Quotable Quotes Part II

ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2917. வலம்புரி வாய்த்தது!

அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்தி
முடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்து
மடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே.

ஆத்தி மரம் போன்ற சீவனின் முதுகுத் தண்டுக்கு அடியாக இருப்பது கீழேயுள்ள மூலாதாரம். முடியாக இருப்பது சிரசு. அதன் உச்சியில் மூங்கிலின் முக்கண்கள் போல மூன்று கலைகள் அமைந்துள்ளன. அவை முறையே கதிரவக் கலை, திங்கள் கலை, அக்கினிக் கலை ஆகும். சாதகனின் பயிற்சியால் வளர்ச்சி அடைந்து இவை மூன்றும் ஒன்றாகிவிடும். அப்போது கொடி, படை போலச் சீவனுக்குத் துன்பம் தருகின்ற ஞானேந்திரியங்களும், கர்மேந்திரியங்களும் அழிந்து போகும். அங்கு வலம்புரிச் சங்கத்தின் நாதம் ஒலிக்கும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2918. பன்றி, பாம்பு, பசு, வானரம்

பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்
குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.

மனித மனம் பன்றியைப் போலத் தூய்மை இன்மையில் விருப்பம் கொண்டது. பாம்பு போலப் பகைமையில் சீற்றம் கொண்டது. பசு போலத் தீமையில் அடக்கம் கொண்டது. வானரம் போல அடங்காமல் திரிவது. இத்தகைய உள்ளத்துடன் பொருந்தாமல் மனிதன் சிவத்துடன் பொருந்த வேண்டும். தராசுத் தட்டுக்கள் போல இவை இரண்டும் சமம் ஆனால் அந்த சீவனின் குறைவுகள் குறைந்து அதன் நிறைவுகள் வளரும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2919. கட்டு வீட்டாருக்கு அன்றிக் காண ஒண்ணாது!

மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்
பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே.

சீவனின் தலையில் சகசிரதளத் தாமரை மொட்டு ஒன்று உள்ளது. பாசத்தில் இருந்து விடுபட்ட சீவன், அந்த ஆயிரம் இதழ்த் தாமரை மொட்டு மேல் நோக்கி விரிவதைக் காண இயலும். உடல் பற்றினைத் துறந்து விட்டுத் தத்துவங்களின் கூட்டமாகிய உடல் கெடும்படிச் செய்து, அதனை ஒளியாகக் கண்டு, தம் உள்ளத்தில் குடியேறிய பற்றுக்களை அறவே துறந்தவர்களால் மட்டுமே அந்த ஆயிரம் இதழ்த் தாமரை விரிவதைக் காண இயலும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2920. நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்

நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்
யாவரும் என்றும் அறியவல் லார்இல்லை
கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
தேரின் இந் நீர்மை திடரின்நில் லாதே.

சீவனின் சென்னியில் உள்ள சகசிரதளம் என்னும் நிலத்தில் நீர் பாயாமல் சீவனின் உணர்வு பாயும். ஞான சாதனை செய்பவருக்கு இந்த நிலம் மரகத்தைப் பச்சை நிறத்தில் இருக்கும். இதைக் கண்டு அறிந்தது கொள்ள வல்லவர் எவரும் இலர். மிகுந்த மழையினால் பெருகும் நீர் போலச் சீவனின் உணர்வினால் பெருகும் இந்த நீர், ஐம்பொறிகளின் வசப்பட்ட மனம் என்ற திடர் நிலத்தில் பொருந்தி இருக்காது! அங்கு தங்காது.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2921. நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்

கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்
மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே

இருளில் மூழ்கி இருக்கும் கோட்டானைப் போலச் சீவன் அறியாமை என்ற இருளில் மூழ்கிக் கிடைக்கும். குருவின் உபதேசத்தால் உண்மையை உணர்ந்து கொண்ட சீவன் ஒளிமயமான குருந்தின் மீது ஏறும்.

இந்த உலகத்துக்குக் காரணம் முக்குணங்கள் கொண்ட மாயை என்ற உண்மையைச் சீவன் அறிந்து கொள்ளும். மண்டலமிட்ட பாம்பு போன்ற குண்டலினி சக்தி உடலின் ஆதாரங்களின் வழியே மேலே ஏறிச் செல்லும்.

