• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கவிதை முயற்சிகள்

Status
Not open for further replies.

saidevo

Active member
என் கவிதை முயற்சிகள்

என் கவிதை முயற்சிகள்

வேறு வழியில்லை. என் கவிதை ஆசைகள், முயற்சிகள் பெருகுவதால் நானும் அதற்கென்று ஒரு தனிச் சரடு ஆரம்பித்துவிட்டேன்! கூடுமானவரை, கடிக்கவிதைகள் தவிர்த்து மற்ற முயற்சிகளில் மரபின் ஒழுங்கில் புதுக்கவிதையின் எளிமையைக் கோண்டுவருவது என் நோக்கம். விமர்சிக்கும், ஊக்குவிக்கும் பின்னூட்டங்களை விழைகிறேன்.

*****

08. கணினி போற்றுதும்!?
ரமணி, 18 aug 2012

கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!
பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும்
பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்!

இன்றைய உலகின் எலிகள் போட்டியில்
பகலும் இரவும் மனிதர் வாழ்வினை
நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்!

குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை
கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து
கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்!

குடும்பம் முழுவதும் கணினி வகைகள்!
மேசைக் கணினியும் மடிமேல் கணினியும்
அலுவ லகத்திலும் வீட்டிலும் அமர்ந்து
ஆசான் தோழன் மருத்துவன் செயலர்
கணக்கன் தூதுவன் கேளிக்கை யாளன்
அனைவர் ’ரோல்’களில் ஆடிடும் பாடிடும்!

கைத்தொலை பேசியில் வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும் கணினி
நின்ற விடத்தில் தொடர்பு கொண்டு
உறவினை தொழிலினை வம்பினை வளர்த்திட
ஏழை எளியோர் செல்வம் படைத்தோர்
யாவரும் முனைந்திட வழிவகை செய்திடும்.

உட்பகை வெளிப்பகை வானிலை பொருளியல்
விதிமுறை செயல்வகை என்றிவ் வாறு
அனைத்தும் அறிந்திட அரசுக் குதவி
அரசுகள் அமைக்கும், அரசுகள் கவிழ்க்கும்!

இறைவ னுக்குக் கரங்கள் பலவாம்
கணினி களுக்கும் கரங்கள் பலவே!

விரல்கள் சொடுக்கிட மின்னெலி ஒருகரம்
விரல்கள் தட்டிட விசைமணை ஒருகரம்
கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைமுகம்
பிரதிகள் அச்சிட அச்சுப் பொறிக்கரம்
அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்.

இணைய தளங்களை எட்டிட ஒருகரம்
மோடம் டெலிஃபோன் இணைப்புகள் தாங்கி
’யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற முதுமொழி நனவில் காட்டிடும்.

இத்தனை செயல்களால் வாழ்வில் வளம்தரும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்

பொழுதுகள் மறந்து அறநெறிகள் துறந்து
உடல்நலம் பேணுவது அசட்டை செய்து

பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
சிறுவர் சிறுமியர் மடிமையர் ஆகவும்
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

தீயோர் செயல்கள் கலியில் பெருகிட
மூவா மருந்தாய் விளங்கிப் பல்கிடும்
கணினி போற்றுதும் கணினி போற்றுதும்?

கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்
காரணம் ஆகா மனிதன் அழிவுக்கு.

பொறிகளின் பொறிகள் மனிதன் மனதில்
அல்லதைச் சமைத்து நல்லதை அழித்தால்
பொறிகளின் நெருப்பு ஊழித் தீயாகி
உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

*****
 
Last edited:

இது என்ன பாவகை என அறியேன்! நான் எழுதுவதோ 'இரட்டை வரிக் குறிப்புகள்' மற்றும் 'குறும்புக் குறிப்புகள்'!

இந்த இணையதள அறிஞர் பெருமக்களிடம் எதற்கும் அறிவுரை கேளுங்களேன்!
:laser:
 
உங்களது வரிகளில் கவிதை யிருப்பது அறிவேன், புகையின் நெருப்பாக!
பாவகை எதுவாயினும், இந்தக் கவிதையின் பொருளும் எளிமையும் ஓசையும் உங்களுக்குப் பிடித்திருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.
 
நண்பரே உங்கள் கவிதை மிக நன்றாக இருக்கிறது. நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

Critical பின்னூட்டங்கள்- எந்தக்குரோதமுமின்றி. நீங்கள் வரவேற்பீர்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

1.மிக அழகாக அமைந்து என்னைச் சிந்திக்கவும் வைத்த வரிகள் இவை:

a).......வன்பொருள் மென்பொருள்
இணைபொரு ளாக உறையும்........

இதில் இயற்கையாக அமைந்துவிட்ட technical fact ஐ மிகச்சுறுக்கமாகச் சொன்ன விதம், அதுவும் எதுகை மோனையுடன் சொன்னவிதம், என்னை மிகக்கவர்ந்தது.

b)…..பெரியவர் மனங்களில் வறியவர் ஆகவும்
........................................................................................
இளையோர் நெறிகளில் இளைத்தோர் ஆகவும்

depraved minds என்பதை இதைவிடச் சுறுக்கமாகவும் நேராகவும் சொல்லமுடியாது.

