Quotable Quotes Part II

#296. சுழுமுனை நூலேணி ஆகும்


ஆய்ந்து கொள்வார்க்கு அரன் அங்கே வெளிப்படும்
தோய்ந்த நெருப்பு அது தூய் மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்ட வல்லார்கட்க்கு
வாய்ந்த மனம் மல்கு நூலேணி ஆமே
.


சுழுமுனை நாடியைப் பற்றிக்கொண்டு மேலே செல்பவர்களுக்கு சிவபெருமான் நாதாந்ததில் வெளிப்படுவான். நாததத்துவத்தில் ஈசன் தூய ஒளியைச் சிந்திக் கொண்டு இருப்பான். இங்ஙனம் சந்திர மண்டலம் விளங்கியவர்களுக்கு
சுழுமுனை நாடி ஒரு நூலேணியாக மாறிவிடும்.
 
#297. வழித்துணை ஆவான்

வழித்துணையாய், மருந்தாய் இருந்தார் முன்
கழித்துனையாம் கற்றில்லாதவர் சிந்தை
ஒழித் துணையாம், உம் பராய் உலகு எழும்
வழித் துணையாம் பெருந்தன்மை வல்லானே.



ஞானத்தைப் பெறுவதற்கு உதவுவது சுழுமுனை ஆகிய நூலேணி. பிறவிப் பிணிக்கு மருந்தாக விளங்குவது சுழுமுனை ஆகிய நூலேணி. இதைப் பற்றிக் கொண்டு மேலே ஏறிச் செல்பவர்களுக்கு அங்கனம் பற்றிக் கொள்ளாதவர்கள் நல்ல துணையாக ஆக முடியாது. சிந்தையை மாற்றி பழைய நிலையை ஒழிப்பவன் சிவன். அந்தப் பெருமானே அவர்களுக்குச் சிறந்த துணை யாவான். தேவ வடிவில் ஏழுலகங்கள் செல்ல வழித் துணை ஆவான்.
 
298. பேரின்பம் பெறுவர்

பற்றுஅது பற்றின் பரமனைப் பற்றுமின்
முற்றுஅது எல்லாம் முதல்வன் அருள் பெறில்
கிற்ற விரகின் கிளர்ஒளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே
.

பற்றுக் கோடாக ஒரு தெய்வம் வேண்டும் என்றால் எல்லாவற்றுக்கும் மேலான சிவனையே பற்றிக் கொள்ளுங்கள். அவன் அருள் பெற்றுவிட்டால் எல்லாம் இனிதாகி விடும். ஒளியும் படைத்த, வல்லமை படைத்த தேவர்களைக் காட்டிலும் அனுபவக் கல்வி கற்றவர்கள் பேரின்பம் அடைந்து நிற்பார்கள்.
 
299. நெஞ்சத்தில் இருப்பான்

கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து
உடல் உடையான், பல ஊழி தொறு ஊழி
அடல்விடை ஏறும் அமரர்கள் நாதன்
இடம் உடையார் நெஞ்சத்து இல்இருந்தானே.

பரந்த கடல் சிவனுக்கு உரிமை உடையது. உயர்ந்த மலை சிவனுக்கு உரிமை உடையது. ஐம் பெரும் பூதங்களும் சிவனுடைய மேனி ஆகும் . ஊழிகள் தோறும் இவை அழிந்து மாறுபடும் காலங்களில் காளையை ஊர்தியாகக் கொண்ட ஒளி வடிவான சிவன் தன்னையே நினைத்துக் கொண்டு இருக்கின்ற தன் அடியவர்களின் உள்ளத்தில் குடி இருப்பான்.
 
21. கேள்வி கேட்டு அமைதல்

#300. சிவகதி பெறும் வழி

அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும்
புறம் கேட்டும் பொன் உரைமேனி எம் ஈசன்
திறம் கேட்டும் பெற்ற சிவகதி தானே.

சிவகதி பெறச் செய்ய வேண்டியவை இவை:
அறங்களைக் கேட்டறிய வேண்டும்.
அந்தணர்கள் அறிவுரைகளைக் கேட்க வேண்டும்.
பாவங்கள் இவை என்று கூறும் நீதி நூல்களைக் கேட்க வேண்டும்
தேவர்களை வழிபடும் மந்திரங்களைக் கேட்க வேண்டும்.
மற்ற சமயங்கள் பற்றிய நூல்களையும் கேட்க வேண்டும்.
பொன் வண்ண மேனியன் சிவனை பற்றியும் கேட்க வேண்டும்.
 
#301. ஓங்கி நின்றார்!

தேவர் பிரான்தனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின்; உணர்மின்; உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.


