• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கவிதை முயற்சிகள்

Status
Not open for further replies.
தந்தை-தாய்-மகன் தகவு

அப்பா பெயருடையார் அப்பா வெனச்சொல்லி
எப்பொழுதும் ஒய்ந்த திலை. ... 1

விந்தால் வமிசம் விளைவிக்கும் விந்தையே
தந்தையென் பாரின் தகவு. ... 2

வாக்கினால் கண்டிப்ப ராயினும் தந்தையே
காக்கும் கடவுளென் றாம். ... 3

மகனுமோர் நாள்தந்தை ஆவனே வாழ்வில்
அகத்தில் இருத்தல் நலம். ... 4

தந்தை பிறந்தான் தனயனாய் தோன்றலுக்கும்
பிந்தை அதுபோல் பிறப்பு. ... 5

தோளுக்கு மிஞ்சினால் தோழனெனின் தந்தையின்
தாளுக்குக் குன்றாத் தகவு. ... 6

பாத்திரன் செல்வந்தன் பண்டிதனென் றாலுமகன்
மூத்தவன் ஆவனோ கொல்? ... 7

உருவொன் றெனினும் உளம்மாறும் பிள்ளை
இருவர் வினையின் பிறப்பு. ... 8

தந்தை தனயனைத் தந்தாலும் தந்தையைத்
தந்தவ ளன்றோவோர் தாய்? ... 9

தந்தை சிவமென்றும் தாயவள் சக்தியென்றும்
சிந்தையுறக் கிட்டும் சிறப்பு. ... 10

--ரமணி, 16/06/2014

*****

Dear Mr. Ramani,

My thoughts on this:

4. அகத்தில் இருத்துதல் நலம் would be more appropriate.

7. வயதால் சிறியவனானாலும் அறிவால் உயர்ந்தவனே வணக்கத்துக்குரியவன் என்பது சாஸ்த்திரம்.

பாரட்டுக்கள்.
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 24.
ஆனி 4

திருப்பதி ஶ்ரீஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்

மாயவன் கழல்கள்
(ஈரசைச் சீர்க் குறும்பா)

ஆயிரம் கலசம் ஆடும்
மாயவன் கழல்கள் தேடும்
. மனிதர் ஆவி
. புனிதம் மேவி
பாயிரப் பான்மை நாடும்.

நாரண னாயிர நாமம்
வேரென விளையும் சேமம்
. திருவுரு தரிசனம்
. வருமொழி கரிசனம்
பாரினில் உண்டே ஏமம்.

காலம் காலன் கையில்
ஏலும் வினையே மெய்யில்
. மாதவன் தரிசனம்
. வேதனை எரிவனம்
மேலுல கம்வரச் செய்யும்.

--ரமணி, 18/06/2014, கலி.04/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 25.
ஆனி 5

சுவாமிமலை ஶ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

முருகன் வேல் கவசம்
(ஈரசைச் சீர்க் குறும்பா)

தங்கக் கவச மேனி
துங்கத் தவசி ஞானி
. வயிரவேல் முருகன்
. பயில்வினைக் கருவன்
சிங்கன் நீக்குவன் ஆனி. ... 1

[துங்கம் = உயர்வு, பெருமை, தூய்மை; கருவன் = சங்காரமூர்த்தி;
சிங்கன் = குறவன்; ஆனி = ஹானி = கேடு.]

ஆதி மந்திரக் குருவெனப்
பாதை காட்டும் உருவினில்
. வரும்வேல் முருகனால்
. திருமால் மருகனால்
வாதை பொடியும் துருவென! ... 2

நுதற்கண் குமரன் உதித்தான்
முதற்கண் வேழன் துதித்தான்
. வள்ளிக் குறமகள்
. பள்ளித் தலமுறப்
பதற்றம் நீங்கப் பிடித்தான். ... 3

அமரர் தளபதி குமரன்
சமரை வெல்வதில் சதுரன்
. சேவற் கொடியான்
. பாவலற் கடியான்
நமரெனில் அருளும் அமரன்! ... 4

முத்துக் குமரனைப் போற்றுவோம்
சித்தத் தமர்வினில் ஆற்றுவோம்
. ஆறெழுத் துமந்திரம்
. வேறறுக் குமெந்திரம்
முத்திக் குருவெனச் சாற்றுவோம். ... 5

[வேறறுக்கும் = வேற்றுமையை அழிக்கும்]

--ரமணி, 19/06/2014, கலி.05/03/5115

*****
 
அன்புடையீர்!

உங்கள் குறிப்புக்கு நன்றி.

> அகத்தில் இருத்துதல் நலம்
என்றால் இறுதித் சீர்களின் இடையே தளைதட்டும். எனவே

’அகத்தில் இருத்துதல் நன்று’
என்று திருத்திக் கொள்கிறேன்.

> வயதால் சிறியவனானாலும் அறிவால் உயர்ந்தவனே வணக்கத்துக்குரியவன் என்பது சாஸ்த்திரம்.

சரியே! உண்மையில், மகன் தந்தையினும் வயதால் சிறியவன் என்பது ஓர் தோற்றமே.
ஆன்மாவின் வயதைக் கணக்கிட்டால், மகனது ஜீவான்மா தந்தையினுடையதினும் முன் பிறந்து மூத்ததாக இருக்கலாம் அல்லவா!

அன்புடன்,
ரமணி

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 26.
ஆனி 6

இராமேஸ்வரம் ஶ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு
திருத்தணி ஶ்ரீமுருகப்பெருமான் கிளி வாகன சேவை

செய்தி விவரம்:
http://www.dinamani.com/religion/2014/02/28/ராமேசுவரத்தில்-சுவாமி-அம்ப/article2082076.ece

பூழியில் திருமண் வேதம்!
(ஈரசைச் சீர்க் குறும்பா)

மலைவளர் காதலி வீதியில்
சிலையுரு ஊர்வலச் சேதியில்
. ஆடகச் சிவிகையாம்
. ஊடகத் துவகையாம்
கலைவளர் இராம நாதியன். ... 1

[மலைவளர் காதலி = பர்வதவர்த்தினி, இராமேஸ்வரம் கோவிலில் அம்பாள் பெயர்;
ஆடகம் = பொன்; ஊடகம் = ஊடும் அகம்; நாதியன் = தலைவன்]

ஆழியில் ஆறுகள் பாதம்
பாழியில் இராம நாதம்
. லிங்கத் துருவால்
. அங்கண் அரியால்
பூழியில் திருமண் வேதம்! ... 2

[ஆழி = கடல்; பாழி = கோவில்; பூழி = விபூதி]

கண்ணும் கண்ணும் கலந்தன
பண்ணும் இசையும் உவந்தன
. தசரதத் தோன்றலே
. இசைவுறும் ஏந்தலாம்
மண்ணில் வானின் விருந்தென! ... 3

