நினைத்ததும், கிடைத்ததும் - 2
சிவப்பு நிற உருண்டையாக மாற முனைந்து,
உவப்பு மிக எனக்கு எழச் செய்தான் ஆதவன்!
மெதுவாக ஒளியைக் குறைத்தான்; மேகங்கள்
மெதுவாகப் படர, ஒளிந்து விளையாடினான்!
சென்னைக்கு விடை தந்து, மறைய முனைந்து,
இன்னும் இறங்கி, கட்டிடங்களில் மறைந்தான்!
நிலவின் வருகைக்காகக் காத்துச் சோர்ந்தோம்;
நிலவின் தரிசனம் கெடுக்க, வந்தன மேகங்கள்!
தாகம் கொண்ட பூமியின் வேட்கை தீர்க்க, மழை
மேகம் கொண்ட எண்ணத்தால், கரும் திரைகள்!
மழை காலிறங்கிக் கடலிலே பொழிய, கரு நிறப்
போர்வை ஒன்று போர்த்திக்கொண்டது, வானம்!
கடலை ஒட்டிப் பெரிய அளவு நிலவு எழும் என்று
கனவைச் சுமந்து வந்த எனக்கு, ஏமாற்றம்தான்!
சில நிமிடங்கள் சென்றதும், மெல்லிய ஒளியை
நிலவு தந்தபடிக் கண்களில் பட்டது! ஆனால் அது
தொடுவானத்தைத் தாண்டி மிகவும் உயரத்தைத்
தொடும் வண்ணம் சென்றுவிட்டது! இருந்தாலும்,
இன்னும் சில மணித் துளிகளில், தனது ஒளியை
இன்னும் சிறிது கூட்டிப் பிரகாசமானது சந்திரன்!
காண நினைத்தது, நிலவைத் தொடுவானத்தில்;
காணக் கிடைத்தது, அழகிய சூரிய அஸ்தமனம்!
சூரியனும், சந்திரனும் இறையின் கண்கள்தானே!
சீரிய அழகை எது தந்தாலும், மன நிறைவுதானே!
இயற்கை அன்னையைப் போற்றுவோம்! :hail: