்டலம் பொன்னிறம் கொண்டது. கட்டங்களில் அமைந்துள்ள கீற்றுகள் செந்நிறம் கொண்டவை. சக்தி தேவியின் எழுத்துக்கள் அடைக்கும் கட்டங்கள் பச்சை நிறம் கொண்டவை.



 





#1366 to #1370


#1366. நவாக்கரி சக்கரத்துக்கு நிவேதனம்

ஏய்ந்த மர உரி தன்னில் எழுதி
வாய்ந்த இப்பெண் எண்பத்தொன்றில் நிரைத்தபின்
காய்ந்த ஆவி, நெய்யுள் கலந்து உடன் ஓமமும்
ஆந்தலத்து, ஆம்உயிர் ஆகுதி பண்ணுமே.


பொருத்தமான மரப் பட்டையில் எண்பத்தொரு அறைகளில் சக்தி பீசங்களை அடைக்க வேண்டும். பின்பு அவிசை நெய்யுடன் கலந்து ஹோமமும் ஆஹூதியும் செய்யவேண்டும்.

#1367. சிவனுடன் சேர வேண்டும்


பண்ணிய பொன்னைப் பரப்பு அற நீ பிடி
எண்ணிய நாட்களில் இன்பமும் எய்திடும்
நண்ணிய நாமமும் நான்முகன் ஒத்த பின்
துண்ணென நேயநற் சேர்க்கலும் ஆமே.


சக்கரத்தில் அமைக்கப்பட்ட பொன் போன்ற சக்திதேவியை நீ சிக்கெனப் பிடித்துக் கொள். தியானம் செய்யத் தொடங்கிய நாள் முதலே இன்பம் உண்டாகும். வேள்விகளின் தலைவன் நான்முகனைச் சேர்ந்தபின் சிவபெருமானைச் சேர வேண்டும்.

#1368. நறுமணப் பொருட்கள் ஒன்பது


ஆகின்ற சந்தனங் குங்குமங் கத்தூரி
போகின்ற சாந்து சவாது புழுகு நெய்
ஆகின்ற கற்பூரம் ஆகோ சனநீரும்
சேர்கின்ற ஒன்பதும் சேர நீ வைத்திடே.


அரைக்கப்பட்ட சந்தனம், குங்குமப் பூ, கத்தூரி, சவ்வாது, புனுகு, நெய், பச்சைக் கற்பூரம், பசுவின் கோரோசனை, பன்னீர் என்ற ஒன்பது நறுமணப் பொருட்களையும் கலந்து சக்கரத்துக்குச் சார்த்த வேண்டும்.

#1369. தியானிக்கும் முறை


வைத்திடும் பொன்னுடன் மாதவம் நோக்கிடில்,
கைச்சிறு கொங்கை கலந்துஎழு கன்னியைத்
தச்சு இதுவாகச் சமைந்த இம்மந்திரம்
அர்ச்சனை ஆயிரம் ஆயிரம் சிந்தியே.

பொன் போன்ற சக்தியுடன் சாதகனைச் சேர்த்து வைக்கும் இந்தத் தவத்தை செய்வதற்கு , இளங் கொங்கைகள் உடைய வலைக் குமரியாக அவளை எண்ணி, நவாக்கரி மந்திரத்தை பல ஆயிரம் முறைகள் உருச் செய்ய வேண்டும்.

#1370. நவாக்கரி சக்தியின் ஆறு ஆயுதங்கள்


சிந்தையி னுள்ளே திகழ்தரு சோதியாய்
எந்தை கரங்கள் இரு மூன்றும் உள்ளது
பந்தமா சூலம் படை பாசம் வில்லம்பு
முந்த கிலீஎழ முன்னிருந்தாளே.


தந்தையும் தாயுமாக நம் உள்ளத்தில் ஒளி வடிவாக உள்ள நவாக்கரி சக்திக்கு ஆறு கரங்கள். அவற்றில் அவள் மழு, சூலம், அங்குசம், பாசம், வில், அம்பு என்ற ஆறு ஆயுதங்களை ஏந்தி இருப்பாள். கிலீம் என்ற பீசத்தை உடைய தேவி முதலில் சாதகன் முன்னால் வெளிப்படுவாள்.
[FONT=&quot]0
up_dis.png


[/FONT]

 
#1371 to #1375

#1371. அறுபத்து நான்கு சக்தியர்

இருந்தனர் சக்தியர் அறுபத்து நால்வர்;

இருந்தனர் கன்னிகள் எண்வகை எண்மர்;
இருந்தனள் சூழ எதிர் சக்கரத்தே
இருந்த கரம் இரு வில் அம்பு கொண்டே.


அன்னையைச் சுற்றி அறுபத்து நான்கு சக்தியர் இருப்பார். வாமை, சேட்டை, ரௌத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்ரதமனி, சர்வபூத தமனி என்ற எட்டு கன்னிரும் இருப்பர். அவர்கள் தங்கள் இரு கரங்களில் வில்லும் அம்பும் ஏந்தி இருப்பர். இந்த யோகினி சக்தியர் அனைவரும் சக்கரத்தைப் பார்த்த வண்ணம் அதைச் சூழ்ந்து இருப்பர்.


#1372. சக்தியின் வடிவழகு


கொண்ட கனகம், குழை, முடி, ஆடையாய்க்

கண்ட இம் மூர்த்தம் கனல்திரு மேனியாய்ப்
பண்டு அமர் சோதிப் படர் இதழ் ஆனவள்
உண்டு அங்கு ஒருத்தி, உணர வல்லார்க்கே.


பொற் காதணிகள் அணிந்து, பொன் முடி விளங்க, பொன்னே ஆடையாக
உடையவள் அன்னை. அக்கினியே இவள் திருமேனி. முன்பிருந்தே பேரொளியைத் தன் இருப்பிடமாகக் கொண்டு வசிப்பவள் இவள். இந்தக் கோலத்தில் இவளை தியானிப்பவர்களுக்கு அன்னை இவ்விதமான வடிவழகுடன் வெளிப்பட்டு அருள் புரிவாள்.