*****

திருத்தணிக் குழகன்
(ஈரசைச் சீர்க் குறும்பா)

இருகிளி கொண்டவன் குழகன்
திருத்தணிக் கிளியூர் அழகன்
. காவடி யாடுவன்
. பாவையர் வேடனின்
திருத்தாள் பணிந்தே விழுவன். ... 1

[குழகன் = அழகன் முருகன்; கிளியூர் = கிளி வாகனத்தில் ஊர்ந்து வரும்]

தினைப்புன வாழ்வாம் உலகம்
தினவுறும் ஆசைச் சலகம்
. சரவணன் மந்திரம்
. சிரவணம் இந்திரம்
முனிவரின் முத்தித் திலகம். ... 2

[சலகம் = ஸ்நானம்; சிரவணம் இந்திரம் = காதுக்கு மேன்மையானது]

கருத்தணி யுளந்தணி யுருத்தணி
செருத்தணி ஞானம் உரித்தணி
. திருத்தவ வேந்தன்
. திருத்தணிச் சேந்தன்
திருத்தணி யாப்புகழ் திருத்தணி! ... 3

விளக்கம்:
கருத்தினை அணியும் உள்ளம் தணிய, உருவம் தணிய,
பகைமை தணிய, ஞானத்தை உரித்தே அணியும்
. சிறந்த தவவேந்தனே
. திருத்தணி சேந்தனாம்; அவனது
அழகு/தெய்வத்தன்மை தணியாத புகழ் கொண்டது அவன் தலமாகிய தணிகை மலை.

--ரமணி, 20/06/2014, கலி.06/03/5115

*****
 
ரமணியின் கவியரங்கக் கவிதைகள்
எனக்குப் பிடித்த...


சந்தவசந்தக் கவியரங்கம் 40.
தலைப்பு: ’எனக்குப் பிடித்த...’
தலைவர்: திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி
பங்கேற்பு: ரமணி
(https://groups.google.com/forum/
#!topic/santhavasantham/SHouXdA6RN8%5B176-200-false%5D)

மேற்கோள்
கணந்தோறும் வியப்புகள் புதிய தோன்றும்;
கணந்தோறும் வெவ்வேறு கனவு தோன்றும்;
கணந்தோறும் நவநவமாங் களிப்புத் தோன்றும்;
கருதிடவும் சொல்லிடவும் எளிதோ?...
--மஹாகவி பாரதியார், பாஞ்சாலி சபதம் 27 மாலை வர்ணனை 149

கடவுள் வாழ்த்து
ஆனை வதனமும் அங்குசமும் மோதகமும்
பானை யுதரமும் ஐங்கரமும் - மோனம்
குவியநின்று சொற்கள் குதிரவைத்(து) ஆர்ந்தே
கவிதையெழ வேண்டு வனே.

அரங்கத் தலைவர்
கல்லணையின் மடைதிறந்த காவிரியின் வெள்ளம்போல்
சொல்லாறு பாயமனச் சோலையெலாம் குயில்கூவக்
கல்லாரும் கற்றாரும் கவியாற்றில் ஆடச்செயும்
சொல்லாளர் இராமமூர்த்தி தொன்றமிழின் செல்வரன்றோ?

இலக்கியமும் உலகியலும் தெய்வதமும் சரிசமமாய்ப்
புலமையுடன் விதந்தோதிப் புகழ்சேர்க்கும் சொல்லாற்றல்
கலன்கலனாய் உரைததும்பக் கவிமலரச் சொற்பொழியும்
தலைவருக்கென் சிரம்தாழ்வேன் தழைக்கட்டும் தமிழோசை!

அவையடக்கம்
பாடறிவேன் படிப்பறியேன் பழம்பனுவல் கற்றறியேன்
ஏடுகளில் கவிதைகளை எழுதுமார்வம் ஒன்றுடையேன்
பாடுமுதற் கவியரங்கப் படைப்பிலெதும் நலிவுகளின்
கோடுகளைக் களைந்திடவே உதவிசெய்ய வேண்டுவனே.

எனக்குப் பிடித்த...
(நாலடி, எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா)

எனக்குமிகப் பிடித்ததுவாய் எதுவென்றே அலசியதில்
மனிதனுடன் இயற்கையுடன் மனமுறையும் இறைவனுடன்
தினந்தோறும் உறவாடித் திளைத்துவரும் பொழுதுகளில்
மனதினிலே பதிவாகி மகிழ்வூட்டும் ஓர்கணமே. ... 1

இயற்கையோடு மனிதனோடு இறைவனுமே கணமொன்றே
இயல்பினாலோ உருவினாலோ செயலினாலோ மனம்நிறைவர்
வயலூறும் சகதியென வளமிடையே குறையுறவே
அயலாகிப் போவதன்றோ அனைத்துருவும் பலகணத்தே! ... 2

கணமொன்றில் அறிஞராவர் கணமொன்றில் வறிஞராவர்
கணமொன்றில் நட்பாகும் கணமொன்றில் அயலாகும்
கணமொன்றில் உறவாகும் கணமொன்றில் பிரிவாகும்
குணமூன்றின் ஆளுகையிற் குன்றுகளும் குறையுறுமே! ... 3

கணமொன்றே இயற்கையதன் அழகெல்லாம் மனதினிலே
கணமொன்றே இறையதுமே அமர்வதெலாம் மனதினிலே
கணமொன்றே நிலைத்ததுவாய்க் கைப்பற்றும் மனதினிலே
கணமொன்றே காரணமாம் கருக்கொளவே சிதைவுறவே. ... 4

கணத்தையேநான் நேசித்தேன் காதலித்தேன் சேகரித்தேன்
அணத்திடுமே அதுவொன்றே அகமகிழ்வின் முன்னிலையாய்
கணம்சென்றால் எதும்மாறும் அகம்புறத்தின் வாழ்வினிலே
கணங்களைநான் நேசித்தே மனக்கோட்டம் எதிர்கொள்வேன். ... 5

[அணத்தல்=மேலோங்குதல்]

மாலைநேரம். பானல்வீழும் ஆனைக்கா சாலையோரம்.
சாலியேனல் தலைவருடித் தாலாட்டும் மலயக்கால்.
சோலைப்புள் காதிழியும். சோதிக்கோக் கண்வழியும்.
கோலங்கள் காவிரியில் குடதிசையின் வானத்தே.
சாலச்சேர் வண்ணங்கள் சந்தியிலே வான்கலக்கும்
காலடியில் பாலம்கீழ்க் காவிரியும் எதிரொளிக்கும்.
காலவீழ்வில் கண்ணிரண்டும் கலைவண்ணம் படம்பிடிக்கும்.
ஓலமனம் உள்வீழ உறைகணமாய் நிலைபெறுமே. ... 6

