Quotable Quotes Part II

#001. உதிக்கின்ற செங்கதிர்​

1 . என் விழுத்துணை அவளே.

உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கொடி குங்குமத் தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என் விழுத் துணையே.


உதிக்கின்ற சூரியனும், நெற்றியின் உச்சியில் இட்ட திலகமும், நன்மதி உடையோர் மதிக்கின்ற மாணிக்கமும், மாதுளை அரும்பும், மின்னல் கொடியும், நறுமணக் குங்குமமும் போன்று தொன்று தொட்டுப் போற்றப்படுகின்ற திருமேனியை உடைய அபிராமி அன்னையே எனக்கு சிறந்த துணை ஆவாள்
 

#002. துணையும் தொழும்​


# 2 எல்லாம் அவளே!

துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும், பதி கொண்ட வேரும் பனிமலர் பூங்
கணையும், கறுப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.


நமக்குத் துணையாகவும், குல தெய்வமாகவும், பெற்ற அன்னையாகவும், வேதங்களின் கிளையாகவும், கொழுந்தாகவும், அடி வேராகவும் விளங்குபவள், குளிர்ந்த மலர்க் கணைகளும், கரும்பு வில்லும், அங்குச பாசமும் கைகளில் ஏந்திய திரிபுர சுந்தரியே என்று அறிந்துகொள்வோம்.
 

#003. அறிந்தேன் எவரும்​


# 3 . அறிந்ததும், செறிந்ததும்

அறிந்தேன் எவரும் அறியா மறையை; அறிந்து கொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கே; திருவே வெருவிப்
பிரிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாகிய மனிதரையே.


என் அன்னையே! எவரும் அறியாத மறையின் பொருளை உன் அருளால் அறிந்து கொண்டேன். அதன் பயனாக, உன் அன்பர்களின் பெருமையை மதிக்காத தீ வினையாளர்களை விட்டு விலகி திருவடிகளிலேயே நான் தஞ்சம் புகுந்து விட்டேன்.
 

#004. மனிதரும், தேவரும்​

#4. என் மதியில் எழுந்தருள்வாய்.

மனிதரும், தேவரும், மாயாமுனிவரும் வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார் சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும், படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே .


மனிதர்களும், தேவர்களும், சாகாத வரம் பெற்ற முனிவர்களும் வந்து சிரம் தாழ்த்தி வணங்கும் சிவந்த திரு அடிகள் வாய்ந்த மெல்லியலாளே! கொன்றை மலர் சூடிய சடையின் மேல், இளம் பிறையையும், பாம்பையும், கங்கையையும் ஏந்தி அருளும் தூயவரான எந்தை சிவபிரானும் நீயும் என் அறிவுடன் எந்நாளும் மாறாது இணைந்து இருக்க வேண்டுகின்றேன்.
 

#005. பொருந்திய முப்புரை​

5. திருவடிப் பேறு.

பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி பாதம் என் சென்னியதே.


மூவுலகங்களின் சிறப்புக்கள் எல்லாம் பெற்றவளும்; செப்புப் போன்ற அழகிய நகில்களின் பாரத்தால் துவளும் கொடி போன்ற இடையை உடைய மனோன்மணியும்; சிவபிரான் அருந்திய நஞ்சையே அமிர்தமாக மாற்றிய உமாதேவியும்; ஞானப் பெருவெளியாக விளங்கும் பேரழகியும் ஆன அபிராமி அன்னையின் திருவடிகள் என் தலை மீது பதிந்து உள்ளன.
 

#006. சென்னியது உன் பொன்​

# 6. நினைவும் நீயே! செயலும் நீயே!

சென்னியது உன்பொன் திருவடித் தாமரை, சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம், சிந்தூர வண்ணப் பெண்ணே
முன்னிய நின்னடியாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.


சிவந்த திருமேனியை உடைய தேவியே, உன் பொற்றாமரைத் திருவடிகளை என் தலை மீது அணிந்துள்ளேன். உன் மூல மந்திரம் என் உள்ளத்திலே நிலைத்துள்ளது. உன் ஆகம நெறிகளை உன் தொண்டர்களுடன் கூடி நான் பின்பற்றுகின்றேன்.
 

#007. ததி உறு மத்து​


7. ஆவியின் அடைக்கலம் நீ.

