• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என் கவிதை முயற்சிகள்

Status
Not open for further replies.
அகிலாண்டேஸ்வரி பஞ்சகம்

(சமஸ்கிருதம்: ஸ்ரக்விணீ வாய்பாடு: குரு-லகு-குரு x 4
ஆதி சங்கரர்: அச்யுதம் கேசவம் ராமநா ராயணம்
தமிழ் வாய்பாடு: ஐந்து மாத்திரைக் கூவிளம் நான்கு கொண்ட அடிகள்)

ஆற்றுநீர் லிங்கமா யாக்கியே நாதனைப்
போற்றியே சேர்ந்தனை பின்னுமேன் உக்கிரம்?
காற்றினை யுண்டுநீ காதலே மேவிவெண்
ணீற்றனை நோக்கியே நீள்தவம் செய்தனை! ... 1

நேற்றவர் சங்கரர் நின்செவித் தோடுகள்
ஏற்றியுன் உக்கிரம் எஞ்சிடச் செய்தனர் ... ... [எஞ்சிட = குறைய]
ஊற்றெனும் இன்பமாய் உன்னருள் கொள்ளவே
சாற்றினர் ஐங்கரன் சன்னிதி உன்முனே. ... 2

முன்னொரு பிள்ளையாய் மும்மதன் சன்னிதி
பின்னொரு பாவகி பிள்ளையாம் சன்னிதி ... ... [பாவகி = அக்கினியில் உதித்தோன்: முருகக் கடவுள்]
இன்னொரு பிள்ளைநான் இன்னலே துய்ப்பதை
இன்னும்நீ காண்கிலை என்னநான் செய்வதோ? ... 3

வின்னமே மேவினேன் வீண்செயல் மேவினேன்
புன்மையே மேவினேன் பொய்யுரு மேவினேன்
இன்னலே பின்னுறும் இன்பமே தேடினேன்
அன்னைநீ வந்தெனை யாட்கொளும் நாளெதோ? ... 4

அன்னைநீ அப்பனாய் ஆரணன் காத்தனை ... ... [ஆரணன் = பிரம்மன்]
உன்னருள் மேகமே உத்தமப் பாவலன் ... ... [கவி காளமேகம்]
அன்னையாய் அர்ச்சகர் அத்தனைப் போற்றுவர் ... ... [திருவானைக்கா உச்சிக்கால பூசனை]
உன்னைநான் வேண்டினேன் உன்னதம் சேரவே. ... 5

--ரமணி, 22/11/2014, கலி.06/08/5115

குறிப்பு:
அகிலாண்டேஸ்வரி பற்றி இணையத்தில்:
Jambukeswarar Temple : Jambukeswarar Jambukeswarar Temple Details | Jambukeswarar - Thiruvanaikaval | Tamilnadu Temple | ?????????????
???????: ??????????? ??????? ????? ??????????????
????????????? ?????????????? ???????????? | Welcome to BHAKTHIPLANET.COM

சிவசிவாவின் பதிகம்:
https://groups.google.com/forum/#!topic/santhavasantham/d4d3fHtwMPE[1-25-false]

*****
 
நகர்ப்புற தோட்டக்கலை
(ஏந்திசைத் தூங்கலோசை வஞ்சிப்பா)

இணைய முகவரி
https://tnhorticulture.tn.gov.in/horti/do-it-yourself-kit

தோட்டக்கலை பயில்வதற்கென
நாட்டத்துடன் விலாசத்தைக்
கேட்டறிந்துநான் அரசுபண்ணை
வீட்டுக்கென வெளிச்சூழலில்
வெயில்படுகிற திறந்தவெளி
வியன்கூரையாம் சிகரமாடி
வைப்பதெற்கெனத் தொகுதிகளாய்
கைப்பைகளில் பலவிதத்தில்
உரவகைகள் விதைவகைகள்
தரமெனவே விலக்குவாங்கி
தென்னையில்விளை துகள்நாரே
மண்ணெனவரும் நெகிழிப்பை
இருபதெனவே விலைகொடுத்தேன்
உரமிட்டவை தயார்செய்தோம்
அந்தோ!
அன்றே வந்த அடைமழையால்
இன்னும் கனவாய் எங்கள் தோட்டமே!

--ரமணி, 29/11/2014

*****
 
கடற்கரைக் கணங்கள்
(அகவற் றூங்கலோசைக் குறளடி வஞ்சிப்பா)

உடற்பயிற்சியில் கால்நடையாய்க்
கடற்கரைக்குநான் காற்றுவாங்க
அன்றொருதினம் மாலையிலே
சென்றபொழுதில் என்னுள்ளக்
களிதுள்ளவே குழந்தைகளும்
ஒளிர்விழியுடன் பாவையரும்
வயதானவர் ஓய்வெடுப்பும்
அயராதவர் ஓடுவதும்
மீனவர்வலைக் காற்றலைவும்
வானுறும்பல வண்ணங்களும்
எங்கோவொரு ஆலயத்தின்
மங்கலமணி ஓசையும்வரும்
சூழ்நிலையில்
என்னை இழந்த கணங்கள்
என்றும் பசுமை என்மனந் தனிலே!

--ரமணி, 29/11/2014, கலி.13/08/5115

*****
 
கடற்கரைக் கணங்கள்
(அகவற் றூங்கலோசைக் குறளடி வஞ்சிப்பா)

உடற்பயிற்சியில் கால்நடையாய்க்
கடற்கரைக்குநான் காற்றுவாங்க
அன்றொருதினம் மாலையிலே
சென்றபொழுதில் என்னுள்ளக்
களிதுள்ளவே குழந்தைகளும்
ஒளிர்விழியுடன் பாவையரும்
வயதானவர் ஓய்வெடுப்பும்
அயராதவர் ஓடுவதும்
மீனவர்வலைக் காற்றலைவும்
வானுறும்பல வண்ணங்களும்
எங்கோவொரு ஆலயத்தின்
மங்கலமணி ஓசையும்வரும்
சூழ்நிலையில்
என்னை இழந்த கணங்கள்
என்றும் பசுமை என்மனந் தனிலே!

--ரமணி, 29/11/2014, கலி.13/08/5115

*****

dear Sri Ramani,

honestly i I was looking for reference to those practising laughter therapy there. That would have added a punch to the kavithai.
 
