சிந்தை கவர்ந்த வட இந்தியப் பயணம் - 21
இன்பமும் துன்பமும் கலந்ததுதானே வாழ்க்கை! வாயிலில்,
துன்பமே பெரும் பகுதியென்று வாழும் சேரிச் சிறுவர் சிலர்!
கலைந்த கேசம்; ஏங்கும் விழிகள்; ஏதோ அளவில் உடைகள்;
நிலைத்த ஒரு சோகப் பார்வை; இதுவே அவர்களின் கோலம்!
எமது வழிகாட்டி அவர்களை எப்போதும் சந்திப்பாரோ? அவர்
தமது பர்ஸிலிருந்து பத்து ரூபாய்த் தாள்கள் சில எடுத்த பின்,
ஒவ்வொருவருக்கும் ஒரு நோட்டு எனப் பகிர்ந்து கொடுத்திட,
ஒவ்வொருவரும் ஓடினர் பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்கு!
பசியை அகற்றும் பண்டங்கள் வாங்குவாரென நான் நினைக்க,
ருசியான சாக்லேட்களை வாங்கித் தின்று மகிழ்ந்தனர் சிறுவர்!
சாக்லேட் உறையை நக்கி மெய் மறக்கும் விளம்பரம் போலச்
சாக்லேட் உறையை நக்கி மெய் மறந்தான், ஒரே ஒரு சிறுவன்!
ரப்பரால் அமைந்த சறுக்குப் பலகையில் பணக்காரச் சிறுவன்
அப்போது விளையாடி மகிழ்ந்ததை முரண்பாடாய்க் கண்டேன்!
முற்பிறவியில் செய்த புண்ணியங்கள், முரண்பாடாக உலகில்
இப் பிறவியில் பிறந்த பிள்ளைகளைப் பார்த்தாலே தெரியும்!
'அது இல்லை; இது இல்லை' என்று புலம்பும் மக்கள், இவ்வாறு
எதுவும் இல்லாத பிள்ளைகளைக் கண்டால், மனம் மாறலாம்!
கனத்த மனத்தோடு பேருந்தில் அமர்ந்து பயணித்தேன்; மனித
இனத்தில் ஏன் இத்தனை வேறுபாடுகள் என்றும் கலங்கினேன்!
நல்ல வாழ்வு தந்த இறைவனை ஒரு நொடியும் மறக்கலாகாது!
அல்லவை பல நிறைந்த உலகிலே, இறைவனே காத்திடுவான்!
கொஞ்சம் எண்ண ஓட்டங்களை இவ்வாறு ஓடவிட்ட பின்னர்,
கொஞ்சம் கண் அயர்ந்தேன், ஒரு பூச்சி மேலே விழும் வரை!!
தொடரும் ......................