Quotable Quotes Part II

திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#2264. பின்னையும் வந்து பிறந்திடும்

தன்னை அறியாது உடலைமுன் தான் என்றான்
தன்னைமுன் கண்டான், துரியம் தனைக்கண்டான்
உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே.

உடலிலிருந்து வேறுபட்டது அதில் உறையும் ஆன்மா. ஒருவன் ‘தான் ஓர் ஆன்மா’ என்பதை அறியாமல் ‘தான் ஓர் உடல்’ என்று எண்ணி மயங்கி இருந்தான். அவன் உணர்வு நிராதாரத்தில் சென்றபோது அவன் தன்னை ஓர் ஒளி வடிவினனாகக் கண்டு கொண்டான். துரியத்தில் உடலைத் தங்குவதும் ஓர் ஒளி என்று கண்டு கொண்டான். சீவனின் ஒளி உடல் சிவனின் ஒளி உடலுடன் ஒன்றாகாமல் போய் விட்டால் அந்த ஆன்மா மீண்டும் மீண்டும் உலகில் வந்து பிறந்து, தன் வினைகளுக்கு ஏற்ற உடலைப் பெறுவான்.
 
#2265 to #2268

#2265. வாக்கும் மனமும் மருவல் செய்யாவே

சாக்கிரம் தன்னில் அதீதம் தலைப்படில்
ஆக்கிய வந்த வயிந்தவ மால் நந்த,
நோக்கும் பிறப்புஅறும் நோன் முத்தி சித்தியாம்
வாக்கும் மனமும் மருவல் செய்யாவே.

நின்மல சாக்கிராதீதம் கைக் கூடினால் அதனால் ஆன்மாவுக்குப் பல நன்மைகள் விளையும்.
அந்த அதீத நிலையைத் தோற்றுவித்த சுத்த தத்துவம் ஆன்மாவுக்கு மிகுந்த ஆனந்தத்தைத் தரும்.
ஆன்மாவை எதிர்நோக்கிக் காத்திருந்த அதன் பிறவிப்பிணி நீங்கி விடும்.
பெருமை உடைய வீடுபேறு கிடைக்கும். அந்த நிலையில் வாக்கும், மனமும் செயல் புரியா.
வாக்கும் மனமும் கடந்த மோன நிலையே ஆன்மாவின் முத்தி நிலை எனப்படும்.

#2266. அப்பும் அனலும் கலப்பது இவ்வாறே

அப்பும் அனலும் அகலத்துளே வரும்,
அப்பும் அனலும் அகலத்துளே வாரா,
அப்பும் அனாலும் அகலத்துள் ஏது எனில்
அப்பும் அனாலும் கலந்தது அவ்வாறே.

அகண்ட வானத்தில் நீரின் குளிர்ச்சியும், நெருப்பின் ஒளியும் கலந்து விளங்கும். ஆனால் அங்கே நீரின் நெகிழ்ச்சியோ நெருப்பின் வெப்பமோ இராது. விரிந்த வானத்தில் நீரும், நெருப்பும் கலந்து எங்கனம் என்று கேட்டால் விரிந்த வானத்தில் நீரும், நெருப்பும் கலந்து விளங்குவது இங்ஙனமே.

#2267. மாயை உறும் ஆன்மாவிடம்

அறுநான்கு அசுத்தம்; அதி சுத்தாசுத்தம்
உறும்ஏழு மாயை, உடன் ஐந்தே சுத்தம்
பெறுமாறு இவை மூன்றும், கண்டத்தால் பதித்து
உறும்மாயை, மாமாயை ஆன்மாவி னோடே.

முப்பத்தாறு தத்துவங்களில் ஆன்ம தத்துவங்கள் இருபத்து நான்கும் அசுத்தமானவை. வித்தியா தத்துவங்கள் எழும், சிவ தத்துவங்கள் ஐந்தும் சுத்தமானவை. மாயை ஆன்மாவை இம் மூன்றுவகைத் தத்துவங்களையும் அடைவிப்பதற்காகத் தானும் மூன்று பிரிவுகளாகப் பிரியும். அவை பிரகிருதி மாயை, அசுத்தமாயை, சுத்த மாயை எனப்படும்.

#2268. சுத்த நிலையை அடையும்

மாயை கைத்தாயாக, மாமாயை ஈன்றிட,
ஆய பரசிவன் தந்தையாய் நிர்க்கவே
எயும் உயிர்க் கேவல சகலத்து எய்தி
ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே.

அசுத்த மாயை ஆன்மாவின் செவிலித் தாயை ஒத்தது. சுத்த மாயை ஆன்மாவின் ஈன்ற தாயை ஒத்தது. ஆன்மாவின் தந்தையாக நிற்பவன் சிவன். ஆன்மா கேவல, சகல நிலைகளை எய்தி, ஆராய்ந்து, அறிந்து தெளிவடைந்த பின்பு சுத்த மாயையைப் பொருந்தி சுத்த அவத்தையை அடையும்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#2064 to #2066

#2064. பிறப்பு அற்று இருந்தார்

மாணிக்க மாலை மலர்ந்துஎழு மண்டலம்
ஆணிப்பொன் நின்று அங்கு அமுதம் விளைந்தது;
பேனிக் கொண்டு உண்டார் பிறப்பு அற்று இருந்தார்
ஊணுக்கு இருந்தார் உணராத மாக்களே.

சிவந்த மாணிக்க மாலையைப் போல ஒளி வீசுகின்ற, புருவ நடுவான மண்டலத்தில், ஆணிப் பொன் போன்ற சிவபிரான் நின்று கொண்டு, அங்கு பேரின்பம் ஆகிய அமுதத்தை விளைவிக்கின்றான். இதை அறிந்து கொண்டு, விந்து சயம் மூலம் அந்த அமுதத்தைப் பருகுகின்றவர்கள் பிறப்பு அற்று விடுவர். அந்த அமுதத்தைப் பேணாமல் ஊண் உண்பதற்காகவே உயிர் வாழ்பவர்கள் விலங்குகளுக்குச் சமம் ஆவர்.

#2065. ஒன்ற அறிவிப்போன் இறையே

அசத்தொடு, சத்தும் அசத்சத்தும் நீங்க
இசைத்திடு பாசப்பற்று ஈங்கு அறுமாறே
அசைத்து இருமாயை அணுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்றை அறிவிப்போன் இறையே.

சீவனைப் பீடித்துள்ள சத்து, அசத்து சதசத்து என்னும் மூன்றும் நீங்குவதற்கும், முன்னமே கூட்டப் பட்டுள்ள பாசப் பற்றுக்கள் அகலவும் சிவன் செய்வது என்ன? சிவன் சுத்த மாயை அசுத்த மாயை என்ற இரண்டுடன் அணுவின் அளவுடைய ஆன்மாவை இணைத்து வைத்தான். அத்துடன் நில்லாமல் சிவன் பிரணவ உபதேசமும் செய்தான்.

#2066. பரனே குருவாம் இயல்பிலே

ஏறு நெறியே மலத்தை யெரித்ததால்
ஈறி லுரையால் இருளை யறுத்தலான்
மாறில் பசுபாசம் வாட்டலால் வீடுக
கூறு பரனே குருவாம் இயல்பிலே.

மூலாதாரத்திலிருந்து ஆறு ஆதாரங்களைக் கடந்து மேலே செல்லும் போது சீவனின் மலங்கள் எரிந்து அழிந்து விடுகின்றன. இடையறாது சிவன் பெயரை உரைப்பது சீவனின் அறியாமையை அகற்றி விடுகின்றது. சீவனின் இயல்பான பசு பாசத் தன்மைகள் கெடுமாறு அவனை வாட்டிப் பின்னர் சீவனை முத்தி நெறியில் செலுத்துகின்ற சிவனே சிறந்த சற்குரு
 
36. கூடா ஒழுக்கம்
மேற்கொள்ளக் கூடாத, தவிர்க்க வேண்டிய தீயொழுக்கம்.

#2067 to #2070

#2067. கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே

“கண்காணி இல்’ என்று கள்ளம் பல செய்வார்;
கண்காணி இல்லா இடம் இல்லை, காணுங்கால்
கண்காணி யாகக் கலந்து எங்கும் நின்றானைக்
கண்காணி கண்டார் களவு ஒழிந்தாரே.

மேற்பார்வை செய்யும் கண்காணி இல்லை என்று எண்ணிக்கொண்டு உலகத்தோர் கள்ளத்தனங்கள் பற்பல செய்து வருவர். எல்லோரையும் எப்போதும் கண்காணிக்கும் இறைவன் இல்லாத இடம் என்று எதுவுமே இல்லை. இங்கு அங்கு என்னாதபடி எங்கும் எதிலும் கலந்து உறைகின்ற இறைவன் என்ற கண்காணியைக் கண்டு கொண்டவர்கள் கள்ளத்தனத்தில், வஞ்சகச் செயல்களில் ஈடுபட மாட்டார்.

#2068. பொய் தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்

செய்தா னறியுஞ் செழுங்கடல் வட்டத்துப்
பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள்
மெய்தான் உரைக்கில் விண்ணோர் தொழச் செய்வான்
மைதாழ்ந் தலங்கு மிடறுடை யோனே.

செழுங்கடல் சூழ்ந்த உலகினைப் படைத்த இறைவன் மெய்யையும் பொய்யையும் நன்கு அறிவான். கரிய ஒளி வீசும் கழுத்தை உடைய ஈசன், பொய் பேசித் திரிகின்ற மக்கள் மெய் பேசுபவர்களாக மாறிவிட்டால், அவர்களைத் தேவர்களும் வந்து வழிபடுகின்ற மேன்மையை அவர்களுக்கு அளிப்பான்.

#2069. பித்தர்கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே

பத்தி விற்று உண்டு, பகலைக் கழிவிடும்
மத்தகர்க்கு அன்றோ மறுபிறப்பு உள்ளது?
வித்துக் குற்று உண்டு விளைபுலம் பாழ்செய்யும்
பித்தர்கட்கு என்றும் பிறப்பு இல்லை தானே.

பக்தியை விற்றுப் பணமாக்கி, அதைச் செய்வதில் தன் காலத்தைக் கழிக்கின்ற, மதம் கொண்டவர்களுக்கு மறுபிறவி என்றுமே தொலையாது. குற்றிய விதையைப் போலக் காமம் முதலிய மலங்களை அகற்றி விட்டு, உடல் என்னும் விளைநிலத்தைப் பாழ் நிலம் ஆக்கிவிட்ட, இறை பக்தி என்னும் பித்துப் பிடித்தவர்களுக்கு மறுபிறப்பு என்பதே இல்லை அல்லவா?

#2070. நடக்க உறுவரே ஞானம் இலாதார்

வடக்கு வடக்கு என்பர்; வைத்தது ஒன்றும் இல்லை;
நடக்க உறுவரே ஞானம் இலாதார் ;
வடக்கில் அடங்கிய வையகம் எல்லாம்
அகத்தில் அடங்கும் அறிவுடையோர்க்கே.

‘வடக்கில் உள்ள மூர்த்தி, தீர்த்தம், தலம் சிறந்தவை!’ என்று கூறுவர். வடக்கில் இவ்வாறு சிறந்தவை என்று எவையும் இல்லை. அறிவற்றவர்கள் மற்றவர்களை வடக்கே செல்லும்படி உந்திக் கொண்டே இருப்பார்கள். வடக்கில் உள்ளதாக அவர்கள் கூறுகின்ற மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற எல்லாம் ஒரு ஞானியின் உள்ளத்திலேயே அமைந்துள்ளன.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#2071 to #2075

#2071. காயத்தினுள்ளே கமழ்கின்ற நந்தி

காயக் குழப்பனைக் காயநன் னாடனைக்
காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத்
தேயத்து ளேயெங்கும் தேடித் திரிவர்கள்
காயத்துள் நின்ற கருத்தறி யாரே.

சீவனின் உடலையும், உயிரையும் ஒன்றாக இணைப்பவன் இறைவன். சீவனின் உடலைத் தனது இருப்பிடம் ஆகக் கொண்டவன் இறைவன். சீவனின் உடலில் ஒளிந்து உறைந்து ஒளிர்கின்ற இறைவனை நாடெங்கும் தேடி அலைகின்றார்களே ! தனக்குள்ளே அவன் பொருந்தி விளங்குவதை எவரும் அறிவதில்லையே!