2. இனி நெருடியவை:

a) கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைக்கரம்...
திரைக்கரம் என்பது கொஞ்சம் contrived ஆக, வலிந்து கொண்டுவந்ததாக, தோன்றுகிறது. இல்லை, நீங்கள் ஒரு வேளை இனி வருங்காலத்தில் வரப்போகும் கணினி மென்பொருள்களின் thought induced commands ஐ மனதில் கொண்டு எழுதியதோ என்னவோ?

b) கரணம் என்பது உபகரணம் ஆகி
மனிதன் அவற்றை ஆளும் வரையில்..

எனக்குத்தெரிந்த வரை கரணம் என்பது செயல். உபகரணம் என்பது கருவி-instrument. செயல் கருவியாவது எப்படி? எப்போது? எனக்குப்புரியவில்லை. விளக்கினால் மகிழ்வேன்.

c) அசை, சீர், செய்யுள் வகை இவற்றுக்குள் புகாமல் வெறும் சந்தத்தை மட்டும் கொண்டு படித்தபோது கொஞ்சம் நெருடலாகப்பட்டவை இவை:

-அச்சின் தாள்களை அலகிட்டு மின்பதியும்

-உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!

-தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்

எழுத்துப்பிழைகளை சுட்டிக்காட்டுவது கண்ணியக்குறைவு என்பதால் விட்டு விட்டேன்.

வாழ்த்துக்கள்.
 
வணக்கம் நண்பர் ராஜுவுக்கு.

மரபுக்கவிதையில் பற்றுள்ள உங்கள் பின்னூட்டம் பதிவானது எனக்கு மிக்க மகிழ்ச்சி. என் கவிதயை ’மிக நன்றாக இருக்கிறது என்று பாராட்டியது’ இரட்டை மகிழ்ச்சி. இதுபோல் நாம் பலபேர் ஒரு ஆசிரியர் கண்ணோட்டத்தில் உரையாடுவது எல்லோர்க்கும் நன்மை பயக்கும்; செய்யுளின் நயங்களை, நுண்மைகளை அறிந்து கவிதையில் ஈடுபாடுள்ள ஒவ்வொருவரும் தம் உணர்வுகளை அலகிட்டு எழுதுவதற்கு ஊக்கமளிக்கும்.

’ஏன் இப்படி எழுதினேன்?’ என்று விளக்குமாறு கேட்டால் (சிலேடையைச் சட்டை செய்யவேண்டாம்!), என்போன்று இலக்கியத்தில் ’முயன்றால் முடியாதது இல்லை’ என்று முயல்வோர்க்கு அது ஒரு இனிய வாய்ப்பு. எனவே விளக்குகிறேன்.

01. என்னைப் பொறுத்தவரையில் எழுத்துப் பிழைகளைச் சுட்டுவது அவசியம். கையால் எழுதினால் வரமுடியாத எழுத்துப் பிழைகள் phonetic எழுத்துக்களில் தட்டும்போது, கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு பார்த்தாலும் எப்படியோ வந்துவிடுகிறது! நான் என் தமிழ், ஸம்ஸ்க்ருத எழுத்துகளுக்கு உப்யோகிப்பது ’பராஹா’ மென்பொருள். பிழைகளைச் சுட்டுங்கள், திருத்திக்கொள்கிறேன்.

02. நெருடலாகப் பட்டவை பற்றி:

a) "கண்கள் பார்த்திட ஒளிர்ந்திடும் திரைக்கரம்"
உண்மைதான். ’திரைக்கரம் என்பது கொஞ்சம் contrived-ஆக இருக்கிறது. கணினிக்கும் ஒரு முகம் உண்டல்லவா? அதை எப்படி மறந்தேன்? எனவே, ’திரைமுகம்’ என்று திருத்திவிட்டேன்.

b) "கரணம் என்பது உபகரணம் ஆகி"
நான் இதுமாதிரி விஷயங்களில் ரொம்ப சந்தேகப் பேர்வழி! என்னிடம் உள்ள ’வர்த்தமானன் தமிழ்-தமிழ் அகராதி’ மற்றும் Tamil Lexicon of University of Madras முதலியவற்றில் பார்த்த பின்னரே எழுதினேன்: ’கரணம்’ என்பதற்கு ஒன்பதாவது அர்த்தமாக ’கருவி’ என்றும், ’உபகரணம்’ என்பதற்கு முதல் அர்த்தமாக ’துணைக்கரணம்’ என்றும் கொடுத்துள்ளது:

Ref:
Tamil lexicon
Tamil lexicon

c) யாப்பின் நெளிவு சுளிவுகளை கடந்த ஒரு வாரமாக, புத்தகம், வலைதளம் மூலம், மனதில் விசிறிக் கொண்டிருக்கிறேன், புகை விலகி ஜ்வாலை ஒளிரும் என்ற நம்பிக்கையில். The best way to learn is to try to teach. என்றபடி, யாப்பிலக்கணத்தைக் கவிதை மூலம் அறிமுகம் செய்துவைத்து, நான் அறிந்தவற்றைப் பகிர்ந்துகொள்ளும் எண்ணம் இருக்கிறது, ஒரு சோதனையாக! (’சோதனை மேல் சோதனை’ என்று யாரோ பாடுவது காதில் விழுகிறது!)

இந்தக் கவிதையை, பெரும்பாலும் ஈரசைச் சீரகளில் ஒலிக்கும் அகவல் ஓசையில் சொல்ல முயன்றுள்ளேன். அங்கங்கே ஆசிரியப்பா போன்று ஒலித்தாலும், அளவொத்த, எவ்வகை சீர்களும், தளைகளும் வரலாம் என்று சுதந்திரம் தரும் குறள் வெண்செந்துறையாக மொத்தக் கவிதையையும் எடுத்துக் கொள்ளலாம். குறள் வெண்செந்டுறை பற்றிய விளக்கம் இங்கே காணலாம்:
https://groups.google.com/group/yappulagam/msg/f4a9231fc03d9e58?hl=en&pli=1

கவிதையின் முதல் பகுதியில் கணினியின் நன்மைகளைக் கூறிவிட்டு, திடுமென அந்த நலன்களில் பொதிந்துள்ள தீமைகளைத் தட்டிக் கேட்கும் வகையில் கவிதையின் பின்பகுதி திரும்பும் போது, தளைகள் நெருடப் புனைந்துள்ளேன்:

"தட்டெழுதித் தட்டெழுதிக்
கையெழுத்தை மறக்கச் செய்யும்
மின்னெலியில் விரல்வலிக்கச் சொடுக்கச் செய்யும்"

என்ற வரிகளில் பயிலும் ஓசை, தளை மாற்றங்கள் மூலம் கணினியைப் பயன்படுத்துவதில் ஏற்படும் அயர்ச்சியைப் பிரதிபலிக்க முயன்றுள்ளேன்.

"உலகினை அழிக்க உபாயம் ஆகிவிடும்!"

"ஆகுமே!" என்று புனைந்திருந்தால் மற்ற ஈரசைச் சீர்களோடு ஒத்துப் போயிருக்கும்! ஆனால், "ஆகிவிடும்!" என்று புனையும்போது கேட்கும் எச்சரிக்கை, ’ஆகுமே’ என்றால் ஒரு கையாலாகத்தனத்தையே காட்டுவதாக எனக்குப் பட்டதால் இப்படி அமைத்துள்ளேன்.

பயனுள்ள உரையாடலை ஏற்படுத்தித் தந்ததற்கு நன்றிகள் பல.

*****
 
09. உண்டு இல்லை எனப் பண்ணுவோம்!
ரமணி, 19/08/2012

உண்டு என்பது உண்மை ஆயின்
இல்லை என்பது மாயை ஆகும்.

உண்மை என்பது ஒன்றே யாகில்
மாயை என்றது பலவே யாகும்.

ஒன்றே என்பது உள்ளே உறைவது
பலவே என்றது வெளியே தெரிவது.

உள்ளே உறைவதைப் புலன்கள் அறியா
வெளியே தெரிவதே புலன்கள் அறிவது.

புலன்களின் பின்னால் உள்ளது மனமே
மனதின் செயல்வகை புத்தியால் சிறக்கும்.

புத்தியால் ஒடுங்கும் தானெனும் அகந்தை
அகந்தை ஒடுங்கினால் ஆத்மா தெரியும்.

ஆத்மா தெரிந்திட ஞானம் பிறக்கும்
ஞானம் நிலைபெற மனமும் வசப்படும்.

மனம்வசப் பட்டால் புலன்கள் ஒடுங்கி
ஒருங்கித் தெரியும் உள்ளே உறைவது.

உள்ளே உறைவதன் தரிசனம் கிடைத்தால்
பலவகை உலகின் மாயை விலகும்.

மாயை விலகிட எல்லை இல்லா
ஆத்மா ஒன்றே என்பது தெரியும்.

ஒன்றின் உண்மை தெரியத் தெரிய
நான்நீ இவையெனும் பேதங்கள் குறையும்.

பலவகை பேதங்கள் குறையக் குறைய
மனதின் எல்லை வானாய் விரியும்.

வானாய் விரிய உயிரொளி பெருகும்
சச்சிதா னந்த உண்மை விளங்கும்!

*****
 
Last edited:
ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றம் ஆறுதல் தருகிறது. உங்கள் இருவருக்கும் நன்றி.
 
10. போகதது போக...
ரமணி, 20/08/2012

கேட்காதது கேட்டுவிட்டுத் தோன்றாதது தோன்றிவிட
படிக்காதது படித்திருந்து உணராதது உணர்வில்வர
தெரியாதது தெரிந்துகொண்டு முயலாதது முனைந்துபார்த்துக்
காணாதது கண்டுவிட வேண்டாதது வேண்டிக்கொண்டு
போகாதது போவதற்குப் பெருமுயற்சி செய்கின்றேன்!

*****
 
11. கடவுளிடம்...
ரமணி, 21/08/2012

கடவுளிடம் கேட்பது தவறா? என்றான் சிஷ்யன்.
கேட்பதைவிடத் தருவதைப் பெறுவது மேலென்றார் அவன்குரு.
அதுசரி, ஆனால் ஏனிப்படி? என்றான் சிஷ்யன்.

