Quotable Quotes Part II

ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை

#2966. நான் இனி உய்ந்து ஒழிந்தேனே!

கொண்ட சுழியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத் தலைவரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந்து என்கைத் தலத்துளே
உண்டனர் நானினி உய்ந்தொழிந் தேனே.

சிவனுடன் பொருந்தி இருக்கும் எனக்கு கிடைத்த மேன்மைகள் என்ன என்று தெரியுமா?
உலகினைத் தனக்குள் கொண்ட கடலும், உலகினை விட உயர்ந்து நிற்கும் மலையின் உச்சியும், அண்டர்களும், அண்டங்களின் தலைவரும், ஆதி சக்தியும், எண் திசையோரும் என் சொற்படி நடக்கின்றனர்.
நான் இனி உய்ந்து ஒழிந்தேனே!
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை

#2967. தானே உலகின் தலைவனும் ஆமே

தானே திசையொடு தேவருமாய் நிற்கும்
தானே வடவரை ஆதியுமாய் நிற்கும்
தானே உடலுயிர் தத்துவமாய் நிற்கும்
தானே உலகில் தலைவனும் ஆமே.

சிவத்துடன் பொருந்தி விட்ட சீவர்கள் அடையும் மேன்மைகள் இவை:
தாமே திசைகளாகி நிற்பர்! தாமே தேவருமாகி நிற்பர்!
தாமே மேருமலையாகவும், அதற்கும் மேலே உள்ளதாகவும் விளங்குவர். தாமே சீவ நிலையில் உடல், உயிர், தத்துவங்கள் என்று விளங்குவர்.
தாமே உலகின் தலைவரும் ஆவர்.
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை

#2968. ஞான வாள் கொண்டு எறிவன்

நமன்வரின் ஞானவாள் கொண்டே எறிவன்
சிவன்வரின் நானுடன் போவது திண்ணம்
பவம்வரும் வல்வினை பண்டே யறுத்தேன்
தவம்வரும் சிந்தைத் தான்எதிராரே.

உடல் பற்று நீங்கிய பின்னர் வான் மயமான ஓர் உணர்வு தோன்றும். அப்போது காலன் என்னிடம் வந்தால், நான் ஞானவாளைக் கொண்டு அவனை வெட்டுவேன். சிவன் என்னிடம் வந்தால், அவனுடன் சேர்ந்து நானும் எங்கும் நிறைந்திருக்கும் பொருளாக மாறிவிடுவேன். பிறவிக்கு காரணமான வல்வினைகளை முன்னமே நான் அறுத்து எறிந்து விட்டேன். தவத்தால் பெற்ற தெளிந்த சிந்தையை எதிர்த்து அஞ்ஞானம் என்னும் இருள் நிற்க முடியுமா?
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை

#2969. சிலுகும், கலகமும் கை காணார்!

சித்தம் சிவமாய் மலமூன்றும் செற்றவர்
சுத்தச் சிவமாவர் தோயார் மலபந்தம்
சுத்தும் சிலகும் கலகமும் கைகாணார்
சத்தம் பரவிந்து தானாம்என்று எண்ணியே.

சித்தம் சிவமயமாக ஆனவர்கள் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் வென்றவர் ஆவார். அன்னார் தாமும் சிவத்தின் தூய ஆற்றலுடன் விளங்குவார். சீவனைத் தளைப்படுத்தும் மலத்தில் அவர் கட்டுப்பட மாட்டார். நுண்மை வாக்கை அறிந்தவர். ஆதலால் சத்தம் இட்டு வீண் வாதமோ, பூசலோ, பிதற்றலோ செய்ய மாட்டார்.
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை

#2970. நீளியன் ஆவான்

நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம்
வினைப்பற்று அறுக்கும் விமலன் இருக்கும்
வினைப்பற்று அறுக்கும் விமலனைத் தேடி
நினைக்கப் பெறில்அவன் நீளியன் ஆமே.

நினைத்தலும் மறத்தலும் இல்லாதபடி எப்போதும் சிவனையே சிந்தித்து இருப்போரின் மனத்தில் வினைப் பயன்களை அழித்து விடும். விமலன் ஆகிய சிவன் நீங்காமல் இருப்பான். அவ்வாறு இன்றி இடைவெளி விட்டு விட்டுச் சிவனை நினைந்து வந்தால், அவன் நம்மை விட்டு நீங்கிச் சென்று விடுவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை


#2971. தவப் பெருமான் தான் வந்து நின்றான்

சிவபெரு மான்என்று நான்அழைத்து ஏத்தத்
தவப்பெரு மான்என்று தான்வந்து நின்றான்
அவபெரு மான்என்னை யாளுடை நாதன்
பவபெரு மானைப் பணிந்துநின் றேனே.

அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நிறைந்திருக்கும் பெருமானை நான் “சிவபெருமானே!” என்று அழைத்தேன். தவத்தால் அறியப்படும் அப்பெருமானும், “இங்கு இருக்கின்றேன்!” என்று கூறி என்னிடம் வந்து நின்றான். பற்றுக்களைக் கொடுத்துச் சீவனை பந்தத்தில் ஆழ்த்துபவனும் சிவனே! பற்றுக்களை நீக்கிச் சீவனை விடுவிப்பவனையும் சிவனே! என்றும் மாறாது நிலைத்திருக்கும், நித்தியமான, சத்தியமான சிவனை நான் வணங்கி நின்றேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை


#2972. சிவன் தன்மை கண்டேனே

பணிந்துநின் றேன்பர மாதி பதியைத்
துணிந்துநின் றேன்இனி மற்றொன்றும் வேண்டேன்
அணிந்துநின் றேன்உடல் ஆதிப் பிரானைத்
தணிந்துநின் றேன்சிவன் தன்மைகண் டேனே

பரம அதிபதியாகிய சிவனை நான் பணிந்து நின்றேன். “அவனே பரம் பொருள். அவனுக்கு மிஞ்சிய தெய்வம் வேறு எவருமில்லை!” என்று நான் துணிந்து நின்றேன். அவனையன்றி வேறு எதையும் நான் வேண்டேன்! என் உடலில் நான் கண்டுகொண்ட ஆதியான சிவனுடன் நான் பொருந்தி நின்றேன். என் சீவபோதத்தைத் துறந்து நான் நின்றேன். நான் தணிந்ததும் அவன் அகண்ட தன்மையைக் கண்டு கொண்டேன்
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை



#2973. பிணக்கு அறுத்தானே!

என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம் சேர்ந்து
முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்
தன்நெஞ்சம் இல்லாத் தலைவன் தலைவிதி
பின்னம்செய்து என்னைப் பிணக்கறுத் தானே.

என் நெஞ்சம் ஈசனின் இணையடிகளைச் சேர்ந்தது. அந்தத் திருவடிகளைப் போற்றி புகழ்ந்தால் பிறவியும் அதற்கு உரிய காரணங்களும் கெட்டுவிடும். தனக்கு என்று ஓர் உள்ளம் இல்லாதவன் சிவன். நான்முகன் எழுதிய தலை எழுத்தையே மாற்றிக் கெடுப்பவன் சிவன். தத்துவங்களுடன் போராடிய என் நிலையைக் கெடுத்து என் பிணக்கை மாற்றிவிட்டான்.
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை


#2974. முன் வந்த துன்பம் வணக்கலுற்றேன்

பிணக்கறுத் தான்பிணி மூப்பறுத்து எண்ணும்
கணக்கறுத் தாண்டவன் காண்நந்தி என்னைப்
பிணக்கறுத்து என்னுடன் முன்வந்த துன்பம்
வணக்கலுற் றேன்சிவன் வந்தது தானே.

என் உள்ளத்தில் பொருந்தி என் பிணக்கினை அறுத்தவன் சிவன்; நோயற்ற உடல் தந்து நரை, திரை, முதுமை இல்லாமல் கால எல்லையைக் கடந்து வாழுமாறு செய்து காலக் கணக்கை அறுத்தவன் சிவன். நான் என்னைத் தொடர்ந்து வந்த வினைகளைக் கெடுத்தேன். அப்போது சிவம் மேலும் பிரகாசித்தான்!
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை


#2975. அவன் வந்து என்னுள் அகப்பட்டான்!

சிவன்வந்து தேவர் குழாமுடன் கூடப்
பவம்வந் திடநின்ற பாசம் அறுத்திட்டு
அவன்எந்தை ஆண்டருள் ஆதிப் பெருமான்
அவன்வந்தென் னுள்ளே அகப்பட்ட வாறே

தேவர்கள் குழாத்துடன் வந்து சிவன் என் உள்ளத்தில் நிலை பெற்றான். சீவனின் பிறவிக்கு காரணம் ஆகிய பாசத் தளைகளை சிவன் அறுத்துக் களைந்தான். அறியாமை என்னும் இருளை போக்கி என்னை ஆண்டு அருளினான். சிவன் என் சிந்தையில் வந்து புகுந்து என்னை ஆட்கொண்ட விதம் இதுவே ஆகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை


#2976. கரும்பு கசந்தது! தேன் புளித்தது!

