Quotable Quotes Part II

ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2798. உருவில் ‘சிவாயநம’ என்று ஓதுமின்

மருவும் துடியுடன் மன்னிய வீச்சும்
மருவிய அப்பும் அனலுடன் கையும்
கருவில் மிதித்த கமலப் பதமும்
உருவில் சிவாய நமவென வோதே.

உடுக்கையினை அடிக்கும் வலக்கரத்தையும், வீசிய இடக் கரத்தையும், அபயம் அளிக்கும் வலக் கரத்தையும், அக்கினியை ஏந்திய இடக் கரத்தையும், பிறவிப் பிணியை அறுக்கும் திருவடியினையும், வடிவம் இல்லாத ‘சிவாயநம’வுடன் பொருத்தி அதனைத் துதிப்பீர்கள் நீங்கள்!

#2799. அரன் அடி என்றும் அனுக்கிரகம்

அரன்துடி தோற்றம் அமைத்தல் திதியாம்
அரன் அங்கி தன்னில் அறையிற் சங் காரம்
அரன் உற்று அணைப்பில் அமரும் திரோதாயி
அரனடி என்றும் அனுக்கிரகம் என்னே

தனக்குள் அனைத்துத் தத்துவங்களையும் ஒடுக்கிக் கொண்டு விளங்குபவன் சிவபெருமான். அவன் தன் உடுக்கையின் ஒலியை எழுப்பிப் படைக்கும் தொழிலை நிகழ்த்துகின்றான். தன் அபயக் கரத்தினால் படைப்பினைக் காக்கும் தொழிலைச் செய்கின்றான். தீயை ஏந்திய கரத்தினால் அழிக்கும் செயலைச் செய்கின்றான். ஊன்றிய திருவடியினால் மறைக்கும் தொழிலைச் செய்கின்றான். தூக்கிய திருவடியால் அருளும் செயலைச் செய்கின்றான். ஐந்தொழில்களும் நிகழ்வது அரன் அனுக்கிரகத்தினால் என்று அறிவோம்!
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2800. நாத வடிவாக வேதங்கள் ஒலித்தன

தீத்திரள் சோதி திகழ்ஒளி உள்ஒளி
கூத்தனைக் கண்டஅக் கோமளக் கண்ணினள்
மூர்த்திகள் மூவர் முதல்வன் இடம் செல்லப்
பார்த்தனள் வேதங்கள் பாடின தானே.

தீப் பிழம்பாகவும், சீவ ஒளிக்குள் உள்ள ஒளியாகவும் இருப்பவன் சிவன். அந்த சிவனைக் கண்டாள் சிற்சக்தி தேவி. நான்முகன், திருமால், உருத்திரன் என்ற மூவரும் முறையே மகேசுரன், சதாசிவன், சிவன் என்ற மூவரிடம் சென்று நுண்மையாக அவர்களுள் ஒடுங்குவதைக் கண்டாள். அப்போது சீவனின் தலையின் மீது நாத வடிவாக வேதங்கள் ஒலித்தன.

#2801. சுந்தரக் கூத்தன் சிவன்

நந்தியை எந்தையை ஞானத் தலைவனை
மந்திரம் ஒன்றுள் மருவி அதுகடந்து
அந்தர வானத்தின் அப்புறத்து அப்பர
சுந்தரக் கூத்தனை என்சொல்லு மாறே.

நந்திப் பெருமான் என் தந்தை ஆவான்; அவன் ஞானத் தலைவன்; ‘ஓம்’ என்னும் பிரணவத்தினுள் பொருந்தி விளங்குபவன். அதையும் கடந்து சென்று உடல் பற்று ஒழிந்த வானத்தில் விளங்குகின்ற அழகிய கூத்தன் அவன். சீவனுக்கு இந்த சுந்தரக் கூத்தனைப் பற்றிப் புகழுதல் இயலும்! சீவனுக்கு சிவனைப் பற்றிப் புகலுதல் இயலாது அன்றோ?
 
ஒன்பதாம் தந்திரம்

8(6). அற்புதக் கூத்து

#2802. அரன் மேனியில் அணை புகலாம்!

சீய குருநந்தி திருஅம்ப லத்திலே
ஆயுறு மேனியை யாரும் அறிகிலர்
தீயுறு செம்மை வெளுப்பொடும் அத்தன்மை
ஆயுறு மேனி அணைபுக லாமே.

வனவிலங்குகளை அடக்கி ஆளும் சிங்கத்தைப் போலத் தத்துவங்களை அடக்கி ஆள்பவன் சிவபெருமான். திரு அம்பலத்தில் ஆடுபவன் குரு சிவன் ஆவான். அவன் திருமேனி எத்தகையது என்று அறிந்தவர் எவரும் இல்லை. சிவத்தின் நிறம் மூலாதாரத்தில் உள்ள அக்கினியின் சிவப்பு நிறம் ஆகும். அதுவே சிரசின் உச்சியைச் சென்று அடையும் பொழுது வெண்மை நிறம் அடையும். இந்த வேறுபாட்டை அறிந்து கொண்டு, சிவனை ஒளி வடிவாகக் கண்பவர்களுக்குச் சிவனது திருமேனி அடைக்கலம் புகும் இடமாகும்.

#2803. பரனும், பரையும் சக்தியே ஆவாள்!

தானான சத்தியும் தற்பரை யாய்நிற்கும்
தானாம் பரற்கும் உயிர்க்கும் தரும் இச்சை
ஞானாதி பேதம் நடத்தும் நடித்தருள்
ஆனால் அரனடி நேயத்த தாமே.

