Quotable Quotes Part II

#276. பெருமானை அறிகிலர்

முன் படைத்து இன்பம் படைத்த முதலிடை


அன்பு அடைத்து எம் பெருமானை அறிகிலார்
வன்பு அடைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்பு அடைத்தான் தன் அகலிடத்தானே.

இறைவன் இந்த உலகினை முதலில் படைத்தான். உயிர்களுக்காக எல்லா இன்பங்களையும் படைத்தான். எல்லா உயிர்களுக்கும் ஒரே தலைவனாகிய அவனிடம் அன்பு செலுத்தாமல் அவனை அறியாமல் இருக்கின்றனரே! உறுதியையும், தனது அன்பினையும் படைத்த பெருமானே இந்த விரிந்து பரந்த உலகமாகவும் விளங்குகின்றான்.
 
#277. சிவ ஒளி

கருத்து உறு செம்பொன் செய் காய்கதிர்ச் சோதி

இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.

உள்ளத்தில் பொருந்தும் போது உருகிய செம்பொன்னைப் போல ஒளிரும் ஜோதி வடிவானவன் நம் இறைவன்.மனதில் அவனை இருத்துங்கள்; மாறாமல் வையுங்கள். அவனே நம் தலைவன் என்று போற்றிப் புகழுங்கள். அன்பு கொண்ட மனதுடன் அவனை யார் வேண்டிக் கொண்டாலும் தேவர்களின் தலைவன் ஆகிய அவன் அங்கு தன்னுடைய சிவ ஒளியைப் பெருகச் செய்வான்.
 
#278. அண்ணலை நாடுகிலரே!

நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந்தேயும் மனிதர்கள்
இச்சையுளே வைப்பர் எந்தை பிரான் என்று
நச்சியே அண்ணலை நாடிகிலரே.

ஜீவனுடைய வினைகளுக்கு ஏற்பப் பிறப்பையும் இறப்பையும் அமைக்கிறான் ஈசன்.
அவன் வைத்துள்ள முறையை அறிந்த பிறகும் உலக இன்பத்தில் நாட்டம் கொள்கின்றனர்.
“என் தந்தையே! எம் பிரானே!” என்று அன்புடன் அவனை விரும்பி வணங்குவதில்லை.
அவர்கள் செயல் எவ்வளவு அறிவின்மை!
 
#279. துணையாவான்

அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உள்ளான்
முன்பின் உள்ளான்; முனிவர்க்கும் பிரான் – அவன்
அன்பினுள் ஆகி அமரும் அரும் பொருள்
அன்பினுள்ளார்க்கே அணைதுணை ஆமே.

இறைவன் இருப்பது எங்கெங்கே எப்படி என்று அறிவீரா? அவன் தன்னை அறியும் அறிவு கொண்டவர்களின் தூய அன்பில் இருப்பான். தன்னிடத்தில் இருப்பது போன்றே மற்றவர்களிடத்தும் பொருந்தி நிற்பான். அவன் அன்பையே தன் உடலாகக் கொண்டவன். உலகம் தோன்றுவதற்கு முன்பே உள்ளான். உலகம் அழிந்த பின்னும் அவன் இருப்பான். ஆத்மா ஞானம் தேடுபவர்களின் தலைவன் அவனே. அன்பு பூண்டவரிடம் நிலையாகப் பொருந்தும் அரும் பொருள் அவன். அன்பின் வழியில் தன்னை நாடி வருபவர்களை அவன் உய்விப்பான்.
 
19. அன்பு செய்வோரை அறிவான்

#280. அன்பு செய்வான்

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்து அருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்து அன்பு செய்து, அருள் கூர வல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் அது ஆமே.


சிவன் அறிவான் தன்னிடம் அன்பு செய்வதை இகழ்பவர் யார்; தன்னிடம் மெய்யான அன்பு செய்பவர் யார் என்பதை நன்றாக. உத்தம நாதன் அவன் அதற்கேற்ப மகிழ்வுடன் அருள் செய்வான். தளிர்த்து வளரும் அன்பைத் தன்னிடன் காட்டுபவர்களுக்கு அவனும் மிகவும் மகிழ்ந்து அன்புடன் அருள் செய்வான்.
 
#281. பிறவி இன்பமாகும்

இன்பம் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில் பல என்னினும்
அன்பிற் கலவி செய்து ஆதி பிரான் வைத்த
முன்பப் பிறவி முடிவது தானே.


பிறவிகள் இன்பம் பெறுவதற்காகச் சிவபெருமான் அனைத்தையும் அழகாக வகுத்து அமைத்துள்ளான். ஆயினும் பிறவிகளில் வரும் துன்பங்கள் பலப் பல! அவற்றைப் போக்குவதற்காகச் செய்யப்படும் செயல்களும் பலப்பல. எது எப்படியாயினும் சிவபெருமான் மீது நீங்காத அன்பு செய்யவேண்டும். அப்படிச் செய்தால் சிவன் அருளால் இந்தப் பிறவி இன்ப மயம் ஆகும்
 
#282. துன்புறு கண்ணிகள் ஐம்பொறிகள்

அன்புஉறு சிந்தையின் மேல்எழும் அவ்ஒளி
இன்பு உறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புஉறு கண் இயைந்தாடுந் துடக்கற்று
நண்புஉறு சிந்தையை நாடுமின் நீரே.


அன்பு கொண்ட உள்ளத்தின் மீது ஒளியாக விளங்குவான் சிவன். இன்பம் தரவல்ல விழிகளை உடைய சக்தி தேவியுடன் அவனும் அடியவர்களுக்கு அருள் புரிவதற்குத் திருவுள்ளம் கொள்வான். அப்போது வலை போல ஜீவனைச் சிக்க வைக்கும் ஐம்பொறிகளுடன் ஜீவன் கொண்டிருந்த தொடர்பு அற்றுப் போய்விடும். அப்போது சிந்தையை நட்புணர்வுடன் சிவன் மீது செலுத்தி துன்பம் தரும் பொறிகளில் இருந்து விலகியே நில்லுங்கள்.
 
#283. பேரின்பம்

புணர்ச்சியுள் ஆயிழைமேல் அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லார்க்கு
உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுஇது ஆமே.


சிற்றின்பம் துய்க்க மங்கையின் மீது அன்பு கொள்ள வேண்டும். அதை போன்ற அன்புடன், தம் சிரசின் உச்சியில் உதிக்கும் ஸ்பரிச உணர்வில் பொருந்தி இருக்க அறிந்தவர்களுக்கு, உணர்வு அழிந்து துவாதசாந்தத்தில் சென்று சிவனுடன் கூடுவது, அந்தச் சிற்றின்பத்தை விடப் பல மடங்கான பேரின்பமாக இருக்கும்.
 
284. முன்பு நிற்பான்!
உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்து அறிவார் இல்லை;
பத்திமை யாலே பணிந்து அடியார் தொழ
முத்தி கொடுத்து அவர் முன்பு நின்றானே.



பேரின்பத்தில் திளைப்பவரோடு விளங்கும் சோதியாகிய சிவபிரானைச் சித்திகள் பெற்ற சித்தர்களாலும் ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ள முடியாது. பக்தியோடு அவனை வணங்கித் தொழுபவர்களுக்கு அவன் வீடு பேற்றை அளிக்க விரும்பி அவனே அவர்கள் முன்பு வந்து காட்சி அளிப்பான்.
 
#285. அன்பினால் காணலாம்

கண்டேன் கழல்தரு கொன்றை யினான்அடி,

கண்டேன் கரிஉரி யான்தன் கழல்இணை
கண்டேன் கமல மலர்உறை வான்அடி
கண்டேன் கழல் அது என் அன்பினுள் யானே.

கண்டேன் தன் திருவடிகளைத் தரும் கொன்றை மலர் சூடியவன் இணையடி!
கண்டேன் கரிய ஆணவ யானையின் தோலை அணிந்து கொண்டவன் கழலடி!
கண்டேன் மூலாதாரத்தில் உள்ள தாமரையில் உறைவும் சிவன் திருவடி!
அவன் கழல்கள் என் அன்பினுள் விளங்குவதை நான் கண்டேன்!
 
#286. அன்பனை அறிகிலர்!