[ஏனல்=கதிர்; மலயக்கால்=தென்றல்; சோதிக்கோ=சூரியனின் கிரணம்]

இளங்கல்வி பயில்நாட்கள். இணைநின்றார் தோழியரே!
விளையாட்டில் கற்றறிந்த வித்தைகளில் வீட்டினிலே!
களைபொங்கும் முகங்களுடன் காதலித்த கன்றுகளாய்!
தெளிநீரார் ஓடைமேவும் சிற்றலையாய்க் கூடலூடல்!
வளிவெளியில் சுருள்புகையாய் மணம்பரப்பும் ஊதுவத்தி
உளங்களிலே எளிதார்ந்தே உறவாடி உரிமைகொள்ளும்!
வளர்மேனி பூரித்தே வளமாரத் தோழமையும்
தளர்ந்தேகி மனத்துள்ளே தளைப்படுமே சித்திரமாய்! ... 7

அஞ்சுரூபாய்த் தாள்மடித்தே வால்மேலாய்த் தெருவினிலே!
துஞ்சுமதைக் கொள்வரெவர்? தூண்மேல்தன் முதுகிட்டுச்
சஞ்சலனாய்த் திண்ணையிலே அமர்தோழன் உயர்பள்ளி!
வஞ்சமிலா வேடிக்கை வாயயரா மென்பேச்சு!
கஞ்சுகத்தில் நூதனமாம் கார்க்கேசம் ’க்ரூகட்’டாம்!
பிஞ்சுமுகம் கருவிழியும் பின்னாளில் மாறிடினும்
நெஞ்சினிலே என்னாளும் நிற்பதுவாய் அக்கணமே! ... 8

[வால்=வெண்மை: ரூபாய் நோட்டின் வெண்பகுதி]

மற்றபல நண்பருமே வற்றாத கணத்துளிகள்!
பொற்றமிழில் சுந்தரமாய்ப் போட்டிகளில் எனைவென்று
கற்பனையில் நான்படைத்த கதைத்திருத்தம் செய்தவனும்
உற்றதேர்வைப் பராமுகமாய் ஓர்தாளில் முடித்தவனும்
கற்றறிந்தே ரமணீயக் கதையெழுதும் வதிலையனும்
கற்றதெலாம் தாசனாகக் கருத்துடனே பயின்றவனும்
தற்செயலாய்த் தொலைபேசித் தக்கவைத்த தோழமையில்
இற்றைநாள் அக்கணங்கள் மீளவுளம் இனித்திடுமே. ... 9

[வதிலையன் = வதிலையூரில் வசித்தவன்]

கல்லூரி நாள்முதலா அலுவலகத் தோய்வுவரை
நல்லுளமாய் இன்முகமாய் நற்செயலாய்ச் சிந்தனையாய்
மல்குபல கணப்புதையல் மனதினிலே எனக்கெனவே!
எல்லாமே பொன்மணியாய் மேவியுளம் களித்திடினும்
வல்லோரின் விமர்சனமும் வாழ்த்துரையும் என்னெழுத்தைச்
சொல்லசைவில் பொருளிசைவில் சேர்வளங்கள் கொளச்செய்த
தல்லிசந்த வசந்தப்பாத் தளமிதிலே சேர்ந்தநாளே ... [தல்லி=தாய்]
கல்விகேள்வித் தருகண்ட கணமெனவே மிகவிரும்பும்! ... 10

இக்கணத்தை விஞ்சுவதாய் இன்னுமொரு கணமுண்டே!
விக்கிமனம் நெகிழ்ந்திடவே விழிக்கடையில் நீர்சோரும்
அக்கணத்தின் தரிசனத்தில் கவிதையுண்டு கதைகளுண்டு
பக்கமுறும் மனிதருண்டு பார்கலையாய்க் காட்சியுண்டு
நெக்குருகும் சிலிர்ப்பினிலே இறையுருவின் ஆட்சியுண்டு
சொக்குமிசைப் பாடலுண்டு சுந்தரமாய் எதுவுமுண்டு
சிக்கனமாய் மனக்குகையின் திறவுகோலாய் வழிகாட்டும்
அக்கணமே மிகப்பிடித்த கணமென்றே சொல்வேனே! ... 11

என்னைநானும் அறிவதற்கே இவையெல்லாம் முன்னுரையோ?
பொன்மனத்தில் பூரணத்தின் பொலிவினைநான் விழைவதிலே
கொன்னக்கோல் போடுதற்குக் கூழ்நாவும் குழைவதுபோல்
என்னையேநான் நேசித்தல் எல்லாமும் ஆவதுவோ? ... 12

--ரமணி, 04-14/04/2014, கலி.01/01/5115
--இறுதித் திருத்தம்: 09/05/2014

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 08 - 22/06/2014, கலி.08/03/5115


ஶ்ரீ வைகுண்டம் ஶ்ரீ வைகுண்டபதி புறப்பாடு
கீழைத் திருப்பதி ஶ்ரீகோவிந்தராஜப் பெருமாள் ஸன்னதி எதிரில்
ஶ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன ஸேவை.

பெரிய திருவடி, சிறிய திருவடி
(கலிவிருத்தம்: கூவிளம் புளிமா காய் தேமா)

சோரனுக் கருளிச் சோரநாத ரான
நாரணன் நலஞ்சேர் நாமமதே தேனாய்
ஆர்மனத் துறையும் ஆனந்த ஞானம்
கார்வினை யகலக் கனிந்திடுமே நேயம்.

வல்வினை யகற்றும் வைகுந்தன் சீரைச்
சொல்வினை யடியார் சொல்லுருவி லோர
நல்வினை பெருக நாரணன்பூந் தாளால்
தொல்வினை நலியத் தொந்தமிலா வாழ்வே.

கீழ்த்திருப் பதிவாழ் கோவிந்தன் முன்னே
வீழுநீர்த் திளைக்கும் வீராஞ்ச நேயன்
ஏழ்பிறப் பறுத்தே எழுவினைகள் மாய்க்கத்
தாள்தனைப் பணியத் தானற்ற ஓய்வே.

--ரமணி, 22/06/2014, கலி.08/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 09 - 23/06/2014, கலி.09/03/5115


கூர்ம ஜயந்தி.
திருப்போரூர் ஶ்ரீமுருகப்பெருமான் அபிஷேகம்.
திருவண்ணாமலை ஶ்ரீரமனாஸ்ரமத்தில் மாத்ருபூதேஸ்வரர் பூஜை.