#1373. ஊர்த்துவ சகசிரதளம் அமையும்


உணர்ந்து இருந்து, உள்ளே ஒருத்தியை நோக்கில்

கலந்திருந்து எங்கும் கருணை பொழியும்,
மணந்து எழும் ஓசை ஒளி அது காணும்
தணந்து ஏழு சகரம் தான் தருவாளே.


ஒப்பரும் மிக்காரும் இல்லாத சக்தியை நன்கு அறிந்து கொண்டு அவளை தரிசனம் செய்தால், அவள் பார்க்கும் இடம் எல்லாம் நீக்கமற நிறைந்து நமக்கு அருள் புரிவாள். அதன் பின் நாதமும் ஒளியும் ஆகிய, எங்கும் கலந்துள்ள, பிரணவம் தோன்றும். உடலைத் தாண்டிய மேல் நோக்கிய ஊர்த்துவ சகசிர தளம் அமையும்.


#1374. ஞானமும், வீடுபேறும் தரும்


தருவழி யாகிய தத்துவ ஞானம்

குருவழி யாகும் குணங்களுள் நின்று
கருவழி யாகும் கணக்கை அறுத்துப்
பெருவழி யாக்கும் பேரொளி தானே.


குருமண்டலத்தில் இருந்து கொண்டு, பேரொளி வடிவினளாகிய சக்தி, உண்மையான தத்துவ ஞானத்தை அன்பருக்கு அருள்வாள். அவர்களிடம் தெய்வ குணங்கள் ஓங்கி விளங்கச் செய்வாள். அவர்கள் கருவில் வாசம் செய்து மீண்டும் உலகில் பிறவி எடுக்கும் செயலை நீக்குவாள். அவர்களுக்கு பெருநெறியாகிய வீடு பேற்றினைத் தருவாள்.


#1375. பாரொளியாகப் பரவி நிற்பாள்


பேரொளி ஆய பெரிய பெருஞ்சுடர்

சீரொளி யாகித் திகழ்தரு நாயகி,
கார்ஒளி யாகிய கன்னிகை பொன்னிறம்
பார்ஒளி யாகிப் பரந்து நின்றாளே.

பேரொளியும், பெருஞ்சுடரும் ஆகி ஒளிருபவள் தேவி. சீரோளியாகித் திகழும் தனிநாயகி. காரொளி போன்ற கன்னியான அவள், பொன்னிறத்துடன் பூமித் தத்துவத்தின் ஒளியாகப் பாரெங்கும் பரவி நின்றாள்.


 
திருமந்திரம் - நான்காம் தந்திரம்

#1376 to #1380#

1376. தேவியின் வடிவழகு


பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி,
பரிந்தருள் கொங்கைகள் முத்துஆர் பவளம்
இருந்தநல் லாடை மணி பொதிந் தன்றே.


மேலே தூக்கிய இரு கரங்களில் சக்தி தேவி இரு தாமரை மலர்களை ஏந்தி இருப்பாள். குவிந்த இரு தளிர்க் கரங்களில் அபயமும், வரதமும் அளிப்பாள். தனங்கள் மேல் முத்து மாலைகளும், பவழ மாலைகளும் புரளும். நல்ல மணிகள் பதித்த ஆடைகள் அணிந்திருப்பாள்.

#1377. பணிவோர்க்குப் பரகதி தருவாள்


மணிமுடி, பாதம் சிலம்பு அணி மங்கை
அணிபவள் அன்றி அருள் இல்லை ஆகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்அருள் ஆகிப்
பணிபவர்க்கு அன்றோ பரகதி ஆமே?


சக்தி தேவி தன் தலையில் அழகிய மணிமுடி தரித்திருப்பாள். பாதங்களில் சிலம்பு அணிந்திருப்பாள். அவளைத் தவிர அருள் வழங்குவதற்கு வேறு எவரும் இல்லை. புலன்களின் வழியே போகாமல், அவற்றை அடக்கி ஆள்பவர்களின் மனத்தில், இவள் அருள் புரிந்து எழுந்தருள்வாள். தன் அன்பர்களுக்குப் பரகதி தருவாள்.

#1378. சக்தியர் புடை சூழ விளங்குவாள்


பரந்திருந் துள்ளே அறுபது சத்தி
கரந்தன கன்னிக ளப்படி சூழ
மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்
சிறந்தவ ரேத்தும் சிறீதன மாமே.


நவாக்கரிச் சக்கரத்தைச் சூழ்ந்து உள்முகமாக மறைந்து உறைவர் அறுபது சக்தியரும் எட்டுக் கன்னியரும். அவர்களின் நடுவே, இரு கரங்களிலும் மலர்களை ஏந்தி, ‘ஸ்ரீம்’ என்னும் பீசத்துக்கு உரிய, செல்வத்தின் அதிபதியாகச் சக்தி தேவி விளங்குவாள்.

#1379. சிவசூரியனைச் சேரலாம்


தனமது வாகிய தையலை நோக்கி
மனமது வோடி மரிக்கிலோ ராண்டிற்
கனமவை அற்றுக் கருதிய நெஞ்சம்
தினகர னாரிட செய்திய தாமே.

செல்வத்தின் நாயகியாகிய தேவியை இங்கனம் உள்ளத்தில் நிறுத்தித் தியானிக்க வேண்டும். உள்ளம் வெளியுலகை நோக்கி ஓடாமல் இருந்தால், ஓராண்டில் ஆசைகள் அறவே அழிந்து மனச் சுமை விலகிப் போகும். கருதியவை கைக் கூடும், சிவ சூரியனிடம் சென்று பொருந்த இயலும்.

#1380. ஒளி மண்டலம் ஆகும்


ஆகின்ற மூலத்து எழுந்த முழுமலர்
போகின்ற பேரொளி ஆய மலரது ஆய்,
போகின்ற பூரணமாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டலம் ஆனதே.


மூலாதாரத்தில் எழும் முழு மலருக்கு நான்கு இதழ்கள். அதில் ஏழு பேரொளி உடலின் ஆறு ஆதாரங்களையும் கடந்து செல்லும் போது பூரணமாகி விடும். அப்போது மூலாதாரம் முதல் துவாதசாந்தம் வரை ஒளி மண்டலமாக விளங்கும்.

