• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

6. ஞான லிங்கம்

ஞான லிங்கம் = உணர்வே சிவமாவது

#1763. “தருக!” என நல்குவான்!

உருவும் அருவும் உருவோடு அருவும்
மருவும் பரசிவன் மன்பல் லுயிர்க்கும்
குருவும் என நிற்கும் கொள்கையன் ஆகும்
தருஎன நல்கும் சதாசிவன் தானே.

சதாசிவன் உருவம், அருவம், அருவுருவம் என்னும் மூன்று வகைப்பட்ட திரு மேனிகளையும் தனதாக உடையவன். பல உயிர்களுக்கும் குருவாகும் உயர்ந்த கொள்கை உடையவன். கற்பகத் தருவினைப் போலச் சதாசிவனும் வேண்டுபவர்களுக்கு அவர்கள் வேண்டியவற்றை அளிக்கும் அருள் படைத்தவன்.

#1764. ஒன்பது நிலைகளும் பரசிவனே!

நாலான கீழ துருவ நடுநிற்க
மேலான நான்கு மருவு மிகநாப்பண்
நாலான வொன்று மறுவுரு நண்ணலால்
பாலா மிவையாம் பரசிவன் தானே.

சதாசிவனுக்குக் கீழே உள்ள நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன் என்னும் நான்கு தெய்வங்களும் உருவம் உடையவர்கள். சதாசிவனுக்கு மேலே உள்ள நாதம், விந்து, சக்தி, சிவன் என்னும் நான்கும் அருவமானவை. இவற்றின் நடுவே அமைந்த சதாசிவன் அருவுருவமாக இருப்பான். உண்மையில் இவை ஓன்பதும் பரசிவனின் ஒன்பது வேறுபட்ட நிலைகள் ஆகும்.

#1765. அண்ணலின் அடிகளை அண்ணலும் ஆமே!

தேவர் பிரானைத் திசைமுக நாதனை
நால்வர் பிரானை, நடுவுற்ற நந்தியை
ஏவர் பிரான் என்று இறைஞ்சுவர்? அவ்வழி
ஆவர்; பிரான் அடி அண்ணலும் ஆமே.

தேவர்களின் தெய்வத்தை; நான்கு திசைகளில் நான்கு முகங்கள் உடைய நாதனை; உருவம் படைத்த நான்கு தெய்வங்களையும் இயக்குபவனை; உருவங்களுக்கும், அருவங்களுக்கும் இடைப்பட்ட அருவுருவான சதாசிவவனை; வணங்கு பவர்களுக்கு அவன் தோற்றம் தருவான். அவர்களால் அண்ணலின் அடிகளின் அண்மையை அடையவும் முடியும்.

#1766. வினைகள் அறும்!

வேண்டி நின்றே தொழுதேன் வினை போய் அற;
ஆண்டு, ஒரு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்தகை யானொடும் கன்னி உணரினும்
மூண்டகை மாறினும் ஒன்றது ஆமே.

வினைகளும், வினைப் பயன்களும் கெடும் வண்ணம் சதாசிவனையும், சக்தியையும் வழிபடுவர் அன்பர்கள். கால ஓட்டத்தை ஆண்டு, திங்கள், நாள் என்று வேறுபடுத்தும் சிவசூரியனாகிய சதாசிவனையும், சக்தி தேவியையும் தனித்தனியாக வழிபடுவதன் பயனும்; அவர்களை ஒன்றாக சிவலிங்க ரூபத்தில் சிவசக்தியராக வழிபடுவதன் பயனும் ஒன்றே அன்றோ!

#1767. பரனுள் பாதி பராசக்தி!

ஆதி பரம்தெய்வம் அண்டத்து நல்தெய்வம்
சோதி யடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாதெய்வம் நின்மல னெம்மிறை
பாதியுள் மன்னும் பராசக்தி யாமே.

சதாசிவம் ஆதிப் பரம் பொருள்; அவன் அண்டத்தின் நல்ல தெய்வம்; அடியார் சோதி வடிவில் வணங்கும் பெருந் தெய்வம்; நீதி வடிவான தெய்வம்; நிர்மலமான தெய்வம்; இத்தகைய பராபரனான சதாசிவத்தின் உடலில் சரிபாதியாக இருப்பவள் பராசக்தி.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1768 to #1772

#1768. அப்பாலுக்கு அப்பாலாம்!

சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபதம் , தோயாத தூவொளி
அத்தன் திருவடிக்கு அப்பாலைக்கு அப்பாலாம்;
ஒத்தவும் ஆம் ஈசன் தானான உண்மையே.

சக்திக்கு மேலே விளங்குவது பராசக்தி. அதன் உள்ளே விளங்குவது சுத்தமான சிவபதம். குறையாது நிறைந்து விளங்கும் அந்தத தூய ஒளியில் சிவபதம் அப்பலுக்கு அப்பாலாகும். இதுவே சதாசிவ நிலைக் கடந்து ஈசன் விளங்கும் உண்மை நிலை.

#1769. ஞானலிங்கம் தோன்றும்

கொழுந்தினைக் காணின் குவலயம் தோன்றும்
எழும்திடம் காணில் இருக்கலும் ஆகும்
பரந்திடம் காணின் பார்ப்பதி மேலே
திரண்டு எழக் கண்டவன் சிந்தை உளானே.

ஞானலிங்கம் என்னும் ஒளிவடிவான சுடரைக் கண்டால் அங்கு நுண்மையான வடிவில் உலகம் தோன்றும். திடமான முயற்சியால் ஒருவர் இந்த உலகினில் அழியாமல் இருக்கவும் கூடும். தத்துவங்களைத் துறந்து விட்ட ஆன்மா திடமாக முயன்றால், சக்திக்கு மேலே நிராதாரக் கலைகளில் ஞான லிங்கத்தை அருவமாக உணர முடியும்.

#1770. ஞானம் என்பது என்ன?

எந்தை பரமனும் என் அம்மைக் கூட்டமும்
முந்த உரைத்து , முறை சொல்லின் ஞானமாம்;
சந்தித் திருந்த இடம்பெருங் கண்ணியை
உந்தியின் மேல் வைத்து உகந்திருந் தானே.

என் தந்தையாகிய சதாசிவனையும், அறுபது நான்கு பிரணவ சக்திகளின் கூட்டமாகிய என் அன்னையையும் நன்றாக ஓதி உணர்ந்து கொள்வதே ஞானம் ஆகும். ஞானம் உதிக்கும் நமது புருவ மத்தியில். விசாலமான கண்களை உடைய சக்தியுடன் சிவன் உந்தியின் மேல் உள்ள இதயத்தில் மிகுந்த அன்பு கொண்டு உறைகின்றான்.

#1771. சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்கும்!

சத்தி சிவன் விளையாட்டாம் உயிர் ஆகி
ஒத்த இரு மாயா கூட்டத்திடை ஊட்டிச்
சுத்தம் அது ஆகும் துரியம் பிறிவித்துச்
சித்தம் புகுந்து சிவம் அகம் ஆக்குமே.

சிவசக்தியரின் விளை யாட்டு இதுவே. சீவனின் தகுதிக்கு ஏற்ப அதன் உயிர் நிலையை விளங்கச் செய்வர். அதற்கு ஏற்ற வண்ணம் சுத்த மாயை அசுத்த மாயைகளின் கூட்டத்தில் சேர்த்துவிடுவர் . சீவன் பக்குவம் அடைந்துவிட்டால் சுத்த மாயையில் விளங்குகின்ற ஒளி மண்டலத்தை உணர்த்துவர். பின்னர் அதனைக் கடக்க உதவுவர். சீவனின் சித்தத்தில் சிவன் புகுவான். அப்போது சீவன் சிவன் உகந்து உறையும் ஓர் ஆலயம் ஆகிவிடும்.

#1772. சக்தி சிவத்தின் உருவாகும்

சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவமுமாம் சிவன்சத்தியு மாகும்
சத்தி சிவமன்றி தாபரம் வேறில்லை
சத்தி தானென்றும் சமைந்துரு வாகுமே.

தாரணி முழுவதும் சிவசக்தியரின் அலகிலா விளையாட்டு ஆகும். சக்தி வடிவம் உடையவள் என்றால் சிவம் தூய அறிவு மயமானவன். சக்தி சிவனாக மாறுவாள். சிவன் சக்தியாக மாறுவான். சிவசக்தியரின் கலப்பு இன்றி உயிர்கள் இருக்க முடியாது. சக்தியே தேவைக்கு ஏற்பப் பற்பல வடிவங்களை எடுப்பாள்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

7. சிவலிங்கம்
இதுவே சிவகுரு ஆகும்.

#1773 to #1777

#1773. வரித்து வலம் செய்ய அறியேன்!

குறைக்கின்ற வாரிக் குவலயம் நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்ற வாறு இவை நீண்டு அகன்றானை
வரைத்து வளம் செய்யு மாறுஅறி யேனே.

ஒலிக்கும் அலைகடல் சூழ்ந்த உலகம், நீர், பரவிச் செல்லும் காற்று, எரிக்கும் நெருப்பு என்னும் நான்கும் தத்தம் நிலையும், முறையும் மாறாமல் ஒழுங்காக நிலை பெற்று விளங்குவதற்கு உதவிடும் வானமும் எவரால் இயங்குகின்றன என்று தெரியுமா? இவை நிகழ்வது நீண்டும் அகன்றும் விளங்கும் சிவபெருமானால் தான். அத்தகைய பெரியவனை நான் ஒரு வரைமுறைக்கு உட்படுத்தி வணங்கும் முறையை அறியேன்.

#1774. புரிசடையான் பிரிந்து செல்லான்!

வரைத்து வலம் செய்யுமாறு இங்கு ஒன்றுண்டு
நிரைத்து வரு கங்கைநீர், மலர் ஏந்தி
உரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்
புரைத்து எங்கும் போகான் புரிசடை யோனே.

இங்கு அங்கு என்னதபடி எங்கும் பரவி நிற்கும் இறைவனை ஒரு வரைமுறைக்குள் அடக்கி வணங்கும் வழி ஒன்று உண்டு. பொங்கி எழும் உணர்வு நீரோட்டத்தை உடைய சுவாதிட்டான மலரை ஏந்திக் கொள்ள வேண்டும். அவன் திரு நாமத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது சிவன் அந்த சீவனின் உடலில் உள்ள நவத் துவாரங்களைத் துளைத்துக் கொண்டு பிரிந்து வெளியே சென்று விடாமல் எப்போதும் சீவனுடனேயே பொருந்தி நிற்பான்.

#1775. ஆதிப் பிரான் அருள் செய்வான்!

ஒன்று எனக் கண்டேன்எம் ஈசன் ஒருவனை
நன்று என்று அடியிணை நான் அவனைத் தொழ
வென்ற ஐம்புலனும் மிகக் கிடந்தது இன்புற
அன்று என்று அருள்செய்யும் ஆதிப் பிரானே.

உலகத்தின் முதல்வன் அவனே என்று எம் ஈசனை அறிந்து கொண்டேன். அவன் திருவடிகள் நன்மை பயக்கும் என்று அவற்றைத் தொழுது நின்றேன். வென்று விட்ட ஐம் புலன்கள் வழிச் செல்லாமல் என் அறிவு சிவனுடன் பொருந்தி இன்பம் அடைந்தது. அப்போது ஆதிப் பிரான் ஆகிய சிவன் தன் தண்ணருளை எனக்கு அள்ளித் தந்தான்.