மாமன் மருகன் அருணைமுனி
(அம்மானை)

வடவரையாற் பாற்கடலை மத்தனம் செய்யுங்கால்
தடமுதுகில் ஆமையாய்த் தாங்கினார் அம்மானை!
தடமுதுகில் ஆமையாய்த் தாங்கினார் என்றேதான்
உடல்மல்லாக் காய்க்கடலில் தூங்குவரோ அம்மானை?
உறக்கமிலை யோகத்தின் ஓர்வழியே அம்மானை!

போரூர் முருகன் பொழிநீர்த் திருமுழுக்கில்
பாரடி நீர்வகை பற்பலவே அம்மானை?
பாரடி நீர்வகை பற்பலவே ஆமாகில்
ஆருக்கென் றித்தனை ஆடுவர் அம்மானை?
நம்பாவம் போகவே நன்முழுக் கம்மானை!

அன்னையின் நெஞ்சவள் ஆவி இருத்தியே
இன்சித்தி தந்தார் இரமணர் அம்மானை!
இன்சித்தி தந்தார் இரமணர் ஆமாகில்
அன்னையின் பந்தம் அகன்றதோ அம்மானை?
தன்னையறிந் தார்க்குத் தளையிலை அம்மானை!

--ரமணி, 23/06/2014, கலி.09/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 10 - 24/06/2014, கலி.10/03/5115


விராலிமலை ஶ்ரீமுருகப்பெருமான் புறப்பாடு

அரன்மகன் திருவருள் காக்க!
(வண்ணப் பாடல்: தனதனன தானனத் தத்தனா தத்தன தனதானா)

அருணகிரி நாதருக் கட்டமா சித்தியை அருள்வாரே
கருணைமிகு வேலவர்க் கட்டிலா நித்தியம் அருள்வாராம்
சரணமிவர் பாவகிச் சத்தனாய் உற்சவம் கொளுவோரே
திருவரைவி ராலிமேற் சித்தரே வித்தகம் தருவீரே.

[சரணமிவர் = மயில்மேல் செல்லும்; பாவகி = அக்கினியில் உதித்தோன், முருகன்;
சத்தன் = ஆற்றலுடையவன்; வித்தகம் = ஞானம்]

அனுதினமும் மானிடர்க் கட்டமே குற்றருள் முருகாநீர்
கனவுலகின் பாவினிற் கற்றதே நத்துவன் எனவேநான்
தினையளவும் ஞானமிற் சித்தமே மித்திரன் எனவானேன்
வினைமலிய வீணுறத் தக்கதோ பித்தனென் றுயர்வேனோ?

[குற்றருள் = குறைய அருளும்; பாவு = நெசவு; நத்துவன் = விரும்புவன்]

--ரமணி, 24/06/2014, கலி.10/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 11 - 25/06/2014, கலி.11/03/5115


சிதம்பரம், ஆவுடையார் கோவில் இத்தலங்களில் உற்சவம் ஆரம்பம்.

ஆவுடையார் சேவடியே காப்பு!
(வெண்பா)

ஆவுடையார்க் கோவிலிலே ஆனித் திருநானம்
பாவுடையார்க் காகப் பரிகொணர்ந்த - சேவடியை
நாவுடைத்துப் பாடிய நால்வரில் ஓரடியார்
தேவுடையா ராய்நிற்கும் சேர்வு.

[ஆவுடையார் = பசுக்களாகிய ஆன்மாக்களை உடையார், பசுபதி;
திருநானம் = திருமஞ்சனம்; தேவுடையார் = தெய்வத்தன்மை
உடையார்; சேர்வு = ஊர்]

உருவற்ற ஆவுடையார் மூலம் குருத்தம்
அருவுருவ லிங்கமென் றாகத் - திருவாத
வூரரே அத்தன் உருவெனக் காணுந்
திருவூர் பெருந்துறை யே.

தில்லைநட ராசர் திருநானம் ஆனியில்
எல்லையில்லாப் பத்துநாள் இன்பமே - தொல்லை
அறுந்தடியார் தேர்வலம் கண்டு திளைக்க
உறங்கும் உயிர்க்கே உயர்வு.

--ரமணி, 25/06/2014, கலி.11/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 12 - 26/06/2014, கலி.12/03/5115


செய்திகள்:
சிதம்பரம் ஶ்ரீசிவபெருமான் பவனி.
சுவாமிமலை ஶ்ரீமுருகப்பெருமான் வைரவேல் தரிசனம்.
ஏரல் அருணாசல சுவாமிகள் திருவிழா.
சீர்காழி ஶ்ரீதிருஞானசம்பந்தர் அபிஷேகம் (பாம்பு பஞ்சாங்கம்).

கோவில்: ஏரல் அருணாசல சுவாமி
Chairman Arunachala swamy Temple : Chairman Arunachala swamy Temple Details | Chairman Arunachala swamy- Eral | Tamilnadu Temple | ??????? ??????? ??????

நால்வகை தரிசனம்
(வெண்பா)

ஆனித் திருமுழுக் காடும் நடராசர்
சானித்யம் வீதியில் சந்திர ஊர்தியில்
வெள்ளித் திருவாசி இந்நாள் வலம்வந்தே
அள்ளித் தருவர் அருள். ... 1

வைரவேல் காட்டியே வைராக்யம் ஊட்டிடும்
பைரவர் சேய்சாமி நாத! - உயிரவை
எல்லா வகையும் இனிதாகி முன்னேற
பொல்லார்க் கருளைப் பொழி. ... 2

[உயிரவை = உலகின் உயிர்த்தொகுதி]

தன்மரணம் சோதரர்க்குத் தானே அறிவித்து
மன்பதை வாழ வழிதந்த - இன்முனி
ஏரலரு ணாசலர் இந்நாள் விழாக்காண
ஊரினில் பொங்கும் உவப்பு. ... 3

சித்தம் தெளிவுறச் சீக்கு குணமுற
நித்தம் அருள்செய் நிமலனாம் - பத்திவழி
யோகியாம் ஏரல் ஒளியரு ணாசலர்
ஆகிவந்த காப்பென வாம். ... 4

அன்னையிடம் ஞான அமுதுண்ட காழியர்கோன்
அன்னை செவித்தோடும் அப்பன் பிறைநிலவும்
மூன்றே வயதினில் முன்னுறப் பாடிய
ஆன்றார் திருமுழுக்கிஞ் ஞான்று. ... 4

--ரமணி, 26/06/2014, கலி.12/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 13 - 27/06/2014, கலி.13/03/5115


செய்திகள்:
சிதம்பரம் ஶ்ரீசிவபெருமான் ஆனித்திருமஞ்சனம் மூன்றாவது நாள்:
. தங்க சூர்ய பிரபை வாகனத்தில் ஊர்வலம்.
ஆவுடையார் கோவில் ஶ்ரீசிவபெருமான் பவனி வரும் காட்சி.
கீழ்த்திருப்பதி ஶ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன ஸேவை.
ஶ்ரீபெரும்புதூர் சுவாமி உடையவர் கூட புறப்பாடு.