அது சென்னியில் உள்ள மேல் நோக்கிய சகசிரதளத்தில் சென்று பொருந்தும். அங்கு நாதத்தை எழுப்பும்! அதனால் பொறிகளின் வசப்பட்டுப் பிறந்து இறந்து கொண்டிருந்த சீவன், பிறவிப் பிணியைத் துறந்துவிட்டுத் தானும் சிவம் ஆகிவிடும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2922. வாழையும் சூரையும் வன்துண்டம் செய்மின்!

வாழையும் சூரையும் வந்திடம் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
வாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே.

சீவனின் இருவினைப் பயன்களாகிய வாழையைப் போன்ற இன்பமும், சூரயைப் போன்ற துன்பமும் தாமே வலிந்து வந்து சீவனைச் சேரும். “இன்பத்தை விடவும் துன்பம் வலியது!” என்று உரைப்பர். “இன்பம், துன்பம் என்ற இரண்டும் சீவன் கொண்டுள்ள உடல் பற்றினால் விளைகின்றவை!” என்ற உண்மையைச் சீவன் புரிந்து கொள்ள வேண்டும். அவை இரண்டையும் சமமாக எண்ணிக் கொண்டு அவற்றைக் களைய வேண்டும். நிலையான சிவத்தைப் பற்றிக் கொண்டு வாழ வேண்டும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2923. புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்

நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்
விலக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாது
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.

சுவாதிட்டானம் என்ற நிலத்தைச் சீவன் என்ற வேடன் தோண்டுவான். அங்கு உப்புநீர்க் கடலில் சென்று வீரியம் என்னும் கொழுத்த மீனைக் கொண்டு வருவான். அந்த மீனை நழுவ விட்டு விடாமல் நன்கு பாதுகாத்து வாருங்கள். அப்போது எவர் வேண்டினாலும், அவருக்குக் குறைவில்லாத சிவம் என்ற செல்வம் கிடைக்கும். அந்த சீவனும் மெல்ல மெல்லப் பக்குவப் பட்டுத் தானே சிவம் ஆகி விடுவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2924. விளிப்பதோர் சங்குண்டு

தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்துகொள் வார்க்கே

அசைவுகளே அனைத்து சிருஷ்டியின் அடிப்படை ஆகும். அந்த அசைவு உணர்வில் சீவனின் உடல் வளர்ச்சி அடையும். சீவன் சிவனை அழைக்கும் சங்கின் நாதம் அங்கு இருக்கும். அந்த ஓசையின் மூலம் சிவனை அடைவது சீவனுக்கு இன்பம் தரும்.
“சீவன் சிவனை நடுவதால் சந்திரனுக்கும், சூரியனுக்கும், சுழுமுனையில் இடம் கிடைக்கும்!” என்ற உண்மையை ஆராய்ச்சி செய்பவர் அறிவர்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2925. படை கண்டு மீண்டது பத்தி வழியில்!

குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே

சித்தம் என்னும் கோவில் எருமை, உடல் என்னும் குடையை விட்டுவிட்டு, நாதசம்மியம் என்பதை நோக்கிச் சென்றது. பாதி வழியில் உலக விஷயங்கள் என்ற படையினை எண்ணியபோது அது மீண்டும் உடலையே வந்து அடைந்தது. ஆன்மா என்னும் எஜமானன் புத்தி என்னும் மந்திரியின் உதவியுடன் உண்மையை உணர்ந்த பின்பு ஒன்பது துவாரங்களின் வழியே மனம் செல்வது நின்றுவிடும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2926. பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே

சீவனின் உலகில் இருந்து வெளிப்படும் சந்திர கலையினாலும், உடலின் உள்ளே புகுகுன்ற கதிரவக் கலையாலும் உடலில் உள்ள ஒன்பது துவாரங்களும் செயல்படத் தொடங்கும். உடலைச் செலுத்தும் பாகன் ஆகிய சீவன்; குண்டலினி சக்தி, சந்திரகலை, மற்றும் நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி என்ற நான்கு கலைகளையும் நன்கு அறிந்து கொண்டு செயல் புரிந்தால் மேன்மை அடைவான். அன்றேல் சீவன் பன்றியைப் போல இழிந்த நிலையை அடைவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2927. தூசி மறவன் துணை வழி எய்துமின்!

பாசி பாடர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே.

