• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கவிதை முயற்சிகள்

Status
Not open for further replies.
பிரதோஷத் துதி: கண்வண்ணம் காட்டி யருள்!
(அலங்காரப் பஞ்சகம்: வெண்பா, கலித்துறை, அகவல், விருத்தம், வண்ணம்
என்னும் ஐந்து பாவின நிரலில் அமைந்த அந்தாதி மாலை.)


வெண்பா
பால்வண்ண மேனியிலே ஆள்வெண்ணீ றாயவனும்
நால்வண்ண வேதமிழைக் கால்வண்ணம் ஆடையிலே
பெண்வண்ணம் வாமமுறப் பேய்வண்ணம் தட்சிணமாய்க்
கண்வண்ணம் காட்டியருள் வான்.

(கவித்துறை: காய் காய் மா மா காய்)
வான்கலந்த விடையவனே அந்தி வண்ண அமைதியிலே
தேன்கலந்த பண்ணதிலே தேவன் வண்ணம் தீந்தமிழே
ஊன்கனந்த உயிரினிலே உளமாம் துளிரில் ஒளிதங்கி
நான்கலந்த இம்மையிலே இன்னல் தீர நாடுவனே.

(அகவல்)
நாடுவன் எங்ஙனம் நண்ணுவன் எங்ஙனம்
காடென வினையெலாம் கவிழும் மனதிலே!
கூடென வாழும் உடலிதே பீடெனில்
ஏடெவண் வந்துறும் பீடையே வருமே!
காடுறும் சாம்பலைக் காமுறும் மேலவன்
வீடெதும் இலையெனில் வினைகளைக் கொல்லும்
வேடனாய் வரவே வேண்டுவன் உளத்திலே!
ஆடலின் நாயகன் அமைவுறும் சந்தியின்
பாடலில் தீருமே பாடெலாம்
நாடுவேன் உமையவள் நாயகன் செவ்வணமே.

(எழுசீர் விருத்தம்: அனைத்தும் காய்ச்சீர்கள்)
செவ்வண்ணம் வானுறுமே சிந்தையெலாம் தேனுறுமே
. செம்மேனி யபிடேகச் சீருறுமே
செவ்வண்டுக் கூட்டினுள்ளே புழுவாக நிற்குமுயிர்ச்
. சிந்தையிலுன் மந்திரமே அதிர்வுறுமே*
இவ்வண்ணம் தங்காதே ஈனத்தில் உளமுறுமே
. இருமையெனும் மாயையதன் மயலுறுமே
எவ்வண்ணம் இருந்தாலும் என்னுள்ளம் வந்தருள்வாய்
. எப்பொழுதும் உன்னாமம் நினைவுறவே.

[*செவ்வண்டின் இனப்பெருக்கம் பற்றிய குறிப்பு:
http://sithharwaves.blogspot.in/2011_01_01_archive.html]

(வண்ணக் கலிவிருத்தம்: தனனன தனனன தனனானன தானன)
நினைவுறும் உளமதில் நிறைவேறிடும் ஈசனவன்
வினையுறும் உயிரதன் விழைவேறிட ஈவனவன்
சுனையுறும் வளமென உயிரேறிடும் ஏகனவன்
நனைவுறும் அனையென அணுகேனவன் பால்வணமே.

[நனைவுறும் அனை = ஈரமும் ஊறும் அன்னை]

--ரமணி, 12/05/2014, கலி.29/01/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 4.
சித்திரை 30

இன்று ஶ்ரீநரசிம்ம ஜயந்தி.

date-20140513.jpg

நரசிம்ம ஜயந்தி
(வெளிவிருத்தம்)

எனக்கொருவன் இரணியனாய் இருக்கின்றான் ஆள்கின்றான் - நரசிம்மா!
தனக்குநிகர் இல்லையெனத் தன்வயங்கொள் அசுரனவன் - நரசிம்மா!
வனப்புவிழை மேனியவன் ஐம்புலனாம் ஆனைகளால் - நரசிம்மா!
தினம்வதைத்துத் தன்கூட்டில் எனைவைக்கும் கொடுங்கோலன் - நரசிம்மா! ... 1

உன்மகனாய் விரலளவே உயரமுள்ள என்னையவன் - நரசிம்மா!
தன்னுருவாய் எண்ணமுற்றுச் சன்னதமாய் நஞ்சேற்றி - நரசிம்மா! ... [சன்னதம் = ஆவேசம், கடுஞ்சினம்]
என்னுள்ளம் நானெனவே எழுமயக்கம் கொளச்செய்வான் - நரசிம்மா!
இன்னுமவன் ஆயுதமாய் என்வாக்கால் எனைவதைப்பான் - நரசிம்மா! ... 2

இந்தமன மொழிமெய்யாம் இருஞ்சிறையில் வருந்துகிறேன் - நரசிம்மா! ... [இருஞ்சிறை = நரகம், காவல்]
இந்தமூன்று தூண்களையும் பிளந்தெனைநீ ஆட்கொள்வாய் - நரசிம்மா!
அந்தவொலி ஓங்கார ஆளியொலி யுடனுருத்தே - நரசிம்மா! ... [ஆளி = சிங்கம்]
வந்துநீயென் இருமையெனும் மாயைகீறிக் காத்தருள்வாய் - நரசிம்மா! ... 3

--ரமணி, 13/05/2014

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 5.
சித்திரை 31

இன்று சித்திரைப் பௌர்ணமி: சித்தரகுப்தன் வழிபாட்டு நாள்

கணக்கும் கூற்றும்!
(வெளிவிருத்தம்)

சித்திரம் சத்தமாய் எத்தனை வித்துகள் - கூற்றுவனே!
சித்தமி ழித்துநான் இத்தரை நத்தினேன் - கூற்றுவனே!
புத்தியின் சுத்திசெய் ஒத்தண மெத்திலை - கூற்றுவனே!
செத்தையை முத்தென எத்தனை எத்தனம் - கூற்றுவனே! ... 1

