Quotable Quotes Part II

ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2942. அண்டங் கடந்த அளவிலாத ஆனந்தம்

கண்டறி வார்இல்லைக் காயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத்
தொண்டர் முகந்த துறையறி யோமே

தான் எடுத்துள்ள உடலில் உறைகின்ற சிவனைக் கண்டறிந்தவர் இல்லை. எட்டுத் திசைகளிலும் உள்ள மனிதர்கள், “எல்லா இடங்களும் உள்ளான் சிவன்!” என்று ஏத்தித் தொழுவர். அண்டங்களைக் கடந்ததும், அளவில்லாத ஆனந்தம் ஆனதும் ஆகிய சிவனந்தத்தைத் தொண்டர்கள் அனுபவிக்கும் முறையினை நாம் அறியோம்!
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2943. கற்பனை இன்றிக் கலந்து நின்றான்

தற்பரம் அல்ல சதாசிவன் தான்அல்ல
நிட்களம் அல்ல சகள நிலையல்ல
அற்புத மாகி அனுபோகக் காமம்போல்
கற்பனை இன்றிக் கலந்துநின் றானே.

சிவன் ஒன்பது வித பேதங்களை உடைய தற்பரன் மட்டும் அல்ல. அவன் அருவுருவமான சதாசிவன் மட்டும் அல்ல. அவன் வெறும் அருவம் மட்டும் அல்ல. அவன் வெறும் உருவத்துடன் கூடியவன் மட்டுமல்லன். அற்புதம் போலத் தோன்றும் கற்பனையான காம இன்பத்தைப் போல் அல்லாமல், சிவன் சீவனின் ஆன்மாவில் உண்மையிலேயே பொருந்திப் பேரின்பத்தை அளிக்கின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2944. அகத்திற் கண் கொண்டு காண்பதே ஆனந்தம்

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே.

முகத்தில் பொருந்தியுள்ள புறக்கண்களால் புறவுலகில் உள்ள பொருட்களைக் கண்டு மகிழ்கின்றவர் முழு மூடர். அறிவுக் கண்ணைக் கொண்டு அக உணர்வை வளர்ப்பதே உண்மையில் சிவானந்தம் எனப்படும். மகள் தன் தாயிடம் அவள் தன் மணாளனோடு ஆடிய சுகத்தைக் கூறுமாறு கேட்டால் தாயினால் கூற முடியாது. அது போன்றே சிவானந்தத்தை அனுபவித்த குருநாதரிடம் மாணவன் அதைப் பற்றிக் கேட்டாலும் குருவினால் அதைக் குறித்துக் கூறமுடியாது! ஏனெனில் அந்த இன்பம் சொற்களுக்கு அப்பாற்பட்டது.
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2945. உப்பும் அப்பும் போலக் கலப்பர்!

அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே.

உப்பை நீரில் இட்டுக் கரைத்தால், உப்பு நீருடன் இரண்டறக் கலந்து விடும். அது போலவே சிவன் சீவனுடன் பொருந்தும் பொழுது அதனுடன் இரண்டறக் கலந்து விடுவான். பரன் என்னும் சீவனும் பராபரம் என்னும் சிவனும் இருவேறு பொருட்களாக இருக்க மாட்டார். ‘தத் த்வம் அசி’ என்ற மகாவாக்கியத்தில் ‘அசி’ பதம் அழிந்தவுடன், ‘தத்’என்ற சிவன் ‘த்வம்’ என்ற சீவனைத் தன்னைப் போன்ற உயர்ந்த பொருளாக மாற்றி விடும்.
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2946. கண்டார்க்கு அழகு காஞ்சிரத்தின் பழம்

கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க்கு அறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே.

காண்பதற்கு எட்டிப்பழம் மிகவும் அழகாக இருக்கும்! ஆனால் அது தின்பருக்குக் கசப்பைத் தரும். உலக வாழ்வும் அது போலவே காண்பதற்கு கவர்ச்சி நிறைந்ததாகவும், அனுபவித்தவருக்குக் கசப்பை அளிப்பதாகவும் இருக்கும்.
ஓர் இளம் பெண் வயதால் பக்குவம் அடைந்து மடந்தை ஆகிறாள். அது போன்றே உலக வாழ்வில் கசப்புற்ற சீவன் பக்குவம் அடைந்தவுடன், சிவன் சீவனிடத்தில் விளங்கி நிற்பான். சீவனும் சிவன் தரும் சிவானந்தத்தில் இன்பம் பெறும்.
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2947. உந்தியினுள்ளே உதித்தெழும் சோதி

நந்தி யிருந்தான் நடுவுத் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியின் உள்ளே உதித்தெழும் சோதியைப்
புந்தியி னாலே புணர்ந்துகொண் டேனே.