சீவனின் சித்தம் என்ற நீர் நிலையில் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சர்யம் என்று ஆறு பகைவர்கள் பாசி போலப் படர்ந்துள்ளன. பாசத்தில் தளைப்பட்ட சீவன் என்னும் கொக்கு, அந்த நீர் நிலையில் நின்று கொண்டு, விஷய இன்பம் என்ற இரையைத் தேடி உண்கின்றது. ஆனால் ஒளி மயமான கொடியினை உடைய வீரன் சிவனின் துணை கிடைத்தவுடன், சீவனை இருளாகப் பீடித்து இருந்த பாசம் அழிந்து ஒழிந்து விடும்
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2928. மணங்கொள்வன் ஈசனே.

கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூவுடைப் பூவக்குள்
வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.

குடத்தைப் போல உள்ளது மனிதனின் சிரசு. அந்தத் தலை உடலின் மலை போன்றது. அந்த மலையில் மேல் நோக்கியுள்ள சகசிரதளம் என்ற கொம்பு ஒன்று உண்டு. சீவனின் உணர்வு என்னும் பிராணன் அந்த சகசிரதளத்தில் சென்று மோதும். அப்போது சிவானந்தம் என்னும் மலரில் சிவம் என்னும் வண்டு சென்று பொருந்தி நாதத்தை எழுப்பும். அந்த நாதம் சிவனைச் சீவனுடன் உறவு கொள்ளச் செய்யும். சீவனுடைய உணர்வு உலகியலில் இருந்து விலகி சகசிரதளத்தை நோக்கிச் சென்றால், ஈசன் தானே வெளிப்பட்டு அருள் புரிவான்!
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2929. வீணையும் தண்டும்

வீணையும் தண்டும் விரவி இசைமுரல்
தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது
வாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே.

வீணையின் இசையையும், குழலின் இசையையும் கலந்து ஒலிக்கச் செய்பவன் சிவன். அவன் சீவனைக் கேவல நிலையில் இருக்கும் கும்பகத்தை அடைவித்தான். சீவன் செய்கின்ற வாணிகம் எதுவென்றால் தன்னையே சிவனுக்கு கொடுப்பதும் அதற்கு மாற்றாக சிவனையே தான் கொள்வதுமாகும். எனவே சீவனின் உரிமை சிவனின் உரிமை ஆகிவிடும்!
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2930. ஆய்ந்து அறிவார் எவர்?

கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது
வங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லை
திங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே

சிவானந்தம் என்னும் திகட்டாத தேனை வாங்கியும், அதற்குப் பிரதியாகத் தன்னையே கொடுத்தும், சிவனுடன் சீவன் நிகழ்த்தும் வாணிபம் செய்யும் தன்மை அறிந்தவர் துரிய பூமியைச் சென்று அடைந்தவர் மட்டுமே. அனுபவத்தால் மட்டும் இது அறியப்படுவது அன்றி ஆராய்ச்சியால் அறியப்படுவது அன்று!

திங்கள் மண்டலத்தை அடைந்தவர் அறிவர் ‘அறியாமை என்னும் இருளே சீவனின் உண்மையான வடிவம்’ என்னும் உண்மையை. அந்தத் திங்கள் மண்டலத்தில் தங்கி இருப்பவர்கள் உண்மையிலேயே இந்த பூமியைத் துறந்தவர் ஆவர்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2931. போது புலர்ந்து பொன்னிறம் கொண்டது!

போதும் புலர்ந்தது பொன்னிறங் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதமில் ஈசன்இயங்கு நெறியிது
மாதர் இருந்ததோர் மண்டலம் தானே.

சீவனின் சகசிர தளத் தாமரை மலர் நன்கு விளக்கம் அடைந்தது. அது அழகிய பொன்னிறத்துடன் விளங்கியது. புன்னைப் பூவின் மகரந்தம் போன்ற அதன் அணுக்கள் இரு மருங்கிலும் ஒதுங்கி நின்றன. குற்றமற்ற சிவன் இயங்கிகின்ற இடம் இதுவே ஆகும். காதல் வயப்பட்ட சீவனும், அது காதலிக்கும் சிவனும் இணையுமிடம் இதுவே.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2932. ஐந்து உண்ணலாம்!

கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலே
காமுற்று அகத்தி இடுவர் கடைதொறும்
மீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாமுற்ற அதட்டினால் ஐந்துண்ண லாமே.

