Quotable Quotes Part II

# 156. பொருளைத் தேடுகின்றனர்!

வைச்சு அகல்வு உற்றது கண்டு மனிதர்கள்
அச்சு அகலாது என நாடும் அரும் பொருள்
பிச்சு அதுவாய்ப் பின் தொடர்வுறும், மற்று அவர்
எச்சு அகலா நின்று, இளைக்கின்றவாறே.

உடலை வைத்து விட்டு நீங்கும் மனிதர்கள் சிறிதும்
உணர்வதில்லை உயிர் பிரிந்துவிடும் என்ற உண்மையை.
தம் உயிர் தம் உடலை விட்டுப் பிரியாது என்று எண்ணிப்
பித்துப் பிடித்தவர் போல பொருட்களை நாடித் தேடி, அலைந்து,
குலைந்து, தம் மேன்மை அழிந்து வருந்துகின்றார்களே!
 
# 157. பந்தம் இலார்

ஆர்த்துஎழு சுற்றமும் பெண்டிரும் மக்களும்
ஊர்த்துறைக் காலே ஒழிவர், ஒழிந்தபின்
வேர்த்தலை போக்கி விறகு இட்டு எரிமூட்டி
நீர்த்தலை மூழ்குவர் நீதி இலோரே.

ஆரவாரம் செய்து எழும் சுற்றத்தவரும், மனைவியும், மக்களும்,
ஊருக்கு வெளியே உள்ள நீர்நிலை வரை வந்துவிட்டு நீங்குவர்.
வாழ்க்கைக்கு வேராகிய தலையினை மறைத்து எரி மூட்டுவார்கள்.
நீரில் தலை முழுகிவிட்டுச் செல்லும் இவர்கள் பந்தம் அற்றவர்கள்.
 
# 158. உடலைக் காப்பாற்ற மாட்டார்.

வளத்து இடை முற்றத்து ஓர் மாநிலம் முற்றும்

குளத்தின் மண் கொண்டு குயவன் வனைந்தான்;
குடம் உடைந்தால் அவை ஓடு என்று வைப்பார்.
உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே.

வளமையான இடைப் பகுதியின் முன்னால் கருப்பை என்னும் ஒரு குளம் உள்ளது. நான்முகன் என்னும் குயவன் அதில் உடல் என்ற ஒரு மண் குடத்தை உருவாக்கினான்.
வெறும் மண்ணால் ஆன குடம் உடைந்தால் அதன் ஓட்டைப் பாதுகாக்கும் மனிதர்கள், நான்முகன் செய்த மனித உடல் என்னும் குடம் உடைந்தால், அதைப் பாதுகாக்க மாட்டார்.
 
# 159. உடல் பயன் அற்றதாகும்

ஐந்து தலைப்பறி, ஆறு; சடை உள

சந்து அவை முப்பது; சார்வு பதினெட்டுப்
பந்தலும் ஒன்பது பந்தி பதினைந்து
வெந்து கிடந்தது மேல் அறியோமே.

உடலில் பொறிகள் ஐந்து உள்ளன.
உடலில் ஆதாரங்கள் ஆறு உள்ளன.

வாயுக்கள் பத்து; நாடிகள் பத்து; மன மலங்கள் ஆறு;
வாக்குகள் நான்கு என மொத்தம் முப்பது உள்ளன.

வித்திய தத்துவங்கள் ஏழு, ஞானேந்திரங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, பிரகிருதி ஒன்று என மொத்தம் பதினெட்டு உள்ளன.

யோனிகளின் வேறுபாட்டினால் உடம்பு ஒன்பது வகைப்படும்
அங்கே அனுபவிக்கும் பதினைந்து அம்சங்கள் இவைகள்.

சத்து ஆதி ஐந்தும் , வாசனைஆதி ஐந்தும் மற்றும்
குணங்கள் மூன்று, இன்பம் துன்பம் எனப் பயன்கள் இரண்டு.

எரியூட்டிய உடல் வெந்து கிடப்பதையே நாம் காண்கின்றோம்
மற்ற இவைகள் என்ன ஆயின என்பதை எவரும் அறியோம்
 
# 160. அத்திப் பழமும் அறைக் கீரையும்

அத்திப் பழமும் அறைக்கீரை நல் வித்தும்
கொத்தி உலை பெய்து கூழ் அட்டு வைத்தனர்;
அத்திப் பழத்தை அறைக்கீரை வித்து உண்ணக்
கத்தி எடுத்தவர் காடு புக்காரே.