சிவத்தின் சக்தியே தற்பரை ஆகித் செயல்கள் புரிவாள். சக்தியின் செயல்படாத நிலை பரன் எனப்படும். சக்தியின் செயல்படும் நிலை பரை எனப்படும். சக்தியே சிவனுக்கும், சீவனுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துபவள். அவளே சீவர்களிடத்தில் இச்சா சக்தியாகவும், கிரியா சக்தியாகவும், ஞான சக்தியாகவும் விளங்குவாள். சீவனைப் பக்குவப் படுத்துவாள். பக்குவப் படுத்தப்பட்ட சீவன், சக்தியில் அருளால், சிவனிடம் மாறாத அன்பு கொள்ளும். பின்னர் சீவன் சிவனிடம் சென்று அவனோடு ஒன்றி விடும். சீவனும் சிவனாகவே மாறி அறிவு மயம் ஆகிவிடும்.
 
ஒன்பதாம் தந்திரம்

9. ஆகாசப் பேறு

9. ஆகாசப் பேறு
கூத்தன் தரிசனத்துக்குப் பின்னர் பராகாயத்தில்
ஒளியில் திளைத்துச் செயல் அற்று இருத்தல்!

#2804. உள்ளத்துள் ஓம் எனும் ஈசன்

உள்ளத்துள் ஓம்என ஈசன் ஒருவனை
உள்ளத்து ளேயங்கி யாய ஒருவனை
உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
உள்ளத்து ளேயுடல் ஆகாய மாமே.

மனமண்டலத்துள் ஓங்காரமாகி நிற்பவன் ஈசன். அவன் அக்கினியைப் போல ஒளிர்பவன். அவன் நீதி மயமானவன். அவனைத் தன்னுள்ளே கொண்டுள்ள மனமண்டலத்தைச் சூழ்ந்துள்ள உடம்பு வானம் ஆகும்.

#2805. அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே.

பெருநில மாய்அண்ட மாய்அண்டத்து அப்பால்
குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்
அருநிலை யாய்நின்ற ஆதிப் பிரானே.

உடல் என்ற பெருநிலமானவன் ஈசன்; உடலைச் சூழ்ந்துள்ள அண்டகோசமும் அவனே. அவற்றுக்கும் அப்பால் ஒளிர்கின்றவனும் அவனே. பெருநிலமாக உருவெடுத்து அனைத்தையும் தாங்குகின்ற அருளுடைய ஆதிசிவனே அருவமாகவும் விளங்குகின்றவன்.
 
ஒன்பதாம் தந்திரம்

9. ஆகாசப் பேறு

#2806. அண்ட ஒளியும் பிண்ட ஒளியும்

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியாய் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே.

அண்ட ஒளி ஆவான் சிவன்! அண்டங்களைக் கடந்த அகண்ட ஒளியும் ஆவான் சிவன்; சீவ ஒளியுடன் தன் சிவ ஒளியைப் பொறுத்துபவன் சிவன்; சீவன், தான் பெற்றுள்ள உட்கருவிகளின் பெருமையால் பிதற்றும் வீண் பெருமையை விழுங்குபவன் சிவன். அதனால் சீவ உடல் பரமாகாயத்தில் உள்ள ஒளியில் மறையும். சீவ உடல் தன் வடிவத்தை இழந்து தானும் ஒளிமயமாக மாறிவிடும்.

#2807. பரஞ்சுடர் ஜோதி

பயனறு கன்னியர் போகத்தின் உள்ளே
பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி
அயனொடு மால்அறி யாவகை நின்றிட்டு
உயர்நெறி யாய்ஒளி ஒன்றது வாமே

ஓர் ஆண் பெண்களிடம் சிற்றின்பம் அனுபவிக்கும் போது அவனிடம் காமாக்கினி மேலிட்டு விளங்கும். அந்த நிலையில் பரஞ்சோதியாகிய சிவபெருமான் தானும் இன்ப வடிவினனாகத் திகழுவான். சிற்றின்பம் தரும் மகளிரை விடுத்துச் சீவன் சிவனிடம் தாளாத அன்பு கொண்டுவிட்டால், மாலும், அயனும் காண இயலாத வண்ணம் சிவன் மேன்மையான ஒளியாக மாறிச் சீவனின் ஒளியில் கலந்து விடுவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

9. ஆகாசப் பேறு

#2808. பிரியாது இருந்தால் பெருங்காலம் வாழ்வு!

அறிவுக்கு அறிவாம் அகண்ட வெளியும்
பிறிவா வலத்தினில் பேரொளி மூன்றும்
அறியாது அடங்கிடும் அத்தன் அடிக்குள்
பிறியாது இருக்கில் பெரும்காலம் ஆமே

சீவனின் அறிவுக்கு காரணம் திங்கள், கதிரவன், அக்கினி என்னும் மூன்று மண்டலங்களை நன்கு விளக்கம் பெறுவது ஆகும். இவை மூன்றும் அடங்கி விட்டால் உடல் அறிவு மறைந்து விடும். சீவ ஒளி சிவ ஒளியுடன் கலந்துவிட்டால் சீவன் தன் உடலில் இருந்து கொண்டே நெடுங்காலம் வாழ இயலும்.

#2809. அங்கி வண்ணன் அரன்

ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்து
ஏகாச மாசுணம் இட்டுஅங்கு இருந்தவன்
ஆகாச வண்ணம் அமர்ந்துநின்று அப்புறம்
ஆகாச மாய்அங்கி வண்ணனும் ஆமே.

அந்தி வானத்தின் வண்ணம் கொண்டவன் சிவன்; அமரர்கள் குலக் கொழுந்து சிவன்; பெரிய பாம்பைத் தன் உடலில் அணிந்தவன்; அவன் வான் மயமாக விளங்குவான்; அறிவுப் பேரொளியாகவும் விளங்குவான். அவனே நெருப்பை போன்ற சிவந்த நிறம் படைத்த நம் சிவபெருமான்.
 
