Quotable Quotes Part II

ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3014. வாசமலர் போல மருவி நின்றானே

ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கின
ஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி
தேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்
வாச மலர்போல் மருவி நின் றானே.

ஈசன் திருவடிகளே எட்டுத் திசைகளையும் இயங்க வைத்தன.
வைகரி வாக்குக்கு நாதம் அடிப்படையாக இருப்பதைப் போல,
சிவன் எப்போதும் அழியாது இருப்பவன்.
நிலம், நீர், தீ, காற்று, வானம், கதிரவன், மதி, அக்கினி, ஆன்மா ஆகியவற்றில் மலரில் மணம் போலக் கலந்து விளங்குகின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3015. சொல்லரும் சோதி

இல்லனும் அல்லன் உளன் அல்லன் எம்இறை
நல்லது நெஞ்சம் பிளந்திடும் காட்சியன்
தொல்லையன் தூயன் துளக்கிலன் தூய்மணி
சொல்லரும் சோதி தொடர்ந்துநின் றானே.

எம் பெருமான் நம் புறக் கண்களுக்குத் தோன்றுவதில்லை. அகக் கண்களுக்குத் தோற்றம் தருகின்றான். அதனால் அவன் இல்லாதவன் என்று எண்ணிவிடக் கூடாது. ஆனால் அவன் உள்ளவனும் அல்ல. கல் நெஞ்சைக் கரைத்துக் கொண்டு நிற்பவர்களுக்கு அவன் காட்சி தருபவன்; அவன் பழமையானவன்; அவன் தூய்மை ஆனவன்; அவன் எந்தவிதத் தடுமாற்றம் இல்லாதவன்; அவன் தூய மாணிக்கத்தைப் போன்றவன், சொல்வதற்கு அரிய பேரொளியாகிய சிவன் சீவர்களை ஒளியாகவும், இருளாகவும் தொடர்ந்து அருள் புரிகின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3016. கமழ் சடை நந்தி

உள்ளத் தொடுங்கும் புறத்துளும் நானெனும்
கள்ளத் தலைவன் கமழ்சடை நந்தியும்
வள்ளற்பெருமை வழக்கஞ்செய் வார்கள்தம்
அள்ளற் கடலை அறுத்துநின் றானே

சீவனின் உள்ளம் என்னும் மன மண்டபத்தில் ஒடுங்குபவன் சிவன். சீவன் உலகக் கவர்ச்சியில் சிக்கி இருக்கும் போதும் அவன் சீவர்களுக்கு உள்ளே நிலை பெற்றவன். அவ்வமயம் கள்ளத் தலைவன் ஆகிய கமழ் சடைநந்தி, அந்த சீவனின் பொறிகளை இயக்குகின்றான். அவன் வள்ளல் தன்மையை உணர்ந்து கொண்டு அவனைச் சிந்திக்கும் அன்பர்களின் பிறவிப் பிணியை அறுத்துத் துன்பங்களில் இருந்து விடுவிக்கின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3017. குரை கழல் நாடுவர்

மாறெதிர் வானவர் தானவர் நாடொறும்
கூறுதல் செய்து குரைகழல் நாடுவர்
ஊறுவர் உள்ளத்து அகத்தும் புறுத்துளும்
வேறுசெய்து ஆங்கே விளக்கொளி யாமே.

எதிரம் புதிருமாக உள்ள வானவர்களும், தானவர்களும் நாள் தோறும் தோத்திரம் செய்து கழல்கள் ஒலிக்கும் ஈசன் திருவடிகளைத் தொழுவர். ஆனால் அவன் அடியவர்களோ எனில் அகமும் புறமும் ஒருமித்து இருக்கும்படி அவன் உதவுகின்ற தன்மையை எண்ணி உள்ளம் கசிந்து இருப்பர். அந்த மெய்யடியார்களின் ஊனால் ஆகிய உடலை நீக்கி, உணர்வினைப் பெருக்கி, விளக்கொளியாக இருந்து உதவுவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3018. எண்ணில் ஆனந்தம் எங்கள் பிரானே!

விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணில் ஆனந்தமும் எங்கள் பிரானே.