 
திருமந்திரம் - நான்காம் தந்திரம்

#1376 to #1380

#1376. தேவியின் வடிவழகு

பரந்த கரம்இரு பங்கயம் ஏந்திக்
குவிந்த கரம்இரு கொய்தளிர்ப் பாணி,
பரிந்தருள் கொங்கைகள் முத்துஆர் பவளம்
இருந்தநல் லாடை மணி பொதிந் தன்றே.


மேலே தூக்கிய இரு கரங்களில் சக்தி தேவி இரு தாமரை மலர்களை ஏந்தி இருப்பாள். குவிந்த இரு தளிர்க் கரங்களில் அபயமும், வரதமும் அளிப்பாள். தனங்கள் மேல் முத்து மாலைகளும், பவழ மாலைகளும் புரளும். நல்ல மணிகள் பதித்த ஆடைகள் அணிந்திருப்பாள்.


#1377. பணிவோர்க்குப் பரகதி தருவாள்


மணிமுடி, பாதம் சிலம்பு அணி மங்கை
அணிபவள் அன்றி அருள் இல்லை ஆகும்
தணிபவர் நெஞ்சினுள் தன்அருள் ஆகிப்
பணிபவர்க்கு அன்றோ பரகதி ஆமே?


சக்தி தேவி தன் தலையில் அழகிய மணிமுடி தரித்திருப்பாள். பாதங்களில் சிலம்பு அணிந்திருப்பாள். அவளைத் தவிர அருள் வழங்குவதற்கு வேறு எவரும் இல்லை. புலன்களின் வழியே போகாமல், அவற்றை அடக்கி ஆள்பவர்களின் மனத்தில், இவள் அருள் புரிந்து எழுந்தருள்வாள். தன் அன்பர்களுக்குப் பரகதி தருவாள்.


#1378. சக்தியர் புடை சூழ விளங்குவாள்


பரந்திருந் துள்ளே அறுபது சத்தி
கரந்தன கன்னிக ளப்படி சூழ
மலர்ந்திரு கையின் மலரவை ஏந்தச்
சிறந்தவ ரேத்தும் சிறீதன மாமே.


நவாக்கரிச் சக்கரத்தைச் சூழ்ந்து உள்முகமாக மறைந்து உறைவர் அறுபது சக்தியரும் எட்டுக் கன்னியரும். அவர்களின் நடுவே, இரு கரங்களிலும் மலர்களை ஏந்தி, ‘ஸ்ரீம்’ என்னும் பீசத்துக்கு உரிய, செல்வத்தின் அதிபதியாகச் சக்தி தேவி விளங்குவாள்.


#1379. சிவசூரியனைச் சேரலாம்


தனமது வாகிய தையலை நோக்கி
மனமது வோடி மரிக்கிலோ ராண்டிற்
கனமவை அற்றுக் கருதிய நெஞ்சம்
தினகர னாரிட செய்திய தாமே.

செல்வத்தின் நாயகியாகிய தேவியை இங்கனம் உள்ளத்தில் நிறுத்தித் தியானிக்க வேண்டும். உள்ளம் வெளியுலகை நோக்கி ஓடாமல் இருந்தால், ஓராண்டில் ஆசைகள் அறவே அழிந்து மனச் சுமை விலகிப் போகும். கருதியவை கைக் கூடும், சிவ சூரியனிடம் சென்று பொருந்த இயலும்.


#1380. ஒளி மண்டலம் ஆகும்


ஆகின்ற மூலத்து எழுந்த முழுமலர்
போகின்ற பேரொளி ஆய மலரது ஆய்,
போகின்ற பூரணமாக நிறைந்தபின்
சேர்கின்ற செந்தழல் மண்டலம் ஆனதே.


மூலாதாரத்தில் எழும் முழு மலருக்கு நான்கு இதழ்கள். அதில் ஏழு பேரொளி உடலின் ஆறு ஆதாரங்களையும் கடந்து செல்லும் போது பூரணமாகி விடும். அப்போது மூலாதாரம் முதல் துவாதசாந்தம் வரை ஒளி மண்டலமாக விளங்கும்.





 
#1381 to #1385

#1381. சக்திகளின் நடுவே வீற்றிருப்பாள்

ஆகின்ற மண்டலத்துள்ளே அமர்ந்தவள்
ஆகின்ற ஐம்பத் தறுவகை ஆனவள்
ஆகின்ற ஐம்பத் தறு சக்தி நேர்தரு
ஆகின்ற ஐம்பத் தறு வகை சூழவே.


இந்த சோதி மண்டலத்தில் விருப்பத்துடன் இருப்பவள் சக்தி தேவி. உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், வித்து எழுத்துக்கள் என்ற ஐம்பத்தாறு எழுத்துக்களை இயக்கும் ஐம்பத்தாறு சக்திகளின் நடுவே அவள் வீற்றிருப்பாள்.

#1382. சக்தியின் எழில்


சூழ்ந்து எழு சோதி சுடர் முடி பாதமாய்
ஆங்கு அணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கிய கை அவை தார் கிளி ஞானமாய்
ஏந்து கரங்கள் எடுத்தமர் பாசமே.


அடி முதல் முடி வரை சக்தி ஓர் ஒளிப் பிழம்பாகக் காட்சி தருவாள். அவள் திருமேனி பெரிய முத்தைப் போல விளங்கும். அவள் அழகிய கரங்கள் இரண்டில் மஞ்சள் வரையுடைய பைங்கிளியையும் ஞான முத்திரையையும் ஏந்தி இருப்பாள். மேலே தூக்கிய இரு கரங்களில் பாசமும், அங்குசமும் ஏந்தி இருப்பாள்.

#1383. கண்ணுதல் ஆகிவிடலாம்


பாசம தாகிய வேரை அறுத்திட்டு
நேசம தாக நினைந்திரு மும்மளே
நாசம தெல்லா நடந்திடும் ஐயாண்டில்
காசினி மேலமர் கண்ணுத லாகுமே.


