Quotable Quotes Part II

# 97. உணருவது அரிது

மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை யுள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
முன்னும் அவனை உணரலும் ஆமே?

நிலைபெற்ற வேதங்களை முனிவர்கள் ஓதுகின்ற பொழுது,
அதன் ஸ்வரங்களின் நாதத்தில் வெளிப்படுவன் பெருமான்.
உலகத்தைப் படைத்த நான்முகனும், அவன் தந்தையாகிய
திருமாலும் சிவபெருமானின் சிறப்பை அறிய முடியுமா?
 
# 98. பயன் அறியார்

தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முக்திக்கு இருந்த முனிவரும் தேவரும்
இத்துடன் வேறாய் இருந்து துதி செயும்
பத்திமை ஆல் இப் பயன் அறியாரே.

குருவாக வந்து சிவன் தத்துவ ஞானத்தைப் போதித்து
திருக் கயிலை மலையின் அடிவாரத்தில்.
முக்தியை விரும்பும் முனிவர்களும், தேவர்களும்
இந்தத் தத்துவ ஞானத்தை வேறாகி இருந்து ஓதுவதால்
அதன் சிறந்த பயனை பெற மாட்டார்கள்.

அஹங்காரம் உள்ளவர்கள் இறைவனை
அன்னியமாகக் கருதி வழிபடுவார்கள்.
அஹங்காரம் அழிந்ததும் அவர்களின்
அந்நிய பாவம் மறைந்து விடும்.
அப்போது வழிபடுவதன் பயன் கிடைக்கும்.
 
vii . திருமந்திரத் தொகைச் சிறப்பு

# 99. ஞாலத் தலைவன்

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலமறியவே நந்தி யருளது
காலை யெழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணுவ ரன்றே.

மூலன் என்னும் நான் உரைத்துள்ளேன் மூவாயிரம்
தமழ் மந்திரங்கள் கொண்ட இந்தத் திருமந்திரம்.
உலகத்தவர் உணர்ந்து கொண்டு உய்யும் பொருட்டு
இறைவனால் அருளப்பட்டது இந்தத் திருமந்திரம்.
காலை எழுந்தவுடன் கருத்து அறிந்து இதனை ஓதினால்
உலகத்தவர், உலகத் தலைவனை அடைந்து இன்புறுவர்.
 
# 100. முக்தி நிலை

வைத்த பரிசே வகை வகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவாயிரத்திலே
புத்தி செய் பூர்வத்து மூவாயிரம் பொது
வைத்த சிறப்புத் தருமிவை தானே.

திருமந்திரம் என்னும் இந்த நூலில் உள்ளன ஒன்பது தந்திரங்கள்.
மூவாயிரம் பாடல்களும் கூறும் முக்தி நிலையினை.
பொதுவாகவும் சிறப்பாகவும் அமைந்த மூவாயிரம் பாடல்கள்
ஓதுபவர்களுக்கு தகுந்த நன்மைகளை அளித்திடும்.
 
viii. குருமட வரலாறு

# 101. ஏழு மடங்கள்

வந்த மடமேழு மன்னுஞ்சன் மார்க்கத்தின்
முந்தி வுதிக்கின்ற மூலன் மடவரை
தந்திர மொன்பது சார்வு மூவாயிரம்
சுந்தர ஆகமச் சொல் மொழிந்தானே.
ஏழு மடங்கள் கயிலாய பரம்பரையில் வந்தவை.
அவை ஏழுமே சன்மார்க்கத்தைகே கூறுபவை.
அவற்றில் முன்னே தோன்றியது மூலன் மடம்.
அதன் ஆசிரியர் மூவாயிரம் பாடல்களை
ஒன்பது தந்திரங்களில் அழகிய ஆகமமாக அமைத்தார்.
 
#102. நிராமயத்தோர் எழுவர்

கலந்தருள் காலாங்கர் தம்பால கோரர்
நலந்தரு மாளிகைத் தேவர் நாதந்தர்
புலங்கொள் பரமானந்தர் போகதேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத்தோரே.


சிவானந்தத்தில் கலந்திருக்கும் காலாங்கர், அகோரர்,
நன்மையை அளித்திடும் மாளிகைத் தேவர், நாதாந்தர்,
அறிவு மயமாகத் திகழும் பரமானந்தர், போகத் தேவர்,
உலகில் விளங்கும் திருமூலர் என்னும் இந்த எழுவரும்
பிறவிப் பிணி என்பது இல்லாத சித்தர்கள் ஆவர்.
 
ix. திருமூர்த்திகள்

# 103. சங்கரன் தன்நிகரற்றவன்

அளவில் இளமையும் அந்தமும் ஈறும்
அளவியல் காலமும் நாலும் உணரில்
தளர்வு இலன் சங்கரன்; தன்னடியார் சொல்
அளவில் பெருமை அரி அயற்காமே.