[நத்துதல் = விரும்புதல்; ஒத்தணம் = ஒற்றடம்; எத்தனம் = முயற்சி]

அத்தனை செத்தையும் அத்தனை சத்தமும் - கூற்றுவனே!
சித்திர புத்ரனின் சித்திரப் புத்தகம் - கூற்றுவனே!
செத்ததும் ஒத்திகைச் செத்தலைச் சத்தமாய்க் - கூற்றுவனே!
இத்தள நித்திய மித்திய எத்தனம் - கூற்றுவனே! ... 2

[செத்தலை = உழவுக் கணக்கு; சத்தம் = கூலி; மித்தியம் = பொய், மாயை]

அத்தனை பேர(து) அகத்தின் பிரக்ஞைநீ - சித்ரகுப்த!
புத்தகம் வைத்துநீ புத்தியை ஆய்ந்திடும் - சித்ரகுப்த!
பத்தும் வரவும் பதிந்தெமை யேற்றும்நீ - சித்ரகுப்த!
உத்தமன் குற்றமில் கூற்றாய் வணங்குவோம் - சித்ரகுப்த! ... 3

--ரமணி, 14/05/2014, கலி.31/01/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 6.
வைகாசி 1

இன்று காரைக்குடி ஶ்ரீகொப்புடையம்மன் ஹம்ஸ வாகனத்தில் திருவீதி உலா.

கோயில் விவரம்:
Koppudai Nayaki Amman Temple : Koppudai Nayaki Amman Temple Details | Koppudai Nayaki Amman- Karaikudi | Tamilnadu Temple | ???????? ????? ??????
http://maduravmpathi.blogspot.in/2009/01/blog-post.html
http://www.vikatan.com/new/astrolokondex.php?type=article&nid=7373

கொப்புடை யம்மன் காப்பு
(இன்னிசை வெண்பா)

காரைக் குடிநகர்க் காரிகையே நீயின்றுத்
தேரினில் வந்தே திருவருள் செய்வதால்
ஊரினில் யாவர்க்கும் உன்னெழில் தோற்றத்தை
வேருடன் காணும் விழி.

குழந்தைவரம் வேண்டியே கொப்புடைத் தாய்க்குக்
கழையினால் தூளியிடக் கன்னல் விழியாள்
குழைந்தருள் செய்யக் குடும்பம் வளரும்
கழிநலம் செய்யுமவள் காப்பு.

வீரச் சுவையிலே ஈரமும் தாங்கியே
கோரச் செயலழிக்கும் கொப்புடை அம்மனைக்
காரைத் தலமதில் கண்டு நெகிழவே
சீர்வரும் துன்பமெலாம் தீர்ந்து.

--ரமணி, 15/05/2014, கலி.01/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 7.
வைகாசி 2

இன்று காஞ்சிபுரம் ஶ்ரீவரதராஜப் பெருமாள் நாச்சியார் திருக்கோலத்துடன் புறப்பாடு


கோயில் விவரம்:
Varadaraja Perumal Temple : Varadaraja Perumal Temple Details | Varadaraja Perumal - Kanchipuram | Tamilnadu Temple | ???????? ????????
Hindu Spiritual Articles: ?????? ?????????? ????????

மோகினித் திருக்கோலம்:
?????? ?? ????????: ?????? ??????? ??????????? -- 1

(இன்னிசை வெண்பா)
அயன்யாகம் தோன்றி அருள்செய்த மாயோன்
அயர்ச்சியில் ஆழ்குளத்தில் அத்தி வரதனாய்
ஏகமாத் தூங்க எழுந்த கனவிலின்று
மோகினியாய் ஊரலைந்தா னோ? ... 1

பராங்குச மங்கை பரகால மங்கை
இராப்பகல் பாரா(து) இறுக்கிய காதலெழும்
தாகத்தைத் துய்த்திடும் ஆசையில் மாதவனும்
மோகினியாய் ஊரலைந்தா னோ? ... 2

முன்கதை ஏதோ முகுந்தனவன் இற்றைநாள்
முன்னழகும் பின்னழகும் முட்டவே கண்ணெதிரில்
மோகினியாய் ஊர்வலமாம்! மோகவுளம் பக்தியின்
தாகத்தில் ஆழும் தழைந்து! ... 3

--ரமணி, 16/05/2014, கலி.02/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 8.
வைகாசி 3

இன்று சங்கடஹர சதுர்த்தி நாள்.

சங்கடஹர சதுர்த்தித் துதி:
இரண்டாம் சுதந்திரமாக அருள்!


(அளவியல் இன்னிசை வெண்பா)
பாரதம் பண்டைநெறிப் பண்பினில் ஆழ்ந்ததன்
வேரது மீண்டும் விளைய கணேசா!
உலகினில் முன்னோடும் உன்னத நாடாய்
வலம்வரச் செய்திடு வாய். ... 1

இரண்டாம்சு தந்திரமாய் எல்லாரும் தேவ!
இரண்டென நின்றும் இணைந்திடும் அன்பில்
வருநாளில் பாடுபட்டு வல்லரசாய் இந்தத்
திருநா(டு) இலங்கவருள் செய். ... 2

வெறுக்கையர் உள்ள வெறுமை யகல ... [வெறுக்கை = செல்வம்]
சிறுவர் சிறுமியர் செம்மையில் வாழ
இளையோர் அறத்தில் இழைய கணேசா!
வளமுறச் செய்திடு வாய். ... 3

*ஐங்கரனே நம்மக்கள் ஐம்புலன் கட்டுண்டே
ஐங்குரவர் சொல்கேட்டே ஐம்பாலோர் நன்மைபேணி
ஐந்தருவின் வாசமுறும் வாழ்வறம் துலங்கிடவே
ஐந்திணையும் காத்தருள் வாய். ... 4

"எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் ஓர்நிறை" யென்றே விநாயக!
இல்லார் குறைதீர்த் திருப்பார் நிறைசெய்ய
அல்லலின்றி வாழ வருள். ... 5

--ரமணி, 17/05/2014, கலி.03/02/5115

பாடல் 4 பற்றிய குறிப்பு:
ஐங்கரன் = பிள்ளையார்; ஐங்குரவர் = அரசன், ஆசான், அன்னை, தந்தை, மூத்த சகோதரன்;
ஐம்பாலோர் = ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் வகைப்படும் உயிர்கள்;
ஐந்தரு = சந்தானம், மந்தாரம், பாரிஜாதம், கற்பகம், அரிசந்தனம் ஆகிய தேவலோக மரங்கள்;
ஐந்திணை = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய நிலங்கள்.