சக்தி தேவியின் நாதமாகிய ஞான முத்திரையை உணருங்கள். பாசமாகிய வேரை அறுத்து விடுங்கள். இடையறாது மனதில் சத்தியை நினைத்த வண்ணமே இருங்கள். இங்கனம் செய்தால் ஐந்தாண்டுகளில் உள்ள கேடுகள் எல்லாம் அகன்றுவிடும். அதன் பின்னர் சாதனையாளன் மண்ணுலகத்துக்கு மேல் அமர்ந்துள்ள கண்ணுதல் ஆகி விடலாம்.

#1384. சக்தி மண்டலம் அமையும்


கண்ணுடை நாயகி தன்அருள் ஆம்வழி
பண்உறு நாதம் பகை அற நின்றிடில்,
விண்அமர் சோதி விளங்க ஹிரீங்காரம்
மண்உடை நாயகி மண்டலம் ஆகுமே.


முக்கண்களை உடைய நாயகியின் அருளைப் பெறும் வழி இதுவே. தடையில்லாத நாதம் தனக்குள்ளே அமையும் என்றால், வான மண்டலத்தில் உள்ள பேரொளி விளங்கும் வண்ணம் ஹ்ரீம் என்னும் பீசத்துக்கு உரிய சக்தியின் மண்டலம் அமையும்.
ஹ்ரீம் என்பது சக்தி மண்டலத்தின் முடிவு. இதற்கு அப்பால் நாதாந்தம் தோன்றும். நாத தரிசனம் பெற்றவருக்கு சக்தி மண்டலம் அமையும்

#1385. ஆதாரங்கள் ஒரேவழியை அடையும்


மண்டலத்துள்ளே மலர்ந்து எழு தீபத்தைக்
கண்டு, அகத்துள்ளே கருதி இருந்திடும்
விண்டகத்துள்ளே விளங்கி வருவதால்
தண்டகத்துள் அவை தாங்கலும் ஆமே.

ஹ்ரீங்கார மண்டலத்தில் எழும் பேரொளியை மனத்தில் நினைவில் நிறுத்துங்கள். அது மூலாதாரத்திலிருந்து மேல் நோக்கி உடலின் உள்ளே எழும். அப்போது வீணாத் தண்டில் தொடர்பு கொண்ட ஆறு ஆதாரங்களும் ஒரே வழியை அடைந்து தமக்குள் ஒருமைப்பாட்டை அடையும்.
 
திருமந்திரம் - நான்காம் தந்திரம்

#1386 to #1390


#1386. நாதம் வன்மையுடன் மேலெழும்

தாங்கிய நாபித் தடமலர் மண்டலத்து
ஓங்கி எழும் கலைக்கு உள்ளுணர்வு ஆனவள்
ஏங்க வரும் பிறப்பு எண்ணி அறுத்திட
வாங்கிய நாதம் வலியுடன் ஆமே.


நாபிக் கமலத்தில் பிரணவம் ஓங்கி மேல் நோக்கி எழும். அதன் உள்ளுணர்வாக உள்ளவள் சக்தி. வருத்தம் தரும் பிறவியை நீக்கிவிட்டால், அதுவரையில் அடங்கி இருந்த நாதம், மிகுந்த வலிமையுடன் ஓங்கி மேலே எழுந்து விளங்கும்.

#1387. உயிர்களின் தலைவி மனோன்மணி


நாவுக்கு நாயகி நன்மணி பூணாரம்
பூவுக்கு நாயகி பொன்முடி யாடையாம்
பாவுக்கு நாயகி பாலொத்த வண்ணத்தாள்
ஆவுக்கு நாயகி யங்கமர்ந் தாளே.


வாகீசுவரியாக நல்ல அணிமணிகளை அணிந்திருப்பாள். திருமகளாகப் பொன் முடியும் பொன் ஆடையும் கொண்டிருப்பாள். கலைமகளாகப் பா இயற்றும் ஆற்றலை அருளி வெண்ணிற ஒளியில் விளங்குவாள் உயிர்களின் தலைவியாக மனோன்மணி சகசிரதளத்தில் எழுந்தருளுவாள்.

#1388. காரணியைக் காணலாம்


அன்றுஇரு கையில் அளந்த பொருள்முறை
இன்று இரு கையில் எடுத்தவெண் குண்டிகை
மன்று அது காணும் வழிஅது வாகவே
கண்டு அங்கு இருந்தஅக் காரணி காணுமே.


சக்தி வழிபாட்டுக்கு முன்பு இடைகலை, பிங்கலை வழியே வெளிச் சென்று கொண்டிருந்தது உயிர் வளியின் இயக்கம். சக்தியை வழிபட்ட பிறகு, வெண்ணிற அமுத கலசங்களாகப் பொன்னம்பலத்தைத் தரிசிக்கும் வழியாக ஆனது. அதை அறிந்து கொண்டு அங்கு இருப்பவர் தத்துவங்களை இயக்குகின்ற சக்தி தேவியைக் காணலாம்.

#1389. தன் அருளாகி நிற்பாள்


காரணி சத்திக ளைம்பத் திரண்டெனக்
காரணி கன்னிகள் ஐம்பத் திருவராய்க்
காரணி சக்கரத்துள்ளே கரந்தெங்கும்
காரணி தன்னரு ளாகி நின்றாளே.

காரணிகளாகிய எழுத்துச் சக்திகள் ஐம்பத்து இரண்டு. காரணியாக இருந்து அவற்றை இயக்குபவர் ஐம்பத்து இருவர். இவாறு காரணி பொன்னம்பலத்தில் வெளிப்படுவாள். மற்ற தத்துவங்களில் மறைந்து உறைவாள். தன் அருளால் அவள் தன அன்பர்களுக்கு வெளிப்படுவாள்.

#1390. மன்றிலாடும் மணி காணும்


நின்றவிச் சத்தி நிலைபெற நின்றிடில்
கண்டவிவ் வன்னி கலந்திடு மோராண்டிற்
கொண்ட விரதநீர் குன்றாமல் நின்றிடின்
மன்றி லாடு மணியது காணுமே.