#1776. ஒன்பது வித இலிங்கங்கள்

மலர்ந்தயன் மாலு முருத்திரன் மகேசன்
பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்
நலந்தரு சத்தி சிவன்வடி வாகிப்
பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.

நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன், விந்து, நாதம், சக்தி, சிவன் என்னும் ஒன்பதும், ஒன்பது வித இலிங்கங்கள் ஆகும்.

#1777. பரகதி பெறலாம்!

மேவி எழுகின்ற செஞ்சுட ரூடு சென்று
ஆவி எழும் அளவு அன்றே உடல் உற
மேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்
பாவித்து அடக்கின் பரகதி தானே.

மூலாதாரத்தில் இருந்து மேல் நோக்கி எழுந்து, நாடு நாடி வழியே செல்கின்ற, சிவந்த ஒளிதை உடைய குண்டலினி சக்தியுடன் சேர்ந்து மேலே எழும்பிச் செல்ல வேண்டும். பிராண வாயுவை வசப்படுத்த வேண்டும். உடலில் உள்ள ஆதாரக் கலைகளிலும், உடலை விட்டு நீங்கி இருக்கும் நிராதாரக் கலைகளிலும் பொருந்தியும் நீங்கியும் நிற்பதற்கு உள்ளதைப் பழக்கினால் பரசிவகதியை அடையலாம்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

8. சம்பிரதாயம்
சம்பிரதாயம் = மரபு அல்லது தொன்று தொட்டு வழங்கி வரும் முறை

#1778 to #1782

#1778. தீட்சை தரும் முறை

உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு
படர்வினை பற்றறப் பார்த்துக் கைவைத்து
நொடியினடி வைத்து நுண்ணுணர் வாக்கிக்
கடியப் பிறப்பறக் காட்டினான் நந்தியே.

மாணவன் தன உடல் பொருள் ஆவி அனைத்தையும் நீரால் தத்தம் செய்ய வேண்டும். குரு அவற்றை சுவீகரிக்க வேண்டும். படர்ந்து வரும் வினைகளையும், மாணவனின் பற்றையும் தம் விழிப் பார்வையினால் குரு போக்க வேண்டும். மாணவனின் மீது தன் கரத்தை வைத்து, அவன் சிரத்தின் மேல் தன் அடியை வைத்து, நொடியில் ஞானத்தைத் தர வேண்டும். மாணவனின் பிறவிப் பிணியை நீக்கி அருள வேண்டும்.

#1779. உய்யக் கொள்வான்!

உயிருஞ் சரீரமும் ஒண்பொரு ளான
வியவார் பரமும்பின் மேவும் பிராணன்
செயலார் சிவமும் சிற்சத்தி யாதிக்கே
உயலார் குருபரன் உய்யக் கொண் டானே.

உயிர், உடல், ஒளிரும் பரம் ஆகிவிட்ட ஆன்மா, பிராணன், இவை
அனைத்தையும் இயக்குகின்ற சிவன், சக்தி என்பனவற்றை நான் அறிந்து கொண்டு உய்வடையும்படி என் குருநாதன் என்னை ஆட்கொண்டு உய்வித்தான்.

#1780. மேற்கு திசை ஒளிரும்!

பச்சிம திக்கிலே வைத்த ஆசாரியன்
நிச்சலு மென்னை நினையென்ற அப்பொருள்
உச்சிக்குக் கீழது உண்ணாக்கு மேலது
வைச்ச பதமிது வாய்திற வாதே.

தன்னுடைய வலப் புறத்தில் என்னை அமர்த்திக் கொண்ட குருநாதர், “தினமும் என்னை இங்கே மனனம் செய்” என்று கூறினார். அந்த இடம் என் உச்சிக்குக் கீழேயும், உண்ணாக்குக்கு மேலேயும் உள்ள மேலான பதம் ஆகும். இதைப் பற்றி நாம் வாயினால் பேசி விட முடியாது.

#1781. இருள் அறும்!

பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை
ஒட்டடித் துள்ளமர் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினான் தன்னையும் என்னையும்
வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.

அனுபவம் எதுவும் இல்லாமல் நான் விரும்பியபடி பிதற்றிக் கொண்டும் திரிந்து கொண்டும் இருந்தேன் நான். குரு நாதர் என்னிடம் உள்ள மாசுகளை எல்லாம் அகற்றி என்னைத் தூயவனாக்கினார். என்னையும் தன்னையும் தராசுத் தட்டுக்களில் உள்ள பொருட்களைப் போல சமம் ஆக்கினார். என்னுடைய முயர்சியும் இறைவனுடைய திருவருளும் கொண்டு பண்டமாற்று முறையில் நல்ல வாணிபம் நடந்தது.

#1782. கண்டு கொண்டேன் அவனை நான்!

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்;
பிரிக்கின்ற இந்தப் பிணக்கு அறுத்து, எல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டு கொண்டேனே.

இருக்கின்ற அனைத்து உயிர்த் தொகைகளுக்கும் அவனே ஒரு தனித் தலைவன். சிவன், சீவன், உலகம் என்று மூன்றாகவும் அவன் ஒருவனே இருப்பதை உலகத்தோர் அறிகிலர். ‘நான்’ என்று என்னை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தும் பிணக்கினை அறுத்த பின்பு, அனைத்தையும் தன் கருவிலே கொண்டுள்ள அந்த ஈசனை நான் கண்டு கொண்டேன்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1783 to #1787

#1783. பற்றற நீக்குவான்!

கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டு
நாடி யடிவைத் தருள்ஞான சத்தியால்
பாடல் உடலினில் பற்றற நீக்கியே
கூடிய தானவ னாம் குளிக் கொண்டே.

சீவனுடன் கூடித் தொடர்ந்து வரு உடல், பொருள், ஆவி இவற்றிலிருந்து சீவனை விடுவிக்க எண்ணம் கொண்டான் சிவகுருநாதன். தன் திருவடியை என் சென்னி மேல் பதித்தான். எனக்கு ஞானம் தந்தான். பெருமை இல்லாத இந்த உடலின் மீதுள்ள பற்றை நீக்கினான். தானும் நானும் ஒன்றாகும்படி சிவனையும் சீவனையும் ஒன்றாகப் பொருத்தினான்.

#1784. கொண்டான் உடல், பொருள், காயம்!

கொண்டான் அடியேன் அடிமை குறிக் கொள்ளக்
கொண்டான் உயிர், பொருள், காயக் குழாத்தினை
கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்
கொண்டான் என ஒன்றும் கூறகி லேனே.

நான் பக்குவம் அடைந்தவுடன் என்னைத் தன் அடிமையாக ஏற்றுக் கொள்ள அவன் முடிவு செய்தான். அவன் என் ஆவி , பொருள், சரீரக் கூட்டம், கருவிகளின் கூட்டத்தைத் தனதாக்கிக் கொண்டு விட்டான். என்னிடம் இருந்த எல்லாவற்றையும் தந்த அவனே அவற்றை எடுத்துக் கொண்டு விட்டதால், “என்னுடையவற்றை அவன் எடுத்துக் கொண்டு விட்டான்!” என்று நான் சொல்ல முடியாது அல்லவா?

#1785. பேயுடன் ஒப்பர்!

குறிக்கின்ற தேகமும் தேகியுங் கூடி
நெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்
பிரிக்கின்ற காயத்தைப் பற்றிய நேர்மை
பிறக்க அறியாதார் பேயுட னொப்பரே .

சீவன் தன் குறியாகக் கொள்வது உடல். அந்த உடலை இயக்குவது உயிர். இவற்றை நெறியுடன் இணக்குவது பிராணனுடன் நிலைபெற்றுள்ள ஆன்மா. இந்த உண்மைகளை யமன் சீவனின் உடலை பறிக்கும் முன்பே, சீவன் உடலுடன் கூடி இருக்கும் போதே, அறிந்து கொள்ள முடியாதவர்கள் பேய்க்கு ஒப்பானவர்கள்.

#1786. உணர்வுடையார் உணர்வர்!

உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை
உணர்வுடை யார்க ளுணர்ந்தவக் காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண்டாரே.

“நான் உடல் அல்ல! நான் ஆன்மா” என்ற உண்மை உணர்வினை உடையவர்களால் எல்லா நுண்ணிய உலகங்களையும் காண இயலும். இவர்கள் உலக நிகழ்வுகளை தம் அனுபவ நிகழ்வுகளாக உணராமல் வெறும் சாட்சியாக இருந்து நோக்குவதால் அவர்களுக்கு எந்த துன்பமும் விளையாது. இவர்கள் தன்னையும் உணர்ந்து கொள்வர். தம் தலைவனையும் உணந்து கொள்வர்.

#1787. என்ன சொல்லி வழுத்துவேன்?

காயப் பரப்பில் அலைந்து துரியத்துச்
சாயல் விரிந்து, குவிந்து சகலத்தில்
ஆய அவ்வாறே அடைந்து திரிந்தோர்க்குத்
தூய அருள் தந்த நந்திக்கு என் சொல்வதே!

சகல நிலையில் முப்பத்தாறு தத்துவங்களுடன் கூடி இருந்தும்; உடலின் பரப்பில் இருக்கும் போது அலைந்து திரிந்தும்; துரிய நிலையில் ஒளி மண்டலத்தில் மிகவும் விரிந்தும், சிவத்துடன் பொருந்திக் குவிந்தும் இருக்கும் அன்பருக்குத் தூய அருள் தந்த நந்தியின் பெருமையை நான் என்ன சொல்லி வழுத்துவேன்?
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1788 to #1791

#1788. தேன் என இன்பம் விளையும்!

நான்என நீஎன வேறு இல்லை நண்ணுதல்
ஊன்என ஊன்உயிர் என்ன உடன் நின்று
வான்என வானவர் நின்று மனிதர்கள்
தேன்என இன்பம் திளைக்கின்ற வாறே.

“நான் வேறு என்றும் நீ வேறு என்றும் பிரித்து உணருகின்ற நிலையில் நாம் உண்மையில் இல்லை!”. உடலும், உடலில் உள்ள உயிரும் போலச் சீவன், சிவன் இருவரும் பொருந்தி இருக்கின்றனர். வானும் வானவரும் போலவும், தேனும் தேனின் இன்சுவையைப் போலவும், சீவனும் சிவனும் இரண்டறக் கலந்து உள்ளனர்.

#1789. அவன் இவன் ஆவான்

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனை அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவன் இவன் ஆமே.

சிவனைத் தன்னிலும் வேறாகக் கருதி வழிபடும் சரியை, கிரியை நெறிகளில் நிற்பவர் அந்த இறைவனை அறிந்து கொள்ளார். இவன் அவனை அறிந்து கொண்டு விட்டால் அறிபவனும் அறியும் பொருளும் ஒன்றாகிவிடும். சரியை, கிரியை நெறிகளில் நிற்பவர் சீவனையும் சிவனையும் ஒன்றாகக் கருதினால்; அறியும் பொருளான சிவமும், அறிகின்ற அவனும், பொருந்தி ஒன்றாகி விடுவார்கள்.

#1790. அம்பர நாதன் ஆகலாம் !

“நான்இது தான்” என நின்றவன், நாடொறும்
ஊன்இது தான் உயிர் போல் உணர்வான் உளன்
வான்இரு மாமுகில் போல் பொழி வான்உளன்
நான் இது அம்பர நாதனும் ஆமே.

