Quotable Quotes Part II

# 119. குரு உபதேசம்

அறிவு ஐம்புலனுடனே நான்றது ஆகி
நெறி அறியாது உற்ற நீராழம் போல
அறிவு அறிவுள்ளே அழிந்தது போலக்
குறி அறிவிப்பான் குருபரன் ஆமே.

ஜீவனின் அறிவு ஐம் புலன்களுடன் கூடியதால், அது
வெள்ளத்தில் அகப்பட்டதைப் போல மயங்கி நிற்கும்.
சிற்றறிவைப் பேரறிவில் அடங்குவதை போல ஒரு நல்ல
குருநாதன் தெளிவை ஏற்படுத்தி நல் வழியைக் காட்டுவான்.
 
# 120. எரி சார்ந்த வித்து

ஆமேவு பால் நீர் பிரிக்கின்ற அன்னம் போல்
தாமே தனிமன்றில் தன்னந் தனி நித்தம்
தீமேவு பல கரணங்களுள் உற்றன
தாமேழ் பிறப்பு எரி சார்ந்த வித்து ஆமே.

பசுவின் பாலில் கலந்த நீரை அன்னப் பறவை பிரித்து விடும்.
சிதாகசப் பெருவெளியில் நடனம் புரிகின்றான் அம்பலவாணன்.
அந்த நடனம் உயிரிடமிருந்து அதன் வினைகளைப் பிரித்து விடும்.
வறுக்கப்பட விதைகள் ஒரு நாளும் முளை விடா. அது போன்றே
ஏழு பிறவிகளின் நல் வினைத் தீவினைகள் இனிப் பலன் தாரா.
 
# 121. சிவயோகியர்
வித்தைக் கெடுத்து வியாக்கிரத் தேமிக
சுத்த துரீயம் பிறந்து துடக்கற
ஒத்துப் புலனுயி ரொன்றா யுடம்போடு
செத்திட்டிருப்பர் சிவயோகி யார்களே.

பிறவிக்கு வித்தாகிய கன்மத்தை அழித்துவிட்டு,
சுத்த துரீய நிலையை அடைவதற்கு சிவயோகியர்,
விழிப்பு நிலையிலேயே தூய நிலையை எய்துவர்.
பந்தங்கள் அனைத்தையும் விட்டு விடுவர்.
பொறிகள் புலன்கள் வழியே செல்லாது அடக்கி,
உடலும், அறிவும் செயல் இல்லாது இருப்பார்கள்.
 
# 122. சிவயோகம்

சிவயோக மாவது சித்து அசித்து என்று
தவயோகத் துள் புக்குத் தன்ஒளி தானாய்
அவயோகம் சாராது, அவன்பதி போக
நவயோகம் நந்தி நமக்கு அளித்தானே.

சிவயோகம் என்பது அறிவுள்ள பொருளையும் (ஈசனையும் )
அறிவற்ற பொருளையும் (உலகையும்) பிரித்து அறியும் திறன்;
தன் உணர்வைச் சுழுமுனை ( சுஷும்னா நாடி ) வழியாக மேலே
தலைக்கு கொண்டு செல்லும் தவ யோகத்தை அடையும் திறன்;
அங்கே உள்ள சிவ ஒளியில் தானும் புகுந்து கலந்து நிற்கும் திறன்;
தீமை தரும் வேறு விதமான யோகங்களைச் சாராதிருத்தல் ஆகும்.
சிவன் தன் பரமாகாயத்தில் நின்று உய்யுமாறு ஒரு நல்ல நெறியை
தானே எனக்கு அன்புடன் உவந்து அளித்தான்.
 
# 123. பேரின்பம்

அளித்தான் உலகுஎங்கும் தான்ஆன உண்மை
அளித்தான் அமரர் அறியா உலகம்
அளித்தான் திருமன்றுள் ஆடும் திருத்தாள்
அளித்தான் பேரின்பத்து அருள்வெளி தானே.


உலகம் முழுவதும் சிவமயமாக இருக்கும் உண்மையை
என் ஈசன் சிவபெருமான் எனக்கு நன்கு உணர்த்தினான்.
தேவர்களும் அறிந்திடாத ஓர் உலகை எனக்குக் காட்டினான்.
பரமாகாயத்தில் ஆனந்த நடனம் செய்யும் திருப் பாதங்களை
என் தலை மேல் அன்புடன் சூட்டினான் அந்த இறைவன்.
பேரின்பமாகிய அருள் வெளியையும் எனக்குத் தந்தான்.
 
# 124. சிவசித்தர்

வெளியில் வெளிபோய் விரவிய வாறும்
அளியில் அளிபோய் அடங்கிய வாறும்
ஒளியில் ஒளிபோய் ஒடுங்கிய வாறும்
தெளியு மவரே சிவசித்தர் தாமே.

