Quotable Quotes Part II

# 145. நினைப்பு ஒழிப்பர்

ஊர்எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டு
சூரை அங்காட்டிடை கொண்டு போய்க் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே.

உடல் விழுந்த பின் ஊரெல்லாம் கூடி ஓலம் இடும், அழும்.
அவன் பேரை மாற்றி விட்டுப் பிணம் என்று அழைப்பர்.
முட்செடிகள் நிறைந்த சுடுகாட்டில் கொண்டு உடலை எரித்து விட்டு
பிறகு நீராடி எழுந்ததும் அந்த மனிதனைப் பற்றி மறந்தே போவார்கள்.
 
# 136. சீவனும், சிவனும்

அப்பினில் கூர்மை ஆதித்தன் வெம்மையால்
உப்புஎனப் பேர்பெற்று உருச்செய்த அவ்வுரு
அப்பினில் கூடி அது ஒன்றாகு மாறுபோல்
செப்பினில் சீவன் சிவத்துள் அடங்குமே.

கடல் நீரில் கலந்துள்ள உப்பு கண்ணுக்குத் தெரியாது.
ஆனால் சூரியனின் வெப்பம் அதைக் கண்ணால்
காணமுடிகின்ற உப்பாக மாற்றுகின்றது.
அந்த உப்பை மீண்டும் கடல் நீரில் இட்டால்
முழுவதுமாகக் கரைந்து கலந்து விடுகின்றது.
சிவத்திலிருந்து சீவன் வெளிப்படுகின்றது.
சிவத்திலேயே சீவன் மீண்டும் அடங்க வேண்டும்.
 
# 137. திருவடிகளே!

அடங்கு பேரண்டத்து அணு அண்டம் சென்று அங்கு

இடங்கொண்டதில்லை இதுவன்றி வேறு உண்டோ ?
கடந்தொறும் நின்ற உயிர்கரை காணில்
திடம் பெற நின்றான் திருவடி தானே.

எல்லாவற்றையும் தன்னுள் கொண்டவன் சிவன்.
உயிரின் எல்லையான அண்ட கோசம், இறைவனின்
எல்லையற்ற பரப்பினுள் சென்ற பொருந்துகின்றது.
பேரண்டத்தில் சீவனின் அண்ட கோசம் அடங்குவது பொருத்தமே.
அதைத் தவிர அடங்கும் இடம் என்று வேறு ஏதாவது உண்டோ?
உடல் தோறும் உள்ள உயிர், தான் சேரும் இடத்தை ஆராய்ந்தால்
அது எல்லாவற்றுக்கும் ஆதாரமான இறைவன் திருவடிகளே ஆகும்
 
# 138. திருவடியே தஞ்சம்

திருவடியே சிவமாவது நேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல் கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள் தெளிவார்க்கே.

ஆராய்ந்து நோக்கிடில் திருவடிகளே சிவம் ஆகும்.
சிந்தித்தால் திருவடிகளே சிவலோகம் ஆகும்.
சொல்லப் போனால் திருவடிகளே முக்திக்கு நெறியாகும்.
உள்ளம் தெளிந்தவர்களுக்குத் திருவடிகளே தஞ்சம் ஆகும்.
 
# 139. தெளிவு

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉருச் சிந்தித்தல் தானே.

தெளிவைத் தருபவை இவையே!
சிவகுருவைப் பேரொளியாகச் சிரசின் மேல் காணுதல்;
சிவகுருவின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதுதல்;
சிவகுருவின் உபதேச மொழிகளைக் கேட்டல்;
சிவகுருவின் திருமேனியைச் சிந்தித்தல்.
 
# 140. புலன்கள் செலுத்தும்


தானே புலனைந்தும் தன் வசமாயிடும்
தானே புலனைந்தும் தன்வசம் போயிடும்
தானே புலனைந்தும் தன்னில் மடை மாறும்
தானே தனித்தெம்பி ரான்தனைச் சந்தித்தே.

உயிர் உலகில் இருந்து விலகி குருவை அடையும் பேறு பெற்றால்,
மனம் ஐம்புலன்கள் வழியே செல்லாது உயிர் வழியே செல்லத் துவங்கும்.
ஐம்புலன்கள் தரும் இன்பங்களில் அது கொண்ட ஆர்வம் அழிந்து விடும்.
அப்போது ஐம்புலன்களே ஆன்மாவை இறைவனை நோக்கிச் செலுத்தும்.
 

