செல்லக் கண்ணனுக்காகச் சின்னப் பயணம்... 9
உறங்க வைத்த உதசவ மூர்த்திகளுக்குப் பாடிய பின்
உறங்கச் சென்றோம் அனைவ்ரும் இனிய இல்லத்தில்!
வழியில் சிறுமி ஒருத்தி ரங்கோலி கோலம் இட்டிருக்க,
நொடியில் அவளைக் கோலத்துடன் சிறைப்பிடித்தேன்!
விடியலில் நீராடி, கோவிலை அடையும் வழியில், தன்
ஒளியில் ஒரு பகுதியைப் பெற்று ஒளிர்ந்தான் சந்திரன்.
ஹோமங்கள் துவங்கின; மந்திர கோஷங்கள் எழுந்தன;
ஹோமங்களால் முழு சக்தியுடன் கலசத்தில் தண்ணீர்.
குடமுழுக்கைப் படம் எடுக்க மாடியைத் தேர்வு செய்து
உடனே அதில் ஏற நான் முனைய, அர்ச்சகரின் மனைவி,
'நான்பிராமின் வீடல்லவா அது?' என்று என்னை வினவ,
'நான் பிராமின்தானே! பரவாயில்லை!' என்று அதில் ஏற,
என்னைத் தொடர்ந்து வந்தனர் மேலும் சிலர், அதுவரை
'என்னைத் தொடாதே' என்று ஒதுக்கியவரின் மாடிக்கு!
சிவாச்சாரியார் நீர்க்கலசத்துடன் கோவிலைச் சுற்றிட,
சில பக்தர்களும் அவரைத் தொடர்ந்து பணிவுடன் வர,
மூங்கிலால் அமைத்த ஏணிப் படிகளில் ஏறிச் சென்று,
பாங்குடன் விமான உச்சியை அடைந்திட, மந்திரங்கள்
ஜபித்து, புனித நீரால் அபிஷேகம் செய்து, கலச நீரினை
ஜனக் கூட்டத்தின் மீது தெளிக்க, ஆதவன் அதைக் காண
விழைவது போல எழுந்து வந்தான்; குல பேதமில்லாது
விழைந்தனர் அனைவரும் கண்ணனை தரிசித்து மகிழ!
முத்து அலங்காரத்தில், நவனீத கிருஷ்ணன், தேவியர்,
முன் வரும் பக்தருக்கெல்லாம் நல்லருளை வழ்ங்கினர்.
தொடரும் .................