தேவர்களுக்குத் தலைவன் ஆவான் சிவபெருமான். திவ்வியமான வடிவம் கொண்டவன் அந்தப் பெருமான். அவன் பெருமைகளை எவர் ஒருவரால் அறிய முடியும்? அவனை உணர்த்தும் நூல்களை நன்கு கற்று அறியுங்கள். அவற்றைக் கற்றவர்களிடம் அவற்றைக் கேட்டறியுங்கள் கற்றவை கேட்டவைகளை அனுபவத்தில் கொண்டுவாருங்கள். அனுபவத்தால் அறிந்து கொண்டபின் நிஷ்டையில் நீங்கள் சிவத்துடன் பொருந்தி உயர்ந்த நிலையை அடைய முடியும்.
 
#302. நீங்காத பற்று வேண்டும்

மயன்பணி கேட்பது மா நந்தி வேண்டின்;
அயன்பணி கேட்பது அரன் பணியாலே
சிவன்பணி கேட்ப வர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது ஆமே.

சிவனுக்குப் பணி செய்வதன் பயன்கள் இவை:
சிவனை வேண்டினால் திருமால் பணியைச் செய்வான்.
சிவன் ஆணைப்படியே அந்த நான்முகனும் நடப்பான்.
தேவர்கள் அனைவரும் சிவன் ஆணைகளைப் பணிகின்றவர்.
சிவனுக்கு பணியாற்றுவதால் நமக்குக் கிடைப்பது
அவன் திருவடிகளில் என்றும் நீங்காத, மாறாத பற்று.
 
302. ஆதிப் பிரான்

‘பெருமான் இவன்’ என்று பேசி இருக்கும்
திருமா னிடர் பின்னைத் தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்து அருள் செய்யும்
அருமா தவத்து எங்கள் ஆதிப் பிரானே.

உண்மை ஞானம் அடைந்து “இவனே தலைவன்” என்று கூறும் மனிதர்கள் பின்னர் தேவர்களாக மாறி விடுவர். மேலான தவம் உடையவர்களுக்குச் சிவபெருமான் மகிழ்ந்து அருள் செய்வது தான் இதன் காரணம்
 
304. ஒளியாய் நிற்பான்

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி இருந்து பிதற்றி மகிழ்வு எய்தி
நேசமும் ஆகும் நிகழ் ஒளியாய் நின்று
வாச மலர்க்கந்தம் மன்னி நின்றானே.

பிறப்பையும் இறப்பையும இறைவன் அருள்வது வினைகளின் வழியே. இதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். பிறருக்கு எடுத்துக் கூறுங்கள். தானே பேசியும் பிதற்றியும் மன மகிழ்ச்சி அடையுங்கள். சிவ ஒளியாக அவன் சுவாதிஷ்டான மலரில், ஒரு மலரின் நறு மணம் போலப் பொருந்தி இருக்கின்றான்.
 
#305. அளவில்லாமல் அருள்வான்

விழுப்பமும், கேள்வியும், மெய் நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது,
வழிக்கி விடாவிடில், வானவர் கோனும்
இழுக்கு இன்றி, எண்இலி காலம் அது ஆமே.

சிவபெருமானின் பெருமையைக் கேட்பதும், அப்படிக் கேட்கும் போது அதனால் விளையும் ஞானமும்,சிந்திக்கும் போது உள்ளம் கட்டுக்குள் அடங்கி இருக்கும் பாங்கும், கைவரப் பெற்றுவிட்டால். தேவர்களின் தலைவனாகிய சிவபெருமான் அளவில்லாத காலத்துக்கு நமக்கு தன் அருள் செய்வான்.
 
# 306. மணல் சோறு

சிறியார் மணல் சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவர் அவர் அன்றே.

உலகத்துடன் உள்ள தொடர்பினால் இறைவனின் அனுபோகம் உண்டாகும் என்று கூறுவது சிறு பிள்ளைகள் சமைக்கும் மணல் சோறு பசியைத் தீர்க்கும் என்று சொல்வது போன்றதே. சுட்டிக் காட்ட இயலாது எங்கும் நிறைந்துள்ள வியாபகத் தன்மை கொண்டவன் சிவன். இது உணராதவர்கள் தங்கள் ஆத்மாவின் தன்மையையும் உணராதவர்கள் அன்றோ?
 
# 307. பிறப்பு இல்லை


உறுதுணை ஆவது உயிரும் உடம்பும் ;
உறுதுணை ஆவது உலகுஉறு கேள்வி;
செறி துணை ஆவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கின் பிறப்பு இல்லை தானே.