# 141. பொற்போதம்

சந்திப்பது நந்திதன் திருத்தாளிணை
சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி
வந்திப்பது நந்தி நாமமென் வாய்மையாற்
புந்திக்குள் நிற்பது நந்தி பொற் போதமே.

இடைவிடாது நான் சந்திப்பது சிரசின் மேல் சிவன் திருவடிகளை.
இடைவிடாது நான் சிந்திப்பது சிவனின் சிவந்த திருமேனியினை.
இடைவிடாது நான் வணங்குவது சிவனின் திருப்பெயரினை.
இடைவிடாது என் அறிவில் விளங்குவது சிவன் திருவடி ஞானம்.
 
# 142. வான் மண்டலம்

போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியைப்
போதம் தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதம் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

புண்ணிய வடிவான சிவபெருமான் மேன்மையான
தன் திருவடி ஞானத்தை நமக்கு அளிப்பான்.
அப்பெருமானை அறிவில் பொருத்தியவர் புண்ணியர் ஆவர்.
அவர்கள் நாதனின் ஆனந்த நடனத்தைக் கண்டு களி கூர்வர்.
அவர்கள் வேதங்கள் புகழ வான்வெளியை அடைவார்கள்.
ஆசான் கூறும் உபதேசம் முற்றியது.
தொடர்வது யாக்கை நிலையாமை.
 
2. யாக்கை நிலையாமை

# 143. பச்சை மண்கலம்


மண்ஒன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீயினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர் விழின் மீண்டும் மண் ஆவபோல்
எண்ணிறந்த மந்தர் இறக்கின்றவரே.

மண் ஒன்றே என்ற போதிலும் அதில் உருவாகும் கலங்கள் இருவகைப்படும். தீயினைச் சார்ந்த மண்கலம் நல்ல வலிமை பெறும். எளிதில் உடையாது. தீயினைச் சாராத மண்கலம் மென்மையாக இருக்கும். எளிதில் அழிந்துவிடும். விண்ணிலிருந்து மழை நீர் பொழிந்தால் பச்சை மண்கலம் முற்றிலும் அழிந்து மீண்டும் மண்ணாகவே மாறிவிடும்,சுட்ட மண்கலம் மழை நீரில் கரையாது. அழியாது. தீயாகிய சிவன் அருள் வயப்பட்ட உடல் அழிவதில்லை.
திருவருள் வயப்படாத பச்சை மண்கலம் போன்ற உடல்
அழிந்து அழிந்து மீண்டும் மீண்டும் உலகில் பிறக்கின்றது.
 
# 144. உடன் வழி நடவாது!

பண்டம்பெய் கூரைபழகி விழுந்தக்கால்
உண்டஅப்பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமுமல்லது
மண்டியவருடன் வழி நடவாதே.

கன்ம வினைப் பயன்களைத் துய்த்த பின் உடல் விழுந்துவிடும்.
உடன் இருந்து இன்பங்களை அனுபவித்த மனைவியோ மக்களோ
உடன் வரமாட்டார்கள் அப்போது நம்முடன்.வாழ்ந்திருந்த காலத்தில் நாம் செய்த நோன்புகளின் பலன்களும், நாம் சேகரித்த ஞானமும் மட்டுமே நம்மைத் தொடர்ந்து வரும்.
 
# 145. நினைப்பு ஒழிப்பர்

ஊர்எலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேர் இட்டு
சூரை அங்காட்டிடை கொண்டு போய்க் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பு ஒழிந்தார்களே.

உடல் விழுந்த பின் ஊரெல்லாம் கூடி ஓலம் இடும், அழும்.
அவன் பேரை மாற்றி விட்டுப் பிணம் என்று அழைப்பர்.
முட்செடிகள் நிறைந்த சுடுகாட்டில் கொண்டு உடலை எரித்து விட்டு
பிறகு நீராடி எழுந்ததும் அந்த மனிதனைப் பற்றி மறந்தே போவார்கள்.
 
# 146. போன உயிர் மீளாது.

காலும் இரண்டு, முகட்டு அலகு ஒன்றுஉள,
பாலுள் பருங்கழி முப்பத்திரண்டு உள,
மேல்உள கூரை பிரியும் , பிரிந்தால் முன்
போல் உயிர் மீளப் புகஅறி யாதே.

