Quotable Quotes Part II

ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3039. உலகின் அடர் பெரும் பாகன்

புவனா பதிமிகு புண்ணியன் எந்தை
அவனே உலகில் அடர்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறையென மாலுற்ற வாறே.

புவனங்களின் அதிபதியாகியவன் என் தந்தை புண்ணிய மூர்த்தி சிவன்! அவனே உலகில் உள்ள சீவ ராசிகள் அனைத்தையும் செலுத்தி இயக்குகின்ற பாகன் போன்றவன். அவனே எண்ணற்ற உயிர்த் தொகைகளாகவும் விளங்குகின்றான். இத்தகைய சிறப்பு வாய்ந்த சிவனே எம் இறைவன் என்று சிவஞானியர் விரும்பிக் கூறுகின்றனர்!
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3040. கண்ணின்று இயங்கும் கருத்தவன்

உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்
கண்ணின்று இலங்கும் கருத்தவன் தானே.

சீவனின் உடலினுள்ளே ஒளிருகின்ற பிராணனனும், விண்ணில் நின்று இயங்குகின்ற திங்களும், சீவனின் பூமித் தானத்தில் செயல்படும் அபான வாயுவும் இவை எல்லாமாகி நிற்பவன் சீவனின் கண்ணில் பார்வையாக விளங்கும் சிவனே ஆவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3041. உள் நின்று உருக்குவான்

எண்ணும் எழுத்தும் இனஞ்செயல் அவ்வழிப்
பண்ணும் திறனும் படைத்த பரமனைக்
கண்ணிற் கவரும் கருத்தில் அதுஇது
உண்ணின்று உருக்கியோர் ஆயமும் ஆமே.

தியானத்துக்கு உரிய எழுத்துப் பிரணவம். அதைக் கற்றுக் கொடுத்தவர் குருநாதர். அவர் காட்டிய வழியில் நின்று சாதனை செய்வதையும், அந்த சாதனை சென்று வழியே முன்னேறுவதையும் படைத்தவன் பரமசிவன். சிவனைச் சீவன் தன் அகக்கண் கொண்டு காணும் பொழுது, சிவன் அந்தச் சீவனின் உடலில் பொருந்தி, அதை உருக்கி அதன் இயல்பை உரு மாற்றித் தானே அதன் ஊதியமாகவும் ஆகி விடுவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3042. திருக் கொன்றை வைத்த செஞ்சடையான்

இருக்கின்ற எண்டிசை அண்டம்பா தாளம்
உருக்கொடு தன்னடு ஓங்கஇவ்வண்ணம்
கருக்கொடு எங்கும் கலந்திருந் தானே
திருக்கொன்றை வைத்த செழுஞ்சடை யானே.

தான் நடுவில் இருந்து கொண்டு, தன்னைச் சுற்றி எண் திசைகளும், அண்டங்களும், பாதாளமும் விளங்கும்படி சிவன் நின்றான். திருக்கொன்றை சூடிய செஞ்சடைச் சிவபிரான், அறிவின் வடிவமாக
அவை யாவற்றிலும் கலந்து நின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3043. சேயன் அணியன் சிவன்

பலவுடன் சென்றஅப் பார்முழுது ஈசன்
செலவுஅறி வார்இல்லை சேயன் அணியன்
அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி
பலவில தாய் நிற்கும் பான்மைவல் லானே.

உலகில் உள்ளவர்களுக்குப் பலவேறு தத்துவங்களாகக் காட்சி தரும் பெருமானின் உண்மை இயல்பினை அறிந்தவர் எவரும் இலர். சிவன் சீவனுக்கு வெகு தொலைவில் இருப்பவன். அவனே சீவனுக்கு மிகவும் அருகில் இருப்பவன்; சிவன் மாறுபாடுகள் அற்றவன்; சிவன் உயிர்களுக்கு இன்பம் அளிப்பவன்; சிவன் அநாதியானவன்; பல வேறு தத்துவங்களாக உள்ள சிவனே அவற்றைக் கடந்தும் விளங்குகின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3044. எது அறியாவகை நின்றவன் நந்தி

அதுஅறி வானவன் ஆதிப் புராணன்
எதுஅறி யாவகை நின்றவன் ஈசன்
பொதுஅது வான புவனங்கள் எட்டும்
இதுஅறி வானநந்தி எங்கள் பிரானே.