“நான் இந்த உடல் ” என்று ஒவ்வொரு உயிரும் எண்ணும். அது போன்றே “நான் இந்த சீவன் ” என்று சிவன் எண்ணுவான். கன மழை பொழியும் வான் மேகத்தைக் காட்டிலும் அவன் அதிக அருள் மழை பொழிவான். அவன் அருள் மழையால் நானும் அவனாகவே மாறி அம்பர நாதன் ஆகி விட்டேன்.

#1791. உடலில் உயிர் போலப் பொருந்துவான்!

பெருந்தன்மை தானென யானென வேராய்
இருந்தது மில்லையது ஈச னறியும்
பொருந்து முடலுயிர் போலுமை மெய்யே
திருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.

பெருந்தன்மை உடைய சிவனும், ‘நான்’ என்று தன்னை வேறாக எண்ணும் சீவனும் ஒருபோதும் வேறு வேறாக இருந்தது இல்லை. இந்த உண்மையை ஈசன் இயல்பாகவே அறிவான். ஆனால் சீவன் அறியான். சீவனைச் செம்மைப் படுத்துகின்ற சிவன் எப்போதும் உடலில் உயிர் போலச் சீவனுடன் தானும் பொருந்தி இருப்பான்
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

9. திருவருள் வைப்பு

திருவருள் வைப்பு = திருவடிகளைப் பதிதல்.

சூரிய சந்திர கலைகளே இறைவனின் திருவடிகள்.

#1792 to #1795

#1792. அருளாவது அறமும் தவமும்

இருபத மாவது இரவும் பகலும்
உருவது ஆவ துயிரும் உடலும்
அருளது வாவது அறமும் தவமும்
பொருளது வுள்நின்ற போகம தாமே.

அறிய வேண்டிய நெறிகள் இரண்டு. அவை கதிரவ நெறியும், திங்கள் நெறியும் ஆகும். உயிர் உடலுடன் இணைந்து இருப்பதன் பயன் இதுவே. அருள் என்னும் தெய்வ சக்தியை அடைவதற்கு உள்ள வழிகள் இரண்டு. அவை திங்கள் நெறியைப் பற்றியவர்களுக்கு அறம்; கதிரவ நெறியைப் பற்றியவருக்கு தவம்.
இந்த இரு நெறிகளுமே மனத்தின் பண்புக்கு ஏற்பப் பயனைத் தரும்.

#1793. இருள் அறும் !

காண்டற்கு அரியன் கருதிலன் நந்தியும்
தீண்டற்கும் சார்தற்கும் சேயனாத் தோன்றிடும்
வேண்டிக் கிடந்து விளக்கொளியான் நெஞ்சம்
ஈண்டிக் கிடந்தது அங்கு இருள் அறுமே.

இறைவன் கண்களால் காண்பதற்கு அரியவன்; கருத்தினால் அறிவதற்கும் அரியவன்; தீண்டுவதற்கும் சார்வதற்கும் வெகு தொலைவில் இருப்பவன் என்று தோன்றும். ஆனால் அவனையே நினைந்து இருப்பவருக்கு அவன் அகத்தில் விளக்கொளி ஆவான். அவனையே சார்ந்திருந்தால் ஒருவன் மனத்தின் இருள் அறும்.

#1794. விகிர்தன் நிற்பான்

குறிப்பினுள் உள்ளே குவயலாம் தோன்றும்
வெறுப்பிருள் நீங்கில் விகிர்தனும்வம் நிற்கும்
செறிப்புறு சிந்தையைச் சிக்கென நாடில்
அறிப்புறு காட்சி அமரரு மாமே.

சிவ ஒளியை நோக்கி நிற்கும் போது அகக் கண்களில் உலகத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் கருவாகக் காட்சி தரும். வெறுக்கத் தக்க ஆணவ இருள் நீங்கி விட்டால். உயிரில் உயிராகக் கலந்து நிற்கும் விகிர்தனைக் காண முடியும். அவனிடம் சிந்தையைச் செலுத்தி அதை ஆராய்ந்தால் ஞான ஒளி பிறக்கும். தேவ வடிவும் கிடைக்கும்.

#1795. அறிவார் அறிவே துணையாகும்!

தேர்ந்து அறியாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்து அறிவான் எங்கள் பிஞ்ஞகன் எம்இறை
ஆர்ந்து அறிவார் அறிவே துணையாம் எனச்
சார்ந்து அறிவான் பெருந்தன்மை வல்லானே.

ஆராய்ந்து தெளிவு பெறாததால் அறியாமையில் என் காலம் வீணாகக் கழிந்தது. எம் இறைவன் தன் நிலையிலிருந்து பெயர்ந்து ஒரு குருவாக வந்து தன்னை வெளிப்படுத்தினான். அறிவைத் துணையாகக் கொண்டு தன்னை உணர்பவரிடம் பொருந்தி விளங்கும் தன்மை உடையவன் சிவன்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1796 to #1800

#1796. இறைவன் இன்பம் அளிப்பான்

தானே அறியும் வினைகள் அழிந்தபின்
நானே அறிகிலன் நந்தி அறியுங்கொல்
ஊனே உருகி உணர்வை உணர்ந்தபின்
தேனே அனையன் நம் தேவர் பிரானே.

என் இருவினைப் பயன்கள் அழிந்தவிட்ட பின்பு சிவன் தானே என்னை அறிந்து கொள்வான். நான் அதை அறிய மாட்டேன். ஆனால் சிவன் என் மனத்தின் பக்குவத்தை அறிந்து கொள்வான். ஊன் உருகி உணர்வு மயமான அவனை நான் அறிந்து கொண்ட பின்னர் அவன் தேன் போல இனிப்பான்.

#1797. உள்ளே உள்ள ஒண்சுடர்

நான் அறிந்து அன்றே இருக்கிறது ஈசனை
வான் அறிந்தார் அறியாது மயங்கினர்
ஊன் அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண் சுடர்
தான் அறியான், பின்னை யார் அறிவாரே?

இந்த உடல் தோன்றிய அன்றே நான் அறிந்திருந்தேன் என்னுள் ஒளியாகவும், உயிர்ப்பாகவும் உள்ள என் ஈசனைக் குறித்து. ஆனால் வானவர் அவனை அறியாது மயங்குவர். என் உடலினுள் உயிராகவும், உயிர்ப்பாகவும் உள்ள அவனை நானே அறிந்து கொள்ளவில்லை என்றால் வேறு யார் அறிந்து கொள்ளுவார்?

#1798. அருள் எங்கும் உளது!

அருள் எங்கும் ஆன அளவை அறியார்
அருளை நுகர அமுது ஆனதும் தேரார்
அருள்ஐங் கருமத்து அதி சூக்கம் உன்னார்
அருள் எங்கும் கண்ஆனது ஆர்அறி வாரே?

இறைவனின் அருளே எங்கும் நிறைந்துள்ளது என்று உலகத்தோர் அறிகிலர். இறை அருளை உணர்ந்து கொண்டவருக்கு அது அமுதம் போல இனிக்கும் என்றும் இவர்கள் அறிகிலர். ஐந்தொழில்களை ஆற்றுவது சக்திதேவி என்பதையும் இவர்கள் அறியார். அருள் சக்தியே விழியாக இருந்து கொண்டு எல்லாவற்றையும் காண்பதையும் இவர்கள் அறிகிலர்.

#1799. அடியருள் நல்கும் சிவம் ஆயினரே!

அறிவில் அணுக அறிவுஅது நல்கிப்
பொறிவழி ஆசை புகுத்திப் புணர்ந்திட்டு
அறிவு அது ஆக்கி அடியருள் நல்கும்
செறிவோடு நின்றார் சிவம் ஆயினாரே.

சிவன் சீவனுக்கு அறிவு மயமான தன்னுடன் பொருந்துவதற்கு ஏற்ற அறிவைத் தந்தான். சீவன் பொறிகள் வழியே சென்று புலன்களை நாடும் ஆசைகளையும் அவனே தந்தான். ஆன்ம அறிவையும் அருளையும் கலந்து தந்து உயரிய சிவனடியார்களின் சகவாசத்தையும் தந்தான். சிவனிடம் செறிவோடு நின்றவர் சிவம் ஆயினர்.

#1800. என் அகம் புகுந்தான் நந்தி

அருளில் பிறந்திட்டு, அருளில் வளர்ந்திட்டு
அருளில் அழிந்து இளைப்பு ஆறி, மறைந்திட்டு
அருளான ஆனந்தத்து ஆரமுதூட்டி
அருளால் என் நந்தி அகம் புகுந் தானே.

இறைவனின் அருளால் நான் பிறந்தேன், வளர்ந்தேன், அழிந்தேன், இளைப்பாறினேன், மறைந்துள்ள ஞானத்தை அடைந்தேன், ஆரமுதாகிய ஆனந்தத்தை அடைந்தேன், நந்தியும் என் அகம் புகுந்தான்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1801. நந்தி என் அகம் புகுந்தான்

அருளா லமுதப் பெருங்கட லாட்டி
அருளால் அடிபுனைந் தார்வமும் தந்திட்டு
அருளான வானந்தத்து ஆரமுதூட்டி
அருளா லென் நந்தி யகம்புகுந் தானே.

என் தலைவன் தன் அருளால் என்னை அமுதப் பெருங் கடல் ஆட்டினான்.
என் தலைவன் தன் அருளால் என் சென்னி மீது தன் அடிகளைப் பதித்தான்.
என் தலைவன் தன் அருளால் எனக்குப் பக்தி என்னும் ஆர்வத்தைத் தந்தான்.
என் தலைவன் தன் அருளால் இனிய அமுதத்தை எனக்கு ஊட்டினான்.
என் தலைவன் தன் அருளால் என் நெஞ்சம் புகுந்து எழுந்தருளினான்.

#1802. சக்தி அருள் செய்வாள்

பாசத்தில் இட்டது அருள் அந்தப் பாசத்தின்
நேசத்தை விட்டது அருள் அந்த நேசத்தில்
கூசமுற்ற முத்தி அருள், அந்தக் கூட்டத்தில்
நேசத்துத் தோன்றா நிலைஅருள் ஆமே.

அவன் அருள் என்னைப் பாசத்தில் பொருத்தி அனுபவங்களைப் பெறச் செய்தது.
அவன் அருள் என்னைப் பாசத்தின் மீது நான் கொண்ட நேசத்தில் இருந்து விடுவித்தது.
அவன் அருள் எனக்கு முக்தியைத் தந்தது. பின்னர் அதுவே முக்தியைக் கடந்த நிலையையும் தந்தது.

#1803. உறவாகி உளம் புகுவான்

பிறவா நெறி தந்த பேரருளாளன்
மறவா அருள் தந்த மாதவன் நந்தி
அறவாழி அந்தணன் ஆதிப் பராபரன்
உறவாகி வந்து என் உளம்புகுந் தானே.

பிறவிக்குக் காரணமான அறியாமையை நீக்கி மெய்யறிவு என்னும் ஒளியைத் தந்தவன் பெருங் கருணை கொண்ட என் இறைவன். உலக இயலில் ஆழ்ந்து நான் அவனை மறந்துவிடாது இருக்க அருள் புரிந்தவன் என் நந்தி. அவன் அறவாழி அந்தணன், அவன் ஆதிப் பராபரன்; அவன் என்னைத் தன் உறவாகக் கருதி என் உள்ளம் புகுந்தான்.