தத்துவக் கூட்டங்களின் நடுவே இருந்த சீவனிடம் சிவன் விளக்கம் பெற்றுத் திகழ்ந்தான். அவன் நன்கு விளக்கம் பெற்று விட்டதால் அவனை அடைவதற்குச் செய்கின்ற சமாதிப் பயிற்சி தேவை அற்றது ஆனது. ஒளிர்கின்ற சிவக் கதிரவன்
என் உந்தியில் உள்ள மணிபூரகத்தில் இருந்து உதித்து மேலே எழுந்தான்.
எந்தன் புத்தியினால் நான் அவனைப் புணர்ந்து நின்றேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2948. கற்பனை உதறிய பாழ்

விதறு படாவண்ணம் வேறிருந்து ஆய்ந்து
பதறு படாதே பழமறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்தந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்குகின் றானே

ஞான சாதனைகளால் நான் தளர்ச்சி அடையவில்லை;
நான் தத்துவங்களில் இருந்து வேறாக இருந்து ஆராய்ந்தேன்.
நடுக்கமும், தயக்கமும் இன்றி நாத சம்மியம் செய்தேன்.
கதறியபடி விலகி ஓடுகின்ற மாயையை விட்டு நீங்கினேன்.
கற்பனையைக் கடந்து நிற்கும் சிவச்சோதியில் நான் ஒடுங்கினேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2949. வாடா மலர் புனை சேவடி

வாடா மலர்புனை சேவடி வானவர்
கூடார் அறநெறி நாடொறும் இன்புறச்
சேடார் கமலச் செழுஞ்சுடர் உட்சென்று
நாடார் அமுதுற நாடார் அமுதமே.

வானவர்கள் வாடாத மலராகிய சகசிரதளத் தாமரையில் இருக்கின்ற சிவனுடைய செம்மையான திருவடிகளைச் சென்று பொருந்த மாட்டார்கள். அறநெறிகள் நாள்தோறும் தழைத்து வளரும் வண்ணம் மேன்மை பொருந்திய அக்கினி மண்டலத்தில் சென்று அமுதம் விளைவிப்பதையும் நாடார். விளைந்த அமுதத்தை அடையவும் அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2950. மதுக்கொன்றைத் தாரான் வளம் தரும்.

அதுக்கென்று இருவர் அமர்ந்த சொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறே சமைந்தாரைக் காண
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.

காம இனம் சுவைப்பதற்குத் தயாராக உள்ள இருவரில் ஒருவர் சொற்களைக் கேட்டதும் மற்றவருக்கு விரைவாகக் காம உணர்வு பொங்கி எழும். அது போலவே
தன் அந்தக் கரணங்கள் நான்கும் நன்கு விருத்தி அடைந்து இருப்பவரைக் கண்டவுடன், சிவன் தேன் சிந்தும் மஞ்சள் நிறக் கொன்றை மாலையினைப் போன்ற மஞ்சள் நிற ஒளியில் தோன்றி அந்தச் சீவனுக்கு இன்பம் அளிப்பான்.
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2951. நான் அறியேனே!

தானும் அழிந்து தனமும் அழிந்துநீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்துடன்
வானும் அழிந்து மனமும் அழிந்துபின்
நானும் அழிந்தமை நானறி யேனே.

சிவ சிந்தனையில் ஆழ்ந்திருந்த என்னிடம் உடல் பற்று அகன்றது;
எனக்குப் பொருட்களின் மீதிருந்த பற்று அகன்றது;
ஊனால் சமைக்கப்பட்ட என் உடல் வேட்கைகள் கெட்டன;
என் உயிர் பற்றும் அகன்று விட்டது;
புறவுலகினை நாடும் என் மனமும் அழிந்தது;
என் இச்சை என்பதும் அழிந்து விட்டது.
இவை அனைத்தும் எங்கனம் நிகழ்ந்தன
என்பதை நான் சற்றும் அறிகிலேன்!
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2952. உருளாத கல்மனம் உற்று நின்றேன்

இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்தவுள் ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கல்மனம் உற்றுநின் றேனே.