சிவன் எல்லா உயிர்களின் அறிவுக்கும் அறிவானவன். அவன் ஆதி புராணன். அவனை யாவரும் அறிய முடியாத வண்ணம் நிற்பவன் ஈசன். ஆயினும் எட்டு புவனங்களையும், ஒவ்வொரு சீவனையும் அவன் நன்கு அறிவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3045. ஊரும் சகலன் உலப்பிலி சிவன்!

நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியு மாய் உளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்இறை
ஊரும் சகலன் உலப்பிலி தானே.

நீர், நிலம், விசும்பு, நெருப்பு, காற்று என்னும் ஐம்பெரும் பூதங்களாகவும், அவற்றைத் தாங்கி நிற்கும் ஆதாரமாகவும், சீவ ராசிகளின் உடலில் உள்ள ஒளியாகவும் சிவபெருமான் இருக்கின்றான். அவன் பெயர் பராபரன். பிஞ்சு மதியினை அணியும் அந்தப் பிஞ்சகன் அனைத்துத் தத்துவங்களில் பொருந்தியிருப்பவன். அவன் அழிவே இல்லாதவன் ஆவான்!
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3046. மூலன் உரை செய்த மூன்றுமொன்றாமே!

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன் உரைசெய்த முன்னூறு மந்திரம்
மூலன் உரைசெய்த முப்பது உபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே.

திருமூலர் அருளிய மூவாயிரம் திருமந்திரப் பாக்களும், அவர் அருளிய முன்னூறு மந்திரப் பாடல்களும், அவர் அருளிய முப்பது உபதேசப் பாடல்களும் ஒரே உன்னதமான பொருளை விளக்குவன ஆகும்.
 
23. வாழ்த்து

#3047. வாழ்க நம் நந்தியின் திருவடிகள்!

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி
வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்
வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்
வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.

என் நந்திப் பிரானின் திருவடிகள் வாழ்க! வாழ்கவே!
என் மலக்கட்டினை அறுத்த ஈசன் திருவடிகள் வாழ்க! வாழ்கவே!
எனக்கு மெய்ஞ்ஞானம் அருளிய இறைவன் திருவடிகள் வாழ்க! வாழ்கவே!
நின்மலன், அமலன், விமலன் ஆகிய சிவன் திருவடிகள் வாழ்க! வாழ்கவே!

திருமந்திரம் ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று.
திருமூலர் அருளிய திருமந்திரம் முற்றிற்று.

வையகத்துள்ளோர் வாழ்வாங்கு வாழ்க! வாழ்கவே!
அன்பே சிவம்! அன்பே சிவம்! அன்பே சிவம்!

காரணம் இல்லாத, சுயநலம் இல்லாத, தூய அன்பை நாம் வளர்ப்போம்!
அன்புக்கு மட்டுமே கட்டுப்படும் முக்தி தாயகன் சிவபிரானை அடைவோம்!

முடிவுரை

எந்தத் துணிச்சலுடன் இந்தப் பணியை மேற்கொண்டேனோ
அந்த சிவபெருமானும், சக்திதேவியும் அறிவர்! யான் அறியேன்!

எத்தனையோ தடங்கலுக்கு நடுவில் இந்தப் பணியை
மெத்தனம் இன்றி செய்ய அருளியவள் சக்தி அன்னை!

அனைத்து உலகினருக்கும், மற்றும் அனைத்து சீவராசிகளுக்கும்;
அன்னை, தந்தை ஆகிய உமை, சிவன் பாதங்களில் சமர்ப்பணம்!

ஓம் தத் ஸத்! ஸர்வம் சிவார்ப்பணம் அஸ்து!
 