#2072. கண்காணியாகிய காதலன்

கண்காணி யாகவே வையகத் தேயெழும்
கண்காணி யாகக் கருத்துள் இருந்திடும்
கண்காணி யாகக் கலந்து வழி செய்யும்
கண்காணி யாகிய காதலன் தானே.

நம்மைக் கண்காணிப்பவனாக இறைவன் நம் மூலாதாரத்தில் எழுகின்ற தீயில் அமைந்துள்ளான். இறைவன் நம்மைக் கண்காணிப்பவனாக நம் கருத்தினுள் உறைகின்றான். இறைவன் நம்மைக் கண்காணிப்பவனாக நம் உடலிலும், உயிரிலும் கலந்து உறைகின்றான். இறைவன் மேல் அன்பு கொண்டவர்களுக்குக் கண்காணியாகிய காதலன் அவனே அன்றோ?

#2073. ஈசன் இயல்பு அறியார்

கன்னி ஒரு சிறை கற்றோர் ஒரு சிறை ;
மன்னிய மாதவம் செய்வோர் ஒரு சிறை ;
தன் இயல்பு உன்னி உணர்ந்தோர் ஒரு சிறை;
என்ன இது? ஈசன் இயல்பு அறியாரே.

காமத்தைத் தூண்டும் கன்னியரின் வலையில் வீழ்ந்தவர் ஒருவகைச் சிறையில் அகப்பட்டுக் கொண்டவர்; கற்றறிந்தவர் ஒரு வகைச் சிறையில் அகப்பட்டுக் கொண்டவர்; உடலை வருத்தித் தவம் செய்பவர் ஒருவகைச் சிறையில் அகப்பட்டவர்; ஆனால் அனுபவம் இல்லாமல் தன்னையும் தன் தலைவனையும் உணர்ந்து கொள்ள முயல்பவர் ஒரு வகைச் சிறையில் அகப்பட்டவர்; இந்த நால்வரில் எவருமே இறைவனின் உண்மை இயல்பினை அறியாதவர்கள் தான்!

#2074. காணாது கண்டார் களவு ஒழிந்தாரே

காணாத கண்ணிற் படலமே கண்ணொளி
காணாத வர்கட்கும் காணாத அவ்வொளி
காணாத வர்கட்கும் கண்ணாம் பெருங் கண்ணைக்
காணாது கண்டார் களவொழிந் தாரே.

கண் படலத்தால் மூடப்பட்ட விழிக்கு இருளே அதன் ஒளியாகும். ஒளிர்கின்ற கதிரவனையும் அதனால் காண முடியாது. அது போன்றே எங்கும் சிவ ஒளி பரவி இருந்தாலும் ஞானம் இல்லாத சாதாரண மனிதர்களால் அதைக் காண முடியாது. அகக் கண்ணாக இருந்து கொண்டு ஒளியைத் தருவது இறைவன் என்ற பெருங் கண்ணொளி ஆகும். ஊனக் கண்ணால் காணாமல் ஞானக் கண்ணால் இறைவனைக் கண்டவர் களவுச் செயல்களில் ஈடுபடார்.

#2075. சித்தம் தெளிந்தேன் செயல் ஒழிந்தேன்

பித்தன் மருந்தால் தெளிந்து பிரகிருதி
உய்த்து ஒன்று மாபோல், விழியுந்தன் கண்ணொளி
அத்தன்மை ஆதல் போல், நந்தி அருள் தரச்
சித்தம் தெளிந்தேன் செயல்ஒழிந் தேனே.

பித்துப் பிடித்தவன் வைத்தியன் தரும் மருந்தால் குணம் அடைந்து தெளிவடைவான். மீண்டும் தன் இயல்பு நிலையைப் பெறுவான். கண்ணில் உள்ள படலத்தை நீக்கி விட்டால் மீண்டும் கண் காணும் தன்மையைப் பெற்றுவிடும். சிவபிரான் எனக்கு அருள் செய்தான். உள்ளம் தெளிவடைந்தேன். என் செயல்கள் ஒழிந்தேன்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#2076 to #2079

#2076. நிராமயம் ஆக நினைப்பு ஒழிந்தார்

பிரான்மயம் ஆகப் பெயர்ந்தன எட்டும்
பராமயம் என்று எண்ணிப் பள்ளி உணரார்
சுராமயம் உன்னிய சூழ் வினையாளர்
நிராமயம் ஆக, நினைப்புஒழிந் தாரே.

நிலம், நீர், காற்று, நெருப்பு, விண், கதிரவன், சந்திரன், ஆன்மா என்ற எட்டும் சிவ மயமானவை. இவை அனைத்தும் சிவனுடைய சக்தியின் வெளிப்பாடு என்று அறியாதவர்கள், தம் அறியாமை என்னும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து என்றும் விழித்து எழார். வினைகளால் சூழப்பட்டு, மயக்கத்தில் ஆழ்ந்துள்ள இவர்கள், இன்ப மயமான இறைவனின் நினைப்பையே ஒழித்து விட்டார்களே!

#2077. ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா

ஒன்று, இரண்டு ஆகி நின்று, ஒன்றி ஒன்றாயினோர்க்கு
ஒன்றும் இரண்டும் ஒருகாலும் கூடிடா,
ஒன்று இரண்டு என்றே உரைதரு வோர்க்கெலாம்
ஒன்று இரண்டாய் நிற்கும், ஒன்றொடு ஒன்றானதே.

கலப்பால் சிவனும், சீவனும் ஒன்றே ஆகும், ஆனால் தம் தன்மையால் அந்தச் சிவனும், சீவனும் இரண்டாகும். சீவ பாவம் கெட்டுச் சிவ பாவம் அடைந்தவருக்கு ஒன்று இரண்டு என்ற பேத பாவம் என்றுமே தோன்றாது. அவ்வாறு அல்லாது சிவன் வேறு, சீவன் வேறு என்று பேத அறிவுடன் இருப்பவர்களுக்குச் சிவனும், சீவனும் என்றும் இரண்டு வேறுபட்ட பொருட்களாகவே இருக்கும்.

#2078. உள்ளப் பாங்கு அறியாரே

உயிர் அது நின்றால், உணர்வு எங்கும் நிற்கும்
அயரறி வில்லையால் உடல் வீழும்
உயிரும் உடலும் ஒருங்கிக் கிடக்கும்
பயிரும் கிடந்த உள்ளப் பாங்கு அறியாரே.

உடலில் உயிர் நின்றால், உணர்வு உடல் எங்கும் பரவி நிற்கும். உணரும் அறிவில்லை என்றால் உடல் கீழே வீழும். உயிர், உடல் ஆகிய இரண்டுடன் சிவப் பயிரை விளைவிக்கும் தன்மையும் உள்ளத்தில் ஒருங்கி கிடப்பதை உலகத்தோர் அறிய மாட்டார்.

#2079. பெரும் பொருள் ஆங்கு அறியாரே

உயிர் அது வேறா, உணர்வு எங்கும் ஆகும்
உயிரை அறியில், உணர்வு அறிவு ஆகும்;
உயிர் அன்று உடலை விழுங்கும் உணர்வை
அயரும் பெரும்பொருள் ஆங்கு அறியாரே.

உயிர் வேறு, உணர்வு வேறு. உணர்வே உடல் எங்கும் பரவி நிற்கும். உயிரை அறிந்து கொண்டு விட்டால் உணர்வை அறிந்து கொள்ள முடியும். உடல் முழுவதும் பரவி நிற்பது உயிர் அன்று, அது நம் உணர்வே ஆகும். அந்த உணர்வில் கலந்து அதன் உள்ளே நிற்பவன் சிவன் என்பதை எவரும் அறிகிலர்.
 
ஏழாம் தந்திரம்

#2080 to #2083

#2080. தலைவாணி செய்வது தன்னை அறிவதே

உலகு ஆணி, ஒண்சுடர், உத்தம சித்தன்,
நிலவாணி ஐந்தனுள் நேருற நிற்கும்;
சிலவாணி ஆகிய தேவர் பிரானைத்
தலைவாணி செய்து தன்னை அறிவதே.

உலகின் அச்சாணி இறைவன் ஆவான். அவன் ஒளிரும் ஒண்சுடர். அவன் உத்தம சித்தன். நிலம் முதலிய ஐம் பெரும் பூதங்களின் உள்ளும் புறமும் நிறைந்தவன். சில வாக்குகளின் வடிவாகிய தேவர்களின் தலைவன் அவன். தலையில் பிரணவத்தை விந்து நாதமாக உணர்வதே ஒருவன் தன்னை அறிந்து கொள்ளும் செயல் ஆகும்.

#2081. தானந்தமாமென நின்ற தனிச்சுடர்

தானந்த மாமென நின்ற தனிச்சுடர்
ஊனந்த மாயுல காய்நின்ற ஒண்சுடர்
தேனந்த மாய்நின்ற சிற்றின்ப நீயொழி
கோனந்த மில்லாக் குணத்தரு மாமே.

அனைத்துப் பொருட்களும் இறுதியில் வந்து ஒடுங்கும் இடம் ஈசன். அவன் ஒரு தனிப் பெருஞ்சுடர். தானே உலகமாகவும், அதில் வாழும் உயிர்களாகவும், அதில் உள்ள பொருட்களாகவும் இருக்கும் ஒரே ஒளிரும் சுடர். இத்தகைய ஈசனின் எல்லை இல்லாத அருள் உன் மீது பொழிய நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா ? முதலில் இன்பத்தையும் பின்பு காமக் கழிவினால் சோர்வையும் தருகின்ற சிற்றின்பத்தைத் துறந்து விடு!

#2082. ஈசன் கருத்து அறிவாரில்லை

உன்முதல் ஆகிய ஊன்உயிர் உண்டு எனும்
கன்முதல் ஈசன் கருத்து அறிவார் இல்லை,
நன்முதல் ஏறிய, நாமம் அற நின்றால்
தன் முதல் ஆகிய தத்துவம் ஆமே.

ஈசன் உனக்கு முதல்வன். ஈசன் உன் உடலில் உள்ள உயிர். கயிலையின் நாதனின் உள்ளக் கருத்தினை அறிந்தவர் எவரும் இல்லை. நல்ல முதல்வன் ஆகிய சிவனின் பெயர் விளங்கும்படித் தன்
தனித் தன்மையைத் தியாகம் செய்பவருக்கு அவன் சிறந்த பண்புகள் வந்து பொருந்தும்.

#2083. உளம் மன்னும் ஆறாறு முடிவிலே

இந்தியம், அந்தக் காரணம் இவை உயிர்,
வந்தன சூக்கம், உடலன்று, மான் அது
தந்திடும் ஐவிதத்தால் தற்புருடனும்
முந்து உளம் மன்னும் ஆறாறு முடிவிலே.

ஆன்மா ஐம்பொறிகள் அன்று; நான்கு அந்தக் காரணங்கள் அன்று; மூன்று உடல்கள் அன்று; உயிரும் அன்று. இவை அனைத்தும் மகத் தத்துவத்தில் தோன்றியவை. புருடனும் கலை, காலம், நியதி, வித்தை, அராகம் என்ற ஐந்தின் கூட்டத்தால் வந்து பொருந்துவது ஆகும். அனாதியாகிய ஆன்மா முப்பத்தாறு தத்துவங்களின் முடிவில் நிலை பெற்று நிற்பது ஆகும்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

37. கேடு கண்டு இரங்கல்
அழிவைக் கண்டு மன வருத்தம் அடைதல்

#2084 to #2087

#2084. முற்று ஒளித்தீயின் முனிகின்றவாறே

வித்துப் பொதிவார் விரைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாணாள் அறிகிலாப் பாவிகள்,
உற்ற வினைத் துயர் ஒன்றும் அறிகிலார்,
முற்று ஒளி தீயின் முனிகின்ற வாறே.

தம் வாணாள் ஒவ்வொரு கணமும் வீணாள் ஆவதை அறியாத பாவிகள், தொடர்ந்து வினைகள் என்னும் விதைகளைச் சேமிப்பர். தம் உடலாகிய நாற்றங்காலில் அந்த வித்துக்களை முளைக்கச் செய்வர். வினைப் போகத்தை அறுவடை செய்வர். என்றாலும் அவர்கள் வினைப் போகத்தில் வரும் துன்பங்களை உணர்வதில்லை. வாழ்நாள் முடிவதற்குள் வினைகளை அழித்துவிட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், கொழுந்து விட்டு எரியும் தீயில் அகப்பட்டது போல அவர்கள் அழிந்து படுவர்.