நான் இருள்மயமான தத்துவங்களையும் நோக்கவில்லை; ஒளிமயமான சிவனைச் சுட்டி அறியவும் இல்லை; வேறுபாடுகள் இன்றிச் சிவத்துடன் என் சீவன் பொருந்தியது. அந்த அருளால் என் தன்னிலை கெட்டு விட்டது. பிறழாத உறுதியான கல்லைப் போல என் மனம் அத்தன் சிவனை திருவடிகளில் பொருந்தும் வண்ணம் நான் நின்றேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2953. பல ஊழி கண்டேனே!

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.

என் உள்ளத்தில் பொருந்திப் பரமாகவும், அபரமாகவும் விளங்கும் என் ஈசனை நான் அறிந்து கொண்டேன்! என் உள்ளத்தில் நிலை பெற்றுச் சிவகதியை நான் அறிந்தேன்; சிவனும் சீவனும் ஒன்றாகிப் பொருந்தும் முறையினை நான் அறிந்து கொண்டேன். என்னுள்ளே விளங்கும் என் தலைவனுடன் நான் பொருந்திப் பல ஊழிகளைக் கடந்து நின்றேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

19. வரையுரை மாட்சி

வரை = எல்லை
உரை = தேய்வு
மாட்சி = பெருமை
வரை உரை மாட்சி = சீவன் தன்னை உணர்ந்து கொண்டு சிவனுடன் பொருந்தி இருக்கும் அளவற்ற பெருமை

#2954. தூமொழி வாசகம் சொல்லுமின்

தான்வரைவு அற்றபின் ஆரை வரைவது?
தான்அவ னானபின் ஆரை நினைவது?
காமனை வென்றகண் ஆரை உகப்பது?
தூமொழி வாசகம் சொல்லுமின் நீரே!

சீவ எல்லையைக் கடந்து சிவத்துடன் இணைந்த பின்பு, ஆன்மா வேறு எவருடன் சென்று பொருந்த வேண்டும்?
தானே அவனாக ஆகிவிட்ட பிறகு, சீவன் வேறு யாரைப் பற்றி எண்ணமிட வேண்டும்?
கவர்ச்சியான உலக இச்சைகளை வென்று விட்டவருக்கு, வேறு என்ன கவர்ச்சி இருக்க முடியும்?
நீங்களே ஆராய்ந்து நல்ல மொழியை விடையாகக் கூறுங்கள்!
 
ஒன்பதாம் தந்திரம்

19. வரையுரை மாட்சி

#2955. திரையற்ற நீர் போன்ற சிந்தை

உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்று இருந்தான் புரிசடை யோனே.

மொழிகளைக் கடந்த மேன்மை படைத்த சிவனை மொழிகளால் கூற முயல்கின்ற அறிவிலிகளே! எல்லை அற்ற சிவத்தை வெறும் வாய் வார்த்தைகளால் வரையறுத்துக் கூறவும் இயலுமோ? அலைகள் ஓய்ந்த ஆழ் கடலைப் போன்ற தெளிந்த சிந்தை உடையவர்களுக்குப் புரிசடையோன் சிவன் மறைவின்றித் தானே வெளிப்படுவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

19. வரையுரை மாட்சி

#2956. தன்னை ஆய்ந்து இருப்பது தத்துவம்

மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்
மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லை
பினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டா
தனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே.

மனதின் நினைவு அலைகளே மனிதனைத் தளைப்படுத்துகின்ற மாயை ஆகும். இவையே மன மயக்கத்தைத் தருகின்றன.
மனம் படைக்கும் கற்பனைகளை அழிக்க, மன நினைவுகளை முதலில் அழிக்க வேண்டும். வேறு உபாயம் ஒன்றும் இல்லை.
அழிக்கப்பட வேண்டிய பொருள் என்று வேறு எதுவும் இல்லை.
வீண் பிதற்றலில் காலத்தைக் கழிக்காமல் செயல்படுங்கள்!
ஆன்மா தன் உண்மை வடிவத்தை ஆராய்ந்து அறிந்து கொண்டு அடங்கி இருப்பதே அதற்கு மேன்மை தரும்.
 
20. அணைந்தோர் தன்மை

சிவனை அடைந்து மோனத்தில் இருப்பவர்களின் இயல்பு

#2957. மலமில்லை மாசில்லை

மலமில்லை மாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே.