ஆன்மாவுடன் பொருந்தியுள்ள தத்துவங்கள் தத்தம் விருப்பம் போலச் செயல்படும். சீவனின் உடலில் ஆசைத் தீயை மூட்டி விடும். சிவன் அவற்றை அச்சுறுத்தி அவற்றுக்கு வசப்படாமல் சீவன், அழிவற்ற இடத்துக்குச் செல்லும் வழியைக் காட்ட வேண்டும். அப்போது சீவன் தன்னைப் பிடித்திருக்கும் ஐந்து கோசங்களில் இருந்து விடுபட்டு அவற்றைக் கடந்து செய்ய முடியும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2933. காட்டிக் கொடுத்தவர் கை விட்டவாறே!

தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்
மூட்டிக் கொடுத்து முதல்வனை முன்னிட்டு
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

சாதனை செய்யும் பொழுது நிட்டை கைவராமல் போகலாம்! அல்லது எளிதாகக் கலைந்து போய்விடலாம். அதற்காகச் சீவன் மீண்டும் புறத்தே சென்று சரியை கிரியை முதலியற்றைச் செய்வதால் என்ன பயன் விளையும்? முதல்வனை முன்னிட்டு நிட்டை கூடுவதற்கு உபதேசம் செய்தவர் குருநாதர். ஆயினும் நிட்டையைச் சாதிப்பது மாணவனின் கடமை.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2934. புலர்வதில்லை பொழுது!

புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பின் அவளொடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே.

நாட்காலையில் கதிரவனின் ஒளி உண்டானதும் பறவைகள் சிலம்பும். அது போலவே, உடலில் ஞான ஒளி தோன்றியவுடன் சிவ தத்துவங்கள் என்னும் பறவைகள் ஓசை எழுப்பும். அந்த ஒளி தோன்றும் போது சிற்சக்தி சீவனின் தலையில் வந்து பொருந்துவாள். சிற்சக்தியுடன் சீவன் பரபோகத்தில் திளைத்துவிடும். எப்போதுமே ஒளியுடன் விளங்கும் சீவனுக்குப் பொழுது விடியல் என்று எதுவும் இராது.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2935. ஆணி கலங்கில் சீவன் சிவமாகும்!

தோணி ஒன்று உண்டு துறையில் விடுவது
வாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடை
ஆணி கலங்கில் அதுஇது வாமே.

சீவன் அறிவாகாயப் பெருவெளி என்னும் துறையைச் சென்று சேர வேண்டும்! இதற்கு உதவி செய்வது பிரணவம் என்னும் தோணி. அந்தப் பிரணவ ஒலி தோன்றாத வரையில் சீவன்; நான்முகன், திருமால். உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்னும் ஐவரின் ஆளுமையில் அடங்கி இருக்கும். தன்னையே தந்து சிவனைப் பெற்றுக் கொள்ளும் வாணிபம் செய்வதற்கு அறிவு ஆகாய பெருவெளிக்குச் செல்லும் சீவன், தன் உடல் பற்றினைத் துறந்து விட்டால், அப்போதே சிவத்துடன் பொருந்தித் தானும் சிவம் ஆகிவிடலாம்.
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

சகச நிட்டை எனப்படும் இது சீவன் மௌனத்தில் ஒடுங்குவது ஆகும்.
சீவன் பிரணவ யோகத்தால் இந்த நிலையை அடைய முடியும்.

#2936. மோன சமாதி

நின்றார் இருந்தார் கிடந்தார் எனஇல்லை
சென்றார்தம் சித்தம் மோன சமாதியாம்
மன்றுஏயும் அங்கே மறைப்பொருள் ஒன்றுண்டு
சென்றாங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே.

நின்றார், இருந்தார், கிடந்தார் என்பதோ; ஆதனம், காலம், திக்கு என்பனவும் மோன சமாதி செய்கின்ற பிரணவ யோகிக்குக் கிடையாது. சித்தம் அடங்க நாதாந்த நிலையில் நிலைத்து இருப்பதே மோன சமாதி ஆகும். சீவனின் சென்னியின் மேலே உள்ள அறிவாகாயப் பெருவெளியில் சிவம் இருக்கின்றது. சீவன் நாத வழியில் சென்று நாதாந்தத்தை அடைய வேண்டும்.
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2937. குரு நந்தி கூட்டினால் யோகம் கைக்கூடும்

காட்டும் குறியும் கடந்த அக் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத்து என்பயன்?
கூட்டும் குருநந்தி கூட்டிடின் அல்லது
ஆட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.