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 9.
வைகாசி 4

கீழைத் திருப்பதி ஶ்ரீகோவிந்தராஜப் பெருமாள் ஸன்னதி எதிரில்
ஶ்ரீஹனுமாருக்குத் திருமஞ்சன ஸேவை.

அனுமன் திருமஞ்சனம்
(ஒருவிகற்ப இன்னிசை வெண்பா)

ஆழியைத் தாண்டி அருந்தொண்டு செய்தவன்
கீழைத் திருப்பதிக் கேசவன் ஆலயத்தில்
வீழுநீ ராடிடும் வீரன் அனுமனால்
ஏழை மனங்குளிரு மே. ... 1

அரனம்சன் அஞ்சனை மைந்தனவன் யோகி
உருவெளியன் ராமனின் தூதன் சிறிய
திருவடி மூலம் திருமால் அருளால்
இருள்நீங்கி வாழ்தல் எளிது. ... 2

புத்தி பலமும் புகழும் துணிகரமும்
சத்திய ஞானம் சரீரநலம் சொல்வன்மை
அத்தனையும் கைகூடும் அச்சமற்ற வாழ்வெனும்
அத்தம் அனுமனால் ஆம். ... 3

[அத்தம் = அருநெறி]

--ரமணி, 18/05/2014, கலி.04/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 10.
வைகாசி 5

சங்கரன்கோவில் ஶ்ரீகோமதியம்மன் தரிசனம்.

கோவில் விவரம்: Sankaralingaswami (Sankara Narayanar ) Temple : Sankaralingaswami (Sankara Narayanar ) Temple Details | Sankaralingaswami (Sankara Narayanar )- Sankarankoil | Tamilnadu Temple | ????? ????????

கோமதியம்மன் தரிசனம்
(சமனிலைச் சிந்து)

சங்கனும் பதுமனும் தம்முள் - தாயே
. சர்ச்சை புரிந்தது நன்றே
சங்கர நாரணன் என்றே - தாயே
. சர்ச்சையைத் தீர்த்துவைத் தாயே! ... 1

சந்திர ஒளிமுகம் கொண்டே - தாயே
. தவமிருந் தாயொரு காலில்
இந்திர தேவரும் உன்னைத் -தாயே
. நிரையுரு தாங்கியே காண! ... 2

கோமதி பேரினைக் கொண்டாய் - தாயே
. கோவிலில் மேவிய மர்ந்தாய்
சேமமுன் நாமமும் தருமே - தாயே
. சேவடி பணிந்தே வாழ்வோம்! ... 3

திங்களில் தங்கபா வாடை - தாயே
. திருவுரு தரிசனம் காண்போம்
மங்கைநீ புட்பபா வாடை - தாயே
. மங்கல வெள்ளியில் காண்போம்! ... 4

நோயுடன் தோஶமும் போகத் - தாயே
. உன்கழல் போற்றியே வாழ்வோம்
சேயென எம்மைக் காத்தே - தாயே
. சீர்பெறும் வகையருள் வாயே! ... 5

--ரமணி, 19/05/2014, கலி.05/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 11.
வைகாசி 6

ஶ்ரீவில்லிபுத்தூர் பெரியபெருமாள் புறப்பாடு.
சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி.

பெருமாள் தரிசனம்
(நேரிசை வெண்பா)

பெரிய பெருமாள் பெயர்கொள் அரங்கன்
கருவறை நீங்கி வருவன் - பெரியாழ்வார்
வல்லியைக் கொண்டரங்க மன்னார் புறப்பாடு
வில்லிபுத் தூரினில் இன்று.

தோளுக் கினியானால் தூக்க உலாவரும்
தாளைப் பணிந்தால் தகவுறும் - மூளும்
வினையெலாம் சாத்தூரின் வேங்கடவன் ஆளும்
கனிவில் மறையும் கரைந்து.

--ரமணி, 20/05/2014, கலி.06/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 12.
வைகாசி 7

திருப்பதி ஶ்ரீஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்

நாரணன் நீராட்டு

(அறுசீர் விருத்தம்: காய் மா மா ... விளம் மா மா)
ஆகாய கங்கைத் தீர்த்தம்
. ஆயிரம் கலசம் கொண்டே
மாகாயம் மீது வார்க்க
. மஞ்சனம் ஆடும் மாயன்
காகோதம் மீது துயிலும் ... ... [காகோதம் = காகோதரம் = பாம்பு]
. கடல்வணன் கோலம் காண
மோகத்தைக் கொன்றே வாழ்வில்
. யோகமே அருள்செய் வானே.

கோவிந்தன் மூல உருவில்*
. கோவணம் அணிந்து காலை
ஆவிந்த னப்பால் கொண்டே
. ஆடுவான் அதன்பின் மேனிக்
காவந்த மாய்ப்ப ரிமளக் ... ... [காவந்து = காபந்து = பாதுகாப்பு]
. காப்பினை யணிந்த பின்னர்
ஆவிந்தன் தீர்த்த மாடி ... ... [ஆவிந்தன் = ஆவினம் மேய்க்கும் இடையன்]
. அலங்கர ணம்கொண் டருள்வான்.