காரணியாகிய இந்த சக்தி சகசிரதளத்தில் நிலை பெற்றிருக்கும் போது ஓராண்டு காலம் பயிற்சி செய்ய வேண்டும். அப்போது அந்த சக்தி நம்மை விட்டு விலகிச் செல்லாமல் நம்முடனே இருப்பாள். மேற்கொண்ட விரதம் பங்கம் ஆகாமல் இருந்தால் அதன் பின்னர் மன்றில் ஆடும் மணியினைக் காண இயலும்.
 
திருமந்திரம் - நான்காம் தந்திரம்

#1391 to #1396



#1391. மனத்தில் இனிது இருந்தாள்


கண்ட விச் சத்தி யிருதய பங்கயம்
கொண்டவித் தத்துவ நாயகி யானவள்
பண்டையவ் வாயுப் பகையை அறுத்திட
இன்றென் மனத்து ளினிதிருந் தாளே.


அன்பர்களின் மனம் உலகப் பொருட்களுடன் பொருந்தி இருக்கும் போது சக்தி தேவி இதயத் தாமரையில் இருந்து வருவாள். உலகப் பொருட்களுடன் தொடர்பினை விலக்கி விட்டு; உலக காரணமாகிய நாதம், விந்து இவற்றுடன் அன்பரின் சித்தம் பொருந்தும் போது; தேவி சீவன், அதன் உடல் இவற்றின் மீது இருந்து வந்த வாயுவின் கட்டினை நீக்கி விடுவாள். சீவனின் மனதில் இன்பம் பெருக்குபவளாக ஆகி விடுவாள்.

#1392. தேவியின் தோற்றம்


இருந்த இச்சத்தி இரு நாலு கையில்
பரந்த இப் பூங்கிளி, பாசம், மழு வாள்
கரந்திடு கேடகம் வில் அம்பு கொண்டு அங்கு
குரந்தங்கு இருந்தவள் கூத்து உகந்தாளே.


இந்த சக்தி தன் எட்டுக் கரங்களில் விரிந்த மலர், கிளி, பாசம், மழு, வாள், கேடயம், வில், அம்பு என்னும் எட்டு பொருட்களைத் தங்கி இருப்பாள். ஆரவாரம் செய்த வண்ணம் தன் கூத்தையும் விருப்பத்துடன் புரிந்தாள்.

#1393. பச்சை நிறம் அவள் மேனி


உகந்தனள் பொன்முடி முத்தாரமாகப்
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து
தழைந்தங் கிருந்தவள் தான் பச்சையாமே
.

சக்தி தேவி பொன் முடியையும், முத்து மாலைகளையும் மிகவும் விரும்புவாள். பவழ மாலை அணிந்து கொண்டு, செம்பட்டு ஆடையை உடுத்துவாள். மலர்ந்து எழும் கொங்கைகளில் அவள் மணிகள் பதித்த கச்சையை அணிந்திருப்பாள். விரும்பி அன்பர் உள்ளத்தில் உறையும் அந்தத் தேவியின் நிறம் பச்சை.

#1394. பாங்கிமார் நாற்பத்தெண்மர்


பச்சை யிவளுக்குப் பாங்கிமார் ஆறெட்டு
கொச்சை யாரெண்மர்கள் கூடி வருதலால்
கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்
எச்ச இடைச்சி இனிதிருந் தாளே.


பச்சை நிறம் கொண்ட இந்தத் தேவிக்குப் பாங்கிமார் நாற்பது எட்டுப் பெண்கள். எப்போதும் கூடவே இருக்கும் எட்டுத் தோழியர் இனிய மழலையில் மிழற்றுவர். எனவே இரு புறங்களிலும் காவல் உடையவளாகக் கச்சணிந்த தேவி மெலிந்த இடையுடன் இனிதாக அமர்ந்திருப்பாள்.

#1395. பரந்தெழு விண்ணில்!


தாளதின் உள்ளே தயங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்துகொள் என்று
மாலது வாக வழிபாடு செய்து நீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.


மூலாதாரத்தில் இருக்கும் சக்தி பேரொளி வடிவானவள். அவளைச் ” சுழுமுனை வழியே மேலே சென்று சிவனுடன் கலந்து கொள்!” என்னும் போது அவள் விருப்பமும் அதுவே ஆகும். மூலாதார வாயுவை மேல் நோக்கிச் செலுத்தினால் காதலனைக் கூடச் செல்லும் காதலியைப் போல நீயும் விண்ணில் பரந்தெழ இயலும்.



 

திருமந்திரம் - நான்காம் தந்திரம்

#1396 to #1400


#1396. சந்திர மண்டலம் தழைக்கும்

விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக்
கண்ணமர் கூபம் கலந்து வருதலால்
பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது
தன்னமர் கூபம் தழைத்தது காணுமே.


நாபிக்கும் இருதயத்துக்கும் இடையே உள்ளான் கதிரவன். அவன் கண்ணில் விளங்கும் சந்திரனுடன் சென்று சேர்ந்தால் ஞானசக்தி தரும் ஞானக் கதிரவன் ஆகிவிடுவான். இது சந்திர மண்டலம் விரிவடைவதைக் காட்டுகின்றது.


#1397. சூலம் பாசத்தை அறுக்கும்


கூபத்துச் சத்தி குளிர் முகம் பத்துள
தாபத்து சத்தி தயங்கி வருதலால்
ஆபத்துக் கைக ளடைந்தன நாலைந்து
பாசம் அறுக்கப் பரந்தன சூலமே.


விழிகளுக்கு மேலாக விளங்குகின்ற சக்தி தேவிக்கு பத்து திசைகளே பத்து முகங்கள். தாபத்தை உண்டாக்கும் கதிரவன் தன்னிலையை விட்டு வெளியேறி சந்திர மண்டலத்தில் மெல்ல அடங்குவான். அப்போது ஆபத்தைச் செய்கின்றதும், மேலும் கீழுமாக ஓடுகின்றதும் ஆகிய பத்து நாடிகள் செயல் அடங்கும். சாதகன் பாசத்தினை அறுக்க, முத்தலைச் சூலம் போன்ற சுழுமுனையை சக்தி நன்கு விளங்கச் செய்வாள்.


