செல்லக் கண்ணனுக்காகச் சின்னப் பயணம்... 4
விடியலுக்கு முன்னே எழுந்து தயாராகி, கிழக்கிலே
விடியலின் செங்கிரணங்களை எதிர் நோக்கி அமர,
அடர் பனிப் பொழிவு உதய சூரியனை மறைத்துவிட,
தொடர்ந்து காத்திருந்தேன் ஆதவன் தரிசனத்திற்கு!
நன்கு மெலெழுந்த பின்பு, அவன் வட்ட வடிவத்தில்,
தங்க நிறத்தில் தகதகக்க, அத் தோற்றம் காமராவில்!
வைகை ஆற்றுப் பாலத்தைத் தாண்டுகிற நேரத்தில்,
வைகை ஆறு அழுக்குக் குட்டையாகத் தெரிந்ததில்
மனம் மிக சஞ்சலப்பட்டது! தன் நாட்டில் பெருகி ஓடி,
தினம் மக்களின் தாகம் தீர்த்த நதிதானா இது என்று
வருத்தம் எழ, வறண்ட ஆற்றையும் படமெடுத்தேன்.
வருத்தம் அதிகமானது அங்கு நிரம்பிய குப்பையால்!
அதிகம் தாமதம் செய்யாது, ரயில் மதுரையைச் சேர,
எதிரில் வந்து டாக்ஸி ஓட்டுனரும் அழைத்துச் செல்ல,
எங்கள் ஊரில் என்னென்ன மாற்றங்கள் இருக்குமென
எங்கள் மனம் அசை போட, இனிய இல்லம் வந்தோம்!
அழகாகப் பந்தல் போட்டு, விளக்குகள் ஒளி பரப்பிட,
அழகான கோலங்கள் தெருவிற்கு அழகு சேர்த்திட,
மகிழ்ந்தது மனம்; ஆனால் கிணறு வற்றியது கண்டு
மகிழ்ந்த மனம் கொஞ்சம் துணுக்குற்று வருந்தியது!
தண்ணீர் அளவைப் பஞ்சாயத்து அதிகரித்துத் தந்து,
தண்ணீர் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மிக உதவியது!
தொட்டியில் தண்ணீர், சிறு பாய்லரில் வெந்நீர் எனத்
தொடங்கியது எங்கள் கிராமத்து எளிய வாழ்க்கை!
தொடரும் .....................