ஒன்பதாம் தந்திரம்

9. ஆகாசப் பேறு

#2810. வெயில் கொண்டு உள்ளம் வெளியது ஆகும்.

உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
குயில்கொண்ட பேதை குலாவி உலாவி
வெயில்கொண்டு என்உள்ளம் வெளியது ஆமே.

உடலில் உயிர்ப்பாக விளங்குவது பிராணசக்தி. உலகின் அசைவுக்கு கரணம் ஆனது சோதி மயமான பிராணசக்தி. இந்த இரண்டு பிராணசக்திகளும் இணையும் பொழுது மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி சீவனின் உடல் முழுவது பரவுவவாள். நாதத்தை எழுப்புவாள். ஒளியாகச் சீவனின் மனத்தில் பொருந்துவாள். அதனால் சீவனின் நுண்ணுடல் தானே வெளிப்படும்.

#2811. அமுதம் பருகலாம்!

நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே

சீவன் சிவன் நினைவில் பொருந்தி இருக்கும் போது, சிவன் சீவனை விட்டு அகல்வது இல்லை. சீவன் சிவனை மறந்து உலக விஷயங்களில் ஆழ்ந்துவிட்டால், சிவன் சீவனிடமிருந்துச் சற்று விலகியே நிற்பான். சீவன் சிவனை விட்டு அகலாமல் ஒளிர்கின்ற பரவெளியை அறிந்து கொண்டு அதனை வழிபடுமானால் அது அமுதம் போன்ற சிவானந்தத்தைச் சுவைக்கலாம்.
 
ஒன்பதாம் தந்திரம்

9. ஆகாசப் பேறு

#2811. அமுதம் பருகலாம்!

நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்து
அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
பணியின் அமுதம் பருகலும் ஆமே

சீவன் சிவன் நினைவில் பொருந்தி இருக்கும் போது, சிவன் சீவனை விட்டு அகல்வது இல்லை. சீவன் சிவனை மறந்து உலக விஷயங்களில் ஆழ்ந்துவிட்டால், சிவன் சீவனிடமிருந்துச் சற்று விலகியே நிற்பான். சீவன் சிவனை விட்டு அகலாமல் ஒளிர்கின்ற பரவெளியை அறிந்து கொண்டு அதனை வழிபடுமானால் அது அமுதம் போன்ற சிவானந்தத்தைச் சுவைக்கலாம்.

#2812. செழுஞ் சுடர் சோதி

புறத்துளா காசம் புவனம் உலகம்
அகத்துளா காசம்எம் ஆதி அறிவு
சிவத்துளா காசம் செழுஞ்சுடர் சோதி
சகத்துளா காசம் தானம்ச மாதியே.

புறத்தில் காணப்படும் ஐந்து வானவெளிகள் என்பவை அனைத்து புவனங்களையும் உலகங்களையும் தாங்கி நிற்கும் ஒளியாகும். அகத்துள் காணப்படும் ஆகாசம் என்பது சீவனின் அறிவு. பேரறிவு விளங்குகின்ற வானம் என்பது சிவன் என்னும் செழுஞ்சுடர் சோதியாகும். சகத்திலுள்ள சீவனுக்கு ஆகாயம் என்பது தன் செயல் அற்றுச் சிவ ஒளியில் சீவ ஒளி கலப்பது ஆகும்.



Share this:
 
ஒன்பதாம் தந்திரம்

10. ஞானோதயம்


“சிவன் வேறு! சீவன் வேறு!” என்ற எண்ணம் மாறிச் சீவனுக்குத்
“தானே சிவன்!” என்ற எண்ணம் வருவது ஞானோதயம் ஆகும்.
குருவிடம் தீட்சைபெற்ற மாணவனுக்கு ஞானோதயம் நன்கு விளங்கும்.

#2813. இரண்டு வகை ஆனந்தம் இவை

மனசந் தியில்கண்ட மனநன வாகும்
கனவுற ஆனந்தம் காண்டல் அதனை
வினவுற ஆனந்தம் மீதொழிவுஎன்ப
இனமுற்றான் நந்தி ஆனந்தம் இரண்டே.

மனம் ஐம்பொறிகளின் உதவியுடன் உலகில் உள்ள விஷயங்களுடன் பொருந்தி இன்பம் துய்ப்பது சாக்கிரம் என்கின்ற நனவு நிலையில் நிகழ்வது ஆகும். பொறிகளின் உதவியின்றிச் சீவன் கனவில் விஷயங்களுடன் பொருந்தும் போது, நனவில் ஏற்படும் ஆனந்தம் போன்றே கனவிலும் ஏற்படும். ஆனால் சீவனின் ஆன்மஅறிவு நீங்கிய நிலையில் உயரிய சிவானந்தம் ஏற்படும். இவ்வாறு சீவர்களுக்குச் சிவன் ஏற்படுத்தியுள்ள ஆனந்தம் இரண்டு வகைகள்: அவை விஷயானந்தம், சிவானந்தம்.

#2814. அரியன், பெரியன், சிவன்!

கரியட்ட கையன் கபாலம்கை யேந்தி
எரியும் இளம்பிறை சூடும்எம் மானை
அரியன் பெரியன் என்று ஆட்பட்டது அல்லால்
கரியன்கொல் சேயன்கொல் காண்கின்றி லேனே.

