Quotable Quotes Part II

திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

4. மத்திய சாக்கிராவத்தை
புருவ நடுவில் சீவன் ஐந்து அவத்தைகளை உணர்வது.

இவை ஐந்தும் விழிப்பு நிலையில் வருவன.

1. சாக்கிரத்தில் சாக்கிரம்

2. சாக்கிரத்தில் சொப்பனம்

3. சாக்கிரத்தில் சுழுத்தி

4. சாக்கிரத்தில் துரியம்

5. சாக்கிரத்தில் துரியாதீதம்

#2167 to #2171

#2167. சாக்கிர சாக்கிரம்

சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனந் தன்னிடை மாமாயை
சாக்கிரந் தன்னில் சுழுத்தித்தற் காமியஞ்
சாக்கிரந் தன்னில் துரியத்து மாயையே.

விழிப்பு நிலையில் விழிப்பு நிலை:
திரோதான சக்தி ஆன்ம விளக்கம் பெறமுடியாதபடி மறைத்துக் கொண்டு இருக்கும்.

விழிப்பு நிலையில் கனவு நிலை :
ஆன்மா மாயா காரியங்களில் அழுந்தி நிற்கும்.

விழிப்பு நிலையில் சுழுத்தி :
கருவிகள் ஓய்வடைந்துவிடும். ஆன்மா தான் விரும்பும் பொருளில் அதுவாக நிற்கும்

விழிப்பு நிலையில் துரியம் :
ஆன்மா தான் விரும்பிய பொருளில் நிற்கும் ஆற்றலை இழந்து விடும். மாயை வயப்பட்டு நிற்கும்.

#2168. மாயை எழுப்பும் கலாதியை

மாயை எழுப்பும் கலாதியை, மாற்று அதன்
நேய இராக ஆதி ஏய்ந்த துரியத்து
தோயும் சுழுமுனை, கானா, நானாவும் துன்னி
ஆயினன், அந்தச் சகலத்து உளானே.

மாயை ஆன்மாவிடம் கலைகள் முதலியவற்றை எழுப்பி விடும். அதனால் நேயம் இராகம் இவற்றுக்கு ஏற்பச் சீவனிடம் துரியம் பொருத்தும். அதன் பின்னர் சீவன் படிப் படியாகச் சுழுத்தி, கனவு, நனவு என்னும் நிலைகளில் பொருந்தி விட்டு கருவிகள் காரணங்கள் பொருந்திய சகல நிலையை அடையும்.

#2169. மூவயின் ஆன்மா முயலும் கருமமே

மேவிய அந்தகன் விழிகண் குருடன்ஆம்
ஆவயின், முன்அடிக் காணுமது கொண்டு
மேவும் தடி கொண்டு செல்லும்; விழிபெற
மூவயின் ஆன்மா முயலும் கருமமே.

பிறவிக் குருடனும், பிறந்த பிறகு குருடானவனும் நடந்து செல்கையில், முன்பு நடந்து சென்ற பழக்கத்தினால் செல்லும் வழியை அனுமானம் செய்துகொண்டு, ஒரு தடியின் உதவியுடன் நடந்து சென்று விடுவர். சகலர், பிரளயாகலர் , விஞ்ஞானகலர் என்ற மூன்று வகைப்பட்ட ஆன்மாக்களும் இது போன்றே முயன்று தம் சகல நிலையை அடையும்.

#2170. ஐந்தும் தான் உண்ணுமாறே

மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள்
ஒத்து அங்கு இருந்து, அங்கு உயிர் உண்ணுமாறுபோல்
அத்தனும் ஐம்பொறி ஆடு அகத்துள் நின்ற
சத்தம் முதல் ஐந்தும் தான் உண்ணுமாறே.

சிலந்திப் பூச்சி தான் கட்டிய வலையின் நடுவில் அமர்ந்து கொண்டு அங்கு வருகின்ற உயிர் இனங்களை உண்டு இன்புறும். அத்தனும் அது போன்றேச் சீவனின் ஐம்பொறிகளும் வந்து பொருந்துகின்ற இடத்தில் அமர்ந்து கொண்டு ஐம் புலன்களையும் அனுபவித்து இன்புறுகின்றான்.

#2171. நச்சியவனருள் செய்து நானுய்ந்தவாறே

வைச்சன வைச்சு வகையிரு பத்தைஞ்சு
முச்சு முடன் அணை வானொரு வன்னுளன்
பிச்சன் பெரியன் பிறப்பிலி யென்றென்று
நச்சி யவனருள்செய்து நானுய்ந்த வாறே.

வைக்க வேண்டிய இருபத்தைந்து தத்துவங்களையும் சீவனுக்குள் ஈசன் அமைத்துள்ளான். உபாயமாக அவற்றையே கொண்டு எங்கும் உள்ள சிவன் சீவனிலும் பொருந்தி உள்ளான். அவனை நான் “பித்தன், பெரியவன், பிறப்பில்லாதவன் ” என்றெல்லாம் புகழ்ந்து அவன் அருளுக்குப் பாத்திரம் ஆனேன்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2172 to #2175

#2172. நாலேழு வேதாந்த தத்வமே

நாலா றுடன்புருட னற்றத் துவமுடன்
வேறான வையைந்து மெய்ப்புரு டன்பரங்
கூறா வியோமம் பரமெனக் கொண்டனன்
வேறான நாலேழு வேதாந்த தத்வமே.

ஆன்மத் தத்துவங்கள் இருபத்து ஐந்து என்பர். ஆனால் பிரம்மவாதிகள் கண்ட தத்துவங்கள் மொத்தம் இருபத்தெட்டு ஆகும். அவை இருபத்து ஐந்து ஆன்மத் தத்துவங்களுடன் ஆன்மா, ப்ரம்மம், பரமாகாயம் என்பவை சேர்த்து மொத்தம் 28 வேதாந்தத் தத்துவங்கள்.

விளக்கம் :
பூதங்கள் 5 + இந்திரியங்கள் 10 + தொழில்கள் 10 + ஆன்மா + பிரம்மம் + பரமாகாசம் = 28

#2173. காலங் கொண்டானடி காணலுமாமே

ஏலங்கொண் டாங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண் டாங்கே குணத்தி னுடன்புக்கு
மூலங்கொண் டாங்கே முறுக்கிமுக் கோணிலும்
காலங்கொண் டானடி காணலு மாமே.

சீவன் தன் உயிர்வளியை இடைகலை பிங்கலை நாடிகளில் முறையாகப் பொருத்த வேண்டும். ரேசகம், பூரகம் இவற்றால் முறைப்படிப் பொருந்தி மூலாதாரத்தில் இருந்து மேலே செல்ல வேண்டும். சத்துவ குணத்துடன் கூடி நாடிகளில் உள்ள மூன்று முடிச்சுக்களையும் கடந்து சென்றால் காலத்தைக் கடந்த ஈசனின் திருவடிகளைக் காணலாம்.

#2174. நாடிய நல்ல மனம்

நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும்
கூடிய காமம் குளிக்கு மிரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே.

பத்து முக்கிய நாடிகளும், நன்மை புரிகின்ற பத்து வாயுக்களும் மூலாதாரத்தில் இருந்து மேலே செல்கின்ற சுழுமுனை நாடியில் ஒடுங்கிவிடும். சீவனுக்குக் காமப் புணர்ச்சியில் கிடைக்கும் இன்பமும், நன்மையை நாடுகின்ற நல்ல மனமும் உடலில் வந்து பொருந்தும்.

#2175. ஆவன ஆவ! அழிவ அழிவன!

ஆவன ஆவ அழிவ அழிவன
போவான போவ புகுவ புகுவன
காவலன் பேர் நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவனோ செய்யும் இலங்கிழை யோனே.

ஆகவேண்டியவை ஆகும்; அழிய வேண்டியவை அழியும்,போக வேண்டியவை போகும்; வர வேண்டியவை வரும். காக்கும் சிவபிரான் ஆன்மாக்களுக்குத் தகுந்த அனுபவங்களைத் தருவான். தானும் அவர்களைக் கண்டு கொண்டிருப்பான். இளகிய நெஞ்சம் கொண்ட அருளாளன் அவன்
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2176 to #2179

#2176. வேதாந்தத் தத்துவங்கள் 28

பத்தொடு பத்துமோர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமு முள்ளுணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்
தத்துவ நாலே ழெனஉன்னத் தக்கதே.

பொறிகள் பத்து, அவைகளின் தொழில்கள் பத்து, அந்தக் கரணங்கள் நான்கு என மொத்தம் இருபத்து நான்கு. இவற்றுடன் சீவன், பிராணன், பரமாகாயம், பிரம்மம் என்பவை சேர்ந்து வேதாந்தத் தத்துவங்கள் மொத்தம் இருபத்தெட்டு.

#2177. வணங்கிடும் ஐம் மலம்

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தளங்கொ ளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு மைம்மலம் வாயு எழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவம் நின்றே.

முந்நூற்று முப்பதைப் பத்து மடங்காக்கி, அத்தனை முறை பிராண வாயுவைப் பன்னிரண்டு விரற்கடை மேல் நோக்கிச் செலுத்தினால் அப்போது சீவனின் ஐந்து மலங்களும் அகன்று விடும். அத்துடன் ஆன்ம தத்துவங்களும் ஆங்காங்கே நின்று விடும்.

#2178. தத்துவங்கள் மொத்தம் எத்தனை?

நாலொரு கோடியே நாற்பத்தெண் ணாயிரம்
மேலுமோ ரைந் நூறு வேறா யடங்கிடும்
பாலாவை தொண்ணூறோடு ஆறுள் படுமவை
கோலிய ஐயைந்து ளாகும் குறிக்கிலே.

தத்துவங்களை விரிவாகக் கணக்கிட்டால் அவை நான்கு கோடியே நாற்பத்தெட்டாயிரத்து ஐநூறு ஆகும். அவற்றைத் தொகுத்தால் அவை தொண்ணூற்றாறு தத்துவங்களுள் அடங்கும். அவற்றை மேலும் சுருக்கினால் அவை வெறும் இருபத்தி ஐந்து தத்துவங்களுள் அடங்கிவிடும்.

#2179. சமயங்களின் தத்துவங்கள்

ஆகின்ற தொண்ணூறோ டாறும் பொதுவென்பர்
ஆகின்ற வாறா றருஞ் சைவர் தத்துவம்
ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு
ஆகின்ற நாலாறை யையந்தும் மாயாவாதிக்கே

மாயையின் காரியம் எனப்படும் தத்துவங்கள் மொத்தம் தொண்ணூற்றாறு. சைவர்களின் தத்துவங்கள் மொத்தம் முப்பத்தாறு. வேதாந்திகளின் தத்துவங்கள் இருபத்தெட்டு. வைணவர்களுக்குத் தத்துவங்கள் இருபத்து நான்கு. மாயாவாதிகளின் தத்துவங்கள் இருபத்தைந்து.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2180 to #2183

#2180. வித்தகனாகி விளங்கி இருக்கலாம்

தத்துவமானது தன்வழி நின்றிடில்
வித்தக னாகி விளங்கி யிருக்கலாம்
பொய்த்தவ மாமாவை போயிடு மவ்வழி
தத்துவ மாவது அகார வெழுத்தே.

சாதகன் வித்தகனாக விளங்குவதற்குத் தத்துவங்களைத் தன்வழிப்படி நடக்கச் வேண்டும். அகார எழுத்தின் அறிவு ஆகும் பிரணவ யோகம். பிரணவ நெறி பிற பொய்யான நெறிகளை அகற்றிவிடும்.

#2181. அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே

அறிவொன் றிலாதன ஐயேழு மொன்றும்
அறிகின்ற வென்னை யறியா திருந்தேன்
அறிகின்றாய் நீயென் றருள் செய்தார் நந்தி
அறிகின்ற நானென் றறிந்து கொண்டேனே.

முப்பத்தாறு ஆன்ம தத்துவங்களும் ஆன்மாவுடன் பொருந்தாதபோது அறிவற்றவை ஆகும். அவற்றை அறிவது ‘அறிவுள்ள நான்’ என்பதை நான் அறியாமல் இருந்தேன். என்னையே அறிந்து கொள்ளாமல் இருந்த என்னிடம் குருநாதர் கூறினார் ” அறிகின்ற ஆற்றல் கொண்டவன் நீ ” என்று. நான் அறிகின்ற ஆற்றல் உடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்.

#2182. ஒன்றாகித் தானாகி நிற்கும்

சாக்கிர சாக்கிரம் ஆதிதனில் ஐந்தும்
ஆக்கும் மலா அவத்தை ஐந்தும், நனவாதி
போக்கி, இவற்றோடு பொய்யான ஆறாறும்
நீக்கி நெறிநின்று ஒன்றாகித் தானாகி நிற்குமே.