[* http://prabanjaveliyil.blogspot.com/2014/02/blog-post_5843.html]

கௌமாரி வைண விதேவி*
. கவிந்ததோர் ஆற்ற லின்-கோ
வைமாமன் மருகன் உறவின்
. ஐக்கிய மாக உறைய
மாமாங்கம் ஆண்பெண் இருவர் .. ... [மாமாங்கம் = மாமாவான மாலின் மேனி]
. வாமமும் வலமும் காணும்
தேமாவாம் சீனி வாசன் ... ... [தேமா = தித்திப்பு மாமரம்]
. திருமலை அருள்வான் பேறே.

[* http://mahaperiyavaa.wordpress.com/2013/10/16/திருப்பதி-முருகன்-தலமா-த/]

--ரமணி, 21/05/2014, கலி.07/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 13.
வைகாசி 8

சுவாமிமலை ஶ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

பத்தனென ஆட்கொள்வாய் சுப்பையா!
(தரவு கொச்சகக் கலிப்பா)

அப்பனுக்குப் ஓங்காரப் பாடம்சொன்ன சுப்பையா!
அப்பொருளின் ஆதார அதிர்வெனக்கே எப்பய்யா?
ஒப்பில்லாத சுவாமிமலை ஒண்பொருளே சுப்பையா!
எப்பவுமே நான்செய்யும் எத்தனமேன் தப்பய்யா?

சத்திமகன் சத்திமூன்று சமையுமந்த வயிரவேல்!
நத்தகத்தின் எண்ணமதில் நின்றொளிரும் ஞானவேல்! ... [நத்தகம் = நத்தும் அகம் = விழையும் மனம்]
வித்தகத்தின் தத்துவமாய் வீற்றிருக்கும் வெற்றிவேல்!
பித்தகத்தன் என்றனுக்கோ எத்தனையோ கருமுள்வேல்!

அத்தன்சேய் நத்தாயோ மத்தனெனை முருகையா!
வித்தமெனக் காண்பதெலாம் வீணான சருகையா!
சித்த-மதில் உன்வேலால் சிதைப்பதுதான் எப்பய்யா?
பத்தனென ஆட்கொள்வாய் பரிவுடனே சுப்பையா!

--ரமணி, 22/05/2014, கலி.08/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 14.
வைகாசி 8


தத்தாத்திரய ஜயந்தி
(பொதுவாக தத்தரின் ஜயந்தி மார்கழிப் பௌர்ணமியை ஒட்டியே வந்தாலும்
இன்றைய நாளும் அதைக் காட்டுவதால், அவரை விட்டுவைப்பானேன்?)

தத்தரின் உண்டோ குரு!
(வெண்பா)

கணபதி துதி
உந்தை மலரவன் உம்பியின் மாமனார்
தந்தருட் செல்வமாய் அத்திரி பத்தினி
உந்தியில் தோன்றிய உண்மைக் குருவினை
வந்தனம் செய்ய வருள். ... 1

தத்தர் துதி
மூவராம் தேவரின் கூறென வந்தவர்
யாவரும் நாடிடும் மாநெறி தந்தவர்
யாவுமே வாழ்வினில் ஆசான் எனக்கொளின்
ஆவதில் லாதெதென் றார். ... 2

இருபத்து நான்கு இனமாய் விளங்கும்
உருவைத் தமது குருவெனக் கொண்டவர்
தத்தர் நமக்குத் தருவரே சாதனை
இத்தரை வாழ்வினி லே. ... 3

அஞ்செனும் பூதமும் சந்திரன் சூரியன்
கொஞ்சும் புறவினம் குன்றுறும் கட்செவி
தேன்தரும் தேனீயும் தேன்கொளும் கள்வனும்
மீனொடு மானும் இரைகொள் பருந்தும்
விலைமகள் விட்டில் வலைகொள் சிலந்தி
சிலீமுகம் செய்வனும் சிந்துரம் பாம்பும்
குளவி குழந்தை குமரி கடலென்
றுளவுரு யாவும் குரு. ... 4

தத்தரின் லீலையில் தாழ்வுறும் மாயையே
தத்தரின் நாமம் தரணியில் நல்வழி
தத்தரைப் போற்றத் தளையெலாம் நீங்கியே
முத்தியை உள்ளும் மனம். ... 5

--ரமணி, 23/05/2014, கலி.09/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 15.
வைகாசி 10


திருநள்ளாறு ஶ்ரீசனீஸ்வரபகவான் சிறப்பு ஆராதனை

நள்ளாற்று நீலன்
(கலிவிருத்தம்: விளம் மா விளம் மா)

சனையெனில் மெதுவாம் சரமெனில் அசைவாம்
மனிதரின் வாழ்வில் மந்தனாய் ஊர்ந்தே
வினைகளை விதைத்தே விளைத்தபின் யருளும்
சனியவன் ஆட்சி சர்வமும் கொளுமே. ... 1

கார்வண நீலன் காக்கைய மர்ந்தே
ஊர்பவன் அச்சத் துருவனாய்க் காண்போம்
சூர்யனின் மைந்தன் சூழ்வினை செய்தே
சோர்வுறச் செய்வன் சுகமினி வரவே. ... 2

நளன்தனைப் பிடித்து நலிவுறச் செய்தே
திளைசனி விட்ட திருநள ஆற்றில்
குளித்தபின் சிவன்பால் குனிதலைச் செய்தே
நிளுதனம் விளைக்கும் நீலனைப் நாடி ... 3 ... [நிளுதனம் = அழிக்கை]

தரிசனம் செய்து தயையினை வேண்டக்
கரிசனம் கொண்டே கதிர்மகன் அருளும்
பரிவினில் தீமை பற்றுதல் நிற்க
வருவது எல்லாம் ஆகுமே நன்மை. ... 4