#1398. தேவியின் கரங்களில் உள்ளவை


சூலந்தண் டொள்வாள் சுடர்பறை ஞானமாய்
வேலம்பு தமருக மாகிளி விற்கொண்டு
காலம்பூப் பாசம் மழுகத்தி கைக் கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.


சூலம், தண்டு, வாள், பறை, ஒளிரும் ஞான வடிவானவேல், அம்பு, உடுக்கை, கிளி, வில், காலம், பூ, பாசம், மழு, கத்தி, இவற்றுடன் சங்கு, அபயம், வரதம் விளங்குகின்ற தேவியின் கரங்களைத் தியானிப்பாய்.


#1399. எண்ணங்களைக் கடந்து நிற்பாள்


எண்அமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்
எண அமர் கன்னிகள் நாற்பது நால்வராம்
எண்ணிய பூவிதழ் உள்ளே இருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்து நின்றாளே.


சாதகனின் எண்ணத்தில் மிகுந்த விருப்பத்துடன் அமர்ந்து இருக்கும் சக்தியர் நாற்பத்து நால்வர். அவர்களுடன் அமர்ந்திருக்கும் தோழியரும் நாற்பது நால்வர் ஆவர். சகசிர தளத்தில் இருக்கும் சக்தி தேவி, சாதகன் உலகத்தைப் பற்றிய எண்ணங்களைக் கடந்து நிற்கும்போது சாதகனுக்கு நன்கு விளங்கும்படி நின்றாள்.


#1400. வாலை, குமரி, குண்டலினி, பராசக்தியே!


கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தஅணி முத்து, பவளம்கச்சு ஆகப்
படர்ந்த அல்குல் பட்டாடை, பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்து நின்றாளே.


உலக எண்ணங்களைக் கடந்து நிற்கின்ற தேவி; பொன் முடி, முத்துக்களும், பவழங்களும் விரவிய கச்சு, பட்டாடைகள், சிலம்பு இவற்றை அணிந்து வாலைப் பெண் வடிவில் வீற்றிருந்தாள்.




 

திருமந்திரம் - நான்காம் தந்திரம்


#1401 to #1405


#1401. மெய்யறிவு பிறக்கும்

நின்ற இச்சத்தி நிரந்தர மாகவே
கண்டிடு மேரு அணிமாதி தான்ஆகிப்
பண்டைய ஆனின் பகட்டை அறுத்திட
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்கு உண்டாமே.


இவ்வாறு வீற்றிருக்கும் சக்தி புருவ மத்தியில், இடையீடு இல்லாமல், அணிமா முதலிய எட்டு சத்திகள் ஆவாள். முன்பு கற்றிருந்த சாத்திர அறிவினை அகற்றி விடுவாள். அவள் பேரொளியை உணர்ந்தவருக்கு மெய்யறிவு பிறக்கும்.


#1402. சதாசிவ நாயகியின் வடிவம்


உண்டு ஓர் அதோ முகம், உத்தம மானது
கண்ட இச்சக்தி சதாசிவ நாயகி
கொண்ட முகம் ஐந்து, கூறும் கரங்களும்
ஒன்றுஇரண் டாகவே மூன்று நால் ஆனதே.


கீழ் நோக்கிய சகசிர தளத்தில் இருப்பவள் சதாசிவ நாயகியாகிய மனோன்மணி. இவள் நாயகனைப் போலவே இவளுக்கும் முகங்கள் ஐந்தும் கரங்கள் பத்தும் உள்ளன.


#1403. சதாசிவ நாயகியின் வடிவழகு


நன்மணி சூலம் கபாலம் கிளியுடன்
பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும்
கண்மணி தாமரை கையில் தமருகம்
பொன்மணி பூணாரம் பூசனை யானதே.


நன்மணியுடன் சூலம், கபாலம், கிளி, பன்மணிகளை உடைய பாம்பு, மழு, கத்தி, மாணிக்கம் போன்று சிவந்து ஒளிரும் தாமரை, உடுக்கை இவற்றை அவள் தன் கரங்களில் கொண்டுள்ளாள். பொன்னும் மணியும் பூண்டுள்ளாள்.


#1404. நாற்பது சக்தியர் நடுவே பராசக்தி


பூசனை சத்திகள் எண்ஐவர் சூழவே
நேசவள் கண்ணிகள் நாற்பது நேரதாய்க்
காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவள்
மாசு அடையாமல் மகிழ்ந்திருந் தார்களே.

தன்னைப் பூசிக்கும் நாற்பது சக்தியரும் தன்னைச் சூழ்ந்திருக்க, சீவனின் மீது நேசம் கொண்ட பராசக்தி அந்த நாற்பது கன்னியருக்கு நேராகச் சீவனின் உடலில் உள்ள சகசிர தளத்தில் கலந்திருப்பாள். அவர்கள் அனைவரும் எந்தக் குற்றமும் சராதபடி மகிழ்ச்சியுடன் அங்கே வீற்றிருபார்கள்.

ஸ்ரீ சக்கரத்தில் மொத்தம் நாற்பது மூன்று முக்கோணங்கள் உள்ளன. நடுவில் உள்ள மூன்று முக்கோணங்கள் நீங்கலாக மீதம் நாற்பது முக்கோணங்கள் உள்ளன. அவற்றில் இந்த நாற்பது சக்தியர் வீற்றிருப்பர்.


#1405. பராசக்தி வெளிப்படுவாள்


தாரத்தின் உள்ளே தயங்கிய சோதியைப்
பாரத்தின் உள்ளே பரந்து உள் எழுந்திட
வேர் அது ஒன்றி நின்று எண்ணும் மனோமயம்
கார் அது போலக் கலந்து எழு மண்ணிலே.