நனவில் நனவு போன்ற ஐந்து நிலைகளில் தத்துவங்கள் ஐந்தும் பொருந்தும்.அந்த ஐந்து தத்துவங்களையும் ஐந்து வாதிகளால் போக்க வேண்டும். த்துடன் பொய்யான த்துவங்ளையும் அகற்றினால் ஒன்றாகி விடும்.

சாக்கிரத்தில் ஐந்து நிலைகள்:
சாக்கிரத்ததில் சாக்கிரம், சாக்கிரத்ததில் சொப்பனம், சாக்கிரத்ததில்சுழுத்தி , சாக்கிரத்ததில் துரியம்,
சாக்கிரத்ததில் துரியாதீதம்.

சிவத்துவங்கள் ஐந்து :
வித்தை, மகேசுவரம், சாதாக்கியம், விந்து, நாதம்.

#2183. ஐந்து தெய்வங்கள்

ஆணவ மாதி மலமைந் தலரோனுக்கு
ஆணவ மாதி நான்காமாற்கு அரனுக்கு
ஆணவ மாதிமூன் றீசர்க் கிரண்டென்ப
ஆணவ மொன்றே சதாசிவற் காவதே.

நான்முகனுக்கு ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து மலங்கள் உள்ளன.
திருமாலுக்கு ஆணவம், கன்மம், மாயை, திரோதாயி என்னும் நான்கு மலங்கள் உள்ளன. உருத்திரனுக்கு ஆணவம், கன்மம், திரோதாயி என்ற மூன்று மலங்கள் உள்ளன. மகேசுவரனுக்கு உள்ள இரண்டு மலங்கள் ஆணவமும், கன்மமும் ஆகும். சதாசிவனுக்கு உள்ள மலம் ஆணவம் ஒன்றே ஆகும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

5. அத்துவாக்கள்

அத்துவாக்கள் = வழிகள்.

அத்துவாக்கள் ஆறு வகைப்படும்.

அவை மந்திரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை என்பன.

வினைகளை ஈட்டுவதுக்கும், ஈட்டிய வினைகளைத் துய்ப்பதற்கும் உண்டானவை.

#2184 to #2186

#2184. வகையும் தொகையும்

தத்துவம் ஆறாறு; தன்மனு ஏழ் கோடி
மெய்த்தகு வன்னம்ஐம் பான்ஒன்று; மேதினி
ஒத்த இரு நூற்று இருபான் நான்கு; எண்பான் ஒன்று,
வைத்த பதம், கலை ஓர் ஐந்தும் வந்தவே.

தத்துவங்கள் முப்பத்தாறு வகைப்படும்; மந்திரங்கள் ஏழுவிதமான ஈறுகளை உடையவை. எழுத்துக்கள் ஐம்பத்தொன்று வகைப்படும்; புவனங்கள் இருநூற்று இருபத்து நான்கு வகைப்படும்; பதங்கள் எண்பத்தொன்று விதமானவை; கலைகள் ஐந்து விதமானவை ஆகும்.

#2185. திகைத்து இருந்தார்களே

நாடிய மண்டல மூன்று நலந்தெரிந்து
ஓடு மவரோடு யுள்ளிரு பத்தைஞ்சும்
கூடுமவர் கூடிக் குறிவழியே சென்று
தேடிய பின்னர் திகைத்திருந் தார்களே.

திங்கள், கதிரவன், அக்கினி மண்டலங்களைக் கடந்து மேல் நோக்கிச் செல்பவர்கள் தங்கள் உடலில் உள்ள இருபத்து ஐந்து தத்துவங்களுடன் ஒன்றாகக் கூடுவர். உயிர்ப்புடன் கூடி மேலே சென்று சகசிர தளத்தை அடையும் வழியைத் தேடிக் கண்டு கொள்வர். அதைச் சென்று அடைந்த பின்பு அவர்கள் அந்தத் தத்துவங்களின் வழியே செல்லாதவர் ஆயினர்.

#2185. திகைத்து இருந்தார்களே

நாடிய மண்டல மூன்று நலந்தெரிந்து
ஓடு மவரோடு யுள்ளிரு பத்தைஞ்சும்
கூடுமவர் கூடிக் குறிவழியே சென்று
தேடிய பின்னர் திகைத்திருந் தார்களே.

திங்கள், கதிரவன், அக்கினி மண்டலங்களைக் கடந்து மேல் நோக்கிச் செல்பவர்கள் தங்கள் உடலில் உள்ள இருபத்து ஐந்து தத்துவங்களுடன் ஒன்றாகக் கூடுவர். உயிர்ப்புடன் கூடி மேலே சென்று சகசிர தளத்தை அடையும் வழியைத் தேடிக் கண்டு கொள்வர். அதைச் சென்று அடைந்த பின்பு அவர்கள் அந்தத் தத்துவங்களின் வழியே செல்லாதவர் ஆயினர்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

6. சுத்த நனவாதி பருவம்
கருவிகள், கரணங்களுடன் கூடிய சகல நிலையில் சுத்த சாக்கிரம் முதலிய ஐந்து நிலைகள்.

#2187 to #2191

#2187. கனவா நனவில் கலந்து இவ்வாறே

நனவு ஆதி தூலமே சூக்கப் பகுதி;
அனதான வைஐந்தும் விந்துவின் சத்தி;
தனதுஆம் உயர் விந்து தான் நின்று போந்து
கனவா நனவில் கலந்தது இவ்வாறே.

சுத்த சாக்கிரத்தின் ஐந்து நிலைகளிலும் தூலத் தத்துவங்களே நுண்மை போலத் தோன்றும். அந்த 25 தூலத் தத்துவங்களும் விந்துவின் சக்தி ஆகும். விந்து என்ற ஒளி மண்டலத்தில் வெளிப்படும் உயிர், அந்தத் தூலத் தத்துவங்களை நனவில் கனவு போல காணும்.

#2188. நனவில் அதீதம்

நனவு லதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவோடே னன் செய்தி யானதே.

நனவில் துரியாதீதம் அடைந்தவர் பிறந்த குழந்தையைப் போல வெறுமையாகக் கிடப்பார்.
நனவில் துரியம் அடைந்தவர் தவழும் குழந்தையைப் போல கொஞ்சம் அறிவு பெற்றிருப்பார்.
நனவில் உடலை உறங்கச் செய்பவர் வளர்ந்து பருவம் அடைந்தவர் ஆவார். நனவில் கனவு நிலையில் இருப்பவர் தன் வாழ்வின் குறிக்கோளை நோக்கி ஓடுபவர்.

#2189. செறியும் கிரியை சிவ தத்துவம் ஆகும்

செறியும் கிரியை சிவ தத்துவம் ஆகும்;
பிறிவுஇல் சுகயோகம் பேரருள் கல்வி
குறி தன் திருமேனி குணம் பல ஆகும்
அறிவுஇல் சராசரம் அண்டத்து அளவே.

கிரியைகள் சிவத்துவங்களை நோக்கி நம்மைச் செலுத்தும். தொடரும் இடைவிடாத யோக சாதனை பேரருள், கல்வி இவற்றை நல்கும். இறைவனின் திருமேனியை எப்போதும் நினைவு கூறும் சரியை பல மேன்மைகளை அளிக்கும். ஞானம் அளிப்பதோ அண்டத்தில் உள்ள அனைத்து அசையும் அசையாப் பொருட்களின் அறிவு ஆகும்.

#2190. பரசிவம்

ஆதி பரம்சிவஞ் சத்தி சதாசிவம்
ஏதமி லீசனல் வித்தியா தத்துவம்
போதம் கலைகாலம் நியதி மாமாயை
நீதியீ றாக நிறுத்தின னென்னே.

ஆதியாகிய பரசிவம் முறையாக வரிசையாக அமைத்தவற்றை எல்லாம் நீ அறிந்து கொள்வாய்!
சிவம், சக்தி, சதாசிவம், குற்றமற்ற மகேசன், வித்தியா தத்துவங்கள், போதம், கலை, காலம், நியதி, மாமாயை என்பன அவை. இது என்ன ஓர் அருமை!

#2191. தத்துவங்கள் முப்பத்தாறு

தேசு திகழ் சிவஞ் சத்தி சதாசிவம்
ஈசனல் வித்தை இராகம் கலை கால
மாசகல் வித்தை நியதி மகாமாயை
ஆசில் புருடாதி ஆன்மா வீராறே.

ஒளிரும் சிவன், சக்தி, சதாசிவம், மகேசுவரன், வித்தை, இராகம், கலை, காலம், போதம், நியதி, மகாமாயை, புருடன் என்ற இந்தப் பன்னிரண்டையும் சீவன் மேல் நோக்கிச் சென்று கடக்க வேண்டும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2192 to #2196

#2192. பாசம் பிரித்தே பேணுவீர்

ஆணவம், மாயையும், கன்மமும், ஆம் மலம்
காணும் முளைக்குத் தவிடு, உமி, ஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும்
பேணும் வாய் மற்றுநின் பாசம் பிரித்தே.

ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் ஆன்மாவைப் பற்றியுள்ள உமி, தவிடு, முளையைப் போன்றவை. ஆன்மாவைச் சிவனிடம் நெருங்க விடாமல் இவை அரிசியை உமி, தவிடு, முளைகளைப் போல பிரித்து வைக்கும். எனவே உன்னிடம் உள்ள பாசத்தை விலக்கி விட்டு ஈசன் திருவடிகளைப் போற்றுவாய்.

#2193. பசுக்கள் பல வண்ணம் பால் ஒரு வண்ணம்

பசுக்கள் பல வண்ணம், பால் ஒரு வண்ணம்,
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒருவண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல் போடில்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

பசுக்கள் பல வேறு நிறத்தவை ஆயினும் பால் மட்டும் எபபோதும் ஒரே நிறம் ஆகும். அந்த பல வண்ணப் பசுக்களை மேய்க்கும் ஆயன் ஒருவனே ஆவான். அவன் தன் மேய்க்கும் கோலைக் காட்டினால் அந்தப் பசுக்கள் அவனை விட்டு அகன்று செல்லா.

#2194. அடைவது ஏழ் நரகம்

உடலிந் தியமன மொண்புத்தி சித்தம்
அடலொன் றகந்தை அறியாமை மன்னிக்
கெடுமவ் வுயிர்மயம் மேலும் கிளைத்தால்
அடைவது தானேழ் நரகத்து ளாயே.

உடலில் உள்ள கன்மேந்திரியங்கள், ஞானேந்திரியங்கள், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள், அறியாமையுடன் பொருந்திக் கெடும். பாசத் தளைகளால் சீவனின் மயக்கம் மேலும் பெருகினால் அந்த சீவன் ஏழு நரகங்களிலும் சென்று துன்பம் அடையும்.

#2195. கீழாலவத்தை

தன் தெரியாத அதீதம் தற்கு ஆணவம்,
சொல் தெரிகின்ற துரியம் சொல் காமியம்
பெற்ற சுழுத்திப் பின் பேசுறும் காதலால்
மற்றது உண்டிக் கன நன ஆதலே.

துரியாதீதத்தில் பொருந்தியுள்ள புருடன் தன்னையும் கூட தான் அறிய மாட்டான். நாபியைப் பொருந்தி புருடன் அடையும் துரியத்தில் பிரணவம் விளங்கும். இதயத்தில் புருடன் சுழுத்தியில் பொருந்தும் போது விருப்பங்களுடனும் வாசனைகளுடனும் விளங்குவான். அந்த நிலைகளில் கனவும் நனவும் அந்த வாசனைகளைப் பற்றியே அமையும்.

#2196. நனவில் கனவு இல்லை

நனவில் கனவு இல்லை ; ஐந்தும் நனவில்
கனவிலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
தனல் உண் பகுதியே தற்சுட்டு மாயை
நனவில் துரியம்; அதீதம் தலை வந்தே.

சுத்த சாக்கிர நிலைகளில் ஐந்திலும் கனவுகள் இரா. கனவு இல்லாத சுழுத்தியில் பொருந்தும் போது வித்து, நாதத்தை நன்கு உணரமுடியும். மாயை அந்த விந்து நாதங்களை ஆன்மாவுடன் கொண்டு வந்து பொருத்தும். பின்பு நனவில் துரியமும் துரியாதீதமும் வந்து பொருந்தும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2197 to #2201

#2197. அவத்தைகளில் நீங்குபவை

ஆறாறில் ஐயைந்து அகல நனா நனா;
ஆறாம் அவைவிட ஆகும் நானாக்கனா
வேறான ஐந்தும் விடவே நனாவினில்
ஈறாம் சுழுத்தி இதில்மாயை தானே.