பிரதோஷ நாயகன் கும்மி - 2
(கும்மிப் பாடல்)

ஆதவன் மேற்றிசை ஆழ்ந்திடும் போதிலே
. ஆயிரம் வண்ணங்கள் வானமுறும்
நாதனும் அப்போது நந்தியின் கொம்பிடை
. நாட்டியம் ஆடிட கானமெழும்
வேதமொ லித்திடத் தேவாரப் பண்ணிசை
. விண்ணிலும் மண்ணிலும் ஆர்த்திடவே
காதினிற் கேட்டுமே கண்ணாரக் கண்டுமே
. காதலே மேலிடக் கும்மியடி! ... 1

மாலவன் மத்தளம் மால்மகன் தாளமும்
. வாணியின் வீணையும் பக்கமுற
சூலிகா ணக்குழல் இந்திரன் ஊதிடச்
. சூலஞ்சு ழற்றியே செஞ்சடையன்
மாலையும் வந்திட மோனம்க விந்திட
. மானிடர் உள்ளத்தில் இன்புறவே
ஆலங்கொள் நாதன லைமகள் பாடவே
. ஆனந்தத் தாண்டவம் ஆடினனே! ... 2

பாலபி ஷேகமும் தேனபி ஷேகமும்
. பன்னீ ரிளநீரும் சந்தனமும்
மேல்விழக் காணவே மின்னலின் வீச்சென
. மேல்வினை யும்பட்டுப் போய்விடுமே
காலனு தைத்தவன் காலடி பற்றிட
. காலமெ லாமினி நிம்மதியே
ஓலம னத்தினில் ஒன்றெனும் ஞானமே
. உள்ளூற வேண்டியே கும்மியடி! ... 3

[மேல்வினை = ஆகாமிய கர்மா; இனிவரக்கூடிய வினை]

--ரமணி, 02-04/12/2014, கலி.18/08/5115

*****
 
வணக்கம் வாக்மி அவர்களே!

'பஞ்ச்' தானே கேட்டீர்! அதற்கென்ன,இறுதி வரிகள் இரண்டை மாற்றினால் ஆச்சு!

ஈட்டிக் காரன் கண்படவே
'போட்'டின் பின்னே மறைந்தேனே!

ரமணி


dear Sri Ramani,

honestly i I was looking for reference to those practising laughter therapy there. That would have added a punch to the kavithai.
 
கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்து
(கும்மிப் பாடல்)

வானைய ளாவியே பூமியில் ஆழ்ந்திடும்
. வன்னெடுஞ் சோதியாய் அண்ணலெழ
ஏனென்று மாலயன் தாள்முடி தேடியே
. ஏதும்கா ணாதருள் பெற்றதினம்
ஊனையு ருக்கியே உள்ளொளி தந்திட
. ஊரெங்கும் தீபத்தை யேற்றிவைப்பேம்
கானமும் பாடியே கைத்தாளம் கொட்டியே
. கால்நடம் செய்யவே கும்மியடி! ... 1

கார்த்திகை மாதரும் பாவகி யாய்வந்த
. கந்த னுருவாறும் பேணிடவே
பார்வதி கண்ணுற்றே ஆறுமு கத்தையோர்
. பாலனாய் சேர்த்தன்னை யானதினம்
ஆரியை சக்தியாய் ஆர்த்தெரு மைத்தலை
. தானவ னைக்கொன்று காத்திடவே
ஆரணன் அன்னையைத் தன்னுடல் சேர்த்தவன்
. அர்த்தநா ரீசனாய் ஆனதினம்! ... 2

குத்துவி ளக்ககல் தீபங்கள் வீடெங்கும்
. கூர்ச்சுடர் வீசவே ஏற்றிவைப்போம்
நத்திந மக்கினி மைதரும் பண்டங்கள்
. நைவேத்தி யம்செய்தே உண்டிடுவோம்
இத்தரை மீதுயிர் யாவையும் நற்கதி
. இவ்வொளி யில்பெற்று வாழநாமும்
சித்த மொளிபெற்றே சின்னத்த னம்விட்டுச்
. சின்மயம் காணவே கும்மியடி! ... 3

--ரமணி, 05/12/2014, கலி.19/08/5115

Deepam Legends
A R U N A C H A L A S A M U D R A - Karthigai - Narratives - Deepam Legends
Significance of Karthigai Deepam

*****
 
வாசுதேவ குடும்பம்
(ஆனந்தக் களிப்பு: ’நந்தவனத்திலோர் ஆண்டி’ மெட்டு)

மாதவ நீரோர்சம் சாரி - உமது
. மாயயையில் சொந்தம ணைத்தீரே வாரி!
வேதனை யேதுண்டோ சொல்வீர் - தேவர்
. மேதகு மூத்தவ ராய்நீரும் செல்வீர்! ... 1

பாற்கடல் செல்வியைக் கொண்டீர் - அவள்-உம்
. பாரியை யாகவே பக்கத்தில் மண்ட!
வேர்க்கடலை யென்றேம றைந்தீர் - நீரும்
. வெண்ணீற்றன் தாள்காண பூமிய கழ்ந்தே! ... 2

தொப்புள் கொடிவளர் பிள்ளை - அவன்
. தோழனாய்ப் போனதில் உண்டோவோர் தொல்லை?
அப்பனும் அம்மையும் காணாதே - அவன்
. ஆக்கிய பெண்ணவன் தாரமாய் யானாளே! ... 3

சிவனுக்குத் தந்தீர்-உம் தங்கை - அந்தச்
. சினமேறும் மூச்சிலோ வூதினீர் சங்கை!
எவனுக்கும் உம்பாடு வேண்டாம் - பிள்ளை
. எய்தும னைத்துமே காத்திட வேண்டும்! ... 4

மாமியா ராச்சேயும் தேவி - அவள்
. வாணியின் வாக்கினைக் கொள்வாளோ மேவி?
தாமொரு நாத்தனா ரென்றே - தங்கை
. தானத்தைக் காத்தாலோ கொள்வீரோ நன்றே? ... 5

சிவனைச்சி னந்தேகிக் கந்தன் - ஒரு
. சின்னம லையினில் ஏறியே நின்றான்!
அவனுக்கா உம்பெண்ணைத் தந்தீர்! - அதுவும்
. ஐயகோ ஒன்றுக்கி ரண்டாக வென்றான்! ... 6

கரிமுகன் உம்-ஆழி கொய்ய - தோப்புக்
. கரணங்கள் போட்டவன் துப்பிடச் செய்தீர்!
பரிமுகம் சிம்மமும் கூர்மமும் - இன்னும்
. பன்றியு மென்றவ தாரம்பன் முகமே! ... 7

ராமனாய் ஓர்தாரம் கொண்டீர் - ஆயின்
. ரம்மியக் கண்ணனோ ஆயிரம் கொண்டான்!
வாமன ரூபமும் கொண்டீர் - உமது
. வாயினில் அண்டச ராச்சரம் கண்டோம்! ... 8

ஹரனோடு மோகினி யாய்க்கூடி - நீரும்
. ஹரிஹர புத்திர லீலையென் றாடி
ஹரிஹரன் வேறில்லை யென்றே - ஒரு
. அழகான தத்துவம் தந்தீரே அன்றே! ... 9

அம்பலத் தானோடு நீரும் - ஆடும்
. ஆட்டத்தில் யாவும டங்கியே சேரும்!
உம்பிள்ளை செய்லோகம் காப்பீர் - முடிவில்
. உம்மைத்து னன்னேழு லோகமும் தேய்ப்பான்! ... 10

சிற்றில்லைக் கட்டிச் சிதைக்கும் - மழலைச்
. சிற்றின்ப லீலையாய் மூவர்வி திக்கும்
பற்றற்ற வாழ்வொன்றே முக்தி - யென்று
. பற்றியெம் வாழ்வினில் செய்வோமே பக்தி! ... 11

(மாதவ நீர்பெரும் சம்..சா..ரீ!)