#2085. ஆதியை அன்பில் அறிகில்லார்களே

போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு ளே நின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை யன்பில் அறியகில் லார்களே.

மனிதனின் வாழ்நாள் திடீர் என்று முடிவதைக் கண்ட பின்பும், சாதனைகளில் ஈடுபடாமல் வீண் வாதங்களில் ஈடுபடும் மனிதர்கள் பெறுவது தான் என்ன? நீதியுள்ளே நின்று நிர்மலன் ஆதிப்பிரான் சிவன் தாள்களை பணியாமல், அவனை அன்பினால் அறியாமல், உலகில் வாழ்கின்றார்களே!

#2086. உடம்பினை ஓம்பி உயிராத் திரிவர்

கடன் கொண்டு, நெற்குத்துக் கையரை ஊட்டி
உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார்;
தடங்கொண்ட சாரல் தழல்முருடு ஏறி
இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே.

கடனாகவேனும் நெல்லைப் பெற்றுக் கொண்டு வந்து அதை நன்கு குத்திச் சீராக்கி சமைத்து உண்பர். தம் பொறிகளைத் திருப்திப் படுத்திக் கொண்டு, தம் உடலைப் பேணி வளர்த்து, ‘ இந்த உடலே நான்!’ என்று எண்ணிக் கொண்டு உலகில் திரிவர். ஒருநாள் அகன்ற மலைச் சரிவில், எரிகின்ற உருட்டுக் கட்டைகளில் இந்த உடல் கிடைத்தப்படும் என்பதைச் சிறிதும் சிந்தியார்.

#2087. பரம் தன்னை ஓராப் பழமொழியாளர்

விரைந்து அன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழல் புண்ணியன் சொன்ன
பரம்தன்னை ஓராப் பழமொழி யாளர்
உரம் தன்மை ஆக ஒருங்கி நின்றார்களே.

அன்று ஒருநாள் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்குக் கயிலைநாதன் ஒரு கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து, புண்ணிய சிவகுருவாக உபதேசம் செய்தான். அந்த சிவத்தை எண்ணாமல் பழிச் சொற்களைப் பேசித் திரியும் மக்கள் நிலத்துக்கு உரமாக மாறிவிடுவதற்கு வரிசையில் நிற்கின்றார்களே!
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#2088 to #2092

#2088. என்றும் எம் ஈசன் அடியவர்க்கே நல்கும்

நின்ற புகழும் நிறைதவத்து உண்மையும்
என்றும்எம் ஈசன் அடியவர்க்கே நல்கும்
அன்றி உலகம் அது இது தேவு என்று
குன்றுகை யாலே குறைப்பாட்டை வாரே.

நிலைத்து நிற்கும் புகழையும், நிறைந்த தவத்தின் பயனையும் ஈசன் தன் மெய்யடியார்களுக்கு மட்டுமே தருவான். இதை அறிந்த பின்பும் “அது முதற்கடவுள்!” , “இது முதற்கடவுள்!” என்று கூறித் திரிபவர் வாழ்வில் குறைவை அடைவர். அழிந்து படுவர்.

#2089. துன்பதுள்ளே நின்று தூங்குகின்றார்களே

இன்பத்துள்ளே பிறந்து, இன்பத்துள்ளே வளர்ந்து
இன்பத்துள்ளே நினைக்கின்றது இது மறந்து
துன்பத்துள்ளே சிலர், சோறோடு கூரை என்று
துன்பத்துள்ளே நின்று தூங்குகின் றார்களே.

இன்பத்துள்ளே பிறந்து, இன்பத்துள்ளே வளர்ந்து, இன்பம் கொள்ளும் நேரத்தில் எல்லாம் இறைவனை நினைக்க வேண்டும். இதுவே வாழ்வில் இன்பம். இதை மறந்து விட்டுச் சிலர் சோறு, கூரை என்று அவற்றையே வாழ்க்கையாக எண்ணித் துன்பம் அடைந்து அந்த அறியாமையிலேயே வாழ்வில் அவதிப் படுகின்றார்களே!

#2090. பெறுவதற்கரியதோர் பேறிழந்தாரே

பெறுதற் கரிய பிறவி பெற்றும்
பெறுதற்கரிய பிரானடி பேணார்
பெறுதற்கரிய பிராணிக ளெல்லாம்
பெறுதற் கரியதோர் பேரிழந் தாரே.

கிடைப்பதற்கு அரிய மனிதப் பிறவியைப் பெற்றிருந்தும் கூடச் சில மனிதர்கள் கிடைப்பதற்கு அரிய சிவன் திருவடிகளைப் பேணுவதில்லை. பெறுவதற்கு அரிய பிறவியைப் பெற்ற பின்பும் வெறும் விலங்குகளைப் போல வாழ்பவர் பெறுவதற்கு அரிய பேற்றை இழந்து விட்டார்களே!

#2091. மாதவன் இன்பம் மறந்தொழிந்தாரே

ஆர்வ மனமும் அளவுஇல் இளமையும்
ஈரமும் நல்ல என்று இன்புறு காலத்துத்
தீர வருவது ஓர் காமத் தொழில் நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தாரே.

ஆர்வம் கொண்ட மனமும், அளவு இல்லாத இளமையும், அன்பும் கொண்டு காமத்தொழிலில் ஈடுபட்டு இன்புறுவர் மனிதர்கள். இவர்கள் மாதவச் சிவன் தரவல்ல நிலையான பேரின்பத்தை மறந்தும் துறந்தும் ஒழித்து விட்டார்களே!

#2092. மெய்ப்பரிசே வினவாது இருந்தோமே

இப்பரிசே இளஞாயிறு போல் உரு
அப்பரிசு அங்கியின் உள் உறை அம்மானை
இப்பரிசே கமலத்து உறை ஈசனை
மெய்ப்பரிசே வினவாது இருந்தோமே.

உதிக்கும் கதிரவனைப் போன்றவன் சிவன்; குண்டலினியின் அக்கினியில் கலந்தவன் சிவன்; இதயத் தாமரையில் இருப்பவன் சிவன்; இத்தகைய ஈசனின் உண்மை இயல்பினை ஆராயாமல் விருதே இருந்தோமே! என்னே எம் அறியாமையின் அளவு!
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#2093 to #2097

#2093. நாடகில்லார் நயம் பேசித் திரிவர்

கூடகில் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார் நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லாரவன் செய்த பரிசறிந்து
ஆடவல் லாரவர் பேறெது வாமே.

குரு காட்டிய வழியில் பொருந்தி இவர்கள் சிவனைச் சென்று கூடுவதில்லை. தாம் கற்ற நூல்களின் நயத்தைப் பேசித் திரியும் இவர்கள் சிவனை நாடுவதில்லை. சிவன் பெருமைகளைப் பேசும் இனிய பாடல்களை இவர்கள் பாடுவதில்லை. வீண் களியாட்டம் ஆடுவதால் இவர்கள் பெறும் பயன் என்ன?

#2094. நாதனை நாள்தோறும் துஞ்சும் அளவும் தொழுமின்

நெஞ்சு நிறைந்து அங்கு இருந்த நெடுஞ்சுடர்
நம்செம்பிரான் என்று , நாதனை நாள்தொறும்
துஞ்சும் அளவும் தொழுமின்; தொழாவிடில்,
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே.

நெஞ்சில் நிறைந்து நிற்பவன் சிவபிரான்; பேரொளிச் சுடர் ஆக நிற்பவன் சிவபிரான், அந்த நாதனை நீங்கள் நாள் தோறும் தொழுங்கள்; நீங்கள் வாழும் காலம் முழுவதும் தொழுங்கள்; அங்ஙனம் நீங்கள் தொழாது இருந்தால் உங்கள் ஐந்து பொறிகளும் கட்டறுத்துக் கொண்டு ஐந்து யானைகள் ஆகிவிடும்.

#2095. பருகுவர், ஓடுவர், பார்ப்பயன் கொள்வர்

மிருகம், மனிதர், மிக்கோர், பறவை
ஒருவர் செய்த அன்பு வைத்து உன்னாதது இல்லை ;
பருகுவர், ஓடுவர், பார்ப் பயன் கொள்வர்
திருமரு மாதவம் சேர்ந்துணர்ந் தாரே.

மிருகம், மனிதர், தேவர், பறவை என்பவர்களில் ஈசனை நேசத்துடன் நினைவில் கொள்ளாதவர்கள் எவரும் இல்லை. என்றாலும் ஞானம் பொருந்தி, மாதவம் செய்யும் முனிவர்கள் மட்டுமே சிவனை மனத்தில் எண்ணுவதுடன் நிறைவு அடையாமல் சிவ அமுதத்தைப் பருகுவர். மகிழ்வடைவர். பாரில் பிறந்த பயனைப் பெறுவர்.

#2096. நாதியே வைத்தது நாடுகின்றேனே

நீதியி லோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதியில் ஆரும் தொடர்ந்து அறிவார் இல்லை,
ஆதிபயன் என்று, அமரர்பிரான் என்ற
நாதியே வைத்தது நாடுகின் றேனே.

நேர்மை இல்லாதவர்கள் தாங்களுக்குக் கிடைத்த பொன்னையும் கூடப் போற்றி பாதுகாக்க மாட்டர்கள். அதை வீணாக்கி விடுவார்கள். அது போன்றே சோதி வடிவான பொன் போன்ற இறைவனை யாரும் தொடர்ந்து சென்று அறிந்து கொள்வதில்லை. அவனை ஆதி பயன் என்றும், அமரர் பிரான் என்றும் அறிந்து கொண்டு நான் அநாதிகாலமாக அவனை நாடுகிறேன்.

#2097. அருந்தேனை யாரும் அறியகிலரே

இருந்தேன் மலர் அளைந்து இன்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வரும்தேன் நுகராது வாய்புகு தேனை,
அருந்தேனை யாரும் அறிகிலாரே.

தேனீக்கள் மலருக்கு மலர் தாவி, அளைந்து தேனை உண்டு இன்புறும். இதைவிட இனிப்பான உயர்ந்த தேன் ஒன்று உண்டு என்பதை யாரும் அறிகிலர். வண்டுகள் அருந்தாத, தானே வலிய வந்து நம் வாயில் புகுகின்ற அந்த அருந்தேனை எவரும் அறிகிலர்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#2098 to #2101

#2098. கருத்து அறியாது கழிந்தன காலம்

கருத்து அறியாது கழிந்தன காலம்
அருத்தி உள்ளான் அமராபதி நாதன்
ஒருத்தன் உள்ளான் உலகத்து உயிர்க்கு எல்லாம்
வருத்தி நில்லாது வழுக்குகின் றாரே.

கருத்தில் இறைவனை அறிந்து கொள்ளாமல் என் காலம் கழிந்து விட்டது. அமரர்கள் தலைவனாகிய அவன் அன்பில் உறைகின்றான். இந்த உலகில் உள்ள ஜீவராசிகள் அனைவருக்கும் அவன் ஒருவனே உயிராக உள்ளான். இருந்த போதிலும் அவன் நம்மை நெருங்கி வருமாறு செய்யாமல் வீணே தவற விடுகின்றோமே!

#2099. கொதிக்கின்ற கூழில் துடுப்பு இடலாமே

குதித்து ஓடிப்போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாள்களும் வீழ்ந்து கழிந்த;
விதிர்த்து இருந்து என் செய்தீர்? ஆறுதிர் ஆகில்
கொதிக்கின்ற கூழில் துடுப்பு இடலாமே.

குதித்து ஓடுகின்றான் கூற்றுவன் உயிரைப் பறிக்க. வாணாளாக விதிக்கபட்டவைகளும் விரைந்து ஓடிக் கழிந்து விடுகின்றன. நீங்கள் விதிர்த்து நடுங்குவதால் மட்டும் ஆவது என்ன? நீங்கள் மன ஆறுதல் அடைய விரும்பினால் இதைச் செய்யுங்கள். கொதிக்கின்ற மூலாதாரத்தில் இருந்து அமுதத்தை விளைவிக்கத் உடனே துடுப்பை இடுங்கள்.