நம்பனை நானா விதப் பொருள் ஆகும்என்று
உம்பரில் வானவர் ஓதும் தலைவனை
இன்பனை இன்பத்து இடை நின்ற இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகிலாரே.

நம்புவதற்கு உரியவன் சிவபெருமான். நானாவிதப் பொருட்களாகத் திகழ்பவனும் அவனே. வானுலகத் தேவர்கள் போற்றும் தலைவன் அவனே. இன்பமே வடிவான பெருமான் அவனே. ஜீவர்களின் இன்பத்தில் மகிழும் அன்பனும் அவனே. யாருமே இத்தகைய இறைவனை அறியவில்லை.
 
#287. யாம் அறிவோம் என்பர்!

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பு இல் இறைவனை யாம் அறிவோம் என்பர்;
இன்பப் பிறப்பும் இறப்பும் இல்லான் நந்தி
அன்பில் அவனை அறியகிலாரே.

இன்பத்தினால் வந்த பிறப்பு இல்லாதவன் ஈசன். இறப்பு என்பதும் இல்லாதவன் நம் ஈசன், பிறப்பும் இறப்பும் இல்லாத ஞானியர் இங்ஙனம் கூறுவர். அன்புடன் வழிபட்டு யாம் இறைவனை அறிந்துள்ளோம் என்பர். அப்படி இருந்த போதிலும் மற்றவர்கள் ஈசனை உணர்ந்து தங்கள் பிறப்பு இறப்பைப் போக்கிக் கொள்ள வில்லையே
 
# 288. ஈசன் ஈட்டி நின்றானே!

ஈசன் அறியும் இராப் பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவு செய்வார்களை
த்
தேசு உற்று இருந்து செயல் அற்று இருந்திடில்
ஈசன் வந்து எம் இடை ஈட்டி நின்றானே.



இரவும் பகலும் தன்னிடம் மிகுந்த அன்பு செய்பவரை நன்றாக அறிவான் நம் சிவபெருமான். அவனுடைய ஒளியைப் பெற்று அந்த ஒளியிலேயே இருந்து கொண்டு தனக்கென்று எந்தச் செயலும் இல்லாது இருந்தோம் என்றால் இறைவன் நம்மிடம் வந்து எழுந்தருள்வான்;
எப்போதும் பிரியாமல் நம்முடன் தங்குவான்.
 
# 289. மஞ்சனம்

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும் என் ஆருயிராய் நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.


மேலான ஒளிவடிவான ஈசனை விட்டு விடுவது ஏன்? மீண்டும் சென்று இறைவனைப் பிடிப்பது ஏன்? நான் அவனை உறுதியாகப் பற்றிக் கொண்டு தொடர்வேன். என்றும் குறையாத பெருமையைப் பெறுவேன். என் உயிரில் கலந்து விளங்குகின்ற ஈசனுடன் நான் இனிதாகக் கலப்பதே மஞ்சனம் என்னும் நீராடல் ஆகும்.
 
20. கல்வி கற்றல்

#290. கல்வி கற்றேனே!

குறிப்பு அறிந்தேன் உடல் உயிர் அது கூடிச்
செறிப்பு அறிந்தேன்; மிகு தேவர் பிரானை
மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான்
கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே.


உடல் தோன்றிய காரணத்தை நான் அறிந்து கொண்டேன். உடலும் உயிரும் பொருந்தியுள்ள காரணத்தை அறிந்து கொண்டேன். எந்த விதமான தடையும் இல்லாததால் இறைவன். தானாகவே என் மனதில் வந்து குடி புகுந்து விட்டான். கறிப்பு என்பதே இல்லாத கல்வியை நான் இவ்வாறு கற்றேன்.
 
#291. கயல் உள ஆக்கும்!

கற்றறி வாளர் கருதிய காலத்துக்

கற்றறி வாளர் கருத்தில்ஓர் கண்உண்டு;
கற்றறிவாளர் கருதி உரை செய்யும்
கற்றறி காட்டக் கயல் உள ஆக்குமே
.