கரும்பும் தேனும் கலந்ததோர் காயத்தில்
அரும்பும் கந்தமும் ஆகிய ஆனந்தம்
விரும்பியே உள்ளம் வெளியுறக் கண்டபின்
கரும்பும் கைத்தது தேனும் புளித்ததே.

சீவனுக்கு கரும்பு போன்றது காமம். தேனைப் போன்றது காமச் சுவை. இவை பொருந்தியுள்ளன சீவனின் உடலில்! அரும்பி மணக்கும் சிவானந்தத்தை நாடிச் சீவன், உடல் இயல்புகளைக் கடந்து தன் உணர்வை மேலே செலுத்திச் சிவானந்தத்தைச் சுவைத்தால், அப்போது சீவனுக்குக் கரும்பு போன்ற காமமும் கசக்கும். தேன் போன்ற காமச் சுவையும் புளிக்கும்!
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை


#2977. எல்லாம் அவன் செயல் என்று இருமின்!

உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே.

முன்னைப் பிறவிகளில் சரியை, கிரியை போன்ற நெறிகளின் நான் நின்றிருந்தேன். என்னை அந்த நெறிகளில் இருந்து மீட்டான் சிவன். என்பால் வள்ளல் போலக் கருணை காட்டினான் சிவன். அவன் அன்பின் திறத்தைப் பாராட்டினேன்.

“நான் செய்கின்றேன்!” என்ற எண்ணத்தைத் துறந்து “அவன் என்னைச் செய்விக்கின்றான்!” என்ற எண்ணம் பிறந்ததால் வினைகளையும், வினைப் பயன்களையும் நான் ஓருசேர ஒழித்து விட்டேன்!
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை


#2978. பூண்டாள் புவன சூடாமணி

மீண்டார் கமலத்துள் அங்கி மிகச்சென்று
தூண்டா விளக்கின் தகளிசெய் சேர்தலும்
பூண்டாள் ஒருத்தி புவன சூடாமணி
மாண்டான் ஒருவன்கை வந்தது தானே.

உலகக் கவர்ச்சியில் இருந்து மீண்டவர், தம் மூலாதாரத்தில் உள்ள தீயை எழுப்பி, அதை மேல் நோக்கிச் செலுத்தி, சகசிரதளம் என்னும் தூண்டா விளக்கில், உணர்வு என்னும் நெய்யைச் சேர்ப்பார்கள். அங்கு ஒளி வீசவும், புவன சூடாமணி ஆகிய சக்தி தேவி அங்கு வந்து பொருந்துவாள். சீவன் தன் சுட்டறிவை இழந்து நிற்கும்! ஆனால் அரிய சிவானுபவம் பெறும்.
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை


#2979. ஆறு அருவி பாயும் அருங்குளம்

ஆறே அருவி அகங்குளம் ஒன்றுண்டு
நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
கூறே குவிமுலை கொம்பனை யாளொடும்
வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.

சீவனின் சென்னியில் உள்ள சகசிரதளம் என்னும் குளத்தை, உடலின் ஆறு ஆதாரங்களின் வழியே பாய்ந்து செல்லும் அருவியாகிய உயிர்சக்தி வந்து நிரப்பும். கீழே உள்ள உயிர்சக்தியை மேல்நோக்கிச் செலுத்தும் சிவகதி மிகவும் நுண்ணியது. சீவன் பெறும் சிவகதியின் முடிவில், குவிந்த முலைகளை உடைய சக்தி தேவியுடன் அனைத்துக்கும் வேறாக இருக்கும் மேலான சிவமும் விளங்கும்.
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை


#2980. என் பொன்மணி இறைவன் ஈசன்

அன்புள் உருகி அழுவன் அரற்றுவன்
என்பும் உருக இராப்பகல் ஏத்துவன்
என்பொன் மணியை இறைவனை ஈசனைத்
தின்பன் கடிப்பன் திருத்துவன் தானே.

இறைவன் என் மேல் காட்டிய பெருங் கருணையை எண்ணி எண்ணி நான் அன்பினால் உள்ளம் உருகுவேன்; அரற்றுவேன்; என்பு உருகுவேன்; இரவு பகல் பார்க்காமல் அவனை ஏத்துவேன்; என் பொன்மணி போன்றவன் என் ஈசன், என் இறைவன். அவனை நான் அன்பின் மிகுதியால் தின்பேன்; கடிப்பேன்; அவனை எனக்கு உரியவன் ஆக்கிக் கொள்வேன்!
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை


#2981. மனம் விரிந்து உரை மாண்டது முத்தியே

மனம்வி ரிந்து குவிந்தது மாதவம்
மனம்வி ரிந்து குவிந்தது வாயு
மனம்வி ரிந்து குவிந்தது மன்னுயிர்
மனம்வி ரிந்துரை மாண்டது முத்தியே.