சிவகுருவாகிய நந்திப் பிரானைத் தன் ஞானத்தினால் உறுதியாகப் பொருந்திச் சிவனைத் தன் அன்பிலே கட்டி வைத்துள்ளவர்களிடத்தில் சீவன்களைப் பற்றியிருக்கும் மலங்கள் இரா!
அதனால் அவற்றால் விளையும் மாசுக்கள் இரா!
மானம், அபிமானம், குலம், கொள்ளுங்குணம் என்ற எதுவுமே இரா! உயிர்களின் மீதோ, இனத்தின் மீதோ அல்லது பொருட்களின் மீதோ எந்தப் பற்றும் இராது. தாமச, ராஜஸ, சத்துவ குணங்கள் இரா!
அதனால் அந்த சீவனிடன் எந்தச் சுயநலமும் இராது!
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை

#2958. சிவனைக் கண்டேனே!

ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன் றானேன்
அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே.

நன்மைகளை மட்டுமே அருளுகின்ற நம் சிவபெருமானைக் கண்டேன்! அதனால் என் பிறவிப் பிணியை ஒழித்தேன்!
என்னைத் தளைப்படுத்தி இருந்த பாசங்களைக் கை கழுவினேன்.
'சிவனும், நானும் ஒன்றே!' என்னும்படி ஆகிவிட்டேன்.
சிவத்துடன் பொருந்திவிட்ட நான் இறப்பதையும் மீண்டும் வந்து உலகில் பிறப்பதையும் விரும்ப மாட்டேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை

#2959. குறை ஒன்றும் இல்லையே!

ஆலைக் கரும்பும் அமுதும்அக் காரமும்
சோலைத் தண்ணீரும் உடைத்தெங்கள் நாட்டிடைப்
பீலிக்கண் அன்ன வடிவுசெய் வாளொரு
கோலப்பெண் ணாட்குக் குறை யொன்றும் இல்லையே.

ஆலையில் பிழியப்பட்ட கருப்பஞ்சாறு, இனிய பால், வெல்லம், சோலையின் குளிர்ந்த நீர் இவற்றை போன்ற இனிமை வாய்ந்த சிவானந்தம் என்பது எமது சிவபூமியில் உள்ளது! மயில் பீலியின் கண் போன்று ஒளியை வீசுகின்ற அழகிய சக்தி தேவியால் அந்தச் சிவ பூமியில் உள்ளவர்க்கு எந்தக் குறையும் இல்லையே!
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை

#2960. சீரார் பிரான் என் சிந்தை புகுந்தான்

ஆராலும் என்னை அமட்டஒண் ணாதிதினிச்
சீரார் பிரான்வந்தென் சிந்தை புகுந்தனன்
சீராடி அங்கே திரிவதால் லால் இனி
யார்படுஞ் சாரா அறிவறிந் தேனே.

எல்லாத் தத்துவங்களையும் கடந்து இருக்கின்ற சிவபெருமான் என்னிடம் வந்து என் சிந்தையில் குடி கொண்டான். அதனால் இனிமேல் என்னை எந்தத் தத்துவமும் கட்டுப்படுத்தாது. இனிச் சிவ பூமியில் சிவனுடன் சீராடித் திரிவேனே அன்றிப் பிற தத்துவங்களுடன் கூடி நான் அறிய வேண்டியது எதுவும் இல்லை!
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை

#2961. சிவகதி செல்லும் நிலை

பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.

பிரமன் என்னைப் பிறவிப் பிணியில் பிணித்தான். ஆனால் நான் அதைத் துறந்து, அதிலிருந்து பிரிந்து விட்டேன். சிவநெறியை அடையும் வழியை நான் அறிந்து கொண்டேன். மனம் என்ற வாளால் என் பழய வினைகளை அறுத்து விட்டேன். என் திரிபுரமாகிய பருவுடல், நுண்ணுடல், காரண உடல் என்ற மூன்றையும் கெடுத்து விட்டு நான் என் குறிக்கோளை நோக்கி முன்னேறுகின்றேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை

#2961. சிவகதி செல்லும் நிலை

பிரிந்தேன் பிரமன் பிணித்ததோர் பாசம்
தெரிந்தேன் சிவகதி செல்லும் நிலையை
அரிந்தேன் வினையை அயில்மன வாளால்
முரிந்தேன் புரத்தினை முந்துகின் றேனே.