அரன்-அரி ஆனித்திருமஞ்சனம்
(கலிவிருத்தம்: தேமாங்கனி புளிமாங்கனி கூவிளம் மா)

ஆனித்திருப் பொழிவாடிடும் அம்பலத் தரசே!
பானுத்தம னியவாகனப் பாங்கினில் வருவீர்
ஈனத்தினில் இகம்வாழ்ந்திடும் என்னுயிர்க் காழ்ந்த
மோனத்தினில் நிலைகொண்டிடும் உத்தியைத் தருவீர்! ... 1

[பானுத் தமனிய வாகனம் = தங்க சூர்யபிரபை வாகனம்]

ஆனித்திருப் பொழிவாடிடும் ஆவுடை யார்கோன்
கானத்துடன் வலம்வீதியில் காண்பவர் ஆத்ம
ஞானத்துடன் இனிவாழ்ந்திட நாயகன் அருளி
ஈனத்தினைக் களைவானெனும் ஈர்ப்பினில் வாழ்வார்! ... 2

கோவிந்தனின் திருமஞ்சனக் கோலம தேநம்
பாவந்தனைக் கருவில்கொளும் பாங்குள தாகும்
நாவற்பழ நிறமார்ந்திடும் நாரணன் தாளே
காவல்தரும் இகவாழ்வினில் காழ்ப்பினைத் தருமே. ... 3

[காழ்ப்பு = மனவயிரம்]

பூதக்குழு சிவசாபவி மோசனம் பெறவே
பூதந்தொழும் பெருமாளவர் ஊர்வலக் கோலம்
பாதம்தொழு உடையாரவர் பக்கநின் றேதான்
வீதித்திரு வலங்கொள்ளவே வீழ்வினை யாமே. ... 4

[உடையார் = இராமானுசர்]

--ரமணி, 26/06/2014, கலி.12/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 13 - 27/06/2014, கலி.13/03/5115


பாம்புப் பஞ்சாங்கச் செய்தி:
மயிலம் பொம்மபுர ஆதீனம் முதல்பட்ட குருமுதல்வர்
. ஶ்ரீபாலசித்தர் குருபூஜை

பாலசித்தர் பற்றிய செய்திகள்:
http://ta.wikipedia.org/wiki/மயிலம்_பொம்மபுர_ஆதீனம்
Santhipriya's pages: Bommapura Adeenam -5
??? ????-??????

பாலசித்தர் குருபூஜை
(குறும்பா)

சங்குகன்னர் என்பதாயோர் சிவகணமே
அங்கணனால் பெற்றாரே தவகுணமே
. கருவழியே தோன்றாதே
. திருநீறணி ஆன்றாராய்
இங்குற்றார் பாலசித்தர் தவமணியாய். ... 1

கமனசித்தர் ககனவழிச் செலவினிலே
உமைகூறன் வீரசைவம் நிலைபெறவே
. பெருமுக்கல் வரைகளிலே
. ஒருமித்தார் நெறியினையே
நமன்கொண்ட உயிர்மீட்ட வலுவுடையார். ... 2

[கமனசித்தர் = வான்வழியே நினைத்தவிடம் செல்லும் சித்தி பெற்றவர்;
ககனம் = வான், வளிமண்டலம்]

முருகனுடன் போர்புரிந்தே பாலசித்தர்
அரன்மகனின் அருள்பெற்ற சாலவித்தர்
. குருபூஜையில் பொம்மபுரம்
. குருவருளால் விம்மலற
முருகருளால் எரியுண்ணும் பாவவித்தே. ... 3

[விம்மல் = துன்பம், ஏக்கம், கலக்கம்]

--ரமணி, 27/06/2014, கலி.13/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 14 - 29/06/2014, கலி.14/03/5115


செய்திகள்:
சிதம்பரம் ஶ்ரீசிவபெருமான் வீதியுலா
பத்ராச்சலம் இராமபிரான் புறப்பாடு

அம்பலத்தரசன் ஆனிமஞ்சனம்: நான்காம் நாள்
(நேரிசை அகவல்)

’புதுநலங் கனிந்த பூத புராணம்’*
முதலோன் கணங்கள் மூரி யுரைக்க
அம்பலத் தரசன் ஆனி முழுக்கில்
கம்பீ ரத்துடன் கணபூ தமொன்று
கதைவாள் கேடயம் கரங்களிற் றாங்கி
அதிருங் கழலோன் அருவுரு தூக்க
நான்காம் நாளில் நான்மறை யாளன்
தேன்மலர்த் தாரணி திருவெண் ணீறனாய்
ஊர்வலம் வந்திடும் உன்னதம்
ஓர்மனம் ஆன்ம ஒளியைப் பெறுமே.

[மூரி = வலிமை, பெருமை, பழமை]
குறிப்பு:
*மூன்று தமிழ்ச் சங்கங்கள் பற்றி உவேசா பதிப்பித்த
ஓர் ஓலைச்சுவடியில் உள்ள பாடல் வரியின் மேற்கோள்:
<line>?????? ????? ?????? ?????</line>

*****

இராமநாமம் தரும் உய்வே
(குறள் வெண்செந்துறை)

இராமநாமம் உறாமனம் இராமனம் பெறாமனம்
வராமனம் கூறாமனம் அராமியின் மனமெனவே ... [அராமி = கொடியன்]

கல்யாண சீதா ராஜா சுந்தர
கோசல தசரத கோதண்ட ஶ்ரீஜய

ரகுசிவ அனந்த ஶ்ரீராம ஜயமென
உகப்பினிற் றுதித்தே உய்வோம் நாமே.

குறிப்பு:
இங்குள்ள பல்வேறு ராமநாமங்கள் கவிஞர் கண்ணதாசனின்
திரைப்பாடல் ஒன்றில் வருவன:
?????? ??????: 41. ????? ?????? ??????!

--ரமணி, 28/06/2014, கலி.14/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 15 - 29/06/2014, கலி.15/03/5115


செய்தி:
இராமநாதபுரம் ஶ்ரீகோதண்டராம ஸ்வாமி உற்சவாரம்பம்.
தோளுக்கினியானில் பவனி வரும் காட்சி.

சிவ ராம துதி
(வெண்பா)

ஆனித் திருமுழுக் கைந்தாம் தினத்திலே
ஞானத் தழலுரு நீள்சடையன் வானுயர்ந்தே
வீதி யடைக்க விரிரதம் ஸ்கோபுர
ஊர்தி யெழுந்தருள் ஊர்வலக் கோலத்தில்
கார்மணிப் பாம்பணிக் கண்டன் தரிசனம்
நேர்வரப் போம்வினை யே.