நன்கு கற்றறிந்தவர்கள் கற்றவற்றை எண்ணிப் பார்க்கையில் அவர்கள் கருத்தில் ஒரு ஞானக்கண் உருவாகும்; உண்மை புலனாகும். அவ்வாறு அவர்கள் கண்ட உண்மைகளை சிந்தித்துப் பிறருக்கும் உணர்த்துவார். கல் தூண் போல் சலனம் இல்லாது இருந்து கொண்டு அவர்கள் கூறும் உண்மைகளால் மற்றவர்களுக்கு அதே போன்று ஞானக் கண் உருவாகும்.
 
#292. மணி விளக்கு

நிற்கின்ற போதே நிலை உடையான் கழல்
கற்கின்ற செய்மின் கழிந்து அறும் பாவங்கள்
சொல் குன்றல் இன்றித் தொழுமின்; தொழுத பின்
மற்று ஒன்று இலாத மணிவிளக்கு ஆகுமே.


உடலுடன் உயிர் பொருந்தி இருக்கும் போதே, இந்த உடல் எப்போதும் நிலைத்து நிற்காது என்ற உண்மையை அறிவீர். உயிருக்கு நிலையான் உறு துணை இறைவனே என்று அறிவீர். அவன் திருவடி ஞானத்தைப் பெற்றிட முயற்சி செய்யுங்கள். அப்போது உங்கள் பாவங்கள் எல்லாம் அழிந்து மறைந்து விடும். குற்றம் இல்லாத சொற்களால் இறைவனைத் தொழுவீர். அப்போது ஒப்புவமை இல்லாத சுயம் பிரகாசியாகிய சிவன் தோன்றுவான்.
 
293. அழியாத உடல்

கல்வி உடையார் கழிந்து ஓடிப் போகின்றார்
பல்லி உடையார் பாம்பு அரிந்து உண்கின்றார்

எல்லியும் காலையும் ஏத்துமின் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.


மெய்ஞானக் கல்வி கல்லாது உலகிய கல்வி கற்றவர்கள் பிரணவத்தில் இருந்து விலகி வேறு பாதையில் செல்கின்றாகள். உடல் பற்றும், உலகப் பற்றும் உடையவர்கள் குண்டலினி சக்தியைப் பெருக்காமல் வீணாக்குகின்றனர். இரவும் பகலும் இறைவனை ஏத்தி வழி படுங்கள். அப்போது ரசவாதாதால் உருவாகும் பொன்னைப்போல குண்டலினி சக்தியின் ஆற்றலால் அழியாத உடல் அமையப் பெறுவீர்.
 
294. துணையாய் வரும்

துணைஅது வாய் வரும் தூய நல் சோதி
துணைஅது வாய் அரும் தூய நல் சொல்லாம்
துணைஅது வாய் வரும் தூய நல் கந்தம்;
துணைஅது வாய் வரும் தூய நற் கல்வியே.

இறைவனை வழிபடுபவருக்குக் கிடைப்பன இவை:
தூய ஜோதி ஒன்று துணையாக உடன் வரும்.
பிரணவம் அவர்களுக்குத் துணையாக வரும்.
சுக்கிலம் கெடாமல் தூய்மை அடையும்.
உடலுக்குத் துணையாகி ஒளி வீசி நிற்கும்.
பிரணவக் கல்வி முக்தியை அளிக்கும்.

[h=3][/h]
 
#295. மயங்குகின்றாகள்!

நூல்ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார்

பால்ஒன்று பற்றினால் பண்பின் பயன் கெடும்
கோல் ஒன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மால் ஒன்று பற்றி மயங்கி கின்றார்களே.

உடலில் உள்ள சுழுமுனை நாடியைப் பற்றிக் கொண்டு, சிரசின் உச்சியில் உள்ள பிரமரந்திரத்தைச் சென்று அடைய வேண்டும். இதைச் செய்ய இயலாமல் காம வயப்பட்டவர்கள் சிவயோகத்தின் பயனை அடையவே முடியாது. முதுகுத் தண்டைப் பற்றி கொண்டு, தலையின் உச்சியை அடைந்து விட்டால் அடங்கி வசப்படும் ஐம்பொறிகளும்.
இதை அறிந்து கொள்ளாமல் மக்கள் உலக வயப்பட்டு மயங்கி நன்மை அடையாமல் வீணாகின்றார்கள்.
 
Back
Top