சிவசித்தர்கள் அறிவர் இந்த உண்மைகளை.
சிவன் விளங்கும் சிதாகாசப் பெருவெளியில்
ஆகாய மயமான ஆன்மா கலக்கும் விதத்தையும்;
சிவ பிரானது இச்சையில் ஆன்மாவின் இச்சை
சென்று அடங்குகின்ற விதத்தையும்;
சிவ ஒளியில் ஆன்ம ஒளி ஒடுங்கும் விதத்தையும்;
அறிவால் தெளிந்து கண்டவர்களே சிவ சித்தர்கள்.
 
# 125. தத்துவங்கள் முப்பத்தாறு

சித்தர் சிவலோகம் இங்கே தரிசித்தோர்
சத்தமும் சத்தமுடிவும் தம்முட் கொண்டோர்,
நித்தர், நிமலர், நிராமயர், நீள்பர
முத்தர் தம்முத்தி முதல் முப்பத்தாறே.

சிவலோகத்தில் அடையக் கூடிய பேரின்பத்தை
சித்தர்கள் தம் சமாதி நிலையிலேயே பெறுவர்.
நாதத்தையும், நாதத்தின் முடிவாகிய நாதாந்தத்தையும்
அவர்கள் தமக்குள்ளேயே காண்பர்.
அவர்கள் அறிவு அற்றவர், நிர்மலமானவர்,
குற்றமற்றவர், தூய இன்பத்தில் திளைத்திருப்பவர்.

இத்தகைய சித்தர்களுக்கு முக்திக்கு வழியாகும்

கீழ்கண்ட முப்பத்தாறு தத்துவங்கள்.

ஆன்ம தத்துவம் ..... 24
வித்தியா தத்துவம்....7
சிவ தத்துவம்........ ....5
 
# 126. சிவமாகத் திகழ்வர்

முப்பதும் ஆறும் படிமுத்தி ஏணியாய்
ஒப்பிலா ஆனந்தத்து உள்ளொளி புக்கு
செப்ப அரிய சிவம்கண்டு, தான் தெளிந்து
அப்பரிசாக அமர்ந்திருந்தாரே.

முப்பத்தாறு தத்துவங்களையே முக்தியை அடைவிக்கும்
சிறந்த ஏணியின் பல படிகளாக அமைத்துக் கொண்டு,
ஒப்பில்லாத சிவானந்தத்தைத் தரும் ஒளியில் புகுந்து,
சொல்வதற்கு அரிய சிவபெருமானைத் தரிசித்தவர்கள்
அந்த சிவத் தன்மையை அடைந்து சிவமாகத் திகழ்வார்கள்.
 
# 127. ஆன்ம சுத்தி

இருந்தார் சிவமாகி எங்கும் தாம்ஆகி
இருந்தார் சிவன்செயல் யாவையும் நோக்கி
இருந்தார் முக்காலத்து இயல்பைக் குறித்து அங்கு
இருந்தார் இழிவு வந்து, எய்திய சோம்பே.

சித்தர்கள் சிவத் தன்மையை அடைந்து விட்டதால்
தாமும் சிவன் போல எங்கும் நீக்கமற நிறைந்திருப்பர்.
சிவன் செயல்களை நோக்கிய வண்ணம் இருப்பர்.
முக்காலங்களின் இயல்பையும் அறிந்து இருப்பர்.
தமக்கென்று தனியாகச் செயல் இன்றி இருப்பர்.
 
# 128. நாதாந்தம்

சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே
சோம்பர் கிடப்பதும் சுத்த வெளியிலே
சோம்பர் உணர்வு சுருதி முடிந்த இடம்
சோம்பர் கண்டார் அச் சுருதிக்கண் தூக்கமே.

தன் செயல் இல்லாமல் சிவன் செயலாக இருப்பவர் சோம்பர்.
அவர்கள் தங்கி இருப்பது தூய வெளியாகிய சிவ வெளியிலே.
அவர்கள் பேரின்பத்தில் திளைப்பதும் தூய சிவ வெளியிலே.
முப்பத்தாறு தத்துவங்களின் இறுதியில் உள்ளது நாதம் எனில்
அதன் முடிவே ஆகும் நாதாந்தம் என்னும் உயர்ந்த நிலை.
 
# 129. கூற இயலுமோ?

தூங்கிக் கண்டார் சிவலோகமுந் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவயோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் சிவபோகமும் தம்முள்ளே
தூங்கிக் கண்டார் நிலை சொல்வ தெவ்வாறே.

தூங்கிக் கண்டவர் நாதாந்த நிலையை அடைந்து விட்ட சிவ சித்தர்கள்.
அவர்கள் யோக நிலையில் தம்முள் சிவலோகத்தைக் காண்பவர்கள்.
அவர்கள் தமக்குள்ளேயே சிவனுடன் இணைந்து இருப்பவர்கள்.
அவர்கள் தமக்குள்ளேயே சிவபோகமான பேரின்பத்தைத் தூய்ப்பவர்கள்.
அவர்கள் நிலையை அந்த அனுபவம் இல்லாதவர்கள் கூற இயலுமோ?
 