சுக்கிலம், சுரோணிதம் இவற்றால் ஜீவனின் உடலை உண்டாக்கினான்.
இருவினைகளின் பயன்களைக் கலந்து உயிருக்கு உணவாகச் சமைத்தான்.
ஊழ்வினைப் பயன்களை அந்த உயிர் உண்டு அழித்தும், கழித்தும் விட்டது.
உயிர் நீங்கிய பிறகு உடம்பை எரிக்கத் துணிந்து, அதை கத்திக் கதறி அழும் அழுகை ஒலியுடன் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்றனர் உற்றார் உறவினர்கள்.
 


திருமூலரின் திருமந்திரம்

#161. உடல் அழிந்துவிடும்.

மேலும் முகடு இல்லை , கீழும் வடின்பு இல்லை,
காலும் இரண்டு, முகட்டு அலகு ஒன்று உண்டு;
ஓலையால் மேய்ந்தவர் ஊடு வரியாமை
வேலையாள் மேய்ந்ததோர் வெள்ளித் தளியே.

உடல் என்ற வீட்டுக்குக் கூரையும் ( தலையும்) இல்லை.
கீழே அதற்குத் தேவையான அடிநிலையும் இல்லை.
இரண்டு கால்கள் ( இடகலை, பிங்கலை) மட்டும் உள்ளன.
நடுக்கால் (சுழுமுனை நாடி என்ற ) ஒன்றும் உள்ளது.
வேலையாள் வரிச் சுழி இட்டுக் கூரையை வேயாததால்
(அவன் சுழு முனை வழியே பிராணனைச் செலுத்தாததால்)
அழகிய கோவில் ஆக வேண்டிய உடல் அழிந்து விட்டது.


 
# 162. தீயினில் தீய வைத்தனர்

கூடம் கிடந்தது கோலங்கள் இங்கு இல்லை,
ஆடும் இலயமும் அற்றது அறுதலும்
பாடுகின்றார் சிலர் பண்ணில் அழுதிட்டுத்

தேடியே தீயினில் தீய வைத்தார்களே.


உயிர் பிரிந்த உடல் உலகில் கிடந்தது என்றாலும்
அதன் அழகும், பொலிவும் அகன்று சென்று விட்டன.
ஆடி ஓடும், உண்டு உழைக்கும் தொழில்கள் நின்று விட்டன.
சிலர் அருட்பாடல்களைப் பாடினர்;
சிலர் இசையுடன் ஒப்பாரி வைத்தனர்;
சிலர் தீயினில் வைத்து தீய வைத்தனர்.
 
# 163. எழுபது ஆண்டுகள்

முட்டை பிறந்தது முந்நூறு நாளினில்,
இட்டது தான்இலை ஏதேனும் ஏழைகாள்
பட்டது பார்மாணம் பன்னிரண்டு ஆண்டினில்
கெட்டது எழுபதில், கேடுஅறியீரே.

கருமுட்டையில் உருவான உடல் பிறந்தது
அதற்குப் பத்து மாதங்கள் கழிந்த பின்னர்.
அந்த உடல் அதன் விருப்பப்படி உருவானது அல்ல
என்ற உண்மையை அறிவீர் அறிவற்றவர்களே!
பன்னிரண்டு வயதில் அதன் உலக வாசனை வெளிப்பட்டது.
எழுபது வயதில் அந்த உடல் கெட்டு அழிந்தது போனது.
 
# 164. நிலையற்றது உடல்

இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டான்
முடிஞ்சது அறியார் முழங்குவர் மூடர்
விடிஞ்சு இருள் ஆவது அறியா உலகம்
படிஞ்சு கிடந்து பதைக்கின்ற வாறே.

உடல் என்ற அகல் விளக்கை இங்கேயே விட்டு விட்டு
உயிர் என்ற தீப் ஒளியைக் காலன் எடுத்துச் சென்றான்.
அறிவிலிகள் உடல் அழியும் தன்மை வாய்ந்தது என்று
அறியாமல் வீணே அழுது புலம்பி வருந்துகின்றனர்.
பிறப்பும், இறப்பும், விடியலும், இரவும் போல மாறி மாறி வருபவை.
நிலையற்ற உடலை நிலையென்று நம்பி பதைபதைக்கின்றனரே!
 
# 165. ஏழு நரகங்கள்

மடல்விரி கொன்றையன் மாயன் படைத்த
உடலும் உயிரும் உருவம் தொழாமல்
இடர் படர்ந்து ஏழாம் நரகில் கிடப்பர்
குடர் பட வெந்தமர் கூப்பிடுமாறே.