ததி உறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதி உறு வண்ணம் கருத்து கண்டாய் கமலாலயனும்
மதி உறு வேணி மகிழ்நனும், மாலும், வணங்கி என்றும்
துதி உறு சேவடியாய்! சிந்துரானான சுந்தரியே.


தாமரையில் உறையும் பிரமனும், இளம் பிறை அணிந்த சிவனும், திருமாலும் பணியும் சிவந்த திருவடிகளை உடைய தேவியே! சிந்தூரம் விளங்கும் அழகியே! தயிர் கடையும் மத்தைப் போல என் உயிர் பிறப்பு, இறப்பு என்னும் சுழல்களில் சிக்காமல் இருக்க அருள் புரிவாய்.

Advertisements
 

#008. சுந்தரி எந்தை​

8. சிந்தையில் சேவடி.

சுந்தரி, எந்தைத் துணைவி, என் பாசத் தொடரை எல்லாம்
வந்தரி சிந்தூர வண்ணத்தினாள், மகிடன் தலை மேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கந்தரி, கைத் தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.


திரிபுர சுந்தரி, என் பிரானின் மனைவி, என் பந்த பாசங்களை அகற்றும் சிவந்த மேனியள், மகிடனின் தலைமீது நிற்பவள், நீலி, நித்திய கன்னிகை, பிரமன் கபாலத்தைத் தாங்கிய திருக்கரம் உடையவள், அவள் மலர்ப் பாதங்கள் என் மனதில் நிலைத்துள்ளன.
 

#009. கருத்தன எந்தை​


9. காட்சி கொடு!

கருத்தன எந்தை தன் கண்ணன, வண்ண கனக வெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள் கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே வந்து என்முன் நிற்கவே.


சிவபிரானின் கண்களிலும் கருத்தினிலும் நிறைந்த; மேருவினைப் போன்று பெருத்த ஸ்தனங்களால் சம்பந்தருக்கு ஞானப் பால் அளித்துப் பேரருள் புரிந்த ; முத்து மாலையும், கரும்பு வில்லும், மலர்க் கணைகளும், அழகிய புன்முறுவலும் பொருந்திய தேவியே! நீ என் கண் முன் வா!
 

#010. நின்றும் இருந்தும்​


10. எப்போதும் உன்னை வணங்குவேன்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே அருளே உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே அழியா முக்தி ஆனந்தமே.


எழுதப் படாத வேதங்களின் அரிய பொருளே! அருள் மயமானவளே! இமயத்தில் பிறந்த உமையே! அழியாத முக்தியின் இன்பமே! நான் நிற்கும் போதும், அமர்ந்து இருக்கும் போது, உறங்கும் போதும், நடக்கும் போதும் உன்னையே எண்ணுகின்றேன். உன்னையே வணங்குகின்றேன்.
 

#011. ஆனந்தமாய் என்​


11. திருவடிப் பெருமை.

ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமாய்
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணாரவிந்தம் தவளநிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடி கண்ணியதே.


வானம் ஈறான ஐம்பெரும் பூதங்களின் வடிவு ஆனவள்; அவள் திருவடித் தாமரைகள் ஆனந்தமாகவும், அறிவாகவும், அமுதமாகவும், நான்மறைகளின் முடிவாகவும் உள்ளன. சுடலையைத் தம் ஆடல் அரங்காகக் கொண்ட இறைவனின் தலை மீது அவை மாலையாகவும் விளங்குகின்றன.
 

#012. கண்ணியது உன் புகழ்​


# 12. புண்ணியம் வியத்தல்.

கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன் செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே!


ஏழு உலகங்களையும் மலரச் செய்த நாயகியே! நான் கருதுவது உன் புகழையே; கற்பது உன் பெயர்களையே; உள்ளம் உருக பக்தி செய்வது உன் பாத மலர்களிலே; உன்னை விரும்பும் அடியவர் அவையிலே பகலை இரவாக மாற்றியவளே; நான் முற்பிறவியில் என்ன புண்ணியம் செய்தேனோ?
 

#013. பூத்தவளே புவனம்​


# 13. பிறரைத் தொழேன்!

பூத்தவளே புவனம் பதினான்கையும்! பூத்தவண்ணம்
காத்தவளே! பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே! உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே.


