Quotable Quotes Part II

ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2892. புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.

குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.

குலைத்து நிற்கும் முக்குணங்களைக் கலக்கி விட்டால் வெள்ளெலி ஆகிய சீவன் நிலை பெற்று நிற்காமல் அந்த முக்குணங்களின் வயப்பட்டு நிற்கும். அந்தச் சீவன் குண்டலினியின் நெருப்பில் இருக்கும் பொழுது சீவனைப்பற்றி இருந்த முக்குணங்களும் ஓடி மறைந்து விடும். அங்ஙனம் இல்லை என்றால் முக்குணங்கள் அகலாமல் அங்கேயே இருக்கும். சீவனிடம் உடல் பற்று இருக்கும் வரையிலும் முக்குணங்களின் தாக்கமும் இருக்கும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை

#2893. மூடு புகாவிடின் மூவனை யாமே.


காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி
கூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும்
மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம்
மூடு புகாவிடின் மூவணை யாமே.

அறியாமையில் அழுத்துகின்ற ஆன்மத் தத்துவங்களின் காட்டில் புகுந்துவிட்டவர் சிவபூமியைக் காண மாட்டார். அங்ஙனம் காண இயலாதபடி மறைத்து நிற்பவை ஐம்பொறிகளும், ஆறு மனமலங்களும் ஆகும். இந்த மறைப்பினை அகற்றி விட்டால் சீவன் சீவதுரியம், பரதுரியம், சிவ துரியம் என்ற மூன்றையும் காண இயலும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2894. ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.

கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.

வண்ண ஆடைகள், நறுமணப் பொடிகள், மூங்கில் குழாயில் வைக்கப்பட்ட வாசனை எண்ணெய், கழுத்தில் காறை, இடையின் நாண், கையில் வளையல்கள் இவற்றால் அலங்கரிக்கப்பட்ட பெண்களைக் கண்டு மோகம் கொண்டவரின் நிலை என்ன ஆகும்? பாறையின் மீது வைக்கப்பட்ட ஆடை பறந்து செல்வதைப் போல இவர்கள் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மார்சரியம் என்ற ஆறு குழிகளில் அழுந்தி விடுவர்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2895. அவர் ஊர் அறியோமே !

துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்
ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே

துருத்தி போன்றது மனித உடல். அதன் தலை ஒரு மலை போன்றது. அந்த அறிவு வானத்தில் நிகழுகின்ற விருத்தியினைக் கண்காணிக்க, மூன்று வேளைகளிலும் ஞான சாதனை செய்பவர் அதனை நாடுவர். அவர்களை துன்புறுத்த மலை போன்ற தீவினைகள் ஒன்று கூடி வரும். அவற்றைத் தடுத்துப் பொடியாக்கும் பராசக்தி ஒருத்தி உள்ளாள். அந்த சக்தியின் துணை இன்றி அந்த சிவனது ஊரைச் சென்று அடைய முடியாது.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2896. இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.

பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் போலுரு வாகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.

அறம் என்ற கிளியும், பாவம் என்னும் பருந்தும் சேர்ந்து சீவனின் வாழ்வில் இன்பம், துன்பம் என்ற மேளங்களை மாற்றி மாற்றிக் கொட்டும். இன்பத்தில் தான் கொண்டிருந்த பற்றினையும், துன்பத்தில் தான் கொண்டிருந்த வெறுப்பினையும் துறந்து விட்ட சீவன், ஒரு திருந்தி விட்ட சீவன். இந்தச் சீவன் சிவனுடன் பொருந்தி இணையும். அதனால் அது வான்மயமான அற்புத உடலைப் பெறும். அதன் பின்பு அந்தச் சீவன் சிவானந்தத்தை அனுபவித்து அதில் திளைத்திருக்கும்
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை

#2897. பயன் எளிதாமே.

கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்?
சூடுஎரி நெய்யுண்டு மைகான்று இடுகின்ற
பாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே.

கூடுகின்ற பறவை இறையைக் கொத்தித் தன் இணைப் பறவைக்கு ஊட்டுவதைப் போன்று எளிதானதே மூலத் தீயில் நெய் சொரிந்து அதனைச் சூழ்ந்துள்ள இருளை போக்க அறிந்த சீவனுக்குச் சிவனை அடைவதும்!
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2898. குலை இல்லை கொய்யும் மலருண்டு

இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லை
தலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்
குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்
தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே.

