Quotable Quotes Part II

#482 to #484

#482. மூச்சுக் காற்றும் பாதிக்கும்

குழவியும் ஆணாம் வலத்தது வாகில்

குழவியும் பெண்ணாம் இடத்ததுவாகில்
குழந்தையும் இரண்டாம் அபானன் எதிர்க்கில்
குழவி அலி ஆகும் கொண்ட கால் ஒக்கிலே.

இன்பம் துய்க்கும் போது ஆண் மகனின் மூச்சுக் காற்று சூரிய கலையில் (வலது நாசித் துவாரத்தில்) இயங்கினால் ஆண் குழந்தை கருவில் உருவாகும். சந்திர கலையில் (இடது நாசித் துவாரத்தில்) மூச்சுக் காற்று இயங்கினால் கருவில் பெண் குழந்தை உருவாகும். சுக்கிலத்தைச் செலுத்தும் பொழுது மலக் காற்றகிய அபான வாயு அதை எதிர்த்தால், சுக்கிலம் இரண்டாகப் பிரிந்து கருவில் இரட்டைக் குழந்தைகள் உருவாகும். சூரிய கலையும், சந்திர கலையும் ஒத்தவாறு இயங்கினால் அலி ஆகிவிடும் பிறக்கும் குழந்தை.

#483. கருவின் உருவம்

கொண்ட நல்வாயு இருவர்க்கும் ஒத்தெழில்
கொண்ட குழவியும் கோமளமாயிடுங்
கொண்ட நல்வாயு இருவர்க்கும் குழறிடில்
கொண்டது மில்லையாம் கோல்வளை யாட்கே.

புணரும் ஆண் பெண் இருவரின் மூச்சுக் காற்றும் ஒத்து இருந்தால் கருவில் அழகிய குழந்தை உருவாகும். புணரும் போது இருவருக்கும் உயிர்ப்புத் தடுமாறினால் குழந்தை உண்டாகும் வாய்ப்பு இல்லை.

#484. பொற்சிலை போன்றது

கோல்வளை உந்தியில் கொண்ட குழவியும்

தால்வளை யுள்ளே தயங்கிய சோதியாம்
பால் வளர்ந்து உள்ள பகலவன் பொன் உருப்
போல் வளர்ந்து உள்ள பொருந்து உரு ஆமே.

பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தை பேரொளி உடையது. அது ஆணாகவோ பெண்ணாகவோ வளரும். கதிரவனில் பொன்னிற ஒளியைப் பெற்று வளர்ந்து முழு வடிவம் பெறும்.



 
#485 to #487

#485. உயிருக்கு இல்லை உருவம்!

உருவம் வளர்ந்திடும் ஒண் திங்கள் பத்தில்

பருவமது ஆகவே பாரினில் வந்திடும்
மருவி வளர்ந்திடும் மாயையினாலே
அருவம் அது ஆவது இங்கு ஆர் அறிவாரே.

கருவில் குழந்தை பத்து மாதங்கள் வளரும். தக்க காலத்தில் உலகில் வந்து பிறந்திடும். மாயை என்னும் வளர்ப்புத் தாயுடன் பொருந்தி மேலும் மேலும் வளரும். ஆயினும் அந்த உருவத்தின் உள்ளே இருக்கும் உயிர் அருவமானது என்ற உண்மையை யார் அறிவார் ?

#486. மயக்கும் மாயை

இட்டான் அறிந்திலன் ஏற்றவள் கண்டிலள்,

தட்டான் அறிந்தும் ஒருவர்க்கும் உரைத்திலன்,
பட்டாங்கு சொல்லும் பரமனும் அங்கு உளன்,
கெட்டேன் இம்மாயையின் கீழ்மை எவ்வாறே.