பிரமன் என்னைப் பிறவிப் பிணியில் பிணித்தான். ஆனால் நான் அதைத் துறந்து, அதிலிருந்து பிரிந்து விட்டேன். சிவநெறியை அடையும் வழியை நான் அறிந்து கொண்டேன். மனம் என்ற வாளால் என் பழய வினைகளை அறுத்து விட்டேன். என் திரிபுரமாகிய பருவுடல், நுண்ணுடல், காரண உடல் என்ற மூன்றையும் கெடுத்து விட்டு நான் என் குறிக்கோளை நோக்கி முன்னேறுகின்றேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை

#2962. உலகுக்கு ஒரு தெய்வம்

ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குஉயி ராவது
நன்றுகண் டீர்இனி நமசிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே.

உலகுக்கு ஒரே தெய்வமாகப் பேரொளிப் பிழம்பாகிய சிவன் இருப்பதைக் கண்டு கொண்டீர்!
சிவனே உலகத்துக்கு உயிராக இருந்து அதை இயக்குவதை அறிந்து கொண்டீர்!
'நமசிவாய' என்னும் சிவக்கனி உயிர்த் தொகைகளுக்கு நன்மைகள் செய்வதைக் கண்டு கொண்டீர்!
நான் அந்த சிவக்கனியை உண்டதால் அதன் இனிமையை நன்கு அறிந்து கொண்டேன்!
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை

#2963. ஆதியும் அந்தமும் இல்லா அரும்பொருள்

சந்திரன் பாம்பொடும் சூடும் சடாதரன்
வந்தென்னை யாண்ட மணிவிளக்கு ஆனவன்
அந்தமும் ஆதியும் இல்லா அரும்பொருள்
சிந்தையின் மேவித் தியக்குஅறுத் தானே.

ஒளி வீசும் சந்திரனையும், பாம்பையும் சூடுபவன் சடாதரன் ஆகிய சிவபெருமான். தானே வந்து என்னை ஆட்கொண்ட மணிவிளக்கு அவன். ஆதியும், அந்தமும் இல்லாத அரும்பொருள் ஆகிய சிவன் என் சிந்தையில் வந்து பொருந்தி, என் அறியாமையால் விளைந்த மயக்கத்தைத் தீர்த்து வைத்தான்!
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை

#2964. வெறுமனம் ஆகவேண்டும்!

பண்டுஎங்கள் ஈசன் நெடுமால் பிரமனைக்
கண்டுஅங்கு இருக்கும் கருத்தறி வாரில்லை
விண்டு அங்கே தோன்றி வெறுமனம் ஆயிடில்
துண்டு அங்கு இருந்ததோர் தூறுஅது வாமே.

முன்பே ஈசன் நெடுமாலையும், பிரமனையும் படைத்தான். சிவன் அவர்களுடனேயே விளங்குகின்றான். இந்த உண்மையை ஆராய்ந்து அறிந்து கொள்பவர் எவரும் இல்லை. நான்முகன், திருமால் போன்ற தெய்வங்கள் இயக்குகின்ற உடல் தத்துவத்தைக் கடந்து, எண்ணங்கள் அற்ற நிலையை சீவன் அடைந்துவிட்டால், பிரணவ வடிவினன் ஆகிய சிவன், அந்தச் சீவனைத் தன் ஆதனமாகக் கொண்டு அங்கு அமர்வான்.
 
ஒன்பதாம் தந்திரம்

20. அணைந்தோர் தன்மை

#2965. அன்னையும், அத்தனும்

அன்னையும் அத்தனும் அன்புற்றது அல்லது
அன்னையும் அத்தனும் ஆரறி வார்என்னை
அன்னையும் அத்தனும் யானும் உடனிருந்து
அன்னையும் அத்தனை யான்புரந் தேனே.

அன்னையும், தந்தையும் ஆன சிவபெருமான் என்னிடம் அன்பு கொண்டு என்னைப் பாதுகாக்கின்றான்.
அவன் அங்ஙனம் செய்யாவிட்டால் என்னைப் பெற்ற தாய், தந்தையர் எவ்வாறு என்னைப் பாதுகாக்க முடியும்?
தாய், தந்தையருடன் நானும் சேர்ந்து கொண்டு சிவ சக்தியரிடம் அன்பு கொண்டேன்!
 
Back
Top