சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 19
தோட்டத்தை அடையுமுன் வழியில் கண்கள் ஆவலுடன்
நோட்டமிட்ட சில காட்சிகளின் விவரங்கள் தருகின்றேன்!
மழை விட்டு விட்டுப் பெய்ந்தபடி இருந்ததால், பாதையை
மழை நீர் நனைத்து வழுக்கிவிடுகின்ற நிலையைத் தந்தன.
பள்ளிக்குத் தயாரான குழந்தைகள், ஸ்வெட்டர் அணிந்தும்,
அள்ளிச் செல்லுகிற புத்தக மூட்டையுடன் குடை பிடித்தும்,
தமது பள்ளிப் பேருந்து வருமா என்ற ஆவலுடன் நோக்கித்
தமது கண்களை அலைபாய விட்டு, அங்கங்கே நின்றனர்.
உடைந்து போன இரு சீருந்துகளை ஓரங்கட்டி வைத்திருக்க,
உடைந்து போனது மனம், எப்படி விபத்து இருந்ததோ என!
வேலி இல்லாத வளைவுப் பாதைகளில் ஆபத்து இருப்பதும்,
நாளில் சில விபத்துக்கள் நடப்பதும் சகஜம்தான் அல்லவா?
மலையை ஒட்டியது போன்று அமைந்த சில வீடுகள் அங்கு;
நிலையாக நிற்குமா அவை என்று வியக்கவே வைத்தன!
தம் சீருந்தை மொட்டை மாடியில் நிறுத்தி, படிகள் வழியே
தம் வீட்டின் அறைகளைச் சென்று அடைகின்றார் மக்கள்!
பாத்திகள் கட்டிப் பயிர் செய்கிற அழகைக் கண்டால், அந்த
நேர்த்தி நம்மை வியக்க வைப்பதும் நிஜமே! பச்சையில்
எத்தனை வித வண்ணங்கள் என்று நம் மனதும் மயங்கும்;
அத்தனை காட்சிகளும் மீண்டும் மீண்டும் கண்களில் படும்.
வீடுகள் கீழே சிதறியது போல பரவிக் கிடக்கும்! மலையில்
ரோடுகள் புழுக்கள் போல வளைந்து, நெளிந்தும் செல்லும்!
வண்ணம் நீலமாகக் காணும் மலைகள், அருகே போனதும்,
வண்ணம் பச்சையாய் மாறுகின்ற விந்தையும் மயக்கும்!
தொடரும் ...............