திருவாறை ஈசன் திருவருள் செய்ய*
உருவான வில்லாகும் கோதண்டம் மேல்முனையில்
கோதண்ட ராமனின் கோல முகமென்பர்
பாதமே கீழ்முனை யாம்.

கோவெனில் மன்னன் ஒறுத்தலே தண்டமாம்
கோவின் தருமம் கொடியோரை தண்டித்தல்
இப்படிக் கோதண்டம் தீதழிக்கும் வன்மையைச்
செப்புதல் வில்லின் சிறப்பு.

கோதண்ட ராமரின் கோவிலில் உற்சவம்
மாதண்டம் ஏகியே மானிடர் தெய்வமாய்
தோளுக் கினியானால் தூக்க உலாவரும்
தாளைப் பணியத் தகவு.

[மாதண்டம் = இராசவீதி; தோளுக்கினியான் = எளிதில் தூக்கும் வாகனவகை;
தகவு = அருள், நன்மை, தகுதி, வலிமை]

--ரமணி, 29/06/2014, கலி.15/03/5115

குறிப்பு:
திருவாறைத் தலம் இன்று கயத்தாறு என்னும் பெயரில் விளங்குகிறது.
ஈசன் கோதண்டம் அருளிய செய்தி:
???????? ???????: ????????????? ?????? ????!
கோதண்டம் மகிமை:
??? ??????: ????????????? ??????

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 17 - 01/07/2014, கலி.17/03/5115


செய்தி:
தேரழுந்தூர் ஶ்ரீஞானசம்பந்தர் புறப்பாடு.
இராமநாதபுரம் ஶ்ரீகோதண்டராம ஸ்வாமி ஹனுமார் வாகனத்தில் புறப்பாடு.

சிவ னடியார் ராம துதி
(வெண்பா)

அம்பலத்தே கூத்தாடி ஆனித் திருமுழுக்
கைந்திரண்டாம் நாளினில் அற்புதக் காட்சியாய்
தங்கக் கயிலைமலை யைத்தூக்க யத்தனித்தே
மங்கையோர் பங்கினர்கால் வல்விர லாலழுத்த
அங்கம் அழுந்தி அரற்றிய ராவணன்
வெள்ளி யுருவில் விடையோனின் வாகனமாய்
உள்ளம் களிததும்ப ஒன்பது உச்சியால்
ஐயனைத் தூக்கித்தன் பத்தாம் தலயினைக்
கையுறு வீணைத் தலையாய் அமைத்துப்பண்
காம்போதி மீட்டவே காளகண்டன் கேட்டுமை
யாம்பான் அருள்செயும் அற்புதக் காட்சியில்
தேம்பா திருப்பார்யா ரே!

[உச்சி = தலை; ஆம்பான் = கணவன்]

பிள்ளைசம் பந்தர்க்குப் பிள்ளையார் சுட்டவே
கள்வனாய் உள்ளம் கவர்ந்திடும் தேரழுந்தூர்
வள்ளலை யிங்ஙனம் வாழ்த்தினார் பிள்ளை:
’கடலே றியநஞ் சமுதுண் டவனே
உடலே உயிரே உணர்வே எழிலே
அடலே றுடையாய் அழுந்தை மறையோர்
விடலே தொழுமா மடமே வினையே’
இறைவனின் பிள்ளையவர் தேரழுந் தூரில்
மறையின் கொழுந்தாய் வலம்.

யோகி அனுமனவன் கோதண்ட ராமர்க்கு
வாகனமாய் இன்று வருநாள் - விவேகம்
குதிர்ந்து செயல்படக் கோதண்ட ராம்தாள்
துதித்தே வழிபடு வோம்.

--ரமணி, 01/07/2014, கலி.17/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 18 - 02/07/2014, கலி.18/03/5115


செய்தி:
திருநெல்வேலி நெல்லையப்பர் உற்சவாரம்பம்.

ஐயமேன் ஐயனே!
(வெண்பா)

ஆனித் திருமுழுக்கின் நாளெட்டில் தில்லையில்
ஆனந்தக் கூத்தன்பிச் சாடனர்க் கோலம்
நரைதிரை மூப்பால் நலிவுறும் முன்னே
அரனருள் வேண்ட நலம்.

(எழுசீர் விருத்தம்: தேமா விளம் விளம் மா
. தேமா மா காய்)


அன்ன பூரணி உம்மிடம் இருக்க
. ஐயம் கேட்டே அலைவானேன்?
முன்னர் ஆரணன் ஐம்முக உருவில்
. உம்பர் முகமே உளமாக
உன்னும் செருக்கினில் உலகியற் றித்தன்
. மூலத் திறையை மறந்திடநீர்
சென்னி ஒன்றினைக் கொய்திட அதுவும்
. செங்கை யொட்டிச் சேர்ந்ததுவே!

[ஆரணன் = பிரம்மன்; உம்பர் = ஆகாயம்; மூலத்திறை = விஷ்ணுவும் சிவனும்]

சேர்ந்த வெண்டலை யோடினை யேந்தி
. ஏற்றல் வேண்டி யலைந்தீரோ?
ஆர்யை பூரணி உம்மிடம் இருந்தும்
. ஐயம் பாவ மகன்றிடவோ?
பார்வை மறைத்திடும் செருக்கது வேநீர்
. பாகம் கேட்ட உணர்வுறினே
யார்தன் அகந்தையைத் தருவரோ அவர்க்கே
. மாயை யகலச் செய்வீரே!

(வெண்பா)

ஆந்தை விழிகள் அகலத் திறந்துநாம்
பேந்த விழித்திடும் பேரிருள் வாழ்வினில்
காந்திமதி நாதனின் கால்பிடித் தாலுறும்
சாந்தம் எனவறிந் தான்றவர் நெல்லையின்
வேந்தனை நாடுவ ரே.

--ரமணி, 02/07/2014, கலி.18/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 19 - 03/07/2014, கலி.19/03/5115


செய்தி:
சிதம்பரம் ஶ்ரீசிவபெருமான் ரதம்.
NATARAJA DEEKSHIDHAR: ????? ???????????