#1804. நந்தி தருவான் ஆனந்தம்

அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே,
அகம் புகுந்தும் தெரியான் அருளில்லோர்க்கு,
அகம் புகுந்து ஆனந்தமாக்கிச் சிவமாம்
அகம் புகுந்தான் நந்தி ஆனந்தி யாமே.

இறைவன் தன் தண்ணருளால் என் மனத்தில் புகுந்தான். இருளில் மூழ்கி இருப்பவர்கள் அவன் தம் உள்ளம் புகுந்திருந்தாலும் அவனை அறிந்து கொள்ள இயலார். என் மனத்தில் புகுந்த இறைவன் என்னை ஆனந்த மயமாக்கி என்னைச் சிவம் ஆக்கினான். அவன் அருட் செயலால் நானும் ஓர் ஆனந்தி ஆகிவிட்டேன்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1805. அருட்செய்கை

ஆயும் அறிவோடு, அறியாத மாமாயை
ஆய கரணம், படைக்கும் ஐம்பூதமும்
ஆய பல இந்திரியம் அவற்றுடன்
ஆயவருள் ஐந்தும் ஆம் அருட் செய்கையே.

ஆராய்ந்து அறியும் அறிவை என் இறைவன் எனக்குத் தந்தான். ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத மாமாயையும் அவன் தந்தான். மாயையின் காரியமாகிய நான்கு அந்தக் கரணங்கள், ஐம் பெரும் பூதங்கள், பத்து இந்திரியங்கள் இவை அனைத்தையும் படைத்தவன் என் இறைவன். இவற்றுடன் பராசக்தி, ஆதி சக்தி, இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்ற ஐம் பெரும் சக்திகளைத் தந்தவனும் என் இறைவனே.

#1806. அருளே அவன் திருமேனி

அருளே சகலமும், ஆய பவுதிகம்
அருளே சராசரம் ஆய அமலமே,
இருளே, வெளியே எனும் எங்கும் ஈசன்
அருளே சகளத்தன் அன்றி இன்று ஆமே.

என் இறைவனின் அருளே உலகில் உள்ள அனைத்தும் ஆகும். பூத காரியம் என்னும் பௌதிக காரியம் அனைத்தும் அவன் அருளே. அசையும் பொருட்கள் அசையாப் பொருட்கள் அனைத்தும் அவன் அருளே. இருள் வெளிச்சம் இரண்டும் அவன் அருளே. சிவம் என்பதன் பொருள் அவன் திருவருளே ஆகும்.

#1807. நவமாகி நடிப்பவன் சிவன்

சிவமொடு சத்தி திகழ்நாதம் விந்து
தவமான ஐம்முகன் ஈசன் அரனும்
பவமுறு மாலும் பதுமத்தோன் ஈறா
நவம்அவை யாகி நடிப்பவன் தானே.

சிவம், சக்தி, நாதம், விந்து, உயரிய சதாசிவன், மகேசுரன், உருத்திரன், பிறவிகள் எடுக்கும் திருமால், நான்முகன் என ஒன்பது வடிவங்களாகப் பிரிந்தும்; மீண்டும் ஒரே பரம் பொருளாக ஒன்றாகப் பொருந்தியும் நடிப்பவன் என் இறைவன் ஆகிய சிவன்.

#1808. அருட்கண் அரனைக் காணும்!

அருட்கண் இலாதார்க்கு அரும்பொருள் தோன்றா;
அருட்கண் உளோர்க்கு எதிர்தோன்றும் அரனே
அருட்கண்ணி னோர்க்கு இங்கு இரவியும் தோன்றாத்
தெருட்கண்ணி னோர்க்கு எங்கும் சீரொளி ஆமே.

குருட்டுக் கண்கள் உள்ளவர்களால் ஒளி வீசும் கதிரவனையும் கூடக் காணமுடியாது. தெளிவான பார்வை உடையவர்கள் கதிரவனின் ஒளியால் உலகம் முழுவதையும் காண இயலும். அருட்கண்கள் பெறாதவர்களால் சிவன், சக்தி, நாதம், விந்து இவற்றைக் காண இயலாது. அருட்கண்கள் பெற்றவர்களால் இவற்றைத் தம் கண் எதிரில் காண இயலும்.

#1809. ஐந்தொழில் புரிவர்

தானே படைத்திடும் தானே அளித்திடும்
தானே துடைத்திடும் தானே மறைத்திடும்
தானே இவை செய்து தான் முத்தி தந்திடும்
தானே வியாபித் தலைவனு மாமே.

சக்தியுடன் கூடிய சிவன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து அருள்வான்; அவனே அதைக் காத்து அருள்வான்; அவனே அதை அழித்து அருள்வான்; அவனே அதை மறைத்து அருள்வான். அவனே சீவனுக்கு முக்தியையும் நல்குவான். அத்தகைய என் இறைவனே காணும் பொருட்கள் அனைத்திலும் பரந்தும், கரந்தும், உறையும் மேலான தலைவன் ஆன சிவன்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1810 to #1813

#1810. பரசிவத்தின் பெருமை

தலையான நான்கும் தனதரு வாகும்
மலையா வருஉரு வாகும் சதாசிவம்
நிலையான கீழ் நான்கு நீடுரு வாகும்
துலையா இவை முற்று மாயல்ல தொன்றே.

மேன்மையான சிவம், சக்தி, நாதம், விந்து என்ற நான்கும் சிவனின் நான்கு அருவ நிலைகள் ஆகும். சதாசிவன் என்னும் நிலை அருவுருவ நிலை ஆகும். மகேசுரன், உருத்திரன், மால், அயன் என்னும் நான்கு நிலைகளும் உருவ நிலை ஆகும். இவை ஒன்பது நிலைகளைக் கடந்து நிற்பவன் பரமசிவன். இந்த ஒன்பது நிலைகளை இயக்குபவனும் பரமசிவன்.

#1811. அலகிலா விளையாட்டு

ஒன்று அதுவாலே உலப்பிலி தான் ஆகி,
நின்றது தான் போல் உயிர்க்கு உயிராய் நிலை
துன்றி அவை அல்ல ஆகும்; துணை என்ன
நின்றது தான் விளையாட்டு என்னுள் நேயமே.

அழிவில்லாத சிவம் ஒப்பற்ற தன்மையால் தானேயாகி நிற்கின்றது. உயிரில் உயிராக அனைத்திலும் சிவம் பொருந்தி நிற்கின்றது. ஆனாலும் அது அவைகளாக ஆவது இல்லை. உற்ற துணைவனாக, ஒரு நல்ல நண்பனாகச் சிவன் அனைத்து சீவன்களிலும் உறைகின்றான். இதுவே அவன் ஆடுகின்ற ஓர் அலகிலா விளையாட்டு.

#1812. விந்து ஆக விளையும்

நேயத்தே நின்றிடு நின்மலன் சத்தியோடு
ஆயக் குடிலையுள் நாத மடைந்திட்டுப்
போயக் கலைபல வாகப் புணர்ந்திட்டு
வீயத் தகாவிந்து ஆக விளையுமே.

என் உள்ளத்தில் நேயத்துடன் உறையும் நிர்மலனாகிய சிவன் பிரணவத்தில் சக்தியுடன் கூடி அதை இயங்க வைத்தான். அதிலிருந்து நாதம் தோன்றியது. அது மேலும் விரிந்து ஐந்து கலைகளாகக் கூடும். அப்போது அதிலிருந்து அழிவில்லாத விந்து தோன்றும்.

#1813. அளவு என்று ஒன்று இல்லை

விளையும் பரவிந்து தானே வியாபி
விளையும் தனிமாயை மிக்கமா மாயை
கிளையொன்று தேவர் கிளர்மனு வேதம்
அளவொன்று இலாவண்ட கோடிக ளாமே.

பரவிந்துவில் நிலைபெற்றுள்ள சக்தியே அனைத்துத் தத்துவங்களிலும் பரவி நிற்கின்றாள். அசுத்த மாயை, சுத்த மாயை இரண்டும் அவளிடம் விளங்குகின்றன. இந்த இரண்டு மாயைகளில் இருந்து தேவர்கள், வேதங்கள், மந்திரங்கள், அண்டங்கள் என்று அனைத்துமே தோன்றுகின்றன.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

10. அருள் ஒளி
அருள் ஒளி இன்பம் தரும்.

#1814 to #1818

#1814. அருளில் பிறந்தவர் அருளை அறிவர்

அருளில் தலை நின்று, அறிந்து அழுந்தாதார்
அருளில் தலை நில்லார், ஐம்பாசம் நீங்கார்,
அருளின் பெருமை அறியார், செறியார்
அருளில் பிறந்திட்டு, அறிந்து அறிவாரே.

‘எல்லாம் அவன் செயல். அவன் திருவருளே ஏற்ற துணை’ என்று உணர்ந்து கொண்டு, இறையின் அருளில் அழுந்தித் தன் செயல் ஒழியாதவர் இறைவனின் திருவருள் இயக்கத்தில் பொருந்த மாட்டார். இவர்கள் சீவனைப் பிணிக்கும் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரேதாயி என்னும் ஐந்து பாசங்களில் இருந்து விடுபட மாட்டார். அருளின் பெருமையை அறியாதவர் இறையருளில் அழுந்த மாட்டார். திருவருளில் தோன்றி அந்த அருளே அனைத்துக்கும் காரணம் என்று அறிந்து கொண்டவர் அனைத்தையும் அறிவர்.

#1815. “அருட்கடல் ஆடுக!”

வாரா வழி தந்த மாநந்தி பேர் நந்தி
ஆரா அமுது அளித்தான் பேர் நந்தி
பேர் ஆயிரம் உடைப் பெம்மான் பேர் ஒன்றினில்
ஆரா அருட்கடல் ஆடுக என்றானே.

மீண்டும் பிறவிக்கு வாராத நெறியை என் குருநாதன் நந்தி எனக்கு அருளினான். தெவிட்டாத தெள்ளமுதினை அவன் எனக்கு அருளினான். அவன் ஆயிரம் திரு நாமங்களை உடையவன். அவற்றில் ஒரு நாமத்தில் ஒன்றி மாறாத அருட்கடல் ஆடுவீர் என்று கூறினான்.

விளக்கம்

இறைவனின் திரு நாமத்தைச் சிந்திக்கச் சிந்திக்க அவன் அருள் ஒளி பெருகம். அது உள்ளும் புறமும் மேலும் கீழும் நிறைந்து அந்த அடியவனை அருட் கடலில் மூழ்கச் செய்யும்.

#1816. ஆடிப் பாடி அழுது அரற்றுவீர்!

ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் கண்டேன் சிவன் பெருந் தன்மையை,
கூடியவாறே குறியாகக் குறிதந்து என்
ஊடு நின்றான் அவன் தன் அருள் உற்றே.

அவன் அருள் தரும் ஆனந்தத்தில் நான் பாடினேன், ஆடினேன், அழுதேன், அரற்றினேன். இங்ஙனம் அவன் பெருந்தன்மையை நான் தேடிக் கண்டு கொண்டேன். அவன் என்னுடன் பொருந்திய போதே வடிவம் இல்லாத ஒளி வெள்ளத்தினால் என் உள்ளும், புறமும், மேலும், கீழும் நிறைந்து விட்டன.

#1817. கற்றன விட்டுக் கழல் பணிந்தேன்!