அளவில்லாத இளமை, அளவில்லாத அழகு,
அளவில்லாத இறுதி, அளவு செய்யும் காலம்
என்ற நான்கு வகைகளிலும் ஆராய்ந்தால்
குறைவற்றவன் சங்கரன் ஒருவனே ஆவான்.
அடியார்கள் போற்றும் எல்லை இல்லாத பெருமை
பிரம்மனுக்கும், திருமாலுக்கும் உரியது ஆகுமோ?
 
#104. மூவரும் ஆவர் ஒருவரே.

ஆதி பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர்மிசையானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார்
பேதித்து உலகம் பிணங்குகின்றார்களே.

மூலாதாரத்தில் உள்ளவன் உருத்திரன்.

(இவன் அழித்தல் செயலைச் செய்பவன்.)

நீல மணி நிறம் கொண்டவன் திருமால்.
(இவன் மணிபூரகத்தில் இருந்து கொண்டு
காத்தல் செயலைச் செய்கின்றான்)

தாமரை மலரில் உள்ளவன் பிரம்மன்.
(இவன் ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் இருந்து கொண்டு
படைப்புத் செயலைச் செய்கின்றான்.)

ஆராய்ந்து பார்த்தால் இந்த மூவரும் தொடர்பினால் ஒருவரே ஆவார்.
இதை அறியாமல் அவர்கள் வேறு வேறுபட்டவர் என்பது அறியாமை.
 
# 105. உலகின் பீஜம்

ஈசன் இருக்கும் இருவினைக்கு அப்புறம்;
பீசம் உலகில் பெருந்தெய்வம் ஆனது;
நீசர் 'அது, இது' என்பர் நினைப்பு இலார்;
தூசு பிடித்தவர் தூர் அறிந்தார்களே.

நல்வினை தீவினை என்னும் இருவினைகளுக்கு ஏற்ப உயிர்களை
படைத்துக் காத்து அழிக்கும் மும்மூர்த்திகளுக்கு அப்பாற்பட்டவன் சிவன்.
அந்த மும் மூர்த்திகள் உண்டாவதற்கான மூலப்பொருள் சிவனே ஆவான்.
இதை அறியாதவர்கள் உண்மையான தெய்வம் அது இது என்று கூறுவார்.
மாசற்ற மனம் கொண்ட தூய்மையாளர் வேராகிய சிவனை அறிவார்கள்.
 
# 106. அவன் பெயர் சங்கரன்

சிவன் முதல் மூவரோடு ஐவர் சிறந்த
அவை முதல் ஆறு, இரண்டு, ஒன்றோடு ஒன்று ஆகும்,
அவை முதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவை முதல் சங்கரன் தன் பெயர் தானே.

சிவனாகிய முதல்வன் மூவராக ஆவான்.
( பிரம்மன், திருமால் உருத்திரன் என்பவர்)

திருச் சிற்சபையில் ஐவராக விளங்குவான் சிவன்.
மும்மூர்த்திகளுடன் மகேஸ்வரன் சதாசிவன் என ஐவர்)

ஆறு ஆதாரங்கள் + ஒளி மயமான மகேஸ்வர மண்டலம்
+ ஒலி மயமான சதாசிவ மண்டலம் + கவிழ்ந்துள்ள சஹஸ்ரதளம்
+ நிமிர்ந்துள்ள சஹஸ்ரதளம் என்று மொத்தம் பத்து ஆகும்.

விந்துவும், நாதமும் விளங்கும் அந்த நிலையில் அவன் பெயர்
ஜீவர்களுக்குக் சுகத்தை அளிக்கும் சங்கரன் என்பது ஆகும்.

[ சஹஸ்ரதளம், ஜீவன் உலக நோக்கில் இருக்கும்போது கவிழ்ந்தும்,
ஜீவன் இறை நோக்கில் இருக்கும்போது நிமிர்ந்து இருக்கும் என்பார்கள்.]
 
# 107. அன்னியம் இல்லை

பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை;
நயனங்கள் மூன்றுடை நந்தி தமராம்;
வயனம் பெறுவீர் அவ்வானவராலே.

ஜீவர்கள் அடையும் பயனை எண்ணிச் சிந்தித்தால்
பிரம்மனும், திருமாலும் சிவனுக்கு அன்னியர் அல்ல.
முக்கண்ணன் ஆகிய சிவன் வழி நிற்பவர்கள் அவர்கள்.
பயன் அடைவீர் அந்தத் தேவ தேவரின் திருவருளால்.

(முக்கண்கள் ஆகும் சூரியன், சந்திரன், அக்னி.)
 
#108. "ஞாலத்துக்கு நல்கிடு!"