தேரோடக் காரோடும்!
(குறும்பா)

ஆனித்திரு மஞ்சனத்தின் ஒன்பதாம்நாள்
மேனிநீறன் தேர்வலத்தில் மன்பதையாய்த்
. தில்லையதே திரண்டுநிற்கத்
. தொல்லையெலாம் மருண்டுநிற்கக்
கானத்துடன் வழிபடுவர் மன்பதமே. ... 1

[மன்பதை = மக்கட்பரப்பு; மன்பதம் = நிலைபெற்ற பாதம்]

நடராசர் திருத்தேர்நாள் விடியலிலே
மடவனமாய்ச் சிவகாமி நடைபயில
. அலங்காரத் திருக்கோலம்
. அகங்காரம் செறுக்கோலம்
முடிவில்லான் தேர்வலமோர் படையலென. ... 2

[மடவனம் = இளமையான அன்னம்]

அணித்தேரின் அமைப்பினிலே சிற்பக்கலை
கணிப்பேதும் தவறாத நுட்பவலை
. தேர்ப்பரப்பும் தேர்ச்சுற்றும்
. தேர்க்கூம்பும் தேர்ச்சிற்பமும்
மணிகண்டன் தேர்மிக்கோர் பொற்புமிலை! ... 3

[பொற்பு = பொலிவு, அழகு]

தேர்நடுவே நடராசர் ஊசலிலே
ஊர்முழுதும் நோக்கும்தேர் வாசலையே
. ஆராதனை தேரினிலே
. பாராதவர் சேறினிலே
வார்சடையன் தரிசனத்தில் காசினியே. ... 4

[ஊசல் = ஊஞ்சல்; வார்சடை = நீண்ட சடை; காசினி = பூமி]

அருமறையின் ஏற்றிறக்கம் தண்ணொலிக்கும்
திருமுறையும் ஒருசேர்ந்தே பண்ணொலிக்கும்
. சேந்தனாரின் பல்லாண்டு
. ஏந்திவரும் சொல்லாண்டு
இருநாகச் சுரமொலியோ விண்ணொலிக்கும்! ... 5

வலுமேவும் தவிலொலியும் வந்துறவே
உலுக்குமரம் தேர்தன்னை உந்திடுமே
. உற்சாகம் தேரோடும்
. தற்சிவமே வேரோடும்
எலும்பணியர் எழிலொன்றே முந்துறுமே! ... 6

[உலுக்குமரம் = நெம்புகட்டை; தற்சிவம் = முதற்கடவுள்]

நடராசர் திருவாடல் நாளமெனக்
கொடிஞ்சியிலே மணிகளெல்லாம் தாளமிடும்
. மின்னலிடும் முன்னழகே
. பின்னிவரும் பின்னழகே
உடையானின் ஊர்வலமே நீளுறுமே. ... 7

[நாளம் = உள்துளை; கொடிஞ்சி = தேர்;
உடையான் = உரிமைக்காரன், கடவுள்]

கருநிறத்தேர் இரண்டினிலே அம்மையப்பன்
இருயானை போலசையும் இம்மையப்பன்
. நண்பகலில் மீனவரின்
. மண்டகப்படி ஆனவுடன்
திரும்பும்தேர் நிலையுறுத்தும் செம்மையப்பா! ... 8

தில்லைத்தேர் நேர்நோக்கத் தொலைநோக்கத்
தொல்லையெலாம் சிவனருளால் தொலைவேக
. அம்மையப்பன் தரிசனமே
. நன்மையுறும் பரிசனமே
அல்லலற வாழ்வமைதி நிலையாமே. ... 9

[தொலைநோக்க = தொலைக்காட்சி, இணையம் முதலிய சாதனங்கள்
மூலம் தரிசித்தல்; பரிசனம் = தொடுதல், உறவு]

--ரமணி, 03/07/2014, கலி.19/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 20 - 04/07/2014, கலி.20/03/5115


செய்தி:
ஆனி உத்திர தரிசன விழா
Natarajar ??????????? ??????????: ???????????? ??? ?????? ???????

அம்பலத்தரசன் ஆனித் தரிசனம்
(குறும்பா)

ஆனிமாத உத்திரைமீன் வருநாளே
ஆனந்தத் தாண்டவனின் திருநாளே
. அதிகாலைத் திருமஞ்சனம்
. பொதுமன்றத் துறுதரிசனம்
ஞானமுடன் ஆனந்தமும் தருநாளே. ... 1

நடராச தரிசனத்திற் களனாகும்
கடலாழ உண்மைகளே புலனாகில்
. ஞானவழித் திணையேக
. மோனமொழிப் புணையாக
கடைத்தேற வரமென்றே பலனாகும். ... 2

[திணை - அகம்-புற ஒழுக்கம்; புணை = தெப்பம்]

திருவடியே ஐந்தெழுத்து மந்திரமாம்
திருப்பாதம் நகரமாக உந்தியதாம்
. மகரமாகத் தோளதுவாம்
. சிகரமாகத் தாழ்முகமாம்
திருமுடியாம் வகரயகர ரந்திரமாம். ... 3

[ரந்திரம் = ரகசியம், வெளி]

சிகரமாகும் உடுக்கையதே வலதுகரம்
வகரமாகித் தாள்சுட்டும் அபயகரம்
. யகரமாகும் அனலிகரம்
. நகரமாகும் முயலகனே
மகரமாகி மும்மலம்கொள் சரணவரம். ... 4

[அனலி = நெருப்பு]

தோற்றுவித்தல் துடியாலுறும் தொழிலெனவாம்
ஆற்றுவித்தல் அபயகரத் தொழிலெனவாம்
. தோன்றுமக்னி அழிதொழிலாம்
. ஊன்றுபதம் மறைதொழிலாம்
தேற்றியருள் தூக்குந்தாள் தொழிலெனவே. ... 5

திருவாசி பிரணவமாம் ஓங்காரம்
திருமுடியே ஞானத்தின் ரீங்காரம்
. மருள்நீக்கும் வீசுகரம்
. அருட்களியாய்த் தூக்குபதம்
திருவடியை ஊன்றப்போம் ஆங்காரம். ... 6

[ரீங்காரம் = வண்டொலி, இங்கு ஓங்கார அதிர்வொலி]

ஆகாயம் பொலிவுறுமே முகத்தினிலே
தீக்காயும் நெற்றிக்கண் அகத்தினிலே
. விரிசடையே நீரெனவாம்
. விரிமூக்கே மாருதமாம்
மேற்காயும் நிலமதுவாம் முகமெனவே. ... 7

கண்ணிடமே சந்திரனிச் சாசக்தி
கண்வலமே சூரியனாம் ஞானசக்தி
. செவிக்குழையே சக்தியம்சம்
. செவித்தோடே சிவனம்சம்
கண்ணுதலே கழுமுனையாம் க்ரியாசக்தி. ... 8

காற்சிலம்பின் கேளாவொலி அருமறையாம்
காற்றாங்கும் கமலநெஞ்சத் திருமலராம்
. காற்கழலே நமன்கேடு
. கார்க்கண்டம் சமன்பாடு
தோற்றமெனும் உலகமெலாம் உருவிலரே. ... 9

[நமன்கேடு = நமனுறாவண்ணம் பிறப்பறுத்தல்;
சமன்பாடு = அமரத்துவம்]

இருகண்ணும் தரிசனத்தில் உருநோக்கும்
ஒருமனமோ தரிசனத்தின் கருநோக்கும்
. சிவசக்தி தரிசனமே
. பவரோகத் தெரிவனமே
திருவருளால் மும்மலத்தின் மருணீக்கம்! ... 10

--ரமணி, 05/07/2014, கலி.21/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 22 - 06/07/2014, கலி.22/03/5115


செய்தி:
திருத்தங்கல் ஶ்ரீநின்ற நாராயணப் பெருமாள் உற்சவாரம்பம்.
Nindra narayana perumal Temple : Nindra narayana perumal Temple Details | Nindra narayana perumal- Thiruthangal | Tamilnadu Temple | ????? ????????????????