மாதவம் என்பது என்ன என்று அறிவீரா?

உள்ளம் உலகக் கவர்ச்சியில் வெளியே சென்று, விரிந்து, பரந்து, பல துன்பங்களை அடைந்து, பின்பு அடங்கி ஓடுங்குவதே உண்மையான தவம்.
மனம் விரிந்து பின் அடங்கியவருக்கு பிராணனும் அடங்கி விடும்.
கும்பக நிலை வந்து பொருந்தும்.
விரிந்து பின்னர் குவிந்த மனம் உயிரில் ஒடுங்கும்.
அப்போது மௌனம் ஓங்கும்.
பேச்சு இல்லாத பேரானந்தம் ஏற்படும்.
இதுவே சீவனின் முத்திநிலை ஆகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்

இறைவனைப் புகழ்ந்து பாடுவது தோத்திரம்.

#2982. காய மின்நாட்டில் கண்டு கொண்டேன்!

மாயனை நாடி மனநெடுந் தேரெறிப்
போயின நாடறி யாதே புலம்புவர்
தேயமும் நாடும் திரிந்தெங்கள் செல்வனைக்
காயம்மின் நாட்டிடைக் கண்டுகொண் டேனே.

ஊனக் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து உறையும் மாயக் கள்வனைத் தேடி, மனம் என்னும் தேரில் ஏறி, அலைந்து திரிந்த நாடுகளின் கணக்கையோ அல்லது இயல்பையோ கூற முடியாது என்று புலம்பித் திரிவர் அறிவற்றவர்கள். நானும் அவ்வண்ணமே பல நாடுகளில் சென்று தேடித் திரிந்தேன். அவனைக் காணாமல் வருத்தம் அடைந்தேன். பின்னர் மின்னல் போலத் தோன்றி மறைகின்ற மனித உடலில் நான் தேடிக் காணமுடியாத ஈசன் இருப்பதைக் கண்டு கொண்டேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2983. முன்னியலில் முதல்வனைப் பன்னியவர்

மன்னு மலைபோல் மதவா ரணத்தின்மேல்
இன்னிசை பாட இருந்தவர் ஆரெனில்
முன்னியல் கால முதல்வனார் நாமத்தைப்
பன்னினர் என்றே பாடறி வீரே.

பிரணவ யோகம் பொருந்திய தலையின் மீது, சத்துவ அகங்காரத்தின் சிகரத்தில் இன்னிசை பாட இருப்பவர் யார் அறிவீரா ? முன்னமே பல காலமாக ஒப்பற்ற முதல்வனின் திரு நாமத்தைப் பன்னிப் புகழ்ந்தவர்களே அவர்கள் என்று அறிந்து கொள்வீர்!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2984. அத்தனைக் காணாதவன் பித்தன்

முத்தினின் முத்தை முகிழிள ஞாயிற்றை
எத்தனை வானோரும் ஏத்தும் இறைவனனை
அத்தனைக் காணாது அரற்றுகின் றேனையோர்
பித்தன் இவனென்று பேசுகின் றாரே.

முத்துக்களில் சிறந்த ஆணிமுத்துப் போன்றவனை, உதிக்கின்ற இளம் ஞாயிறு போன்று ஒளி வீசும் இறைவனை, அத்தனை வானோர்களும் ஏத்தும் என் இறைவனை, என் அத்தனைக் காணாமல் புலம்பித் திரிகின்ற என்னை ஒரு பித்தன் என்று உலகத்தோர் பேசுகின்றார்களே!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2985. புண்ணிய மூர்த்தியைப் போற்றுகின்றேனே!

புகுந்துநின் றான்எங்கள் புண்ணிய மூர்த்தி
புகுந்துநின் றான்எங்கள் போதறி வாளன்
புகுந்துநின் றானடி யார்தங்கள் நெஞ்சம்
புகுந்துநின் றானையே போற்றுகின் றேனே.