கருவுக்குக் காரணம் ஆன தந்தை அது என்ன குழந்தை என்றறியான். அதைக் கருவில் ஏற்ற தாயும் அது என்ன குழந்தை என்றறியாள். ஒரு தட்டானைப் போல அதை உருவாக்கும் நான்முகனும் யாருக்கும் அதைக் கூறமாட்டான். அதை அமைக்கும் சதாசிவனும் அங்கே இருப்பான். மாயையின் மயக்கும் சக்தி தான் என்னே!

#487. பழமைக்கும் பழமை


இன்பு உற நாடி இருவரும் சந்தித்தித்

துன்பு உறு பாசத்தில் தோன்றி வளர்ந்த பின்,
முன்பு உற நாடி நிலத்தில் முன் தோன்றிய
தொன்பு உற நாடி நின்று ஓதலும் ஆமே.

இன்பம் அடைய விரும்பிய ஆண் பெண் இருவரும் புணருவர். அப்போது துன்பம் பொருந்திய பாசத்தில் தோன்றும் ஓர் உயிர். அந்த உயிர் வளர்ந்த பின்னர் மேன்மை அடைய விரும்பினால் செய்ய வேண்யது இதுவே. உலகில் எல்லாவற்றுக்கும் பழமையான இறைவனை நாடித் துதிக்க வேண்டும்.

 
#488 to #491

#488. கரு வளரும் விதம்

குயிற்குஞ்சு முட்டையைக் காக்கைக் கூட்டு இட்டால்

அயிர்ப்பு இன்றிக் காக்கை வளர்க்கின்றது போல்
இயக்கு இல்லைப் போக்கு இல்லை ஏன் என்பது இல்லை
மயக்கத்தால் காக்கை வளர்க்கின்ற வாறே.

குயில் தன் முட்டையைக் காக்கைக் கூட்டில் இட்டாலும், காக்கை அதைச் சந்தேகிக்காமல் வளர்த்து வரும். அது போன்றே தாயும் ஒரு மயக்கத்துடன் கருவின் உடலை வளர்ப்பாள், ஒரு இயக்கம் இல்லாமலும், போக்கு இல்லாமலும், ஏன் என்று கேட்காமலும்.

#489. இறைவன் இன்புறுவான்

முதற்கிழங்கு ஆய் முளையாய் அம்முளைப்பின்

அதற் புதலாய், பலமாய் நின்று அளிக்கும்
அதற்கு அதுவாய் இன்பம்ஆவது போல
அதற்கு அதுவாய் நிற்கும் ஆதிப்பிரானே.

முதலில் விதை மட்டும் இருக்கும். பிறகு அது முளைக்கும். பிறகு வளர்ந்து புதர் ஆகும். பிறகு நல்ல கனிகளை அளிக்கும். இதுவே தாவரங்களின் இயல்பு. இதைப் போன்றே எல்லாவற்றையும் படைத்துக் காத்து அளிப்பதே இறைவனுக்கு இன்பம் தருகின்ற செயல் ஆகும்

#490. தவத்தால் அறியலாம்

ஏனோர் பெருமையன் ஆகிலும் எம் இறை

ஊனே சிறுமையுள் உட்கலந்து, அங்குளன்,
வானோர் அறியும் அளவல்ல மாதேவன்
தானே அறியும் தவத்தின் உள்ளே.

ஏனைய தேவர்களைக் காட்டிலும் அதிக ஏற்றம் உடையவன் இறைவன். ஆயினும் குற்றம் குறைகள் நிறைந்த சீவர்களின் உடல்களிலும் அவன் கலந்து விளங்குகின்றான். அத்தகைய பெருந்தகையை தேவர்களாலும் அறிய இயலாது. மனிதர்கள் தாங்கள் செய்யும் தவத்தினால் அவனை அறிந்து கொள்ளலாம்

#491. பக்குவம் தரும் உடலை!

பரத்தில் கரைந்து பதிந்த நற்காயம்

உருத்தரித்து இவ்வுடல் ஓங்கிட வேண்டி
திரைக்கடல் உப்புத் திரண்டது போலத்
திரித்துப் பிறக்கும் திருவருளாலே.