ஓலக்கம் சூழ்ந்த உலப்புஇலி தேவர்கள்
பால்ஒத்த மேனி பணிந்து அடியேன் தொழ
"மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்பு நீ
ஞாலத்துக்கு நம் அடி நல்கிடு" என்றானே.

அழிவு இல்லாத அமரர் தேவர்கள் சிவனைச் சூழ்ந்திருக்க,
அச்சபையில் பால் ஒத்த மேனியனை நான் பணிந்தேன்.
சிவன் என்னிடம் , "திருமாலுக்கும், பிரம்மனுக்கும் சமமானவன் நீ!
மண்ணுலகுக்கு என் திருவடி ஞானத்தை நல்குவாய்! " என்றான
 
#109. பிறவிப் பயன்

வானவர் என்றும், மனிதர் இவர் என்றும்'
தேன் அமர் கொன்றைக் சிவன் அருள் அல்லது
தான் அமர்ந்து ஓரும் தனித் தெய்வம் மற்று இல்லை;
ஊன் அமர்ந்தோரை உணர்வது தானே

வானவர் இவர் என்றும் மனிதர் இவர் என்றும் பெயர் வேறுபடுவது
தேன் நிறைந்த கொன்றை மலர்களை அணிந்த சிவபெருமான் தந்து
ஓம்பும் பல வித உடல்களின் வேறுபாட்டினால் மட்டுமே ஆகும்.
வேறு எந்தச் சிறப்பும் உயிர்வகையால் ஏற்படுவது இல்லை.
ஒப்பற்ற தெய்வம் சிவபெருமான் ஒருவரே அன்றி வேறு எவரும் இலர்.
உடலை விரும்பி அதில் வாழும் நம் கடமை சிவபெருமானை அறிந்து கொள்வதே ஆகும்.
 
# 110. மூவரும், ஐவரும் சிவனே!

சோதித்த பேரொளி மூன்றுஐந்து எனநின்ற
ஆதிக்கண் ஆவது அறிகிலர் ஆதர்கள்;
நீதிக்கண் ஈசன் நெடுமால் அயன் என்று
பேதித்து அவரைப்பிதற்று கின்றாரே.

பேரொளியாக ஒளிவீசும் சிவபெருமான் ஒருவரே
நான்முகன், திருமால், ருத்திரன் என்று மூவராகவும்,
இம் மூவருடன் மகேஸ்வரன், சதாசிவன் என்று ஐவராவும்
விளங்கும் உண்மையை அறியாத பரம மூடர்கள்
அவர்களை வெவ்வேறாகக் கருதுவது எத்தனை மடமை!
 
# 111. பல தன்மையன் சிவன்

பரத்திலே ஒன்றாய், உள்ளாய்ப் புறம் ஆகி,
வரத்தினுள் மாயவனாய், அயனாகித்
தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகிக்
கரத்தினுள் நின்று கழிவுசெய் தானே.


ஒப்பற்ற தன்மையில் ஒருவனாவான் சிவன்.
அனைத்திலும் உள்ளும் புறமுமாக இருந்து கொண்டு
விருப்பத்தை உண்டாகுவதில் திருமால் ஆவான்.
படைக்கும் தொழிலில் இவனே நான்முகன் ஆவான்.
பல தன்மைகள் கொண்டு பல தெய்வங்களாக விளங்கும் சிவன்
மறைந்து நின்று சம்ஹாரத் தொழிலைச் செய்யும் ருத்திரன் ஆவான்.
 
# 112. சிவனே ஆவான் சதாசிவன்

தான்ஒரு கூறு சதாசிவன் எம்இறை
வான்ஒரு கூறு மருவியும் அங்கு உளான்;
கோன்ஒரு கூறு உடலுள் நின்று உயிர்க்கின்ற
தான்ஒரு கூறு சலமயன் ஆமே.


சிவபரத்தின் ஓர் அம்சமாகிய சதாசிவன் என்ற தலைவன்
வான வெளியில் விரிந்து பரந்து பொருந்தியுள்ளான்.
அனைத்துத் தத்துவங்களிலும் மருவியுள்ளான்.
ஜீவர்களின் உடலில் பிராண மயமாக உள்ளவன் அவனே.
ஜீவர்களின் சலனத்துக்கும், அசைவுகளுக்கும் அவனே காரணம
 
[1]. முதல் தந்திரம் உபதேசம்


# 113. களிம்பு அறுத்தான்

விண்ணின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்க்கொண்டு
தண்நின்ற தாளைத் தலைக்காவல் முன் வைத்து
உள்நின்று உருக்கி ஓர் ஒப்பிலா ஆனந்தக்
கண்நின்று காட்டிக் களிம்பு அறுத்தானே.