உடலுக்கு உறுதுணை ஆவது உயிர் என்றால் உயிருக்கு உறுதுணை ஆவது என்னவாக இருக்கும்? ஞானிகளிடம் நாம் பெறும் கேள்விச் செல்வம் ஆகும் அது. சிந்தைக்குச் சிறந்த துணை சிவபிரானின் திருவடிகள். இவ்வரிய துணையைப் பெற்றுவிட்டால் பிறவிப் பிணி நீங்கும்
 
# 308. கல்லால் ஆன பசு

புகழ நின்றாக்கும் புராணன் எம் ஈசன்
இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமாம்;
மகிழ நின்று ஆதியை ஓதி உணராக்
கழிய நின்றார்க்கு ஒருகற்பசு ஆமே.

புகழப்படுகின்ற மும் மூர்த்திகளாகிய பிரமன், திருமால் ருத்திரன் என்ற மூன்று தெய்வங்களுக்கும் மூத்தவன் ஆவான் சிவன். தன்னை இகழ்ந்து பேசுகின்றவர்களுக்குத் துன்பத்துக்கு இடமவான் அவன். ஆதிதேவனாகிய சிவன் பெருமைகளை அறியாமல் விலகி நிற்பவர்களுக்கு அவன் கல்லினால் செதுக்கப்பட்ட ஒரு பசுவைப் போல அமைந்து விடுவான்.
(கற்பசு பால் தராது. சிவனும் தன் அருளைத் தரமாட்டான் என்பது கருத்து.)
 
309. நச்சு உணர்ந்தார்

வைத்து உணர்ந்தான் மனத்தோடும் வாய்பேசி
ஒத்து உணர்ந்தான் உருஒன்றோடு ஒன்று ஒவ்வாது
அச்சுழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர்ந்தார்க்கே நணுகலும் ஆமே.

சிவபிரான் அனைத்து ஆத்மாக்களிலும் தன்னைப் பதித்துள்ளான். அவர்களின் மனத்தையும் வாக்கையும் அவற்றோடு பொருந்தி இருந்து அவன் நன்கு உணர்கின்றான். பிரானின் வடிவம் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடும். உடம்பு என்னும் அச்சிலிருந்து மனம் என்னும் ஆணி கழன்று உருக்குலைந்தாலும், சிவனை நினைந்து அவனை விரும்பி நிற்பவர்கள் மட்டுமே அவனிடம் நெருங்கி அவனை அனுபவிக்க முடியும்.
 
[h=1]22. கல்லாமை[/h]
#310. இன்பம் காணுகிலார்


கல்லாத வரும் கருத்து அறி காட்சியை
வல்லார் எனில், அருட்கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மை பற்றா நிற்பர், கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணுகிலாரே.


இறைவன் திருவருள் பெற்றவர்கள் சிலர் ஆசிரியனிடம் சென்று முறைப்படிக் கற்காமல் இருக்கலாம் தமது சீரிய தவத்தினால் அவர்கள் தெய்வக் காட்சியைப் பெற்று அதை உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய அரிய பெரியவர்கள் உலகத்தைப் பற்றிக் கொள்வதில்லை சிவத்தைப் பற்றிக் கொள்கிறார்கள் ஆசிரியனிடம் சென்று முறைப்படிக் கற்றவர்கள் கூட இந்தக் கல்லாதவர்கள் பெற்ற சிவ அநுபூதியைப் பெறுவதில்லை.
 
#311. கலப்பு அறியார்

வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார்,
அல்லாதவர்கள் அறிவுபல என்பார்;
எல்லா இடத்தும் உளன் எங்கள்தம் இறை
கல்லாதவர்கள் கலப்பு அறியாரே.

சிவபெருமானின் அருளைப் பெற்ற அருளாளர்கள் என்றும் உண்மை வழியில் ஒன்றி வாழ்ந்து வருவர். சிவன் அருளைப் பெறாதவர்களோ எனில் உலகில் பல வேறு நெறிகள் உள்ளன என்பார்கள். எல்லா நெறிகளிலும் நிறைந்து விளங்குபவன் சிவன் என்ற உண்மையை இந்த மனிதர்கள் அறிய மாட்டார்கள்
 
#312. காண ஒண்ணாது

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலை என்று உணர்வீர்காள்!
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காண ஒண்ணாதே.

நிலையற்றைவைகளை நிலையானவை என்றும் நிலையற்ற உடலை அழிவில்லாதது என்றும் உள்ளத்தில் தவறாக எண்ணுகின்றவர்களே! எல்லா உயிர்களுக்கும் அவன் இறைவனே என்றாலும் நிலையான நிலையற்ற பொருட்களைப் பற்றிய உண்மை அறிவு இல்லாதவர்களால் அவனை உணர்ந்து கொள்ள முடியாது.
 