இதழ்கள் மலர்ந்த கொன்றையை அணிபவன் சிவபெருமான்.
மாயையாகிய சக்தி தேவிக்கும் அவனே ஆதாரம் ஆவான்.
அவன் படைத்த உடலிலும் உயிரிலும் சிவன் கலந்து விளங்குகின்றான். அவனை வணங்காமல் வாழ்நாளைக் கழித்துவிட்டுப் பிறகு குடல் வருந்தி உறவினர்கள் கதறும்படி ஏழு நரகங்களில் சென்று வருந்துவான் மனிதன்.
 
# 166. இடம் வலமாகும்

குடையும் குதிரையும் கொற்ற வாளும் கொண்டு
இடையும் அக்காலம் இருந்து நடுவே
புடையும் மனிதனார் போகும் அப்போதே
அடையும் இடம் வளம் ஆருயிராமே.

வெண்கொற்றக் குடையின் கீழ், குதிரை மீது அமர்ந்து,
செங்கோலும், வாளும் ஏந்திக்கொண்டு,
நான்கு பக்கங்களிலும் மக்கள் சூழ்ந்து வரச் செல்லும்
தலைவனுக்கும் கண நேரத்தில் அழிவு வரலாம்.
அவன் உயிர் இடம் வலமாகச் சுழன்று நின்று விடலாம்.
 
# 167. உணர்வும் அழிந்துவிடும்

காக்கை கவரில் என்? கண்டார் பழிக்கில் என்?
பால்துளி பெய்யில் என்? பல்லோர் பழிச்சில் என்?
தோல் பையுள்நின்று தொழில் அறச் செய்து, ஊட்டும்
கூத்தன் புறப்பட்டுப்போன இக் கூட்டையே.

உடல் என்னும் தோல் பையில் இருந்து கொண்டு
வினைகளை முடிவு பெறச் செய்பவன் சிவன்.
வினைகளின் பயன்களை ஊட்டுபவன் சிவன்.
உயிராக விளங்கிய அவன் வெளியேறிய பிறகு
இந்த உயிரும் உணர்வும் அற்ற வெறும் உடலைக்
காக்கை கொத்தினால் என்ன? கண்டவர் பழித்தால் என்ன?
பாலைத் தெளித்தால் என்ன? பலர் பழித்தால் என்ன?
 
3. செல்வம் நிலையாமை

# 168. மருளும் தெருளும்

அருளும் அரசனும் ஆணையும் தேரும்
பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னம்
தெருளும் உயிரோடும் செல்வனைச் சேரில்
மருளும் பினை அவன் மாதவம் அன்றே.

அரச பதவியையும், யானைப் படையையும்,
தேர்ப் படையையும், பொருட் குவியலையும்,
பிறர் கவர்ந்து செல்லும் முன்னமே ஒருவன்
தெளிந்த அறிவுடன் நிலையான செல்வமாகிய
சிவபெருமானின் அடிகளைச் சேர வேண்டும்.
அதன் பின் அவன் பெருந்தவத்தையும் விரும்பான்.
 
# 169. பெருஞ்செல்வம்

இயக்குஉறு திங்கள் இருட் பிழம்பு ஒக்கும்
துயக்குஉறு செல்வதைச் சொல்லவும் வேண்டா;
மயக்குஅற நாடுமின் வானவர் கோனைப்
பெயல் கொண்டல் போலப் பெருஞ் செல்வம் ஆகுமே.

விண்ணில் இயங்கும் நிலவு ஒளி குன்றிப் போகும்.
மண்ணில் செல்வம் அதுபோன்றே தளர்ச்சி அடைந்துவிடும்.
பொருள் மயக்கத்தைத் தொலைத்துவிட்டு அடைவீர்
விண்ணவர் கோன் ஆகிய சிவபெருமானையே .
அப்போது மழை மேகம் போன்ற பெருஞ் செல்வம் உண்டாகும்.
 
# 170. அகஒளி


தன்னது சாயை தனக்கு உதவாதது கண்டு
என்னது மாடு என்று இருப்பார்கள் ஏழைகள்
உன்னுயிர் போம் உடல் ஒக்கப் பிறந்தது
கண்ணது காண் ஒளி கண்டு கொள்ளீரே.

ஒருவனது நிழல் அவனுக்கு உதவாது.

தனக்கு அயலாக உள்ள செல்வம் உதவும்
என்று எண்ணுபவர்கள் அறிவற்ற மூடர்கள்.
உடலுடன் ஒன்றாகப் பிறந்தது உயிர் என்றாலும்
உடல் அழிந்துவிடும் அதன் உயிர் பிரிந்துவிட்டால்!
அகக் கண்ணில் உள்ள நிலையான ஒளியை நீங்கள்
உடல் உயிருடன் இருக்கும்போதே கண்டு கொள்வீர்.
 