விண்ணிலிருந்து இறங்கி வந்தான் நம் சிவபெருமான்.
ஜீவர்களின் வினைகளுக்கு ஏற்ப மேனியைத் தாங்கினான்.
தன் குளிர்ந்த திருவடிகளையே உயிர்களுக்குப் பாதுகாவல் ஆக்கினான்.
உடல் உள் நின்று அதன் ஊனையும் உருகச் செய்தான்.
ஒப்பற்ற ஆனந்தத்தைக் காட்டி அதன் பாசத்தை நீக்கினான்.
 
# 114. பவளம் பதித்தான்


களிம்பு அறுத்தான் எங்கள் கண்ணுதல் நந்தி
களிம்பு அறுத்தான் அருட்கண் விழிப்பித்துக்
களிம்பு அணுகாத கதிர்ஒளி காட்டிப்
பளிங்கில் பவளம் பதித்தான் பதியே.

கண்ணுதல் பிரான் ஆணவம், கன்மம் , மாயை என்னும்
களிம்புகளை முற்றுலுமாக அகற்றி அருளினான்.
மீண்டும் பாசம் என்ற இருள் அணுகாத வண்ணம்
அங்கே சிவ சூரியனைத் தோற்றுவித்தான் பிரான்.
பளிங்கு போன்ற ஜீவனில், ஞானம் தரும் அந்தச்
சிவந்த சிவஒளி, பவழம் போலப் பதிந்தது.
 
115. பசு, பாசம் நிலாவே!

பதி, பசு, பாசம் எனப் பகர் மூன்றில்
பதியினைப் போல் பசு பாசம் அனாதி;
பதியினைச் சென்று அணுகா பசு, பாசம்,
பதி அணுகின் பசு பாசம் நிலாவே.

நம் தலைவன் = பதி; ஜீவன் = பசு; தளை = பாசம்.
இம்மூன்றுமே மிகவும் தொன்மையானவை.
பசுத் தன்மையும், பாசத் தன்மையும் பதியை அணுகிட இயலாது.
பதியே நம்மை அணுகிடில் பசுத் தன்மையும், பாசத் தன்மையும் நீங்கும்.
 
#116. எழும் சூரியன்

வேயின் எழும் கனல் போல இம்மெய் எனும்
கோயில் இருந்து குடிகொண்ட கோன்நந்தி
தாயினும் மும்மலம் மாற்றித் தயா என்னும்
தோயமதாய் எழும் சூரியனாமே.

மூங்கிலில் தீ மறைந்து உறைகின்றது போன்றே பிரான்
உடல் என்னும் கோவிலில் மறைந்து உறைகின்றான்.
சேயின் அழுக்கை போக்கும் தாய் போல சிவபிரான்
உயிர்களின் மலங்களை மாற்றுகின்றான் சிவன்.
அருட் கடலில் உதிக்கின்ற உதய சூரியனாவான் அவன்.
 
# 117. மலங்கள் அறும்

சூரிய காந்தமும் சூழ் பஞ்சும் போலவே,
சூரிய காந்தம் சூழ் பஞ்சைச் சுட்டிடா
சூரியன் சன்னதியில் சுடுமாறு போல்
ஆரியன் தோற்றம் முன் அற்ற மலங்களே.

சூரிய காந்தக் கல் போன்றது ஜீவன்.
அதை சூழ்ந்துள்ள பஞ்சு போன்றது பாசம்.
சூரிய காந்தக் கல் பஞ்சினை எரித்து விடாது.
அதே சூரிய காந்தக் கல் சூரிய ஒளியில் பஞ்சினை எரித்து விடும்.
அதே போல் சிவகுருவின் தோற்றம் பாசத் தளையை எரித்து விடும்.
 
# 118. மலங்கள் ஐந்து
மலங்களைந்தாம் என மாற்றி, அருளி,

தலங்கள் ஐந்தால் நற் சதாசிவமான
புலன்களைந்தான் அப்பொதுவினுள் நந்தி
நலன்கள் ஐந்தான் உள் நயந்தான் அறிந்தே.

சிவபெருமான் சதாசிவன் போன்ற ஐந்து மூர்த்திகளாக விளங்கி,
ஐந்து நிலைகளிலும், ஐம்பொறிகளின் விஷய வாசனைகளை
முற்றிலுமாக மாற்றி அருள் புரிந்தான்.

ஐந்து மலங்கள் = ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரேதாயீ
ஐந்து தலங்கள் = சிவன் இயக்குகின்ற ஐந்து மண்டலங்கள்
ஐந்து புலன்கள் = ஒலி, ஒளி, வாசனை, சுவை, தொடு உணர்ச்சி
ஐம் பொறிகள் = விழி, செவி, மூக்கு, நாக்கு, த்வக்கு ( தோல்)
ஐந்து விஷய வாசனைகள் = ஐம் பொறிகள் விரும்புபவை
 
Back
Top