உற்ற பிறப்பும் உறுமல மானதும்
பற்றிய மாயாப் படல மெனப்பண்ணி
அத்தனை நீயென் றடிவைத்தான் பேர் நந்தி
கற்றன விட்டேன் கழல் பணிந்தேனே.

“ஆணவ மலத்தின் காரணமாக சீவனுக்குப் பிறவி உண்டாகின்றது. அந்தப் பிறவியினால் மேலும் பல மாயாக் காரியங்கள் நிகழ்கின்றன. இவை அனைத்தும் இடையில் வந்து சீவனைப் பிணித்த பிணிகள்” என்ற மெய் ஞானத்தைத் தந்தான் என் இறைவன். நான் கற்றவற்றை எல்லாம் துறந்து விட்டு அவன் அருட் கழல்களை விடாது பற்றிக் கொண்டேன்.

#1818. விளக்கில் விளங்கும்!

விளக்கினை யேற்றி வெளியை அறிமின்
விளக்கின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர் தாமே.

ஞானம் என்ற விளக்கை ஏற்றுங்கள். எல்லையற்றத் தூய பரம்பொருளை அறிந்து கொள்ளுங்கள். அந்த எல்லையற்ற இறைவன் அண்மையில் நமக்குத் தொல்லை தரும் துன்பங்களும் வேதனைகளும் மறைந்து போய்விடும். ஒளி விளக்காகிய இறைவனை விளக்கும், திரு விளக்காகிய மெய் ஞானத்தை அடைந்தவர் தாமே அந்தச் சிவ ஒளியுடன் சீவ ஒளியாகக் கலந்து நிற்பார்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1819 to #1822

#1819. இருள் நீங்க உயிர் சிவம் ஆம்!

ஒளியும் இருளும் ஒருகாலும் தீர
ஒளியு ளோர்க்கு அன்றே ஒழியாது ஒளியும்
ஒளி இருள் கண்டகண் போலவேறாய் உள்
ஒளி இருள் நீங்க, உயிர் சிவம் ஆமே.

ஒளியும் இருளும் ஒருக்காலும் தீரா. ஒளியைக் கண்ட கண்களுக்கு அதன் பின்னர் இருள் என்பது இல்லை. உயிர் வெளி உலகில் காண்பது அறியாமையின் இருள். உயிர் தனக்குள்ளே உள்ளே காண்பது இறையாகிய ஒளி. சீவன் இருள் நீங்கி உள்ளே உள்ள ஒளியைக் கண்டு கொண்டு விட்டால் அப்போது சீவன் சிவமாகி விடும்.

#1820. எனக்கு ஆரமுது ஈந்த திறம்!

புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டிப்
நிறமே புகுந்து, என்னை நின்மலன் ஆக்கி,
அறமே புகுந்த எனக்கு ஆரமுது ஈந்த
திறம் ஏது என்று எண்ணித் திகைத்திருந்தேனே.

ஆணவத்துடன் வெளியுலகில் திரிந்து கொண்டிருந்த என் தலை மீது உன் பொற்கழல்களைச் சூட்டினாய். என்னுள் புகுந்து என் குற்றங்களை நீக்கி என்னை நிர்மலன் ஆக்கினாய். உன் தண்ணருளால் எனக்கு ஆரா அமுது ஊட்டினாய். உன் அன்பின் திறத்தை எண்ணி எண்ணி நான் திகைத்து நின்றேனே.

#1821. சிவகதி ஆகும்!

அருளது வென்ற வகலிட மொன்றும்
பொருளது வென்ற புகலிட மொன்றும்
மருளது நீங்க மனம் புகுந்தானை
தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.

அருள் தரும் சக்தி தேவி வேறு என்றும், மெய்ப் பொருளாகிய சிவன் வேறு என்றும் எண்ணி மயங்கி நின்றேன். என் மயக்கத்தைப் போக்கிச் சிவனும் சக்தியும் ஒன்றில் ஒன்றாக ஒன்றி உறைபவர் என்ற தெருளை எனக்குத் தந்த இறைவன் பின்னர் சிவகதியும் தந்தான்.

#1822. தேரணிவோம் எனச் செப்புவீர் !

கூறுமின் னீர்முன் பிறந்திங்கு இறந்தமை
வேறொரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும்
பாறணியும் முடல் வீழவிட் டாருயிர்
தேறணி வோமிது செப்ப வல்லீரே.

சிவம் பிறந்ததாகவோ மறைந்ததாகவோ எவரேனும் கேட்டதுண்டோ? பிறந்து, இறந்தும் இயங்கிகின்ற பிற தெய்வங்கள் மெய்ப் பொருள் ஆக முடியுமா? இந்தப் பருவுடல் பருந்துக்கு உணவாகில் என்? உம் உயிரைக் காத்துக் கொள்ளும் வழியினைத் தெரிந்து கொள்வீர். இந்த உண்மையைப் பிறருக்கு எடுத்துச் சொல்வீர்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

11. சிவ பூசை
11. சிவ பூசை

#1823 to #1826
#1823. காளா மணிவிளக்கே

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

சீவனின் உள்ளமே இறைவன் உறையும் கருவறை; சீவனின் உடலே அவன் வாழும் ஓர் ஆலயம்; வள்ளலாகிய அவனைச் சென்று வழிபடும் கோபுர வாசல் சீவனின் வாய்; மெய்யறிவு பெற்றவருக்குச் சீவனே சிவலிங்கம். இவர்களுக்கு கள்ளப் புலன்கள் ஐந்தும் காளா மணி விளக்குகளாக மாறி விடும்.

#1824. பாடல் அவி பால் அவி ஆகும்!

வேட்டு அவிஉண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாம் இலம் காலையும் மாலையும்
ஊட்டு அவி ஆவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டு அவிகாட்டுதும் பால்அவி ஆமே.

விரிசடை நந்தி விரும்பி ஏற்கும், வேள்வித் தீயில் இடும், சிறந்த அவிப் பொருள் நம்மிடம் இல்லை. அவனுக்குக் காலையும் மாலையும் நம்மால் படைக்க இயல்வது அவனைப் போற்றும் இனிய துதிப் பாடல்கள் ஆகும். அவை அவனை மகிழ்விக்கின்ற செவிக்குச் சிறந்த செறிந்த உணவாகும். பாடல் அவியே அவன் விரும்பும் பால் அவி ஆகும்.

#1825. சிவன் அவன் ஆகும்

பால் மொழி பாகன் பராபரன் தான் ஆகும்
மான சதாசிவன் தன்னை ஆவாகித்து
மேல் முகம் ஈசான மாகவே கைக் கொண்டு
சீல் முகம் செய்யச் சிவனவன் ஆமே.

பால் போன்ற இன்மொழி பேசும் பராசக்தியைத் தன் உடலில் பாதியாகக் கொண்ட சதாசிவனைத் தலையில் ஆவாகிக்க வேண்டும் .உச்சித் தலையாகிய ஈசானத்தைத் துதித்து அதை நன்கு விளங்கச் செய்தால் சீவன் சிவன் ஆவான்.

#1826. காண்பதற்கு அரியவன்

நினைவதும் வாய்மை மொழிவதும் அல்லாற்
கனைகழ லீசனைக் காண அரிதாம்
கனைகழல் ஈசனைக் காண்குற வல்லார்
புனைமலர் நீர்கொண்டு போற்ற வல்லரே.

சிவனைக் குறித்து இடையறாது எண்ணி இருப்பது, சிவனைக் குறித்துப் பிறருக்கு எடுத்துக் கூறுவது, என்ற இந்த இரண்டு வழிகளை அன்றிச் சிவனை அறிந்து கொள்வது இயலாத செயல். நாத வடிவான சிவனை அறிந்து கொள்பவர் யார்? நீரைத் தன்னிடமாகக் கொண்ட சுவாதிட்டானத்தில் விளங்கும் மூல வாயுவை எழுப்பி மேலே கொண்டு சென்று சிவனைத் தொட வல்லவர் அவனை அறிந்து கொள்பவர் ஆவர் .
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1827 to #1830

#1827. அஞ்சலியோடு அர்சிப்பீர்

மஞ்சனம், மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சு அமுதாம், உபசாரம் எட்டு எட்டொடும்
அஞ்சலியோடும் கலந்து அர்ச்சித்தார்களே.

திரு மஞ்சனம், மலர் மாலைகள், வானவர் நெஞ்சம் இவற்றினுள் ஈசன் உறைந்து விளங்குவது ஏன்? தேவர்கள் பூலோக பக்தர்களுடன் கலந்து கொண்டு, பஞ்ச கவ்வியத்துடனும், பதினாறு வித உபசாரங்களுடனும், அஞ்சலியோடும், ஈசனை அன்போடு தொழுவதே இதன் காரணம்.

#1828. புண்ணியருக்குப் பூ உண்டு

புண்ணியம் செய்வார்க்குப் பூ உண்டு நீர் உண்டு
அண்ணல் அது கண்டு அருள் புரி யாநிற்கும்
எண் இலி பாவிகள் எம் இறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகினன் றாரே.

புண்ணியச் செயல் ஆகிய சிவ பூசை செய்பவர்களுக்கு ‘ஊர்த்துவ காமினி’ என்னும் மேல் நோக்கிச் செல்லும் உணர்வு உண்டு. சுவதிட்டான மலரும் உண்டு. சிவன் இவ்வாறு பூசிப்பவர்களுக்கு அருள் தருவான். எண்ணற்ற பாவிகள் சிவனைச் சிந்தியாமல் அவமே தம் வாழ்நாட்களைக் கழிக்கின்றனரே!

#1829. முத்தியாம் என்பது மூலன் மொழி

அத்தன் நவதீர்த்த மாடும் பரிசுகேள்
ஒத்தமெய்ஞ் ஞானத் துயர்ந்தவர் பதத்தைச்
சுத்தம தாகவே விளங்கித் தெளிக்கவே
முத்தியா மென்றுநம் மூலன் மொழிந்ததே.

நவ தீர்த்தம் என்னும் ஒன்பது நிலைகளில் சிவன் ஆடித் திளைக்கும் தன்மையைக் கேட்பீர்! உயர்ந்த மெய்யறிவு பெற்று விட்ட தூயவர்களின் பாதங்களைக் கழுவி, அந்த நீரைத் தன தலையில் தெளித்துக் கொண்டவருக்கு, உயரிய முத்தி கிடைக்கும் என்பது மூலன் வாக்கு.

#1830. உன்னை மறவா வரம் தருக!

மறப்புற்று இவ்வழி மன்னி நின்றாலும்
சிறப்பொடு பூநீர் திருந்த முன் ஏந்தி
மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்
அறப் பெற வேண்டும் அமரர் பிரானே.

அமரர் பிரானே! அறிவு பூர்வமாக இல்லாமல் நான் உலக வழிப் படுவேன் ஆயினும் எனக்கு நீ ஒரே ஒரு வரம் தருவாய். சிறப்பான பூவையும், நீரையும் ஏந்திய வண்ணம் நான் மறவாமல் உன்னை என்றும் வழிபடும் வரம் தருவாய்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1831 to#1834

#1831. எங்கள் ஆதிப் பிரான்

ஆரா தனை யமரர் குழாங்களும்
தீராக் கடலும் நிலத்தும தாய்நிற்கும்
பேராயிரமும் பிரான்றிரு நாமமும்
ஆரா வழியெங்க ளாதிப் பிரானே

ஆயிரம் திரு நாமங்களையும், ‘சிவசிவ’ என்னும் திருப் பெயரையும் ஓயாது கூறி வழி பட்டால் இறைவன் நன்கு விளங்குவான். அப்போது வழிபாடுகள், தேவர்கள், அலை ஓயாதத் திரைக் கடல் இவை அனைத்தும் உம் ஆணை வழிப்பட்டு நிற்கும்.