இலைகள் இல்லை, வண்டுகள் மொய்க்கவில்லை ஆயினும் அங்கு ஒரு மலர் உண்டு. தலையும் இல்லை, தாளுமில்லை ஆயினும் அதற்கு வேருண்டு. குலை இல்லை எனினும் கொய்யும் மலர் அங்கு உண்டு. தலை இல்லை மலர் சூட எனினும் தாழ்ந்த அந்தக் கிளை வாடாதே.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2899. நக்கரை வாழ்த்திப் பயன் கொள்வார்

அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.

சகுணமாகிய கரையைக் கடந்து அக்கரையில் நிற்கும் நிர்குணப் பிரமம் ஆகிய ஆலமரத்தைக் காண்பவர், நிர்குணன் ஆகிய சிவபெருமானை வணங்கிப் பயன் அடைவர். மக்களில் சிறந்தவர்கள் ஆகிய அவர்கள் தாம் படும் ஐந்து விதத் துன்பங்களையும் துடைக்கும் நிர்குணப் பிரம்மத்தின் தாள் பணிந்து அதனால் சிறந்த பயன் அடைவர்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2900. கூப்பிட மீண்டு கூரை கொண்டார்

கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே.

அனைவரும் விரும்பும் இல்லறம் என்ற நல்லறவழியில் அஞ்ஞானம் என்ற காடு இருகாத தூரம் நீண்டுள்ளது. அந்தக் காட்டின் வழியே செல்பவரைக் கட்டிப் போடுவதற்கு அங்கு ஐம்புலன்கள் என்ற கள்வர் உள்ளனர். சிவ ஒளி என்ற வெள்ளை வீரன் அந்தக் கள்வர்களை ஒலி எழுப்பி விரட்டி விட்டான். அப்போது சீவன் பத்திரமாகத் தலைமேல் உள்ள சகசிரதளத்தைச் சென்று அடைந்தது.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2901. எட்டிப் பழத்துக்கு இளைக்கின்றவாறே.

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே.

இல்லறம் என்னும் கடலில் அறிவு, அறியாமை ஆகிய கொட்டியும், ஆம்பலுலும் பூத்து நிற்கின்றன. உலகில் வலம் வரும் நாம, ரூப பேதங்கள் வெட்டியையும், வேம்பையும் போலப் பொல்லாத சுவை தருவன. மனிதன் அவற்றைத துறந்துவிட்டு சத்து, சித்து, ஆனந்தம் என்னும் வாழைக்கனி, கற்கண்டு, தேன் இவற்றைக் கலந்துண்ண வேண்டும். இதை விடுத்து எட்டியைப் போலக் கசக்கும் உலக விஷயங்களை நாடுபவர்கள் கெடுதல் அடைவர்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2902. சக்தியின் அருளால் சீவன் இன்பம் அடையும்

பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்
கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்ட
பெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே.

ஆண் வண்டும், பெண் வண்டும் போல இணையாக வண்ணக் குடையின் கீழ் அமர்ந்துள்ளனர் சிவனும் சக்தியும். பாசத் தளைப்பட்டுப் பரிதவிக்கும் சீவன், சக்தியின் கருணையால் கிடைக்கும் அமிர்தத்தைப் பருகுகின்றது. அதில் சீவன் இன்பம் பெறுகின்றது.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2903. கொல்லையில் மேயும் பசுக்கள்

கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதன்
எல்லை கடப்பித்து இறையடிக் கூட்டியே
வல்லசெய்து ஆற்றல் மதித்தபின் அல்லது
கொல்லைசெய் நெஞ்சம் குறியறி யாதே.

கொல்லை புறத்தில் ஆசாபாசங்கள் வசப்பட்டு மேய்கின்ற ஆன்மாக்களாகிய பசுக்களை என்ன செய்ய வேண்டும்? அவைகளைக் கொல்லையின் எல்லையைக் கடக்கச் செய்ய வேண்டும். இறைவன் அடிகளை நோக்கிச் செலுத்த வேண்டும். அவைகளைத் திருத்தி நல்வழிப் படுத்த வேண்டும். இங்கனம் செய்யாத வரையில் அவைகளின் எண்ணங்கள் கொல்லைப்புறத்தில் தங்களின் ஆசாபாசங்களுடனேயே இருந்து கொண்டு வளைய வரும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2904. சிவக்கனியை அடையலாம்

தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.

வலக்கண் என்ற அகன்ற இடத்தில் கதிரவக் கலை என்கின்ற அழகிய செந்தாமரை மலர்ந்தது. இடக்கண் என்ற நீர் நிலையில் சந்திரகலை என்னும் கருங்குவளை மலர்ந்தது. மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை வழியே மேலெழுந்துவரும் அக்கினிக் கலையுடன் இந்த கதிரவக் கலை, சந்திர கலை இரண்டையும் இணைக்க வல்லவருக்குச் சிவக்கனி என்ற அரிய, பெரிய, இனிய கனி கிடைக்கும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2905. மனை புகலாமே!

