What is the purpose of Mavilai Thoranam at the door?

வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?

சுப காரியங்களின்போது வீட்டு வாயிலில் மலரால் ஆன தோரணத்தை கட்டுவது நம் வழக்கம். சில சமயங்களில் இலைகளை கொண்டும் தோரணம் அமைப்பது உண்டு. குறிப்பாக மாவிலையில் தோரணம் கட்டுவது நம் கலாச்சாரத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.

வேப்பமரம், அரசமரம் ஆகியவற்றுக்கும் ஆன்மிகத்துக்கும் நிறைய தொடர்புகள் இருந்தாலும் கூட முக்கிய தினங்களில் வீட்டின் வாயிலில் மா மரத்தின் இலைகளைத் தோரணமாகக் கட்டுகிறோம். வேப்பமரம், அரசமர இலைகளை வீட்டு வாசலில் கட்டாமல் மா மர இலைகளை மட்டும் ஏன் கட்டுகிறார்கள்? அதன் காரணம் என்னவென்று தெரியுமா?

பொதுவாக வீட்டில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் சரி. கோவில்களில் நடக்கும் எந்த திருவிழாக்களாக இருந்தாலும் சரி. சில பொருட்கள் மிக முக்கியமான ஒன்று. அவற்றில் மாவிலை தோரணம் என்பது மிக மிக முக்கியமான ஒன்று.

அந்த வகையில் மாவிலைத் தோரணம் ஏன் கட்டுகிறார்கள்? என்பதை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?

விழாக்களின்போதும், சுப நிகழ்ச்சிகளின்போதும் மக்கள் அதிகம் கூடுவார்கள். கும்பல் பெருகுமிடங்களில் ஏற்படுகின்ற அசுத்தங்களினால், காற்று மாசடைகிறது. தூய்மை கெடுகிறது. சுற்றுப்புறச்சூழல் பாதிப்படைகிறது.

காற்றின் மூலம் தொற்று நோய்களைத் தருகின்ற கிருமிகளும், பாக்டீரியாக்களும் மக்களைத் தாக்குகின்றன. உடல் நலத்தைக் கெடுக்கின்றன.

மக்கள் வெளியிடும் கரியமில வாயுவை தன்னுள் இழுத்து வைத்துக்கொள்ளும் சக்தி மாவிலைக்கு உண்டு. காய்ந்து உலர்ந்து விட்ட மா இலைகளிலும் அதன் சக்தி குறையாது. மாவிலை ஒரு கிருமிநாசினி.

இதற்கு துர்தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தியும் உண்டு. மேலும் மாவிலை அழுகுவது கிடையாது. மாவிலை முறையாக காய்ந்து உலரும். இதுபோல், வாழ்க்கையும் கெட்டுப்போகாமல் நீண்டகாலம் நடைபெற்று முற்றுபெற வேண்டும் என்ற நம்பிக்கையுடன், மங்கலம் பெருக மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.

மேலும் மாவிலைத் தோரணம் லட்சுமி கடாட்சத்தையும், மங்களத்தையும் குறிப்பதாகும். கோவில், பெரியவீடுகளின் நிலைக்கதவில் கஜலட்சுமியை சிற்பமாக வடித்து வைத்திருப்பர். சுபவிஷயம் வீட்டில் நடக்கும்போது நிலைக்கதவில் இருக்கும் திருமகளைப் போற்றும் விதத்தில் மாவிலைத் தோரணம் கட்டுகிறோம்.

வீட்டின் சுப காரியம் என்று இல்லாமல், நல்ல நாட்கள் மற்றும் நம்மால் முடிந்த அனைத்து நாட்களிலும் இந்த தோரணத்தை கட்டுவது வீட்டிற்கு நல்ல ஆசீர்வாதங்களை பெற்று தரும் என்பது நம்பிக்கை.
 
Back
Top