குழந்தை தின்பண்டம் தானே எடுத்துக் கொண்டால்
அதனிரு கைகள் சேர்ந்தாலும் குறைவே ஆகும்.
அதுவே அம்மா கொடுத்தால் அதிகம் ஆகாதோ
யோசித்துப் பார்சிஷ்யா யாசிக்கும் போது என்றார்குரு.

*****
 
12. மௌனம்
ரமணி, 22/08/2012

கண்களை மூடக்கற்றேன் பார்ப்பது நோக்கா திருக்க.
செவிகளை மூடக்கற்றேன் கேட்பது தைக்கா திருக்க.
வாயினை மூடக்கற்றேன் அடிக்கடி உண்ணா திருக்க.
நாவினை கட்டக்கற்றேன் நினைத்தது பேசா திருக்க.
மனதினை அடக்கிமௌனம் கூடிட என்று கற்பேன்?

*****
 
13. பேரும் புகழும்
ரமணி, 23/08/2012

எத்தகு மனிதன் வாழ்வில்
பெருமையும் புகழும் பெறுவான்?
குருவிடம் கேட்டான் சிஷ்யன்.

கேள்வியே தவறு சிஷ்யா!
எத்தகு வாழ்வில் மனிதன்
பெருமையும் புகழும் பெறுவான்?

நாடகம் ஒன்று நடப்பதாக
நினைவிற் கொள்வோம் சிஷ்யா
என்றார் அவனது ஆசான்.

அரசன் வேடத்தில் ஒருவன்
அறிஞன் வேடத்தில் ஒருவன்
வறியவன் வேடத்தில் ஒருவன்.

பெருமை யாருக்கு இவர்களில்?
நடிப்பில் சிறப்பவ னுக்கே!
நன்றாய்ச் சொன்னாய் சிஷ்யா!

வாழ்க்கை நாடகம் போல
ஒவ்வொரு மனிதனும் நடிகன்
வேடம் முக்கியம் அல்ல.

அறம்தரும் நெறிகளைக் கொண்டு
அகிம்சை வழியே நடந்து
ஆணவம் எல்லாம் துறந்து

தானொரு நடிகன் ஆயினும்
தானும் அவனும் வேறெனும்
தத்துவம் அறிந்து கொண்டு

ஒருவன் வாழ்வில் நடித்தால்
பேரும் புகழும் அவனுக்கே
என்று முடித்தார் ஆசான்.

*****
 
saidevo சார்,

நீங்கள் எழுதும் கவிதைகள் உங்கள் அறிவுத்திறனைக் காட்டுகிறது.
உங்கள் கவிதைகளுக்கு "முயற்சிகள்" என்று தலைப்பிட்டிருப்பது உங்கள் அடக்கத்தைக் காட்டுகிறது.

நான் பிறப்பால் தமிழனில்லை. (நான் 'காரு' என்பதாலோ என்னவோ skraju சார் கூட என் 'கவிதை'? குறித்து கருத்து தெரிவிப்பதில்லை போலும்.).:noidea:

நான் உங்களைவிட எல்லா விதத்திலும் சிறியவன். இருந்தும் உங்கள் கவிதை பற்றி கருத்து சொல்ல ஆசைப்படுகிறேன். ஒருவன் வாழ்வில் நடித்தால் பேரும் புகழும் அவனுக்கே என்ற உங்களுடைய கருத்து எனக்கு சற்றும் உடன்பாடில்லை.

வாழ்வில் நாம் நாமாக இருப்பதில் தான் மகிழ்ச்சி மற்றும் மன நிறைவு என்று நான் கருதுகிறேன்.
 
வணக்கம் திரு. ஹரிதாச சிவா.

நிங்கள் உடன்படாதது எனக்கு உடன்பாடே! முன்பு நான் படித்த சின்னச்சின்ன ஆன்மீகக் கதைகளைக் கவிதை வடிவில் தர முயல்கிறேன், என் கருத்துக்களுக்கு அங்கு முக்கியத்துவம் அளிக்காமல்.

வாழ்க்கையே நாடகம் எனும்போது, இயல்பாக இருப்பதுகூட நடிப்பில் சேர்த்தியாகாதோ? வண்ணவண்ண மனிதர்கள் வேறுவேறு குணவிகிதங்களில் அமைந்து விதவிதமாக வாழ்க்கை எனும் நாடகத்தை உண்மை எனக் கருதி வாழும்போது, இயல்பாகவும் நடிக்கச் சிலர் தேவைபடுகிறார்களே இறைவன் லீலையில்!

உங்கள் தமிழைப் பார்க்கும்போது நீங்கள் ஒரு ’காரு’ என்று நம்புவது கடினமாக உள்ளது. உங்கள் கவிதைகளில் எனக்கு ’பங்காரு’வாகத் தோன்றியவற்றில் நான் விருப்பக்குறி இட்டுள்ளேன். மேலும் படிக்கும்போது மேலும் விரும்பலாம். கொஞ்சம் மரபு சேர்த்து எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து.
 