#313. ஆடவல்லேனே


கில்லேன் வினைக்குத் துயராகும் அயல்ஆனேன்
கல்லேன் அர நெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுட்
கல்லேன் கழிய நின்று ஆடவல்லேனே.

இறை நெறியில் நிற்கும் ஆற்றலை நான் பெறவில்லை.
அதனால் வினைகளுக்கும், துயரங்களுக்கும் ஆளாகின்றேன்.
அரன் கூறும் நெறியில் நிற்பதையும் நான் அறியவில்லை.
அறியாமையால் மயக்குகின்றவற்றைக் கற்கின்றேன்.
அருள் தரும் வள்ளல் சிவனைத் தியானிக்கவும் அறியவில்லை.
புற உலக அனுபங்களில் திளைப்பவனாக நான் இருக்கின்றேன்.
 
#314. வினைத் துயர்

நில்லாது சீவன் நிலை அன்று என எண்ணி
வல்லார் அறத்தும் தவத்துகளும் ஆயினார்,
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத் துயர் போகம் செய்வரே.

உயிர் உடலில் நிலத்து நிற்காது என்று உணர்ந்து கொண்டவர்கள் செய்வது இதுவே. தர்மத்தைத் தவத்தைச் செய்தும் , துறவறம் பூண்டும் சிவ பெருமான் அருளைப் பெறுவர். இங்ஙனம் அவன் அருளைப் பெற அறியாதவர்கள், கீழான மக்கள் தாம் செய்த வினைகளின் பயன்களை அனுபவித்துத் துன்பம் எய்துவர்.
 
#315. இளைத்து விட்டார்

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்து அங்கு இருந்தது ;
மண்ணினின் உள்ளே மதித்து மதித்து நின்று
எண்ணி, எழுதி, இளைத்து விட்டாரே.

சிவன் என்னும் விளங்கனி விண்ணிலே விளைந்து நின்றது. அது கண்ணினின் உள்ளே கலந்து பரமாகாயத்தில் நின்றது. இறைவனிலும் உலக இயல்பையே அதிகம் விரும்பும் சிலர். உலக வாழ்வில் இருந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக இறை நிலையை இழந்து வீணாகிப் போயினர்.
 
#316. கற்று அறிந்தவர்

கணக்கு அறிந்தார்க்கு அன்றிக் காண ஒண்ணாது;
கணக்கு அறிந்தாற்கு அன்றிக் கைகூடா காட்சி,
கணக்கு அறிந்து உண்மையைக் கண்டு அண்டம் நிற்கும்
கணக்கு அறிந்தார் கல்வி கற்று அறிந்தாரே.

ஞானத்தைத்தேடி சாதனை செய்தவர்களால் மட்டுமே சிவம் என்னும் சிறந்த விளங்கனிப் பெற முடியும். சாதனை செய்தவர்களால் மற்றுமே பெற முடியும் இறைவனின் காட்சி. ஞான சாதனையை அறிந்து கொண்டு, உண்மைப் பொருளையும் உணர்ந்து அதனுடன் பொருந்தி இருப்பவர்களே உண்மையில் கல்வி கற்றார்கள் ஆவர்.
 
317. மூடர்களைக் காணாதீர்

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருது அறியாரே.

கற்றவற்றின் அனுபவம் பெறாத மூடர்களைக் காணவும் கூடாது. கற்றவற்றின் அனுபவம் இல்லாத மூடர்களின் சொல்லைக் கேட்க வேண்டிய அவசியம் என்று எதுவும் இல்லை. அனுபவ அறிவு பெறாத படித்த மூடர்களை விடவும் எழுத்தறிவே இல்லாத மூடர்கள் நல்லவர்கள். இவர்கள் பிறரைத் தவறான பாதையில் செலுத்த மாட்டார்கள். அனுபவம் இல்லாதவர் உள்ளத்தில் சிவனை உணர முடியாது.
 
318. கணக்கு அறிந்தவர்

கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசு அறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே.

பல நூல்களைக் கற்ற பிறகும் அனுபவ ஞானம் பெறாதவர்கள் கன்மம் மாயை இவற்றை தொடர்பை விட்டு விட மாட்டார்கள். தம் குற்றங்களை உணர்ந்து அவற்றைப் போக்கிக் கொள்ளமாட்டர்கள். பல இடங்களில் உள்ள அறிஞர்களிடம் கலந்து உரையாடி அரிய உண்மைகளைத் தெரிந்த கொள்ளவும் மாட்டார்கள். சிவஞானம் பெற்று மாறாத அன்புடன் இருப்பவர் கணக்கு அறிந்தவர்.
 
Back
Top