பின்புலக் கதை

இந்தத் தொடரின் பின்புலக் கதை இது!

யோகதர்ஷன் மாஸ்டர் ஸ்ரீமன் நாராயணீயத்தை விளக்கினார்.
ஒவ்வொரு வரியும் ஒரு மினி ரயில் வண்டி போல இருக்கும்.

எங்கே நிறுத்த வேண்டும்? எப்படிப் பிரிக்க வேண்டும்? தெரியாது.
படிப்பதை விடப் பாடுவது எளிதாக இருக்கும் போலத் தோன்றியது.

திருச்சூர் ராமச்சந்திரன் அவர்களின் ஒலிநாடாவை வைத்துக் கொண்டு
மிகவும் சிரமப்பட்டு 100 வேறு ராகங்களில் பாடக் கற்றுக் கொண்டேன்.

ஒவ்வொரு தசகமும் வெவ்வேறு ராகம். இது ஒரு 100 ராக மாலிகை.
அப்போதும் முழு மனத் திருப்தி ஏற்படவில்லை எனக்கு.

வார்த்தைகளின் பொருள் தெரிந்தால் நன்றாக இருக்கும்
என்று முனைப்பாகப் புத்தகத்தைத் தேடத் தொடங்கினேன்.

ஏறக் குறைய நான் பிறந்த போது வெளிவந்த ஒரு புத்தகத்தில்
பதம் பிரித்துச் சொற்களின் பொருளும் அழகாகத் தரப்பட்டு இருந்தது.

ஆனால் அந்த புத்தகத்தைக் கடனாகக் கொடுப்பதற்குக் கூட
அதை வைத்திருந்த அவர்கள் சம்மதிக்க வில்லை.

ஏறக் குறைய நம்பிக்கையை இழந்து விட்டேன் அது கிடைக்கும் என்று.
இவருடைய அத்திம்பேரின் தம்பியிடம் அது பற்றி பேசியபோது
அவர் என்னிடம் ஒரே ஒரு கேள்வி தான் கேட்டார்,

“உனக்கு சமஸ்கிருதம் படிக்கத் தெரியுமா?”
“தெரியும்” என்றேன். அவர் முகம் மலர்ந்து விட்டது.

“நீ தேடும் புத்தகம் என்னிடம் ஒரு காபி உள்ளது.
எத்தனையோ பேர்கள் தரச் சொல்லிக் கேட்டார்கள்.
ஆனால் சம்ஸ்க்ருதம் படிக்கத் தெரிந்தவருக்குத் தான் கொடுப்பது
என்று தீர்மானமாகக் கொடுக்க மறுத்து விட்டேன்.
இனி அந்தப் புத்தகம் உன்னுடையது” என்றார்.

எனக்கு மகிழ்ச்சியில் பேசக் கூட முடியவில்லை.
அவர் புத்தகத்தில் என் பெயர் எழுதியிருந்தது போலும்!

புத்தகத்தை அனுப்பி வைத்தார் சென்னை சென்ற உடனேயே.
இப்போது அது என் இணை பிரியாத் துணை ஆகிவிட்டது!

அந்தப் புத்தகம் மட்டும் என்னிடம் இல்லாவிட்டால்
இந்தத் தொடர் பிறந்து இருக்கவே முடியாது நிச்சயமாக!

அந்தத் தாத்தாவுக்கு நன்றி நம் எல்லோர் சார்பிலும்!
ஏதோ பெரிதாக சாதித்தது போல ஒரு திருப்தி ஏற்படுகிறது.

“கண்ணன் அருள் எல்லோருக்கும் எப்போதும் இருக்க வேண்டும்”
என்று வேண்டிக் கொண்டு இந்தத் பின்புலக் கதையை முடிக்கின்றேன்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதை வசிக்கலாம்.
தினப்படியும் வாசிக்கலாம்! கோகுலாஷ்டமிக்கும் வாசிக்கலாம்!
 
 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Back
Top