#1832. பாரைப் படைத்து நின்றான்

ஆனைந்தும் ஆட்டி அமரர் கணந்தொழத்
தானந்த மில்லாத் தலைவ னருளது
தேனுந்த மாமலருள்ளே தெளிந்ததோர்
பாரைங் குணமும் படைத்தது நின்றானே.

பஞ்ச கவ்வியதால் இறைவனை நீராட்டித் தேவர் கணங்கள் தொழுது நிற்கும். தனக்கு என்று ஒரு அந்தம் இல்லாத தனிப் பெரும் தலைவனின் அருள், தேன் சிந்தும் சுவாதிட்டான மலரில் விளங்கும். ஐம் பெரும் பூதங்களையும் அவற்றின் குணங்களையும் படைத்தவன் நம் இறைவன்.

#1833. பெருமான் அருள்வான்

உழைக்கொண்ட பூநீர் ஒருங்குட னேந்தி
மழைக்கொண்ட மாமுகில் மேற்சென்று வானோர்
தழைக்கொண்ட பாசம் தயங்கி நின் றேத்தப்
பிழைப்பின்றி எம்பெரு மானரு ளாமே.

சுவாதிட்டானச் சக்கரத்திலிருந்து மேல் நோக்கிப் பாய்கின்ற உணர்வு நீரை ஒருங்குடன் ஏந்திக் கொள்ள வேண்டும். கருக் கொண்ட முகில்கள் செல்வது போல மேல் நோக்கிச் செல்ல வேண்டும். வானவர்கள் பற்றுக்களில் சிறைப் பட்டுத் தயங்கித் தயங்கி ஈசனை வணங்குவது போல் அன்றிப் பிழையில்லாமல் இறைவனை ஒருமனதுடன் வழிபட்டால் அவன் அருள் உறுதியாகக் கிடைக்கும்.

#1834. அள்ளற் கடலுள் அழுந்துவர்

வெள்ளக் கடலுள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு வார்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார்
அல்லற் கடலுள் அழுந்துகின் றாரே.

விரிசடையில் கங்கை வெள்ளத்தை உடைய எம் பெருமானை, அசையாத நம்பிக்கை கொண்ட உள்ளத்துடன், நீண்டு உயர்ந்த மேல் நோக்கிய ஆயிரம் இதழ்த் தாமரையைக் கொண்டு அன்புடன் வழிபடவேண்டும். இங்ஙனம் தொழ அறியாதவர்கள் வஞ்சனை மிகுந்த பிறவிக் கடலில் இருந்து விடுதலை பெற முடியாது. அவர்கள் மீண்டும் மீண்டும் சேறு நிறைந்த இந்தப் பிறவிக் கடலில் விழுந்து அழுந்தி மேலும் மேலும் துன்பம் அடைவர்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1835 to #1838

#1835. உச்சி மேவி நிற்பான்

கழிப்படும் தண்கடல் கௌவை உடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டறி யார்கள்
பழிப்படு வார்பல ரும்பழி வீழ
வெளிப்படு வோருச்சி மேவி நின்றானே.

கழிக்கப்படும் குளிர்ந்த நீரைக் கொண்ட சுவாதிட்டானக் கடல், கள்ளைப் போன்று இன்பப் பெருக்கைத் தரவல்லது. அதை வழிபட்டு, உலக இயலில் வாழ்பவர்கள் விரிதலும் குவிதலும் செய்யும் மலரையும் அறியார்; மொட்டையும் அறியார். அவர்கள் பழிச் சொற்களுக்கு ஆளாவார்கள். பழிச் சொற்களைக் கெடுத்து உடலைக் கடந்து மேல் முகமாகப் பயணிப்பவர்களின் உச்சித் தலையில் சிவன் மேவி நிற்பான்.

#1836. வயனம் வந்து நிற்பான்

பயன் அறிவு ஒன்று உண்டு; பன் மலர்த் தூவிப்
பயன் அறிவார்க்கு அரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்று உடையான் அடிசேர
வயனங்களால் என்றும் வந்து நின்றானே.

சிவனை அடையப் பயன் அளிக்கும் வழி என்று ஒன்று உண்டு. பல மலர்களைத் தூவி அவனை வழிபடு வோருக்கு அவன் தானே உவந்து வெளிப்படுவான். நயனங்கள் மூன்றுடை நாதனை அடைய, அவன் திருவடிகளைச் சார்ந்துப் பயணம் செய்யும் வழியில் அவனே தானே வந்து நின்று தன்னை காட்டுவான்.

#1837. தீர்த்தனைத் துதித்து உணரார்

ஏத்துவர் மாமலர் தூவித் தொழுது நின்று
ஆர்த்தெமது ஈச னருட்சே வடியென்றென்
மூர்த்தியை மூவா முதலுரு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் துதித்துண ராரே.

மூர்த்தியைத் தீர்த்தனை, மூவாத முதல்வனைத் தனித் தலைவனை, மலர் தூவித் தொழுது நின்று, ஆரவாரம் செய்வதனால் மட்டும் ஒருவனால் மனத்தில் உணர முடியாது.

#1838. நீர்மையை நினைக்க வல்லாரோ?

தேவர்களோடு இசை வந்து மண்ணோ டுறும்
பூவோடு நீர் சுமந்து ஏத்திப் புனிதனை
மூவரில் பன்மை, முதல்வனாய் நின்று அருள்
நீர்மையை யாவர் நினைக்க வல்லாரே.

சுவாதிட்டான மலர் தேவர்களோடும் பொருந்தும்; பிருத்துவித் தத்துவத்துடனும் பொருந்தும். அதன் மலரிலிருந்து மேல் நோக்கி எழும் உணர்வாகிய வான கங்கையில் மும் மூர்த்திகளுடன் ஒன்றாகப் பொருந்தியும், அவர்களிடமிருந்து தனித்து வேறாக நின்றும் அருளுகின்ற ஈசனின் நீர்மையை நினைக்க வல்லவர் யார் ?
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1839 to #1842

#1839. மழைக் கொண்டல்

உழைக்கவல் லோர்நடு நீர்மல ரேந்தி
பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழைக்கொண்ட பாதத்து இனமலர் தூவி
மழைக் கொண்டல் போலவே மன்னி நில்லீரே.

இறைவனை நினைக்க வல்லவர் நடுநாடியாகிய சுழுமுனை வழியே மேல் நோக்கிச் செல்லும் உணர்வு நீரைச் செலுத்த வேண்டும். பிழைகள் எதுவும் இன்றி ஈசன் பெருந்தவம் பேண வேண்டும். இரு கண்மலர்களைச் சேர்க்கும் போது தோன்றும் ஈசன் திருவடிகளைப் பற்றி நிற்க வேண்டும். மழைக் கொண்டல் போன்று நீவிர் மன்னி நிற்கும் வழி இதுவே.

#1840. துன்று சலமலர் தூவித் தொழுவீர்

வென்று விரைந்து விரைப்பணி யென்றனர்
நின்று பொருந்த இறைபணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடில்
கொண்டிடும் நித்தலும் கூறிய வன்றே.

இறைவனை நேர்படத் தொழும் வழி இதுவே. ஐம் பொறிகளை வெல்லுங்கள். விரைந்து இறைவனிடம் செல்லுங்கள். விழுந்து அவனைப் பணியுங்கள். சுவாதிட்டானத்தில் உள்ள சலத்தையும் மலரையும் ஈசனுக்கு அர்ப்பணியுங்கள். அவனுடன் பொருந்தும் வழி இதுவே என்று என்றோ கூறப்பட்டுள்ளது.

#1841. மா திக்குச் செல்லும் வழி.

சாத்தியும் வைத்தும் சயம்புவென் றேத்தியும்
ஏத்தியும் நாளும் மிறையை யறிகிலார்
ஆத்தி மலக்கிட் டகத்திழுக் கற்றக்கால்
மாத்திக்கே செல்லும் வழியது வாமே.

சுவாதிட்டான மலரை இறைவனுக்குச் சாத்தியும், அதை அவன் அடிகளில் வைத்தும், அவனைச் சுயம்பு என்று ஏத்தியும், நாளும் புகழ்ந்து போற்றிய பிறகும் உலகினர் ஈசனை அறிந்து கொள்ள முடியாமல் இருக்கலாம். மனத்தில் உள்ள துன்பத்தை நீக்கிவிட்டு, ஆறு மன மலங்களை முற்றிலுமாக அகற்றி விட்டால் அதுவே அவர்களை அவனிடம் கொண்டு சேர்க்கும் வழியாக ஆகிவிடும்.

#1842. தாவிக்கும் மந்திரம் தாமறியார்

ஆவிக் கமலத்தில் அப்புறத் தின்புற
மேவித் திரியும் விரிசடை நந்தியைக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடை
தாவிக்கும் மந்திரம் தாமறி யாரே.

உயிர்த் தாமரைக்கு மேல் சீவனுக்கு இன்பம் உண்டாகும் வண்ணம் சீவனின் உடலில் பொருந்தி இருப்பவன் விரிசடை நந்தி. அவனைக் கருதிக் கூவினால் தவறாமல் அவனிடம் கொண்டு சேர்க்கும் அந்த விந்தை மந்திரத்தை உலகத்தோர் அறியார்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1843 to #1846

#1843. மாணிக்க மாலை மனம் புகுவான்

சாணாகத் துள்ளே அழுந்திய மாணிக்கம்
காணும் அளவும் கருத்தறி வாரில்லை
பேணிப் பெருகிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம் புகுந்தானே.

சாண் அளவு உடைய அகத்தின் உள்ளே அழுந்திக் கிடக்கும் மாணிக்கம் போன்ற ஈசனை உள்ளபடி அறிந்து கொண்டவர் எவரும் இல்லை. அவனை உள்ளத்தில் எண்ணி எண்ணிப் பேணிப் பெருக்கிய அவன் நினைவு உடையவர்களுக்கு அவன் ஒளி வீசும் மாணிக்க மாலையாக மனத்தில் விளங்குவான்.

#1844. தலைவனைத் தாங்கி நிற்பர்

பெருந்தன்மை நந்தி, பிணங்கு இருள் நேமி
இருந்தன்மை யாலும்என் நெஞ்சு இடம் கொள்ள
வரும்தன்மை யாளனை, வானவர் தேவர்
தரும்தன்மை யாளனைத் தாங்கி நின்றாரே.

சிவன் பெருந்தன்மை உடைய ஈசன்; அவன் சீவன் அறிவில் மாறுபாட்டைச் செய்யும் அறியாமை இருளைக் களையும் ஓர் ஒளிரும் சக்கரப் படை; என் மனத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்ட பேரருள் வாய்ந்தவன்; வேண்டியவருக்கு வேண்டியதைத் தரும் வள்ளல்; அவனை வானவர் தேவர்கள் தாங்கி நிற்பர்.

#1845. ஞான மார்க்க அபிடேகம்

சமைய மலசுத்தி தன் செய லற்றிடும்
அமையும் விசேடமும் ஆனமந் திரசுத்தி
சமைய நிர்வாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்னு ஞானமா னார்க்கபி டேகமே.