இரண்டு கால்கள் உள்ளன வீடாகிய உடலுக்கு.
உச்சி உத்தரமாக உள்ளது ஒரு முதுகுத் தண்டு.
இரு பக்கங்களிலும் உள்ளன முப்பது இரண்டு
விலா எலும்புகள் ஆகிய பருத்த சாற்றுக்கழிகள்.
இவை அனைத்தையும் மூடியுள்ளது தசை என்னும் கூரை.
ஒரு நாள் கூரை பிரிந்துவிடும். அப்போது உயிர் நீங்கிவிடும்.
மீண்டும் உயிர் அந்த வீட்டுக்குள் புகுவதை அறியாது.
 
# 147. ஆக்கை பிரிந்தது

சீக்கை விளைந்தது, செய்வினை மூட்டிற்று;
ஆக்கை பிரிந்தது; அலகு பழுத்தது;
மூக்கினில் கைவைத்து மூடிக்கொண்டு போய்
காக்கைக்குப் பலி வைக்கின்றவாறே.

உயிர் பிரியும் வேளையில் கபம் மிகவும் அதிகரித்தது.
வினைகளுடன் உடல் கொண்ட தொடர்பு நீங்கியது.
உடல் நீங்கியது. எலும்புகளின் வன்மை கெட்டது.
மூக்கில் கை வைத்துப் பார்த்து விட்டு, ஒரு துணியால்
உடலை மூடி, எடுத்துக் கொண்டு செல்கின்றனர்.
வாயில் அரிசி இட்டு இறுதிக் கடன்களைச் செய்கின்றனர்.
 
# 148. இடப்பக்கம் நொந்தது.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரோடு மந்தணம் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

நல்ல உணவைச் சமைத்தார். அதை உண்டார்.
இளம் பெண்களுடன் இன்பம் அனுபவித்தார்.
"இடப்பக்கம் கொஞ்சம் வலிக்கின்றது!" என்றார்.
கீழே படுத்தவர் அதன் பின்னர் எழவே இல்லை!
 
# 149. திரிந்திலன்

மன்றத்தே நம்பி மாடம் எடுத்தது;
மன்றத்தே நம்பி சிவிகை பெற்று ஏறினான்;
மன்றத்தே நம்பி முக்கோடி வழங்கினான்;
சென்று, 'அத்தா ' என்ன, திரிந்திலன் தானே.

மாடி வீடு கட்டினான். மகிழ்வுடன் அதில் வாழ்ந்தான்.
பலர் காணும்படி பல்லக்கில் பவனி வந்தான்.
பலருக்கு புத்தாடைகளை வாரி வழங்கினான்.
அவன் உயிர் நீங்கிய பிறகு, அவன் மக்கள் அவனை
"அப்பா!" என்று அழைத்தபோது அவன் எழவில்லை!
 
# 150. பாசம் மறைந்துவிடும்

வாசந்தி பேசி மணம் புணர்ந்து, அப்பதி
நேசம் தெவிட்டி நினைப்பு ஒழிவர் பின்னை
ஆசந்தி மேல் வைத்து அமைய அழுதிட்டுப்
பாசம் தீச்சுட்டுப் பலிஅட்டி னார்களே.

நிச்சய தாம்பூலம் செய்து, மணம் புரிந்து கொண்ட
கணவன் அன்பு மனைவிக்குத் திகட்டி விடும்.
அவன் நினைவையும் அவள் மறந்து விடுவாள்.
அவன் இறந்த பின்னர் அவனைப் பாடையில் வைத்துப்
பொருத்தமாக அழுது புலம்பி, அவன் மீது வைத்த பாசத்தையும்
அவனுடன் தீயினில் சுட்டுவிட்டு அவனுக்குப் பிண்டம் இடுவாள்.
 
# 151. மெய் விட்டுப் போவர்.

கைவிட்டு நாடிக் கருத்து அழிந்து அச்சுஅற
நெய்அட்டுச் சோறு உண்ணும் ஐவரும் போயினர்;
மை இட்ட கண்ணாளும் மாடும் இருக்கவே
மெய்விட்டுப் போக விடை கொள்ளு மாறே.