ஆறு பறவைகள் ஐந்தகத்து உள்ளன
நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன
ஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே.

ஐம்பூதங்களால் ஆன உடலில் ஆறு பறவைகள் உள்ளன. அவையே காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மார்ச்சரியம். இவைகள் தலையின் மீது உள்ள நூறு நாடிகள் என்னும் நூறு பறவைகளால் உண்ணப் படுகின்றன. ஆயினும் சீவன் உடலின் ஏழு ஆதாரங்களையும் ஏறிக் கடந்து சென்று விட்டால் உறுதியாகச் சிவன் உறையும் மனையில் புகுந்துவிடலாம்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2906. ஒட்டனஞ் செய்தால் ஒளி உண்டாகும்

கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்
கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே

சீவன் குடைதல் போன்ற செயல்களைச் செய்து இன்பத்தில் திளைப்பது பெண்ணின் யோனி என்ற குளத்தில். அதில் சீவனுக்கு இன்பம் ஊற்றெடுத்துச் சுரக்கும். சீவன் தன் வீரியத்தை வெளியே விடாமல் தடுப்பதற்கு அதைச் சுழுமுனையில் கட்டி உடலினுள் நிலை பெறச் செய்ய வேண்டும். இதைச் செய்பவருக்கு உடலில் ஒளி உண்டாகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழு மிருநிலந் தன்மை யதுகண்டு
வாழ நினைக்கில தாலய மாமே.

உலகைச் சுற்றியுள்ளன ஏழு கடல்கள்; மேன்மை வாய்ந்த எட்டு மலைகள்; தீ, நீர், காற்று, நிலம் என்ற அனைத்தையும் தங்கி நிற்பது வானம் என்ற உண்மைத் தன்மையை அறிந்து கொண்டவர் நீண்ட காலம் வாழ விரும்பினால் அந்த வானமே அவருக்கு இருப்பிடமாகிய ஆலயமாகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2908. மனமும், பொறிகளும்

ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்
சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்
கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்
மால்இங்கன் வைத்துஅது முன்பின் வழியே.

ஆலிங்கனம் செய்து, அகம் சூடேற, ஆண் பெண் உறவாடிக் கருப்பையினுள் கருவை உருவாக்கினர். பின்னர் அவர்கள் காமச் செயலைக் கைவிட்டனர். கரு உருவாகிக் காமம் கழிந்த பின்பு, பொறிகள் கொண்டிருந்த மயக்கம் தீர்ந்தது. பொறிகளின் வழியே சென்று கொண்டு இருந்த மனம், மீண்டும் பொறிகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டுத் தான் அவற்றுக்கு முன்பாக நின்றது!
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2909. ஈசன் அருளிய இட்டம் வலிது!

கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.

திருமணச் சடங்குகளில் முக்கியமான இரண்டு மேளமும், தாலியும் ஆகும். இந்த இரண்டைக் காட்டிலும் வலியது களவு வழி அன்பாகிய பாரை என்பர். இந்த மூன்றிலும் வலியது எது என்று அறிவீரா? இறைவன் அருளால் உண்டாகும் அன்பே இந்த மூன்றைக் காட்டிலும் வலிமை வாய்ந்தது.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2910. உருவம் பொன்னாமே!

கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம் பொன்னாமே.

மீனைக் கண்டவர்கள் நேரம் போவதை அறியாமல் அதையே பார்த்துக் கொண்டு நிற்பார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் உலகில் பிறவி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். சிவம் என்னும் முயலைப் பெற விரும்புபவர்கள் சரியை நெறி, கிரியை நெறி, ஞான நெறி என்ற மூன்றில் ஒன்றைப் பற்றிக் கொண்டு சிறிது சிறிதாக ஞானம் அடைந்து உய்வர். வீண் விதண்டாவாதம் செய்பவன் சிவத்தை அடைய முடியாது. மறைகளின் மெய்ப்பொருளாகிய சிவத்தைக் கண்டு கொண்டவர் மேனி தூய பொன் போலாகிவிடும்!
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2911. நாரை போலல்ல நாதனார்!

கோரை எழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படிகின்றாற் போலல்ல நாதனார்
பாரை கிடக்கப் படிகின்ற வாறே.

