• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

ஒன்பதாம் தந்திரம்

5. தூல பஞ்சாக்கரம்

#2702. அரணம் ஆவது ஐந்தெழுத்தே

கிரணங்கள் ஏழும் கிளர்ந்தெரி பொங்கிக்
கரணங்கள் விட்டுயிர் தானெழும் போது
மரணம்கை வைத்துஉயிர் மாற்றிடும் போதும்
அரணம்கை கூட்டுவது அஞ்செழுத் தாமே.

யோகிகளுக்கு வானவில்லின் ஏழுவர்ணங்களும் தலைமீது ஒளிமயமாக விளங்கும். இவர்கள் தங்கள் கருவிகள் கரணங்களைத் துறந்து ஆன்மாவைத் தலைக்கு மேலாக விடுத்தலும் சரி அல்லது இயற்கையாகவே சீவன் தன் கருவிகள் கரணங்களைத் துறந்து உடலைவிட்டு வெளியேறினாலும் சரி, சீவனுக்கு அரணாக நின்று பாதுகாவல் செய்வது ‘நமசிவாய’ என்னும் திரு ஐந்தெழுத்துக்களே.

#2703. வாயுற ஓதி வழுத்துங்கள்

ஞாயிறு திங்கள் நவின்றெழு காலத்தில்
ஆயுறு மந்திரம் ஆரும் அறிகிலார்
சேயுறு கண்ணி திருஎழுத்து அஞ்சையும்
வாயுறு ஓதி வழுத்தலும் ஆமே.

கதிரவனும், திங்களும் உதிக்கும் பொழுது அழகிய ஒளியாக விளங்கும் அந்த மந்திரத்தை எவரும் அறிந்து கொள்ளவில்லை. செம்மை நிறம் வாய்ந்த குண்டலினி சக்திக்கு உரிய ஐந்தெழுத்துக்கள் ‘சிவாய நம’ என்பவை. இவற்றை வாயுற ஓதி சிவ சக்தியரை வழுத்துங்கள்.
 
ஒன்பதாம் தந்திரம்

5. தூல பஞ்சாக்கரம்

#2704. சிவாயநம என்றால் தெள்ளமுதூறும்

தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்று
உள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்
வெள்ளமுது ஊறல் விரும்பிஉண்ணாதவர்
துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே.

உள்ளத்தில் ஒளி பெருகவும், தெளிந்த அமுதத்தைப் பருகவும் ‘சிவாயநம’ என்று ஒரு முறை உரையுங்கள். வெள்ளம் போலப் பெருக்கெடுக்கும் சீவ ஒளியினை விரும்பாதவர்கள், துள்ளிய நீர் ஒரு நீர்க் குமிழயாகி நீரிலேயே இருப்பதை போலப் பிறவிக்கு கடலில் எப்போதும் கிடப்பர்.

#2705. அருள்வழி காட்டுவது ஐந்தெழுத்து

குருவழி யாய குணங்களில் நின்று
கருவழி யாய கணக்கை அறுக்க
வரும்வழி மாள மறுக்கவல் லார்கட்கு
அருள்வழி காட்டுவது அஞ்செழுத் தாமே.

குரு காட்டிய நல்ல வழியில் நில்லுங்கள். பிறவிக்கு காரணமான வினைகளை அறுத்துத் தள்ளுங்கள். பிறவி வரும் வழியை அடைத்து மூடுங்கள். இங்ஙனம் செய்பவர்களுக்கு அருள்வழி காட்டுவது ஐந்தெழுத்துக்கள் ஆகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

5. தூல பஞ்சாக்கரம்

#2706. குரை கழல் ஒலிக்கும் !

வெறிக்க வினைத்துயிர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திருஎழுத்து ஓதும்
குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்
குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே.

உள்ளம் தடுமாறும்படி முற்பிறவிகளில் செய்த தீவினைப் பயன்களால் வாழ்வில் துன்பங்கள் வந்து சேரலாம். அப்போது உம்மிடம் பொருந்தியுள்ள சிவத்தைக் குளிர்விக்கும் ‘சிவாயநம’ என்ற ஐந்தெழுத்தினை ஓதுங்கள். உம் உள்ளக் கருத்தை அறிந்து கொண்ட சிவன், தன் குரைகழல்கள் ஒலியின் மூலம் உமக்கு உறுதுணையாகத் தான் இருந்து வருவதை உணர்த்துவான். இந்த ஆற்றல் பெற்றவர் செய்யும் தவம் அவருக்குச் சிவ வடிவத்தைத் தரும்.

#2707. அஞ்சில் விளங்குபவன் அருள் புரிவான்

நெஞ்சு நினைந்துதம் வாயாற் பிரான்என்று
துஞ்சும் பொழுதுன் துணைத்தாள் சரண்என்று
மஞ்சு தவழும் வடவரை மீதுரை
அஞ்சில் இறைவன் அருள்பெற லாமே.

நெஞ்சாரச் சிவனை நினையுங்கள்! வாயாறச் சிவனை வாழ்த்துங்கள்! துஞ்சும் போதும் “நின்தாள் சரணம்!” என்று அஞ்சாமல் கூறுங்கள்! அப்போது அஞ்செழுத்தில் விளங்குகின்ற நம் ஈசன், மஞ்சு தவழும் வடவரையின் மீது உறையும் அன்பர் நேசன், தன் தண்ணருளைப் அருளைப் பொழிவான்.
 
ஒன்பதாம் தந்திரம்

5. தூல பஞ்சாக்கரம்

#2708. அகலிடம் அவர் புகலிடம் ஆகும்!