எம்பெருமான் ஒரு பெரிய, கரிய, கரியின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவன்; கையில் கபாலம் ஏந்தியவன்; ஒளிவீசும் இளம் பிறையை அணிந்தவன்; இத்தகைய மேன்மை வாய்ந்தவனை நான் “அரியவன்! பெரியவன்!” என்று அடிபணிவேனே அல்லாமல், “அவன் கரியனா? சேயனா?” என்று ஆராய்ந்து பார்ப்பது இல்லை.
 
ஒன்பதாம் தந்திரம்

10. ஞானோதயம்


#2815. நக்கார் கழல்வழி நாடுமின்!

மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
தக்கார் உரைத்த தவநெறியே சென்று
புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
நக்கார் சுழல்வழி நாடுமின் நீரே.

கொடிய நஞ்சினை தான் உட்கொண்டவன் சிவன். செருக்கு மிகுந்த வானவர்களுக்குச் சிறந்த அமுதினை வழங்கியவன் சிவன். தகுந்த அறிவு பெற்றுத் தவநெறியில் நின்று, தன்னை அடைந்தவர்களுக்குச் சிவன் பொன் போன்ற தூய ஞானத்தைத் தருபவன்; நாதவழியில் நின்று சாதனை செய்து சிவன் திருவடிகளை அடைவீர்களாகுக!

#2816. விளக்கில் விளக்கை விளக்க வல்லார்

விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் ஆமே.

ஆன்மா ஒளிமயமானது என்ற உண்மையை குரு முகமாகக் கற்றுத் தெளிய வேண்டும். அந்த நெறியில் நின்று ஆன்ம அறிவைப் பெருக்க வேண்டும். அந்த அறிவின் பேரொளியில் சிவ ஞானத்தைத் தூண்ட வேண்டும். சிவத்தின் அகண்ட ஒளியில் சீவ ஒளியைப் பொருத்த வேண்டும். இதைச் செய்ய வல்லவர்கள் சீவ ஒளியைத் தந்த சிவனடிகளில் பொருந்தி வாழ இயலும்
 
ஒன்பதாம் தந்திரம்

10. ஞானோதயம்


#2817. தத்துவன் அங்கே தலைப்படும் தானே.

தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு
தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை
தத்துவ ஞானத்தின் தன்மை அறிந்தபின்
தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.

அறிவு மயமான ஆன்மா, தத்துவங்களுடன் பொருந்தி இருக்கும் போது அந்தத் தத்துவங்கள் ஆன்மாவால் அறியப்படும் பொருட்களாக இருக்கும். எப்போது தத்துவங்கள் அறியப்படுவது இல்லையோ, அப்போது அவற்றை அறியும் ஆன்ம அறிவும் அங்கு இராது.

சீவன் தத்துவ ஞானம் அடைந்து, “தான் உடல் முதலிய அறியப்படும் பொருட்கள் அல்ல! அவற்றை அறிந்து கொள்பவன்!” என்ற உண்மையை உணர்ந்த கொண்ட உடனேயே அந்தச் சீவன் சிவன் ஆகும் தன்மையை அடைந்து விடும்.

#2818. பசும் பொன் திகழும்

விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே
அசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்
பசும்பொன் திகழும் படர்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே.

வான்மயமான ஒரு பொருள் அனைத்தையும் தாங்கி கொண்டு உள்ளது என்ற உண்மை ஞானத்தைச் சீவன் அடைந்த உடனேயே, சேற்று நிலமாகிய சுவாதிட்டானத்தில் உள்ள தாமரை மலரிலிருந்து, ஒரு சக்தி அந்தச் சீவனின் உடலில் பரவும். அது பொன் நிறம் கொன்டு சீவனின் சிரசில் பரவும். அங்கு பொருந்தி நன்கு ஒளிரும். செந்நிறம் கொண்ட சுவாதிட்டான மலரில் உள்ள சிவ சொரூபமே இங்கனம் விளங்கும்.
 
ஒன்பதாம் தந்திரம்

10. ஞானோதயம்


#2819. சோதி எத்தன்மையால் வேறானது?

முத்தின் வயிரத்தின் முந்நீர்ப் பவளத்தின்
கொத்தும் பசும்பொன்னின்தூவொளி மாணிக்கம்
ஒத்துஉயிர் அண்டத் துள்அமர் சோதியை
எத்தன்மை வேறென்று கூறுசெய் வீரே.

முத்து, வைரம், கடல் நீரில் விளையும் பவளக் கொத்து, பசும் பொன் வீசும் தூய ஒளி, மாணிக்கத்தின் சிவந்த ஒளி இவை அனைத்தும் கலந்து விளங்குபவன் எந்தை சிவன். அண்டத்திலும், பிண்டத்திலும் சோதியாக விளங்கும் சிவனை எந்தத் தன்மையால் சீவனிடம் இருந்து மாறுபட்டவன் என்று கூறுவீர்?

#2820. நான் என்ற நானும் நினைப்பு ஒழிந்தேன்

நான்என்றும் தான்என்றும் நாடினேன் நாடலும்
நான்என்றும் தான்என்றும் இரண்டில்லை என்பது
நான்என்ற ஞான முதல்வனே நல்கினான்
நான்என்று நானும் நினைப்பு ஒழிந்தேனே.

” நான் வேறு சிவன் வேறு!” என்று எண்ணி அவனை நான் நாடினேன். சிவன் “நான் வேறு தான் வேறு அல்ல!” என்று எனக்கு உணர்த்தித் “தானே நான்!” என்ற ஞானத்தை எனக்கு நல்கினான். அப்போது நான் “நான் ஒரு பொருள்!” என்ற எண்ணத்தையும் துறந்து விட்டுச் சிவமயமாக நின்றேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

10. ஞானோதயம்


#2821. ஞானத்தின் நல்மோனம் நாதாந்த வேதமே.