--ரமணி, 25-30/11/2014

*****
 
மலர்-மணம்: ஏகபாதம்

மலரில் மணமாய் உறுமே கவிதை
மலரில் மணமாய் உறுமே கவிதை
மலரில் மணமாய் உறுமே கவிதை
மலரில் மணமாய் உறுமே கவிதை

பொருள்
மலரினுள் தங்கும் மணமாகச் (சொல்லும் பொருளும்) சேர்ந்திருக்குமே கவிதை!
மலர் (கண்முன்னே) இல்லாது போனாலும் அதன் மணமாக (மனதில்) இருக்குமே கவிதை!
மலர் (அணிந்த) இல்லாளின் மணமாக (மரபின் மதிப்பாக) இருக்குமே கவிதை!
மலர் இல்லாத (மண்) வாசனையாக நிகழுமே மேக-விதை (மேகத்தின் மழைத்துளிகள்)!

--ரமணி, 14/12/2014

*****
 
பிரதோஷ நாயகன் கும்மி - 3
(கும்மிப் பாடல்)

நைந்துளை நாகந்தன் மேனிய தைத்திட
. நஞ்சினைக் கக்கந டுக்கமுற்றே
மைந்தழி வானவர் உள்ளம்ப தைத்தோடி
. மாதொரு பாகனை நாடினரே!
ஐந்தொழில் செய்தேழு லோகமும் ஆள்பவன்
. அன்னையுடன் சேர்ந்தே காத்தனனே
பைந்தமிழ்ப் பாவையுன் பாதச்ச லங்கையென்
. பாட்டிலொ லிக்கவே கும்மியடி!

செந்தமிழ்க் கந்தனின் தந்தையும் லிங்கமாய்
. சீரபி ஷேகங்கள் கொண்டிடவே
வந்தனை செய்வோர்தம் வல்வினை தீரவே
. மாதொரு பாகனை நாடுவரே
எந்தையி றைவனின் அஞ்செழுத் தோதுவோர்
. எல்லாந லன்களும் பெற்றிடவே
சிந்துவின் தாளமும் சந்தமும் சேர்ந்திட
. செந்தமிழ்ச் செல்வியே கும்மியடி!

இந்திர வில்வண்ணப் பூவலங் காரத்தில்
. இன்னிசை வேதப்பண் ணொசைவர
சந்திர சேகரன் நந்தியில் ஏறியே
. சங்கரி யோடுவ லம்வருவான்
சிந்தைய டங்கிடும் அந்திய மைதியில்
. செம்பொருள் வண்ணமே உள்ளமுற
சந்தவ சந்தத்தில் செங்கரம் தட்டியே
. சங்கத் தமிழ்பெண்ணே கும்மியடி!

--ரமணி, 19/12/2014, கலி.04/09/5115

*****
 
கிரிக்கெட் பைத்தியம்!
(ஆனந்தக் களிப்பு: ’நந்தவனத்திலோர் ஆண்டி’ மெட்டு)

பதினொன்மர் ஆடிடும் ஆட்டம் - அதைப்
. பார்த்தேக ளிக்கும ரங்கத்தின் கூட்டம்
அதுவாகா தென்றோரும் வீட்டில் - ஓர்
. ஆதுரத் தோடேதான் தொக்காமுன் ஸீட்டில்! ... 1

[ஆதுரம் = பரபரப்பு, அவா, நோய்; தொக்கா = தொ(லை)க்கா(ட்சி)]

காசினைச் சுண்டிடும் நேரம் - இவர்
. காத்தேவீ ணாக்கிடும் காலமாய்ச் சேரும்
நேசமும் கோபமு மாக - இவர்
நியாயங்கள் வாயேறும் சொற்களா யாகும்! ... 2

விடலையாய் மூத்தவர் சேர்ந்தே - இதை
. விட்டேனா பாரென்றே கைதட்டி ஆர்ந்தே
கடலைகொ ரித்தேதான் காணும் - அந்தக்
. காட்சியைக் கண்டாலோ கர்த்தவம் நாணும்! ... 3

[கர்த்தவம் = கழுதை]

சாப்பாட்டுத் தட்டைக்கை யேந்தி - இந்த
. சாகசம் காண்போரின் கண்களில் ஆந்தை!
கூப்பாடு போட்டாலோ ஆறு - அன்றிக்
. கோவென்ற ரற்றிடில் காதையோ வேறு! ... 4

மாதரும் இன்னாளில் சேர்ந்தார் - இந்த
. மட்டைய டிக்காட்சி நேரத்தில் ஊர்ந்தார்
ஏதோச மையல்லொப் பேற்றி - வீட்டில்
. எல்லோரும் போதினைப் போக்குவர் போற்றி! ... 5

நாள்தோறும் ஈதொன்றே பேச்சு - அந்த
. நாட்களில் ஈதொன்றே இல்லத்தின் மூச்சு!
கோள்வினை ஈதென்றே பன்னாள் - நாட்டின்
. கொள்கையென் றாகியே தங்கிடும் இன்னாள்! ... 6

பதினொன்மர் முட்டாளாய் ஆடும் - ஆட்டம்
. பார்ப்பவர் யாவரும் முட்டாளாய் ஆகும்
கதியன்றே சொன்னார்பெர் னாட்ஷா - அந்தக்
. காட்சிதான் உண்மையாய் ஆகும்த மாஷா! ... 7

--ரமணி, 20/12/2014, கலி.05/09/5115

*****
 
விழலே மழலை விறல்?!
(எழுசீர் விருத்தம்: வாய்பாடு: தேமா மா மா மா மா மா காய்)

சொல்லில் காமம் தொனியில் காமம்
. தோய்வ தெதுவும் அறியாதே
வில்லின் குறியா யிலக்கை யெட்டி
. வெல்லும் பயிற்சி கொண்டேதான்
கல்வி வாசல் நுழையும் குழந்தை
. கள்ளம் இன்றிப் பாடுவதை
வெல்லச் சுவையாய் வாயைப் பிளந்தே
. வீணர் கூட்டம் ரசித்திடுமே! ... 1