--ரமணி, 24/05/2014, கலி.10/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 16.
வைகாசி 11

தேவகோட்டை ஶ்ரீரங்கநாதர் புறப்பாடு

தேவகோட்டை ரங்கநாதர்
(குறும்பா)

தேவகோட்டை ரங்கநாதப் பெருமாளே
காவலற்று நானேவோர் வெறுமாளே!
. ரங்கநாதன் சரணவிணை
. மங்கலமே மரணமிலை
ஆவிநானென் றறிந்திடவே அருள்வாயே! ... 1

நெடிதுயர்ந்த மாலவனின் கோலத்திலே
கடிதயர்ந்தே ஏகும்வினை காலத்திலே!
. மாதவனின் சேவனையில்
. ஏதுமிலை மேவினையே
படிதுயராய்ப் பற்றாது ஞாலத்திலே! ... 2

ஊர்வலத்தில் அச்சுதனின் தரிசனமே
நேர்வலத்தில் உய்க்குமவன் பரிசனமே ... [பரிசனம் = உறவு]
. பெருமாளின் நாமமதே
. வருநாளின் சேமமெனக்
கார்வலத்தின் மாரியவன் கரிசனமே. ... 3

--ரமணி, 25/05/2014, கலி.11/02/5115

*****
 
பிரதோஷத் துதி: அம்மானைத் துதிக்க அம்மானை!

மகளிர்க் கிடமேனி மத்தகம் தந்தது
நகைப்புக் கிடமாமோ நஞ்சுண்டர்க் கம்மானை?
நகைப்புக் கிடமென்றே நஞ்சுண்டர்க் காகில்
இகலெதிர் கொள்வதே எங்ஙனம் அம்மானை?
இகத்தை யழித்தே யிகல்கொள்வர் அம்மானை! ... 1

குஞ்சரனைத் தந்து குமரனும் தந்தவர்
அஞ்சுமுகம் கொண்ட அனல்விழியர் அம்மானை!
அஞ்சுமுகம் கொண்ட அனல்விழியர் ஆமாகில்
அஞ்சுவரே அன்னார் அடியவர் அம்மானை?
அஞ்செழுத் துள்வரின் அச்சமில்லை அம்மானை! ... 2

பேயுடன் ஆடிடும் பித்தரெம் மீசர்
நாயுடன் சஞ்சரிக்கும் நாயகர் அம்மானை!
நாயுடன் சஞ்சரிக்கும் நாயகரை எங்ஙனம்
நாயன்மார் நண்ணியே நாடினர் அம்மானை?
ஆயெலாம் தீர்ப்பதால் அண்ணினர் அம்மானை! ... 3

எருதேறி ஆடிடும் ஈசரவர் எங்ஙன்
எருமையாம் என்மனம் ஏறுவர் அம்மானை?
எருமையில் ஏறும் எமன்வரு முன்னே
அருமையாம் உன்னுள் வருவதே அம்மானை!
ஒருமை யிருந்தால் உறும்திணம் அம்மானை! ... 4

அத்தன் பிடித்திட அத்தன் பிடித்தென்
சித்தம் பிடித்துநான் சீர்பெறுவேன் அம்மானை!
சித்தம் பிடித்துநீ சீர்பெறுவாய் ஆமாகில்
இத்தனை ஆட்டமும் ஏனடி அம்மானை?
குத்திநான் ஆடுதலோர் கூத்தன்றோ அம்மானை! ... 5

அன்னைக் கொருபிடி அத்தர்க் கொருபிடி
தன்னைப் பிடிக்கவே தாழ்சடையான் அம்மானை!
தன்னைப் பிடிக்கவே தாழ்சடையான் என்றாலே
என்னைப் பிடித்தவை ஏகுமோ அம்மானை?
முன்பன் பிடிக்கவரும் முத்தியே அம்மானை! ... 6

--ரமணி, 26/05/2014, கலி.12/02/5115

அனந்த் அவர்களின் அம்மானைக் கட்டுரை:
??????????: December 2012

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 17.
வைகாசி 12


ஶ்ரீ வைகுண்டம் ஶ்ரீ வைகுண்டபதி புறப்பாடு
கோவில்: Vaikuntanatha Swamy Temple : Vaikuntanatha Swamy Temple Details | Vaikuntanatha Swamy - Srivaikuntam | Tamilnadu Temple | ???????????? (???????????-1)

கள்ளபிரான் உள்ளம்வரின்...
(தரவு கொச்சகக் கலிப்பா)

கள்ளனுக்கும் அருள்செய்தே காப்புதந்த கள்ளபிரான்
வள்ளலென நல்லவர்க்கு வாரிவாரி வழங்குவரே
உள்ளுமனம் ஏதுமின்றி உளைவதென உலகீரே
தள்ளுநாளில் கொள்ளுவினை தள்ளுவதும் அவர்தானே! ... 1

மூலவராய் வைகுந்தர் உற்சவராய்க் கள்ளபிரான்
கோலமிரு வகையினராய்க் கோவிந்தன் தகவுறுவார்
ஆலயத்தில் ஊர்வலத்தில் அச்சுதனை நேர்காண
ஓலமிடும் உளமதுவே ஓசையற்ற அமைதியிலே. ... 2

வைகுந்தன் நாமமுற வையமெலாம் சேமமுறும்
வைகுந்தன் நாமமுற மனதினிலே ஏமமுறும்
வைகுந்தப் பெருமாளே மெய்யடியார்க் குருவாவார்
வைகுந்தன் தாள்விந்தம் ஆனந்தக் காபந்தே. ... 3

--ரமணி, 26/05/2014, கலி.12/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 18.
வைகாசி 13[/

திருப்போரூர் ஶ்ரீ முருகப்பெருமான் அபிஷேகம்

கோவில்: Kantha swamy Temple : Kantha swamy Temple Details | Kantha swamy - Kantha kottam | Tamilnadu Temple | ??????????