இந்த விண்ணும் சிவன் மேனியே! அந்த வெளியும் அவன் மேனியே! சிவன் புறக்கண்களுக்குக் காட்சி தர மாட்டான். அகக்கண்களுக்கு அவன் காட்சி தருவான். பண்புடன் கூடாத வெறும் வாய்த் தோத்திரங்களுக்கு அவன் வசப்படமாட்டான். உள்ளன்போடு அவனை நாடினால் அவனும் வெளிப்பட்டு அருள்வான்.எண்ணில்லாத ஆனந்தத்தை சீவனுக்குத் தருபவன் சிவனே அன்றோ!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3019. நித்திலச் சோதியன் நீலக் கருமையன்

உத்தமன் எங்கும் உகக்கும் பெருங்கடல்
நித்திலச் சோதியன் நீலக் கருமையன்
எத்தனை காலமும் எண்ணுவர் ஈசனைச்
சித்தர் அமரர்கள் தேர்ந்தறி யாரே.

எந்தைப் பிரான் ஓர் உத்தமன். அனைவரும் விரும்பும் ஆனந்தக் கடல். நல்ல முத்தைப் போன்று ஒளிர்பவன். வெண்மை நிற ஒளியிலும், நீலக் கருமை ஒளியிலும் விளங்கும் ஈசனை இடையறாது சிந்திக்கும் ஞானியர் தம் அன்பால் உணர்ந்து கொள்வர். சித்தரும், அமரரும் ஆராய்ச்சி செய்த பின்பும் அவனைத் தேர்ந்து தெளிய மாட்டார்கள்!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3020. புறம் பல கண்டும் போற்றுகில்லர்

நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன்
அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம்
மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம்
புறம்பல காணினும் போற்றகி லாரே.

எந்த அளவுக்குச் சாதகனின் முகத்திற்கு முன்பு நிறங்கள் தெரிகின்றனவோ, அந்த அளவுக்கு ஈசன் தன்னை அவனுக்கு வெளிப்படுத்துவான்.
எந்த அளவுக்கு அறம் கடைப்பிடிக்கப் படுகின்றதோ அந்த அளவுக்கு இன்பம் வந்து அமையும்.
எந்த அளவுக்கு அதர்மம் கடைப் பிடிக்கப்படுகின்றசிதோ அந்த அளவுக்கு பாவம் வந்து சேரும்.
இந்த உண்மைகளை உணர்ந்து கொண்டிருந்த போதிலும் மக்கள் அதன்படி நடப்பது இல்லையே!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3021. பொங்கி நின்றான் புவனபதி

இங்குநின் றான்அங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு
எங்குநின் றான்மழை போல்இறை தானே

சிவன் இங்கு இருக்கின்றான்; சிவன் அங்கு இருக்கின்றான்; சிவன் எங்கும் இருக்கின்றான்; சிவன் பொங்கி நிறைந்து இருக்கின்றான்; புவனத்தின் அதிபதி புண்ணிய மூர்த்தியாகிய சிவன், சீவனின் அஞ்ஞான இருளிலும் நிற்கின்றான்; ஞான ஒளியில் கதிரவன் போன்றவன் சிவன் ; அவன் அருள் மழை எங்கும் நிறைந்திருக்கும்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3022. உணர்வு, உடல், அண்டம் ஆகி நின்றான்

உணர்வது வாயுவே உத்தம மாயும்
உணர்வது நுண்ணறிவு எம்பெரு மானைப்
புணர்வது வாயும் புல்லிய தாயும்
உணர்வுடல் அண்டமும் ஆகிநின் றானே.

சீவனின் உணர்வும் சிவனே; சீவனின் உடலும் சிவனே;
இவற்றிலும் உன்னதமாகிய சீவனின் சூக்கும அறிவும் அவனே;
சீவனுடன் புணர்ந்து இருப்பவனும் அவனே;
அனைத்திலும் நுட்பமானவனும் அவனே;
சீவனின் ஆண்ட ஆகாயத்திலும் அதன் உயிரிலும் நிலை பெற்று ஒளிர்பவன் சிவனே!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3023. உலகு எழும் தரித்தவன்

தன்வலி யால்உல கேழும் தரித்தவன்
தன்வலி யாலே அணுவினும் தான்நொய்யன்
தன்வலி யால்மலை எட்டினும் தான்சாரான்
தன்வலி யாலே தடம்கட லாமே.