மூலாதாரத் தீயை சுழுமுனை வழியே செலுத்திச் சகசிர தளத்தை அடைந்தால் அங்கு அமுதம் விளையும். அதை அருந்தினால் நீண்ட காலம் வாழலாம்.

#2100. திரை அருகா முன்னம் சேர்ந்து இன்பம் எய்தும்

கரைஅருகு ஆறாக் கழனி விளைந்த
திரைஅரு காமுன்னம் சேர்ந்து இன்பம் எய்தும்
வரைஅருகு ஊறிய மாதவம் நோக்கின்
நரைஉருவாச் செல்லும் நாள் இலவாமே.

இடைகலை பிங்கலை என்னும் இரு கரைகளின் அருகில் சுக்கிலம் என்னும் வயல் விளைந்தது. வயது முதிர்ந்து விட்டால் அதன் வளங் குன்றி அழிந்து போகும். அதற்கு முன்னமே அதைக் கொண்டு நீங்கள் பேரின்பம் அடைய வேண்டும். குண்டலினி சக்தியை எழுப்பி மேல்முகமாகச் செலுத்திச் சிரசை அடைவித்தால் அங்கு இன்பம் விளையும். இந்த தவத்தைச் செய்தால் உங்களிடம் நரை, திரை, மூப்பு வந்து எய்தா.

#2101. அரவு அறிவார் இரவு அறிவானை அறிவார்

வரவு அறிவானை, மயங்கு இருள் ஞாலத்து
இரவு அறிவானை, யெழுஞ் சுடர்ச் சோதி
அரவு அறிவார், முன் ஒரு தெய்வம் என்று
விரவு அறியாமலே மேல்வைத்த வாறே.

உயிர்கள் உடலுடன் தோன்றும் வருகையை அவன் அறிவான். அறியாமை இருளில் உலகில் வாழ்கின்ற உயிர்கள் முடிவு அடைவதையும் அவன் அறிவான். தானே எழுந்து சுடர் விடும் பேரொளி அவன். குண்டலினி நாகத்தை எழுப்பி யோகம் பயில்பவர் இந்த தெய்வத்தை நன்றாக அறிவர். மற்றவர்கள் இந்த இறைவனை அடையும் வழியை அறியாமல், இருண்ட அறியாமையினால் உலகப் பொருட்களின் மீது ஆசை வைத்து வீணே அழிந்து போகின்றனர்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

38. இதோபதேசம்

இதம் + உபதேசம் = இதோபதேசம்
சீவனுக்கு நன்மை பயக்கும் நல்ல மொழிகளைக் கூறுதல்

#2102 to #2106

#2102. சிறந்த சிவநெறி சிந்தை செய்யீரே

மறந்தொழி மண்மிசை மன்னாப் பிறவி
இறந்தொழி காலத்தும் ஈசனை உள்கும்
பறந்தல மந்து படுந்துயர் தீர்ப்பான்
சிறந்த சிவநெறி சிந்தை செய்யீரே.

சிவனை மறக்கின்ற நமது இந்த உலக வாழ்வில் நிலை இல்லாதது நம் உடல். அதனால் வாழும் பொழுது அவனை எண்ணுங்கள். இறக்கும் காலத்தும் அவனை வணங்குங்கள்.சிறந்த சிவநெறியை மனத்தில் நிலை நிறுத்தினால், நாம் உலக வாழ்வில் அலமந்து படுந்துயரை அவன் தீர்த்து விடுவான்.

#2103. நல்ல அரனெறி நாடுமினீரே

செல்லு மளவும் செலுத்துமின் சிந்தையை
வல்ல பரிசால் உரைமின்கள் வாய்மையை
இல்லை யெனினும் பெரிதுளன் எம் இறை
நல்ல அறநெறி நாடுமி னீரே.

செலுத்த முடிந்த அளவுக்கு உமது சிந்தையைச் சிவன் மீது செலுத்துங்கள். உம்மால் முடிந்த அளவுக்கு சிவன் பெருமையைப் பேசுங்கள். ‘இறைவன் இல்லை!” என்று சிலர் கூறி வருகிறார்கள் என்றாலும் அவன் அங்கும், இங்கும், எங்கும் எப்போதும் உள்ளான். எனவே நல்ல சிவநெறியை நாடுங்கள்.

#2104. ஒன்றே குலம், ஒருவனே தேவன்

ஒன்றே குலம் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி யில்லைநுஞ் சித்தத்து
நின்றே நிலைபெற நீர் நினைந் துய்மினே.

குலம் ஒன்றே ஆகும்! நம் தேவனும் ஒருவனே ஆவான்! எப்போதும் நீங்கள் நல்லவற்றையே எண்ணுங்கள். அப்போது உமக்கு நமன் இல்லை. நீங்களாக நாணாமல் சென்று புகும் கதியும் வேறு இல்லை. உம் சித்தத்தில் இறைவனை நிலை நிறுத்தி அவனை நினைந்து நினைந்து உய்வடையுங்கள்.

#2105. கூற்று உதைத்தான் தன்னைக் கூறி உய்மினே

போற்றிசெய் அந்தண் கயிலைப் பொருப்பனை
நாற்றிசைக் கும்நடு வாய்நின்ற நம்பனை
காற்றுஇசைக் கும்கமழ் ஆக்கையைக் கைக்கொண்டு
கூற்றுஉதைத் தான்தன்னைக் கூறிநின்று உய்மினே.

அழகிய குளிர்ந்த கயிலை மலையின் நாதனை போற்றுங்கள். நான்கு திசைகளிலும் உள்ள நான்கு முகங்களின் நடுவே தன் ஈசான முகத்தினை உடையவன். அவன் நாம் நம்பாதத் தகுந்தவன். கூற்றுவனைக் காலால் உதைத்த அந்தப் பெருமானைக் காற்று இசைக்கின்ற உம் உடலைக் கொண்டு தொழுதும், துதித்தும் உய்வடையுங்கள்.

#2106. பிறவாமல் போம் வழி நாடுமின்

இக்காயம் நீக்கி இனியொரு காயத்தில்
புக்குப் பிறவாமல் போம்வழி நாடுமின்
எக்காலத் திவ்வுடல் வந்தெமக் கானதென்று
அக்கால் முன்ன அருள்பெற லாமே.

இந்த உடல் நீங்கிய பின்பு இன்னொரு உடலில் புகுந்து இந்த உலகத்தில் மீண்டும் பிறவாமல் இருக்கும் வழியை நாடுங்கள். ‘எப்போது எனக்கு இந்த உடல் கிடைத்தது?’ என்று அந்தக் காலத்தை நினைத்து ஆராய்ந்தால் ஈசன் அருள் கிடைக்கும். பிறவிப் பிணியும் நீங்கும்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#2107 to #2111

#2107. சாகின்ற போதும் தலைவனை நாடுமின்

போகின்ற வாறே புகுகின்ற அப்பொருள்
ஆகின்ற போதும் அரன்அறி வான் உளன்
சாகின்ற போதும் தலைவனை நாடுமின்
ஆகின்ற அப்பொருள் அக்கரை ஆகுமே.

உங்கள் உயிரில் புகுந்து உடலில் கலந்துள்ள இறைவன் உங்கள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் உங்களுடனேயே நடக்கின்றான். நீங்கள் மனப் பக்குவம் அடையும் காலத்தை அவன் அங்கு அறிவான். அவன் அப்போது உங்களுக்கு அருள் புரிவான். எனவே இருக்கும் காலத்தும் இறக்கும் காலத்தும் அவனை மறவாது நினைவில் கொள்ளுங்கள். பிறவிப் பெருங்கடலைக் கடந்து வீடுபேறு என்னும் அக்கரையைச் சேர அவன் உதவுவான்.

#2108. இறக்கின்ற காலத்தும் ஈசனை உள்கும்

பறக்கின்ற ஒன்று பயனுற வேண்டின்
இறக்கின்ற காலத்தும் ஈசனை யுள்கும்
சிறப்பொடு சேரும் சிவகதி பின்னைப்
பிறப்பொன் றிலாமையும் பேருல காமே.

உடலைத் துறந்து வெளியேறும் சீவன் அந்த உடலில் வாழ்ந்த பயனை அடைய விரும்பினால் இறக்கும் போதும் ஈசனைத் துதிக்க வேண்டும். அதைச் செய்தால் அந்தச் சீவனுக்குச் சிறப்பும் சிவகதியும் தாமே வந்து சேரும். பிறவியே இல்லாத பேருலக வாழ்வும் கிடைக்கும்.

#2109. நீடிய ஈற்றுப் பசு அது ஆகுமே

கூடியும் நின்று தொழுது எம் இறைவனைப்
பாடி உளே நின்று பதம் பணிமின்கள்,
ஆடிஉளே நின்று அறிவு செய்வார்கட்கு
நீடிய ஈற்றுப் பசுஅது ஆகுமே.

அடியவர்களுடன் கூடி நின்றும், தனித்து நின்றும் எம் இறைவனைத் தொழுங்கள். அவன் புகழைப் பாடி நின்று அவன் பதம் பணிமின்கள். தனக்குள்ளே ஆடி மகிழ்ந்து அவனை அறிந்து கொள்பவரை அவன் ஈன்ற பசு போலக் கனிவுடன் காப்பான்.

#2110. நடு நின்று நாடுமின் நாதன் பாதம்

விடுகின்ற சீவனார் மேலெழும் போது
நடுநின்று நாடுமின் நாதன்றன் பாதம்
கெடுகின்ற வல்வினை கேடில் புகழோன்
இடுகின்றான் உம்மை இமையவ ரோடே.

உடலைத் துறந்து சீவன் மேலே செல்லும் போது நடுநாடியில் நின்று நாதன் பாதங்களைத் தொழுங்கள்.
உங்கள் வல்வினைகள் அழிந்துபோகும். அழியாத புகழ் உடைய ஈசன் உம்மைத் தேவர்களுள் ஒரு தேவனாக ஆக்கி விடுவான்.

#2111. திருவடி அணிவார்க்கு வினை இல்லை தானே

“ஏறு உடையாய், இறைவா, எம் பிரான் ”
என்று நீறிடுவார் அடியார் நிகழ் தேவர்கள்
ஆறு அணி செஞ்சடை அண்ணல் திருவடி
வேறு அணிவார்க்கு வினைஇல்லை தானே.

“ஏறு உடையவனே! இறைவா! என் பிரானே!” என்று கூறிக் கொண்டு திரு நீற்றை அணிந்து கொள்பவர்கள் தேவர்களுக்கு ஒப்பானவர்கள். கங்கையை அணிந்த செஞ்சடைச் சிவபெருமானின் திருவடிகளைத் தனித்து இருந்து தியானிப்பவர்களுக்கு வினைகள் எதுவும் இல்லை அன்றோ?
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#2112 to #2116

#2112. எம் இறைவனை அன்புறுவீர்

இன்புறு வீரறிந் தேயெம் மிறைவனை
அன்புறு வீர்தவஞ் செய்யுமெய்ஞ் ஞானத்துப்
பண்புறு வீர்பிற வித்தொழி லேநின்று
துன்புறு பாசத் துழைத்தொழிந் தீரே.

ஓயாமல் பிறவிப் பிணியில் பிணைக்கப் பட்டுத் துன்பங்களைத் தருகின்ற பாசத்தில் உழல்பவர்களே! எம் இறைவனை நாடி இன்புறுங்கள். அவனைக் குறித்து அன்புடன் தவம் செய்வீர். அப்போது மெய்ஞ் ஞானம் பெற்று இறைவனின் தன்மையை நீங்கள் அடைவீர்கள்.

#2113. மேற்கொள்ள வல்ல மெய்த்தவம் ஒன்றுண்டு

மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவ மொன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளு மொன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்நெறி யொன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டிநின் றோர்க்கே.

உய்வடையவும், உயர்வடையவும் நீங்கள் உண்மையில் விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டிய உண்மையான தவம் ஒன்று உள்ளது. நீங்கள் அடைய வேண்டிய திருவடிகள் உள்ளன. இவற்றால் உங்களுக்குக் கிடைக்கும் மெய் நெறி ஒன்றும் உள்ளது.

#2114. கூர்ந்தவர்க்கு அங்கே குரைகழல் காட்டிடும்

சார்ந்தவர்க் கின்பம் கொடுக்கும் தழல்வண்ணன்
பேர்ந்தவர் கின்னா பிறவி கொடுத்திடும்
கூர்ந்தவர்க் கங்கே குரை கழல் காட்டிடும்
சேர்ந்தவர் தேவரைச் சென்றுணர் வாரே.