திருப்போரூர் முத்துக்குமரன் துதி
(எண்சீர் விருத்தம்: தேமா விளம் தேமா கூவிளம் அரையடி)

போரூர் உத்தம சீலன் வேலனைப்
. போற்றும் முன்னுறை யோகி ஐங்கரன்
தார மாயிரு தேவி கொண்டவன்
. ஆரத் துதித்தவன் சம்ம தத்துடன்
சூரன் வதைத்தவன் கோலம் கண்டிட
. சூழும் வினயவன் பாதம் கொண்டிட
ஆரும் அருள்தனில் அன்பும் சாந்தியும்
. சாறாய் ஊறியே உள்ளத் தோங்குமே. ... 1

வேலன் முழுக்கினைக் காணும் பேறுற
. வேண்டும் விழைவுகள் வாழ்வில் நேருற
ஆலம் கொண்டவன் மைந்தன் பார்வையில்
. ஆன்ம நலன்களே வாழ்வில் முன்னுறக்
காலன் வருகையில் அச்ச மின்றியே
. காலம் பொருளுடன் செல்லப் புண்ணிய
ஞாலம் மரித்தபின் ஏகித் துய்த்தபின்
. ஞானம் ஓர்தினம் கிட்டும் சென்மமே. ... 2

எண்ணெய்க் காப்பது எண்ணம் காக்குமே
. நீர பிடேகம் மூலம் காட்டுமே
வண்ண மற்றபால் மஞ்ச னந்தனில்
. வான வில்மன மாயை யேகுமே
வெண்ணீ றாலபி டேகம் கண்ணுற
. வேதன் வெள்ளொளி பேதம் தீர்க்குமே
மண்ணின் ஆசைகள் விட்டுப் போகவே
. வண்ணம் முத்தியி லக்கைக் கொள்ளுமே. ... 3

--ரமணி, 27/05/2014, கலி.13/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 19.
வைகாசி 14

திருவள்ளூர் ஶ்ரீ வீரராகவப் பெருமாள் புறப்பாடு

கோவில்: Veera Raghava Swami Temple : Veera Raghava Swami Temple Details | Veera Raghava Swami- Tiruvallur | Tamilnadu Temple | ?????????

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் துதி
(இன்னிசை வெண்பா)

அல்லல் கரைந்தபின் அச்சுதன் தீர்த்தத்தில்
வெல்லம் கரைத்தே வினைகடக்கும் பத்தரின்
உள்ளம் நிறைந்தே உவகை தரும்திரு
வள்ளூரின் வைத்தியன் தாள். ... 1

மால்மனம் நாடிட மாவே படையலாய்
மால்பதம் வைத்தபின் ஐயர் பசிதீர்த்த
சாலிஹோத்ர மாமுனி யார்க்கருளி மாதவன்
கால்நீட்டி ஒய்வுற்ற வூர். ... 2

எவ்வுள் கிடந்தானின் நீள்மேனி பத்தைந்தாய்
அவ்வணை யின்னுயரம் ஐந்தடி யாய்க்கோலம்
கண்டார் மனம்கனியக் காதல் பெருகவே
கொண்டானே மாலன் துயில். ... 3

வீரராக வப்பெருமாள் வீதிவலம் கண்டவர்
பேரெழிலில் பாவம் பெயர்ந்தேக உள்ளத்தில்
காரிருள் நீங்கக் கனியும் அமைதியில்
வேரினைப் போற்றிவாழ் வோம். ... 4

--ரமணி, 28/05/2014, கலி.14/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 20.
வைகாசி 15

மன்னார்குடி ஶ்ரீராஜகோபால ஸ்வாமி புறப்பாடு

கோவில்: Rajagopalaswami Temple : Rajagopalaswami Temple Details | Rajagopalaswami - Mannargudi | Tamilnadu Temple | ??????????????

மன்னார்குடிக் கண்ணன் துதி
(கலிவிருத்தம்: மாங்கன்லி கூவிளம் கூவிளம் தேமா)

கணபதி வாழ்த்து:
நாமந்தனில் நெற்றிவி நாயக! கண்ணன்
நாமந்தனைப் பாவினில் நாடவே உன்றன்
சேமந்தரு பார்வையில் சேயவன் நானும்
ஏமந்தரும் சொற்களில் ஏடிடச் செய்வாய்!

கண்ணன் துதி:
மன்னார்குடிக் கண்ணனை மாயனைக் காணத்
தன்னால்வரும் அன்பிலே தாயெனும் உள்ளம்
முன்னால்வர மாதவன் முத்தியை வாழ்வில்
உன்னாமலே தந்தவன் உய்வருள் வானே. ... 1

கண்ணன்விளை யாடலின் காட்சியை உள்ளக்
கண்ணார்ந்திரு மாமுனி காணவே மாயை
வண்ணத்தினில் கோபனாய் வாசுவாய் வந்த
அண்ணல்கழல் நண்ணவே அல்வினை போமே. ... 2

முப்பத்திரு லீலையில் உற்சவம் ஒன்றில்
ஒப்பில்சிறு கண்ணனாய் ஊர்ந்தவன் தானும்
இப்பாலடி யாரெறி வெண்ணையைக் கொண்டு
சப்பாணியின் நாடகம் ஆடுவான் கண்ணன்! ... 3

ஆண்டாளவள் வேடமும் தாங்குவான் ஏதும்
வேண்டாரவர் உள்ளமும் ஏங்கிடச் செய்வான்
ஆண்டானவன் ஆண்டாளாய் ஆகியே வாழ்வில்
தூண்டாவிளக் காவனே தூயொளி தந்தே. ... 4

இடையன்தரும் காட்சியில் வேட்டியே பாகை
இடையில்சதங் கைவளை இத்துடன் சாவி
நடையில்வரும் நூபுர நர்த்தனம் ஆவின்
படைமேய்த்திடச் சாட்டைகொள் பாலகன் பூவே! ... 5

கண்னன்பதம் நண்ணவே காட்சியில் ஆன்ம
எண்ணம்வர வாழ்விலே ஏற்றமாம் வாக்கில்
உண்மைவர லட்சியம் உன்னதம் கொள்ளும்
திண்மைவர நேயமே தேட்டமா யாமே. ... 6

--ரமணி, 29/05/2014, கலி.15/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 21.
வைகாசி 16


சிவகாசி ஶ்ரீவிஸ்வநாதர் உற்சவாரம்பம்
கோவில்: kasiviswanathar Temple : kasiviswanathar Temple Details | kasiviswanathar- Sivakasi | Tamilnadu Temple | ??????????????

காசிநாதர் துதி
(குறும்பா)

விச்வநாதர் வைகாசி விழாக்கோலம்
உச்சிமதி சிவன்காசி யுலாக்கோலம்
. கொடியேற்றம் தேரோட்டம்
. அபிடேக நீரோட்டம்
இச்சையிலா வாழ்வுதரும் சிலாக்கோலம். ... 1

பாண்டியனும் சென்றனனே வடகாசி
தாண்டவனைத் தாபிக்கத் தென்காசி
. வானதியில் நீராட்ட
. ஆனிரையின் மேலேற்ற
ஆண்டகையோ மேவியது சிவகாசி! ... 2

காசிவிச்வ நாதனென்னும் பேருடனே
காசிவிசா லாட்சியன்னை யாருடனே
. சிவகாசி தங்கினனே
. பவரோகம் மங்கிடவே
ஆசிலானைப் போற்றிடுவோம் தாருடனே. ... 3

வான்வழியே காசிசென்று பண்டியனே
கோனருளால் வழிபட்டு வேண்டினனே
. இதனாலே திருவாளர்
. பதம்காண வருவாரே
வானூர்த்திச் செலவின்முன் வேண்டுவரே. ... 4

அத்தனைநாம் பத்துநாளும் தரிசித்தே
நித்தமும்நாம் சித்தமதில் வருவித்தே
. அக்கறையாய் வழிபடவே
. அக்கரைக்கு வழிவருமே
முத்தியருட் காப்புவினை எரிவித்தே. ... 5

--ரமணி, 29/05/2014, கலி.15/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 22.
வைகாசி 18

பத்ராச்சலம் ஶ்ரீராமபிரான் புறப்பாடு

கோவில் விவரம்:
http://ta.wikipedia.org/wiki/பத்திராசலம்_கோவில்

இராமரின் அருட்காப்பு

கணபதி துதி
சதுர்த்தி புனர்பூ சநட்சத் திருநாள்
சதுரனாம் சீதைக்கேள் சத்திய ராமனின்
பத்திராச லம்கோலம் பற்றிநான் பாடவே
அத்தன் மகனே அருள்.

இராமர் துதி
(எழுசீர் விருத்தம்: கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்
. விளம் விளம் காய்)


பத்திரர்க் கருள்செயச் சங்கொலிச் செவியுற
. பத்தரின் எதிரிலே நாற்கரமாய்
பத்திரம் தனுசுடன் ஏந்திய இருகரம்
. அச்சுதன் திகிரிசங் கிருகையிலே
சத்திய அனையவள் சீதையோர் மடியிலே
. தம்பியாம் இலக்குவன் இன்னொன்றில்
நித்திய கதியினைத் தந்தவர் மகிழவே
. பத்திர மலையினில் மேவினனே.

[பத்திரம் = அம்பு; திகிரி = சக்கரம்; அனை = அன்னை]

போகல தமக்கையின் சொப்பனம் உறுத்தவள்
. புற்றினில் ஐயனைக் கண்டனளே
ராகவன் அடியவர் பக்தரா மதாசனும்
. அரசினர் வரிப்பணம் கையாண்டே
வாகுடன் எழுந்தவோர்க் கோவிலை அமைத்தவர்
. வரையிலாத் துயருறச் சிறைப்பட்டார்
ராகவன் இலக்குவன் மன்னனின் முஹர்களாம்
. ஆறுலட் சம்தொகை மீட்டனரே.

ராமனின் திருவிளை யாடலை உணர்ந்தமன் ... [மன் = மன்னன்]
. அத்தனை பணத்தையும் தாள்வைத்தே
ராமதா சரைவிடு வித்திடப் பொறுத்தவர்
. நாணயம் இரண்டினைக் கைக்கொளவே
ராகவன் சபையிலே இன்றுநாம் இரணிய
. நாணயம் இருப்பது காணுவமே
ராகவன் கருணையாம் சாகர மெனவர
. யாதொரு பேதமும் காணாதே!

தந்தைசொல் மிகுந்தொரு மந்திரம் எதுவெனத்
. தாயினும் சிறந்திலைக் கோவிலென
வந்தவர் உடன்பிறந் தோரினும் பெரியவன்
. அன்னவர் தந்தையாய்ப் பேணுதலும்
வந்தவோர் மனைவியின் இன்னொரு துணையிலை
. வந்துதாள் பற்றியர் நலன்காப்பே
எந்தவோர் தருமமும் இல்லையே இதனினும்
. என்றசொல் ராமனின் பேர்சொலுமே.

--ரமணி, 01/06/2014, கலி.18/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 23.
வைகாசி 19

திருவாதவூர் ஶ்ரீ திருமறைநாதர் உற்சவாரம்பம்

கோவில் விவரம்:
Thirumarainathar Temple : Thirumarainathar Temple Details | Thirumarainathar- Thiruvathavur | Tamilnadu Temple | ????????????