பதினான்கு உலகங்களையும் படைத்துக் காத்துப் பின் மறைக்கின்றவளே!
நீலகண்டனுக்கு மூத்தவளே! என்றும் மூப்பு அடையாத மாலுக்கு இளையவளே!
மா தவம் உடையவளே! உன்னை விட்டு வேறு ஒரு தெய்வத்தை நான் வணங்குவேனோ?
 

#014. வந்திப்பவர் உன்னை​


# 14. அருமையும், எளிமையும்.

வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர் பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி! நின் தண்ணளியே.


உன்னை வழிபடுபவர்கள் தேவர்களும், அசுரர்களும்; தியானம் செய்பவர்கள் பிரமனும், மாலும்; உன்னைத் தன் அன்பில் கட்டிப் போட்டுள்ளவர் அழியாத பரமானந்தம் கொண்ட சிவபிரான்; உன்னை தரிசனம் செய்பவர்களுக்கு உன் குளிர்ந்த கருணை எளிதில் கிடைக்கின்றது.
 

#015. தண்ணளிக்கு என்று​


# 15. அடையும் பேறுகள்.

தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும் அன்றோ?
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.


பண் அமையும் இனிய குரலும், இயற்கை நறுமணமும் வாய்ந்த பைங்கிளியே! உன் அருள் வேண்டி முற்பிறவிகளில் தவம் இயற்றியவர்கள் இவ்வுலகச் செல்வங்களை மட்டுமோ பெறுவர்? விண்ணுலகச் செல்வங்களையும், அழியாத முக்தியையும் அடைவர் அன்றோ?
 

#016. கிளியே! கிளைஞர்​


# 16. நின் கருணை விந்தையன்றோ?

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்தது கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே வெளிமுதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.


பசுங்கிளியே! உன் அன்பர் உள்ளத்தில் வீசுகின்ற ஒளியே! ஞான ஒளியான சிவபிரானின் திருமேனியில் இடம் பெற்றவளே! ஆராய்ச்சியில் அடங்காத வெட்ட வெளியே! ஐந்து பூதங்களாகப பரந்து விரிந்தவளே! இத்தனை பெருமைகளையும் சுருக்கிக் கொண்டு , எளியேன் என் சிற்றறிவினால் அளப்பதற்கு அளவாகக் குறைந்தது ஒரு விந்தையன்றோ?
 

#017. அதிசயம் ஆன வடிவு​


# 17. பதியையும் வென்றவள்!

அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதிசய ஆனன சுந்தர வல்லி, துணை இரதி
பதிசயமானது அபசயமாக, முன் பார்த்தவர் தம்
மதிசயம் ஆகவன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?


வியப்பூட்டும் வடிவழகி; தாமரை மலர்கள் வணங்கும் அழகிய முகம் உடையவள்; ரதிபதியாகிய மன்மதனின் வெற்றியானது தோல்வியாக மாறவும் , சிவபிரானின் நெற்றிக் கண் பார்வை வெற்றி அடையவும், இறைவனின் இடப்பாகத்தைக் கவர்ந்து கொண்டாள்
 

#018. வவ்விய பாகத்து​


# 18. காத்தருள வேண்டும்!

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும்,உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து
வெவ்விய காலன் என்மேல் வரும் போது வெளி நிற்கவே.


உன்னால் கவரப்பட்ட இடப் பாகத்தை உடைய இறைவனும் நீயும் இணைந்து விளங்கும் அர்த்த நாரீஸ்வரர் வடிவமும், உங்கள் திருமணக் கோலமும், என் பற்றுக்களை அகற்றி ஆட்கொண்ட உன் பொற்பாதங்களும் , கொடிய காலன் என்னை நெருங்கும் போது என் முன்னே காட்சி தர வேண்டும் தாயே!
 

#019. வெளிநின்ற நின் திருமேனி​


# 19. ஆனந்த அதிசயம்.

வெளி நின்ற நின் திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களி நின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.


ஒளி பொருந்திய நிலையான ஒன்பது முக்கோணங்களில் வீற்று இருப்பவளே! வடிவம் எடுத்த உன் திருமேனியைக் கண்டதும் என் கண்ணும், கருத்தும் கரை காணா இன்பம் அடைந்தது! எனக்குள் தெளிவான மெய்ஞானம் பெருகுகின்றது. என்னே உன் திருவுள்ளம்!
 

#020. உறைகின்ற நின் திரு​


# 20. உறைவிடம் யாது?

உறைகின்ற நின் திருக்கோயில் நின்கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ, கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.