இறைவனிடம் நுண்மையாக ஒடுங்கிய உடல் மீண்டும் பருவத்துக்கு ஏற்ற பயன் அடைய வேண்டும். அலைகடலில் கதிரவனின் வெப்பத்தால் திரண்டு உருவாகும் உப்பைப் போலவே, இறைவன் அருளால் மீண்டும் உடல் ஒரு கருவிலே உருவாகின்றது.


 
15. சீவ வர்க்கங்கள்

15. மூன்று வகை சீவ வர்க்கங்கள்

1. விஞ்ஞானகலர் – ஆணவம் ஒன்றை மட்டும் உடையவர்.

2. பிரளயாகலர் – ஆணவம், கன்மம் இரண்டையும் உடையவர்.

3. சகலர் – ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றையும் உடையவர்.


#492 to #494

#492. சிவமயம் ஆக்கும்

சக்தி சிவன் விளையாட்டால் உயிராக்கி

ஒத்த இரு மாயா கூட்டதிடையூட்டிச்
சுத்தம தாகுந் துரியம் புரிவித்துச்
சித்தம் புகுந்து சிவமயமாக்குமே.

சிவனும் சக்தியும் உயிர்களை நுண் உடல்களில் புகுத்துவர். இது அவர்களுக்கு ஒரு விளையாட்டு. சுத்தம், அசுத்தம் என்னும் இரண்டு மாயைகளுடன் கூட்டுவிப்பர். மேலான துரிய நிலையை அடையச் செய்வர். அதன் பின் உயிர்கள் சிவமயம் ஆகும்படி அருள் செய்வர்.

#493. பத்துப் பிரிவினர்

விஞ்ஞானர் நால்வரும், மெய்பிரளயாகலத்
தஞ்ஞானர் மூவரும், தாங்கு சகலத்தின்
அஞ்ஞானர் மூவரும் ஆகும் பதின்மராம்;
விஞ்ஞானர் ஆதியர் வேற்றுமை தானே.

தெளிந்த ஞானம் உடைய விஞ்ஞானர் நான்கு வகைப்படுவர். பேரூழிக் காலத்தில் ஞானம் அடையும் பிரளயாகலர் மூன்று வகைப்படுவர். உலக வாழ்விலும் அறியாமையிலும் அழுந்தியுள்ள சகலர் மூன்று வகைப்படுவர். இவ்வாறு சீவர்கள் பத்து வகைப்படுவர்.

விளக்கம்


விஞ்ஞானர் நான்கு வகையினர்:


உடலுடன் இருக்கும் போதே சிவத்துடன் பொருந்திய சீவன் முக்தர் ஒருவகை

உடலை விட்டுப் பிரிந்த பின்னர் சிவத்துடன் பொருந்துகின்ற

உத்தம, மத்திம, அதமர் என்ற மேலும் மூன்ற வகையினர்.

பிரளயாகலர் மூன்று வகையினர்:

உத்தம, மத்திம, அதம வகையினர்.

சகலர்:

உத்தம, மத்திம, அதம வகையினர்.

#494. விஞ்ஞானர் நான்கு வகையினர்

விஞ்ஞானர் கேவலத்து ஆராது விட்டவர்;

அஞ்ஞானர் அட்ட வித்தேசாரம் சார்ந்துளோர்;
எஞ்ஞானம் ஏழ்கோடி மந்திர நாயகர்;
மெய்ஞானர் ஆணவம் விட்டு நின்றாரே.

ஆணவத்தை மட்டும் உடைய தன்னலம் நீங்கியவர்; ஆன்ம ஞானம் உடைய அட்ட வித்தியேசுரபதம் சார்ந்தவர், உயர்ந்த ஞானம் கொண்ட ஏழு கோடி மந்திரேசுரர்; உண்மையான் அஞ்ஞானம் பெற்று ஆணவ மலத்தை அழித்தவர் என்று நான்கு வகைப்படுவர் விஞ்ஞானகலர்.