தீனனுக் கருள்வாய் திருவாத வூர!
(பதினாறு சீர் விருத்தம்: காய் மா--காலடி)

அகங்கார வாதம் அகம்பிரம வாதம்
. அசற்கார்ய வாதம் அனுவேது வாதம்
. . அனேகாந்த வாதம் அனேகான்ம வாதம்
. . . அஸ்திநாஸ்தி வாதம் ஆரம்ப வாதம்
இகம்கார ணமென இதுபோன்ற வாதம்
. இகல்கொண்டு வாழ்வில் எதிரெதிர் மோதிச்
. . சிகைபற்றி யாடும் சதிராட்ட வேடம்
. . . இடமாகும் உள்ளம் எதும்வேண் டிலேனே
உகந்தேனுன் தாள்தான் திகட்டாத தேனாய்
. உருத்தேற நானும் சிறுத்தேனென் ஊனில்
. . உளமொன்று மட்டும் களமென்று பட்டே
. . . ஒறுத்தேதான் வாழும் விழைந்தேதான் வீழும்
திகம்பரனாம் நீயே சிதம்பரமாம் வெளியாய்த்
. திக்கற்ற என்னுள் திருப்பாதம் காட்டித்
. . திறமெல்லாம் போக்கித் திருஞானம் ஊட்டித்
. . . தீனனெனக் கருள்வாய் திருவாத வூர!

குறிப்பு:
பல்வேறு தர்க்க வாதங்கள்:
அகங்கார: தான் எனும் உணர்வே பிரம்மம் என்பது;
அகம்பிரம்ம: நானே பிரம்மம் என்பது;
அசற்கார்ய: உற்பத்திக்கு முன் இல்லாமலே காரியம் தோன்றும் என்பது;
அனுவேது: பரமாணுக்களே பிரபஞ்ச காரணம் என்பது;
அனேகாந்த: ஏழுவகை நியாயம் என்னும் சமணவாதம்;
அனேகான்ம: ஆன்மாக்கள் பல உண்டு என்பது;
அஸ்திநாஸ்தி: உண்டு இல்லை என்பது;
ஆரம்ப: முதற்காரணம் இல்லாமலே காரியம் தோன்றும் என்பது.

--ரமணி, 02/06/2014, கலி.19/02/5115

*****
 
ஆன்மீகச் செய்திக் கவிதை 23.
வைகாசி 20

திருமோகூர் ஶ்ரீகாளமேகப் பெருமாள் உற்சவ ஆரம்பம்
ஆழ்வார் திருநகரி ஶ்ரீநம்மாழ்வார் புஷ்ப பல்லக்கில் பவனி

பெருமாள் பெருமான் உற்சவம்
(அறுசீர் விருத்தம்: மா மா காய் அரையடி)

மோகூர் கோவில் ஆப்தனென
. மோக னவல்லி யுடனுறைய
ஏகாந் தத்தில் சயனிக்கும்
. தேவன் கோவில் உற்சவமாம்
வைகா சிமாதம் கோதையுடன்
. வைரச் சிறுதேர்க் கரிமேவி
சாகா வரமாய் அமுதேந்தி
. தாகம் தீர்க்க ஊர்வலமாம். ... 1

கள்ளத் துயில்கொள் கோலத்தன்
. காள மேகப் பெருமாளென்
உள்ளம் துயிலாக் கள்ளத்தின்
. உரத்தை அழித்தே என்னுள்ளே
மெள்ளத் துளிர்க்கும் தவவேட்கை
. மேவச் செய்தே ஆனந்தம்
பள்ளம் பாயும் நீரெனவெ
. கொள்ளச் செய்ய வேண்டுவனே. ... 2

காதுக் கினிய கவியாழ்வார்
. ஆசான் சாச னம்பெற்றே
ஆதி நாதன் குருகூரில்
. நம்மாழ் வாராம் சடகோபர்
பாதம் தாங்கும் பூச்சிவிகை
. யார்ந்தே வீதி வருநாளில்
நாதன் நம்முள் மேவிடவே
. நம்மாழ் வாரை வேண்டுவமே. ... 3

--ரமணி, 03/06/2014, கலி.20/02/5115

மேல்விவரம்:
Kalamegaperumal Temple : Kalamegaperumal Temple Details | Kalamegaperumal - Thirumohur | Tamilnadu Temple | ????????????????
???? ??????????????!: ???????? ???????? - ?????.
Aadinaathan Temple : Aadinaathan Temple Details | Aadinaathan - Alwartirunagari | Tamilnadu Temple | ???????? (???????????- 5)

*****
 
தந்தை-தாய்-மகன் தகவு

அப்பா பெயருடையார் அப்பா வெனச்சொல்லி
எப்பொழுதும் ஒய்ந்த திலை. ... 1

விந்தால் வமிசம் விளைவிக்கும் விந்தையே
தந்தையென் பாரின் தகவு. ... 2

வாக்கினால் கண்டிப்ப ராயினும் தந்தையே
காக்கும் கடவுளென் றாம். ... 3

மகனுமோர் நாள்தந்தை ஆவனே வாழ்வில்
அகத்தில் இருத்தல் நலம். ... 4

தந்தை பிறந்தான் தனயனாய் தோன்றலுக்கும்
பிந்தை அதுபோல் பிறப்பு. ... 5

தோளுக்கு மிஞ்சினால் தோழனெனின் தந்தையின்
தாளுக்குக் குன்றாத் தகவு. ... 6

பாத்திரன் செல்வந்தன் பண்டிதனென் றாலுமகன்
மூத்தவன் ஆவனோ கொல்? ... 7

உருவொன் றெனினும் உளம்மாறும் பிள்ளை
இருவர் வினையின் பிறப்பு. ... 8

தந்தை தனயனைத் தந்தாலும் தந்தையைத்
தந்தவ ளன்றோவோர் தாய்? ... 9

தந்தை சிவமென்றும் தாயவள் சக்தியென்றும்
சிந்தையுறக் கிட்டும் சிறப்பு. ... 10

--ரமணி, 16/06/2014

*****
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top