# 130. பக்குவமும் பரிசும்

எவ்வாறு காண்பான் அறிவு தனக்கு எல்லை
அவ்வாறு அருள் செய்வான் ஆதி அரன்தானும்
ஒவ்வாத மன்றுள் உமைகாண ஆடிடும்
செவ்வானில் செய்ய செழுஞ்சுடர் மாணிக்கம்.

அறிவுக்கு எல்லையானவன் சிவபெருமான்.
நாம் அவனை எந்த முறையில் அணுகுகின்றோமோ,
நம்மை அவனும் அதே முறையில் அணுகி அருளுவான்.
ஆதியான சிவன் ஒப்பற்ற மன்றத்துள் திருநடனம் செய்வான்,
உமை அன்னை கண்டு மனம் மகிழும் வண்ணம்.
செவ்வானத்தை விடவும் சிறந்த, சிவந்த, ஒளி வீசுகின்ற
ஓர் அற்புதமான மாணிக்கம் ஆவான் நம் சிவபெருமான்.
 
# 131. சித்தர்கள் மகிழ்வர்

மாணிக்கத்துள்ளே மரகத சோதியாய்
மாணிக்கத்துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றினு ஆடுந் திருக் கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறு பெற்றாரே.

சிரசின் மீது மாணிக்கம் போன்ற சிவந்த ஒளியுள் (சிவத்தினுள்)
கொடி போன்று பின்னிக் கிடக்கும் பச்சை நிற ஒளி (சக்தி தேவி).
அந்தப் பச்சை நிற ஒளியே சிவன் நிருத்தியம் செய்யும் மாடம்.
அந்த மண்டபத்தில், பசும் பொன் போன்ற பரமகாயத்தில்,
சிவன் ஆடும் திருக் கூத்தைக் கண்ட சிவயோகியர் மகிழ்வர்.
 
#132. மௌனமே மொழி

பெற்றா ருலகில் பிரியாப் பெருநெறி
பெற்றா ருலகில் பிறவாப் பெரும் பயன்
பெற்றாரம் மன்றில் பிரியாப் பெரும் பேறு
பெற்றா ருலகுடன் பேசப் பெருமையே.

பொன் போன்று ஒளிரும் வெளியில் விளங்கினாலும்,
சிவசித்தர்கள் உலகை விட்டுப் பிரிந்து நிற்பதில்லை.
உலகத்தினருக்கு உதவுவதையே தம் கொள்கையாக கொள்வர்.
உலகில் இருந்து கொண்டு உலகத்தினருக்கு உதவினாலும்
அவர்கள் மீண்டும் உலகில் பிறவாத பெரும் பேறு பெறுவார்.
தம் சேவையை பந்தமின்றிச் செய்வதுவே காரணம் ஆகும்.
 
# 133. சாதகர்

பெருமை, சிறுமை அறிந்துஎம் பிரான் போல்
அருமை, எளிமை அறிந்து, அறிவார் ஆர்?
ஒருமையுள் ஆமை போல், உள் ஐந்து அடக்கி
இருமையும் கேட்டு, இருந்தார் புரை அற்றே.

அண்டதிலும், அணுவிலும் நிறைந்திருப்பவன் சிவபெருமான்.
அவற்றின் அருமை பெருமைகளை அவனைப் போல் யார் அறிவார்?
ஆமை போல் ஐம்பொறிகளையும் ஐம் புலன்களின் மேல் செல்லாது அடக்கி,
மனத்தை ஒருமைப் படுத்திய சாதகர்கள், சிவ பெருமானைப் போலவே
பெருமை சிறுமை இவை இரண்டையும் முழுமையாக உணர்ந்திருப்பார்.
 
# 134. கரை அற்ற சோதி

புரை அற்ற பாலினுள் நெய் கலந்தாற்போல்
திரை அற்ற சிந்தைநல் ஆரியன் செப்பும்
உரையற்று உணர்வோர் உடம்பு இங்கு ஒழிந்தால்
கரை அற்ற சோதி கலந்தசத்து ஆமே.


புரை இடாத பாலில் நெய் எங்கும் விரவி இருக்கும்.
எண்ண அலைகள் ஓய்ந்த மனத்துடன், ஆசிரியன் கூறும்
உபதேச மொழிகளைக் கேட்டு, அதனை உணர்ந்து கொண்டு,
உடல் என்ற உணர்வை ஒருவன் முற்றிலுமாக ஒழித்தால்,
எல்லை இல்லாத சோதியாகிய சிவத்துடன் இணையலாம்.
 