சமய தீட்சையால் மலங்கள் நீங்கி உடல் தூய்மை அடையும். அது தன் செயல் அற்றிடும்.
விசேட தீட்சையால் மந்திர சுத்தி ஏற்படும். நிர்வாண தீட்சையால் கலைகள் சுத்தி அடையும்.
அபிடேக தீட்சை என்பது சிவஞானம் உடையவருக்குச் செய்யப் படும் ஒரு திருமுழுக்காட்டு.

#1846. ஊழி கடந்தும் உச்சி உள்ளான்

ஊழிதோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லது
ஊழில் உயிரை உணரவும் தான் ஒட்டான்
ஆழி அமரும் அரிஅயன் என்று உளோர்
ஊழி கடந்தும் ஓர் உச்சி உள்ளானே.

எத்தனையோ ஊழிக் காலங்களில் உணர்ந்து வழிபட்டவரால் அன்றி வேறு எவராலும் அழிவில்லாத ஆன்மாவை உணர்ந்து கொள்ள முடியாது. ஆழியில் அமரும் மாலும், அவன் நாபியில் அமரும் அயனும் பல ஊழிகள் தேடிய போது அவர்களுக்கு எட்டாத ஈசன் ஞானியரின் தலை உச்சியில் விளங்குகின்றான்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

12. குரு பூசை

12. குரு பூசை = குரு மண்டல பூசை

#1847 to #1851

#1847. போற்றுவன் யானே

ஆகின்ற நந்தி அடித்தாமரை பற்றிப்
போகின்ற உபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறாறு அதனின் மேல்
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.

நந்தியின் திருவடிகளைப் பற்றிக் கொண்டு, மூலாதாரத்தில் இருந்து சுழுமுனை நாடி வழியே மேலே எழும்பிச் செல்லும் விதத்தையும், அங்கு சென்ற பின் ஈசனைப் பூசிக்கும் விதத்தையும், உடலின் தத்துவங்களான முப்பத்து ஆறினையும் கடந்த ஆன்மா பரம் ஆவதையும் நான் புகழ்ந்து போற்றுவேன்.

#1848. ஊனினை நீக்கி உணர்பவர்

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமல ரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்கழல் சேரவொண் ணாதே.

கானகத்தில் நன்கு விளைந்த சந்தனத்தைச் சாந்தாக அரைத்துத் தடவினாலும், வண்ண வண்ண மலர்களை வானளவாகத் தூவி வழி பட்டாலும், தேனமர் பூக்கள் செறிந்த சிவன் கழல்களைச் சென்று சேருவதற்கு, ஊன் மேல் உள்ள பற்றினை ஒருவன் முற்றிலும் துறந்திட வேண்டும். ஈசனைத் தான் பெற்ற ஞானத்தால் பற்றிட வேண்டும்.

#1849. சேவடி சேரல் செயல் அறல் தானே

மேவிய ஞானத்தில் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞானநெறி நிற்றல் அர்ச்சனை
ஓ அற உட்பூசனை செய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயல் அறல் தானே.

‘மெய்ப் பொருளின் காட்சி’ என்பது மெய் ஞானத்தில் சிறந்து இருத்தல்.
‘அரன் அர்ச்சனை’ ஆகும் அங்ஙனம் ஞான நெறியில் நிலைத்து இருப்பது.
‘உத்தம வழிபாடு’ இடையறாது சிவனைச் சித்தத்தில் சிந்தித்து இருத்தல்.
‘அவன் சேவடிகளைச் சென்று சேருதல்’ தன் செயல் அற்று இருப்பதுவே.

#1850. ஈசனை நச்சுமின்

உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சுமின் நச்சி ‘நம’ என்று நாமத்தை
விச்சுமின் விச்சி விரிசுடர் மூன்றினும்
நச்சுமின் பேர்நந்தி நாயகன் ஆகுமே.

காலை , மதியம், மாலை என்னும் முப்பொழுதுகளிலும் ஈசனை நீங்கள் நச்சுங்கள். விருப்பத்துடன் ‘நமசிவாய’ என்னும் அவன் பெயராகிய விதையைத் தெளியுங்கள். அந்த விதை கதிரவன், திங்கள், அக்கினி என்று சுடர் விடும் மூன்று மண்டலங்களிலும் விரைந்து விளைந்து பயிராவதைப் பாருங்கள். அந்தப் பயிரே நந்தி என்னும் பெயருடைய நம் சிவபெருமான் ஆகும்.

#1851. ஞானி ஊண் பார்க்கில் விசேடமே

புண்ணிய மண்டலம் பூசை நூறாகுமாம்
பண்ணிய மேனியும் பத்து நூறாகுமாம்
எண்ணிலிக் கைய மிடிற் கோடி யாகுமால்
பண்ணிடின் ஞானியூண் பார்க்கில் விசேடமே.

சிவத்தலங்களில் சிவனுக்குப் பூசை செய்வது நூறு மடங்கு சிறந்தது ஆகும்.
தவம் செய்பவர் சன்னதியில் செய்யும் சிவபூசை ஆயிரம் மடங்கு சிறந்தது ஆகும்.
ஆசைகளைத் துறந்து விட்ட சிவயோகிக்கு உணவு அளித்தல் கோடி மடங்கு சிறந்தது ஆகும். அந்த சிவ ஞானியர் உணவு உண்பதைக் காணுதல் அனைத்திலும் சாலச் சிறந்தது ஆகும்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1852 to #1856

#1852. இந்துவும் பானுவும் இயங்காத் தலம்

இந்துவும் பானுவும் இயங்கும் தலத்திடை
வந்தித்தது எல்லாம் அசுரர்க்கு வாரியாம்;
இந்துவும் பானுவும் இயங்காத் தலத்திடை
வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.

திங்கள் கலை ( இடகலை என்னும் இடது நாசித் துவாரம்), கதிரவன் கலை ( பிங்கலை என்னும் வலது நாசித் துவாரம்) இவை இரண்டின் வழியாகவும் மூச்சு இயங்குகின்ற போது இறை வழிபாடு செய்வது அசுரர்களுக்கு உரிய செயல். இந்த இரண்டு கலைகளும் இயங்காமல் நடு நாடியாகிய சுழுமுனையில் பிராணன் பொருந்தி இருக்கும் பொழுது வழிபாடு செய்வது சிவனுக்கு உகந்த சிறந்த பூசை ஆகும்.

#1853. நந்தியின் பூசை நற்பூசை ஆமே

இந்துவும் பானுவும் என்று எழுகின்றது ஓர்
விந்துவும் நாதமும் ஆகி, மீதானத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நற்பூசை ஆமே.

சூரிய மண்டலம், சந்திர மண்டலத்தைக் கடந்த மேலான இடத்தில் அருவமான விந்துவும், நாதமும் விளங்குகின்றன. சீவன் சிந்தனை, சாக்கிரதத்தைக் கடந்து சாக்கிராதீதத்தை அடைந்து அங்கு நந்தியை பூசித்தால் அதுவே நந்திக்கு மிகவும் நல்ல பூசை ஆகும்.

#1854. தனியுறு பூசை சதாசிவனுக்கு.

மன பவனங்களை மூலத்தால் மாற்றி
அனித உடல் பூதம் ஆக்கி அகற்றிப்
புனிதன் அருள் தனில் புக்கிருந்து இன்பத்
தனியுறு பூசை சதாசிவற்கு ஆமே.

மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி அதை மேல் நோக்கிச் செலுத்த வேண்டும். மூச்சு, மனம் ஆகியவற்றை தம் நிலையில் இருந்து மாற்றி அமைக்க வேண்டும். அநித்தியாமகிய இந்த பூத உடலை அதற்குக் காரணமான பஞ்ச பூதங்களில் ஒடுக்க வேண்டும். அந்த பஞ்ச பூதங்களைப் பின்னர் பஞ்ச தன் மாத்திரைகளில் ஒடுக்க வேண்டும். சிவன் அருட்கடலில் மூழ்கி மிகுந்த இன்பத்துடன் செய்யும் தனிப் பெரும் பூசையே தலைவன் சதாசிவனுக்கு ஏற்ற பூசை ஆகும்.

#1855. தாழ் சடையோன் தான் கொள்வான்

பகலும் மிரவும் பயில்கின்ற பூசை
இயல்புடை ஈசற் கிணை மலராக
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமும் தான்கொள்வன் தாழ்சடை யோனே.

கதிரவன் கலை, திங்கள் கலை இவை இயங்கும் போது செய்யும் சிவபூசை இறைவனுக்கு இரு மலர்கள் கொண்டு பூசிப்பது போல மிகவும் இயல்பானது. கதிரவன் கலையும், திங்கள் கலையும் இயங்காமல், பிராணன் சுழுமுனையில் இருக்கும் போது செய்யும் சிவபூசையோ எனில் விரிசடை பெருமானுக்கு மிக மிக விருப்பமானது.

#1856. இராப் பகல் அற்ற இடம்

இராப் பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பக லற்ற இறையடி யின்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத் தேனே.

இரவு பகல் என்னும் பேதங்கள் இல்லாத சாக்கிராதீத நிலையில் நான் இருந்தேன்.
வேறு எந்த வித எண்ணங்களும் இல்லாமல் சிவானந்தத் தேனை நான் அருந்தினேன்.
இரவோ அன்றிப் பகலோ இல்லாத இறைவனின் திருவடி இன்பத்தில் நான் திளைத்தேன்.
இரவும் பகலும் போன்ற அசுத்த, சுத்த மாயைகள் இரண்டையும் நான் களைந்தேன்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

13. மகேசுவர பூசை

அடியவர்களுக்குச் செய்யும் பூசை
இறைவனுக்குச் செய்யும் பூசை

#1857 to #1860

#1857. நடமாடக் கோயில் நம்பர்

படமாடக் கோயில் பரமற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோவில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோவில் நம்பர்க்கு ஒன்று ஈயின்
படமாடக் கோயில் பரமற்கு அது ஆமே

தீட்டிய ஓவியம் போன்ற அழகிய மாடங்களை உடைய கோயிலில் உறையும் இறைவனுக்கு ஏதேனும் படைத்தால், அது நடமாடும் ஆலயங்கள் ஆகிய அவன் அடியார்களுக்குச் சென்று சேராது. ஆனால் நடமாடும் ஆலயங்களாகிய சிவனடியார்களுக்கு ஏதாவது கொடுத்தால், அது தீட்டிய ஓவியம் போன்ற மாடங்களை உடைய கோவிலில் உறையும் ஈசனைச் சென்று அடையும்.

#1858. எண்டிசை நந்தி எடுத்து உரைத்தான்

தண்டறு சிந்தைத் தபோதனர் மகிழ்ந்து
உண்டது மூன்று புவனமும் உண்டது
கொண்டது மூன்று புவனமும் கொண்டதென்று
எண்டிசை நந்தி எடுத்துரைத் தானே.

தீமைகள் அற்ற தூய சிந்தை உடைய தவச் செல்வர்கள் மகிழ்வுடன் உண்பது, மூன்று உலகங்களும் உண்பதற்குச் சமம். அவர்கள் உவந்து ஏற்றுக் கொள்வதோ எனில், மூன்று உலகங்களும் ஏற்றுக் கொண்டதற்குச் சமம். இதை எண்திசைக்கும் தலைவன் ஆகிய என் நந்தி எடுத்து உரைத்தான்.