உடல் தொடர்புடைய இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்களும் புருடனும் சேர்ந்த 25 தத்துவங்கள் மொத்தம் உள்ள முப்பத்தாறு தத்துவங்களில் இருந்து நீங்கினால் சுத்த நனவு நிலை வந்து பொருந்தும்.
அதாவது வித்தியா தத்துவத்தில் புருடன் நீங்கலாக உள்ள மற்ற ஆறும் சிவதத்துவங்கள் ஐந்தும் என்று பதினொன்று தத்துவங்கள் சுத்த நனவு நிலையில் செயல்படும். சுத்த சாக்கிர நிலையில் சிவ தத்துவம் ஐந்து மட்டும் செயல்படும். சுத்த சாக்கிர சுழுத்தி நிலையில் சுத்த மாயை ஒன்று மட்டுமே செயல்படும்

#2198. தனுவின் பயன் இல்லை

மாயையில் வந்த புருடன், துரியத்தில்
ஆய முறைவிட்டு அதுவும்தான் அன்றாகி,
சேய கேவல விந்துடன் செல்லச் சென்றக்கால்
ஆய தனுவின் பயன் இல்லை ஆமே.

மாயையில் விளங்கும் புருடன் நின்மலத் துரியத்தில் அவற்றை நீத்து விடுவான். அவனும் அங்கு இரான். அந்த நிலையில் புருடனுக்கு அப்பால் உள்ள விந்து மண்டலத்தின் ஒளியில் ஆன்மா சென்று விளங்கும். அந்த நிலையில் ஆன்மாவுக்கு இந்த உடலால் எந்தப் பயனும் இராது.

#2199. முதிய அனலில் துரியத்து முற்றுமே

அதீதத் துரியத்து அறிவான் ஆம் ஆன்மா,
அதீதத் துரியம் அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவாகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே.

ஆன்மா சாக்கிரதத்தில் துரியாதீத நிலையில் அறிவே தன் வடிவாகப் பெற்றுவிடும். சாக்கிரத்தில் அதீதம் புரிந்து விழிப்பு நிலையில் தன்னை மறந்து இருந்தால் அறிவு மயமாகிய ஆன்மா சிவச் சோதியில் கலந்து விடும். அதனால் ஆன்மாவும் ஒளிமயமாகி விடும்.

#2200. மெய் கண்டவன் உந்தி மேவலிருவரே

ஐயைந்து பத்துட னானது சாக்கிரம்
கைகண்ட வைஅஞ்சிற் கண்டங் கனா வென்பர்
பொய்கண்ட மூவர் புருடன் சுழுமுனையின்
மெய்கண்ட வன்உந்தி மேவ லிருவரே.

நனவு நிலையில் முப்பத்தைந்து கருவிகள் புருவ மத்தியில் இருந்து தொழில் புரியும்.
கனவு நிலையில் இருபத்தைந்து கருவிகள் கண்டத்தில் இருந்து கொண்டு தொழிற்படும்.
சுழுத்தி நிலையில் புருடன், பிராணன், சித்தம் என்ற மூன்றும் இதயத்தில் தொழிற்படும்
துரிய நிலையில் புருடன், பிராணன் என்னும் இரண்டும் உந்தியில் வந்து பொருந்தும்.

#2201. புரியட்டகத்தில் அவத்தைகள்

புரியட் டகமே பொருந்தல் நனவு
புரியட் டகந்தன்னில் மூன்று கனவு
புரியட் டகத்தி லிரண்டு சுழுத்தி
புரியட் டகத்தொன்று புக்கல் துரியமே.

நனவில் ஐந்து தன்மாத்திரைகள், மனம், புத்தி, அகங்காரம் என்ற எட்டும் புருடனுன் பொருந்தும்.
கனவில் மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்று மட்டும் புருடனுடன் பொருந்தும்.
சுழுத்தியில் புத்தி, அகங்காரம் என்ற இரண்டு மட்டும் புருடனுடன் பொருந்தும்.
துரியத்தில் அகங்காரம் மட்டுமே புருடனுடன் பொருந்தும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2202 to #2206

#2202. நனவில் நனவு புலனில் வழக்கம்

நனவில் நனவு புலனில் வழக்கம்
நனவிற் கனவு நினைத்தல் மறத்தல்
நனவில் சுழுத்தியுண் ணாடலிலாமை
நனவில் துரிய மதீதத்து நந்தியே.

சாக்கிரதத்தில் உள்ள நனவு நிலையில் புலன்களின் அறிவு சிறப்பாக இருக்கும். புலன்களை நீக்கி விட்டு அவற்றின் வாசனைகளுடன் மட்டும் இருக்கும் நிலை சாக்கிரத்தில் கனவு நிலை. அந்த வாதனைகளும் போவது நனவில் உறக்கம் என்ற நிலை. எதுவும் நாட்டம் ஏற்படுத்தாத நிலை நனவில் துரியம். நனவில் துரியாதீதம் என்பது சிவ அனுபவம் ஆகும்.

#2203. கனவில் நனவு

கனவின் நனவு போல் காண்டால் நனவாம்
கனவினிற் கண்டு மறத்தல் கனவாகும்
கனவில் சுழுத்தியும் காணாமை காணல்
அனுமதி செய்தலி லான துரியமே.

கனவில் நனவுபோலக் காண்பது கனவில் நனவு நிலை. கனவில் கண்டு மறப்பவை கனவில் கனவு நிலை. எல்லாவற்றையும் கண்டும் காணாமல் இருப்பது கனவில் உறக்க நிலை. கண்டவற்றைக் கொண்டு காணாதவற்றை அனுமானித்தால் அது கனவில் பேருறக்க நிலை.

#2204. சுழுத்தி துரியமாம் சொல்லறும் பாழே

சுழுத்தி நனவொன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்தி கனவத னுண்மை சுழுத்தியில்
சுழுத்தி யறிவறி வாலே அழிகை
சுழுத்தி துரியமாம் சொல்லறும் பாழே.

சுழுத்தியில் நனவு என்பது ஒன்றும் தோன்றாமல் உறங்குவது. சுழுத்தியில் கனவு என்பது ஆன்மாவின் இருப்பு மட்டும் தோன்றுதல். சுழுத்தியில் சுழுத்தி என்பது அறிவால் அறிவு அழிந்து படுதல். சுழுத்தியில் துரியம் என்பது சொல்லுக்கு அடங்காத சூனியம்.

#2205. துரியம் பரமெனத் தோன்றிடும்

துரிய நனவா இதமுணர் போதம்
துரியக் கனவா மகமுணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியம்
துரியம் பரமெனத் தோன்றிடும் தானே.

துரியத்தில் நனவு நன்மை பயக்கும் சிவ உணர்வில் நிற்பது.
துரியத்தில் கனவு என்பது சீவனை அண்ட ஆகாயத்தில் அறிவது.
துரியத்தில் சுழுத்தி என்பது நிராதார வானத்தில் பொருந்துவது.
துரியத்தில் துரியம் என்பது தன்னையே பரமாக உணர்வது.

#2206. அறிவறிகின்ற அறிவு நனவாம்

அறிவறி கின்ற வறிவு நனவாம்
அறிவறி யாமை யடையக் கனவாம்
அறிவறி யவ்வறி யாமை சுழுத்தி
அறிவறி வாகு மான துரியமே.

அதீதத்தில் நனவு நிலை:
ஆன்ம அறிவு சிவ அறிவுடன் கூடி அறிவதை உணர்ந்து கொள்வது

அதீதத்தில் கனவு நிலை:
இவ்வாறு அறியும் அறிவு, அறிகின்ற இயல்பும் சிந்தனையும் நீங்கி இருப்பது.

அதீதத்தில் சுழுத்தி:
ஆன்ம அறிவு சிவ அறிவில் அடங்கி அறிவதை விட்டுத் தானாக வேறாக நிற்பது

அதீதத்தில் துரியம்:
ஆன்ம அறிவு வேறாக நிற்காமல் சிவ அறிவாகவே ஆகி விடுவது.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2207 to #2211

#2207. தான் எங்கும் ஆயவன்

தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான் விட்டு
ஞானம் தன் உருஆகி நயந்த பின்
தான் எங்குமாய் நெறி நின்று, அது தான் விட்டு
மேல் நந்தச் சூக்கம் அவை வன்னம் மேலிட்டே.

பராகாயம் போன்று எங்கும் பரந்து விளங்கும் நிலையை அடைந்தவன் ஐந்து மலங்கள் நீங்கப் பெறுவான். சிவனை அறிந்து கொண்டு ஞானமே தன் வடிவாகப் பெறுவான். பின்பு அந்த நிலையையும் விட்டு விட்டுச் அவன் சூக்குமமான பிரணவ உடலை அடைவான்.

#2208. ஐயைந்து மாறும்

ஐயைந்து மாறுமோ ரைந்து நனாவில்
எய்யும் நனவு கனவு சுழுத்தியாம்
மெய்யும் பின் சூக்கமும் மெய்ப்பகுதி மாயை
ஐயமும் தானவ னத்துரி அத்தனே.

முப்பத்தாறு தத்துவங்களில் இருபத்தைந்து நீங்கினால் சாக்கிரம். அதில் ஆறு நீங்கினால் கனவு. மேலும் ஐந்து நீங்கினால் சுழுத்தி. தூலமும் சூக்குமமும் சுத்த மாயையில் இருப்பவை. துரிய நிலையில் அத்தன் தத்துவங்களின் தலைவனாக நிற்பான்.

#2209. ஈது என்று அறிந்திலன் இத்தனை காலமும்

ஈது என்று அறிந்திலன் இத்தனை காலமும்
ஈது என்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்;
ஈது என்று அறியும் அறிவை அறிந்தபின்
ஈது என்று அறியும் இயல்புடை யோனே.

இந்த உண்மையை நான் இத்தனை காலமும் அறிந்து கொள்ளவில்லை.
இதை அறிந்து கொண்ட பின்பு அறிந்து கொள்ள வேறு எதுவும் இல்லை.
இந்த உண்மையை அறிந்து கொள்ளும் அறிவினை நான் அடைந்த பின்னர்
இதுவே நான் நானே இது என்ற உண்மையை நான் அறிந்து கொண்டேன்.

#2210. எல்லாம் இருள் மூடம் ஆகும்

உயிர்க்கு உயிர் ஆகி, உருவாய் அருவாய்
அயற் புணர்வு ஆகி, அறிவாய்ச் செறிவாய்
நயப்பு உறு சத்தியும் நாதன், உலகாதி
இயற்பு இன்றி, எல்லாம் இருள் மூடம் ஆமே.

உயிருக்கு உயிரானவன் சிவன். அவன் உருவாகவும் உள்ளவன், அருவாகவும் உள்ளவன். அயலில் உள்ள பொருளாகவும் உள்ளவன். அவன் அறிவாக எங்கும் பரந்து விரிந்து செறிந்துள்ளான். சீவர்கள்
நயக்கும் எல்லாவற்றையும் தரும் சக்தியின் நாதன் அவன். உலகம், உடல், கரணங்கள், கருவிகள் இவற்றை சிவன் இயக்காமல் இருந்தால் உயிர்கள் எல்லாம் அறியாமை இருளில் மூழ்கி விடும்.

#2211. வைத்தனன் ஈசன் மலம் அறுமாறே

சத்தி இராகத்தில், தான் நல்லுயிர் ஆகி,
ஒத்துஉறு பாசமலம் ஐந்தொடு, ஆறாறு
தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
வைத்தனன் ஈசன் மலம் அறுமாறே.

ஆன்மாவைப் பற்றியுள்ள மலங்கள் நீங்க வேண்டும் என்பதற்காக ஈசன் மிகுந்த அருளுடன் செய்துள்ளவை இவை: சக்தியுடன் பொருந்தி நல்லுயிர் ஆனான். பாசத்தையும், ஐந்து மலங்களையும், முப்பத்தாறு தத்துவங்களையும், கருவிகளையும், கரணங்களையும் அந்த உயிருடன் பொருத்தி அருள் செய்தான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2112 to #2116

#2212. பரன் உண்மை தங்கும்

சாக்கிரா தீதத்தில் ஆணவம்தன் உண்மை
சாக்கிரா தீதம் துரியத்தில் தான் உறச்
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான் விடாச்
சாக்கிரா தீதம் பரன் உண்மை தங்குமே.

சாக்கிராதீதத்தில் ஆன்மாவும் ஆணவமலமும் இரண்டும் உள்ளன. சாக்கிராதீதத்தில் பொருந்தி இருக்கும் ஒளியில் ஆன்மா சேர்ந்து விட்டால் அப்போது அதனுடன் இருக்கும் ஆணவ மலம் அழிந்துவிடும் . ஆன்மா திருவருளின் பொருந்தி நின்றால் பரத்தின் உண்மை ஆன்மாவிடம் தங்கும்.