 
#495 to #497

#495. அடையும் பதங்கள்

இரண்டாவதில் முத்தி எய்துவர் அத்தனை,

இரண்டாவதுள்ளே இருமல பெத்தர்,
இரண்டு ஆகும் நூற்றெட்டு உருத்திரர் என்பர்
முரண்சேர் சகலத்தார் மும் மலத்தாரே.

விஞ்ஞானகலரில் பக்குவம் சற்றுக் குறைவாக இருப்பவர்கள் உடலுடன் உள்ள போதே சீவன் முக்தி அடைவதில்லை. அவர்கள் அடுத்த பிறவியில் சிவனைச் சென்று அடைவர். பிரளயாகலர் இரு பிறவிகளில் உருத்திர பதவி அடைவர். மாயையினால் பந்திக்கப்பட்ட சகலர் தங்களுடைய மூன்று மலங்களும் அழியாமல் இருப்பார்.

#496. சகலரின் வகைகள்

பெத்தத்த சித்தோடு பேண்முத்தச் சித்துஅது
ஒத்திட்டு இரண்டிடையூடுஉற்றார் சித்துமாய்
மத்தது மும்மலம் வாட்டுகை மாட்டாதார்
சத்தத்து அமிழ்ந்து சகலத்து உள்ளாரே.

ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்றும் உடையவர் சகலர். இவர்களில் சிலர் சித்தான சிவதைப் பேணியதால் ஞான வடிவான சிவம் ஆகி விடுவர். ஞானம் கிரியை என்னும் இரண்டும் ஒத்துப் போய் சதாசிவ நிலையில் பற்றி நிற்பவர் ஆணவம் கன்மம் இரண்டையும் கடந்து ஞான வடிவாக நிற்பர். ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றும் நீங்கப் பெறாதவர் நாதத் தத்துவத்தை அறியாத சகலராகவே எப்போதும் இருப்பர்,

#497. சிவனை அறிந்தவர் ஆவார்

சிவம்ஆகி ஐவகைத் திண்மலம் செற்றோர்
அவம்ஆகாச் சித்தர் முத்தாந்தத்து வாழ்வார்
பாவம்ஆன தீர்வோர்; பசுபாசம் அற்றோர்
நவம் ஆன தத்துவம் நாடிக் கொண்டாரே.

ஐந்து வகைப்பட்ட மலங்கள் ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி என்பவை. இந்த ஐந்தையும் வென்றவர் சித்தர் ஆகிவிடுவார். என்றும் அழிவில்லாத நிலையில் இருப்பார். அவருடைய பசு பாசத் தன்மைகள் நீங்கிவிடும். அவருக்குப் பிறவிப்பிணி ஓழிந்து விடும். அவர் சிவனின் ஒன்பது நிலைகளையும் நன்கு அறிவார். அவை சிவம், சக்தி, நாதம், விந்து, சதாசிவன் , மகேசுரன், உருத்திரன், திருமால், நான்முகன் என்பவை ஆகும்.


 
#498 to #500

#498. ஒன்பது வகையினர்

விஞ்ஞானர் ஆணவ கேவலம் மேவுவார் ;

விஞ்ஞானம் மாயையில் தாங்கும் இருமலர்;
அஞ்ஞானர் அச்சகலத்தார் சகலராம்
விஞ்ஞானர் ஆதிகள் ஒன்பான் வேறு உயிர்களே.

விஞ்ஞானர் ஆணவம் என்ற ஒரு மலத்தை மட்டும் உடையவர். சுத்த மாயையில் உள்ள பிரளயாகலர் ஆணவம், கன்மம் என்னும் இரண்டு மலங்களை உடையவர். சகலர் அறிவற்றவர்கள். ஆணவம், கன்ம, மாயை என்னும் மும்மலங்களையும் உடையவர். இந்த ஒவ்வொரு வகையிலும் உத்தமம், மத்திமம், அதமம் என்ற மூன்று மூன்று பிரிவுகள் என மொத்தம் ஒன்பது வகைகள் உள்ளன.