ஞானத்தின் நன்னெறி நாதாந்த நன்னெறி
ஞானத்தின் நன்னெறி நானென்று அறிவோர்தல்
ஞானத்தின் நல்யோகம் நன்னிலை யேநிற்றல்
ஞானத்தின் நல்மோனம் நாதாந்த வேதமே.

சிவனை அடைவதற்கு உண்டாகிய நன்னெறி என்பது, சிவஞானத்தை அடைந்து, நாதத்தை வசப்படுத்தி, நாதாந்தத்தை அடைவதே ஆகும்.
ஞானத்தின் நன்னெறி என்பது ஆன்மா “தான் அறிவே உருவானவன்!” என்ற உண்மையை அறிந்து கொள்வது.
ஞானத்தில் நல்ல யோகம் என்பது சீவன் தன் சீவ போதத்தைத் துறந்துவிட்டுச் சிவனின் சிவ போதத்தில் திளைத்து நிற்பது ஆகும்.
ஞானத்தினால் பிரணவப் பொருளை அடைவது நாதாந்த வேதம் ஆகும்.

#2822. உய்ய வல்லார் அறிவுள் அறிவாமே.

உய்யவல் லார்கட்கு உயிர்சிவ ஞானமே
உய்யவல் லார்கட்கு உயிர்சிவ தெய்வமே
உய்யவல் லார்கட்கு ஒடுக்கம் பிரணவம்
உய்யவல் லார்அறி வுள்அறி வாமே.

உய்ய விரும்புபவர்களுக்கு உயிர் போல இன்றியமையாதது சிவ ஞானம். உய்ய விரும்புபவர்களுக்கு உயிர் போல இன்றியமையாதது சிவம் ஆகும். உய்ய விரும்புபவர்கள் ஒடுங்கும் இடம் பிரணவம் ஆகும். உய்ய விரும்புபவர்களின் அறிவில் அறிவாக இருப்பது சிவன்.
 
ஒன்பதாம் தந்திரம்

10. ஞானோதயம்


#2823. சிவன் கண்ணின் மணியொக்கும்

காணவல் லார்க்குஅவன் கண்ணின் மணியொக்கும்
காணவல் லார்க்குக் கடலின் அமுதொக்கும்
பேணவல் லார்க்கப் பிழைப்பிலன் பேர்நந்தி
ஆணவல் லார்க்கே அவன்துணை யாமே.

அருள் வழியில் நடந்து சிவனைக் காணும் வல்லமை படைத்தவர்களுக்கு, அவன் கண்ணின் மணியைப் போன்றவன். சிவனைக் காண வல்லவர்களுக்கு, அவன் கடலில் விளைந்த அமுதினை ஒத்தவன். தன்னை அடைந்தவர்களைத் தவறாமல் காப்பவன் நந்தி எம் பெருமான். தன் மீது மிகுந்த அன்பு கொண்டவர்களுக்கு அவன் என்றும் நல்ல துணையாக நின்று உதவுவான்.

#2824. தேவர் விரும்பும் விழுப்பொருள்

ஓம்என்றும் எழுத் துள்நின்ற ஓசைபோல்
மேல்நின்ற தேவர் விரும்பும் விழுப்பொருள்
சேய்நின்ற செஞ்சுடர் எம்பெரு மானடி
ஆய்கின்ற தேவர் அகம்படி யாமே.

“ஓம்” என்ற ஓர் எழுத்து மந்திரம் பிரணவம். இந்த எழுத்திலிருந்து அதன் நாதம் என்றுமே நீங்காமல் அதனுள் உறைந்து இருக்கும். அது போலவே வானவர்கள் விரும்பும் விழுப்பொருள் எது என்று கேட்டால் சீவர்கள் உள்ளத்தை விட்டு நீங்காமல் நிறைந்திருக்கும் சிவம் ஆகும். மனத்தையும், வாக்கையும் கடந்து நிற்கும் அந்த செழும்பொருளின் திருவடிகளை வணங்கி நிற்கின்ற தேவர்கள் நம் உள்ளத்திலும் விளங்குவர்.
 
ஒன்பதாம் தந்திரம்

11. சத்திய ஞானானந்தம்


முத் துரியங்களையும் கடந்த நிலையில் ஞானத்தினால் விளைகின்ற உண்மையான ஆனந்தம்.

#2825. தான் அது ஆகும்!

எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னவாறு என்பதில்லா இன்பத்துத்
தற்பரஞா னானந்தர் தானது வாகுமே.

பிரகிருதி மாயை, தூவா மாயை, தூய மாயை என்னும் மூன்றும் சூனியத்தை அடைந்தபோது ஆன்மா தத்துவங்களில் இருந்து நீங்கிவிடும். நனவு, கனவு, உறக்கம் என்ற மூன்று நிலைகளையும் கடந்து துரியத்தை அடையும். துரிய நிலையும் சூனியம் ஆகும்போது, இன்னது என்று விவரிக்க முடியாத ஓர் ஆனந்த நிலையில் தற்பரன் ஆகிய சிவன் ஆன்மாவில் வந்து பொருந்துவான். அப்போது ஆன்மாவும் சிவம் ஆகிவிடும், ஆனந்தமாகப் பொலிவடையும்.

#2826. செம்பொருள் சீர் நந்தி தானே

தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்
அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

‘தொம்பதம்’ முதல் துரிய நிலையிலும், ‘தத் பதம்’ இரண்டாவது துரிய நிலையிலும், ‘அசி பதம்’ மூன்றாவது துரிய நிலையிலும் அமைந்துள்ளன. இவற்றைக் கடந்த எல்லையே இல்லாத நிலையில் இருப்பவன் செம்பொருள் ஆகிய சீர்மிகுந்த நந்தி ஆவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

11. சத்திய ஞானானந்தம்


#2827. சத்திய ஞான ஆனந்த நிலை

மன்னும் சத்தியாதி மணியொளி மாசோயை
அன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றாம் மாறது
இன்னிய உற்பலம் ஒண்சீர் நிறம்மணம்
பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே.