செந்தழல் வண்ணன் ஆகிய சிவபிரான் தன்னை வந்து சார்ந்தவர்களுக்கு இன்பத்தை அளிப்பான். தன்னிலிருந்து விலகிச் செல்பருக்குப் பிறவித் துன்பத்தை அளிப்பான். தன்னை இடையறாது நினைவு கூர்பவர்களுக்கு அவன் தன் திருவடிகளைக் காட்டுவான். அவனிடம் சென்று சேர்ந்தவர்கள் சென்று தேவர்களுடன் தங்குவர்.

#2115. நெய்த்தலைப் பால்போல் நிமலன் அங்குளான்

முத்தியை ஞானத்திற் முத்தமிழ் ஓசையை
எத்தனை காலம் ஏத்துவர் ஈசனை
நெய்த்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதி யதுவிரும் பாரே.

சீவனுக்கு முக்தியைத் தருபவன் ஈசன். அந்த முத்திக்கு காரணம் ஆகிய ஞானத்தைத் தருபவன் ஈசன். அந்த ஞானத்துக்குக் காரணமான முத்தமிழ் ஆக இருப்பவனும் சிவன். இத்தகைய இறைவனை பல காலம் வெளியுலகில் வணங்கி வருவர். ஆனால் பாலில் மறைந்துள்ள நெய்யைப் போல சீவனுள் மறைந்திருக்கும் சிவனை அவர்கள் கண்டு கொள்ள முயற்சி செய்வது இல்லை.

#2116. சிவமத்தை ஒன்றும் தெளியகில்லார்.

நியமத்த னாகிய நின்மலன் வைத்த
உகமெத் தனையென் றொருவரும் தேறார்
பவமத்தி லேவந்து பாய்கின்ற தல்லால்
சிவமத்தை யொன்றும் தெளிய கில்லாரே.

சீவன்கள் அனுபவிப்பதற்காக நின்மலனான ஈசன் தனு, கரணம், புவன போகங்களை நியமிக்கின்றான்.
அவன் அமைத்துள்ள காலம் எத்தனை என்பதை எவரும் அறியார். பிறவியில் வந்து அகப் பட்டுக் கொள்வதைத் தவிர ஈசனின் பெருமையையும் ஏற்றத்தையும் அவர்கள் அறிந்து கொள்வதே இல்லை.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#2117 to #2121

#2117. நஞ்சற்றவர்க்கு அன்றி நாட ஒண்ணாதே

இங்கித்தை வாழ்வு மெனத்தோர் அகிதமும்
துஞ்சொத்த காலத்துத் தூய்மணி வண்ணனை
விஞ்சத் துறையும் விகிர்தா வெனநின்னை
நஞ்சற் றவர்க்கன்றி நாடவொண் ணாதே.

இங்கு இதையே வாழ்வு என்று எண்ணிக் கொண்டு எத்தனை துன்பம் அனுபவித்தாலும், துஞ்சும் காலத்தில் ஈசனை மறவாதீர்கள். “விஞ்ஞானத்தில் உறைகின்ற விகிர்தனே!” என்று ஈசனை உள்ளம் உருகப் போற்றுங்கள். பற்றுள்ள உள்ளம் இறைவனைப் பற்றாது. எனவே உங்கள் பற்றினை அகற்றிவிட்டு இறைவனைப் பற்றுங்கள்.

#2118. செஞ்ச நிற்போரைத் தெரிசிக்கச் சித்தியே

பஞ்சமு மாம்புவி சற்குரு பால்முன்னி
வஞ்சக ரானவர் வைகி அவர்தம்மை
அஞ்சுவான் நாத னருநர கத்திடும்
செஞ்சநிற் போரைத் தெரிசிக்கச் சித்தியே.

வஞ்சகம் கொண்ட நெஞ்சினர் சற்குருவை நாடினால் அந்த நாட்டில்கடும் பஞ்சம் தோன்றும். அந்தக் கொடியவர்களைக் கண்டு ஈசனே அஞ்சுவான். அவர்களை நரகக் குழியில் சேர்ப்பான். செம்மையான சிறந்த நெறியில் நிற்கும் சிறந்தவர்களைக் காண்பது சித்தியைத் தரும்.

#2119. குருவை வழிபடில் கூடலுமாமே

சிவனை வழிபட்டா ரெண்ணி லாத் தேவர்
அவனை வழிபட்டங்கு ஆமாறொன் றில்லை
அவனை வழிபட்டங் காமாறு காட்டும்
குருவை வழிபடின் கூடலு மாமே.

எண்ணற்ற தேவர்கள் சிவனை வழிபட்டனர். ஆனாலும் அவர்கள் சிவனை வழிபட்டதால் பயன் எதுவும் விளையவில்லை. சிவனை வழிபடுவதில் சிறந்தது ஆகும் சிவனை வழிபடும் நல்ல நெறியை உபதேசிக்கும் குருவை வழிபடுவது. அவன் உதவி இவனைச் சிவனிடம் கொண்டு சேர்க்கும்.

#2120. பரம் என்றலன்றிப் பகர்வொன்று மின்றே

நரருஞ் சுரரும் பசுபாசம் நண்ணிக்
கருமங்க ளாலே கழித்தலிற் கண்டு
குருஎன் பவன்ஞானி கோதில னானால்
பரமென்ற லன்றிப் பகர்வொன்று மின்றே.

மனிதர்களும்,தேவர்களும் பாசத்தில் அகப்பட்டு பல்வேறு வினைகளைச் செய்து அதனால் அழிந்து போகின்றனர். இதைக் கண்ட பின்பு ஒருவன் செய்ய வேண்டியது என்ன? ஒரு குற்றமற்ற ஞானியைத் தன் குருவாகப் பற்றிக் கொண்டாலே போதும். “பரத்துடன் கூடி நீயும் பரம் ஆவாய்” என்று உபதேசம் செய்வதன்றி அந்த குரு செய்ய வேண்டியது எதுவும் இல்லை.

#2121. நீர்க்கின்ற செஞ்சடை நீளன்

ஆட்கொண்ட வர்தனி நாயகன் அன்புற
மேற்கொண்ட வர்வினை போயற நாடொறும்
நிற்கின்ற செஞ்சடை நீளன் உருவத்தின்
மேற்கொண்ட வாறலை வீவித் துளானே.

ஒரு குருவாக வந்து மாணவனை ஆட்கொள்பவர் ஒப்பற்ற ஈசனே ஆவார். அவர் தன் மாணவனின் வினைகள் அழியும் வண்ணம் நாள்தோறும் உபதேசிக்கிறார். அவர் நீர்மலிந்த நீள் சடையை உடைய சிவனே அன்றி வேறு எவரும் அல்ல. சிவனே மனம் இரங்கியும் கீழே இறங்கியும் வந்து மாணவனின் வருத்துகின்ற வல்வினைகளை அழித்து விடுகின்றார்.

திருமந்திரம் – ஏழாம் தந்திரம் முற்றுப் பெற்றது.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

1. உடலில் பஞ்ச பேதங்கள்
உடலில் உள்ள ஐந்து வேறுபட்ட கோசங்கள் :

1. அன்னமய கோசம்
2. பிராணமய கோசம்
3. மனோமய கோசம்
4. விஞ்ஞானமய கோசம்
5. ஆனந்தமய கோசம்

#2122 to #2126
#2122. காயப்பைக் குள்நின்ற கள்வன்

காயப்பை யொன்று சரக்கு பலவுள
மாயப்பை யொன்றுண்டு மற்றுமோர் பையுண்டு
காயப்பைக் குள்நின்ற கள்வன் புறப்பட்டால்
மாயப்பை மண்ணாய் மயங்கிய வாறே.

சீவனின் உடலில் ‘காயப்பை’ என்னும் அன்னமய கோசம் ஒன்று உண்டு. அதனுள் பலவிதமான பொருட்கள் நிரம்பி உள்ளன. காயப்பையின் உள்ளே மாயப்பை ஒன்று உண்டு. அதற்குள் வேறு ஒரு பையும் உண்டு. காயப் பைக்குள் வாழும் சீவன் என்னும் கள்வன் அதை விட்டு விட்டுப் புறப்பட்டால் பின்னர் அந்த மாயப்பை மண்ணோடு மண்ணாகி விடும்.

#2123. புரி அட்ட காயமே

அத்தன் அமைத்த உடல் இரு கூறினில்,
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த, பரிச, ரூப, ரச, கந்தம்
புத்திமான் ஆங்காரம் புரியட்ட காயமே.

நம் தலைவன் சீவனுக்கு இரண்டு உடல் கூறுகளை அமைத்துள்ளான். தூல உடல் (பரு உடல்) என்றும் சூக்கும உடல் (நுண்ணுடல்) என்றும் அவை இரண்டு வகைப்படும். தூய நுண்ணுடலில் அமைத்து உள்ளவை சத்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம். கந்தம், புத்தி , மனம், அகங்காரம் என்பவை. அதனால் அதன் பெயர் புரியட்ட காயம்.

#2124. கண்ணுதல் காணுமே

எட்டினில் ஐந்தாகும் இந்திரியங்களும்
கட்டிய மூன்றுங் கரணமு மாயிடும்
ஒட்டிய பாச முணர்வது வாகவே
கட்டி யவிழ்ந்திடும் கண்ணுதல் காணுமே.

இந்த எட்டினில் சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்ற முதல் ஐந்தும் தன்மாத்திரைகள் ஆகும் அவற்றிலிருந்து சீவனின் ஐம்பொறிகள் தோன்றும். புத்தி, மனம், அகங்காரம் என்ற மற்ற மூன்றும் அந்தக்காணங்கள் எனப்படும் உட்கருவிகள் ஆகும். இவற்றுடன் பாச உணர்வையும் கூட்டிச் சீவனைக் கட்டியும், கட்டவிழ்த்தும் கண்ணுதல் பிரான் அருள்வான்.

#2125. உடல் ஒன்று எனல் ஆமோ?

இரதம், உதிரம், இறைச்சி, தோல், மேதை,
மருவிய அத்தி, வழும்பொடு, மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மாலால், உடல் ஒன்று எனல் ஆமே.

பாழாகிய உபாதியின் காரியமான மயக்கத்தைத் தருகின்ற இந்த உடல் நிணநீர், உதிரம், இறைச்சி, தோல், மேதை, எலும்பு, வழும்பு, மச்சை சுக்கிலம் என்ற பலவற்றால் ஆனது. எனவே இந்த உடலை ‘ஒரு பொருள்’ என்று இயம்ப இயலுமா ?

#2126. யாரே அறிவார்?

ஆரே அறிவார் அடியின் பெருமையை
யாரே அறிவார் அங்கவர் நின்றதை,
யாரே அறிவார் அறுபத்தெட்டு யாக்கையை
யாரே அறிவார் அடிக்காவல் ஆனதே.

ஈசன் திருவடிகளின் பெருமையை யார் அறிவார்? சீவனின் உடலில் சிவன் உறைவதை யார் அறிவார்?
அறுபத்தெட்டுத் தத்துவங்களைக் கொண்டுள்ள இந்த உடலை யார் அறிவார்? சிவன் சீவனின் அடிக்காவலாக அதன் மூலாதாரத்தில் இருந்து காப்பதை யார் அறிவார்?

அறுபத்தெட்டுத் தத்துவங்கள்

உடல் உறுப்புகளில் பஞ்சபூதங்களின் கூறுகள் வருமாறு:

1. மண் : எலும்பு, தோல், இறைச்சி, நரம்பு, மயிர்.

2. நீர் : உதிரம், மஞ்சை, உமிழ் நீர், நிணம், விந்து.

3. தீ : பயம், கோபம், அகங்காரம், சோம்பல், உறக்கம்.

4. காற்று : போதல், வருதல், நோய்ப்படுதல், ஒடுங்குதல், தொடுதல்.

5. ஆகாயம்: ஆசை, உட்பகை, மோகம், மதம், வஞ்சனை.

6. கர்மேந்திரியங்கள் ஐந்து: வாக்கு, பாணி, பாதம்,குதம், குய்யம்

7. வாயுக்கள் பத்து :

பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன் , கூர்மன், கிரிதரன், தேவதத்தன், தனஞ்ஜயன்

8. நாடிகள் பத்து

பிங்கலை, இடைகலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை , சங்கினி, குரு.