#499. மூவருக்கும் முக்தி

விஞ்ஞான கன்மத்தால் மெய்அகம் கூடி
அஞ்ஞான கன்மத்தினால் சுவர் யோனி புக்கு
எஞ்ஞான மெய் தீண்டியே இடைவிட்டுப் போய்
மெய்ஞானர் ஆகிச் சிவம் மேவல் உண்மையே.

விஞ்ஞானகலர் எடுத்த பிறவியிலேயே ஞானம் பெற்றுச் சிவபதம் சென்று அடைவர். இவர்கள் ஞான கர்மத்தால் உள் நின்று உணர்த்தப் பெறுவர் . பிரளயாகலர் இங்ஙனம் ஞான கர்மத்தால் உள் நின்று உணர்தப் பெறார். இவர்கள் சில பிறவிகளில் சுத்த வித்தியா மண்டலங்களை அடைந்து அதன் பின்னர் சிவபதம் சென்று சேருவர். சகலர் பலப்பலப் பிறவிகளில் படிப்படியாக ஞானம் பெறுவர். உண்மையான ஞானத்தை அடைந்த பின்பு இவர்களும் சிவபதம் சென்று சேருவர். சிவசாயுச்சியம் என்பது அனைவருக்கும் உறுதியாகக் கிடைக்கும்.

#500. சகலருக்கும் சிவப்பேறு

ஆணவந் துற்ற அவித்தாம் நனவு அற்றோர்
காணிய விந்துவாம் ; நாத, சகல ஆதி
ஆணவம் ஆதி அடைந்தோர் அவர் அன்றே
சேண் உயர் சத்தி சிவதத்துவம் ஆமே.

ஆணவத்துடன் கூடிய அஞ்ஞானத்தை முற்றிலுமாக நீக்கியவர், சகல நிலையிலும், உடம்புடன் உள்ள போதே, நாதம் பிந்து ஆகியவற்றைக் காண முடியும். ஆணவம் முதலான மலங்களை உடையவரோ எனில், அம்மலங்கள் முற்றிலுமாக நீங்கிய பிறகே, மேன்மை பொருந்திய சிவமண்டலங்களைச் சென்று அடைய முடியும்.
 
16. பாத்திரம்

16. பாத்திரம்

பாத்திரம் என்பது அறநெறியில் ஈட்டிய பொருளைப்

பத்திரமாகச் சேமித்து வைக்கும் இடம் ஆகும்.

#501 to #504


#501. தானப் பயன்

திலமத்தனை பொன் சிவஞானிக்கீந்தால்

பல முத்தி சித்தி பரபோகமுந் தரும்
நிலமத்தனை பொன்னை நின்மூடர்க்கீந்தால்
பலமுற்றே பர போகமும் குன்றுமே.

எள்ளளவு பொன்னைச் சிவஞானியாருக்கு ஈந்தால் அதன் பயனாக இம்மையில் இன்பமும், சித்தியும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும். அஞ்ஞானியருக்கு பூமி அளவு பொன்னைத் தந்தாலும் இம்மையில் இன்பம் கிடைக்காது; மறுமையில் முக்தியும் கிடைக்காது.

#502. நாதனை உணர்ந்தவர் தேவர் ஆவர்

கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தாருயிர் கொள்ளுங் குணத்தனை ‘
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார் சிலர் தேவருமாமே.

உரிய காலம் வரை காத்திருந்து அதன் பின்னர் உயிரைப் பறித்துச் செல்வான் யமன். அவனைச் செலுத்துபவன் சிவபெருமானே ஆவான். எட்டுச் சீரிய குணங்களை உடைய சிவன். தன்னை நன்றாக உணர்ந்தவர்களுக்கு அருள் புரிவான். அவன் விளங்குகின்ற நாத விந்து மண்டலங்களைச் சென்று அடைந்தவர்கள் வானவர்கள் ஆகி ஒளி மண்டலத்தில் வசிப்பார்கள்.