ஈசன் தன் வலிமையால் ஏழு உலகங்களையும் தரிக்கின்றான்; தன் ஆற்றலினால் அணுவைக் காட்டிலும் நுட்பமானதாகவும் இருக்கின்றான்; எட்டுப் புகழ்பெற்ற குல மலைகளும் அவன் வலிமைக்கு நிகர் ஆகா.
அவன் அகன்ற கடலிலும் தன் ஆற்றலால் நிறைந்து இருக்கின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#3024. தானே அறியும் தவத்தின் அளவே!

ஏனோர் பெருமையன் ஆகிலும் எம்இறை
ஊனே சிறுமையும் உட்கலந்து அங்குளன்
வானோர் அறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

எம் பெருமான் சிவன் அனைத்துத் தெய்வங்களிலும் மேலானவன். என்றாலும் ஊனால் ஆகிய சிறிய உடலிலும் அதன் உணர்வாகக் கலந்து பரவி இருக்கின்றான். வானோர்களாலும் அவன் பெருமையை அறிந்து கொள்ள முடியாது; அந்த மகாதேவன் சீவன் செய்யும் தவத்துக்கு ஏற்ப சீவனால் அறியப்படுகின்ற சிறப்பினை உடையவன்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


3025. உண்டனர் உண்டார் உணர்வில் மூடர்கள்!

பிண்டாலம் வித்தில் எழுந்த பெருமுளைக்
குண்டாலம் காயத்துக் குதிரை பழுத்தது
உண்டனர் உண்டார் உணர்விலா மூடர்கள்
பிண்டத்துஉட் பட்டுப் பிணங்குகின்றார்களே.

பிண்டம் ஆகிய சீவனின் உடலில் ஆலவிதையைப் போல எழும் அதன் சீவசக்தி. அது ஆலமரம் போன்ற சீவனின் உடலில் மேல் நோக்கிச் சென்று பக்குவம் அடைந்த பின்னர் சிரசில் ஒளியினைக் கண்டது. அந்த சீவன் அந்த ஒளியில் ஆனந்தமாகத் திளைத்து இருந்தது. இவ்வாறு செய்ய அறியாத மூடர்கள் உடலே பெரியது என்று எண்ணி அதன் இச்சைகளைப் பூர்த்தி செய்து விஷய சுகத்தில் திளைத்தனர். உடலைக் கடந்து சென்று சிரசில் உள்ள ஒளியைக் காண இயலாமல், உடலை பெரிதென மயங்கும் இவர்களின் பேதைமை தான் என்னே!
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி
22. சர்வ வியாபி
சிவன் அனைத்துப் பொருட்களிலும் வியாபித்து எங்கும் நிறைத்திருப்பவன் என்ற உண்மை.

#3026. சாயும் தனது வியாபகம் தானே

ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓரொளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியும் தனதுஎய்தும்
சாயும் தனது வியாபகம் தானே.

ஞானப் பயிற்சியினால் சீவனுக்குச் சிவானுபவம் கிடைக்கும். ஆராய்ந்து பெற்ற அறிவையும், மாயையியின் காரியமாக விளைந்த உடலையும், தன் வசப்படுத்திக் கொண்ட சீவன் தன் விஷய வாசனைகளை வென்று விடும். அதனால் அந்த ஆன்மா நிறைவு எய்தும்.
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3027. உயிர்க்கின்ற ஒண்சுடர்

நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லை
நான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே.

நான் அறிந்த சிவபெருமான் அங்கும், இங்கும், எங்கும் நிறைந்திருப்பதால் அவரைச் சென்று அடைய எங்கும் செல்ல வேண்டுவது இல்லை. சென்னியில் உள்ள வான மண்டலத்தை அறிந்து கொண்டு அதனை வழிபட்டால் அது மேலும் சிறந்து விளங்கும். சீவன் தன் உடலின் தன்மையையும், தன்னுள் ஒளிர்கின்ற உயிரின் தன்மையையும் உள்ளபடி அறிந்து கொண்டு விட்டால், அதன் பின்னர் எங்கு வேண்டுமானாலும் செல்லவும், அங்கிருந்து மீண்டு வரவும் ஆற்றல் பெற்று விடும்.
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3028. கடலின் மலிதிரைக் காணலும் ஆமே

கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடலிடை வாழ்வுகண்ட உள்ளொளி நாடி
உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக்
கடலின் மலிதிரைக் காணலும் ஆமே.