அர்த்தம் இரண்டாய் ஒலிக்கும் கயமை
. ஆரத் தழுவும் திரைப்பாடல்
நர்த்த னத்தில் காமச் சேட்டை
. நரநா ரியரின் குழுவினிலே!
வர்த்த கத்தில் வயிற்றை அடித்தே
. வாழும் கயவர் சாதனையைச்
சர்த்தி யெடுக்கக் குழந்தை பழகச் ... ... [சர்த்தி = கக்கல், வாந்தி
. சாதனை யென்றே போற்றுவரே! ... 2

தோலைக் காட்டும் தொழிலே பெரிதாய்த்
. தொலைநோக் கில்லாத் தொலைக்காட்சி
ஆலைக் கரும்பாய் இளையோர் மனதை
. ஆக்கும் சக்கை போதாதென்
றால கால விடமாய்ச் சூழ்ந்தே
. ஆலம் விழுதுக் குடும்பத்தின்
கூலம் மீறிக் கொள்ளும் முதலில் ... ... [கூலம் = வரம்பு, முறை]
. குப்பை யாவர் குழந்தைகளே! ... 3

வெட்கம் இல்லாப் பெற்றோர் தாமும்
. மேலை நெறிகள் பேணுவதில்
தொட்டிற் காலம் தொட்டே தாமும்
. தொலைவில் வாழ்ந்தே குழந்தைகளும்
கட்டில் லாமல் காட்டில் மேயும்
. கன்றாய் வளரும் பெருமை-தம்
பட்டம் அடித்தே தாமும் அரங்கின்
. பகட்டில் அமர்ந்தே காணுவரே! ... 4

தொலையும் தூரக் காட்சி விளைக்கும்
. சோப்புக் குமிழிக் கனவுகளில்
அலையும் மனமாய் மழலை மனதை
. ஆக்கும் தொழிலைச் செய்வதிலே
நிலையில் பெற்றோர் சுற்றம் நட்பும்
. நீளும் தொக்கா காட்சிகளின்
வலையில் விழுந்தே மக்கள் கல்வி
. மலையே றுவதைக் காணாரே. ... 5

சின்னக் குழந்தை மேனி தன்னைச்
. சிதைப்போர் சிட்சை பெறுவதுபோல்
சின்னக் குழந்தை உள்ளம் தன்னைச்
. சிதைப்போர் சிட்சை பெறும்நாளே
சின்னத் திரையும் வெள்ளித் திரையும்
. செய்யும் அவலம் தொலைந்தேகிப்
பொன்னின் மணியாய்ப் பயிர்கள் விளையும்
. பூமி காணும் நாள்வருமே! ... 6

--ரமணி, 22/12/2014, கலி.07/09/5115

*****
 
வேலை எனவோ?
(ஆங்கிலப் பாவடிவம் pantoum-இன் தமிழ் வடிவாகப் ’பாண்டி’ எனப் பெயரிட்டு,
சந்தவசந்தம் இணையக் குழும ஸ்தாபகர் கவிமாமணி இலந்தை இராமசாமி அவர்கள் செய்த வடிவம்)

காலை நேரம் கதிர்வரும் போதில்
மேலைக் காற்றில் மேனியும் குளிர
சாலை வாகனம் சற்றே குறைய
காலை வீசிக் கடற்கரை சென்றாள். ... 1

மேலைக் காற்றில் மேனியும் குளிர
சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
காலை வீசிக் கடற்கரை சென்றாள்
வாலைக் குமரி வயதில் இளையாள். ... 2

சேலைத் தலைப்பை சேர்த்துப் போர்த்தி
சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
வாலைக் குமரி வயதில் இளையாள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள். ... 3

சோலைப் பூச்சரம் தலையில் ஆடிட
மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை யோரம் தாள்களைப் பதித்தாள்
வேலை எனவோ? வியந்தேன் நானே! ... 4

மாலைக் கதிரொளி மஞ்சள் மேனியள்
சாலை வாகனம் சற்றே குறைய
வேலை எனவோ வியந்தேன் நானே
காலை நேரம் கதிர்வரும் போதில்! ... 5

--ரமணி, 26-27/12/2014

குறிப்பு:
இந்த pantoum (தமிழில் ’பாண்டி’) வடிவத்தில் அளவொத்த நான்கு அடிகள்
கீழ்க்கண்ட அமைப்பில் வரவேண்டும்:

Stanza 1 A B C D
Stanza 2 B E D F
Stanza 3 E G F H
Stanza 4 G I (or A or C) H J (or A or C)

This pattern continues for any number of stanzas, except for the final stanza,
which differs in the repeating pattern. The first and third lines of the last stanza
are the second and fourth of the penultimate; the first line of the poem
is the last line of the final stanza, and the third line of the first stanza
is the second of the final. Ideally, the meaning of lines shifts when they
are repeated although the words remain exactly the same: this can be done
by shifting punctuation, punning, or simply recontextualizing.

Ref: Pantoum - Wikipedia, the free encyclopedia

அதாவது, ஒவ்வொரு செய்யுளின் இரண்டாம், நான்காம் அடிகள்
அதற்கடுத்த செய்யுளின் முதலாம், மூன்றாம் அடியாக வரவேண்டும்.
இதுபோல் எத்தனை செய்யுட்களும் வரலாம். ஆனால் இறுதிச் செய்யுள் அமைப்பில்
அதன் முந்தைய செய்யுளில் அடிகள் இரண்டும் நான்கும் இதன் முதல், மூன்றாம்
அடிகளாக அமைவதுடன், முதற்செய்யுளின் மூன்றாம் அடி இதன் இரண்டாம் அடியாகவும்,
முதற்செய்யுளின் முதலடி இதன் இறுதி அடியாகவும் அமைதல் வேண்டும்.

pantoum உதாரணங்கள்:
Pantoum Poems | Examples of Pantoum Poetry - PoetrySoup

*****
 
ஒட்டியும் வெட்டியும்: காதல்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

ஒட்டி

கண்ணும் கண்ணும் கலந்தே பேசும்
வண்ணத் துள்ளல் வளரும் காதல்!
எண்ணத் தியைபில் இன்சொற் கேட்டே
பண்ணாய் ஆர்க்கப் பரவச மாமே! ... 1

காத்திருப் பதுவோர் காலச் சுமையே
பார்த்துவிட் டாலோ பரபரப் பாகும்!
வேர்க்கும் கையில் விதிர்க்கும் மெய்யில்
ஆர்க்கும் இதயம் காதில் ஒலித்தே! ... 2

தென்றல் சுகமாய் தெய்வம் எதிராய்
அன்றில் வண்ணம் அகத்தில் விரிய ... ... [அன்றில் = மயில் போன்ற பறவை, இங்கு மயில்]
மன்றில் ஆடும் மாந்தர் மனங்கள்
இன்றென நேற்றென என்றும் கூடும்! ... 3

காலம் நிற்கக் காலம் விரைய
ஏலும் உள்ளத் தினிமைப் பகிர்வில்
கையும் மெய்யும் கட்டுணும் போதில்
வையம் மறந்தே வானம் வருமே! ... 4

சின்னச் சின்னச் செப்பிய மாகப் ... ... [செப்பியம் = திரும்பத் திரும்ப உச்சரித்தல்]
பொன்னின் சொற்கள் பொருளைத் தேடா
இன்னும் இன்னும் இன்னும் என்றே
வன்னம் கூட்டும் வாயுறை தேடும்! ... 5 ... [வாயுறை = உறுதிமொழி; வாயின் உறையாகிய இதழ்கள்]

இன்பக் கனவில் இருவர் மனதும்
என்றும் வேண்டும் இதுபோல் எனினும்
அன்னை தந்தை ஆசியைக் கொள்ளும்
தன்னம் பிக்கை தாங்கும் தவிப்பே! ... 6

வெட்டி

காதலிப் பதுவும் கள்குடிப் பதுவும்
போதையில் ஒன்றெனில் பொய்யிலை யென்பேன்
கண்ணும் கண்ணும் கலப்ப தெல்லாம்
பண்படும் மாயையின் பாதை யென்பேன். ... 1

காத்திருப் பதுவோர் கால விரயம்
பார்த்தலில் கொள்ளும் பரபரப் புடனே
இருவர் ஈர்ப்பில் இயைவதன் பின்னே
மருவுடல் சுரக்கும் வேதியல் திரவமே. ... 2

தென்றல் சுகமும் தெய்வம் எதிரும்
அன்றில் வணமும் அகத்தின் மோகமே
மன்றில் ஆடும் மனத்தின் காதலில்
என்றும் நிலைக்கும் ஈடென் றில்லை. ... 3

ஆண்பெண் நேசம் அகமுறும் காமம்
வேண்டும் இயற்கை விளையாட் டாகும்
இருவர் மனமும் இயைவதன் சிறப்பு
திருமணம் பின்னே தெருவினில் அல்ல! ... 4

காஞ்சன மொழிகள் காக்கைப் பொன்னே
ஆஞ்சொலல் எல்லாம் ஆறுத லாகா
இன்னும் இன்னும் என்றே வேண்டில்
பின்புலம் யாவும் பெற்றிமை யென்றே. ... 5 ... [பெற்றிமை = பெருமை, செய்யவேண்டும் முறை]

இன்பக் கனவெலாம் இல்லறம் பின்னே
துன்பம் வாழ்வில் துளிவந் தாலும்
அன்னை தந்தை ஆசியா லோசனை
என்றும் வாழ்வில் இன்புறச் செயுமே. ... 6

--ரமணி, 30/12/2014, கலி.15/09/5115

*****
 
வைகுண்ட ஏகாதசித் துதி
(காவடிச் சிந்து)

பாம்பணையில் துஞ்சுமது சூதன் - அவன்
. பாதவிணை பற்றுவோர்க்கே ஏதும் - ஒரு
. . வினையால்வரும் துயர்நீங்கிடும்
. . இனிமேல்வரும் பிறப்பேயிலை
பாதம் - அதைப் - பாரும். ... 1

மார்கழியாம் மாதமுறும் நாளாம் - அது
. வைகுண்டம் கண்ணிலுறும் நாளாம் - அன்று
. . பெருமாளவர் ரத்னாங்கியில்
. . அரங்கத்தினில் கொலுவீற்றிடப்
பாரும் - அருள் - சேரும். ... 2

ஞானபுலன் கர்மபுலன் பத்தும் - அதை
. நாடிநலி வாகுமனச் சொத்தும் - தந்தே
. . பகற்பத்தினில் ராப்பத்தினில்
. . பரந்தாமனின் புகழ்பாடிட
ஞானம் - உறும் - மோனம். ... 3

நாரணனின் நாமஜபம் நாளும் - கொள்ள
. நன்மையதே வந்துநம்மை யாளும் - அவன்
. . திருமார்புறை யலைமாமகள்
. . உடன்சேர்ந்தருள் நலம்சேரவே
நாடும் - அருள் - கூடும். ... 4

பாற்கடலில் பள்ளிகொள்ளும் மாயன் - அவன்
. பாமரரைக் காத்தருளும் ஆயன் - அவன்
. . புகழ்பாடவே புவிமீதினில்
. . மகிழ்வாகிடும் வருநாளெனப்
பார்ப்போம் - வினை - தீர்ப்போம். ... 5

--ரமணி, 01/01/2015, கலி.17/09/5115

*****
 
பிரதோஷ நாயகன் துதி
(காவடிச் சிந்து)

மந்தரக்கோ மத்தெனவே நாட்டி - அதில் ... ... [கோ = மலை]
. வாசுகியை நாணெனவே பூட்டி - பாற்
. . கடலைக்கடை அமுதம்வர
. . அமரர்குலம் அசுரர்குலம்
ஆலம் - எழ - ஓலம்! ... 1

கண்ணுதலான் பாதவிணை தேடி - தேவர்
. கண்ணிருள அச்சமுடன் ஓடி - அவர்
. . நலம்காத்திட நஞ்சைக்கொள
. . மலைமாதவள் விதிர்ப்போடவர்
கழுத்தைக் - கரம் - அழுத்த ... 2

நீலமணி யாயெழுந்த காளம் - அந்த
. நீள்சடையான் கண்டசிறு கோளம் - அவர்
. . உமையாளிடம் கொளும்தேவராய்
. . மழுமான்தனைக் கரமேந்தவே
நீளும் - வினை - மாளும்! ... 3

நந்திதலைக் கோடுமிசை நாதர் - அவர்
. அந்தியிலே ஆடுகின்ற வேதர் - அவர்
. . பதமாடலில் மனமோய்ந்திட
. . பவநீக்கமும் கதிமுக்தியும்
நாடும் - உள்ளம் - கூடும்! ... 4

வாணியவள் வீணையினை மீட்ட - வெள்ளை
. வாரணனும் வேய்குழலைக் கூட்ட - அங்கே
. . மலரோனவன் கரச்சீர்தர ... ... [சீர் = தாளம்]
. . மதுசூதனன் முழவார்ந்திட
வாட்டம் - தீர்க்கும் ஆட்டம். ... 5

