சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 16
அழகிய மேகங்கள் மரங்களின் ஊடே புறப்பட்டு எழுகின்ற
அழகிய பல காட்சிகளை, எப்படி நான் சிறைப் பிடிப்பேன்?
பனிப் படலம் போலப் பரவிய திரை, மரங்களை மறைக்க,
இனிய அந்தக் காட்சி மனதை மயக்கிவிட, புல்வெளியில்
குரங்குகள் உணவைத் தேடித் திரிய, சூப்பர் மேன் இளசுகள்
பறக்கும் சமயம் உற்சாகக் குரல் எழுப்பி மகிழ, ஓரிடத்தில்
காலி பாட்டில்களை வரிசையாகத் தொங்க, குறி வைத்து
ஜாலியாகச் சுடுகின்ற போட்டியில் சிலர் கலந்துகொள்ள,
ஒரு ஆப்பிள் தோட்டம் பள்ளத்தாக்கிலே அமைந்திருக்க,
ஒரு கோவில் மிக உயரத்தில் கண்களில் பட, அவைகளை
மலை முகட்டிலிருந்தே பார்த்து, படங்கள் சில எடுத்தேன்.
அலை அலையாய் பெருகி வரும் மக்கள் கூட்டத்தின் பசி,
தாகம் தீர்க்கப் பல உணவகங்கள், ப்ளாஸ்டிக் கூரையுடன்!
மேகம் சூழும் இயற்கையின் அழகு குலைந்தே போகிறது!
இயற்கையை ஆசை தீரும் வரை ரசித்த பின், தேடினோம்
இறங்கிச் செல்ல, எங்கள் குதிரைகளின் மேய்ப்பாளனை!
எங்கே சென்று மறைந்தானோ? அவன் பெயரும் தெரியாது!
அங்கே நின்று எங்கள் வழிகாட்டியை அழைத்து, வேறு ஒரு
நல்ல குதிரைக்காரனை அனுப்புமாறு வேண்டிட, அவரும்
நல்ல அனுபவம் மிக்கவரை அனுப்ப, இரு வெள்ளை நிறக்
குதிரைகளைக் கொண்டு வந்து, நிதானமாக ஏற்றிவிட்டு,
குதிரைகளை வழி நடத்தினார், மிகவும் பொறுமையோடு!
அவரது உத்தரவு இன்றுக் குதிரைகள் அசைவதே இல்லை!
அவரது நற்பணியைப் பாராட்டி, ஒரு தொகை அளித்தோம்!
தொடரும் ........................