#2213. மலக் கலப்பற்றான் மதியொளி ஆமே

மலக்கலப் பாலே மறைந்தது சத்தி
மலக்கலப் பாலே மறைந்தது ஞானம்
மலக்கலப் பாலே மறைந்தனன் தாணு
மலக்கலப் பற்றான் மதியொளி ஆமே.

ஆன்மாவிடம் மலம் கலந்திருப்பதால் மாமாயை ஆகிய சக்தி மறைந்து இருக்கின்றாள். சீவனின் ஞானம் மறைந்து இருக்கின்றது. சீவனுள் இருக்கும் சிவனும் மறைந்து இருக்கின்றான். ஆன்மாவின் மலக் கலப்பு அகன்றுவிட்டால் அப்போது சீவனின் மதி மண்டலம் மதியொளி வீசும்.

#2214. பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால் இரண்டு ஆமே

திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பால் இரண்டு ஆமே.

நன்மை தீமைகளைப் பிரித்து அறியாமல் திகைக்கின்ற சிந்தையில் காமம், குரோதம், மோகம் என்ற மூன்று வலிய சிங்கங்கள் உள்ளன. விஷய அனுபவங்களை நாடும் வஞ்சக நெஞ்சுக்குள் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு நரிக் குட்டிகள் உள்ளன. புலன் இன்பங்களை வகைப்படுத்தி அனுபவிக்க விரும்பும் வலிய ஐந்து யானைகள் உள்ளன. பகைபாராட்டும் நெஞ்சத்துக்கு வெளியிலும் உள்ளேயும் சென்று சேர்கின்ற இரண்டு மாறுபட்ட தன்மைகள் உண்டு.

#2215. அதிர வருவதோர் ஆனையுமாமே

கதறு பதினெட்டுக் கண்களும் போகச்
சிதறி எழுந்திடுஞ் சிந்தையை நீரும்
விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்
அதிர வருவதோர் ஆனையு மாமே.

பதினெட்டு தத்துவங்கள் பொருந்தியுள்ள இந்த உடல் வெளியுலக இன்பங்களை நாடிச் செல்ல விரும்பும். இங்ஙனம் சிதறுண்டு எழுகின்ற உள்ளத்தை நீங்கள் இறைவனிடம் அடைவிக்கும் பாதையில் செலுத்த வேண்டும். அப்போது இந்தப் பதினெட்டுத் தத்துவங்களும் அதிரும்படி சீவனின் ஒப்பற்ற தலைவன் ஆகிய சிவன் வெளிப்படுவான்.

#2216. நினைவாகத் தின்றிச் சுழுத்தி நின்றானே

நனவகத் தேயொரு நாலைந்தும் வீடக்
கனவாகத் தேஉட்கரணங்க ளோடு
முனைவகத் தேநின் றுதறியுட் புக்கு
நினைவகத் தின்றிச் சுழுத்தி நின்றானே.

நனவில் தொழிற்படும் இந்திரியங்கள் பத்தும் அவற்றின் தொழில்கள் பத்தும் நீங்கி விட்டவுடன் கனவுலகத்தில் ஆன்மா புகுந்துவிடும். அங்கு அந்தக்கரணங்கள் நான்கையும் துறந்து விட்டதும் சிந்தனைகள் இல்லாத ஆன்மா சுழுத்தியில் (நின்மலமான உறக்கத்தில்) பொருந்தி விடும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2217 to #2221

#2217. பரனாய் நின்மலனாகும்

நின்றவ னாசான் நிகழ்துரி யத்தனாய்
ஒன்றி யுலகின் நியமாதி களுற்றுச்
சென்று துரியாதீ தத்தே சிலகாலம்
நின்று பரனாய் நின்மல னாமே.

சுழுத்தியில் பொருந்தும் ஆன்மா அதன் பின்னர் குருவருளால் துரியத்தில் சென்று பொருந்தும். அட்டாங்க யோகத்தில் சாதனைகள் செய்து ஆன்மா துரியாதீதத்தை அடையும். அங்கு சமாதி நிலையில் சில காலம் நிற்கும். பின்பு மலநீக்கம் ஏற்பட்டுத் தூய ஆன்மாவாகிப் பரன் என்ற பெயரை அடையும்.

#2218. ஒளி மூலத்தனாமே

ஆனவவ் வீசன் அதீதத்தில் வித்தையாகத்
தானுல குண்டு சதாசிவ மாசத்தி
மேனிகள் ஐந்தும் போய் விட்டுச் சிவமாகி
மோன மடைந்தொளி மூலத் தானமே.

இங்கனம் பரநிலையை அடைந்த சாதகன் எல்லா அறிவையும் அப்போதே பெறுவான். அனைத்து உலகத்தையும் தானே உண்டு அனுபவிப்பான். நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்ற ஐந்து தெய்வ நிலைகளையும் கடந்து சென்று தானே சிவமாகி விடுவான். பிரணவ உடலை அடைந்து ஸ்வயம் பிரகாசியாக அவன் ஒளி வீசுவான்.

#2219. அண்டமும் தானாய் அகத்தினுள்ளாமே

மண்டலம் மூன்றினுள் மாயநன் னாடனைக்
கண்டுகொண்டு, உள்ளே, கருதிக் கழிகின்ற
விண்டு அலர்தாமரை மேல் ஒன்றும்; கீழாலத்து
அண்டமும் தானாய் அகத்தினுள் ளாமே.

உடலில் உள்ள கதிரவன், சந்திரன், அக்கினி என்ற மூன்று மண்டலங்களிலும் மாயங்கள் செய்பவன் சிவபிரான். அவனை எனக்கு உள்ளே கண்டு கொண்டேன். அவனைக் கருதி சிரசில் விரிந்து விளங்கும் ஆயிரம் இதழ்த் தாமரை ஆகிய சகசிரதளத்தைக் கடந்து மேலே சென்றால் அப்போது அண்டங்கள் எல்ல்லாம் தானாகவே வந்து உள்ளத்தில் விளங்கும்.

#2220. சூது அறிவார் உச்சி சூடி நின்றாரே

போது அறியாது புலம்பின புள்ளினம்
மாது அறியாவகை நின்று மயங்கின
வேது அறியாவணம் நின்றனன் எம் இறை
சூது அறிவார் உச்சி சூடி நின்றாரே.

தங்களுக்கு ஒளி எங்கிருந்து வருகின்றது என்பதை அறியாமல் சீவர்கள் திகைத்து நின்றனர். அகண்டத்தில் கருத்தைப் பாதிக்காத இவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்று அறியாமல் சக்தி மயங்கினாள். இந்த அறியாமையில் அமிழ்ந்துள்ள சீவர்களை மாற்றிட வகை அறியாமல் சிவன் நின்றான். ஆனால் உண்மையை உணர்ந்து கொண்டவர்கள் தம் சிரசின் மீது சிவத்தை இருத்தித் துதித்துக் கொண்டு இருந்தனர்.

#2221. மனம் மன்னி நின்றான்

கருத்தறிந் தொன்பது கண்டமு மாங்கே
பொருத்தறிந் தேன்புவ னாபதி நாடித்
திருத்தறிந் தேன்மிகு தேவர் பிரானை
வருத்தறிந்தேன் மனம் மன்னி நின்றானே.

சிவன் சீவனின் உடலின் ஆறு ஆதாரங்களிலும், மூன்று மண்டலங்களிலும் நுண்மையாகப் பொருந்துவதை அறிந்து கொண்டேன். அண்டங்களின் தலைவன் அவனை நாடி அந்த ஒன்பது மண்டலங்களையும் புலன் வழிப் போகாமல் திருத்தி அமைத்தேன். ஈசனை என்னிடம் வருவிக்க அறிந்து கொண்டேன். அவனும் என் மனதில் நிலையாக நின்று பொருந்தி விட்டான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2222 to #2225

#2222. என மதி மண்டலம் கொண்டு எரியும்

ஆன விளக்கொளி தூண்டு மவன் என்னத்
தான விளக்கொளியாம், மூல சாதனத்து
ஆன விதி, மூலத் தானத்தில் அவ்விளக்கு
எனை மதி மண்டலம் கொண்டு எரியுமே.

சுடர் விளக்கு ஆயினும் அடிக்கடி தூண்டி விட வேண்டும். அது போன்றே மூலாதாரத்தில் உள்ள அக்கினியை அடிக்கடி தூண்டி விடவேண்டும். இவ்வாறு தூண்டி விடப்படும் ஒளி கதிரவ மண்டலம், சந்திர மண்டலம் இவற்றைக் கொண்டு பேரொளியாக விளங்கும்.

#2223. கண்ணாடி காணும் கருத்து அது என்றானே

உள்நாடும் ஐவருக்கு மண்டை ஒதுங்கிய
விண் நாட நின்ற வெளியை வினவுறில்,
அண்ணாந்து பார்த்து ஐவர் கூடிய சந்தியில்
கண்ணாடி காணும் கருத்துஅது என்றானே.

வெளியுலக நாட்டத்தைத் துறந்து விட்ட ஒருவனின் ஐம்பொறிகள், நிமிர்ந்த ஊர்த்துவ சகசிர தளத்தின் மேலேயுள்ள வான மண்டலத்தில் கூடி இருந்து, கண்ணால் நாடி உள்ளத்தைக் காணும் தன்மை உடையது.

#2224. அறியாது அறிவானை யார் அறிவாரே?

அறியாத வற்றை அறிவான் அறிவான்;
அறிவான் அறியாதான் தன்அறிவு ஆகான்
அறியாது அவத்தை அறிவானைக் கூட்டி
அறியாது அறிவானை யார் அறிவாரே?

யாரும் அறியாதவற்றைச் சிவன் அறிவான். சிவனிடம் பொருந்தி நிறைந்த அறிவு அடையாதவன் அறிவு உடையவன் ஆக மாட்டான். அறிவு பெறாமல் அவத்தைகளில் உழலும் சீவனை, அருளுடன் தன்னோடு சேர்த்துக் கொண்டுச் சீவன் அறியாத வண்ணம் அவனைக் கண்காணிக்கும் சிவனை யார் அறிவார்?

#2225. அரியது அதீதம்

தூய தரிசனம் சொற்றோம்; வியோமம்
அரியன்; தூடணம் அந் நனவாதி;
பெரியன கால பரம்பின் துரீயம்;
அறிய அதீதம் அதீதத்தது ஆமே.

நின்மல சாக்கிர துரியம் பற்றிக் கூறினேன். துரியாதீதம் மிகவும் அரிதானதாகும். நனவு, கனவு, உறக்கம் இவை நிகழும். பின்பு கழிந்து விடும். காலப் பரம்பின் துரியம் மிகப் பெரியது. துரியாதீதம் மிகவும் அரிது.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

7. கேவலம், சகலம், சுத்தம்

கேவலம் = கருவிகள் கரணங்களுடன் கூடாமல் இருத்தல்
சகலம் = கருவிகள் கரணங்களுடன் இணைந்து இருப்பது
சுத்தம் = கருவிகள் கரணங்களைத் துறந்து விட்டுத் தூய்மையாக இருத்தல்

#2226 to #2231

#2526. சீவன் துரியத்துள் தோயும்

மாயையில் சேதனன், மன்னும் பகுதியோன்,
மாயையின் மற்றது நீவுதல், மாயையாம்
கேவல மாகும்; சகலமா யோனியுள்
தோயும் மனிதர், துரியத்துள் சீவனே.

அசுத்த மாயையில் இருக்கும் ஆன்மா அசுத்த மாயையின் பல நிலைகளில் சென்று பொருந்தும். இதன் பயனாக சகலர்கள் கேவல அவத்தையில் பொருந்தி பற்பல பிறவிகள் எடுத்து துயருறுவர். சுத்த மாயையில் பொருந்துகின்ற ஆன்மா சிவதத்துவத்தை அறிந்து கொள்ள முயலும். அதனால் இத்தகையோர் நின்மல துரியத்தை கண்டுகொண்ட சீவர்கள் ஆவர்.

#2227. மூன்று நிலைகள்

தன்னை அறிசுத்தன், தற்கேவலன் தானும்
பின்னம் உறநின்ற பேத சகலனும்
மன்னிய சத்துஅசத்து சதசத்துடன்
துன்னுவர் தத்தம் தொழிற்கு அளவாகவே.

தன்னைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்டவன் சுத்தன்; தன்னைப் பற்றி எதுவும் அறிந்து கொள்ளாதவன் கேவலன்; இவர்களில் இருந்து மாறுபட்டு நிற்கும் சில வகை பரிபாகம் அடைந்தவன் சகலன். இவர்கள் மூவரும் முறையே சத்து, அசத்து, சதசத்து இவற்றுடன் தம் பக்குவ நிலைக்கு ஏற்பப் பொருந்தி நிற்பர்.

