காப்பி குடித்திட வாரீர், கண்டு மகிழந்து பருகிட வாரீர்
வெங்கிட்டு மாமாவுக்கு இளகின மனசு. யாரு வந்தாலும், அது ஒரு வேளை பகவானே சோதிக்க அந்த ரூபத்திலே வருவானோ என்று மாமி அன்னம்மாளிடம் சொல்வார். அவரோட ஆவடை பாட்டி காலத்திலே(வெள்ளை தொரைகள் காலத்திலே) அவாள் கிராமத்திலே சாயரட்சை 6 மணிக்கு மேலே அடுத்த ஊருக்கு போக பஸ் கெடையாது என்பதால் ,வெளியூர் பிராமணர்கள் யாராவது எங்கே போவது, யாராத்திலே சாப்பாடு போடுவாள் என்று தவிப்பார்களாம். ஏதாவது ஒரு வீட்டு வாசல்லே சுண்ணாம்பு/சிமிண்டு பெஞ்சிலே தூங்கலாம். 8 /9 முழம் வேஷ்டியில் ஒரு பாதியை போத்திக்கலாம். ஆனால் வயறை காய போட முடியுமா? ஏகாதசி, அம்மாவாசைன்னு பட்டினி இருந்த அனுபவஸ்தர்களுக்கு கையடி பம்பில் வரும் தண்ணீரை குடிச்சா போதும்! இந்த மாதிரி அசௌகரியம் வரலாமேன்னுதான் அந்த காலத்திலே வெரதங்களை கொண்டு வந்ததாக பாட்டி ஆவடை சொல்வாளாம். மூக்கு முட்ட ஆடு மாதிரி அசை போடாததாலேயே ஆம்பளைகள் ஒடிசலா பானை வயிறில்லாமல் இருந்தாள். என்று பாட்டி நீட்டி மொழங்கனதிலே உண்மை இருக்குன்னு டாக்டர்கள் சொல்லறாளே!
நம்ம பாட்டன்-பூட்டி எவ்ளோ புத்சாலி எனபாள் பாட்டி. பாட்டி அந்தக்காலத்திலே எல்லா ஆம்களும் தரித்தனம் தானே! ஊருலே கல்யாணம்னா அங்கே பந்தியிலே ஒரு புடி புடிச்சு, ஜீரணமாக வெத்தலையிலே-சுண்ணாம்பு தடவி, கொட்டை பாக்கு சீவலை மாடு மாதிரி அசை போடுவாளாமே! பல்லுப் போனவா, வெங்கல சொப்பு ஒரல்லே இடிச்சு கொதப்புவாளாமே! போருண்டா, பெரியவா சேஞ்சா அதிலே ஒரு அர்த்தம் இருக்குமடா! பாட்டி, ஊத்த வாய் நாத்தம் இருக்காதோ. போடா போக்கிரிம்பாள். இப்போ இருக்குள அம்மங்குத்தி (வாக்சினேட்டரின் தமிழ் பேராம்) டாக்டரே கெடையாது. வாசல்லே வேப்பெலை கட்டி, தாயே போயிடுன்னா அம்மாவும்(அம்மை நோய் தெய்வம்) போயிடுவா! அயோக்யாளை மட்டும் கொன்னுடுவாள். ஆனனாப்பட்ட தன்னோட அசுரப்புள்ளையையே கொன்னவளாச்சே. இப்படி பாட்டியினாலே மூளை சலவைப்பண்ண பட்டதாலே, வெங்கிட்டு மாமாவும் வந்தவாளுக்கு காப்பி கொடுக்கச் சொல்வாராம்.