பரிபூரண நித்திய கல்யாணியே!
நீ உறையும் இடம் உன் கணவரின் இடப்பக்கமா?
நான்கு வேதங்களின் முதலிலா அன்றி முடிவிலா?
அமுதம் பொழியும் நிலவிலா?
தாமரை மலரிலா? பாற்கடலிலா?
அடியேன் நெஞ்சிலா? கூறு தாயே!
 

#021. மங்கலை, செங்கலசம்​


# 21. காட்சியில் களித்தேன்!

மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில், தாவு கங்கை
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண் கொடியே.


தீர்க்க சுமங்கலி; செப்புக் கலசம் போன்ற நகில்களை உடையவள்; மலை அரசனின் மகள்; வெண் சங்கு வளை அணிந்த சிவந்த கரங்களை உடையவள்; கலைகளின் தெய்வமாகிய அழகு மயில்; பொங்கும் அலை தவழும், கங்கை நதி தங்கும், சடையுடைய சிவபிரானின் உடலின் இடப்பாகத்தில் உள்ளவள்; என்னைத் தன் உடைமையாகக் கொண்டவள்; காவிரியாகவும், துர்கையாகவும், அலைமகளாகவும், கலைமகளாகவும், மலைமகளாகவும் திகழ்பவள் அவளே
 

#022. கொடியே, இளவஞ்சி​


# 22. பிறவி வேண்டாம்!

கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே, மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலான தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.


மென் கொடியே! பொற்கொம்பே! பழுத்த கனியே! வேதங்களின் நறுமணமே! இமயமலையில் உள்ள எழில் வாய்ந்த பிடியே! பிரமன் முதலான தேவர்களைப் பெற்ற அன்னையே! இனி நான் மீண்டும் மீண்டும் இறந்து பிறவாது என்னைத் தடுத்து ஆட்கொள்வாய்!
 

#023. கொள்ளேன் மனத்தில்​


# 23. என் குறிக்கோள்.

கொள்ளேன் , மனத்தில் நின்கோலம் அல்லாது; அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தில் விளைந்த
கள்ளே, களிக்கும் களியே, அளியே என் கண்மணியே.


பரந்து விரிந்த மூன்று உலகங்களுக்கு உள்ளும் வெளியும் நிறைந்தவளே; என் உள்ளக் கமலத்தில் விளைந்த தேனே! அன்பர்கள் களிக்கும் களிப்பே! எளியேன் என்னுடைய கண்மணியே! என் மனத்தில் உன் வடிவம் அன்றி வேறு எதனையும் நான் ஏற்க மாட்டேன். உன் அன்பர் கூட்டத்தை விட்டுப் பிரிய மாட்டேன். வேறு சமயங்களையும் விரும்ப மாட்டேன்!
 

#023. கொள்ளேன் மனத்தில்​


# 23. என் குறிக்கோள்.

கொள்ளேன் , மனத்தில் நின்கோலம் அல்லாது; அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தில் விளைந்த
கள்ளே, களிக்கும் களியே, அளியே என் கண்மணியே.


பரந்து விரிந்த மூன்று உலகங்களுக்கு உள்ளும் வெளியும் நிறைந்தவளே; என் உள்ளக் கமலத்தில் விளைந்த தேனே! அன்பர்கள் களிக்கும் களிப்பே! எளியேன் என்னுடைய கண்மணியே! என் மனத்தில் உன் வடிவம் அன்றி வேறு எதனையும் நான் ஏற்க மாட்டேன். உன் அன்பர் கூட்டத்தை விட்டுப் பிரிய மாட்டேன். வேறு சமயங்களையும் விரும்ப மாட்டேன்!
 

#024. மணியே மணியின் ஒளியே​


# 24. நீயே என் தெய்வம்.

மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெருவிருந்தே!
பண்யேன், ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே.


மாணிக்கமே! மாணிக்கத்தின் ஒளியே! ஒளி வீசும் மணி பதித்த அணியே! அணிகளுக்கெல்லாம் அழகே! உன்னிடம் தஞ்சம் அடையாதவர்களுக்குப் பிணியே! அன்பர்களின் பிறவிப் பிணிக்கு மருந்தே! விண்ணவர்களுக்கு விருந்தே! உன் திருவடித் தாமரைகளைத் தொழுத பின்னர் நான் வேறு எவரையும் தொழேன்!
 
Back
Top