சத்திய ஞான ஆனந்தம் ஈடு இணை அற்றது. அதை ஒளிரும் மணிகளுக்கு ஒப்பிடுவதும் பொருத்தமற்றது. நீலோத்பல மலரும், அதில் பொருந்தியுள்ள தூய்மை, அழகு, வர்ணம், நறுமணம், சோபை போன்றதே சத்திய ஞான ஆனந்த நிலை.

#2828. அனந்தம் ஆகும் சிவானந்தம்!

சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால்
உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம்
வைத்த சொருபத்த சத்தி வருகுரு
உய்த்த உடல்இவை உற்பலம் போலுமே.

சக்தி, சிவம், ஆனந்தம் இவற்றைப் பற்றி நாம் இவ்வாறு கூறலாம். அனைத்து உயிரினங்களின் தொகுத்த இன்ப நிலையே அனந்தம் இல்லாத சிவானந்தம் ஆகும். அழகிய வடிவை உடைய சக்தியை விட்டுப் பிரியாமல் இருப்பவனே சிவன். இது நீலோத்பல மலரை விட்டு அதன் ஒண்மை, சீர்மை, நிறம், மணம், சோபை, தூய்மை அகலாமல் இருப்பது போன்றதே.
 
ஒன்பதாம் தந்திரம்

11. சத்திய ஞானானந்தம்


#2829. சத்தியாதி தோன்ற நின்றானே.

உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபை
தரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில்
மருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின்
சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே.

அழகான நீலோத்பல மலரில் நிறம், ஒண்மை, மணம், சோபை முதலியவை கலந்து இருப்பதை போன்றே, சீவன் சிவனோடு கலந்து விடுவான்! அப்போது சிவன் என்ற சீரிய தத்துவத்தின் சொற்பொருளாக விளங்குகின்ற சிவன் சத்தியம், ஞானம், ஆனந்தம் என்ற மூன்றும் நன்றாக விகசிக்கும்படி நின்றான்.

#2830. புனையில் அவனைப் பொதியலும் ஆகும்

நினையும் அளவில் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
எனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித் தனனே.

நினைத்த மாத்திரத்தில் உள்ளம் உருகும் மெழுகென நெகிழும்படிகிச் சிவனை வணங்கி; அவனைப் புகழ்ந்து போற்றி பாக்கள் புனைந்தால்; அவனை நம் உள்ளத்தில் வைத்து; அங்கிருந்து அகன்று செல்லாதபடி அன்பால் பொதிந்துவிட முடியும். எனக்கு அருள் காட்டிய நந்தி எம்பிரான் அவனை மறவாத வரம் தந்தான். எனக்கு அவன் மேல் தாளாத காதலும், மாளாத அன்பும், நீங்காத பற்றும் ஏற்படச் செய்தான்.
 
ஒன்பதாம் தந்திரம்

11. சத்திய ஞானானந்தம்


#2831. மயிர்க்கால் தொறும் பெருகும் ஆனந்தம் !

பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள்புகச்
சீலம் மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.

துரிய நிலையைக் கடந்து விட்ட சீவனுள் சிவன் அன்புடன் புகுந்து கொள்வான். பாலும், தேனும், பழ ரசமும், தூய அமுதத்தின் இன்சுவையும் கலந்த கலவை போன்ற இன்பத்தை சிவன் சீவனின் ஒவ்வொரு மயிர்க் காலிலும் தோன்றச் செய்து, சீவனுக்குப் பேரின்ப நிலையை அருள்வான்.

#2832. துவளற்ற சோதி தொடர்ந்து நிற்பான்

அமரத் துவம்கடந்து அண்டம் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்தும் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.

தனிப் பெருந்தலைவன் ஆகிய சிவன் அழியாத இயல்பினை உடைய சீவனையும், அவன் பொருந்தி இருக்கும் அண்டகோசத்தையம், அதற்கும் அப்பால் நாதத் தத்துவத்தையும் கடந்து தனித்து நிற்பான். முத்துப் பற்களும், பவள இதழ்களும், பனி போன்ற குளிர்ந்த மொழியினையும் உடைய அழகிய இளம் மாதர்களின் உடல் கவர்ச்சியில் தளர்ச்சி அடையாத சோதியாகச் சிவன் தொடர்ந்து நிற்கின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

11. சத்திய ஞானானந்தம்


#2833. சத்தியம், ஞானம், ஆனந்தம்

மத்திமம் ஆறாறும் மாற்றி மலம்நீக்கிச்
சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்
பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச்
சத்திய ஞானானந்தம் சார்ந்தனன் ஞானியே.

மெய்ஞானியின் இலக்கணம் இதுவே! அவன் முப்பத்தாறு தத்துவங்களையும் துறந்துவிட்டு வேண்டும். சீவனிடம் மலங்களால் ஏற்படுகின்ற விஷய வாசனைகளை நீக்கிவிட வேண்டும். தூய துரிய நிலையின் குற்றங்களைக் கடந்து செல்ல வேண்டும். பாசத் தளைகளால் கட்டப்பட்டுள்ள சீவனின் பெத்த நிலை மாற வேண்டும். சீவன் சிவத்தையே எதிர் நோக்கி இருக்க வேண்டும். சத்தியம், ஞானம், ஆனந்தம் இவற்றில் நன்கு பொருந்தி இருப்பவனே உண்மையான மெய்ஞானி!