நாடி பார்க்கும் வைத்தியர் அவனைக் கைவிட்டு விடுவார்.
எண்ணும் திறன் அழிந்து விடும். உயிர் இயக்கம் நீங்கும்.
நெய் கலந்து உண்ட நாக்கு முதலிய ஐம்பொறிகள் செயலறும்.
மையிட்ட கண் மனைவியும், ஈட்டிய செல்வமும் இருக்கும்.
அவன் உடலை விட்டு உயிர் நீங்கும் வகை இதுவே ஆகும்.
 
# 152. அழுதுவிட்டு அகலுவார்.

பந்தல் பிரிந்தது, பண்டாரம் கட்டு அற்ற
ஒன்பது வாலும் ஒக்க அடைத்தன,
துன்பு உறு காலத் துரிசுவர மேன்மேல்
அன்புடையார்கள் அழுது அகன்றார்களே.

உடல் என்னும் அழகிய பந்தல் பிரிந்துவிட்டது.
உயிர்நிலை அப்போது நிலை குலைந்துவிட்டது.
உடலின் ஒன்பது வாயில்களும் ஒன்றாக மூடிக் கொண்டன.
துன்பம் தருகின்ற, காலம் என்பதன் முடிவு வந்து சேர்ந்தது.
அன்பு கொண்ட உறவினர்கள் அழுது விட்டு அகன்று சென்றார்கள்
 
# 153. நம்பி நடக்கும் முறை

நாட்டுக்கு நாயகன் நம்ஊர்த் தலைமகன்
காட்டுச் சிவிகை ஒன்றுஏறிக் கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறைகொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே.

நாட்டின் தலைவன், ஊருக்குத் தலைவன் ஏறுவான்
காட்டுக்குச் செல்லும் சிவிகையில் கடைசி முறையாக.
நாட்டு மக்கள் அவனைப் பின் தொடர்ந்து செல்வார்கள்.
அவன் முன்னே செல்பவர்கள் பறை ஒலிப்பார்கள்.
நாட்டின் தலைவன் காடு செல்லும் முறை இதுவே ஆகும்.
 
# 154. தத்துவங்கள் தொண்ணூற்றாறு

முப்பதும் முப்பதும் முப்பதறுவரும்

செப்பம் மதிள் உடைக் கோவிலுள் வாழ்பவர்.
செப்பம் மதிள் உடைக் கோயில் சிதைந்தபின்
ஒப்ப அனைவரும் ஓட்டெடுத் தார்களே.

தொண்ணூற்றாறு தத்துவங்கள் வாழ்வர்
நல்ல மதிள் அமைந்த கோவில் ஒன்றில்.
மதிள் சிதைந்தவுடன் அவர்கள் அனைவரும்
ஒன்றாகக் கோவிலை விட்டு ஓடி விடுவார்கள்!

தொண்ணூதராறு தத்துவங்கள் :-

1. சிவ தத்துவம் ..............................5

2. வித்தியா தத்துவம்.......................7

3. ஆன்ம தத்துவம்.........................24

4. பஞ்சபூதக் காரியங்கள்...............25

5. வாசனாதிகள்...............................5

6. வாயுக்கள்...................................10

7. நாடிகள்.......................................10

8. வாக்கு...........................................4

9. ஏடணை ........................................3

10. குணம்...........................................3

1, 2, 3 சேர்ந்தவை முப்பத்தாறு தத்துவங்கள்

4 முதல் 10 வரை உள்ள அறுவதும் தாத்துவிகம்
 
# 155. வைத்து அகலுவார்கள்


மதுவூர் குழலியும் மாடும் மனையும்

இதுவூர் ஒழிய இதணம் தேறிப்
பொதுவூர் புறஞ் சுடுகாடுஅது நோக்கி
மதுஊர வாங்கியே வைத்து அகன் றார்களே.


தேன் சிந்தும் மலர் சூடும் மனைவியும், ஈட்டிய செல்வமும்,
கட்டிய வீடும் இந்த உலகிலேயே தங்கிவிடும்.
உயிர் பிரிந்த உடலை ஊருக்குப் பொதுவாக புறத்தே உள்ள
சுடுகாட்டை நோக்கிப் பாடையில் எடுத்துச் செல்வர்.
மன மயக்கத்துடன் உடலைச் சிதையில் வைத்துவிட்டு அகலுவர்.
 
Back
Top