பிரான்வைத்த ஐந்தின் பெருமை யுணராது
இராமாற்றம் செய்வார்கொல் ஏழை மனிதர்
பராமுற்றும் கீழோடு பல்வகை யாலும்
அராமுற்றும் சூழ்ந்த அகலிடம் தானே.

திரு ஐந்தெழுத்துக்களில் உறைகின்ற பிரானின் பெருமையை உள்ளபடி உணராமல் ஒருவன் தன் அஞ்ஞான இருளை அகற்ற முடியுமோ? முடியாது! இறைவனின் புகழை அறியாமல் அவனைப்பற்றி வேறு விதமாக எண்ணும் அறிவற்றவர்கள் அரவுகளும், பலவகைக் கணங்களும் சூழ்ந்துள்ள இருண்ட உலகினைச் சென்று அடைவார்கள்.
 
ஒன்பதாம் தந்திரம்

6. சூக்கும பஞ்சாக்கரம்


சூக்கும பஞ்சாக்கரம் = நுட்பமான பஞ்சாக்கரம்
ஒளியை நினைத்து ‘சிவாயநம’ என்று ஓதுவது நுண்மையான ஐந்தெழுத்து ஆகும்.

#2709. குளிகை இட்டுப் பொன் ஆக்குவான்

எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
தெளிய ஒதிச்சிவாயநம என்னும்
குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே.

எந்தை சிவபெருமானின் பெருமைகளை அறியாமல் சிலர் அவனை எள்ளி நகையாடுவர். அவன் தன்மைகளைக் குறித்து விதண்டாவாதம் புரிவர். அங்ஙனம் இன்றி அவனை ஒளிமயமாக எண்ணி, அவனை நினைத்து, உருகும் உள்ளம் படைத்தவர்களுக்கு அவன் ஒளிமயமாக வெளிப்படுவான். ‘சிவாயநம’ என்று அவனை இடையறாச் சிந்தனை செய்வீர். அப்போது அவன் ரசவாதிகள் குளிகையின் உதவியுடன் செம்பைச் சொக்கத் தங்கம் ஆக்குவது போல மலங்கள் நிறைந்த உங்கள் உடலை மலங்கள் நீங்கிப் பொன்னொளி பெறச் செய்வான்.

#2710. ஐந்தெழுத்துக்கள் ஐந்து மலங்களை அகற்றும்

சிவன்சத்தி சீவன் செறுமல மாயை
அவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச்
சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேர
அவம்சேர்த்த பாசம் அணுககி லாவே.

‘சிவாயநம ‘ என்று சொல்லில் உள்ள ஐந்து எழுத்துக்களும் முறையே சிவன், சக்தி, சீவன், மலம், மாயை என்ற ஐந்தையும் உணர்ந்துகின்றன. இதை உள்ளன்போடு ஓதினால் சீவனுக்குத் துன்பம் தருகின்ற ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்ற ஐந்து மலங்களும் அகன்று சென்று விடும். சிகாரம் குறிக்கும் சிவன், வகாரம் குறிக்கும் சக்தியுடனும், யகாரம் குறிக்கும் ஆன்மாவுடனும் சேர்ந்து சீவனைப் பற்றியிருந்த துன்பங்களை போக்கும். ஒளிமயமான சிவனும் சக்தியும் ஒளிமயமாக மாறியுள்ள சீவனுடன் இணைந்தவுடன் அறியாமை இருள் அகன்றுவிடும்.
 
ஒன்பதாம் தந்திரம்

6. சூக்கும பஞ்சாக்கரம்

#2711. பவம் அகன்று பரசிவம் ஆகும்

சிவன்அரு ளாய சிவன்திரு நாமம்
சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயை
சிவன்முத லாகச் சிறந்து நிரோதம்
பவமது அகன்று பரசிவன் ஆமே.

‘சிவாயநம’ என்ற ஐந்தெழுத்துக்கள் சிவன், சக்தி, சீவன், திரோதாயி, மலமாயைகள் இவற்றைக் குறிக்கும். சீவன் ஐந்தெழுத்தை ஓதும் பொழுது வினைகளும் வினைப் பயன்களும் நீங்கும். சீவன் பிறவிப் பிணி நீங்கி பரசிவன் ஆகிவிடும்.

#2712. சிவஞான யோகம் சித்திக்கும்

ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்
ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால்
தீதில் சிவஞான யோகமே சித்திக்கும்
ஓதும் சிவாயமலமற்ற உண்மையே.

‘சிவாய நம’ என்று எண்ணும் போது ‘நம’ என்பது குறிக்கின்ற இருளும், மலமும் தாமே அகன்று சென்று விடும். ஆணவமும் அகன்றுவிடும். அப்போது தூய சிவசக்தியரின் அருளால் சீவனுக்குத் தூய சிவஞானம் சித்திக்கும். எனவே சிவாய நாம என்ற ஒளியினை வழிபடுங்கள். அதன் பயனாகச் சீவனின் மலம் அகன்ற உண்மை நிலை சித்திக்கும்.
 
ஒன்பதாம் தந்திரம்

6. சூக்கும பஞ்சாக்கரம்

#2713. நமாதி சமாதி சிவமாதல் எண்ணவே.

நமாதி நனாதி திரோதாயி யாகத
தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச்
சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவே
நமாதி சமாதி சிவமாதல் எண்ணவே.

ந, ம, சி, வா, ய என்ற ஐந்தெழுத்துக்கள் சீவனின் ஐந்து நிலைகளில் (நனவு, கனவு, சுழுத்தி, துரிய, துரியாதீதம்) விளங்கும். திரோதாயீ என்ற ஆன்மாவை மறைக்கும் ஆவரண சக்தி பராசக்தியாக மாறி அருள் பொழியும் பொழுது, சீவன் உயரிய சமாதியில் உள்ள துரிய நிலையை அடையும். எனவே ‘நமசிவாய’ என்ற நாமத்தை இடையறாது சிந்தித்திருந்தால், சமாதி நிலையை அடைந்து சீவன் சிவன் ஆக மாறிவிடும்.

#2714. அருவினை தீர்ப்பது ஐந்தெழுத்து

அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்
ஒருவனை ஈன்றவள் உள்ளுறும் மாயை
திரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும்
அருவினை தீர்ப்பதும் அவ்வெழுத் தாமே.

அருள் புரிவதில் வேறுபட்டு இருக்கின்ற சக்திக் கூட்டத்துடன் தலைவன் ஆகிய சிவன் கலந்து சீவனின் உடலுடன் அதன் ஆன்மாவைப் பொருத்தி வைப்பான். எனினும் சீவனின் உடல் மாயையில் மூழ்கி இருக்கும். ‘சிவாய’ என்று ஒளி வடிவாகச் சிவனை வழிபட்டால், சீவனை மாயையில் ஆழ்த்துகின்ற ஆணவம், கன்மம், மாயை என்ற மும் மலங்களும் அகன்று விடும். பிறவிக்கு காரணமான வினைகளும் வினைப் பயன்களும் அழிந்து விடும். அருவினைகளைத் தீர்ப்பது அருள் மிகுந்த ஐந்தெழுத்துக்கள் ஆகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

6. சூக்கும பஞ்சாக்கரம்

#2715. ‘சிவசிவ’ எனத் திருவருள் ஆகும்.

சிவசிவ என்றே தெளிகிலர் ஊமர்
சிவசிவ வாயுவும் தேர்ந்துள் அடங்கச்
சிவசிவ ஆய தெளிவின் உள் ளார்கள்
சிவசிவ ஆகும் திருவருள் ஆமே.

வாய் பேசமுடியாத ஊமைகளும் ‘சிவசிவ’ என்று எண்ணுவதில் விளையும் நன்மைகளை அறியார். ‘சிவசிவ’ என்று எண்ணம் நிலைத்திருக்கும் போது மூச்சின் கதியும் சீரடைந்து அந்த நாமத்தில் லயம் அடைந்து விடும். மூச்சின் கதி லயம் அடைந்தால் எண்ணங்கள் ஒடுங்கி மனமும் லயம் அடையும். இதில் தெளிந்தவர்கள் சிவசக்தியாகவே மாறி அமைந்து விடுவர்.

#2716. சிவசிவ என்னச் சிவகதி தானே

சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவினை மாளும்
சிவசிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.

முற்பிறவிகளில் செய்த தீவினைகளால் சிலர் ‘சிவசிவ’ என்று ஓதாமல் வீணே தம் வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். எத்தகைய தீவினை புரிந்திருந்தாலும் ‘சிவசிவ’ என்று உரைக்கும் போதே அந்தத் தீவினைகள் அனைத்தும் மாய்ந்து போகும். ‘சிவசிவ’ என்று ஓதுபவர் தேவ உடல் பெறுவார். ‘சிவசிவ’ என்று சிந்தித்திருப்பதால் அவர்கள் சிவகதியும் அடைவர்.
 
ஒன்பதாம் தந்திரம்

6. சூக்கும பஞ்சாக்கரம்

#2717. அவமதி தீர்ந்து பிறப்பு அறும்!

நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவ என்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்
பவம் அது தீரும் பரிசும்அது அற்றால்
அவமதி தீரும் அறும்பிறப்பு அன்றோ.

‘சிவாய நம’ என்ற திரு ஐந்தெழுக்களை உச்சரிக்கும் முறை இதுவே. ‘நம’ என்ற எழுத்துக்களை கழுத்துக்கு கீழாக உள்ள இருண்ட பகுதியில் நிறுத்த வேண்டும். ‘சிவா’ என்ற எழுத்துக்களைக் கூறுகையில் அவற்றைச் சித்தத்தில் உள்ள ஆன்ம ஒளியில் நிறுத்த வேண்டும். தலையின் மீது உள்ள ஒளி மண்டலத்தில் இருப்பது யகரம் ஆகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

7. அதி சூக்கும பஞ்சாக்கரம்

‘சிவாய சிவ சிவ’ என்பது நுட்பமான பஞ்சாக்கரம். சிவஒளியில் சீவன் சீவன் எந்த நினைவும் இல்லமால் அடங்கி இருத்தல் நுண்ணிய பஞ்சாக்கர தரிசனம்.

#2718. அவாயம் கெட ஆனந்தம் ஆமே.

சிவாய நமவெனச் சித்தம் ஒருக்கி
அவாயம் அறவே அடிமைய தாக்கிச்
சிவாய சிவசிவ என்றென்றே சிந்தை
அவாயம் கெடநிற்க ஆனந்தம் ஆமே.

‘சிவாய நம’ என்று சித்தத்தை வெளியே செல்லாதவாறு அடக்கிச் சீவன் உரைத்துவந்தால், சீவன் சிவத்துக்கே அடிமை ஆகிவிடும். அதன் மன மலங்கள் அறுந்துவிடும். ‘சிவாயசிவசிவ’ என்று ஓதிவந்தால் அபாயங்கள் அனைத்தும் நீங்கிச் சீவனுக்குள் தூய ஆனந்தம் பெருகும்.

#2719. நீங்கா நிலை பெறலாகுமே

செஞ்சுடர் மண்டலத்து ஊடுசென்று அப்புறம்
அஞ்சண வும்முறை ஏறிவழிக் கொண்டு
துஞ்சும் அவன்சொன்ன காலத்து இறைவனை
நெஞ்சென நீங்கா நிலைபெற லாகுமே.

நுண்ணிய ஐந்தெழுத்துக்களின் தரிசனத்தால் சீவனின் மூலாக்கினி உடலில் உள்ள ஆறு ஆதாரங்களின் வழியே மேலே செல்லும். கதிரவன் மண்டலத்தைத் தாண்டிச் செல்லும். திங்கள் மண்டலத்தைச் சென்று அடைந்து ஐந்து அறிவுகளும் பொருந்த அங்கே நிற்கும். அங்கே யோக நித்திரையில் பொருந்திய சீவன் உலக நினைவுகளை மறந்து இருக்கும் பொழுது சிவம் அதன் நெஞ்சை இடமாகக் கொள்வான். அதனால் சீவன் சிவனுடன் இணை பிரியாத நிலையை அடையும்.
 
ஒன்பதாம் தந்திரம்

7. அதி சூக்கும பஞ்சாக்கரம்

#2720. அங்கரை சேர்க்கும் அருங்கலம் ஆகும்

அங்கமும் ஆகம வேதமது ஓதினும்
எங்கள் பிரான்எழுத்து ஒன்றில் இருப்பது
சங்கைகெட்டு அவ்எழுத்து ஒன்றையும் சாதித்தால்
அங்கரை சேர்ந்த அருங்கலம் ஆமே.

அங்கங்கள் ஆறு, ஆகமங்கள், வேதங்கள் என்பவற்றை முறையாக ஓதினாலும் அவை அனைத்தும் கூறும் மெய்ப் பொருள் ‘சி’ என்ற சிவனின் முதல் எழுத்தில் அடங்கிவிடும். ஐயங்களை நீக்கி அந்த எழுத்தின் உண்மையை உணர்ந்து கொண்டு அதைச் சாதனை செய்தலே போதும். அதுவே சீவனை முத்தியாகிய அக்கரையைச் சென்று அடைவிக்கும் அரிய தோணி ஆகும்.

#2721. தலை எழுத்தை அழுத்தும் எழுத்து

பழுத்தன ஐந்தும் பழமறை யுள்ளே
விழித்துஅங்கு உறங்கும் வினைஅறி வாரில்லை
எழுத்துஅறி வோம்என்று உரைப்பார்கள் ஏதர்
எழுத்தை அழுத்தும் எழுத்துஅறி யாரே.

பழுத்த கனிகளைப் போலத் திரு ஐந்தெழுத்துக்கள் பண்டைய மறைகளில் உள்ளன. அந்தக் கனிகளை உண்பதற்கு அவற்றையே சிந்தித்து அவற்றில் ஆழ்ந்துவிடும் அருமையை உணராதவர்கள் அறிவிலிகள். அவர்கள் இந்த எழுத்துக்களின் பெருமையை அறியாமால்,”இவை வெறும் எழுத்துக்கள் தானே!” என்று கூறுவார். ஆனால் அவர் தம் தலை எழுத்துக்களையே மாற்றும் வல்லமை படைத்தவை ஐந்தெழுத்துக்கள் என்று அவற்றின் பெருமையை அவர்கள் அறிய மாட்டார்கள்.
 
ஒன்பதாம் தந்திரம்

8 (1) திருக் கூத்துத் தரிசனம்


திருக்கூத்து என்றால் ஒளியின் அசைவு.
தரிசனம் = அந்த ஒளி அசைவில் திளைத்து இருத்தல்.
இந்த ஒளியின் அசைவே உலகின் எல்லா அசைவுகளுக்கும் மூலகாரணம் ஆகும்.

#2722. எங்கெங்கும் தங்குபவன் சிவன்

எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி
எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்
எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்
தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே.

எங்கும் நிறைந்துள்ளது சிவன் வடிவம்; எங்கு நிறைந்துள்ளனர் சிவசக்தியர்; எல்லா இடங்களும் சிதம்பரம்; எங்கு நோக்கினும் திரு நடனம்; எங்கும் உள்ளான் சிவன், எல்லாம் அவன் அருள்; நிகழ்பவை எல்லாம் அவன் அருள் விளையாட்டு!

#2723. அறிவதற்கு அரிய அற்புதக் கூத்தன்!

சிற்பரஞ் சோதி சிவானந்தக் கூத்தனைச்
சொற்பத மாம்அந்தச் சுந்தரக் கூத்தனைப்
பொற்பதிக் கூத்தனைப் பொன்தில்லைக் கூத்தனை
அற்புதக் கூத்தனை யார்அறி வாரே.

சிவன் சிற்பரஞ்சோதி; சிவன் ஆனந்தக் கூத்தன்; சிவன் பிரணவ நாதத்துள் உறைபவன்; சிவன் சுந்தரக் கூத்தன்; சிவன் பொற்பதிக் கூத்தன்; சிவன் பொற் தில்லைக்கு கூத்தன்; சிவன் அறிவதற்கு அரிய அற்புதக் கூத்தன்! அவனை அறிபவர் யார் ?
 
ஒன்பதாம் தந்திரம்

8(2) சிவானந்தக் கூத்து

சிவானந்தத்தை விளைவிக்கும் கூத்து இது!

#2724. தான் அந்தம் இல்லாத ரூபன்

தான்அந்தம் இல்லாச் சதானந்த சத்திமேல்
தேன்உந்தும் ஆனந்த மாநடம் கண்டீர்
ஞானம் கடந்து நடஞ்செய்யும் நம்பிக்கு அங்கு
ஆனந்தக் கூத்தாட ஆடரங்கு ஆனதே.

தான் அந்தமில்லாதவள் சதா ஆனந்தத்தில் விளங்கும் சக்தி தேவி. தேன்சுவை சிந்தும் ஆனந்த மாநடனம் ஆடும் சிவசக்தியர் இருவரையும் காணீர்! அவர்களைக் கண்டபின்னர் ஞானம் கடந்து நடனம் ஆடும் சிவ பிரானுக்கு ஆடல் அரங்கு ஆகி விடுவீர்கள் நீங்களும்!

#2725. ஆனந்தக் கூத்து உகந்தான்

ஆனந்தம் ஆடரங்கு ஆனந்தம் பாடல்கள்
ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்
ஆனந்தம் ஆக அகில சராசரம்
ஆனந்தம் ஆனந்தக் கூத்துஉகந் தானுக்கே.

சிவனின் ஆடலரங்கு ஆனந்த மயமானது; அவன் ஆடலின் பாடல்கள் ஆனந்த மயமானவை; அவன் ஆடலின் இசை ஆனந்த மயமானது; அவன் ஆடலின் வாத்திய இசை ஆனந்த மயமானது; சிருட்டிகள் அனைத்தும் ஆனந்த மயமானவை; ஆனந்த நடனம் ஆடும் ஈசனும் ஆனந்த மயமானவன்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(2) சிவானந்தக் கூத்து

#2726. சிவானந்த நடனம்

ஒளியாம் பரமாம் உளதாம் பரமும்
அளியார் சிவகாமி யாகும் சமயக்
களியார் பரமும் கருதுறை யந்தக்
தெளிவாம் சிவானந்த நட்டத்தின் சித்தியே.

சிவானந்த நடனத்தின் பயன் யாது?
அறிவுப் பேரொளியாகிய சிவபரமும், தத்துவங்களை விட்டு விட்ட ஆன்மபரமும், உயிர்களுக்கு அன்பைப் பொழிந்து இன்பம் தரும் சக்தியாகி பரமும், ஆன்மாவின் கருத்தில் உறைகின்ற பேரின்பத்தில் எல்லையே சிவானந்த நடனத்தின் உண்மைப் பயன் ஆகும்.

#2727. தேன்மொழி பாகனின் திருநடனம்

ஆன நடம்ஐந்து அகள சகளத்தர்
ஆன நடமாடி ஐங்கரு மத்தாக
ஆன தொழில்அரு ளால்ஐந் தொழில்செய்தே
தேன்மொழி பாகன் திருநட மாடுமே.

வடிவம் அற்ற சிவபெருமான் ஏன் வடிவம் எடுத்துக் கொண்டு நடனம் ஆடுகிறான்? சிவன் புரியும் இந்த நடனங்கள் ஐந்து வகைப்படும். அவை செயய்யும் தொழில்கள் ஐந்து வகைப்படும். தேன்மொழி பேசும் தேவியைத் தன் உடலின் ஒரு பாகமாகக் கொண்டுள்ள பிரான் இந்த ஐந்தொழில்களை இயற்றுவதற்கே ஐந்து வகை நடனம் ஆடுகிறான்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(2) சிவானந்தக் கூத்து

#2728. ஐங்கருமம் இயற்றுபவன்

பூதாண்ட பேதாண்ட போகாண்ட யோகாண்ட
மூதாண்ட முத்தாண்ட மோகாண்ட தேகாண்ட
தாகாண்ட ஐங்கரு மாத்தாண்ட தற்பரத்து
ஏகாந்த மாம்பிர மாண்டத்த என்பவே.

ஒன்பது வகையான அண்டங்கள் ஈசன் படைப்பில் உள்ளன. அவை முறையே

1). ஐம்பூதங்களின் கலப்பால் உண்டாகிய அண்டம்;

2). வேறு வகையான பூதங்களின் கலப்பால் உருவாகிய அண்டம்;

3). வினைகளுக்கு ஏற்ப சீவன்கள் போகங்களை அனுபவிக்கும் அண்டம்;

4). யோக சாதனைகளுக்கு ஏற்ப யோகியர் சென்று அடையும் அண்டம்;

5). புனர் சிருட்டியின் போது சீவர்கள் சென்று பிறக்கும் அண்டம்;

6). முக்தி அடைந்தவர்களின் அண்டம்;

7). உயிர் பிரிந்த பின்பும் கொண்ட ஆசைகளைத் துறக்காதவர்களின் அண்டம்;

8). பூத உடலுடன் சீவர்கள் வாழ்கின்ற அண்டம்;

9). விருப்பங்கள் மிகுந்தவர்கள் வாழ்கின்ற அண்டம்.

பிரம்மாண்டத்தில் உள்ள இந்த ஒன்பது அண்டங்களிலும் ஐந்தொழில்களைத் தன் விருப்பம் போல இயற்றுபவன் ஏகாந்தத்தில் இருக்கும் தற்பரன் ஆகிய சிவன்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(2) சிவானந்தக் கூத்து

#2729. ஞான ஆனந்தக் கூத்து!

வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்
கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்
பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட
நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே.

வேதங்களில் உள்ள அறிவு ஆடிட; ஆகமங்களில் உள்ள அறிவு ஆடிட; கீதங்களின் அறிவு ஆடிட; ஆதாரச் சக்கரங்கள் ஏழில் விளையும் அறிவும் ஆடிட; ஐம்பூதங்களின் அறிவு ஆடிட; அனைத்து புவனங்களின் அறிவும் ஆடிட; ஞானத்தை அளிக்கின்ற ஞான ஆனந்தக் கூத்தினை நாத சக்தியுடன் கூடி ஈசன் ஆடினான்.

#2730. ஆடும் சித்தன் சிவன்!

பூதங்கள் ஐந்தில் பொறியில் புலன்ஐந்தில்
வேதங்கள் ஐந்தின் மிகும்ஆ கமந்தன்னில்
ஓதும் கலைகாலம் ஊழியுடன் அண்டப்
போதங்கள் ஐந்தில் புணர்ந்தாடும் சித்தனே.

ஐந்து பூதங்களிலும்; ஐம் பொறிகளிலும்; ஐம் புலன்களிலும்; ஐந்து வேதங்களிலும்; எண்ணிக்கையில் மிகுந்த ஆகமங்களிலும்; ஐந்து கலைகளிலும்; பல காலத்திலும், பல ஊழிகளிலும்; பல வேறு அண்டங்களில் உள்ள ஐந்து வகை அறிவிலும்; இரண்டறக் கலந்து சித்த மூர்த்தியாகிய சிவன் நடனம் ஆடுகிறான்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(2) சிவானந்தக் கூத்து

#2731. ஈசன் ஆட ஆடும் சராசரம்

தேவர் சுரர்நரர் சித்தர்வித் தியாதரர்
மூவர்கள் ஆதியின் முப்பத்து மூவர்கள்
தாபதர் சத்தர் சமயஞ் சராசரம்
யாவையும் ஆடிடும் எம்மிறை யாடவே.

தேவர்கள், சுரர்கள், நரர்கள், சித்தர்கள்; வித்தியாதரர்கள்; மும் மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள்; தவம் செய்பவர்கள், ஏழு பெரும் தவ முனிவர்கள், அசையும் உயிர்கள், அசையாத பொருட்கள் எனப் படைப்பில் இருக்கும் அத்தனையும் இறைவன் நடனம் ஆடும் இடங்கள் ஆகும்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(3). சுந்தரக் கூத்து

8(3). சுந்தரக் கூத்து
சீவனின் அண்ட கோசத்தினுள் உமை அம்மை கண்டு ரசிக்கும்படி சிவன் புரியும் நடனம்

#2732. உமை காணக் கூத்து உகந்தான்

அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்
உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்
கண்டம் கரியான் கருணை திருவுருக்
கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே.

அண்டங்களில் ஏழினுக்கும் அப்பால்; சக்தி, சதாசிவனின் உறைவிடத்துக்கும் மேலே; கரிய கழுத்தினை உடைய; கருணையே திருவுருவாகக் கொண்ட ஈசன் அன்னை உமை கண்டு மகிழும்படிக் கூத்துப் புரிந்திட உகந்தான்.

#2733. மன்னவனின் பல்வேறு நடனங்கள்

கொடிகொட்டி பாண்டுரங் கோடுசங் காரம்
நடம் எட்டோடு ஐந்துஆறு நாடியுள் நாடும்
திடம்உற்று எழும்தேவ தாருவும் தில்லை
வடம் உற்ற மாவனம் மன்னவன் தானே.

மன்னவன் ஆடும் கூத்தின் வகைகள்:

கொடுகொட்டிக் கூத்து:
அனைத்துத் தத்துவங்களையும் அழித்துவிட்டு ஆடும் கூத்து

பாண்டரங்கம் :
திரிபுரங்களை எரித்தபோது உண்டாகிய சாம்பலை உடலில் அணிந்து கொண்டு ஆடும் கூத்து

கொடு:
நான்முகனின் தலையைக் கிள்ளிய போது ஆடிய கூத்து

நடம் எட்டு:
அட்ட மூர்த்தத்தில் ஆடுகின்ற கூத்து

நடம் ஐந்து:
நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளில் ஆடும் கூத்து

ஆறு :
உடலின் ஆறு ஆதாரங்களில் ஆடும் கூத்து

தேவதாருவனம்:
தாருகாவன முனிவர்கள் ஆணவத்தை அழிக்க ஆடிய கூத்து.

தில்லைவனம்:
அறியாமை என்னும் தில்லைவனத்தை அழிக்க மனம் என்னும் தாமரை மலரில் ஆடிய கூத்து

வடமாவனம் :
திரு ஆலங்காட்டு என்ற மூலாதாரத்தில் ஆடிய கூத்து.
 
ஒன்பதாம் தந்திரம்

8(3). சுந்தரக் கூத்து

#2734. பரன் நடம் ஆடுவான்

பரமாண்டத்து ஊடே பராசத்தி பாதம்
பரமாண்டத்து ஊடே படரொளி ஈசன்
பரமாண்டத்து ஊடே படர்தரு நாதம்
பரமாண்டத்து ஊடே பரன்நடம் ஆடுமே.

பரமாண்டத்தின் உச்சியில் உள்ளன பராசக்தியின் திருப்பாதங்கள்.
பரமாண்டத்தின் உச்சியில் படரும் ஒளியில் இறைவன் இருக்கின்றான்.
பரமாண்டத்தின் உச்சியில் படரும் ஒளியில் உள்ளது நாதம்.
பரமாண்டத்தின் உச்சியில் படரும் ஒளியில் விளங்கும் நாதத்தில் பரன் நடனம் ஆடுகின்றான்.

#2735. போதல், புகுதல் இல்லை!

அங்குசம் என்ன எழுமார்க்கம் போதத்தில்
தங்கிய தொந்தி எனும்தாள ஒத்தினில்
சங்கரன் மூலநா டிக்குள் தரித்தாடல்
பொங்கிய காலம் புகும்போகல் இல்லையே.

யானையை அடக்குவதற்கு ஒரு சிறிய அங்குசம் போதுமானது. சீவனின் அறிவில் தோம் தீம் என்ற தாளத்துக்கு ஏற்பச் சிவன் சுழுமுனையில் நடனம் புரிவான். அப்போது சீவனின் மனம் வெளியே செல்வதை விட்டு விட்டு அங்குசத்திற்கு அடங்கிய யானையைப் போல அடங்கிவிடும்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(3). சுந்தரக் கூத்து

#2736. ஞானத்துள் ஆடி முடிக்கும் நாதன்

ஆன்நந்தி யாடிபின் நவக் கூத்தாடிக்
கான்நந்தி யாடிக் கருத்தில் தரித்தாடி
மூனச் சுழுனையுள் ஆடி முடிவில்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே.

சீவன்களின் அறியாமையைப் போக்க விரும்பிய சிவன் நடனம் ஆடினான். சீவன்களின் அறியாமை நீங்கிச் சீவர்கள் அறிவு பெற்ற பின்பு, உயிர்களிடம் ஒன்பது வகையாகப் பொருந்தி ஆடினான். மூன்று நாடிகளும் பொருந்தும் சுழுமுனையில் நின்று ஆடினான். எல்லையற்ற சிவஞானத்தில் நின்று ஆடினான். சிவன் எனக்குள் புகுந்து என் உயிர் அறிவைக் கெடுத்து அருள் செய்தான்.

#2737. தொல் நடனம் ஆடுவான்

சத்திகள் ஐந்தும் சிவபேதம் தான்ஐந்தும்
முத்திகள் எட்டும் முதலாம் பதம் எட்டும்
சித்திகள் எட்டும் சிவபதம் தான்எட்டும்
சுத்திகள் எட்டுஈசன் தொல்நடம் ஆடுமே

சிவன் நடனம் செய்யும் இடங்கள்:

பிராமி, வைணவி, ரௌத்திரி, காளி, மனோன்மனி என்னும் சக்திகள் ஐவர்;
நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்ற ஐந்து சிவபேதங்கள்;
மூர்த்திகள் எண்மர் லயம் அடையும் எட்டு இடங்கள்;
அணிமா முதலிய எட்டுச் சித்திகளின் நிலைகள்;
சிவ பாதங்களின் எட்டு நிலைகள்;
சுத்தி கர்மங்கள் எட்டு;
என்ற இவற்றுள் சிவன் நடனம் புரிகின்றான்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(3). சுந்தரக் கூத்து

#2738. நந்தி அடிக்கீழ் அடங்குமே.

மேகங்கள் ஏழும் விரிகடல் தீவேழும்
தேகங்கள் ஏழும் சிவபாற் கரன்ஏழும்
தாகங்கள் ஏழும் சாந்திகள் ஏழும்
ஆகின்ற நந்தி அடிக்கீழ் அடங்குமே.

சிவபிரானின் திருவடிகளுக்குக் கீழே அடங்கி இருப்பவை இவை:-

1. மேகங்கள் ஏழு:
ஆவர்த்தம், புட்கலம், சங்காரம், ஆசவனம், நீர்க்காரி, சொற்காரி, சிலாவருடம்

2. கடல்கள் ஏழு:-
உப்புக்கடல், கரும்புச் சாற்றுக்கடல், மதுக்கடல், நெய்க்கடல், தயிர்க்கடல், பாற்கடல், தூய நீர்க்கடல்

3. தீவுகள் ஏழு:-
நாவலந்தீவு, இறலித் தீவு, குசத்தீவு, கிரௌஞ்சத் தீவு, இளவந்தீவு, தெங்கத் தீவு, புட்கரத் தீவு

4. உயிரினங்கள் ஏழு:-
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்

5. சிவ பேதங்கள் ஏழு:-
நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், நாதம், விந்து

6. ஏழு நாக்குக்களை உடைய அக்கினி.

7. சாந்திகள் ஏழு:-
ஐந்து இந்திரியங்கள் + மனம் + புத்தி
 
ஒன்பதாம் தந்திரம்

8(4). பொற்பதிக் கூத்து


பொன் ஒளி வீசுவது பொன்னம்பலம்.
தலையின் மீது பொன்னொளியில் விளங்குவது பொற்பதிக் கூத்து.

#2739. தனி நடம் செய்வான் தற்பரன்

தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்
அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.

சிவனின் ஐந்து முகங்கள்: தெற்கே உள்ள முகம் அகோரம்; வடக்கில் உள்ளது வாமதேவம்; கிழக்கில் உள்ளது தத்புருடம்; மேற்கில் உள்ளது சத்தியோசாதம்; உச்சியில் உள்ள முகம் ஈசானம். இந்த அற்புதமான ஐந்து முகங்களிலும், உருவம், அருவம், உருவருவம் என்னும் ஒன்பது பேதங்களிலும் பொருந்தி, ஒப்பற்ற நடனம் செய்கின்றான் சிவபெருமான்.

#2740. சிவனடியார் என்பவர் யார்?

அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர்
அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்
அடிஆர் பவரே அடியவர் ஆமால்
அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே.

சிவானந்தத்தைத் தமக்குள் அனுபவித்தவர்; சிவபெருமானிடத்தில் அடங்கி அங்கே நிலைத்து இருப்பவர்; சிவன் திருவடிகளின் இன்பத்தில் திளைத்து இருப்பவர்; பொன்னம்பலத்தில் சிவநடனம் கண்டு களித்தவர் என்ற இவர்களே மெய்யான சிவனடியார்கள்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(4). பொற்பதிக் கூத்து

#2741. நடம் செய்யும் நந்தி ஒரு ஞானக் கூத்தன்

அடங்காத என்னை அடக்கி அடிவைத்து
இடம்காண் பரானநத்தத் தேஎன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்
படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே.

ஐம்பொறிகளின் வசப்பட்டு அடங்காமல் திரிந்த என் மனத்தில் தன் திருவடிகளைப் பதித்து சிவன் என்னை அடக்கினான். என் சீவனின் சக்தியைப் பெருக்கி ஒளிரச் செய்தான். என்னைப் பேரின்பத்தில் ஆழ்த்தினான். நன்மை தரும் ஞானக் கூத்தினை ஆடுகின்ற ஈசன் என்னை ஓர் அசையாத ஓவியம் போல ஆக்கி விட்டான். என் உள்ளத்தில் நிலை பெற்று விளங்கினான்

#2742. கூத்தனை என் அன்பில் வைத்தேன்

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்
செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே.

வானில் நடனம் செய்பவன் சிவன்; உத்தமர்கள் உள்ளங்களில் நடனம் செய்பவன் சிவன்; பொன்னம்பலத்தில் நடனம் செய்பவன் சிவன்; சீவனுக்குத் துணையாக உள்ள சேவகன் சிவன்; சீவர்களுடன் இணைபிரியாத உறவு கொள்பவன் சிவன்; தற்பரம் என்ற உயரிய பொருள் ஆனவன் சிவன்; இன்பம் பெற வேண்டி அவனை நான் என் அன்பில் பொதிந்து வைத்தேன்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(4). பொற்பதிக் கூத்து

#2743. ஆரும் அறியா ஆணிப் பொற்கூத்தன்

மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே.

சிவந்த ஒளி மணடலத்தில் ஆடுபவன் சிவன்; தில்லையில் நடனம் புரிபவன் சிவன்; ஒளிவீசும் மன்றத்தில் நடம் புரியும் விரிசடையோன் அவன்; துவாதசாந்த ஒளியில் நடம் புரிபவன் சிவன்; சிவானந்தத்தில் ஆடுபவன் சிவன்; மாற்றுக் குறையாத பொன் வண்ணமேனியனை யாரால் உணர்ந்து கொள்ள முடியும்? யாரால் பிறருக்கு உரைக்க முடியும்?

#2744. மெய்யன்பரின் மெய்ப்பாடுகள்!

விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்
தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே.

செம்மை சிறந்த திரு அம்பலத்தில் நடம் செய்யும் சிவபெருமானின் பொற்றாமரைப் பாதங்களின் மேல் மாறாத அன்பு கொண்டுள்ள மெய்யடியார்களின் மெய்ப்பாடுகள் இவை. அவர்கள் கொண்ட தாளாத காதலால் அவர்கள் நெஞ்சம் விம்மும்; மகிழ்ச்சி பெருகும்; தொடர்ந்து அச்சம் தோன்றும்; பக்தி மேலீட்டால் மெய் சோர்ந்து விழுவார்; பிறகு எழுவார்; உடல் தளர்ந்து ஐம் பொறிகளும் தம் அறிவு மறைந்தால் நினைவை இழக்கும். சீவனின் செயல் திறமும் குறைந்து விடும்.
 
ஒன்பதாம் தந்திரம்

8(4). பொற்பதிக் கூத்து

#2745. ஆனந்தம் அடையும் நாட்டம் அதிகரிக்கும்

தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த
நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே.

திரு அம்பலத்தில் சிவானந்தம் தரும் சிவநடனம் கண்டவரின் நிலை என்ன ஆகும் ?
வெளி உலகத்தில் சென்று எதையாவது தேட வேண்டும் என்று எண்ணம் அறவே விலகிவிடும்! சிந்தை வேறு வேறு பொருட்களைச் சீர்தூக்கி நோக்கும் செயலைத் துறந்து விடும். உடல் நினைவு இல்லாமல் போகும்! உடல் தளர்ச்சி தெரியாது! மூச்சு பிரம்மப் புழையை நோக்கிப் பாயும். எனவே அந்த உணர்வின் அறிவு மட்டும் செம்மையாக இருக்கும். ஐம்புலன்களின் அறிவு அழிந்து சீவனின் ஆசைகள் அறுந்து விடும். உள்ளத்தில் ஆனந்தம் பெருக்கு எடுக்கும். மேலும் மேலும் சிவானந்தத்தைச் சுவைக்கும் ஆர்வம் மட்டும் முதிர்ச்சி அடையும்.

#2746. அம்பலத்தும் அரன் ஆடுவான்

காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக்
கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி
நாளுற அம்பலத் தேயாடும் நாதனே.

சிவன் காளியோடு நடனம் ஆடினான்; கனகாசலம் ஆகிய துவாதசாந்தப் பெருவெளியிலும் சிவன் நடனம் ஆடினான்; பேய்களுடன் சிவன் நடனம் ஆடினான்; பூமியில் சிவன் நடனம் ஆடினான்; நீரிலும், தீயிலும், காற்றிலும், வானத்திலும் சிவன் நடனம் ஆடினான். சீவர்கள் நெடுநாள் வாழ்வதற்குச் சிவன் அம்பலத்திலும் நடனம் ஆடுவான்.
 

Latest ads

Back
Top