9. வாக்குகள் நான்கு: சூக்குமை, பைசந்தி மத்திமை, வைகரி

10. ஈஷணை மூன்று

11. குணம் மூன்று: சத்துவம், ராஜசம், தாமசம்

12, தன்மாத்திரைகள் ஐந்து: சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்

13. அந்தக்கரணம் நான்கு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம்
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2127 to #2130

#2127. எண் சாண் அளவாய் எடுத்த உடம்பு

எண்சாண் அளவாய் எடுத்த உடம்புக்குள்
கண், கால், உடம்பில் கரக்கின்ற கைகளில்
புண்கள் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற
நண்பால் உடம்பு தன்னால் உடம்பு ஆகுமே.

எட்டு சாண் அளவு கொண்டது உடல். அதில் அறுபத்தெட்டு வான் கூறுகளும் மறைந்துள்ளன. கண்கள், கால்கள், கைகள் அமைந்துள்ள உடலில் பருவுடலும், நுண்ணுடலும் நண்பால் நன்றாகப் பொருந்தி ஒரே உடலாக அமைகின்றன.

#2128.பரனோடு ஒழியாப் பிரமம்

உடம்புக்கும் நாலுக்கும் உயிராய சீவன்
ஒடுங்கும் பரனோடு ஒழியாப் பிரமம்
கடந்தொறும் நின்ற கணக்கது காட்டி,
அடங்கியே அற்றது, ஆர்அறி வாரே?

பருவுடம்புக்கும், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்ற மற்ற நான்கு கோசங்களுக்கும் ஒரே உயிராக விளங்குவது சீவன். அந்த சீவன் பரத்துடன் ஒன்றி விளங்கும் சிவத்திடம் சென்று ஒடுங்கும். சிவன் சீவனில் கலந்து தொழிப்படுவது போன்றே, சீவன் ஐந்து கோசங்களுடன் கலந்து தொழிற்படும். பின்பு அவற்றை விட்டு நீங்கும். இந்த விந்தை முறைகளை யார் அறிவாரோ?

#2129. ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே

ஆறு அந்தம் ஆகி நடுவுடன் கூடினால்
தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும்
கூறும் கலைகள் பதினெட்டும் கூடியே
ஊறும் உடம்பை உயிருடம்பு எண்ணுமே.

உடலின் ஆறு ஆதாரங்களும் நடுநாடியால் இணைக்கப்பட்டால் அப்போது பத்து வாயுக்களும் புரியட்ட காயத்தில் உள்ள எட்டும் நன்கு இணைந்து பதினெட்டுக் கலைகள் அமையும். இந்த பதினெட்டுக் கலைகள் சேர்ந்ததே சீவன். அதுவே அந்த பரிச உணர்வுடன் கூடி இருக்கும் இந்தப் பருவுடலை வழி நடத்துகின்றது.

#2130. ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே

மெய்யினில் தூலம் மிகுந்த முகத்தையும்
பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும்
கையினில் துல்லியம் காட்டும் உடலையும்
ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே.

கண்களால் காணமுடிகின்ற இந்தப் பருவுடலும், கண்களுக்குத் தெரியாது பொய்யாக மறைந்துள்ள சூக்கும உடலும், நுண்ணிய தூய காரண உடலும், ஐயன் திருவடிகளில் சென்று அடங்குபவையே.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2131 to #2134

#2131. ஏயுமவர் என்ன ஏய்ந்திடும் காயமே

காயும் கடும்பரி கால்வைத்து வாங்கல் போல்
சேய இடம் அண்மை செல்லவும் வல்லது
காய துகிர் போர்வை ஒன்று விட்டு, ஆங்கு ஒன்று இட்டு
ஏயுமவர் என்னஏய்ந்திடும் காயமே.

போர்ப் பயிற்சி பெற்ற ஒரு குதிரை மிகுந்த வேகத்துடன் பாய வல்லது. அது வேகமாக மீண்டு வரவும் வல்லது. அது போன்றே சீவனின் நுண்ணுடல் தொலைவுக்குச் செல்லவும் வல்லது. அங்கிருந்து மீண்டு வரவும் வல்லது. ஆடைகளை மாற்றி மாற்றி அணிந்து கொள்வதால், ஒருவரின் உடலுக்கு ஒரு தீங்கும் ஏற்படுவதில்லை. அது போன்றே செல்வதாலும், மீள்வதாலும் நுண்ணுடலுக்கு எந்தத் தீங்கும் வாராது.

#2132. ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே

நாகம் உடல் உரி போலும், நல் அண்டசம்
ஆக, நனாவில் கனா மறந்தது போலும்
ஆகும் அரன் – அருளாலே சென்று அங்கங்கு
ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே.

ஒரு நாகம் தான் உரித்த தோலை விட்டு விட்டுப் புதிய தோலுடன் செல்வதைப் போலவும், ஒரு முட்டையில் இருக்கும் கரு குஞ்சாக உருமாறி வெளியே வந்து தொடர்ந்து வாழ்வதைப் போலவும், மனிதர்கள் கனவை மறந்து விட்டு நனவில் வாழ்வைத் தொடர்வது போலவும், உயிர் உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் வேறு ஒரு வாழ்வைத் தொடரும். அது தன் வாழ்வின் வினைப்பயன்களுக்கு ஏற்பச் சொர்க்கத்தில் இன்பமோ, அல்லது நரகத்தில் துன்பமோ அனுபவிக்கும்.

#2133. பரகாய யோகிபோல் பிண்டமெடுக்கும்

உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன
கண்டு விடுஞ் சூக்கங் காரண மாச்செலப்பு
பண்டு தொடரப் பரகாய யோகிபோல்
பிண்ட மெடுக்கும் பிறப்பிறப் பெய்தியே.

நரகத்திலோ அல்லது சுவர்க்கத்திலோ சீவன் தன் நுண்ணுடலுடன் இருந்து கொண்டு தன் முன்வினைப் பயன்களை உண்ட பிறகு; மீண்டும் உலகில் ஒரு புதிய பிறவி எடுக்கும். திறமை மிகுந்த ஒரு பரகாய யோகி ஓர் உடல் விட்டு இன்னொரு உடலுக்குத் தாவுவதைப் போல் மீண்டும் உலகில் வந்து பிறக்கும்.

#2134. வினைக் கெய்துமிடம் செல்லும்

தானவ னாகிய தற்பரம் தாங்கினோன்
ஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும்
ஏனை உயிர்வினைக் கெய்து மிடம்சென்று
வானு நிலனும் புகுந்து வருந்துமே.

“தானே அவன்! அவனே தான்!” என்ற மேலான உண்மையைத் தம் அனுபவத்தில் கண்டு கொண்ட ஞானியர் இயல்பான இந்தப் போக்கில் இருந்து மாறிப் பரமம் என்ற மேலான நிலையைச் சென்று அடைவர். மற்றவர்கள் அவரவர் வினைகளுக்கு எற்ப மீண்டும் உடல் எடுத்துத் துன்பத்தில் உழல்வர்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2135 to #2138

#2135. ஞானிக்கு காயம் சிவமே தனுவாகும்

ஞானிக்கு காயம் சிவமே தனுவாகும்
ஞானிக்கு காயம் உடம்பே அதுவாகும்
மேல் நிற்கும் காயமே விந்துவும் நாதமும்
மோனிக்கு காயம்முப் பாழ்கெட்ட முத்தியே.

சிவனையே எண்ணி இருப்பதால் ஒரு ஞானியின் உடல் சிவம் ஆகிவிடும். உடலின் தொழில்களைத் துறந்து விட்டதால் ஞானியின் உடல் சிவனுடையது ஆகிவிடும். சிரசின் உச்சியைச் சிந்தித்து இருக்கும் ஞானிக்கு விந்துவும், நாதமும் உடலாகும். பிரணவத்தை அறிந்து கொண்டு மோனத்தில் ஆழ்ந்துவிட்ட ஞானி, ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களும் கெட சிவ சாயுச்சியத்தைச் சென்று அடைவார்.

#2136. மெய்ஞ் ஞானத்தோர்க்குச் சிவதனு மேவுமே

விஞ்ஞானத்தோர்க்கு ஆணவமே மிகுதனு;
எஞ்ஞானத்தோர்க்குத் தனுமாயை தான் என்ப;
அஞ்ஞானத்தோர்க்குக் கன்மம் தனுஆகும்;
மெய்ஞ்ஞானத்தோர்க்குச் சிவதனு மேவுமே.

தெளிந்த அறிவைப் பெற்ற, ஒரு மலம் உடைய விஞ்ஞானகலருக்கு ஆணவமே உடல் ஆகும்.
அறிவைப் பெற்று வருகின்ற, இரு மலம் உடைய பிரளயாகலருக்கு மாயையே உடல் ஆகும்.
அஞ்ஞானத்துடன் பொருந்தி மூன்று மலமும் கொண்ட சகலருக்கு கன்மமே உடல் ஆகும்.
மும்மலங்களையும் அழித்து விட்ட மெய்ஞானிக்கு அகண்ட சிவமே உடலாக அமையும்.

#2137. நலமென்று இதனை நாடி இருந்தால்…

மலமென் றுடம்பை மதியாத ஊமர்
தலமென்று வேறு தரித்தமை கண்டீர்
நலமென் றிதனையே நாடி யிருக்கின்
பலமுள்ள காயத்தில் பற்றுமிவ் வண்டத்தே.

“இந்த உடல் மலத்தால் ஆனது!” என்று எண்ணி அதை ஒதுக்கிவிட வேண்டும். அவ்வாறு செய்யாமல் அதையே நல்ல தலம் என்று எண்ணி இன்பத்துடன் உடலைத் தரித்துக் கொண்டால், மேலும் உடலில் விளையும் நன்மைகளையே நாடிக்கொண்டு இருந்தால், அந்தப் பற்றின் காரணமாக மீண்டும் மீண்டும் ஒருவனுக்குப் பிறவிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

#2138. மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே

நல்ல வசனத்து வாக்கு மனாதிகள்
மெல்ல விளையாடும் விமல னகத்திலே
அல்ல செவிசத்த மாதி மனத்தையும்
மெல்லத் தரித்தார் முகத்தார் பசித்தே.

நல்ல மொழி, நல்ல வாக்கு, நல்ல மனம் போன்றவற்றைக் கொண்டவர்களின் உள்ளத்தில் சிவன் மெல்ல மெல்ல விளங்கத் தொடங்குவான். அங்ஙனம் இல்லாமல் தீய மொழி, தீய வாக்கு, தீய மனம், போன்றவற்றை உடையவர்ளின் உள்ளத்தில் சிவன் பிரகாசம் அடையாததால் அவர்கள் முக வாட்டத்துடன் உலகத்தில் வலம் வருவர்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

2. உடல் விடல்
உடலைப் பற்றிய நினைவுகளை விட்டு விடுதல்

#2139 to #2141

#2139. அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே

பண்ணாரும் காமம் பயிலும் வசனமும்
விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும்
புண்ணாம் முடலில் பொருந்து மனத்தையும்
அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே.

இன்பம் தருகின்ற காமத்தை உண்டாக்கும் இனிய பேச்சு, வான் கூற்றில் செல்கின்ற பிராணன் , அங்கு உண்டாகும் ஓசை, புண்ணாகும் உடலில் பொருந்தும் மனம் இவற்றைச் சிரசின் மீது நிலை பெறச் செய்தால் அப்போது உடல் பற்றிய உணர்வு மறைந்து போய்விடும்.

#2140. ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே

அழிகின்ற வோருடம் பாகுஞ் செவிகண்
கழிகின்ற காலவ் விரதங்கள் தானம்
மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி
ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை யில்லையே.

அழியும் தன்மை உடைய உடம்பில் உள்ள செவி கண் போன்ற உறுப்புக்களும் அழியும் தன்மை கொண்டவை. காலத்தில் செய்த விரதங்கள், தானங்கள், நான்கு வித வாக்குகள், உடலின் நாடிகள் என்ற எல்லாம் அப்போது அழிந்து விடும். அழியும் உடலுக்கு இவைகள் நல்ல துணையாக ஆகா!