#2228. வினைப் பயன்களே அனுபவங்கள்

தானே தனக்குப் பகைவனும் நாட்டானும்;
தானே தனக்கு மறுமையும், இம்மையும்;
தானே தனக்கு வினைப் பயன் துய்ப்பானும்,
தானே தனக்கு தலைவனும் ஆமே.

ஒருவனுக்கு நண்பனும் அவனே! அவனுடைய பகைவனும் அவனே! ஒருவன் அனுபவிக்கும் இம்மை, மறுமைப் பயன்களுக்குக் காரணம் ஆவதும் அவனே. தான் செய்த நற்செயல்களின் புண்ணியத்தையும், தீய செயல்களின் பாவத்தையும் அனுபவிப்பவன் அவனே. அதனால் ஒருவன் தானே தனக்குத் தலைவன் ஆவான்.

#2229. சகல நிலையை அடைதல்

ஆம்உயிர் கேவலம் மாமாயை யின்நடந்து
ஆம்உயிர் மாயை எறிப்ப, அறிவுற்றுக்
காமியம், மாமேய மும்கல வாநிற்பத்
தாம் உறு பாசம் சகலத்து ஆமே.

ஆன்மா கருவிகளுடன் கூடி இன்னமும் பிறவி எடுக்காத நிலையின் பெயர் கேவலம். ஆன்மா கருவிகளுடன் கூடிப் பிறவிக்குத் தயாராக உள்ள நிலை சகலம். கேவல நிலையில் இருக்கும் ஆன்மா சுத்த மாயையில் பொருந்திப் பக்குவம் அடையும். அறிவைப் பெறும். ஆன்மா முன்பு செய்த வினைகளின் பயன்களைப் பெறுவதற்குத் தாம் அடைந்த பாசத்தால் கேவல நிலையில் இருந்து சகல நிலையை அடையும்.

#2230. சகல அவத்தை

சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம்மூ வகையும் புணர்ந்தோர்,
நிகர்இல் மலரோன், மால்நீடு பல் தேவர்கள்
நிகழ்நரர், கீடம் அந்தமு மாமே.

கருவிகளுடன் சகல நிலையில் வருபவர் சகலர் எனப்படுவர். இவர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் பொருந்தி உள்ளவர்கள். நிகரற்ற நான்முகன், திருமால் முதலாகத் தேவர்கள், மனிதர்கள் உட்படப் புழு ஈறாக அனைத்து சீவர்களும் சகலர்களே.

#2231. பிரளயகலர்

தாவிய மாயையில் தங்கும் பிரளயம்
மேவிய மற்றது உடம்பாய் மிக்கு உள்ளன
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்றெட்டு உருத்திரர் ஆகுமே.

பிரளயர் ஆணவம், மாயை என்னும் இரண்டு மலங்களை உடையவர். இவர்கள் அசுத்த மாயையாகிய தூவா மாயையில் இருப்பவர்கள். அசுத்த மாயையே தம் உடலாகப் பெற்றவர்கள். மற்ற மாயேயங்களை விட்டு விட்டவர்கள் பிரகிருதி மாயையால் கட்டுப் படுத்தப்பட மாட்டார்கள். பிரகிருதியைக் கடந்த மாயையில் உள்ளவர்கள் சிவத்துடன் பொருந்திய உருத்திரர் ஆவர்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2232 to #2237

#2232. விஞ்ஞான கலர்

ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர்
ஆகின்ற வித்தேசாரம் அனந் தாதியர்
ஆகின்ற எண்மர், ஏழு கோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே.

விஞ்ஞான கலர் ஆணவம் என்னும் ஒரு மலத்தை மட்டும் உடையவர்கள். அனந்தர் முதலாக, எட்டு வித்துயேசுரர்கள், ஏழு கோடி மகா மந்திரர்கள், அவற்றின் மந்திரேசர்கள் என்னும் அனைவருமே விஞ்ஞான கலர் ஆவர்.

எட்டு வித்தியேசுரர்கள்:
அனந்தர், சூக்குமர், சிவோத்தமர், ஏகநேத்திரர், ஏகருத்திரர், திரிமூர்த்தி, சீகண்டர், சிகண்டி.

#2233. விந்து நாதத்தைக் கடப்பார்

ஆமவரில் சிவன் ஆரருள் பெற்றுள்ளோர்
போம்மலம் தன்னால் புகல் விந்து நாதம் விட்டு
ஓம் மாயம் ஆகி, ஒடுங்கலின், நின்மலம்
தோம்அறு சுத்தா வத்தைத் தொழிலே.

விஞ்ஞானகலரில் சிவன் அருளுக்குப் பாத்திரம் ஆனவர்கள் மிகுந்த பக்குவத்தை அடைவர். ஆணவ மலம் ஒடுங்கி விடுவதால் அதன் காரியமாகிய விந்து நாதங்களைக் கடந்து செல்வர். ‘ஓம்’ என்ற பிரணவ வடிவாகிய சிவனுடன் ஒன்றி லயமாகி விடுவர். அப்போது அவர்கள் மலங்கள் மூன்றும் முற்றிலுமாக நீங்கிக் குற்றங்கள் அற்ற சுத்த நிலையை அடைந்து விடுவர்.

#2234. மலம் அறுப்பான்

ஓரினும் மூவகை, நால்வகையும் உள;
தேரில் இவைகே வலம்மாயை சேர்இச்சை
சார் இயல் ஆயவை; தானே தணப்பவை
வாரி வைத்து ஈசன் மலம் அறுத்தானே.

ஆராய்ந்து பார்த்தால் ஆன்மாக்கள் மூன்றுவகைப் பிரளயகலர்களாகவும், நான்கு வகை விஞ்ஞானகலர்களாகவும் இருக்கின்றன்னார். உத்தம, மத்திம, அதம நிலை என்று பிரளயகலர் மூவகைப்படுவர். உடலுடன் உள்ள போதே சிவனுடன் பொருந்தும் சீவன் முக்தர், உடலை விடுத்த பின் சிவனுடன் இணையும் உத்தம, மத்திம, அதம நிலையில் உள்ளவர்கள் என்று விஞ்ஞான கலர்கள் மொத்தம் நன்கு வகைப்படுவர். மாயையும், இச்சையும், கேவல நிலையில் உள்ள ஆன்மாவுடன் சேரும் போது சீவன்கள் உருவாகின்றன. எனினும் பக்குவம் அடையும் பொழுது சீவனின் மாயையும், இச்சைகளும் தாமே அகன்று சென்று விடும். அந்த நிலையை சீவன் அடையும் போது ஈசன் தன் தண்ணருளைத் தந்து மாசுக்களாகிய சீவனின் மலங்களை முற்றிலுமாக அகற்றி விடுவான்.

#2235. சுத்த அவத்தை

பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டு அகன்று,
எய்யாமை நீங்கவே, எய்தவன் தான் ஆகி,
மெய்யாம் சராசரமாய், வெளிதன்னுள் புக்கு,
எய்தாமல் எய்தும் சுத்தாவத்தை என்பதே.

பொய்யான மண் முதலாக நாதம் ஈறாக உள்ள முப்பத்தாறு தத்துவங்களின் அறிவையும், அவற்றின் மீது கொண்டுள்ள பற்றையும் விட்டு அகல வேண்டும். அடைய வேண்டிய மெய்ப் பொருளாகிய சிவனாகத் தானே ஆகிவிட வேண்டும். அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள் என்று அனைத்திலும் ஆன்மா கலந்து நிற்பதே சுத்த அவத்தை எனப்படும்.

#2236. தூய நிலைக்குத் தூயவன் செலுத்துவான்

அனாதி பசு வியாத்தியாகும் இவனை
அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி,
அநாதியில் கேவலம், அச் சகலத்து இட்டு,
அனாதி பிறப்பு அற, சுத்தத்துள் ஆகுமே.

பசுத் தத்துவத்தில் அனாதி காலமாகக் கட்டப் பட்டுள்ளது ஆன்மா. அதை ஆணவம், மாயை, கன்மம், மாயேயம், திரோதாயி என்ற ஐந்து மலங்கள் அனாதி காலமாக வருத்திக் கொண்டு இருக்கின்றன. ஆன்மா அனாதி காலமாக இருந்து வரும் கேவல நிலையிலிருந்து சகல நிலைக்கும், பின்பு சகல நிலையிலிருந்து தூய நிலைக்கும் நம் தூய இறைவனே அழைத்துச் செல்வான். ஆன்மாவைப் பிறவிப் பிணியில் இருந்து விடுவிப்பான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2237 to #2242

#2237. தன்னைத் தானே அறிந்து கொள்ள வேண்டும்

அந்தரம் சுத்தாவத் தைகே வலத்தாறு
தந்தோர், தம் சுத்த கேவலத்து அற்ற தற்பரத்
தின்பால், துரியத்திடையே அறிவுறுத்
தன்பால் தனை அறி தத்துவந்தானே.

சுத்த அத்தையை அடைவது எப்படி?
கேவல நிலையிலிருந்து ஞானத்தைப் பற்றிக் கொண்டு துரிய நிலையை அடைபவன் கேவல நிலை, சுத்த நிலைகளைக் கடந்து விளங்கும் தற்பரத்திடமிருந்து தூய அறிவைப் பெறுவான். துரிய நிலையில் அவன் தன்னைத் தானே அறிந்து கொள்வான். இதன் மூலம் அவன் சுத்த அவத்தையை அடைவான்.

#2238. தத்துவங்கள் ஒடுங்கிவிடும்

ஐயைந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
மெய்கண்டு, சுத்த அவத்தையில் வீடாகும்;
துய்ய அவ்வித்தை முதல் மூன்றும், தொல்சத்தி,
ஐயன் சிவம், சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே.

மண் முதல் புருடன் ஈறாகிய இருபத்து ஐந்து தத்துவங்களும் ஆன்மாவில் ஒடுங்கும். தூய நிலையை அடைந்து விட்ட ஆன்மா தன் வீட்டைச் சென்று அடையும். சிவ தத்துவதில் உள்ள சுத்த வித்தை, மகேசுரம், சாதாக்கியம் என்ற மூன்றும் சக்தியில் ஒடுங்கும் சக்தி சிவத்திடம் ஒடுங்கும். படைப்பின் போது சிவத்திடமிருந்து சக்தி தோன்றும். ஒடுங்கிய பிறவும் சக்தியிலிருந்து முறைப்படி வெளிப்படும்.

#2239. சிவசக்தியர் பொருந்தி விளங்குதல்

ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கி விடும் ;
மெய்கண்ட மேல் மூன்றும் மேவும் மெய்யோகத்தில்
கைகண்ட சத்தி சிவபாகத்தே காண
எய்யும்படி அடங்கும், நால் ஏழ் எய்தியே.

ஆன்ம தத்துவங்கள் 24 மற்றும் புருடன் என்னும் 25 தத்துவங்கள் 6 வித்தியா தத்துவங்களில் அடங்கிவிடும். அந்த 6 வித்தியா தத்துவங்களும் முதல் மூன்று சிவதத்துவங்களில் அடங்கிவிடும். இவை மூன்றும் சக்தி, பிந்து, நாதங்களில் அடங்கி விடும். இருபத்தெட்டு தத்துவங்களும் பிற மூன்றில் அடங்கிவிடும் விதம் இதுவே.
சக்தி, நாத, பிந்துவில் ஒடுங்கும் 28 தத்துவங்கள் = ஆன்ம தத்துவங்கள் 24 + புருடன் + சுத்த வித்தை + மகேசுரம் + சாதாக்கியம்.

#2240. மூவகையினர்

ஆணவத்தா ரொன் றறியாத கேவலர்
பேணிய மாயை பிரளயா கலராகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலமும் பாசமும் புக்கோரே.

விஞ்ஞானக்கலர் :
ஆணவ மலம் மட்டும் உடையவர். கன்மம், மாயை என்னும் இரண்டும் இல்லாதவர்.
பிரளயாகலர்:
ஆணவம், மாயை இரண்டும் உடையவர். கன்மம் இல்லாதவர்.
சகலர்:
ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் உடையவர்.
உல் நோக்கம் இன்றி வெளி நோக்கம் மட்டுமே உடையவர்.

#2241. மூவரின் மூவகைக் குற்றங்கள்

ஆணவ மாகும் விஞ்ஞான கலருக்குப்
பேணிய மாயை பிரளயா கலருக்கே
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே
காணுஞ் சகலருக்குக் காட்டு மலங்களே.

விஞ்ஞானகலரின் குற்றம் ஆணவ மலம்.
ஆணவத்துடன் மாயையையும் பற்றிக் கொள்வது பிரளயாகலரின் குற்றம்.
ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றையும் பற்றிக் கொள்வது சகலரின் குற்றம்.