#2834. சொரூபம் அது ஆமே

சிவமாய் அவமான மும்மலம் தீரப்
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானானந் தத்தே
துவமார் துரியம் சொரூபம் தாமே.

சீவன் சிவ வடிவம் அடைந்து விட்டால் என்ன நிகழும்?
சீவன் சிவத்தை அடைந்து சிவமாக ஆகி விட்டால் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களும் அகன்று விடும், பிரகிருதி மாயை, தூமாயை, தூவா மாயை என்ற மும் மாயைகளும் கெடும். பற்று அற்றுப் போய் விடும். துரியாதீதத்தில் சீவன் சிவனுடன் பொருந்திச் சிவவடிவம் அடைந்து சத்திய ஞானமும், ஆனந்தமும் அடையம்!
 
ஒன்பதாம் தந்திரம்

12. சொரூப உதயம்

சிவ சொரூபம் வெளிப்பட்டுச் சீவனுக்கு முத்தியை அளிப்பது.

#2835. அரிய துரியத்து அணைந்து நின்றானே.

பரம குரவன் பரம்எங்கு மாகித்
திரமுற எங்கணும் சேர்ந்துஒழி வற்று
நிரவும் சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத்து அணைந்துநின் றானே.

சீரிய சிவகுரு தத்துவங்களைத் துறந்துவிட்ட சிறந்த சீவனுடன் வந்து பொருந்துவான். அந்தப் பிணைப்பு உறுதி அடையும் வண்ணம் எங்கும் நீக்கமற நிறைந்து இருப்பான். சீவனின் ஆன்மாவின் சொரூபத்தில் நிலைபெற்று நீங்காமல் இருக்கும் சிவன், சீவனை அதன் அரிய துரிய நிலையில் பொருந்தி விளங்குவான்.

#2836. வரைந்து வலம் செயுமாறு அறியேனே.

குலைக்கின்ற நீரின் குவலய நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடு ஆகாசம்
நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
வரைந்து வலம்செயு மாறுஅறி யேனே.

சீவனை நிலைகுலையச் செய்பவை ஐம்பூதங்கள். நிலம், நீர் நிறைந்த கடல், அலைந்து திரிகின்ற காற்று, அனல், ஆகாசம் இவற்றில் நிறைந்திருக்கும் அதே சிவன் இவற்றைக் கடந்தும் நிற்கின்றான். மண்ணுலகு முதல் விண்ணுலகு வரை நீண்டு நிறைந்திருக்கும் இந்த இறைவனை நான் ஒரு சிறிய எல்லைக்கு உட்படுத்தி வணங்கும் முறையை அறிந்திலேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

12. சொரூப உதயம்


#2837. புவனாதிபதி சிவனே ஆவான்

அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவன் என்று ஏத்துவர்
தங்கிநின் றான்தனிநாயகன் எம்இறை
பொங்கிநின் றான்புவ னாபதி தானே.

இங்கனம் மண்ணுக்கும் விண்ணுக்கும் நீண்டு நிறைந்து இருக்கும் சோதியாகிய சிவனை அயன், திருமால், பிற தேவர்கள் வந்து “இறைவா!” என்று தாள் தொழுவர். ஒப்பாரும், மிக்காரும் இல்லாத சிவபெருமான் அவர்களிடம் சோதி வடிவாகப் பொருந்தி அவர்களை இயக்குகின்றான். அவர்களைக் கடந்து அனைத்து புவனங்களின் அதிபனாகவும் அவனே விளங்குகின்றான்.

#2838. அமரர்க்கு அதிபதியாகி நிற்பாரே.

சமயச் சுவடும் தனையறி யாமல்
சுமையற்ற காமாதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளிவுடன் நின்றோர்
அமரர்க்கு அதிபதி யாகிநிற் பாரே.

சமயங்கள் நாம் வாழ வேண்டிய நல்ல நெறிமுறைகளை வரையறை செய்து அமைத்துத் தருகின்றன. ஆனால் அவற்றை அறிந்து கொள்ள முடியாதபடி குறிக்கிடுகின்றன மனிதனிடம் உள்ள எட்டுத் தீய குணங்கள். அவை முறையே காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், மண்ணாசை, பொன்னாசை என்பன. அவற்றால் விளைகின்ற தீமைகளை நன்கு உணர்ந்து கொண்டு அவற்றை விட்டு விலகிச் சிவனுடன் பொருந்துகின்ற மனிதன் தேவர்களுக்கும் தலைவன் ஆவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

12. சொரூப உதயம்


2839. இறைநூல் இயம்புமே.

மூவகைத் தெய்வத்து ஒருவன் முதல்உரு
வாய்அது வேறாம் அதுபோல் அணுப்பரன்
சேய சிவம்முத் துரியத்துச் சீர்பெற
ஏயும் நெறியென்று இறைநூல் இயம்புமே.

நான்முகன், திருமால், உருத்திரன் என்ற மும் மூர்த்திகளில் ஒருவன் உருத்திரன். அவனே அம்மூவரில் இருந்து வேறுபட்டு நின்று அவர்களை இயக்கவும் செய்வான். சீவதுரியம், பரதுரியம், சிவதுரியம் என்பவை முத்துரியங்கள். இவற்றில் ஒருவனாக இருக்கும் சிவபெருமான் அவற்றில் இருந்து வேறுபட்டும் நிற்பான் என்று வேத ஆகமங்கள் உரை செய்யும்.

#2840. குருவன்றி யாவர்க்கும் கூட ஒண்ணாதே.