#2141. சித்தம் சிவனுக்கே

இலையாய மிடையி லெழுகின்ற காமம்
முலைவாய நெஞ்சத்து மூழ்கு முளைத்துத்
தலையாய மின்னுடல் தாங்கித் திரியும்
சிலையாய சித்தம் சிவமுன் னிடைக்கே.

அரச இலை போன்று அழகான வடிவுடன் விளங்கும் பெண்ணின் இடையை நோக்கியதால் எழுகின்ற காமம், அழகிய தனங்கள் பொருந்திய பெண்ணின் மார்பில் மூழ்கினாலும் இறுதியில் வருத்தம் அடையும். ஆனால் மலை போன்று நிலை கலங்காது சிவன் மீது சித்தம் தங்கி நிற்குமானால் ஒருவன் சிறந்த ஒளி உடல் பெற்று உலகில் திரியலாம்
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

3. அவத்தை பேதம்

அவத்தை = நிலை

பேதம் = வேறுபாடுகள்

சீவன் உடலில் வாழும்போது அடைகின்ற ஐந்து வெவ்வேறு நிலைகள் இவை

1. சாக்கிரம் = விழிப்பு நிலை

2. சொப்பனம் = கனவு நிலை

3. சுழுத்தி = ஆழ்ந்த உறக்கம்

4. துரியம் = பேருறக்கம்

5. துரியாதீதம் = உயிர்ப்பு அடங்கிய நிலை

சாக்கிரத்திலிருந்து துரியாதீதம் செல்வது கீழாலவத்தை

#2142 to #2146

#2142. மெய் கண்டவன் உந்தி துரியமே

ஐயைந்து மத்திமை யானது சாக்கிரம்
கைகண்ட பன்னான்கிற் கண்டம் கனாஎன்பர்
பொய்கண் டிலாத புருடனித யம்சுழுமுனை
மெய்கண்ட வனுந்தி யாகும் துரியமே.

விழிப்பு நிலையில் சீவன் புருவ மத்தியில் இருபத்து ஐந்து கருவிகளுடன் நிலை கொண்டிருக்கும். கனவு நிலையில் சீவன் கழுத்தில் பதினான்கு கருவிகளுடன் நிலை கொண்டிருக்கும். சீவன் இதயத்தில் நிலை பெற்றுள்ள போது உறக்க நிலை ஏற்படும். ஆன்மா உந்தியில் பொருந்தி நிற்கும் போது துரிய நிலை ஏற்படும்.

சாக்கிரத்துக்கு உரிய 25 கருவிகள்:

1. ஞானேந்திரியங்கள் …………….5
2. கர்மேந்திரியங்கள்………………5
3. வாயுக்கள்………………….10
4. அந்தக்கரணங்கள்………………4
5. புருடன்……………………1

கனவு நிலைக்கு உரிய 14 கருவிகள்:

1. வாயுக்கள்………………….10
2. அந்தக்கரணங்கள்………………4

சுழுத்தி நிலையில் பிராணவாயு, சித்தம் இரண்டும் இயங்கும்.

துரிய நிலையில் இயங்கும் ஒரே கருவி பிராணன் மட்டுமே.

#2143. முப்பத்தாறு தத்துவங்கள்

முப்பதோடு ஆறில் முதல் நனா ஐயைந்தாகச்
செப்புஅதின் நான்காய் திகழ்ந்தது இரண்டு ஒன்று ஆகி
அப்பதி யாகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம் ஈறாய்த் தேர்ந்து கொள்வீரே.

சாக்கிர நிலையில் முப்பத்தாறு தத்துவங்களுடன் சிவ தத்துவம் ஐந்தாகும். கனவு நிலையில் அது நான்காகும். துரியத்தில் அது இரண்டாகும். துரியாதீதத்தில் ஒன்று ஆகும். சுத்த வித்தை முதல் சிவன் ஈறாக அமைவது இவ்வாறே.

#2144. சாக்கிர அவத்தை

இந்தியம் ஈர்ஐந்து, ஈர் ஐந்து மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும்
அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்த அச்சாக்கிரப் பாலது ஆகுமே.

ஞான இந்திரியங்கள் ஐந்து + கர்ம இந்திரியங்கள் ஐந்து + தன்மாத்திரைகள் பத்து + வாயுக்கள் பத்து + அந்தக் கரணங்கள் நான்கு + ஆன்மா என்ற முப்பது ஐந்து கருவிகளும் சீவனைப் பந்தப் படுத்துகின்ற சாக்கிரத நிலையில் உள்ள கருவிகள்.

#2145. ஐம்பெரும் பூதங்களின் நிறங்கள்

பாராது பன்மை பசுமை யுடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதங் கறுப்பை யுடையது
வானகம் தூம மறைந்து நின்றாரே.

மண் பசும் பொன் நிறம் உடையது. நீர் வெண்ணிறம் கொண்டது. தீயின் நிறம் சிவப்பு. மேகம் போன்ற கரிய நிறம் கொண்டது காற்று. வானம் புகையின் நிறம் கொண்டது. இந்த நிறங்களில் ஐம் பெரும் பூதங்கள் இருக்கும்.

#2146. தொண்ணூற்றாறு கருவிகள்

பூதங்கள் ஐந்தும், பொறிவை ஐயைந்துளும்
ஏதம் படஞ் செய்து இருந்த புறநிலை
ஓதும் மலம் குணம் ஆகும் ஆதாரமோடு
ஆதி அவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.

ஐந்து பூதங்கள், ஐந்து பொறிகள், புறக் கருவிகள், இவற்றுடன் மும்மலம் முக்குணம் கலந்து விளைகின்ற தொண்ணூற்றாறு கருவிகள் சாக்கிர அவத்தைக்கு உரியன.

அறுபத்தெட்டுத் தத்துவங்கள்

உடல் உறுப்புகளில் பஞ்சபூதங்களின் கூறுகள் வருமாறு:

1. மண் : எலும்பு, தோல், இறைச்சி, நரம்பு, மயிர்.

2. நீர் : உதிரம், மஞ்சை, உமிழ் நீர், நிணம், விந்து.

3. தீ : பயம், கோபம், அகங்காரம், சோம்பல், உறக்கம்.

4. காற்று : போதல், வருதல், நோய்ப்படுதல், ஒடுங்குதல், தொடுதல்.

5. ஆகாயம்: ஆசை, உட்பகை, மோகம், மதம், வஞ்சனை.

6. கர்மேந்திரியங்கள் ஐந்து: வாக்கு, பாணி, பாதம்,குதம், குய்யம்

7. வாயுக்கள் பத்து :

பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன் , கூர்மன், கிரிதரன், தேவதத்தன் , தனஞ்ஜயன்

8. நாடிகள் பத்து

பிங்கலை, இடைகலை, சுழுமுனை, சிகுவை, காந்தாரி, புருடன், அத்தி, அலம்புடை , சங்கினி, குரு.

9. வாக்குகள் நான்கு: சூக்குமை, பைசந்தி மத்திமை, வைகரி

10. ஈஷணை மூன்று

11. குணம் மூன்று: சத்துவம், ராஜசம், தாமசம்

12, தன்மாத்திரைகள் ஐந்து: சப்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம்

13. அந்தக்கரணம் நான்கு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம்

These are some of the very important verses with many important details.
Learn them thoroughly and also note down their numbers for future reference.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2147 to #2151

#2147. அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே

இடவகை சொல்லில், இருபத்தைஞ்சு ஆனை,
படுபர சேனையும், பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர்
அடைய நெடுங்கதை ஐந்தொடு நான்கே.

சாக்கிரத நிலையில் ஆன்ம தத்துவங்கள் என்கின்ற இருபத்து ஐந்து யானைகளும், வசனம் ஆகிய காலாட்படையும், சத்தம் முதலிய ஐந்து பாய்ந்து செல்லும் குதிரைகளும் புருடனுடன் சேர்ந்து முப்பத்தாறும் புருவ மத்தியில் பொருந்தும். வாக்குக்கள் சென்று அடையும் நீண்ட வாயில்கள் ஒன்பது.

#2148. மடம் புகு நாய் போல் மயங்குவர்

உடம்பு முடம்பு முடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போ டுயிரிடை நட்பறி யாதவர்
மடம்புகு நாய்போல் மரைந்து நின்றாரே.

பருவுடல், நுண்ணுடல், காரண உடல் என்ற மூன்றும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்டு ஒன்றாக இருக்கின்றன. ஆயினும் அவை உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொள்வதில்லை. பிராணனின் இயக்கம் பருவுடலுக்கு மட்டுமே உள்ளது. அறிவு நுண்ணுடலில் சென்று படிந்துவிட்டால் பருவுடலின் தொழில் கெடும். அதை அறியாதவர் மடத்தில் புகுந்த நாய் வெளியேற வழி தெரியாமல் மயங்குவது போல பருஉடலைக் கடக்க வழி தெரியாமல் மயங்கி நிற்பர்.

#2149. உடல் ஒழியாது

இருக்கின்றவாறு ஒன்று அறிகிலர் ஏழைகள்
முருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக் கொண்டு காமாரி சாரமுகம் தேர்ந்து,
உருக் கொண்டு தொக்க உடல் ஒழியாதே.

அறிவிலிகள் அழியும் தங்கள் உடலை அழியாமல் நெடுநாள் காப்பாற்றி வைக்கும் முறையினை அறிய மாட்டார்கள். உள்முகம் வெளிமுகமாக இயங்குகின்ற பிராணவாயு அபான வாயுக்களின் போக்கை மாற்றி அவற்றை உள்முகமாக அமைக்க வேண்டும். விந்துவை வெற்றி பெறச் செய்ய வேண்டும். சுழுமுனை வழியே மேலேசென்று சிவத்தை அடைய வேண்டும். இங்கனம் செய்து ஒளியுடல் பெற்று விட்டால் அது அழியாமல் நிலைத்து இருக்கும்.

#2150. அளித்தான் என்னுள்ளே ஆரியன் வந்து

ஒளித்திட்டு இருக்கும் ஒருபதி னாலை
அளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்கும் கலைகளின் நாலாறு பத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.

அகரக் கலை நாபியில் அடங்கியுள்ளது. அது மாறி மாறி மேம்பாட்டு உடலைக் கடந்து விளங்கும் அனாசிருதை என்னும் பதினான்காவது கலையாக மாறிவிடும். இந்த விந்தையை எனக்கு உள்ளே உள்ள சிவன் எனக்கு அறிவித்தான். உடலின் அறுபது தத்துவங்களையும் சிவன் ஒடுங்கிய என் சித்தத்தில் ஒளித்து வைத்தான்.

#2151. பூத சயம் மேல் நோக்கிச் செல்துத்தினால்

மண்ணினில் ஒன்றும் மலர் நீரும் மருங்கு ஆகும்;
பொன்னினில் அங்கி புகல் வளி ஆகாசம்
மன்னும் மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய்
உன்னி முடிந்தது ஒரு பூத செயமே.

மண் தத்துவம் ஆகிய சுவாதிட்டானத்துக்கு அருகில் நீர் தத்துவம் ஆகிய மணிபூரகம் அமைத்துள்ளது. மூலாதாரத்தில் பொன்னின் நிறத்தில் ஒளிர்கின்ற நெருப்பு உள்ளது. மூல வாயவை எழுப்பி மேல் நோக்கிச் செலுத்தினால் அது காற்றுத் தத்துவம், ஆகாயத் தத்துவம் இவற்றுடன் சென்று பொருந்தும். மனம், புத்தி, அகங்காரம் இவற்றைப் பற்றி எண்ணி அவற்றையும் கடந்து சென்றால் அப்போது ஐம் பெரும் பூதங்களை வெற்றி கொள்ள முடியும்.
 
#2152 to #2156

#2152. கன்னியைக் கன்னியே காதலித்தாளே

முன்னிக் கொருமகன் மூர்த்திக் கிருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்மு னாளில்லை
கன்னியைக் கன்னியே காதலித்தானே.