வீரணரின் லிங்கவுரு மீது - ஆறாய்
. வீழுகின்ற நீர்பொழியும் போது - அதை
. . விழிநாடிட வினையோடிட
. . வருநாளெலாம் இனிதாகிடும்
வண்ணம் - வரும் - திண்ணம். ... 6

--ரமணி, 02/01/2015, கலி.17/09/5115

*****
 
ஆதிரைத் திருநாள் துதி
(காவடிச் சிந்து)

தாருகவ னந்தனிலே சாது - வெல்லாம்
. தற்பெருமை கொண்டிருந்த போது - ஈசன்
. . இரந்தேயுணி யுருவங்கொள
. . அரிமோகினி அரிவையெனத்
தானே - முன்னின் - றானே. ... 1

சாதுவெலாம் மோகினையை நாட - அவர்
. தாரமெலாம் சுந்தரனோ டாட - துறவோர்
. . முனிவாலெழும் எரியால்வரும்
. . வனயானையும் பிறசெல்வமும்
செய்தார் - சொல்லால் - எய்தார். ... 2

ஆனையுரி ஆடையெனக் கொண்டார் - ஈசன்
. மானுடுக்கை அக்கினியைக் கண்டார் - அவை
. . கரமேல்வர வலிபூதமும்
. . பரமேஸ்வரன் பதம்கீழுற
நடனம் - ஆகும் - படனம். ... 3

தாருவனம் ருத்திரனாய் ஆடும் - ஈசன்
. தாண்டவமா னந்தமனம் ஓடும் - தில்லை
. . நடராசனை சிவகாமியை
. . திருவாதிரை தினம்காணவே
தருவாம் - அருள் - உருவாம். ... 4 ... [தருவாகும் அருள் உருவாகும்]

சேந்தனாரின் பக்திமனம் கொண்டே - நாமும்
. சேர்ந்துகளித் தேகளியை உண்டே - ஈசன்
. . கழல்நாடியே கதிதேடியே
. . மழுவாயுதம் வினைகொள்ளவே
செய்வோம் - வாழ்வில் - உய்வோம். ... 5

--ரமணி, 02-05/01/2015, கலி.20/09/5115

*****
 
பிரதோஷத் துதி: கேட்பேன் உன்னை!
(இயைபுக் குறள் வெண்செந்துறை)

நந்திதலைக் கொம்பிடையே நர்த்தபதம் ஆடுவதைக் காணும் மாலை
வந்தபோதும் மனமதிலே வாழாதே வேறெதையோ தேடும் வேலை!

வானமெலாம் வண்ணத்தின் ஆனந்தம் சூழுவதைக் காணும் வேளை
நானெதையோ எண்ணத்தில் நாடியதில் ஆழுவதில் வீழும் ஏழை!

ஆரணத்தில் மந்திரமும் ஆலகண்டன் பண்ணொலியும் ஆர்க்கும் போதில்
காரணத்தை நாடுமனம் கட்டுண்ணும் எண்ணவொலி ஆரும் காதில்!

கண்ணெதிரே நீராடும் கனகலிங்கம் கார்மனதில் கல்லாய்த் தெரியும்
எண்ணமெலாம் ஏதேதோ இன்பமென ஐம்புலனும் கனலாய் எரியும்!

சுற்றினிலே காளைமீது சோதியனாய் ஊர்காணும் அம்மை யப்பன்
பற்றுதனில் ஆழ்மனதில் பாமரனாய் வாழ்ந்துவரும் நானோர் மப்பன்!

கார்க்கடலாம் என்னுள்ளம் கடைவதிலே எழுவதெலாம் காக்கைப் பொன்னே
பாற்கடலின் நஞ்சுண்ட பாசுபதன் பாதவிணை பற்றேன் என்னே!

கண்டதுவும் கொண்டதுவும் காட்சியெனக் கோலமென வாழும் என்னை
மிண்டிநீயும் ஆட்கொண்டு மித்திரனாய்க் காத்தருளக் கேட்பேன் உன்னை!

[மிண்டி = நெருங்கி, நெம்பி, முன்தள்ளி]

--ரமணி, 17/01/2015, கலி.03/10/5115

*****
 
ஜகத்குரு தரிசனம்
26. வறுமையே செல்வம்!

(எழுசீர் இயைபுக் குறள் வெண்செந்துறை)

அரசு அலுவலர் ஆன்ற முனிவரைத் தெரிசனம் செய்தார் நாடி
பெரிய வரிடம்தன் பெரிய சுமையென வறுமையே என்றார் வாடி. ... 1

கடனாய் மாதக் கடைசியில் வாங்கிக் காலம் ஓடுதல் சொன்னார்
கடமை அலுவலில் காப்பெனும் சம்பளம் போதிய தில்லை யென்றார். ... 2

உடனுறை மனையின் உற்ற மக்களின் அன்பெவண் என்றார் முனிவர்
நடந்து கொள்வரே நலிவிலும் அன்பாய் குறையிலும் உள்ளம் கனிவர். ... 3

சித்த நாழியென் எதிரில் அமர்வாய் என்றார் காஞ்சிப் பெரியவர்
எத்துணை பாக்கியம் என்றவர் எதிரே அமர்ந்து கொண்டார் வறியவர். ... 4

வந்தனர் ஒருசெல் வந்தர் மனையுடன் காணிக் கைகளை வைத்தே
முந்திரி பாதாம் முக்கனி மலர்களும் சந்தனத் தொடுசர்க் கரைத்தேன். ... 5

சால்முனி யிடம்பிர சாதம் பெற்றபின் செல்வரும் சொன்னதோர் செய்தி
ஆலெனச் செல்வமும் ஆட்களும் வாய்த்தும் வாய்த்திலை மனதில மைதி. ... 6

ஏழை யெனநான் இருந்திருந் தாலோ என்மனம் மகிழ்வுற் றிருக்கும்
நீழை யெனத்தொடர் நீரிழி நோயினால் நீக்குண வெல்லாம் விருப்பம்! ... [நீழை = நிழல்] ... 7

பிள்ளைகள் இருவரின் போக்கும் சரியிலை நல்லதை நாடுவ தில்லை.
உள்ளது துய்ப்பதில் உள்ளது துன்பமே வாழ்வதன் இறுதியில் தொல்லை! ... 8

நோயில் உடலும் நோவில் உளமும் நொந்திடும் வாழ்வென வாழ்வே?
தாயெனத் தாரம் தனயரும் தகவர் ஏழ்மையில் ஏதுறும் தாழ்வே! ... 9

நேரில் முனிவர் நிகழ்த்திய பாடம் கற்றுத் தெளிந்தார் அலுவலர்
சேரும் பணத்தில் செல்வது எதுவெனத் தெரிந்தவர் ஆனார் வலுவினர். ... 10