#2242. விந்து சக்தி

கேவலம் தன்னில் கிளர்ந்த விஞ்ஞானகலர்
கேவலம் தன்னில் கிளர் விந்து சத்தியால்;
ஆவயின் கேவலத்து அச்சகலத்தையும்
மேவிய மந்திர மாமாயை மெய்ம்மையே.

விஞ்ஞானக்கலர் ஞான வடிவநிலையில் கிளர்ந்து எழுபவர். ஞான வடிவம் கிளர்ந்து எழுவது விந்துவின் சக்தியால்.
கேவல நிலையில் இருந்து சகல நிலைக்கு வந்து பிரணவ வடிவ சக்தியை (மாமாயை) அறிந்து கொள்வது உண்மையில் நிகழ்வதே.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2243 to #2248

#2243. நூற்றட்டு உருத்திரர்கள்

மாயையின் மன்னு பிரளயாகலர் வந்து
மாயையும் தோன்றா வகை நிற்ப, ஆணவம்
மாய சகலத்துக் காமிய மாமாயை
ஏயமன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே.

தூவா மாயையில் பொருந்திய பிரளயாகலர் அம்மாயையால் தளைப்படுத்தப் படுவதில்லை. ஆணவத்துடன் கூடிய தூமாயையில் காமியத்துடன் பொருந்தி இருப்பவர் நூற்றெட்டு ருத்திரர் ஆவர்.

#2244. சகலர் பிறவி எடுப்பர்

மும்மலங் கூடி முயங்கி மயங்குவோர்
அம மெய்ச் சகலத்தோர் தேவா சுரர்நரர்
மெய்மையில் வேதா வீரிமிகு கீடாந்தத்
தம்முறை யோனிபுக் காரர்க்குஞ் சகலரே.

ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் பொருந்த அவற்றில் மயங்கி நிற்பவர் சகலர். அவர்கள் நான்முகன் முதலாகத் தேவர்கள், மனிதர்கள் உட்படப் புழு ஈறாக பிறவிப் பிணையில் தளைப் பட்டவர் அனைவரும் சகலரே.

#2245. சிவ சூரியன் மும்மலம் அகற்றுவான்

சுத்த அவத்தையிற் றோய்ந்தவர் மும்மலச்
சத்தசத் தோடத் தனித்தனிப் பாசமும்
மத்த இருள் சிவனான கதிராலே
தொத்தற விட்டிடச் சுத்தரா வார்களே.

தூய நிலையை அடைந்து அதில் பொருந்தி விட்ட ஆன்மா, சிவசூரியனின் அருள் வெள்ளத்தால் நித்தியமாகிய ஆணவ மலமும் அநித்யமாகிய கன்மம், மாயை என்னும் மலங்கள் நீங்கப் பெறும். பாசத் தளைகள், மயக்கம் தரும் இருள் இவை நீங்குவதால் ஆன்மாவின் தூய்மை நிறைவு பெற்று அது சுத்தன் ஆகிவிடும்.

#2246. மூன்று தூய நிலைகளின் பயன்கள்

தற்கே வலம்முத்தி தானே தனிமையாம்
பிற்பாற் சகலங் கலாதிப் பிரிவதாம்
சொற்பாற் புரி சுத்த கேவலம் சாக்கிரம்
தற்பாற் புரிவது தற்சுத்தவ மாமே.

ஆன்மா சிவனுடன் ஞான வடிவாகப் பொருந்தும் போது தனித்த வீடு பேற்றை அடையும். இந்த நிலைக்குப் பிற்பட்ட நிலையில் கலை முதலிய தத்துவங்கள் பிரிவது அமையும். தூய நின்மல சாக்கிரநிலை என்பது ஆன்மா பிரணவத்தில் பிரம்மத்துடன் பொருந்திச் சுத்த நிலையை அடைவது ஆம்.

#2247. கேவல நிலையில் ஆன்மா

அறிவு இன்றி முத்தன் , அராகாதி சேரான்
குறி ஒன்று இல்லா நித்தன், கூடான் கலாதி,
செறியும் செயல் இலான் தினம் கற்ற வல்லோன்
கிறியன், மலவியாபி, கேவலந்தானே.

கேவல நிலையில் உள்ள ஆன்மா அறிவு இல்லாதவன், அகராதி குணங்கள் பொருந்தாதவன், கொள்கை எதுவும் இல்லாதவன். நித்தியன், கலைகள் போன்ற அசுத்த மாயைகள் கூடாதவன், தத்துவங்களுடன் பொருந்திச் செயல் அற்றவன், இன்பத்தை அனுபவிக்க அறியாதவன், இருந்தும் இல்லாதவன், ஆணவ மலம் கொண்டவன்.

#2248. பிரளயாகலரின் பேறு

விந்துவு மாயையு மேவும் கிரியையும்
சந்தத ஞான பரையும் தனுச்சத்தி
விந்துவின் மெய்ஞ்ஞான மேவும் பிரளயர்
வந்த சகலசுத் தான்மாக்கள் வையத்தே.

விந்துவின் உள்ளது ஒளி மண்டலம். அதை மறைக்கும் மாயை. அதை வெளிப்படுத்தும் கிரியை. அதனால் விளையம் ஞானம். இவை அனைத்தும் சீவனின் உடலில் உள்ள சக்திக்கு ஏற்ப அமையும். விந்து மண்டல ஒளியில் மெய்ஞ் ஞானத்தைப் பொருத்தும் பிரளயாகலர் பிறவி எடுக்கும் பொழுது தூய ஆன்மாக்கள் ஆவர்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2249 to #2254

#2249. ஒன்பது நிலைப்பாடுகள்

கேவலம் ஆதியில் பேதம் கிளக்குறின்,
கேவலம் மூன்றும் கிளரும் சகலத்துள்
ஆவயின் மூன்றும் அதி சுத்தம் மூடவே
ஓவல் இலா ஒன்பான் உற்று உணர்வோர்கட்கே.

கேவலம் மூன்று நிலைப்பாடுகள் உடையது.
அவை முறையே கேவல கேவலம், கேவல சகலம், கேவலத் தூய்மை என்பவை.
சகலம் மூன்று நிலப்பாடுகளை உடையது. அவை முறையே சகல கேவலம், சகல சகலம், சகலத் தூய்மை என்பவை.
தூய்மை மூன்று நிலப்பாடுகள் உடையது. அவை முறையே தூய கேவலம், தூய சகலம், தூய தூய்மை என்பவை.
இங்ஙனம் ஒன்பது மாறுபட்ட நிலைகள் இருப்பது ஆராய்ந்து பார்த்தால் அறிந்து கொள்ளலாம்.

#2250. கேவல நிலைகளில் ஆன்ம அனுபவம்

கேவலத்தில் கேவலம் அதீதா தீதம்,
கேவலத்தில் சகலங்கள் வயிந்தவம்,
கேவலத்தில் சுத்தம் கேடுஇல் விஞ்ஞானகலர்க்கு
ஆவயின் நாதன் அருள்மூர்த்தி தானே.

கேவலத்தில் கேவலம்: இது கருவிகளை விட்டு விட்டு உறங்குவது போன்றது.
கேவலத்தில் சகலம்: ஒளி மண்டலத்தில் அறிவு குன்றாமல் அமைத்தல்
கேவலத்தில் தூய்மை : கேடுகள் நீங்கிய ஞானம் உடையவர் தன்னையும் உலகத்தையும் உள்ளபடி அறிந்து கொள்ளும் நிலை. இந்த நிலையில் சிவபிரான் இவர்களுக்குத் தன் தண்ணருள் தருவான்.

#2251. சகலத்தில் ஆன்ம அனுபவம்

சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
சகலத்திற் சுத்தமே தற்பரா வத்தை
சகலத்தில் இம்மூன்று தன்மையு மாமே.

சகலத்தில் கேவலம் : விழிப்பில் அறிவு ஆராய்ச்சியால் கருவிகள், கரணங்கள் செயற்படாமல் உறங்குவது போன்ற ஒரு நிலை
சகலத்தில் சகலம் : விழிப்பு நிலை
சகலத்தில் தூய்மை: விழிப்பு நிலையில் ஞான இந்திரியங்கள் பிரணவ ஒலியில் சென்று லயமடைவது.

#2252. சுத்தநிலையில் ஆன்ம அனுபவம்

சுத்தத்திற் சுத்தமே தொல்சிவ மாகுதல்
சுத்தத்திற் கேவலம் தொல்லுப சாந்தமாம்
சுத்த சகலம் துரிய விலாசமாம்
சுத்தத்தில் இம்மூன்றும் சொல்லலு மாமே.

தூய்மையில் தூய்மை : பழமையாகிய குற்றங்களை நீக்கிவிடும் சிவமாகவே ஆகிவிடுவது.
தூய்மையில் கேவலம் : கரணங்களை விட்டு விட்டு, தன் மன மலங்கள் அகலும்படி ஈசனின் வியாபகத்தில், அலைகள் அற்ற நீர் போல அடங்கி இருப்பது.
தூய்மையில் சகலம் : தன்னையும் தன் தலைவனையும் உள்ளபடி அறிந்து கொண்டு அவன் அருளில் அமிழ்ந்து இருத்தல்.

#2253. சிவதத்துவம் தொழிற்படும் விதம்

சாக்கிர சாக்கிரம் தன்னில், கனவொடும்,
சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிரா தீதம் தனில் சுகானந்தமே
ஆக்கும் மறை ஆதி ஐம்மல பாசமே.

விழிப்பு சாக்கிரம் : புருவ மத்தியில் சிவ தத்துவங்கள் ஐந்தும் தொழிற்படும்.
நனவில் கனவு: பின் மூளையில் மகேசுரம், சாதாக்கியம், சக்தி, சிவன் என்னும் நான்கு தத்துவங்களும் தொழிற்படும்.
விழிப்பு உறக்கம் : தலையின் மீது சாதாக்கியம், சக்தி, சிவன் என்னும் மூன்றும் தொழிப் படும்.
விழிப்புப் பேருறக்கம் : நிராதாரத்தில் சக்தி, சிவம் என்னும் இரண்டும் தொழிற்படும்.
விழிப்பு உயிர்ப்பு அடங்கல்: துவாதசாந்த வெளியில் சிவம் மட்டுமே தொழிற்படும்.

சிவ தத்துவங்கள் ஐந்து ஆகும். இவை சிவனோடு அன்பு கொள்ளும் முறைகள்.
சிவதத்துவங்கள் வருமாறு:
1. சுத்த வித்தை: அறிவு குறைவாக இருந்து செயல் அதிகமாக இருத்தல். அதாவது தத்துவார்த்தமாக ஒன்றும் அறியாமல் இருந்து இறைவன் மேலுள்ள அன்பைச் செயலில் காட்டுவது.
2. ஈசுவரம்: அறிவு பெருகி செயல் குறைதல். அனைத்தும் அறிந்து அதனால் அமைதியாக இருப்பது. அனைத்தும் அறிந்தால் அடக்கம் வருகின்றது.
3. சாதாக்கியம்: சுத்த வித்தையும் ஈசுவரமும் கலந்தது. அதாவது அறிவும் செயலும் சமமாக இருப்பது.
4. விந்து: இது சக்தி வடிவம்.
5. நாதம்: இது சிவாநுபூதி.

#2254. சுத்த சாக்கிராதீதம்

சாக்கிராதீதத்தில் தான் அறும் ஆணவம்,
சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது
ஆக்கு பரோபாதி யாம் உபசாந்தத்தை
நோக்கும் மலம் குணம் நோக்குதல் ஆகுமே.

சாக்கிராதீதத்தில் ஆன்மா சிவத்துடன் ஒன்றாகப் பொருந்தி விடும். அதனால் அப்போது ஆன்மாவின் மலங்கள் அகன்று விடும். சாக்கிராதீதம் என்பது நாதத்தைக் கடந்துவிட்ட நாதாந்த நிலை. அதனால் நாதத் தத்துவம் அதில் இருக்காது. ஆன்மாவுக்குப் பரசிவத்தின் தொடர்பினால்’உபசாந்தம்’ என்று கூறப்படும் அசைவற்ற நீர்ப் பரப்பைப் போன்ற ஒரு நிறைவான மன அமைதி உண்டாகும். நாதத் தத்துவத்தை பற்றிக் கொண்டு நிற்கும் ஆன்மா மனமலங்களையும் அவற்றால் விளையும் குணங்களையும் நோக்காது.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2255 to #2257

#2255. அத்தன் அருளால் சித்தம் ஒடுங்கும்

பெத்தமும் முத்தியும், பேணும் துரியமும்,
சுத்த ஆதீதமும் தோன்றாமல் தான் உணும்
அத்தன் அருள் என்று அருளால் அறிந்த பின்
சித்தமும் இல்லை, செயல் இல்லை தானே.