சீவனின் உலக வாழ்வு என்பது ஓயாத கடல் அலைகள் போல ஓயாத துன்பங்களைக் கொண்டது. சீவன் தன் உடலில் வாழ்கின்ற போதே தனக்குள் ஒளிர்கின்ற சோதியை நாட வேண்டும். தன் உடலில் உறைந்திருக்கும் சிவனைக் கண்டு கொண்ட பின்னர், அலைகள் போன்ற துன்பங்களைத் தாண்டிச் சென்று சீவன் கரை சேர முடியும்!
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3029. பெருஞ்சுடர் மூன்றுக்கும் உள்ளொளி சிவன்

பெருஞ்சுடர் மூன்றினும் உள்ளொளி யாகித்
தெரிந்துட லாய் நிற்கும் தேவர் பிரானும்
இருஞ்சுடர் விட்டிட்டு இகலிடம் எல்லாம்
பரிந்துடன் போகின்ற பல்கோரை யாமே.

தேவர் பிரான் ஆகிய சிவன் கதிரவன், திங்கள், அக்கினி என்ற மூன்று பெருஞ் சுடர்களிலும் அவற்றின் உடலாக விளங்கி அவற்றுக்கு ஒளியைத் தருபவன். இந்தச் சுடர்களில் இருந்து மாறுபட்டு நிற்கும் இருண்ட உலகில் அவனே சீவர்களைப் பரிவுடன் தொடரந்து செல்லும் நுண்ணியவனும் ஆவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


3030. சிறுதியில் உள்ள திப்பிய மூர்த்தி

உறுதியின் உள்வந்த உள்வினைப் பட்டு
இறுதியின் வீழ்ந்தார் இரணமது ஆகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெருஞ்சுட ராமே.

உலகம் இன்பம் நிறைந்தது என்று உறுதியாக எண்ணும் சீவன் பலவேறு வினைகளை ஆற்றும். அந்த வினைகளின் பயனாகத் துன்பத்தில் வீழும். அந்தச் சீவன்களைக் காப்பவன் சிவனே. ஈசான திக்கில் உள்ள திவ்விய மூர்த்தியைக் கண்டு கொண்டால், சிவன் சீவனின் சென்னியில் மேலான பெரும் ஒளியாக விளங்குவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3031. மற்றவனாய் நின்ற மாதவன்

பற்றி னுள்ளே பரமாய பரஞ்சுடர்
முற்றினும் முற்றி முளைக்கின்ற மூன்றொளி
நெற்றியின் உள்ளே நினைவாய் நிலைதரு
மற்றவ னாய்னி ன்ற மாதவன் தானே.

பற்றப்பட வேண்டிய பொருட்களில் மேலானவன் சிவபெருமானே! கதிரவன், திங்கள், அக்கினி என்ற மூன்று ஒளிச் சுடர்களை தன் நெற்றியில் நினைக்கத் தெரிந்து கொண்டவருக்கு அவன் தன்னை வெளிப்படுத்துவான். நினைப்பவர்கள் நினைக்கும் வண்ணம் அவன் அவர்களுக்கு விளங்குவான்!
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3032. நாவனும் ஆகி நவிற்றுகின்றானே

தேவனும் ஆகும் திசைதிசை பத்துளும்
ஏவனும் ஆம்விரி நீருலகு ஏழையும்
ஆவனு மாம் அமர்ந்து எங்கும் உலகினும்
நாவனும் ஆகி நவிற்றுகின் றானே.

சிவம் ஆகிவிட்ட ஒரு சீவன் ஒளி உருவம் பெறுவான். அவன் பத்துத் திக்குகளிலும் உள்ளவரை ஏவல் செய்ய வல்லவன். நீர் சூழ்ந்த ஏழு உலகங்களிலும் அவன் நிறைந்து இருப்பான். அவன் நாவன்மை கொண்டு அனைத்தையும் அறிந்து கொண்டு அதை எடுத்துக் கூறும் வல்லவன் ஆவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3033. காக்கும் அவனித் தலைவன்

நோக்கும் கருடன் நொடிஏழ் உலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்குளன்
நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புணரவல் லானே.