#503. இறைவனை வணங்க வேண்டும்.

கைவிட்டிலேன் கருவாகிய காலத்தும்

மெய்விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடையான் அடி
நெய்விட்டிலாத இடிஞ்சிலும் ஆமே.

அன்னையின் வயிற்றில் நான் கருவாக இருந்த போதே சிவஞானத்தைப் பற்றி இருந்தேன். நான் உடலுடன் கூடி இருந்த போதும் அவன் நினைவு நீங்காமல் இருந்தேன். பொய்யான உடலை விடுத்த பின்பும் நான் ஒளி மயமான சிவன் திருவடிகளையே நாடுவேன். நெய் விடாத விளக்கு போல ஒளிர்கின்ற அது ஒரு தூண்டா விளக்கு ஆகும்.

#504. தன்மயமாகி இருப்பர்

ஆவன ஆவ, அழிவ அழிவன,

போவன போவ, புகுவ புகுவன,
காவலன் பேர் நந்தி, காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இளங்கிளை யோனே.

வர வேண்டியவை தாமே வந்து சேரும். நீங்க வேண்டியவை தாமே நீங்கி விடும். கழிய வேண்டியவை தாமே கழியும். அனுபவிக்க வேண்டியவை தாமே வந்து சேரும். இறைவள் காட்டுவதைக் கண்டு அமைபவனே ஈசன் ஆணைப் படி நடக்கும் தகுதி வாய்ந்தவன் ஆவான்.


 
17. அபாத்திரம்

தகுதியற்றவர்கள் ஆவர் அபாத்திரம்.
நல்லார்க்கு ஈவது நற்பயன் தரும்.
அல்லார்க்கு ஈவது நற்பயன் தராது.


#505 to #508

#505. வறண்ட பசு

கோல வறட்டைக் குனித்துக் குளகிட்டுப்

பாலைக் கறந்து பருகுவ தேயொக்குஞ்
சீலமு நோன்பு மிலாதவர்க் கீந்தது
காலங் கழிந்த பயிரது வாகுமே.

ஒழுக்கமும் நோன்பும் இல்லாதவர்க்கு ஈவது எதைப் போன்றது? அழகிய வறட்டுப் பசுவுக்கு குனிந்தும் நிமிர்ந்து பசுந் தழைகள் இட்டு அதன் பாலைக் கறந்து குடிப்பது போன்றது ஆகும். பருவம் தவறிச் செய்த பயிரைப் போன்றது ஆகும்.

# 506. அன்பிலாதவர்க்கு ஈதல்

ஈவதி யோக மியம நியமங்கள்
சார்வ தறிந்தன்பு தங்கு மவர்க்கன்றி
ஆவ தறிந்தன்பு தங்காதவர்களுக்கு
ஈவா பெரும் பிழை யென்று கொள்ளீரே.

யோகம் செய்யும் போது செய்ய வேண்டியவை எவை தவிர்க்க வேண்டியவை எவை என்பதை நன்கு அறிந்த, அன்பு உடையவர்களுக்கே தானம் செய்ய வேண்டும். அங்ஙனம் உள்ளத்தில் அன்பு சிறிதும் இல்லாதவர்களுக்கும், சார்பு அறியாதவர்களுக்கும் தானம் செய்வது பெரிய தவறு ஆகும். உலகத்தோரே இதை நன்கு அறிந்து கொள்வீர்!!

#507. நரகத்தில் அழுந்தான்

ஆமா றறியா னதி பஞ்ச பாதகன்

தோமாறும் ஈசற்குந் தூய குரவற்கும்
காமாதி விட்டோர்க்கும் தரல் தந்து கற்பிப்போன்
போமா நரகிற் புகான் போதங் கற்கவே.