#1859. ஆத்தனுக்கு ஈந்த அரும் பொருள்

மாத்திரை ஒன்றினில் மன்னி அமர்ந்து உறை
ஆத்தனுக்கு ஈந்த அரும் பொருளானது
மூர்த்திகள் மூவருக்கும் மூவேழ் குரவர்க்கும்
தீர்த்தம் அதுஆம் அது தேர்ந்து கொள்வீரே.

ஒரு மாத்திரையாகிய ‘அ’கரத்தில் உறைபவன் சிவன். அவன் அடியவருக்குத் தரும் அரிய பொருள் என்பது மும் மூர்த்திகளுக்கும் மற்றும் மூவேழு தலைமுறையினருக்கும் அளித்ததற்கு ஒப்பாகும்.

#1860. பகலூண் பலத்துக்கு நிகரில்லை

அகர மாயிர மந்தணர்க் கீயிலென்
சிகர மாயிரம்செய்து முடிக்கிலென்
பகரும் ஞானி பகலூண் பலத்துக்கு
நிகரிலை எனபது நிச்சயம் தானே.

இல்லங்கள் ஆயிரம் கட்டி அவற்றை அந்தணர்களுக்கு ஈவதனால் என்ன பயன்? சிறந்த விமானம் அமைந்த ஆயிரம் கோவில்களைக் கட்டுவதானால் என்ன பயன்? உண்மையில் இவை இரண்டும் ஒரு சிவஞானிக்கு ஒருவர் ஒரு நாள் அளித்த பகலுணவு தரும் பயனுக்கு சிறிதும் ஒப்பாகா.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1861 to #1864

#1861. நீறிடும் தொண்டர் நினைவின் பயனிலை

ஆறிடும் வேள்வி அருமறை நூலவர்
கூறிடும் அந்தணர் கோடிப்பே ருண்பதில்
நீறிடும் தொண்டர் நினிவின் பயனிலை
பேறெனில் ஓர் பிடி பேறது வாகுமே.

வாழ்க்கையை ஆற்றுப்படுத்தும் வேள்விகளைப் புரிகின்ற, வேத வல்லுனர்களாகிய, முப்புரி நூலணிந்த ஒரு கோடி க்கு உஅந்தணர்களுக்கு உணவு அளிப்பதை விட, திருநீறு அணிந்த சிவனடியார் ஒருவருக்கு உணவு அளிப்பது பெரும் பேறு ஆகும்.

#1862. ஆறு அணி செஞ்சடை அண்ணல் இவர்

“ஏறுஉடை யாய்இறை வாஎம் பிரான்” என்று
நீறிடுவார் அடியார் நிகழ் தேவர்கள்
ஆறு அணி செஞ்சடைஅண்ணல் இவர் என்று
வேறுஅணி வார்க்கு வினை இல்லை தானே.

“விடை ஏறும் பெருமானே! எம் இறைவா! எம் பிரானே!” என்று கூறிக் கொண்டு நீறு பூசிக் கொள்பவர்கள் பூலோகத் தேவர்கள் ஆவர். “கங்கையைச் சென்னி மேல் அணிந்த சிவன் இவனே” என்று எண்ணப் படுபவருக்கு வினைகள் எதுவும் இல்லை.

#1863. நந்தி என்னும் பிதற்று ஒழியேன்

சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நான் நொந்து நொந்து, வரும் அளவும் சொல்லப்
பேர் நந்தி என்னும் பிதற்று ஒழியேனே.

சிறந்த ஒளி மண்டலத்தில், அழகிய திருமுகத்துடன் விளங்கும், நந்தி என்னும் பெயர் படைத்த, ஒளிரும் செஞ்சடையனைச் சிவனை, நான் மனம் நெகிழ்ந்து இடைவிடாது எண்ணிக் கொண்டே இருப்பேன். அவன் என் முன் தோன்றும் வரை அவன் பெயரை இடையறாது உச்சரித்த வண்ணமே இருப்பேன்.

#1864. தொழுது எழ இன்பம் ஆம்

அழி தகவு இல்லா அரனடி யாரைத்
தொழுதகை ஞாலத்துத் தூங்கு இருள் நீங்கும்
பழுது படா வண்ணம் பண்பனை நாடித்
தொழுது எழ வையகத்து, ஓர் இன்பம் ஆமே.

அழியும் தன்மை அற்ற அரன் அடிகளைத் தொழுதால் உலகத்தோரின் அறியாமை என்னும் இருள் அகலும். அந்த நிலையில் பழுது வராமல் பார்த்துக் கொள்ள, பண்பாளனாகிய சிவனை நாடி அவனைத் தொழுது எழுந்தால் சீவனின் துன்பம் நீங்கும்; சீவனுக்கு இன்பம் விளையும்.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

#1865 to #1868

#1865. ஆய்ந்து ஒழிந்தார்

பகவற்கு ஏது ஆகிலும் பண்பு இலர் ஆகிப்
புகும் மாத்தராய் நின்று பூசனைசெய்யும்
முகமத்தோடு ஒத்து நின்று ஊழி தோறு ஊழி
அகமத்தர் ஆகி நின்று ஆய்ந்தொழிந் தாரே.

ஒருவரிடம் இறைவனை அறிந்து கொள்வதற்கு ஏற்ற உயரிய பண்பு சிறிதும் இல்லாதிருக்கலாம். அவர் மதத்துடனும் கர்வத்துடன் பூசைகள் செய்து வரலாம். ஆனால் இறைவழிப்பாட்டின் உபசாரங்களுடன் அவர் வெகு காலம் பொருந்தி நின்றால், உள்ளத்தில் களிப்பு எய்துவார். காலப் போக்கில் அறிவில் நிலை பெற்றுத் தெளிந்து ஆராய்ந்து தன் பாசத் தளைகளைத் துணித்து விடுவார்.

#1866. சேடம் பருகிடில் முத்தியாம்

வித்தக மாகிய வேடத்த ருண்டவூண்
அத்த னயன்மா லருந்திய வண்ணமாம்
சித்தம் தெளிந்தவர் சேடம் பருகிடின்
முத்தியா மென்று மூலன் மொழிந்தானே.

திருந்திய ஞானம் படைத்த மெய்யடியவர் உண்ணும் ஊண் தெய்வத்துக்கு ஏற்ற உணவாகும். அது திருமால், அயன் அத்தன் என்னும் மும்மூர்த்திகள் உண்ணும் உணவுக்குச் சமம். சித்தம் தெளிந்த ஞானியர் உண்ட உணவின் மிச்சத்தை உண்பது முக்திக்கு வழி என்று மூலன் மொழிந்துள்ளான்.

#1867. போழ்வினை தீர்க்கும் பொன்னுலகம்

தாழ்விலார் பின்னும் முயல்வர் அருந்தவம்
ஆழ்வினை யாழ அவர்க்கே அறஞ்செய்யும்
ஆழ்வினை நீக்கி அருவினை தன்னொடும்
போழ்வினை தீர்க்குமப் பொன்னுல காமே.

தம் முயற்சியில் சிறிதும் தளராமல் மகேசுவரன் அருந்தவம் செய்து கொண்டே இருப்பார். சீவனைத் துன்பத்தில் ஆழ்த்தும் பிராரப்த வினைகள் நீங்கிட மகேசுரனுக்கே அறம் செய்ய வேண்டும். அது வரும் வினைகள், வந்த வினைகள், வரப்போகும் வினைகள் என்னும் மூன்றையுமே முற்றிலுமாக அழித்து விடும்.

#1868. பார் மழை பெய்யும்

திகைக்கு உரியான் ஒரு தேவனை நாடும்
வகைக்கு உரியான் ஒரு வாதி இருக்கின்
பகைக்கு உரியார் இல்லைப் பார்மழை பெய்யும்
அகக்குறை கேடு இல்லை அவ்வுல குக்கே.

திசைகளைத் தன் உரிமையாகக் கொண்டு உடையாக அணிந்துள்ள ஈசனை நாடுகின்ற, வகையில் அமைந்துள்ள அவன் அடியவர்கள் இருக்கும் நாட்டில், பகைவர்கள் என்று எவரும் இறார். காலம் தவறாமல் மழை பெய்யும் அகக் குறைகள் என்று அங்கு எதுவும் நிலவாது.
 
திருமந்திரம் - ஏழாம் தந்திரம்

14. அடியார் பெருமை

#1869 to #1872


#1869. அவ்வுலகத்தே அருள் பெறுவர்

அவ்வுல கத்தே பிறந்தவ் வுடலோடும்
அவ்வுலகத்தே அருந்தவம் நாடுவர்
அவ்வுலகத்தே அரனடி கூடுவர்
அவ்வுலகத்தே அருள் பெறுவாரே.

முன்பு செய்த நல்வினைப் பயனால் மண்ணுலகில் சிவநேசத்துடன் கூடிய பிறவி எடுப்பவர், அந்த உடலுடன் அந்த உலகில் நல்ல தவம் செய்வர். அந்த உலகத்தில் அரன் அருள் பெற்று அவ்வுலகத்தில் அரன் அடியினில் கூடுவர்.

#1870. நாம் உய்ந்து ஒழிந்தோம்

கொண்ட குறியும் குலவரை உச்சியும்
அண்டரும் அண்டத்து அமரரும் ஆதியும்
எண்டிசை யோரும் வந்து என் கைத்தலத்தினுள்
உண்டு எனில், நாம் இனி உய்ந்தொழிந் தோமே.

சிவனை அடை வது நான் கொண்ட குறிக்கோள். குலவரையின் உச்சியாகிய சகஸ்ராரத்தில், என் சுழுமுனை நாடியின் முடிவில், இந்த அண்டங்களில் வாழும் அனைவரும், அமரர்களும், ஆதிப் பிரானும், எட்டுத் திசைகளில் வசிக்கின்ற உள்ள அனைவரும் வந்து அமையப் பெற்றால், அப்போதே நான் உய்ந்து ஒழிவேன்.

#1871. அவன் அன்றி இல்லையே!

அண்டங்கள் எழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசர முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைத்து அளிப்பு ஆதியும்
கண்ட சிவனும் என்கண் அன்றி இல்லையே.

ஏழு உலகங்களும், அகண்ட வானமும், உயிர்த் தொகைகளும், உலகில் உள்ள அசையும் அசையாப் பொருட்களும், அவற்றின் மாறுபடும் குணங்களும், பண்டைய மறைகளும், படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத் தொழில்களும், அவற்றை நடத்துகின்ற சிவனும், என்னுள் அன்றிப் புறத்தில் வேறு எங்கும் இல்லை.

#1872. அண்ணல் பெருமை ஆய்ந்தது மூப்பே

பெண் அல்ல ஆண் அல்ல பேடு அல்ல மூடத்துள்
உள் நின்ற சோதி ஒருவர்க்கு அறி ஒணாக்
கண் இன்றிக் காணும் செவி இன்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆஐந்தது மூப்பே.

இறைவன் ஆண் அல்லன், பெண் அல்லள், பேடு அல்ல. தன் அறியாமையினுள் மறைந்து உறைகின்ற ஒருவராலும் அவனை அறிந்து முடியாது. கண்கள் இல்லாமலே அவன் காண வல்லவன்; செவிகள் இல்லாமலேயே அவன் கேட்க வல்லவன். இத்தகைய அண்ணலின் பெருமையை ஆராய்ந்து அறிந்து கொள்வதே முதிர்ந்த ஞானம் ஆகும்.
 

Latest ads

Back
Top