புண்ணியம் செய்தவர்களால் உணரப்படும் சிவசூரியன் என்னிடம் புகுந்து நின்றான். அவ்வண்ணம் புகுந்து நின்றவன் ஒரு போதறிவாளன். தன் அடியார்களின் உள்ளத்தில் அன்புடன் புகுந்து நின்றான் சிவன். அவ்வாறு என்னிடம் வந்து புகுந்து நின்ற என் புண்ணிய மூர்த்தியை நான் போற்றிப் புகழ்ந்து வழிபடுகிறேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2986. கீதக் கண்ணாடியில் கேட்டு நின்றேன்!

பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே.

சகசிரதளத் தாமரையில் இருக்கும் ஈசன், சீவர்களின் ஊனக் கண்களுக்குப் பூதக் கண்ணாடி வழியாகவும் தெரிய மாட்டான்.
அவன் வேதக் கண்ணாடியில் நோக்கும் அன்பர்களின் ஞானக்கண்களுக்கு வெளிப்படுவான்.
நீதிக் கண்ணாடியில் நிற்கின்றவர் மனதில் அவன் நிறைந்து உள்ளான். நான் அவனைக் கீதக்கண்ணாடியில் நாதமயமாகக் கண்டு கொண்டேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2987. நாதன் நாமம் ஓராயிரம் ஓதுமின்!

நாமம் ஓர் ஆயிரம் ஓதுமின் நாதனை
ஏமம் ஓர் ஆயிரத் துள்ளே இசைவீர்கள்
ஓமம்ஓர் ஆயிரம் ஓதவல் லார்அவர்
காமம் ஆயிரம் கண்டொழிந் தாரே.

சிவபெருமானை அவனது ஆயிரம் நாமங்களைக் கூறி வழிப்படுவீர்!ஓராயிரம் நன்மைகளையும், மேன்மைகளையும் நீர் அடைவீர்! சென்னி மேல் சிந்தையைச் செலுத்தி சிவபெருமானின் ஆயிரம் நாமங்களை ஓதுபவர்கள், ஆயிரம் அற்ப ஆசைகளில் இருந்து விடுபடுவர்!
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2988. தேற்றுகின்றேன் சிந்தை நாயகன் சேவடி

போற்றுகின் றேன்புகழ்ந் தும்புகழ் ஞானத்தைத்
தேற்றுகின் றேன்சிந்தை நாயகன் சேவடி
சாற்றுகின் றேன்அறை யோசிவ யோகத்தைப்
போற்றுகின் றேன்எம் பிரானென்று நானே.

சிவபெருமான் எனக்கு அளித்த ஞானத்தினால் நான் அவன் புகழைப் போற்றுகின்றேன். சிவன் சேவடிகள் சென்னிமேல் விளங்கும் விந்து நாதங்கள் என்று நான் தெளிவு அடைந்தேன். சிவயோகத்தில் பெருமையை எல்லோரும் அறியும்படி நான் பறை சாற்றுகின்றேன். சிவனை எம்பிரானென்று நான் புகழ்ந்து போற்றுகின்றேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2989. நானாவிதஞ் செய்து நந்தியை நாடுமின்!

நானா விதஞ்செய்து நாடுமின் நந்தியை
ஊனார் கமலத்தின் ஊடுசென்று அப்புறம்
வானோர் உலகம் வழிபட மீண்டபின்
தேனார உண்டு தெவிட்டலும் ஆமே.

பலவகைப் பட்ட தொண்டுகள் செய்து சிவபிரானை நீங்கள் நாடுவீர்! உடலில் உள்ள ஆறு ஆதாரத் சக்கரங்களில் நடுநாடி வழியே மேலே சென்று, வானோர் உலகம் உம்மை வழிபடுமாறு செய்து, மீண்டு வந்த பின்பு, தூய சிவானந்தத் தேனைத் தெவிட்டும் அளவுக்கு உண்ணலாம்.
 
ஒன்பதாம் தந்திரம்

21. தோத்திரம்


#2990. அந்தர வானத்தின் அப்புறம் ஆகுமோ?

வந்துநின் றான்அடி யார்கட்கு அரும்பொருள்
இந்திரன் ஆதி இமையவர் வேண்டினும்
சுந்தர மாதர் துழனியொன்று அல்லது
அந்தர வானத்தின் அப்புறம் ஆமே.

அடியவர் உள்ளத்தில் அரும் பெரும் பொருளான சிவம் வந்து நிலை கொள்வான். இந்திரன் முதலிய இமையவர் வேண்டிக் கொண்டாலும், அவர்களுக்குச் சுந்தர மாதர்களின் இன்னிசை விருந்து கிடைக்குமே அன்றி, அந்தர வானத்தின் அப்புறம் ஆகிய முத்தி கிடைக்குமோ?
 
Back
Top