--ரமணி, 23/01/2015, கலி.09/10/5115

உதவி:
??????????? ???? ????????????? ??????? ??????? ?????? ????? | Kanchi Periva Forum

*****
 
பிரதோஷத் துதி
நின்றுனைப் பாடும் நிலை
(அகவற் பின்னல்: எதுகை மோனை இயைபுடன்)

மூலச் சொற்கள்
கூடும் ஆடும் ஓடும் தேடும் பாடும் நாடும்

1. சந்தி

சந்தியில் செம்மை சாயமாய்க் கூடும்
வந்துறும் பாதம் மகிழ்வுடன் ஆடும்
சிந்தையில் உள்ளமும் செவ்வையில் ஓடும்
பந்தமென் றொன்றே பக்கலில் தேடும்
வந்தனை கூறிடும் வாயது பாடும்
எந்தை ஈசனின் இன்னருள் நாடும்! ... 123456

2. ஆலயம்

ஆலமர் செல்வனின் ஆலயம் நாடும்
காலது நின்றிடக் காட்சியும் கூடும்
மேலவன் தெய்வத மேனியைப் பாடும்
மேலுறும் நீரிலுன் மேனியும் ஆடும்
வாலறி வன்புகழ் வண்ணம் தேடும்
கோலம் உள்ளம் குமிழ்த்தே ஓடும்! ... 615243

3. திருவுலா

காரணன் மஞ்சனக் காலமும் ஓடும்
வேரது உலவியே வெளியினை நாடும்
ஆரணன் உருவினை ஆரணம் தேடும் ... ... [ஆரணம் = வேதம்]
ஆரமும் பண்ணிசை யாய்-உடன் கூடும் ... ... [ஆரம் = தேவாரம்]
தோரணப் பூக்களும் தொங்கலில் ஆடும்
நாரி யிடத்தனை நாதமும் பாடும்! ... 364125 ... [நாதம் = நாதஸ்வரம்]

4. உறவு

அன்பே சிவமென் றகமும் பாடும்
துன்பம் யாவும் துகளென் றோடும்
இன்பம் ஒன்றே இனியென் றாடும்
உன்னதம் உவகையை உள்ளமும் நாடும்
ஒன்றே உளதெனும் உண்மையும் கூடும்
நன்றே என்றதை ஞாலம் தேடும்! ... 532614

5. தியானம்

அடங்கும் உள்ளம் அமைதியைத் தேடும்
உடம்பால் மனதால் உயிர்படும் பாடும்
திடம்பட விளங்கத் திண்மையும் கூடும்
விடமென் றறியா வினைகளும் ஓடும்
விடங்கொளும் சிவத்தின் விழுமம் நாடும்
உடனெழும் உவகையில் உள்ளம் ஆடும்! ... 451362

6. யதார்த்தம்

ஆலயச் சூழலில் அகமகிழ்ந் தாடும்
வேலை முடிந்ததும் வீட்டினைத் தேடும்!
காலுறும் தரையே கனியென நாடும்
ஞாலமும் இதுவே நன்றெனப் பாடும்!
காலம் எதையும் கருதா தோடும்
காலன் கொள்ளும் காலமும் கூடும்! ... 246531

7. நான்
இன்றென் கூடும் இழிவினில் ஆடும்! ... ... [கூடும் = உடலும்]
கன்றாய் ஓடும் மனமும் தேடும்!
நின்றுனைப் பாடும் நிலையெவண் நாடுமே!

--ரமணி, 31/01/2015, கலி.17/10/5115

*****
 
காலைப் போதில்...
(ஒன்பதுசீர் ஆசிரிய விருத்தம்: தேமா தேமா கூவிளம் கருவிளம் கருவிளங்காய்
. தேமா மா மா மா)


காலைப் போதில் காவிரி மணலடி குறுகுறுக்கக்
. காலை எட்டிப் போட்டே செல்வேன்
சோலைத் தென்றல் துல்லிய மலர்மணம் சுமந்தபடி
. துள்ளித் துள்ளித் தோளை அணைக்கும்
நீல வானம் நிர்மல முனிவரின் மனமெனவே
. நீள நெடுகப் பரந்தே விரியும்
காலைச் சோதி கண்விரி யிளங்கனல் பரபரக்கக்
. காணும் நெஞ்சில் கவலை போமே!

--ரமணி, 06/02/2015

*****
 
ஜகத்குரு தரிசனம்
27. உச்சிட்ட நாதர்!

(அறுசீர்க் குறள் வெண்செந்துறை)

காளத்தி நாதரவர் கனிவோடு கொண்டாரே கண்ணப்பர் உச்சிட்டம்
காளமமர் கண்டருக்குக் காணிக்கை யாகநானும் தந்ததெலாம் மிச்சிலையே! ... 1

காளத்தி ஆலயத்தின் குடமுழுக்கு; காஞ்சிமுனி காணிக்கை இவ்விதமே
ஏளனமென் றிலையென்றார் ஏறுடையான் இட்டமுடன் ஏற்றிடுவான் எச்சிலையே. ... 2

பாலுடன்கங் கைநீரும் பட்டாடை யும்தேனும் நீராடற் கனுப்பினாரே
ஆலமர்ந்தான் ஆடலுக்கு அன்றுமுதல் இன்றுவரை ஆகிவந்த பொருளன்றோ? ... 3

தாய்மடியில் வாய்வைத்தே தான்கன்றும் எச்சிலாக்கி னாலொழியப் பால்தருமோ
தாயெனநாம் கொள்பசுவும்? ஆதலினால் தாயுமான வன்கொள்ளும் பாலெச்சில்! ... 4

தேமதுரம் தேடியலைத் தேனீதன் வாயாலே தேனுறிஞ்சிச் சேர்த்திடுமே
நாமதனை இட்டமாக நாடுதல்போல் நாதனவன் கொள்தேனும் எச்சிலாமே! ... 5

மீன்வாழும் கங்கைநீரும் மீன்வாயைத் திறந்துமூடிக் கொப்பளிக்க மிச்சிலாகும்
கூன்பிறையான் குடமுழுக்கும் குளிநீரும் எச்சிலாகக் கொள்ளுவனே இட்டமுடன்! ... 6

பட்டிழையை வாயாற்றான் பட்டுதரும் பூச்சிகளும் நூற்றிடுமே ஆகையினால்
இட்டமுடன் ஈசனனவன் ஏற்றணியும் பட்டாடை மிச்சிலென ஆவதுவே. ... 7

எனவேநான் ஐதீகம் ஏற்பதென ஈசனுக்குக் காணிக்கை எச்சிலாக
அனுப்பிவைத்தேன் என்றாரே அருமுனிதன் இன்முகத்தில் புன்னகையொன் றாடவிட்டே. ... 8

--ரமணி, 13/02/2015

உதவி:
"?????????????????? ??????? ???????". | Kanchi Periva Forum

*****
 
Last edited:
பிரதோஷத் துதி
அருகிலுள போது...