சீவன் மன மலங்களால் கட்டப் பட்ட நிலை பெத்தநிலை. அவற்றில் இருந்து விடுபட்ட நிலை முத்தி நிலை. தநினைத்த தானே உணர்ந்து கொள்வது துரிய நிலை. சுத்த அவத்தை துரியாதீத நிலை. ஆன்மாவுக்கு இந்த நிலைகள் தோன்றாதபடிச் சிவன் சீவனை ஆட்கொள்வான் என்ற உண்மையைச் சிவன் அருளால் சீவன் அறிந்து கொண்டு விட்ட பின்பு, சீவனின் சித்தமும் அடங்கி விடும், செயல்களும் ஒடுங்கி ஓடும்.

#2256. எய்தும் உயிர் இறைபால் அறிவு ஆகும்

எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
எய்தும் அரன் அருளே;விளையாட்டோடு
எய்திடு உயிர் சுத்தத்து இடுநெறி என்னவே
எய்தும் உயிர்இறை பால்அறிவு ஆமே.

உயிர்கள் அடைகின்ற தளைகளால் கட்டுண்ட பெத்த நிலையும், அல்லது தளைகளில் இருந்து விடுபட்ட முத்தி நிலையும் ஈசன் அருளால் அமைவன. சிவனின் அருள் பெற்ற சீவன் உயரிய சுத்த நிலையை அடையும். இங்கனம் சிவனை அடைந்துவிட்ட சீவன் சிவனின் அறிவாகத் திகழும்.

#2257. கர்மப் பயன்கள்

ஐம்மலத் தாரும் மதித்த சகலத்தர்,
ஐம்மலத் தாரும் அருவினைப் பாசத்தார்,
ஐம்மலத் தார்சுவர்க்கம் நெறி யாள்பவர்
ஐம்மலத் தார்அர னார்க்கு அறிவோரே.

ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து மலங்கள் கொண்ட சீவர்கள் தம்மைத் தாமே மதிக்கின்ற சகலத்தார் ஆவர். தாங்கள் செய்த கொடிய வினைப்பயன்களைத் துய்ப்பதற்காக ஐம்மலத்தார் பாசத் தளைப் படுகின்றனர். அவர்கள் வீடு பேற்றை விரும்புவதில்லை. சுவர்க்க போகத்தையே விரும்புகின்றனர். இவர்கள் சிவனை அறியாது போனாலும், சிவன் இவர்களை நன்கு அறிந்து கொண்டுள்ளான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2258. நனவு நிலை அமையும்

கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரிய மதில் உண்ணும் ஆசையும்
உரிய சுழுமுனை; முதல் எட்டும் சூக்கத்து
அரிய கனாத் தூலம் அந்நனவு ஆமே.

ஆன்மாவை பிறவிக்குச் செலுத்தச் சிவசக்தி அதன் கேவல அதீத நிலையில் மாயையைக் கலக்கச் செய்யும். துரிய நிலையில் அந்த ஆன்மா தான் விரும்பியவற்றைச் சுவைக்க எண்ணம் கொள்ளும். அந்த ஆன்மாவின் விருப்புக்கு ஏற்ப அதன் பிரமரந்திரம் அமையும். அதைச் சூழ்ந்துள்ள, கவிழ்ந்த சகசிரதளத்தில் தொழிற்படும் எட்டுச் சக்திகள் அமையும். ஆன்மாவின் குணம் எனப்படும் மனோமயகோசம் இவற்றுடன் இணைக்கப்பட்டதும் ஆன்மாவின் நனவு நிலை ஏற்படும்.

#2259. மலக் கலப்பு ஏற்படும் முறை

ஆணவம் ஆகும் அதீதமேல்; மாயையும்
பூணும் துரியம்; சுழுத்தி பொய்க் காமியம்;
பேணும் கனவு மாயேயம் திரோதாயி
காணும் நனவின் மலைக்கு கலப்பாகுமே.

ஆணவம் அகலாது நிற்கும் கேவல துரியாதீத நிலையில்.
துரிய நிலையில் மாயை வந்து பொருந்தும்.
பொய்யான கண்மங்கள் கேவலச் சுழுத்தி நிலையில் ஆன்மாவைப் பிணிக்கும்.
மாயேயம் வந்து பொருந்தும் கேவலக் கனவு நிலையில்.
நனவு நிலையில் திரோதாயியும் மற்ற மலங்களும் இவ்வண்ணம் ஆன்மாவைப் பற்றிக் கொள்ளும்.

#2260. பிறவி எடுக்கும் சுத்தன்

அரன் முதலாக அறிவோன் அதீதத்தன்
அரன் முதலா மாயைத்தங்கி சுழுமுனை
கருமம் உணாந்து, மாமாயைக் கைக்கொண்டோர்
அருளும் மறைவார் சகலத்து உற்றாரே.

அதீத நிலையில் இருக்கும்போது ஆன்மா பரசிவத்தை அறியும். துரிய நிலையில் உள்ள ஆன்மா சிவத்தை முதலாகக் கொண்ட சுத்த மாயையில் நிற்கும். சுழுத்தி நிலையில் மலங்கள் வந்து ஆன்மாவிடம் பொருந்தும். கனவு நிலையில் ஆன்மாவை மாமாயை வந்து பற்றும். விழிப்பு நிலையில் திரோதாயி என்னும் மறைக்கும் சக்தி ஆன்மாவை வந்து பற்றும். சகல நிலையில் உள்ள ஆன்மா இவ்வாறு விளங்கும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2261 to #2264

#2261. சகல அவத்தையில் சீவன்

உரு உற்றுப் போகமே, போக்கியத்து உற்று,
மருவு உற்றுப் பூதம், மன அதீதம் மன்னி,
வரும் அச்செயல் பற்றிச் சத்த ஆதி வைகிக்
கரு உற்றிடும் சீவன் காணும் சகலத்தே.

சகல அவத்தையில் பிறக்கும் சீவன் செய்பவை இவை:
மாயையின் காரியமாக ஓர் உடலைப் பெறும். எடுத்த உடலுக்கு ஏற்ப இன்பங்களை அனுபவிக்கும். பஞ்ச பூதங்களை சார்ந்து நிற்கும். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று நான்கு அந்தக் காரணங்களுடன் நன்கு பொருந்தும். சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து தன்மாத்திரைகளில் தங்கும். பிறவி எடுப்பதற்கு ஒரு கருப்பையை அடையும்.

#2262. பிறவாமை சுத்தமே

இருவினை ஓத்திட, இன்னருட் சக்தி
மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னிக்
குருவினைக் கொண்டு அருட்சக்தி முன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.

இருவினைகள் ஆகிய ஞானமும் கிரியையும் ஒத்து விளங்கும்போது, இன்பம் விளைவிக்கும் சிற்சக்தியில் ஆன்மா பொருந்தும். ஞான வடிவாகிய தூய சுத்த அவத்தையில் ஆன்மா பொருந்தும் போது ஆன்மாவுக்குக் குருவருள் கிடைத்தால், திருவருட் சக்தியினால் ஆன்மாவின் மலங்கள் நீங்கிவிடும். ஆன்மா மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்கும் நிலையை அடைவதே அதன் துரிய நிலை ஆகும்.

#2263. பரமசிவம் ஆதேயம் ஆகும்

ஆறாறும் ஆறுஅதின் ஐயைந்து அவத்தையோடு
ஈறா அதீதத் துரியது இவன் எய்தப்
பேறான ஐவரும் போம் பிரகாசத்து
நீறு ஆர் பரசிவம் ஆதேயம் ஆகுமே.

முப்பத்தாறு தத்துவங்களின் வழியாக, இருபத்து ஐந்து அவத்தை நிலைகளையும் ஆன்மா அடையும். நின்மல துரியாதீதத்தை சீவன் அடையும் போது சுத்தவித்தை, மகேசுரம், சதாசிவம், விந்து, நாதம் என்னும் சுத்த தத்துவத்துக்கு உரிய ஐந்தும் நீங்கிவிடும். அப்போது ஒளியினை உடைய சீவன் பரசிவம் ஆகிவிடும். நீறு அணிந்த பரசிவம் ஆதேயம் ஆகிவிடும்.

#2264. பின்னையும் வந்து பிறந்திடும்

தன்னை அறியாது உடலைமுன் தான் என்றான்
தன்னைமுன் கண்டான், துரியம் தனைக்கண்டான்
உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே.

உடலிலிருந்து வேறுபட்டது அதில் உறையும் ஆன்மா. ஒருவன் ‘தான் ஓர் ஆன்மா’ என்பதை அறியாமல் ‘தான் ஓர் உடல்’ என்று எண்ணி மயங்கி இருந்தான். அவன் உணர்வு நிராதாரத்தில் சென்றபோது அவன் தன்னை ஓர் ஒளி வடிவினனாகக் கண்டு கொண்டான். துரியத்தில் உடலைத் தங்குவதும் ஓர் ஒளி என்று கண்டு கொண்டான். சீவனின் ஒளி உடல் சிவனின் ஒளி உடலுடன் ஒன்றாகாமல் போய் விட்டால் அந்த ஆன்மா மீண்டும் மீண்டும் உலகில் வந்து பிறந்து, தன் வினைகளுக்கு ஏற்ற உடலைப் பெறுவான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2265 to #2268

#2265. வாக்கும் மனமும் மருவல் செய்யாவே

சாக்கிரம் தன்னில் அதீதம் தலைப்படில்
ஆக்கிய வந்த வயிந்தவ மால் நந்த,
நோக்கும் பிறப்புஅறும் நோன் முத்தி சித்தியாம்
வாக்கும் மனமும் மருவல் செய்யாவே.

நின்மல சாக்கிராதீதம் கைக் கூடினால் அதனால் ஆன்மாவுக்குப் பல நன்மைகள் விளையும்.
அந்த அதீத நிலையைத் தோற்றுவித்த சுத்த தத்துவம் ஆன்மாவுக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தரும்.
ஆன்மாவை எதிர்நோக்கிக் காத்திருந்த அதன் பிறவிப்பிணி நீங்கி விடும்.
பெருமை உடைய வீடுபேறு கிடைக்கும். அந்த நிலையில் வாக்கும், மனமும் செயல் புரியா.
வாக்கும் மனமும் கடந்த மோன நிலையே ஆன்மாவின் முத்தி நிலை எனப்படும்.

#2266. அப்பும் அனலும் கலப்பது இவ்வாறே

அப்பும் அனலும் அகலத்துளே வரும்,
அப்பும் அனலும் அகலத்துளே வாரா,
அப்பும் அனாலும் அகலத்துள் ஏது எனில்
அப்பும் அனாலும் கலந்தது அவ்வாறே.

அகண்ட வானத்தில் நீரின் குளிர்ச்சியும், நெருப்பின் ஒளியும் கலந்து விளங்கும். ஆனால் அங்கே நீரின் நெகிழ்ச்சியோ நெருப்பின் வெப்பமோ இராது. விரிந்த வானத்தில் நீரும், நெருப்பும் கலந்து எங்கனம் என்று கேட்டால் விரிந்த வானத்தில் நீரும், நெருப்பும் கலந்து விளங்குவது இங்ஙனமே.

#2267. மாயை உறும் ஆன்மாவிடம்

அறுநான்கு அசுத்தம்; அதி சுத்தாசுத்தம்
உறும்ஏழு மாயை, உடன் ஐந்தே சுத்தம்
பெறுமாறு இவை மூன்றும், கண்டத்தால் பதித்து
உறும்மாயை, மாமாயை ஆன்மாவி னோடே.

முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கும் அசுத்தமானவை. வித்தியா தத்துவங்கள் எழும், சிவ தத்துவங்கள் ஐந்தும் சுத்தமானவை. மாயை ஆன்மாவை இம் மூன்றுவகைத் தத்துவங்களையும் அடைவிப்பதற்காகத் தானும் மூன்று பிரிவுகளாகப் பிரியும். அவை பிரகிருதி மாயை, அசுத்தமாயை, சுத்த மாயை எனப்படும்.

#2268. சுத்த நிலையை அடையும்

மாயை கைத்தாயாக, மாமாயை ஈன்றிட,
ஆய பரசிவன் தந்தையாய் நிர்க்கவே
எயும் உயிர்க் கேவல சகலத்து எய்தி
ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே.

அசுத்த மாயை ஆன்மாவின் செவிலித் தாயை ஒத்தது. சுத்த மாயை ஆன்மாவின் ஈன்ற தாயை ஒத்தது. ஆன்மாவின் தந்தையாக நிற்பவன் சிவன். ஆன்மா கேவல, சகல நிலைகளை எய்தி, ஆராய்ந்து, அறிந்து தெளிவடைந்த பின்பு சுத்த மாயையைப் பொருந்தி சுத்த அவத்தையை அடையும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

8. பராவத்தை

பராவத்தை = பரா + அவத்தை.
பரை = சக்தி
அவத்தை = நிலை
பராவத்தை = ஆன்மா சக்தியுடன் உள்ள நிலை

#2269 to #2273

#2269. உடல் வேறு! உயிர் வேறு!

