சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 13
பையில் காமரா; குடி நீர்; குளிருக்கு ஒரு ஸ்வெட்டர்;
கையில் இரும்புப் பிடிப்பு; மலை ஏற்றமும் ஆரம்பம்!
சேறு வாரித் தெளித்திட, கால் சட்டையெல்லாம் பாழ்!
வேறு வழியில்லை; மேலே ஏறித்தான் தீரவேண்டும்!
அப்போது, 'இன்னும் எத்தனை தூரம் உள்ளது? என்று
தப்பில்லாத ஹிந்தியில் நான் வினவ, அச் சிறுவன்,
'இப்போதுதானே ஆரம்பித்துள்ளது!' என்று உரைத்திட,
தப்பாது வேண்டினேன் சக்தி வினாயகனை, எங்களைக்
கீழே தள்ளாது உச்சி வரை குதிரைகள் கொண்டு விட!
மேலே செல்லும் போது, திடீரென நான் ஏறிய குதிரை
தன் பின் பகுதியைக் கீழே வளைத்து நிற்க, பயத்திலே
நான் சறுக்குவேனோ என்று இன்னும் அலறியவுடன்,
'madam! gOdA go toilet!' என, தானறிந்த ஆங்கிலத்தில்
உடன் என்னிடம் சொன்னான், விஷமக்காரச் சிறுவன்!
உச்சியை அடைந்ததும் அவன் பெயர், செல் நம்பர்களை
நிச்சயம் தருமாறு வழிகாட்டி அச் சிறுவனிடம் கூறியும்,
அவன் பெயரையும், செல் போன் நம்பரையும் தராமலே
தன் இரு குதிரைகளுடன் உடனே சென்றுவிட்டான் கீழே!
பாறைகள் நிறைந்து கிடந்த அவ்விடத்தில், மழையால்
சேறும் படர்ந்து இருக்க, காலணிகளெல்லாம் வழுக்கின!
மலை ஏறுபவர்கள் கையில் குச்சி ஒன்று ஊன்றுவாரே?
மலைப் பாறை வழுக்கும்போதுதான் ஏனெனப் புரிந்தது!
ஊன்று கோல் இல்லாததால், எங்கள் யாருக்குமே அன்று
மூன்று கால் கிடையாது! பயந்தபடி நடை பயின்றோம்!
தொடரும் .....................................