உள்ளம் என்ற குளத்தில் ஆசை என்னும் கோரைப் புற்கள் மண்டிக் கிடந்தன. பாசம் என்னும் ஆரையும் அதில் நீண்டு நிறைந்து இருந்தது. ஆரையும், கோரையும் நிரம்பி இருக்கும் குளத்தில் மீன்பிடிக்கும் நாரை போன்றவன் அல்ல நம் நாதன்! அவன் சலனம் அற்ற, தெளிந்த நீர் நிலை போன்ற, தூய உள்ளத்தில் சீவன் என்னும் மீனை பிடிப்பவன் ஆவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2912. ஒல்லை கடந்து ஊர் புகலாம்

கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
எல்லை மயங்காது இயங்க வல் லார்கட்கு
ஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே.

கொல்லை முக்காதம் பரந்து கிடக்கின்றது. காடு அரைக்காதம் பரவிக் கிடக்கின்றது. எல்லைகள் மயங்கி கிடக்கின்றன இந்த இரண்டும்.! எல்லை மயங்காது இயங்க வல்லவர் மட்டுமே இங்கு ஒல்லையைக் கடந்து தான் செல்ல வேண்டிய ஊரைச் சென்று அடையலாம்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2913. வளர் சடையான் வழுவாது போவான்.

உழவொன்று வித்து ஒருங்கின காலத்து
எழுமழை பெய்யாது இருநிலச் செல்வி
தழுவி வினைசெய்து தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடை யோனே.

அகண்ட சிவத்தை அடைவிக்கும் உழவு என்பது சீவன் செய்யும் தவம் ஆகும். அந்தத் தவத்தால் சீவனின் உள்ளம் ஒருமை அடையும். எண்ணங்கள் என்னும் மழை அங்கு பெய்யாது. சிவ பூமிக்குரிய சக்தி பொருந்தும். மலபரிபாகம் உண்டாகும். வினைகள் தம் போகத்தைத் தாரா. அங்கு வளரும் ஒளிக் கதிர்களை உடைய சிவன் வந்து பொருந்தி விளங்குவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2914. பொதுங்கிய ஐவர்

பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
மதுங்கிய வார்கனி ஆரமுது ஊறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.

சீவன் எந்தத் தொழிலும் செய்யாமல் இருந்தாலும் கதிரவனின் இயக்கம் பன்னிரண்டு ராசிகளிலும் பொருந்தி இருக்கும். ஆனால் சீவன் தன் உடலைக் கடந்து விடும் பொழுது திங்கள் மண்டலத்தில் ஒளி பெருகும். சிவக்கனி தேன் கசிவது போன்ற இன்பத்தைத் தரும். அப்போது தன்னை வருத்தி வந்த ஐம்பொறிகள்
செயல்படாதவாறு சீவன் அவற்றை அடக்கி ஆள்வான்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2915. ஆலிப்பழம் போல் அளிக்கும் அப்பு

தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்
நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்து
ஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே.

பிரணவம் என்பது ஒரு தோணி. சீவன் அதில் ஏறிக்கொண்டு அறிவு வானம் என்னும் கடலில் செல்லும். அது செய்யும் வணிகம் தன்னிடம் இருக்கும் இருளை விடுவதும் அதற்குப் பதிலாக ஒளியைப் பெறுவதும் ஆகும். அது விரும்புவது தான் விருத்தியை அடைவது மட்டுமே. அப்போது மாயா காரியம் ஆகியவற்றைச் சீவன் விட்டு விடுவான். குளிர்ந்த சந்திர மண்டலம் தரும் ஒளி தேனைச் சிந்தும் கனியைப் போல இனிக்கும். சீவன் அந்த ஒளி வெள்ளத்தில் மூழ்கித் திளைத்து இருப்பான்.
 
ஒன்பதாம் தந்திரம்

17. சூனிய சம்பாஷணை


#2916. நடுவு நின்றாரே!

முக்காதம் ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன
பக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்கு மலருண்டு நடுவுநின் றாரே

சத்துவம், ராஜஸம், தாமசம் என்ற முக்குணங்களால் அமைக்கப்பட்டுள்ள ஓர் ஆற்றில் நனவு, கனவு, சுழுத்தி என்ற மூன்று வாழைகள் உள்ளன. செந்நிறம் கொண்ட அக்கினி மண்டலத்தின் காரணமாக விளையும் ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள் அங்கு நிறைந்திருந்தன.

சிவபெருமானின் மீது அன்புகொண்டவர்கள் இவற்றிலிருந்து விலகி வாழ்பவர். மெய்போலப் பொய்பேசும் அழகிய கன்னியரிடம் காமச் சுவை என்ற மணம் மிகுந்த மலரை விருப்பி அனுபவித்தாலும், இவர்கள் மனம் மட்டும் சுழுமுனையைப் பற்றியே நிற்கும். ஒரு போதும் அதை விட்டு அகலாது.
 
Back
Top