காணப்படும் குறிகளையும், அடையாளங்களையும் தாண்டி நிற்பவன் சிவன். அந்தப் பெருமானைப் பற்றி நூல்களில் எழுதி வைப்பதால் மட்டும் என்ன பயன் விளையும்? சிவகுரு தன் அருள் காட்டி ஞானத்தை வழங்கினால் மட்டுமே சீவன் ஞானம் பெற முடியும். வெறும் எட்டுப் படிப்பு மட்டும் படிப்பது, ஆட்டின் கழுத்தில் இருக்கும் அதர் போலச் சிறிதும் பயனற்றது ஆகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2938. உணர்வுடையார் உணர்ந்து காண்பார்!

உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே.

சிவ உணர்வு நிரம்பியவர்களுக்குத் தாம் இருக்கும் இடத்தில் இருந்தே உலக நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். அவர்கள் எது நேர்ந்தாலும் கவலையோ, துன்பமோ அடைய மாட்டார்கள். சிவ உணர்வை நிரம்பப் பெற்ற குருநாதர் மாணவனுக்கு அதை உணர்த்த இருக்கும் போது, மாணவன் தானே தன் அனுபவத்தால் சிவத்தைக் காணும் பேறு பெறுவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2939. உறக்கமின்மை போகத்தில் உறங்குவான்

மறப்பது வாய்நின்ற மாயநன் னாடன்
பிறப்பினை நீங்கிய பேரரு ளாளன்
சிறப்புடை யான்திரு மங்கையும் தானும்
உறக்கமில் போகத்து உறங்கிடுந் தானே.

மௌன யோகி தனக்கு இந்த உலகம் புலப்படாதவாறு அமைந்து இருப்பான். அவன் மீண்டும் பிறவி எடுக்க வேண்டிய தேவை இல்லாதவன். பிறருக்கும் அருளும் வல்லமை படைத்தவன். அனைத்துச் சிறப்புகளும் பொருந்தியவன். சிவ சக்தியருடன் தானும் பொருந்தி இருப்பவன். அதனால் தன்னை நன்கு அறிந்து கொண்டவனாகவும், இந்த உலகை அறியாதவனாகவும் இருப்பான் ஒரு மௌன யோகி.
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2940. விரிவும், குவிவும், விழுங்கியும், உமிழ்ந்தும்!

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரையில் அநுபூ திகத்தினுள் ளானே

துரியங்கள் மூன்று. அவை சீவ துரியம், பர துரியம், சிவ துரியம் என்பர். இந்த மூன்றையும் கடந்து விளங்கும் ஒரு பேரொளி. அரிதாகிய துரிய நிலைக்கு மேலேயுள்ள இந்த மூன்று நிலைகளிலும் சாதகன் பொருந்தியும், விரிந்தும், குவிந்தும், விழுங்கியும், உமிழ்ந்தும், சொற்களைக் கடந்த அற்புதமான அனுபவங்களைப் பெறுகின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

#2941. என் மனம் புகுந்த மருவிலி

உருவிலி ஊனிலி ஊனம்ஒன்று இல்லி
திருவிலி தீதிலி தேவர்க்கும் தேவன்
பொருவிலி பூதப் படையுடை யாளி
மருவிலி வந்துஎன் மனம்புகுந் தானே.

சிவனின் தன்மைகள் என்ன என்று அறிவீர்களா?
சிவன் மாயையின் காரியமாகிய உருவம் என்று ஒன்றும் இல்லாதவன்;
சிவன் ஊனால் ஆகிய உடல் என்று ஒன்றும் இல்லாதவன்;
சிவன் எந்தக் குற்றமோ, குறையோ இல்லாதவன்;
சிவன் சக்தி தேவியையே தன் உடல் ஆகக் கொண்டவன்;
சிவன் தீமைகள் எதுவும் செய்யாதவன்;
சிவன் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவன்,
ஆகிய ஐந்து தெய்வங்களுக்கும் தலைவன் ஆனவன்.
தனக்கு ஒப்பர் என்று எவருமில்லாதவன்;
பூதப் படைகளை உடையவன்;
தான் எல்லாவற்றுக்கும் ஆதாராம் ஆகுபவன்.
ஆனால் தனக்கு என்று ஆதாரம் எதுவும் இல்லாதவன்.
இத்தனை பெருமைகள் வாய்ந்த சிவன் என் உள்ளத்தைத்
தன் இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்துள்ளான்.
 
Back
Top