நண்பர் சாய்தேவ் அவர்களுக்கு,

நண்பர் சிவா கூறியது போல தங்கள் கவிதைகளில் இதுவரை தங்களுடைய அறிவுக்கூர்மை பளிச்செனத்தெரிகிறது. கொஞ்சம் அந்தப் பாரங்களை எல்லாம் இறக்கி வைத்துவிட்டு, எல்லாவற்றையும் விட்டுத்தொலைத்துவிட்டு கீழே இறங்கி வாருங்களேன். யானையைப்பார்த்து பசியையும் தன்னையும் மறந்து அதன் பின்னாலேயே போவேன் என்று அடம் பிடிக்கும் குழந்தை, கிராமத்து வயலில் முன்னும் பின்னும் மாடுகள் போய் வந்து கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கும் (எங்கள் ஊர் பக்கம் "கமலை" என்போம்) செயலைக் கண்கொட்டாமல் பார்த்திருந்து அதன் monotony யை பற்றி சற்றும் அலுத்துக்கொள்ளாமல் வீட்டுக்குப்போக மாட்டேன் என்று அடம்பிடித்து நின்று ரசித்துக்கொண்டே இருக்கும் சின்னப்பையன் இவர்களின் மனநிலைக்கு இறங்கி வந்து காண்பவற்றிலெல்லாம் இருக்கும் எளிமையையும் அதன் அழகையும் மட்டுமே (அவலங்களை முற்றிலும் மறந்து) கை கொட்டி ரசித்து ஆஹா என்ன அழகு என்ன அழகு என்று மகிழ்ந்து கொஞ்சம் எழுதுங்களேன். உங்களுக்கு கவிதை எழுதுவது கை கூடி வருவதால் இந்த வேண்டுகோள். முயன்று பாருங்களேன்.

வாழ்த்துக்கள்.
 
நண்பர் சிவா அவர்களுக்கு,

நான் பிறப்பால் தமிழனில்லை. (நான் 'காரு' என்பதாலோ என்னவோ skraju சார் கூட என் 'கவிதை'? குறித்து கருத்து தெரிவிப்பதில்லை போலும்.)
.

இந்த தமிழ் நாட்டில் நான் கூடத்தான் ஒரு "கூட்டத்துக்கு" தமிழனில்லை. வடக்கே இருந்து கைபர் கணவாய் வழி வந்த கும்பலை சேர்ந்தவன். நீங்கள் பதிவொடு பதிவாக எனக்கு ஒரு கொட்டு கொடுத்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு காரு என்பதே இப்போது நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியும். நான் நேரக்குறைவு காரணமாக பெரும்பாலான பதிவுகளை படிப்பதில்லை. அது தான் உங்களது பதிவுகளைப்பற்றி நான் எதுவும் எழுதாதற்குக்காரணம். இனி முயல்வேன்.
 
saidevo sir:
Shakespeare -ன் கருத்தைப் பிரதிபலிப்பது போல் உள்ளது.
நான் நானாகவே இருக்க முயல்கிறேன் (அதனால் அவஸ்தையும் படுகிறேன்!)


skraju sir:
உங்களுக்கு நான் குட்டு கொடுப்பதா? இல்லவே இல்லை.
உங்கள் பதிவு ஆறுதல் அளிக்கிறது. உங்கள் விமரிசனத்தை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
 
நண்பர் ராஜு.

உங்கள் அஞ்சல் (14) எனக்கு ஒரு புதிய தெம்பினைத் தருகிறது. நீங்கள் முன்வைக்கும் அவலம் நோக்காத அழகையும் எளிமையும் பற்றி எழுத எனக்கு இதுவரை ஒரு பெரிய திரை தேவைப்பட்டதால் நான் எழுதிய ஒரு ரொமான்டிக் நாவலில் அவற்றை முயன்றுள்ளேன். என் குறுநாவல் சில நாட்களில் முடிந்ததும் அந்த நாவலைத் தவணைமுறையில் அஞ்சலிடுகிறேன், அவசியம் படித்துக் கருத்துச் சொல்லவும்.

கவிதை போன்ற பாக்கெட் தாள் திரையில் நான் எழுதிட முனைவது கடந்த சில நாட்களாகத்தான். நீங்கள் சொல்வதுபோல் எனக்கு மரபின் அணியில் எளிமையாகக் கவிதை எழுத வருவதால், கூடிய சீக்கிரம் இந்த சப்ஜெக்ட்டில் முயற்ச்சி செய்கிறேன். நன்றி பல.

பின்குறிப்பு: இலக்கியம், கவிதை பற்றி இவ்வளவு அறிந்துள்ள நீங்கள் ஏன் கவிதை புனைய முயலக்கூடாது? உங்கள் கிராம வாழ்க்கை அனுபவங்கள் கைகொடுக்குமே?
 
கவிதை போன்ற பாக்கெட் தாள் திரையில் நான் எழுதிட முனைவது கடந்த சில நாட்களாகத்தான். நீங்கள் சொல்வதுபோல் எனக்கு மரபின் அணியில் எளிமையாகக் கவிதை எழுத வருவதால், கூடிய சீக்கிரம் இந்த சப்ஜெக்ட்டில் முயற்ச்சி செய்கிறேன். நன்றி பல.