தீ இல்லை, புகை இல்லை, பால் இல்லை,காஃபி பொடி இல்லை என்ற அசௌகரியங்கள் இல்லை, காஃபி செலவு மிச்சம், ஒருமணி நேரம் ஊர் வம்பு-அரட்டை சுகம் கண்டவர்கள் எண்ணிக்கையும் கூடியது. ஆக வெங்கிட்டு மாமா வீடு'" மாமா காஃபி கிளப்பாச்சு'. மாமிக்கு எல்லாரும் நேரத்துக்கு வந்து, ஒரு வெங்கலப் பானை காப்பி குடிச்சான்னா சரிதான். சீதாப்பாட்டி, நாட்டுப் பொண்ணே கொஞ்சம் டிகாஷன் கூட விடு என்று சொல்வதால், தன்னை மற்றவர்கள் கஞ்சப்பேர் வழி என்கிறார்களோ என்று மாமிக்கு சந்தேகம். காப்பி கொட்டை விக்கற வெலைக்கு ஆளாளுக்கு தகுந்த மாதிரி காபி போட நான் என்ன அவாத்து மாட்டு பொண்ணா என்ற ஆதங்கம் உண்டு..
"காப்பி குடித்திட வாரீர், கண்டு மகிழந்து பருகிட வாரீர்னு" -பாரதியாரின் தாயின் மணிக்கொடி பாரீரின் புனர் ஐன்மம் மாதிரி- இவா தொல்லை ஜாய்தியாயிண்டு வரது. ஒங்கம்மா என்னை பொண்ணாப் பாக்கறா, இவா என் மாமனார்-மாமியார்கள் மாதிரி படுத்தறாள். இதுல ஒண்ணு கூட ஒங்க பாட்டி சொன்ன பகவானாக இருக்கவே முடியாது. இவ குடிச்ச டபரா-டம்ளரை தேச்சே கால்ல வர்ற சேத்துப்புண் கைக்கும் வந்திடும் போல இருக்கே! இதுக்கு நோகாம நொங்கெடுக்கற வழியை பாருங்கோ, இல்லே நீங்களே கும்பகோணம் டிகிரி காஃபி மாஸ்டராகி விருந்து வையுங்கோ என்று குரல் கம்ம அன்னம்மாள் சொன்னது வெங்கிட்டு மாமாவை உலுக்கி விட்டது.
மாமா ஒரு படிக்காத இஞ்சினீயர். அன்னம் நாளைக்கு பாரு என்று கண்ணை மூடிண்டு ஒரு விஞ்ஞானி போல குரல் கம்ம பேசினார். அன்னம், நாளையிலே இருந்து நான் உன் பேர் சொல்லி கூப்பிடாதவரை, ரேழிக்கு (2ங்கட்டு) வரதே என்றார். அன்னம்மாள் சொன்னது வெங்கிட்டு மாமாவை உலுக்கி விட்டது. மறுநாள் கோபாலன், ராஜு, சேஷு, எச்சுமி நாலு பேரும் உற்சாகமா உள்ளே ரேழிக்குள் வந்தார்கள். அங்கே 8 பேர்உக்கார மாதிரி அர்த்த சந்திர வடிவில் ஒரு மேஜை முதன் முதலாக இருப்பதை பார்த்தார்கள். ஆனால் மேஜைக்கு அடியில் வெளிச்சமே இல்லை. அவர்கள் உட்கார்ந்ததும், பழய தையில் மிஷின் காலாட்டிபோலே இருந்த பெடலில் அவர்கள் கால் வைத்தார்கள். அது உடனே மேலும் கீழும் தானாக போக ஆரம்பித்தது. தாங்கள்தான் காலாட்டுகிறோமா, இல்லை ஆட்டவைக்கப் படுகிறோமா என்ற சந்தேகமும் வந்தது. கீழே வெளிச்சம் இல்லாததால் ஒன்றும் புரியவில்லை! ஆனால் ஓரக்கண்ணில் ஏதோ பெல்ட் சுற்றுவது போலவும் தோன்றியது.
"வெங்கிட்டுன்னு" ஏக சுதியில் அவர்கள் கூப்பிட, இதோ வற்றேன்னு குரல் கேட்டது. ஆனால் வெங்கிட்டுவை காணலை.
