ஒப்பனை இல்லாத எளிமை தான்
என்னிடம் பிடித்ததென்று சொல்லி
உன் காதலை நீ தெரியப்படுத்த
ஒப்பில்லா துணைவன் கிடைத்தானென்று எண்ணினேன்.
இன்றோ உனக்காக
தினம் தினம் ஒரு ஒப்பனையில் நான்
என் நிஜம் கூட விளங்காத
கற்பனையில் நீ...
இரவில் தாமதமாய்ப் படுத்ததால்
காலையில் கண் விழிக்க சிரமம்;
இருந்தும் உனக்கு காப்பி கோப்பை தருவதற்கு
எழுவதில் தொடங்கும் என் ஒப்பனை.
முதல்நாள் கண்ட கனவை
உன்னிடம் பகிர்ந்து கொள்ள வருகையில்
நீயோ அன்றைய செய்தித்தாளின் வரிகளில்...
இதோ இன்னொரு ஒப்பனை.
என் career என்னவானதென்று
ஏங்கி நான் நிற்கும் பொழுதும்
நீ வேலைக்குச் செல்கையில்
வாயிலுக்கு வந்து விடை தரும் ஒப்பனை
கருத்து பரிமாறுவது நல்லதென்று
தொலைபேசியில் நான் அழைக்க
"பேச நேரமில்லை" என்று என் அழைப்பை நீ தவிர்க்க
.ஏமாற்றத்தைத் தவிர்க்க ஒப்பனை
மாலையில் நீ வீடு திரும்பும்போது
மீண்டும் நான் வாயிலில்
அன்றைய வேலையின் களைப்பிலும்
அழகாக உன் கண்ணில் தெரிய ஒப்பனை
உன் வரவுக்காக காத்திருந்து
உதடு திறக்க வரும் நேரம்
"என்ன TV serial -ல் பொழுது களித்தாயா?" என்ற
உன் கேள்விக்கு விடையாய் ஒப்பனை
காலையில் செய்த சிற்றுண்டியை
"நாகரீகமில்லை" என்று நீ மறுக்க
மாலையில் அதை சூடாக்கித் தந்தால்
"மறுபடியுமா?" என்று நீ மறுக்கும்போது
"சரி, விடுங்கள்; என்ன வேண்டும், சொல்லுங்கள்?"
"சப்பாத்தி, பூரி?" என்று சர்வர்போல் நான் அடுக்க
உச் கொட்டும் உன் கேலிச் சிரிப்பைப் பார்த்து
உடம்பெல்லாம் உடுத்தும் ஒப்பனை
பாத்திரம் கழுவி, அடுப்பைத் துடைத்து
மீந்த உணவை fridge -ல் வைக்கும்போது
"இந்த cricket -ல் உனக்கேன் விருப்பமில்லை?" என்று
தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டே
குரலை மட்டும் எனக்கு நீ அனுப்ப
பள்ளி நாட்களில் நான் வென்ற கோப்பைகள்
என் கண்முன் அணிவகுக்க
ஏக்கப் பெருமூச்சில் ஒரு ஒப்பனை
படுக்கையறைக்கு வரும் நேரம்
சலிப்பும் வெறுப்பும் நிறைந்தவளாய் நான்
சபலமும் சந்தோசமுமாய் நீ
உன் உணர்ச்சிகளுக்காக என் உள்ளத்தின் ஒப்பனை
காதலிக்கும் வேளையில்
நீ போட்ட ஒப்பனையால்
கல்யாணம் ஆன பின்
நான் போடுகிறேன் ஒப்பனை...