கூரிய பார்வையை உடைய கருடனைப் போலவே உலகநாதன்
சிவனும் ஏழு உலகங்களையும் கூர்ந்து நோக்குகிறான். அடியவர்கள் அனைவரையும் காக்கின்றான். அடியவர்களின் வினைகளைப் போக்கும் என் தலைவன் நின்மலன், பிறப்பிலி, அவன் எங்கும் செல்வதிலும், எங்கும் வருவதிலும், எல்லாவற்றோடு பொருந்துவதிலும் வல்லவன்.
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3034. செழுஞ் சடையான் செம்பொன் மேனியன் சிவன்

செழுஞ்சடை யன் செம்பொ னேயொக்கும் மேனி
ஒழிந்தன னாயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
ஒழிந்திலன் ஏழுலகு ஒத்துநின் றானே.

சிவ யோகியாரிடம் பொருந்தி விளங்கும் சிவன் ஒளிக் கற்றைகளையே தன் விரிசடையாகக் கொண்டவன். அவன் மேனி செம்பொன் நிறம் வாய்ந்தது. அவன் உலகத் தொடர்பு உள்ளவனும் ஆவான்; அவன் உலகத் தொடர்பு இல்லாதவனும் ஆவான்! அவன் உயிர்களிடமிருந்து விலகி நிற்பவன் அல்ல! உயிர்களுடன் கலந்து நிற்பவன். பிறப்பற்ற சிவன் ஏழு உலககங்களில் கலந்து இருந்த போதும் அவனே அவற்றிலிருந்து வேறுபட்டும் நிற்பான்.
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


3035. துணரின் மலர் கந்தம் துன்னி நிற்பான்

உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலனும் அவனே
இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

சீவனிடம் பொருந்தியுள்ள உணர்வும் சிவனே! சீவனின் உயிரும் சிவனே! பொருட்களை அறியும் அறிவும் சிவனே! பொறிகளால் அறியப்படும் அறிவும் சிவனே! சீவனைச் சிவன் தொடர்ந்து வந்த போதிலும் சீவனால் அவனைத் தன் எண்ணங்களில் அடக்கி விட முடியாது. சிவன் நறுமலர் கொத்துக்களின் நறுமணம் போல எங்கும் பரவியும், விரவியும் இருப்பவன் ஆவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3036. பலமையில் எங்கும் பரந்து நின்றான்

புலமையின் நாற்றமில் புண்ணியன் எந்தை
நலமையின் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள் வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே.

புண்ணியன் ஆகிய எந்தை சிவன், சீவன் கற்றுத் தேர்ந்து பெற்ற புலமையினால் அடைய வேண்டியது என்று எதையும் வேண்டாதவன்.
நாடி வரும் சீவனுக்கு நலம் தரும் ஞானத்தை அவனே நல்கிட வல்லவன். வேதியர்கள் ஓதும் விலை மதிக்க முடியாத வேதங்கள் கூறும் பல பொருட்களிலும் அவன் பரவி நிற்கின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3037. கண்ணவன் ஆகிக் கலந்து நின்றானே!

விண்ணவ னாய்உலகு ஏழுக்கு மேலுளன்
மண்ணவ னாய்வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவன் ஆயது தன்மையின் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.

சிவன் ஏழு உலகங்களுக்கு அப்பால் வெகு உயரத்தில் உள்ள விண்ணகத்திலும் உள்ளான். அவனே மண்ணவனாய் சீவன்கள் நிலவுலகத்திலும் உள்ளான். உலகைச் சூழ்ந்துள்ள ஏழு கடல்களுக்கும் அவனே குளிர்ச்சியினைத் தருகின்றான். அந்தக் கடலின் தன்மையை உடைய வலது கண்ணிலும் அவனே கலந்து நிற்கின்றான்!
 
ஒன்பதாம் தந்திரம்

22. சர்வ வியாபி


#3038. தானே வளங்கனி ஆகி நின்றான்

நின்றனன் மாலொடு நான்முகன் தானாகி
நின்றனன் தான்நிலம் கீழொடு மேலென
நின்றனன் தான்நெடு மால்வரை ஏழ்கடல்
நின்றனன் தானே வளங்கனி யாயே.

சிவன் தானே நான்முகன், திருமால் போன்ற தெய்வங்களாகி நின்றான். சிவன் கீழே தாங்கும் நிலமாகவும், மேலே உயர்ந்த வானமாகவும் நின்றான். சிவன் உயர்ந்த மேரு மலை ஆகவும், உலகில் உள்ள ஏழு கடல்களாகவும் உள்ளான். சாதகனுக்கு சிவனே வளமான சிவக்கனியாக இருந்து பயன் தருகின்றான்.
 
Back
Top