பிரணவத்துள் ஒரு பேரொளி விளங்கும். சுமையான உடலுள். அது மேல் நோக்கி எழும். எழுந்து சீவனின் உடலைக் கடக்கும். தனக்கு ஆதாரம் அதுவே என்பதை சீவன் உணரவேண்டும். அந்தப் பிரணவத்தில் மனோலயம் அடைய வேண்டும். இதைச் செய்யும் வல்லமை இருந்தால், நீரைப் பருகிவிட்டு மண்ணிலிருந்து மேலெழும் கார்மேகம் போலப் பராசக்தி அவர் தலையில் வெளிப்படுவாள்.




 
திருமந்திரம் - நான்காம் தந்திரம்

#1406 to #1410


#1406. விந்து நாதங்களாக வெளிப்படும் தேவி

மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாய நாம என்று
கண்ணில் எழுந்தது காண்பரிது அன்று கொல்
கண்ணில் எழுந்தது காட்சிதர என்றே.


அகார, உகாரங்கள் சுவாதிட்டனச் சக்கரத்தில் நிலை கொண்டுள்ளன. இவை சகசிர தளத்தை அடையும் போது, அகக் கண்களுக்குப் புலப்படும் வண்ணம் விந்து நாதங்களாக மாறிச் ‘சிவாயநம’ என்று வெளிப்படும். இது காண்பதற்கு அரிய காட்சி அன்று. இது இங்ஙனம் எழுவது சாதகனைத் தன் திருவடியில் வைத்துக் கொள்ளும் பொருட்டே ஆகும்.

#1407. ஒளியாக விளங்குவாள்


என்று அங்கு இருந்த அமுதக் கலையிடைச்
சென்று அங்கு இருந்த அமுதபயோதரி
கண்டம் கரம் இரு வெள்ளி பொன் மண்ணடை
கொண்டு அங்கு இருந்தது வண்ணம் அமுதே.


சந்திர கலையிடை அமுதம் விளங்கும். பராசக்தி அதைத் தன் அழகிய
கொங்கைகளில் ஏந்தி அமுத பயோதரி ஆவாள். அவள் சுவாதிட்டானத்தில் செயல்படும் சுக்கிலத்தையும், சுரோணிதத்தையும் இடைகலை, பிங்கலைகளின் உதவியினால் அக்கினிக் கண்டத்துக்குக் கொண்டு வந்து கொண்டு அங்கு அமுத மயமாக இருப்பாள்.

#1408. வெண்ணிற ஒளியாக வெளிப்படுவாள்


அமுதம தாக அழகிய மேனி
படிகம தாகப் பரந்தெழு முள்ளே
குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெமுதம தாகிய கேடிலி தானே.


நீல மலரும் முத்தும் கலந்தது போன்ற குளிர்ந்த ஒளியில்; ஆனந்த மயமாகி அழிவு என்பதே இல்லாத சக்தி தேவி; அமுதம் போன்ற அழகிய மேனியுடன்; படிகம் போன்ற வெண்ணிற ஒளியுடன் வெளிப்டுவாள்.

#1409. சூழ்ந்திருக்கும் சக்தியரும் பாங்கியரும்


கேடுஇலி சக்திகள் முப்பத் தறுவரும்
நாடுஇலி கன்னிகள் நால்ஒன் பதின்மரும்
பூஇலி பூவிதழ் உள்ளே இருந்திவர்
நாள்இலி தன்னை நணுகிநின் றார்களே.


அழிவு என்பது இல்லாத முப்பத்தாறு சக்திகளும், நாடுவதற்கு அறியவராகிய அவர்களது முப்பத்தாறு தோழியரும் அம்மையின் சக்கரத்தில் வசிப்பவர்கள். சக்கரத்தின் இதழ்களில் இவர்கள் குடியிருப்பார்கள். காலம் என்னும் தத்துவத்தைக் கடந்து நிற்கும் அம்மையை இவர்கள் சூழ்ந்து நிற்பார்கள்.

#1410. பீச எழுத்து சித்திக்கும்


நின்றது புந்தி நிறைந்திடு வன்னியும்
கண்டது சோதி கருத்து ளிருந்திடக்
கொண்டது வோராண்டு கூடி வருகைக்கு
விண்டவென காரம் விளங்கின அன்றே.


புத்தித் தத்துவத்தில் சிவம் நாதமாக நிறைந்து நின்றது. ஒளியாகிய சோதி உள்ளத்திலிருந்து நீங்காமல் நின்றது. ஓராண்டு சாதனைக்குப் பின்னர் பீச எழுத்து வசப்பட்டது.
 
திருமந்திரம் - நான்காம் தந்திரம்

#1411 to #1415

#1411. வானவரும் வந்து வணங்குவர்

விளங்கிடும் வானிடை நின்றவை எல்லாம்
வணங்கிடும் மண்டலம் மன்னு யிராக,
நலம் கிளர் நன்மைகள் நாரணன் ஒத்துச்
சுணங்கிடை நின்று, அவை சொல்லலும் ஆமே.


சாதனையாளரை மண்ணில் வாழ்பவர்கள் மட்டுமின்றி விண்ணில் வாழும் உயிர்களும் வந்து வணங்கி நிற்கும். திருமாலைப் போன்று ஒருவர் பெரும் இன்பங்களைப் பற்றித் துன்பங்கள் நிறைந்த ஓர் இடத்தில் இருந்து சொல்ல முடியாது அல்லவா?


#1412. பூமேல் வரும் பொற்கொடி


ஆமே அதோமுகம், மேலே அமுதமாய்த்
தானே உகாரம் தழைத்து எழுஞ் சோமனும்,
கா மேல் வருகின்ற கற்பகம் ஆனது,
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.


மூலாதாரத்தில் கீழே நோக்குபவளாக இருந்தவள் குண்டலினி சக்தி. பின்னர் அவள் உகாரத்துடன் பொருந்தி இடை நாடியில் விளங்கினாள். பின்பு ஒளியாக எழுந்து மேலே சென்று சகசிர தளத்தை அடைந்தாள். அங்கு நிலைபெற்றாள். சீவன் எண்ணும் எண்ணங்களை நிறைவு செய்யும் கற்பகத் தரு ஆனாள். அனைத்து சித்திகளையும் நல்கிடும் இலக்குமி தேவியும் அவளே ஆவாள்.