நண்பரே! என் கருத்தைக் கூறட்டுமா?

பெரிய திரையில் எழுதப்படும் விஷயத்தில் படிப்பவரின் participation மிகக்குறைவு தான். எழுதுபவர் விஷயத்தை விஸ்த்தாரமாக எழுதிவிடும் போது படிப்பவர் படித்து உடன் வியந்து போவதும், மகிழ்ந்து போவதும் நடந்து முடிந்து விடுகின்றன. ஆனால் கவிதையில் ஒவ்வொரு வரியும் அதன் பின்னால் விரிந்து கிடக்கும் ஒரு சாம்ராஜ்யத்தின் திறவுகோல். திறவுகோல் கையில் கிடைத்தவுடன் வாசிப்பவரின் மனம் எதிர்பார்ப்புகளுடன் அந்த சாம்ராஜ்யத்தினுள் நுழைகிறது. எத்தனை எத்தனையோ கோணங்களில் இருந்தெல்லாம் விஷயத்தை அனுபவிக்கிறது. இவ்வளவு உயர்ந்த கவிதை வடிவை விட்டுவிட்டு உரைநடையில் எல்லா விஷயங்களையுமே எழுதுவது ‘ஏரார் முயலிருக்கக் காக்கைப்பின் போவது போல்’ (thanks to Thirumangai Alwar) அல்லவா? எனவே நீங்கள் உரைநடையில் எழுத வேண்டிய விஷயங்கள் இன்னின்ன என்று தீர்மானித்து அவற்றை உரைநடையிலேயே எழுதுங்கள். கவிதையில் சொல்வதற்கென்று சில விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றைக்கவிதை வடிவிலேயே சொல்லுங்கள்.

நீங்கள் ஏன் கவிதை புனைய முயலக்கூடாது?

இந்தக்கேள்விக்கு பதில் சொல்வது சற்று கடினமானது. இப்படி வேண்டுமானால் சொல்லலாம். நானும் ஒரு காலத்தில் கவிதைகள் எழுதியதுண்டு. நான் கடந்து வந்துவிட்ட பாதையின் ஆரம்ப மைல் கற்களில் அவை செதுக்கப்பட்டுள்ளன. எதோ ஒரு உந்துதலில் எழுதப்பட்டவை அவை. பல வரகவிகளின்/ஆசுகவிகளின் சிறந்த கவிதைகளைப்படித்து அனுபவித்தபின் அவை(அந்த என் கவிதைகள்) ஒரு சிறுமி அப்பா சட்டையைப் போட்டுக்கொண்டு கண்ணாடி முன் நின்று அழகு பார்த்த வேடிக்கையை நினைவு படுத்துகின்றன. In a lighter vein- சுப்புடுக்கள் கச்சேரி செய்யக்கூடாது. செய்வதில்லை.

வாழ்த்துக்கள். .
 
ஸ்ரீசாயிதேவோ,
இந்த நான்கு புலனகளை கட்டி ஆண்டளே போதுமமே மனம் தன்னால் அடங்கி விடுமே.... கவிதை அற்புதம்!! உங்கள் எழுத்தும் மிகவும் அற்புதம்.......

 
14. ஒரு கணினி யந்திரப்புலவரின் விஞ்ஞானப் புலம்பல்
ரமணி, 25/08/2012

பள்ளியின் பயிற்சியில் கல்லூரியின் கலகலப்பில்
நினைத்ததெல்லாம் முனைந்ததெல்லாம் முடிவது எக்காலம்?

தமிழில் நினைத்ததும் தமிழில் முயன்றதும்
இன்றுசெய்யப் பொழுதுகள் கிடைப்பது எக்காலம்?

’பொன்னியின் செல்வன்’போல் வரலாற்றுக் கதைகளை
மனம்வியந்து படித்திட முடிவது எக்காலம்?

சுஜாதாவின் படைப்புகள் தி.ஜா.வின்* சிறுகதைகள்
மீண்டும் படித்திட முடிவது எக்காலம்?

மாதமொரு ஆங்கில நாவல்வரும் இந்நாளில்
அதிகம் விற்பது படிப்பது எக்காலம்?

எல்லோரும் எளிதாக எழுதிடும் கவிதைகளை
நானும் முயன்று எழுதுவது எக்காலம்?

தென்னந் தோப்பில் கிரிக்கெட் போட்டிகளின்
இடைவெளியில் இளநீர் குடிப்பது எக்காலம்?

திருச்சிநகர் தெருக்களிலே நண்பர்கள் புடைசூழ
சுற்றிவந்து கண்ணோக்க முடிவது எக்காலம்?

காவேரிப் பாலத்தில் கதிரவன் மறையும்போது
தீட்டிய வண்ணங்களை ரசிப்பது எக்காலம்?

மென்பொரூள் துறையினிலே வாய்ப்புகள் அதிகமென்று
வண்ணங்கள் பறக்கத்தேறி வந்து மாட்டினேனே!