அஞ்சும் கடந்த அனாதி பரம் தெய்வம்
நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பிலி
விஞ்சும் உடல் உயிர் வேறு படுத்திட
வஞ்சம் திருந்தும் வகை அறிந்தேனே.

ஐந்து சிவதத்துவங்களையும் கடந்தவன் சிவன். அவன் அனாதி. அவன் பரம் தெய்வம். அவன் எல்லோர் நெஞ்சிலும் அஉறைகின்றான். அவன் நின்மலன். அவன் பிறப்பிலி. அவன் அகண்ட மெய்ப்பொருள். அவன் சீவனின் உடலில் இருந்து உயிரை வேறுபடுத்திட சீவனுள் மறைந்து உறைகின்றான். அவன் ஆன்மாவின் விருப்பத்தை நிறைவேற்றுவான். சுத்த மாயையை விரும்பும் சீவனை அதில் கொண்டு சேர்ப்பான். சீவன் அசுத்த மாயையை விரும்பினால் அதில் கொண்டு சேர்ப்பான்.

#2270. பராசக்தி அருள்வாள்

சத்தி பராபரம் சாந்தி தனில் ஆன
சத்தி பரானந்தம் தன்னில் சுடர் விந்து
சத்தியமாயை, தனுச் சத்தி ஐந்துடன்
சத்தி பெறும் உயிர் தான் அங்கத் தாறுமே.

பராபரையில் இருக்கையில் சக்தி பராசக்தி. சாந்தியில் இருக்கையில் அவள் சிற்சக்தி. பேரானந்தத்தில் இருக்கையில் அவள் இச்சா சக்தி. ஒளிமயமான விந்துவில் இருக்கையில் அவள் ஞான சக்தி. மாயையில் இருக்கையில் அவள் கிரியா சக்தி. சீவன் இந்தச் சக்திகளை அடையும்போது பராவத்தையை உணர்கின்றது.

#2271. அரன் இனிது ஆமே

ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்;
ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்,
ஆறாறுக்கு அப்பால் அறிவு ஆம் அவர்கட்கே
ஆறாறுக்கு அப்பால் அரன் இனிது ஆமே.

முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து உண்மையை அறிபவர் மட்டுமே உண்மையில் உண்மையை அறிபவர். அவர் அங்ஙனம் தத்துவங்களைக் கடந்த நிலையில் சக்தியின் பூரண அருளுக்குப் பாத்திரம் ஆவார். தத்துவங்களைக் கடந்த நிலையில் அவருக்கு நிறைந்த அறிவு உண்டாகும். அவர் சிவத்துடன் இனிதாகப் பொருந்தி இருப்பார்.

#2272. நஞ்சுற நாடி நயம் செய்யும்

அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்குப்
பஞ்ச அணி காலத்துப் பள்ளி துயில்கின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளொடு
நஞ்சுற நாடி நயம் செய்யு மாறே.

ஐந்து ஞானேந்திரியங்களும், நான்கு அந்தக்கரணங்களும் தத்தம் செயல்களைத் துறந்து உள்ளே அடங்கவும், ஐந்து இந்திரியங்களை அணிகலன்கள் போல அணிந்து கொண்ட ஆன்மா உறங்கும். அப்போது தேவர் தேவனும் மெல்லியலாள் சக்தியும் ஆன்மவின் மலங்களை அகற்றி அதற்கு நன்மை செய்வார்கள்.

#2273. திரிய வரும் துரியத்தில் சீவன் சிவம்

உரிய நனாத் துரியத்தில் இவனாம்;
அரிய துரியம் நனவு ஆதி மூன்றில்
பரிய பரதுரியத்தில் பரனாம்;
திரிய வரும் துரியத்தில் சிவமே.

நின்மல சாக்கிர துரிய நிலையில் சீவன் சுத்த நிலையில் இருப்பான். அந்தத் தூய நிலையில் நனவு, கனவு, உறக்கம் என்ற மூன்று நிலைகளையும் கடந்து சென்று விட்டால், நின்மலத் துரியநிலையில் சீவன் பரனாகி விடுவான். சீவன் வேறு சிவன் வேறு என்று அறிய இயலாத உயரிய நிலையை அடைந்த சீவன் சிவன் ஆகி விடுவான்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2274 to #2278

#2274. பரமாகார் பாசம் பற்றியவர்

பரமாம் அதீதமே பற்றறப் பற்றப்
பரமா மதீதம் பயிலப் பயிலப்
பரமா வதீதம் பயிலாத் தபோதனர்
பரமாகார் பாசமும் பற்றொன் றறாதே.

நின்மல சாக்கிராதீதத்தில் ஆன்ம தத்துவங்களை விட்டு விட்ட ஒரு சீவன் பரம் ஆகிவிடும். இந்த நின்மல சாக்கிராதீத நிலையைப் பயிலப் பயிலப் சீவனுடன் பரம் வந்து பொருந்தும். பரம் ஆக இயலாது இந்த நின்மல சாக்கிர அதீத நிலையை அடைய இயலாதவர்களுக்கு. இத்தகையவர் என்றுமே பாசத்தில் இருந்தும் பற்றுக்களில் இருந்தும் விடுதலை பெறார்.

#2275. தூய அறிவு சிவானந்தம்

ஆயும்பொய்ம் மாயை யகம்புற மாய்நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கறின்
தூய வறிவு சிவானந்தமாகிப்போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.

நாம் ஆராய்ந்து அறிய விரும்பும் மாயை ஒவ்வொரு சீவனின் உள்ளும் புறமும் சூழ்ந்துள்ளது. அது சீவனின் சிந்திக்கும் திறனையை மயக்கிச் சொல் வன்மையை அழிக்கிறது. சீவன் அந்த மாயையைக் கடந்து வந்தால் சீவனின் அறிவு தூய்மை அடைந்து விடும். அதுவே பின்னர் சிவானந்தமாக மாறி, சீவனின் அறிவை மயக்கும் மாயையை மூடிவிடும் ஒரு பொருளாக மாறிவிடும்.

#2276. நரிகளை ஓடத் துரத்திய நாதர்

துரியப் பரியி லிருந்தஅச் சீவனைப்
பெரிய வியாக்கிரத் துள்ளே புகவிட்டு
நரிகளை யோடாத் துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்றோலமிட் டன்றே.

துரிய நிலை என்னும் பரியின் மேல் இருந்தது சீவன். அதை அங்கிருந்து பராவத்தை நிலையில் புகச் செய்தான் ஈசன். பராவத்தை நிலையில் இந்திரியங்கள் என்னும் நரிகள் நாதனால் விரட்டப்பட்டு ஓடிச் சென்று விட்டன. சீவனுக்கு உரிய வினைகள் அவனை அணுக முடியாமல் எட்ட நின்று ஓலம் இட்டன.

#2277. இவன் அவன் வடிவு ஆவான்

நின்றஇச் சாக்கிரம் நீள்துரியத்தினின்
மன்றனும் அங்கே மணம் செய்ய நின்றிடும்
மன்றல் மணம் செய்ய, மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன் வடிவு ஆமே.

சீவன் சாக்கிரத்தில் துரியாதீத நிலையை அடையும் போது மன்றில் ஆடும் செஞ்சடைப் பிரானும் அவனுடன் கலந்து நிற்பான். சிவனும், சீவனும் ஒன்றாகப் பொருந்தும் போது இருளாகிய மாயை விலகி விடும். அதனால் சீவனும் சிவனைப் போன்ற அகண்ட வடிவத்தை அடைந்து விடுவான்.

2278. துரியத்துத் தீது அகலாதே!

விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்திடை ஈடான மாயை
பொருந்தும் துரியம் புரியல்தா னாகும்
தெரிந்த துரியத்துத் தீதுஅக லாதே.

விழிப்பு நிலையில் இருக்கும் பொழுது மனம் உலகை நோக்கி விரிந்தால், அப்போது மாயையின் காரியமாகிய உலகம் சீவனுக்கு நன்கு விளங்கும். வலிமை வாய்ந்த மாயை தான் இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு தன்னைச் சார்ந்தவரை நன்கு பந்தப் படுத்திவிடும். சீவன் சிவனைப் பற்றுக் கோடாகக் கொண்டு மேலே சென்றால் சிவப் பேற்றினை அடைந்து சிவமாகவே மாறிவிடும். துரியத்தில் மாயையின் தொடர்பு இருந்தால் மாயையின் தீமை அகன்று செல்லாது.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2279 to #2283

#2279. அமலன் என்று அறிதியே

உன்னை அறியாது, உடலை முன் நான் என்றாய்,
உன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்
தன்னை அறிந்ததும் பிறவித் தணவாதால்
அன்ன வியாத்தான் அமலன் என்று அறிதியே.

முன்பு உன் ஆன்ம ஒளியை நீ அறிந்து கொள்ளாமல் ‘என் உடல் தான் நான்’ என்று கூறினாய். பின்னர் உன் ஆன்ம ஒளியை அறிந்து கொண்டு துரியத்தில் நின்றாய். உன் ஆன்மவொளி சிவவொளியில் லயம் பெற வேண்டும். அதுவரை பிறவித் துயர் அகலாது. ஆன்ம ஒளி சிவ ஒளியில் அடங்குவதே மலங்கள் நீங்கிய தூய நிலையை அடைவது என்று அறிந்து கொள்வாய்!

#2280. இருவரும் இன்றி ஒன்றாகி நின்றார்
கருவரம் பாகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்பிறப் புற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
யிருவரும் இன்றியொன் றாகிநின் றாரே.

துரியத்தில் உள்ள நுண்ணிய தேகம் கருவறையின் வரம்புக்கு உற்பட்டது. பிறவியின் காரணம் அகற்றப் படும் வரை பருவுடலும் நுண்ணுடலும் பொருந்திச் சீவன் பிரவிப் பிணியில் துயருறும். குருவருள் பெற்றுப் பருவுடல், நுண்ணுடலைச் சீவன் துறந்து விட்டால் அப்போது சீவன் சிவனுடன் ஒன்றாகிவிடும்.

#2281. பரதுரியம் பரம் ஆம்

அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணுஅசை வின்கண் ஆன கனவும்
அணு அசைவிற் பராதீதம் சுழுத்தி
பணியின் பரதுரியம் பரம் ஆமே.

துரிய நிலையில் நனவு, கனவு, சுழுத்தி நிலைகளைக் கடந்து செல்லும் ஆன்மா பர துரீய நிலையை அடையும். அந்நிலையில் ஆன்மா உயரிய பரம் என்று ஆகிவிடும்.

#2282. சிவதுரியான உயிர்
பரதுரியத்து நனவும், பரந்து
விரிசனம் உண்ட கனவும் மெய்ச் சாந்தி
உருஉரு கின்ற சுழுத்தியும் ஓவ
தெரியும் சிவதுரி யத்தனும் ஆமே.

பரதுரிய நனவு நிலையை அடுத்து பரதுரிய கனவு நிலை அமையும். இந்நிலையில் பரவி விரிந்த உலகின் தூலநிலை அழிந்து போகும். இதனை அடுத்த பரதுரிய சுழுத்தி நிலை அமையும். இந்நிலையில் ஆன்மாவுக்கு உபசாந்தம் என்று விவரிக்க முடியாத ஒரு மனஅமைதி உண்டாகும். இந்த நிலையையும் கடந்து செல்லும் ஆன்மா சிவதுரியத்தை அடையும்.

#2283. உபசாந்தம் உற்றல் உண்மைத் தவம்

பரமா நனவின் பின், பாற்சகம் உண்ட
திறம்ஆர் கனவும் சிறந்த சுழுத்தி,
உரம் ஆம் உபசாந்தம் உற்றல் துறவே
தரன் ஆம் சிவதுரி யத்தனும் ஆமே.

பர அவத்தையில் நின்மல நனவு நிலைக்குப் பின்னர் தூல உலகம் காட்சி அளிக்காது. அந்நிலையில் தூல உலகம் ஒரு கனவு போலாகிக் காட்சி தரும். நின்மலச் சுழுத்தியில் ஆன்மாவின் சுட்டறிவு நீங்கி விடும். உபசாந்தம் என்னும் விவரிக்க முடியாத ஒரு மன அமைதி உண்டாகும். இதுவே உபசாந்தம் பொருந்திய உயரிய துறவு நிலை. இங்கு தங்கி இருப்பவன் உண்மையில் சிவனுடன் கலந்து இருப்பவன்.
 
Back
Top