# 135. சுடரில் சுடர் சேரும்

சத்தம் முதல் ஐந்தும் தன்வழித் தான் சாரில்
சித்துக்குச் சித்து அன்றிச் சேர்விடம் வேறு உண்டோ?
சுத்த வெளியில், சுடரில் சுடர் சேரும்
அத்தம் இது குறித்து ஆண்டுகொள் அப்பிலே.

சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற ஐந்து தன்மத்திரைகள்
அறிவற்றதாகிய அஹங்காரத்தில் ஒடுங்கி விடும் என்றால்,
அறிவு மயமாகிய ஆன்மா சென்று ஒடுங்குவதற்கான இடம்
அறிவு மயமான சிவனை அன்றி வேறு இருக்க முடியுமா?
பரமாகாயமான சுத்த வெளியில் சிவ ஒளியுடன் ஆன்ம ஒளி இணையும்.
என்னையும் ஒரு பொருளாகக் கருதி, அருள் நீராட்டி, என்னை ஆட்கொள்ளுவாய்.
 
# 141. பொற்போதம்

சந்திப்பது நந்திதன் திருத்தாளிணை
சிந்திப்பது நந்தி செய்ய திருமேனி
வந்திப்பது நந்தி நாமமென் வாய்மையாற்
புந்திக்குள் நிற்பது நந்தி பொற் போதமே.

இடைவிடாது நான் சந்திப்பது சிரசின் மேல் சிவன் திருவடிகளை.
இடைவிடாது நான் சிந்திப்பது சிவனின் சிவந்த திருமேனியினை.
இடைவிடாது நான் வணங்குவது சிவனின் திருப்பெயரினை.
இடைவிடாது என் அறிவில் விளங்குவது சிவன் திருவடி ஞானம்.
 
# 142. வான் மண்டலம்

போதம் தரும் எங்கள் புண்ணிய நந்தியைப்
போதம் தனில் வைத்துப் புண்ணியர் ஆயினார்
நாதன் நடத்தால் நயனம் களிகூர
வேதம் துதித்திடப் போயடைந்தார் விண்ணே.

புண்ணிய வடிவான சிவபெருமான் மேன்மையான
தன் திருவடி ஞானத்தை நமக்கு அளிப்பான்.
அப்பெருமானை அறிவில் பொருத்தியவர் புண்ணியர் ஆவர்.
அவர்கள் நாதனின் ஆனந்த நடனத்தைக் கண்டு களி கூர்வர்.
அவர்கள் வேதங்கள் புகழ வான்வெளியை அடைவார்கள்.

ஆசான் கூறும் உபதேசம் முற்றியது.

தொடர்வது யாக்கை நிலையாமை
 
2. யாக்கை நிலையாமை

# 143. பச்சை மண்கலம்

மண்ஒன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென்று இருந்தது தீயினைச் சேர்ந்தது
விண்ணின்று நீர் விழின் மீண்டும் மண் ஆவபோல்
எண்ணிறந்த மந்தர் இறக்கின்றவரே.

மண் ஒன்றே என்ற போதிலும் அதில் உருவாகும் கலங்கள் இருவகைப்படும். தீயினைச் சார்ந்த மண்கலம் நல்ல வலிமை பெறும். எளிதில் உடையாது. தீயினைச் சாராத மண்கலம் மென்மையாக இருக்கும். எளிதில் அழிந்துவிடும்.
விண்ணிலிருந்து மழை நீர் பொழிந்தால் பச்சை மண்கலம்
முற்றிலும் அழிந்து மீண்டும் மண்ணாகவே மாறிவிடும்,
சுட்ட மண்கலம் மழை நீரில் கரையாது. அழியாது.
தீயாகிய சிவன் அருள் வயப்பட்ட உடல் அழிவதில்லை.
திருவருள் வயப்படாத பச்சை மண்கலம் போன்ற உடல்
அழிந்து அழிந்து மீண்டும் மீண்டும் உலகில் பிறக்கின்றது.
 
# 144. உடன் வழி நடவாது!


பண்டம்பெய் கூரைபழகி விழுந்தக்கால்
உண்டஅப்பெண்டிரும் மக்களும் பின் செலார்
கொண்ட விரதமும் ஞானமுமல்லது
மண்டியவருடன் வழி நடவாதே.

கன்ம வினைப் பயன்களைத் துய்த்த பின் உடல் விழுந்துவிடும்.
உடன் இருந்து இன்பங்களை அனுபவித்த மனைவியோ மக்களோ
உடன் வரமாட்டார்கள் அப்போது நம்முடன். வாழ்ந்திருந்த காலத்தில் நாம் செய்த நோன்புகளின் பலன்களும், நாம் சேகரித்த ஞானமும் மட்டுமே நம்மைத் தொடர்ந்து வரும்.



 
Back
Top