பொருளீட்ட ஊர்சுற்ற வெளிநாடு போகவர
அனைவரும்போல் ஆசைப்படப் பொறியில் விழுந்தேனே!

வாழ்வியல் ஆசைகள் தேவைகளாய் மாறிவந்து
நுண்கலை ஆசைகளை வெல்லுமென நினைக்கவில்லை!

பொம்மைகளின் தொழில்சார்ந்த நட்புறவில், விருந்துகளில்,
விருதுகளில், நானுமொரு கைப்பாவை யானேனே!

ஆட்டுவித்தார் ஆட்டியபடி ஆடிடும் ஆட்டத்தில்
இரவுபகல் மாறிவிட உணவுகள் கூளமானதே!

இயற்கை அழகினை, பொதுமனிதர் இயல்பினை
அனுபவிக்க வழியின்றி ஆடுகிறேன், ஓடுகிறேன்!

பள்ளி நாட்களில் கணினியின் கவர்ச்சியில்
லெம்மிங்ஸ்* ஆடியது நனவாகிப் போனதே!

ஒருவர் வழிகாட்டலை மற்றவர்கள் சார்ந்திருந்து
ஆடுகள்போல் தொடர்ந்து வினைகள் ஆற்றினோமே!

வினைகளின் விலைகளை விளைவுகளை ஏற்றுக்கொண்டு
உயர்ந்தும் தாழ்ந்தும் வீழ்ந்தும் வெடித்தோமே!

இத்தகைய இயந்திர வாழ்க்கையின் கட்டுகளை
உடைத்து வெளிப்படுவது எக்காலம், எக்காலம்?

அப்படி வெளிவந்து முந்தைய தலைமுறைபோல்
வாழ்வின் அர்த்தங்களை அலசுவது எந்நாளோ?

அந்நாள் என்வாழ்வில் வாராது போகுமோ?
நானுமந்த லெம்மிங்போல் வீழ்ந்து மறைவேனோ?

குறிப்பு:
தி.ஜா.--தி.ஜானகிராமன், பிரபல எழுத்தாளர், ’மோகமுள்’ நாவலாசிரியர்
லெம்மிங் மின்விளையாட்டு பற்றி அறிந்திட:
Lemmings (video game) - Wikipedia, the free encyclopedia

*****
 
15. இறைவன் அருள்
ரமணி, 28/08/2012

மன்னனின் ஏவலன் ஒருவன் எப்போதும்
இறைவன் அருளே எல்லாம் என்று
ஒவ்வொரு வேலை செய்யும் போதும்
முணுமுணுத்த வாறே இருந்தான்.

எரிச்சல் அடைந்த மன்னன் அவனைக்
கடிந்து கொண்ட போதும் ஏவலன்
அந்தச் சொற்கள் முணுமுணுப் பதனை
சிந்தைகலந்து செய்து வந்தான்.

ஒருநாள் ஏவலன் ஓய்வில் தன்னூர்
சென்று திரும்பிய போது மன்னன்
தோப்பில் பார்த்த திராட்சைப் பழங்கள்
கொணர்ந்து தந்தான் வணங்கி.

மன்னன் பழங்களைத் தின்னாது அவன்மேல்
ஒவ்வொன் றாக எறிந்து விளையாடினான்.
ஏவலன் தன்மேல் விழுந்த அடிகளை
ஏற்று நின்றான் அசையாமல்.

கடைசிப் பழத்தை எறிந்து விட்டு
மன்னன் கேட்டான் சிரித்துக் கொண்டு:
அடிகள் வாங்கிய இந்தச் சமயம்
எங்கே போனதுன் இறையருள்?

ஏவலன் சொன்னான் பதிலாக: மன்னா!
இறைவன் அருளால் அன்றோ இப்போது
எல்லாம் முடிந்தது நன்மை யாக.
மன்னன் முகத்தில் வியப்பு!

மன்னா, உங்கள் தோப்பில் கண்ட
பழுத்த விளாமரக் கனிகளை நானும்
கொண்டு வந்து கொடுத்திருந்தால் இங்கு
என்னவாகி யிருக்கும் எனக்கு?

மன்னன் அவனது தருணம் உதவும்
புத்தியும் பக்தியும் போற்றிப் பரிசளித்து
அனுப்பி விட்டுத் தன்னுள் விதையொன்று
விழுந்திடக் கண்டு வியந்தான்.

*****
 
தன்னுள் விதையொன்று
விழுந்திடக் கண்டு வியந்தான்.
Beautiful saidevo Sir. The final punch of the poem brought out beatifully. Thanks & cheers.
 
16. உறவாடும் படிமக் குறிகள் (Icons)
ரமணி, 29/08/2012

காலையில் கண்விழித்து ஜன்னல் வழியே
நோக்கிடும் போது நினைவில் வருவது
கணினியை இயக்கும் உயிர்மென் பொருளாம்
மைக்ரோ ஸாஃப்டின் ’விண்டோஸ்’ தானே!

காலையில் பருகும் காப்பிக் காக
சாப்பாட்டு மேசையில் அமரும் போது
நினவில் வருவது ஆரகிள் கம்பெனி
மென்பொருள்-யாப்பொருள் ’ஜாவா’ தானே!