முதல் பூதமாகிய வானுக்கு ஓசை என்னும் ஒரு மகன் உண்டு.
வானிலிருந்து தோன்றிய காற்றுக்கு ஓசை, ஊறு என்ற இரண்டு மகன்கள் உண்டு.
காற்றிலிருந்து தோன்றிய தீக்கு ஓசை. ஊறு , உருவம் என்னும் மூன்று மகன்கள்.
தீயிலிருந்து தோன்றிய நீருக்கு ஓசை, ஊறு, உருவம், சுவை என்ற நான்கு மகன்கள்.
நீரிலிருந்து தோன்றிய நிலத்துக்கு ஓசை, ஊறு, உருவம், சுவை, நாற்றம் என்ற ஐந்து மகன்கள்.
முதலில் சிவனுக்கும் சக்திக்கும் இந்தப் பிள்ளைகள் இருக்கவில்லை. பிரபஞ்சத்தைப் படைக்க
விரும்பிய போது சக்தியே ஐம் பெரும் பூதங்களாகவும், அவற்றைலிருந்து வேறாகவும் நின்றாள்.

#2153. அண்டமும் தானாய் அமர்ந்து நின்றான்

கண்டன ஐந்தும் கலந்தன தான் ஐந்தும் சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டையது ஆகிப் பரந்த வியாக்கிரத்து
அண்டமும் தானாய் அமர்ந்து நின்றானே.

கனவு நிலையில் ஐம்பொறிகளால் சீவன் அனுபவித்து உணர்ந்தவைகளும், ஐந்து கர்மேந்திரியங்களும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற பதிநான்கும் ஒன்றாகி நிற்கும். சீவன் விழிப்பு நிலையை அடைந்தவுடன் மீண்டும் உலகமே தானாக ஆன்மா நிற்கும்.

#2154. கனவு நிலை

நின்றவ னிற்பப் பதினாலிற் பத்துநீத்து
ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.

கனவு நிலையில் இருப்பவன் தன்னுடைய ஞான இந்திரியங்கள், கர்ம இந்திரியங்கள் என்னும் பத்து இந்திரியங்களையும் விட்டுவிடுவான். இப்போது இருப்பது நான்கு அந்தக் கரணங்கள் மட்டுமே. உலக வாழ்வில் தான் அனுபவித்தவற்றை அவன் ஒளிமயமாகக் கழுத்துக்கு மேலே கனவாகக் காண்பான்.

#2155. மேனி அழிந்து சுழுத்தி ஆகும்

தானம் இழந்து, தனிப்புக்கு இதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மால் ஆகி
ஆன விரிவு அறியாஅவ் விதயத்தின்
மேனி அழிந்து சுழுத்தியது ஆமே.

கழுத்தைத் தானமாகக் கொண்டிருந்த ஆன்மா, இப்போது தனியே சென்று இதயத்தில் புகுந்து கொள்ளும். மானம், புத்தி, அகங்காரம் என்ற மூன்றும் அழிந்து விட்டதால் ஒன்றையும் அறிய முடியாத மயக்க நிலையில் உடல் தன்வசம் இழந்து இருப்பது சுழுத்தி என்னும் ஆழ்ந்த உறக்க நிலை ஆகும்.

#2156. விழுமாய் பொருளுடன் மேவி நின்றான்

சுழுமுனைச் சேர்ந்துள்ள மூன்றுடன் சாட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தி னுள்ளே யிருந்து
விழுமப் பொருளுடன் மேவிநின் றானே.

உறக்க நிலையில் இதயத்தில் புகுந்துள்ள ஆன்மாவுடன் சேர்ந்து கொண்டு பிராணன், சித்தம் என்னும் இரண்டும் தொழிற்படும். சித்தம், பிராணன் இவற்றின் அறிவும் நீங்கிய பின்பு ஆன்மா உந்தியில் மூலப் பிரகிருதி என்ற விழுமப் பொருளுடன் பொருந்தி நிற்கும். இதுவே துரிய நிலை ஆகும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2157 to #2161

#2157. ஊமன் நின்றான்

தானத்து எழுந்து தருக்கும் துரியத்தின்
வானத்து எழுந்து போய் வையம் பிறகிட்டுக்
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தை இட்டு, ஊமன் நின்றானே.

துரியத்தின் நாபித் தானத்தில் இருந்து எழுந்து துரியாதீதம் என்ற வானத்துக்குள் ஆன்மா புகும். ஆன்மாவுக்கு அப்போது உலக நினைவுகள் எல்லாம் ஒழிந்து விடும். ஆன்மா உந்தியில் இருந்து எழுகின்ற நாதத்தில் ஏறி மேலே செல்லும் போது அதன் பிறவியுடன் இணைந்து வந்த அவித்தை என்னும் அறியாமை அகன்று விடும். மௌன நிலையை ஆன்மா அடைந்து ஊமை போல் ஆகி விடும்.

#2158. ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும்

ஊமை எழுத்தொடு பேசும் எழுத்து உறில்
ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓமயம் உற்றது;உள்ளொளி பெற்றது;
நாம்மயம் அற்றது; நாம்அறி யோமே.

பேசமுடியாத ஊமை எழுத்தாகிய ‘ம்’ என்பதுடன் பேசிக் கூடிய எழுத்துக்கள் ஆகிய அகார உகாரங்கள் பொருந்தினால் “ஓம்” என்னும் பிரணவம் தோன்றும். அதனால் ஆமையயின் ஐந்து உறுப்புக்களும் அதன் அகத்தினில் ஒடுங்குவது போன்றே ஐம்பொறிகளும் தத்தம் தொழில்களை விடுத்து அடங்கி விடும். ஆன்மா ‘ஓம்’ மயம் ஆகும் போது உள்ளொளி பெருகும். ‘நான்’ என்னும் அகங்காரம் முற்றிலும் அழிந்து படும். அதனை நாம் அறிய மாட்டோம்.

#2159. துரியம் இறந்த இடம் சொல்ல ஒண்ணாதே

துரியம் இருப்பதும் சாக்கிரத்துள்ளே
நரிகள் பதினாலும் நஞ்சுஉண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது;
துரியம் இறந்த இடம் சொல்ல ஒண்ணாதே.

பிரணவ யோகிகளின் துரியம் நிர்மலமான சாக்கிரம் ஆகும். அந்த நிலையில் இந்திரியங்கள் பத்தும் அந்தக்கரணங்கள் நான்கும் தொழில் படாமல் அடங்கி விடும். வேகமான மூலவாயு பரியினைப் போல பாய்ந்து சென்று வான் கூற்றை அடையும். துரியாதீத நிலையைப் பற்றிக் கூறுவதும் அரிது!

#2160. ஆறாத வல்வினையால் அடியுண்ணுமே

மாறா மலம் ஐந்தால் மன்னும் அவத்தையின்
வேறாய மாய தனு, கரண ஆதிக்கு இங்கு
ஈறு ஆகாதே எவ்வுயிரும் பிறந்து இறந்து,
ஆறாத வல்வினையால் அடியு ண்ணுமே.

பக்குவம் அடையும் வரையில் எல்லா சீவன்களிடமும் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்னும் ஐந்து மலங்கள் மாறாமல் குடி கொண்டு இருக்கும். மாயையால் விளைகின்ற உடல்கள், கருவிகள் இவற்றுக்கு ஓர் எல்லையே இல்லை. எல்லா சீவன்களுமே பிறவி, மரணம் என்ற இரண்டிலும் அகப்பட்டுக் கொண்டு வல்லமை வாய்ந்த வினையால் வருந்திய வண்ணமே இருக்கும்.

#2161. எண்ணுறு ஞானத்து நேர் முத்தி எய்தும்

உண்ணுந்தன் னூடாடா தூட்டிடு மாயையும்
அண்ண லருள் பெற்ற முத்திய தாவது
நண்ண லிலாவுயிர் ஞானத்தி னால்பிறந்து
எண்ணுறு ஞானத்தின் நேர்முத்தி யெய்துமே.

சீவனுக்கு வினைப் பயன்களை நுகர்விக்கும் மாயை, அந்தச் சீவனை இடையறாது மாற்றி மாற்றி இந்த அவத்தைகளில் வைத்திருக்கும். இதுவும் அந்த சீவன் அண்ணலின் அருள் பெற்று வருந்தாமல் வீடு பேற்றினை அடைவதற்கே. ஞானத்தில் பிறந்த சீவனை மாயை நெருங்குவது இல்லை. சிவனையே எண்ணிப் பெறும் ஞானத்தால் அந்த சீவன் நேராக முக்தி அடைந்து விடும்.
 
திருமந்திரம் - எட்டாம் தந்திரம்

#2162 to #2166

#2162. ஐயவத்தைப் படுவானே

அதிமூட நித்திரை, ஆணவம் நந்த,
அதனால் உணர்வோன் அருங் கன்மம் முன்னித்
திதமான கேவலம் இத்திறம் சென்று
பரம் ஆகா ஐஅவத் தைப்படு வானே.

அனாதி கேவல நிலையில் சீவனுக்குக் கருவிகளும் கரணங்களும் இருப்பதில்லை. அப்போது முதலில் ஆணவம் செயல் படத் தொடங்கும். அதன் பின்னர் உணர்வுகள் செயல்படத் தொடங்கும்.
சீவன் செயல்களை செய்யத் தொடங்குவான். கேவல நிலையில் இருந்து பரம் என்னும் நிலையை அடையும் வரை சீவன் இந்த அவத்தைகளில் இருந்து தப்ப முடியாது.

#2163. ஏசாத மாயாள் தன்னாலே எழுப்புமே

ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டா லெழுப்பும் செயல்போல்
நேசாய வீசனு நீடுஆண வத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே யெழுப்புமே.

ஆசான் தன் முன்னிலையில் உறங்குகின்ற மாணவனைப் பிரம்பால் அடித்து எழுப்பி விடுவார். அது போன்றே அனாதி காலமாக ஆணவமலத்தில் உறங்கிக் கிடைக்கும் சீவனைச் சிவபிரான் சுத்த மாயை என்னும் ஒளிவீசும் பிரம்பினால் அடித்து எழுப்பி விடுவான்.

#2164. இவ்வுடல் அஞ்சுணும் மன்னன் போமளவே

மஞ்சொடு, மந்தா கினிகுடம் ஆம்என
விஞ்சுஅறிவு இல்லோன் விளிம்பும் மிகுமதி
எஞ்சல்இல் ஒன்று எனு மாறுஎன இவ்வுடல்
அஞ்சுணும், மன்னன் அன்றே போமளவே.

வான் கங்கையின் நீர் ஒரு குடத்தின் அளவே என்று கூறுவது ஓர் அறிவில்லாதவன் அறிவுள்ளவன் போலச் சொல்லும் சொற்கள் ஆகும்.’ குறைவில்லாத இறைவனும் குறைகள் மலிந்த சீவனும் ஒன்று!” என்று கூறுவதற்கு மாறாகச் சீவன் பக்குவம் அடைந்து சிவனுடன் சென்று பொருந்தும் வரையில் இந்த ஐந்து அவத்தைகளுக்கு ஆட்பட்டு நிற்கும்.

#2165. துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே

படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாநகர் தான்வரும் போது
.அடியுடை யைவரும் அங்குறை வோரும்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.

நிலத் தத்துவத்தைத் தன் இடமாகக் கொண்டவன் சீவன். அவன் மூல வாயுவில் ஏறி அழகிய ஊர்த்துவ சகசிரதளத்தை அடையும் போது சீவனின் ஐந்து பொறிகளும், அவற்றுடன் உடலில் இருக்கும் அத்தனை தத்துவங்களும் உறங்கிப் போய்விடும்.

#2166. நேரம் பரத்துடன் நிற்பது நித்தமே

நேரா மலத்தை நீடைந் தவத்தையின்
நேரான வாறுன்னி நீடு நனவில்
நேரா மலமைந்து நேரே தரிசித்து
நேராம் பரத்துட னிற்பது நித்தமே.

மலங்கள் பல நிறங்களுடன் சீவனின் நுண்ணுடலைப் பற்றி நிற்பவை. இவை புறக் கண்களுக்குப் புலப்படாதவை. இவைகள் சுத்த அவத்தையில் புலப்படுமாறு அந்த மலக் குற்றத்தின் காரணங்களை சீவன் ஆராய வேண்டும். அப்போது நின்மல சாக்கிர நிலையில் ஐந்து மலங்களையும் சீவன் காட்சியில் காண முடியும். தன் முகத்துக்கு முன்பு காணப்படும் சிவனுடன் சீவன் பிரியாமல் பொருந்தி நிற்பதே சீவன் பக்குவம் அடைந்தத்தின் பயன் ஆகும்.
 
Back
Top