திருக்கோளக்குடி ஶ்ரீகோளபுரீஸ்வரர் ரிஷப வாகனத்தில் பவனி.
Varalaaru - A Portal For South Asian History

நீலவண்ணன் தரிசனம்
(எண்சீர் விருத்தம்: அனைத்தும் காய்ச்சீர்கள்)

ஆலமரம் தவம்செய்தே தங்கால மலையாக
. அலைமகளும் தவம்செய்தே அவள்பெருமை நிலையாக
நீலவண்ணன் இருதவமும் உவந்தருளித் திருத்தங்கல்
. நின்றவிடம் ஆழ்வாரின் பாவண்ணம் பரவிடவே
கோலம்கொள் பெருமாளின் கருவறையில் பதினொருபேர்
. கொலுவிருக்கும் சிறப்புடனே கோவிந்தன் அருள்செய்ய
ஞாலவாழ்வில் நன்மைகளால் நலிவுறுதல் நீங்கிடவே
. நாரணனின் தாள்பற்ற நலமோங்கும் வாழ்வுறுமே.

நீலகண்டன் தரிசனம்
(முதற்சீர் கனிச்சீர், பிற காய்ச்சீர்)

கோலக்குடி குடவரையாம் கோவிலிலே
. கோளநாதர் ஆனிவிழா காணவரும்
கோலாகலம் பத்துநாள் மலையடியில்!
. கொடியேற்றம் அபிஷேகம் ஆரத்தி
சாலைத்தெரு வழியேகும் பரிவாரத்
. தரிசனமாம் கல்யாணம் தேரோட்டம்
ஆலந்தரு அடியமர்ந்து அருள்செய்யும்
. அம்மையப்பன் தாள்பணியத் துயரிலையே.

--ரமணி, 06/07/2014, கலி.22/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 23 - 07/07/2014, கலி.23/03/5115


செய்தி:
சொக்கலிங்கப்புதூர் நகர சிவாலய வருஷாபிஷேகம்.
???? 10 ???????????? ?????? ?????? ????????????? - Dinamani - Tamil Daily News

நகரத்தார் கோவிலிலே...
(ஆசிரியத்துறை)

நகரத்தார் வடிவமைத்த நஞ்சுண்டான் கோவிலிதே
தகனமுறும் வனமாடும் தாழ்சடையன்
சிகைவீழ்ந்தே தாள்வழியும் திருப்பொழிவின் தரிசனத்தில்
பகையாவும் நேசமாகிப் பற்றறில்லா வாழ்வுறுமே.

சொக்கலிங்கப் புதூர்மேவும் சுந்தரரின் கோவிலிலே
சக்திமீ னாட்சியவள் தாள்பற்றும்
தக்கார்க்குத் தகவுறுமே தகவிலர்க்குத் தீதுறுமே
எக்கணமும் சிந்தையுற எல்லையிலா இன்புறுமே.

--ரமணி, 07/07/2014, கலி.23/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 24 - 08/07/2014, கலி.24/03/5115


செய்தி:
கானாடுகாத்தான் ஶ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம்.
VELUDHARAN's TEMPLES VISIT: CHETTINAD - KANADUKATHAN - SHIVA AND AYYANAR TEMPLES

கானாடி காப்பான்!
(அறுசீர் விருத்தம்)

கயிலாய நாதருக்குக் கல்யாணம்
. கானாடு காத்தானூர்க் கோவிலிலே
கயல்விழியாள் சவுந்தரிய நாயகியைக்
. கைப்பிடித்தே குடும்பத்தன் ஆனாராம்!
அயராத உழைப்பொன்றே மூலதன
. மாய்க்கொண்ட நகரத்தார் கோவிலிதே
துயரெல்லாம் நீங்கிடுமே அருட்செயலால்
. துடியேந்தி தாள்தன்னைப் பற்றிடவே.

மூன்றடுக்கில் ஒங்குராச கோபுரமாம்
. உமையன்னை சிவனாரின் சன்னிதிமுன்
சான்றெனசிற் பக்கலையின் மாட்சிமைக்கே
. ஆங்காங்கே தூணெல்லாம் எழிலுருவம்
தான்தோன்றி மூலவராம் கருவறையில்
. சப்பரத்தில் தெய்வங்கள் ஊர்வலமாம்
ஈன்றானை இத்தலத்தில் தரிசித்தே
. இகவாழ்வில் ஏற்றங்கள் பெறுவோமே.

--ரமணி, 08/07/2014, கலி.24/03/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை
கலி-ஜய வருடம் ஆனி 25 - 09/07/2014, கலி.25/03/5115


செய்தி:
மதுரை மீனாட்சி ஊஞ்சலில் காட்சியருளல்.

அங்கயற்கண்ணி அருள்வாயே!
(தரவு கொச்சகக் கலிப்பா)

துரகதம் நரியாக்கித் துலக்கமுறச் செய்பவனாய்
உரகதம் மேனியுற உய்விக்கும் வெண்ணீறன் ... ... ... ... [உரகதம் = பாம்பு]
தருகதிகொள் சக்திதரும் தாயவளாய்த் தாங்குவதே
மரகதப் பாவையவள் மதுரையங் கயற்கண்ணே.

உடலுடனே உயிர்சேரந்தே உளமூஞ்சல் ஆடுதற்போல்
இடப்பக்கல் மடுத்தேநீ சிவசக்தி என்றாகிக்
கடம்பவனக் கோவிலிலே கன்னூஞ்சல் ஆடுவையோ?
குடமுடைந்து உயிர்செலுமுன் ஊசலெனக் கில்லாமோ?

இடவலமாய் மேற்கீழாய் இகவாழ்வே ஊசலாடும்
மடமையெலாம் மாண்பென்னும் மாயையிலே தேசலாகும்
சடங்கெல்லாம் உய்வென்னும் சாதனையே வேசமாகும்
கடம்பவன நாயகியே காத்தருள்வாய்க் காசினியே.

--ரமணி, 09/07/2014, கலி.25/03/5115

*****
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top