இதற்கிடையில், ஒலகு மாமி, ஐயப்பன், குஞ்சு மணியியும் வந்து கிடைத்த இடங்களில் உட்கார்ந்து கொண்டார்கள். அவர்கள் காலடி தையல் மினின் பெடல்களும் அவர்கள் கால்வைத்ததும் மேலே கீழே அசைய ஆரம்பித்தது. ஏண்டா கோபாலா, அதுக்குள்ளே காபி குடிச்சு முடிச்சாச்சா என்று குஞ்சமணி கேட்டான். இல்லேடா எல்லாம் லேட்டாவே இருக்கு! வெங்கிட்டு குரல் கேட்டதே தவிர ஆளையே காணோம்! ஏதோ சதியா இருக்குமோ?
சதியும் இல்லை ,விதியும் இல்லை! அன்னம்மா பானையிலே காப்பி கொண்டுவரையா என்று வெங்கிட்டு மாமா குரல் கொடுத்தார். அன்னம்மா, ஒரு தவலை காஃபி கொண்டுவந்தாள். மாமா 8 டவரா டம்ளரோட வந்தார். எல்லோரும் ஓசி காஃபியை உற்சாகமாக உறிஞ்சினார்கள். இதற்குள் சீதாப்பாட்டி வந்து கடைசி சேரில் உட்கார்ந்தாள். அவல் கால்வைத்த பெடலும் மேலும் கீழும் சீசா போல போக ஆரம்பிச்சது. நாட்டு பொண்ணே, இங்கே என்ன மாஜிக் நடக்கறது? ஏன் என் கால்கள் தானகவே மேலுயும் கீழேயும் ஆடறது? பாட்டி மொதல்லே காஃபி குடியுங்கோ! அப்ப கொஞ்சம் டிகான் கொண்டு வாயேன் என்றாள். பாட்டி ஒரு 10 நிமிஷமாகுமே என்றாள் அன்னம்மா? ஏண்டி பொண்ணே?
இவரையே கேளுங்கோ என்றாள் அன்னம்மா. வெங்கிட்டு, என்ன புதிர் போடறா ஓன் ஆம்படையாள் என்று கொஞ்சம் கோப தொனியில் கேட்டாள் சீதா பாட்டி. பாட்டி, நேத்திக்கி கேஸ் தீந்து போச்சு. அப்ப சமைக்க காஃபி போட ஒரு எலக்டிரிக் அடுப்பு வாங்கினேன். அது பேட்டரியிலேதான் எரியும். அதுக்கா அங்கே மேலே ஒரு கார் பேட்ரி வைச்சிருக்கேன். அதுலே சக்தியேத்த ஒங்க காலடி பெடலை வைச்சான்.அது ஒரு பெல்டோட இணச்சு டைனமோவை ஓடவைக்கும். அப்ப பேட்டிரியிலே மின்சாரம் கொறையாது. அடுப்பும் எரியறது. இதை 8 காலடி குதிரை சக்திம்பாள். அதனாலேதான், நீங்க வந்து, காலாட்டி மின்சாரம் வந்தாதான் இனிமே காஃபி. நாளையிலே இருந்து சீக்கிரம் வந்துடுங்கோன்னார் வெங்கிட்டு மாமா. வந்தவர்கள்கருடனை கண்ட குருவிகள் மாதிரி பறந்தார்கள். சீத்தா பாட்டியும், ஒரு டம்ளர் காஃபி தந்துட்டு காசிலிலாமா எங்க காலை ஆட வச்சு இப்படியா மின்சாரம் எலவசமா உண்டாக்ரே! இனி ஒங்காத்து காஃபியே வேண்டாம்னு சிட்டாக பறந்தாள்.
வந்தவாளே ஒருத்தராவது கடவுளாக இல்லைங்கறது இப்போவாது புரிஞ்சுதோன்னா! வெங்கிட்டு மாமா புரிதலோடு, தன்னை மாமனார் ஏன் தன்னை மகாவிஷ்னு சொரூபாய என்று சொன்னார் என்பதை உணர்ந்து கொண்டார். அவன் கையிலே சக்கரம், என் கையிலே பேட்டிரி மின்சாரம். ஏகோ சக்தி பகு ரூபம்!