இதுபோல் பொருட்கள் நோக்கும் போது
கண்ணனும் எனக்கு நினைவில் வந்தால்
கொஞ்சம் என்னுள் பாரதி தோன்றி
ஏற்றம் பெற்று இருந்திடு வேனே!

ஐகான் என்று ஆங்கிலம் கூறும்
எத்தனை எத்தனை படிமக் குறிகள்
எதிர்ப்படு கிறதுநம் வாழ்வில் என்று
ஒருகணம் நின்று எண்ணியது உண்டோ?

உண்மையின் முகமென வந்திடும் மாய
ஹீரோ க்ளிஃபிக்ஸ் குறிகள் என்னை
உடாடிப் பரிகசித்து ஆள்வது கண்டேன்
நண்பன், அறிஞன், ஆசான் ஆக.

பார்த்ததும் புரிந்திடும் யாவரும் அறிந்திடும்
புகழ்மிகு படிக்குறி எதுவெனக் கேட்டால்
கழிப்பறைச் சுவர்களில் பளிச்செனத் தென்படும்
ஆண்-பெண் படிக்குறி தானெனச் சொல்வேன்!

ஒருபடம் வரைவது ஆயிரம் சொல்வது
என்னும் பழமொழி உண்மை போல
படிக்குறி வரைவது படங்கள் ஆயிரம்
வரைவது போல என்று சொல்லலாம்!

எங்கும் படிக்குறி! சாலைக் குறிகள்,
பெட்ரோல் விற்பனை, பேருந்து நிறுத்தம்,
ரயிலடி, கடைகள், அலுவல கங்கள்---
என்மின் அஞ்சலில் சலனப் படிக்குறி!

படிக்குறி நம்மை ஆக்கிர மித்துநம்
வாழ்-வினை மாற்றும்! நடத்தல் பேசுதல்
எழுதுதல் எல்லாம் படிக்குறி விரவிட
தினசரி வாழ்வில் சுழலும் தொழில்நுட்பம்!

மொழியின் எழுத்துகள் ஒலிகள் மறைந்து
படிக்குறி அவற்றின் சொற்பொருள் ஆகி
மொழியே கைசெய் சைகைகள் ஆகி
எகிப்தியர் காலம் மீண்டும் வருமோ?...

படிமங்கள் இறைமையின் படிக்குறிகள் ஆகிநம்
ஹிந்துமத வாழ்வில் இணைந்து இன்றைய
படிக்குறி போல எங்கும் அமர்ந்து
வாழ்வின் அறத்தை ஞாபகப் படுத்தும்.

அபரிமிதப் படிக்குறிகள் தினவாழ்வில் நிறைந்துநின்று
சட்டமும் வடிவமும் இரவினில் ஒளிர்ந்திடும்
வண்ணமும் பெற்றிட நாமதன் வழிபட்டு
வாழ்வில் வளமும் நெறியும் சேர்த்திட---

பீடம் ரூபம் படைக்கலம் முத்திரை
தாங்கி அருளும் இறைப்படி மங்களை
வாழ்வில் வளம்நெறி சேர்க்க வழிபடும்
மக்களைப் பழிப்பதென் மூர்க்கம் அன்றோ?

*****
 
Last edited:
Reference Saidevo's post #24:

கவிதை வடிவமே ஒரு படிக்குறி தானே நண்பரே! ஒரு காலத்தில் மனதின்/ மொழிகளின் இந்த linear mode of thought construction & communication ஆல் சலிப்படைந்து நான்கே எழுத்துக்களில் ஒரு பக்க விஷயத்தைக் கூறிவிட வழியொன்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வியந்து புலம்பியதுண்டு. Cantonese/Chinese மொழியில் எழுத்துக்களெல்லாமே pictograph தான் எனவே அது உன் பிரச்சினைக்கு ஒரு தீர்வாகலாம் என நண்பன் ஒருவன் கூற, சில நாட்கள் அதன் பின்னே நடந்து ஏமாந்ததுண்டு. தேடித் தேடி அலைந்து ஏமாந்து, நொந்து, புலம்பி பின் சும்மா இருப்பதே சுகம் என்று இருப்பவன் நான். It all boils down to a ‘given situation’ and we can do very little about it.

Cheers.
 
Status
Not open for further replies.

Latest ads

  • For rent 2BHK APT WANTED.
    2BHK APT wanted.
    • rckappu (+0 /0 /-0)
    • Updated:
  • Wanted Chanting class.
    Sloka chanting teacher wanted.
    • rckappu (+0 /0 /-0)
    • Updated:
  • Announcement Hobby Classes.
    Hobby art classes are conducted by an experienced senior lady for high school children and adult...
    • rckappu (+0 /0 /-0)
    • Updated:
  • Wanted Shan
    Required female Brahmin cook to prepare lunch and dinner for 2 people
    • Bsmugan (+0 /0 /-0)
    • Updated:
    • Expires
  • For rent Shanmuganathan
    3BHK INDEPENDENT HOUSE IN NEELANKARI
    • Bsmugan (+0 /0 /-0)
    • Updated:
    • Expires
Back
Top