#1413. ஆங்காரம் நீங்கிவிடும்


பொற்கொடி யாளுடன் பூசனை செய்திட
அக்களி ஆகிய ஆங்காரம் போயிடும்,
மற்கடம் ஆகிய மண்டலம் தன்னுள்ளே
பிற்கொடி ஆகிய பேதையைக் காணுமே.


பொற்கொடி போன்ற பராசக்தியை பூசியுங்கள். அப்போது உங்கள் அகங்காரம் நீங்கி விடும். நிலை பெற்று விளங்கும் பரமாகாயத்தில் பின்னியகொடி போன்ற இந்த மின்னல் கொடியாளைக் காணலாம்.


#1414. மண்ணுலகம் ஒரு திலகம்


பேதை இவளுக்குப் பெண்மை அழகு ஆகும்,
தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்,
மாது ஐ அவளுக்கு மண்ணும் திலகமாய்க்
கோதையர் சூழக் குவிந்த இடம் காணுமே.


பெண்மையே பராசக்திக்கு அழகு ஆகும். சிவபெருமானே இவளுக்குத் தந்தை ஆவான். பரந்து, விரிந்த இந்த மண்ணுலகு பராசக்தியின் சிறு திலகம் போன்றது. பல சக்தியர் சூழ்ந்திருக்க இவள் மேலே ஒரு குவிந்த இடத்தில் இருப்பாள்.


#1415. பரந்த இதழ் பங்கயம்


குவிந்தனர் சக்தியர் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்த இதழ் ஆகிய பங்கயத் துள்ளே
இருந்தனர் காணும் இடம் பல கொண்டே


கன்னியராகிய சக்தியர் முப்பத்திருவர் உள்ளனர். பரவிய இதழ்களைக் கொண்ட சகசிரதளத்தில் பராசக்தி பல இடங்களைத் தனதாக்கிக் கொண்டாள்.




 
I thank the readers of this thread for the increase in traffic.

The number of views in the past 24 hours is 1850+

The explanation to the poem was written by me using my background knowledge in Yoga and Tamil.

They have not been stolen from any other website or book.

Here are the links which will help you catch up in case you have missed the earlier posts!

Thiru Moolar's Thirumanthiram blogs:

1. திருமந்திரம் - முதலாம் தந்திரம்

2. திருமந்திரம் - இரண்டாம் தந்திரம்

3. திருமந்திரம் - மூன்றாம் தந்திரம்

4. திருமந்திரம் - நான்காம் தந்திரம்

5. திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்

6. திருமந்திரம் -ஆறாம் தந்திரம்

7. திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

8. திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

9. திருமந்திரம் - ஒன்பதாம் தந்திரம்


திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறை ஆகும். தமிழில் முதல் முதலில் தோன்றிய யோக நூல் இது என்பது இதன் தனிச் சிறப்பு.

முதல் சித்தர் திருமூலரே ஆவார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர் மட்டுமல்ல. அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் ஒருவர் ஆவார் திருமூலர்.

திருவாவடுதுரையில் ஓர் அரச மரத்தின் கீழ் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். ஆண்டுக்கு ஒரு பாடல் என்று மூவாயிரம் பாடல்களை இவர் இயற்றினார் என்பர்.


Visalakshi Ramani



 
திருமந்திரம் - நான்காம் தந்திரம்

#1416 to #1418


#1416. சக்தி சாதகனை ஆட்கொள்வாள்

கொண்டு அங்கு இருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்ட அங்கு இருந்தனர் காரணத்து உள்ளது
பண்டை மறைகள் பரந்து எங்கும் தேடுமால்
இன்று என் மனத்துளே இல் அடைந்து ஆளுமே.

நவாக்கரி சக்கரத்தில் இருக்கும் சக்தியர் கூத்த பிரானுடைய ஒளியைக் கண்ட வண்ணம் மேல் நோக்கிய சகசிர தளத்தில் இருப்பார்கள். இந்த சக்தியரும் சிவ பெருமானும் உலகத்தின் தோற்றத்துக்கு காரணமானவர்கள். வேதம் தேடும் உண்மைப் பொருளும் இவர்களே. இதனை பெருமை வாய்ந்த சிவசக்தி என் உடலிலும் என் மனதிலும் வந்து பொருந்தி என்னை ஆட்கொண்டது.

#1417. இல்லாதது ஒன்றில்லை


இல் அடைந்தானுக்கும் இல்லாதது ஒன்றில்லை
இல் அடைந்தானுக்கு இரப்பது தான் இல்லை
இல் அடைந்தானுக்கு இமையவர் தாம் ஒவ்வார்
இல் அடைந்தானுக்கு இல்லாதது இல் ஆனையே.


சிவசக்தியால் ஆளப்படுபவருக்கு இல்லாதது என்றும் எதுவும் இல்லை. இவர் எவரிடமும் சென்று எதுவுமே இரப்பது இல்லை. இவருக்கு வானவரும் ஈடாக மாட்டர்கள். சிவசக்தி இவர் ஆன்மாவில் குடி கொண்டுள்ளதால் இவர் இல்லாத இடம் என்பதே இல்லை.

#1418. அறுபத்து நான்கும் ஆன்மாவும்


ஆனை மயக்கும் அறுபத்து நால் தறி,
ஆனை இருக்கும் அறுபத்து நால் ஒளி,
ஆனை இருக்கும் அறுபத்து நால் அறை,
ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே.

தத்துவங்களின் தலைவனாகிய ஆன்மா அறுபத்து நான்கு தரிகளால் கட்டப்பட்டுள்ளது.
ஆன்மாவாகிய பிரணவம் அறுபது நான்கு ஒளிக் கதிர்களால் ஆனது.
ஆன்மா அறுபத்து நான்கு கலைகளில் விளங்குகின்றது
ஆன்மாவும் பிரணவமும் இங்ஙனம் அறுபத்து நான்கு விதங்களாக விளங்கும்.

திருமந்திரம் நான்காம் தந்திரம் முற்றுப் பெற்றது.


 

Latest ads

Back
Top