(வண்ணப் பாடல்)

(திருப்புகழ் பாடல் 5-இன் சந்தம்
’விடமடைசு வேலை அமரர்படை சூலம்
. விசயன்விடு பாண ... மெனவேதான்’)


தனதனன தான தனதனன தான
. தனதனன தான ... தனதான

அருகிலுள போது குருடனென நானும்
. அறியமனம் ஆழ்தல் ... தெரியாதே
உருவுதனை வேண்டும் நறுமலர்கள் தூவும்
. உறவுதனை நாடும் ... வழியொன்றே
வருவினைகள் போக உளவினைகள் மாள
. மரணைவரு நேரம் ... நலமாக
எருதிவரும் ஈசன் விரலிலுறும் சேவை
. எனமனதில் நானும் ... நிறைவேனே! ... 1

மலரிணையில் தூவும் மலர்களெடு போதில்
. மனவளையில் ஏதோ ... நினைவேறும்
கலவமென நாடி எனதெனவே சேரும்
. கழிவுகளில் ஆர ... மகிழ்வேனே
நிலைதவறும் ஈன மனதிலுறும் மாயை
. நினைவுகளை நீதான் ... கொளவேணும்
பலவினைகள் சேரும் பருவமிது போதும்
. பரமனெனை ஆண்டு ... அருளாயோ?. ... 2

[கலவம் = மயில்தோகை]

--ரமணி, 16/02/2015

*****
 
காலைப் போதில்...
(ஒன்பதுசீர் ஆசிரிய விருத்தம்: தேமா தேமா கூவிளம் கருவிளம் கருவிளங்காய்
. தேமா மா மா மா)

காலைப் போதில் காவிரி மணலடி குறுகுறுக்கக்
. காலை எட்டிப் போட்டே செல்வேன்
சோலைத் தென்றல் துல்லிய மலர்மணம் சுமந்தபடி
. துள்ளித் துள்ளித் தோளை அணைக்கும்
நீல வானம் நிர்மல முனிவரின் மனமெனவே
. நீள நெடுகப் பரந்தே விரியும்
காலைச் சோதி கண்விரி யிளங்கனல் பரபரக்கக்
. காணும் நெஞ்சில் கவலை போமே!
--ரமணி, 06/02/2015

நண்பரே தங்களுடைய secular கவிதைகளை விரும்பிப்படித்து அவற்றை விமர்சித்து வரும் ஒருவன் நான். நீங்களும் அறிவீர்கள். இந்தக்கவிதையில் எனக்குத்தோன்றியது இது:

1. காலைப்பொழுது, காலில் குறுகுறுக்கும் காவிரி மணல், மலர்மணம் சுமந்து வீசும் சோலைத் தென்றல், நெடுகப்பரந்துகிடக்கும் நீலவானம் என்று எல்லாமே மென்மையான விஷயங்களாயிருக்க தென்றலை மட்டும் ஏன் வல்லின றகரத்துடன் போட்டு நெருட விட வேண்டும்? அதையும் கூட தென்னெல் என்றோ தென்னல் என்றோ மெல்லினமாக்கக்கூடாதா? அதற்கு கவிஞனுக்கு சுதந்திரமும் license உம் உள்ளதே.

2. "துல்லிய மலர்மணம்" -- புரிந்துகொள்ள சற்றே கடினமாயுள்ளது. துல்லியம் என்பது வடமொழியின் துல்யத்திலிருந்து வந்ததல்லவா? அப்படியானால் அதன் பொருள் "இணை" என்பதல்லவா? (haricharana smaranAmruthEna thulyam--முகுந்த மாலை) சோலைத்தென்றல்/மலர்மணம் இவற்றிடையே துல்லியம் எப்படி? புரியவில்லை. கவிஞனின் மனப்போக்கு என்ன என்று புரியவில்லை. எனது புரிதல் தவறாயிருக்கலாம். தெளிவுபடுத்தினால் நன்று.

3. காலைச்சோதி கண்விரி யிளங்கனல் பரபரக்க-- என்ன கூற வருகிறீர்கள்? கதிரவனின் கிரணங்களையா? அப்படியானால் காலைச்சோதி கண்விரி யிளங்கதிர் பரபரக்க ( குறில்களையும் ஒற்றுக்களையும் அப்படியே வைத்து அசைகளை மாற்றாமல்) என்று எழுதினால் பொருந்துமே என்று தோன்றுகிறது. தவறானால் என்னைத் திருத்துங்கள்.


கவிதை மொத்தத்தில் என் மனக்கண்முன் விரித்த காட்சி எனக்குப்பிடித்தது. எனது கிராமத்து நாட்கள் நினைவில் விரிந்தது. காவிரிக்குப்பதிலாக நதி மட்டும் சித்ரா நதியானது. நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
 
Last edited:
சிவராத்திரித் துதி: பேசவெண் நாமம்
(கந்த பத்யம் பாணியில் நான்மாத்திரை ஈரசைச்சீராய்ச்
சிந்தடி அளவடி மாறிவரும் அமைப்பு)


பேசும் எண்நா மங்கள்
மாசை நீக்கும் மாயை போக்கும்
வாசம லர்பல தூவி
நேசன் சிவனை நினையென் மனமே. ... 1

பவாய நமவென் றாலே
அவாவும் பிறவிய னைத்தும் நீங்கும்
கவாலி எங்குமி ருப்போன்
சர்வா யநமக்ஷ சாற்றும் நாமம். ... 2

வருந்த வேண்டுவ தில்லை
உருத்தி ரநமஹ உள்ளம் ஏறின்
வருமும் மலமும் போக
நரனேத் தும்மோர் நாமம் பசுபதி. ... 3

உக்கிர நமவென வுரைக்க
பக்குவ மனமுற பயமும் நீங்கும்
எக்கண மேனும் சொலவே
மக்களைக் காக்கும் மாதே வன்பேர். ... 4

பேருரு நாமம் பீமன் என்றால்
யாரும் சொல்ல யாங்கணு மமைதி
பாரின் திசைகள் காக்க
ஏருரு நாமம் ஈசா னன்பேர். ... 5

சிவராத் திரிநாள் சொலவே
கவனம் கொள்வோம் கண்டனி னெண்பேர்
தவறா மல்நாம் இந்நாள்
சிவனின் நாமம் சிந்தை கொள்வோம். ... 6

--ரமணி, 17/02/2014

*****
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top