உருவின்றி யேநின்று உருவம் புணர்க்கும்
கருவின்றி யேநின்று தான்கரு வாகும்
அருவின்றி யேநின்ற மாயப் பிரானைக்
குருவின்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.

தனக்கு என்று ஓர் உருவம் இன்றி அனைவரின் வடிவங்களையும் தானும் எடுத்துக் கொள்பவன் சிவன். தனக்கு என்று ஒரு மூலம் இன்றியே அனைத்துக்கும் மூலம் ஆகுபவன் சிவன். அவன் அருவ நிலையையும் தாண்டி விளங்கும் பெருமான். சீவன் சிவனுடன் கூட வேண்டும் என்றால் அதற்கு உள்ள ஒரேவழி சிவனே குருவாக வெளிப்பட்டுச் சீவனுக்கு அருள் செய்யவேண்டும். அன்றேல் அது ஒரு போதும் நிகழாது!
 
ஒன்பதாம் தந்திரம்

12. சொரூப உதயம்


#2841. உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே?

உருவம் நினைப்பவர்க்கு உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பவர் உலகத்தில் யாரே.

சிவனது திருவருளை இடையறாது சிந்தனை செய்பவர் பெறும் பயன்கள் இவை:
அவர்கள் உள்ளத்தில் உள்ள இருள் கெடும்! அங்கு ஒளிமயமாக விளங்கும்.
அவர்கள் மரணத்தை வென்று ஊழி வரை வாழ்ந்த்திருப்பர்.
அவர்கள் தேவ உடல் பெற்று சிறப்பு அடைவர்.
உலகில் சிவனை இவ்வாறு சிந்தனை செய்பவர்கள் யார் உளர்?

#2842. பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே.

பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றாப்
பரஞ்சோதி என்னுள் படிந்துஅதன் பின்னைப்
பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக் கண்டேனே.

நான் பரஞ்சோதியாகிய சிவனின் பேரொளிப் பிழம்பைக் கண்டேன்! அதனையே என் பற்றுக் கோடாகக் கொண்டேன். அந்தப் பரஞ்சோதி என்னுள் வந்து பொருந்தியது. பின்னர் நான் அந்த சோதியில் அடங்கி இருந்தேன். நான் அடங்க அடங்க அந்தச் சோதி நாத வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.
 
ஒன்பதாம் தந்திரம்

12. சொரூப உதயம்


#2843. சொரூபக் குரவன் சுகோதயத்தானே.

சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கும் மதித்துச்
சொரூபக்குரவன் சுகோதயத் தானே.

சொரூபம், ரூபம், குணம், தொன்மை பொருந்தி விளங்கும் அரிய நீலோத்பல மலர். அது போன்றே சீடனுக்கு நன்மை செய்து இன்பம் அளிக்கும் குரு சிவனும் ஆதி சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்ற நான்கு சக்தியருடன் ஒன்றாகக் கலந்து நிற்பான்.

#2844. உள்ளொளி ஆகும்!

உரையற்ற ஆனந்த மோன சொரூபத்தன்
கரையற்ற சத்தியாதி காணில் அகார
மருவுற்று உகாரம் மகாரம தாக
உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.

சிவ சொரூபத்தைக் கண்ட சீவன் தன் பயனற்ற பேச்சு அறும்
, அரிய மோனத்தை மேற்கொள்ளும், மாறாத ஆனந்தம் அடையும். அந்தச் சீவன் அகண்ட சக்தியைக் கண்டதும் அதன் இச்சை, ஞானம், கிரியை என்பவை அகர, உகர, மகரத்துடன் பொருந்திப் பிரணவத்தின் ஒளியாகப் படர்ந்து நிற்கும்.
 
ஒன்பதாம் தந்திரம்

12. சொரூப உதயம்


#2845. கள்வனைக் கண்டு கொண்டேன் !

தலைநின்ற தாழ்வரை மீது தவஞ்செய்து
முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும்
புலைநின்ற பொல்லாப் பிறவி கடந்து
கலைநின்ற கள்வனில் கண்டுகொண் டேனே.

சிரசில் உள்ள தாழ்வரையில் நின்று கொண்டு நான் சிவனைக் குறித்து ஓர் அரிய தவம் செய்தேன். அங்கு நான் அந்தக் கள்வனைக் கண்டு கொண்டேன். அவன் தன் கலைகளை மறைத்துக் கொண்டு சக்தியுடன் அங்கு நின்றிருந்தான். அந்த உள்ளம் கவர் கள்வனைக் கண்டதும் என் பொல்லாத பிறவிப்பிணி அகன்று சென்று விட்டது.

#2846. நானும் முதல்வன் எனலாமே!

ஆமாறு அறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமாறு அறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
ஏமாப்ப தில்லை இனியோர் இடமில்லை
நாமாம் முதல்வனும் நான்என லாமே.

அகத்தில் ஒளிந்திருக்கும் அரும்பொருள் ஆகிய சிவன், சீவனை ஆட்கொள்ளும் விதத்தை நான் அறிந்து கொண்டேன். அவனைச் சென்று அடையும் வழியினையும் நான் அறிந்து கொண்டேன். நான் இறுதியாகச் சென்று அடைய வேண்டிய இடம் அவன் என்பதையும் நான் அறிந்து கொண்டேன். எனக்கு வேறு பாதுகாப்பு எதுவும் தேவை இல்லை! நான் செல்ல வேண்டிய இடமும் வேறு எதுவும் இல்லை. நான் மட்டுமல்ல. நாம் அனைவரும் சென்று சேர வேண்டிய இடம் சிவனே என்று அறுதியிட்டு உறுதியாக கூறுவதில் இனி எந்தப் பிழையும் இல்லை.
 
Back
Top