#171. வலியார் கொள்வார்

ஈட்டிய தேன்பூ மணம் கண்டு இரதமும்
கூட்டிக் கொணர்ந்து ஒரு கொம்பிடை வைத்திடும்
ஓட்டித் துரந்திவிட்டு அது வலியார் கொளக்
காட்டிக் கொடுத்தது கை விட்டவாறே.

மலர்களின் மணத்தால் ஈர்க்கப்பட்ட தேனீ அதன் தேனைச்
சேகரித்து மரக்கிளையில் தேன்கூட்டில் கொண்டு சேர்க்கும்.
வலிய வேடன் அந்தத் தேனீக்களைத் துரத்திவிட்டு விட்டு
அந்தத் தேனை எடுத்துச் சென்று விடுவான். அது போன்றே
செல்வம் சேகரிப்பவர்களுக்குத் துன்பம் தரும்.
 
# 172. செல்வம் நிலையற்றது


தேற்றித் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
ஆற்று பெருக்கில் கலக்கி மலக்கதே
மாற்றிக் களைவீர் மறுத்து உங்கள் செல்வதைக்
கூற்றன் வருங்கால் குதிக்கலும் ஆமே.

அறிந்து கொள்ளுங்கள் செல்வம் நிலையற்றது என்று.
அறிந்தபின்பு நன்கு அறிவில் தெளிவடையுங்கள்.
தெளிவடைந்த பின்னர் அஞ்சி மலைக்கதீர்.
ஆற்றில் பெருகும் வெள்ளம் போல பெருகும்
செல்வதைக் கண்டு மனம் மயங்காதீர்கள்.
பெருகும் வெள்ளம் பின்பு வடிந்து குறைவது போன்றே
பெருகும் செல்வமும் பின்பு குறைந்து விடும்.

மேன்மையான செல்வமான சிவன் அருள் மீது நீங்கள்
பற்றுக் கொண்டீ
ர்கள் என்றால் யமனையும் வெல்ல முடியும்.
 

# 173. கவிழ்கின்ற படகு செல்வம்

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லும் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கு ஓர்வீடு பேறுஆகச்
சிமிழ் ஒன்று வைத்தமை தேர்ந்து அறியாரே
.

முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற செல்வமும்,
தானே முயன்று ஈட்டிய செல்வமும் அனைத்துமே
நீரில் மூழ்கும் படகு போலக் கவிழக் கூடியது.
அழியும் இயல்பு கொண்ட மனித உடலுக்கு ஓர்
அழியாத சேமிப்பு வீடு பேறு என்பதை அறிந்து கொண்டவர்
அழியும் செல்வத்தைப் பெருக்க எண்ணார்.
 
# 174. ஒண்பொருளை மேவுங்கள்


வாழ்வும் மனைவியும் மக்கள் உடன் பிறந்த
தாரும் "அளவு ஏது எமக்கு" என்பர் ஒண்பொருள்
மேவும் தனை விரிவு செய்வார்கட்குக்
கூவும் துணை ஒன்று கூடலும் ஆமே.


மனைவியும், மக்களும், உடன் பிறந்தோரும், உலகப்பொருட்களும்
என்னிடம் அளவில்லாமல் உள்ளனர் என்று எண்ண வேண்டாம்.
உயிருக்கு உதவாத இவற்றை விடுத்து ஓருவன்
உற்ற இடத்தில் உதவக் கூடிய சிவத்தை நாடினால் அது அவனைக்
கூவி அழைத்து மேலான தன்னிடத்தே இணைத்துக் கொள்ளும்.
 
# 175. போம் வழி ஒன்பது


வேட்கை மிகுந்தது மெய் கொள்வார் இங்கு இல்லை,
பூட்டும் தறி ஒன்று போம் வழி ஒன்பது
நாட்டிய தாய் தமர் வந்து வணங்கிப்பின்
காட்டிக் கொடுத்து, அவர் கைவிட்ட வாறே.

உலக வாழ்வில் ஆர்வம் பெருகியது ஆனால்
உண்மைப் பொருளை அறியும் ஆர்வம் இல்லை.
உடலை நிலையாக நிறுத்துவதற்கு உள்ளது
சுழுமுனை என்னும் ஒரே ஒரு தறி மட்டும்.
ஆனால் அழிக்கும் வழிகள் உள்ளன ஒன்பது.
உறவுகளை நிலை நாட்டியவர்கள் உடலை வணங்கிப் பிறகு
சுடுகாட்டைக் கட்டிக் கொடுத்து விட்டுச் சென்று விடுவார்கள்.
 
Back
Top