பஞ்சமா பாதகன் நல்லவர்களுக்கு தானம் தருவதன் பயனை அறியாமல் வீணே கெடுவான். ஆனால் குற்றமற்ற குருவுக்கும், தூய பெரியவர்களுக்கும், காமம் முதலிய மன மலங்களை முற்றிலுமாக அழித்தவர்களுக்கும் தானம் தருபவன் ஒரு நாளும் நரகக் குழியில் விழவே மாட்டான்.

#508. ஏழு வகை நரகங்கள்

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்

அண்ணல் இவனென்றே யஞ்சலி யத்தனாய்
எண்ணி யிறைஞ்சாதார்க் கீந்த விருவரும்
நண்ணுவ ரேழா நரகக் குழியிலே.

மண் மலையளவு பெரிய பொருளைத் தானம் செய்தாலும், சிவனே முன் நின்று அதைத் தருகின்றான் என்று எண்ணி கூப்பிய கைகளுடன் சிவனை வணங்க வேண்டும். அவ்வாறு எண்ணாமல் தானம் கொடுக்கின்றவனும், அதை வாங்குகின்றவனும் ஏழு வகைப்பட்ட நரகங்களில் வீழ்ந்து வருந்துவர்.



 
18. தீர்த்தம்

18. தீர்த்தம்

தீர்த்தம் என்றால் தூய நீர் என்று பொருள். காவிரியும், கங்கையும் மண்ணில் பாய்ந்து மக்களைத் தூய்மைப் படுத்துகின்றன. அது போன்றே உடலின் உள்ளேயும் மூலாதாரம் முதல் சஹஸ்ர தளம் வரையில் தூய நீர் உள்ளது. அந்த நீரை அறிந்து கொண்டு அதில் நீராட வேண்டும்.

#509 to #511

#509. ஏழு தீர்த்தங்கள்

உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்

மெள்ளக் குடைந்து நின்று ஆடார் வினை கெடப்
பள்ளமும் மேடும் பரந்து திரிவரே
கள்ள மனம் உடைக் கல்வி இலோரே.

உடலின் உள்ளே மூலாதாரம் முதல் சஹஸ்ரதளம் வரையில் ஏழு இடங்களில் தூய நீர் உள்ளது. நாம் செய்த வினைகள் நீங்கிட இந்தத் தூய நீரில் நீராட வேண்டும். நேர்மையான மனமும், தெளிந்த அறிவும் இல்லாதவர்கள் பள்ளங்களிலும் மலைகளிலும் தூய நீரைத் தேடி அலைவார்கள்.

#510. அகத்தில் சிவன் விளங்குவான்

தளி அறிவாளர்க்குத் தண்ணியதாய்த் தோன்றும்

குளி அறிவாளர்க்குக் கூடவும் ஒண்ணான்
வளி அறிவாளர்க்கு வாய்க்கினும் வாய்க்கும்
தெளி அறிவாளர்தம் சிந்தையுளானே.

கோவிலில் சென்று வழிபடுபவருக்குச் சிவன் குளிர்ச்சியுடையவனாகி அருள் செய்வான் .காம நெறியில் செல்பவர்களுக்கு அவன் அடைய முடியாதவன் ஆவான். மூச்சுப் பயிற்சியும் பிராணாயாமமும் செய்பவர் ஒருவேளை அவனை அடையக் கூடும். ஆயினும் அவன் தெளிந்த ஞானம் உடையவர் சிந்தையில் எப்போதும் இடையறாது வீற்றிருப்பான்.

#511. கள்ள மனம் கொண்டவர்

உள்ளத்தின் உள்ளே உணரும் ஒருவனைக்

கள்ளத்தின் ஆருகலந்து அறிவார் இல்லை
வெள்ளத்தை நாடி விடும் அவர் தீவினை
பள்ளத்தில் இட்டது ஒரு பத்தலுள் ஆமே.

உள்ளத்தால் உணர இயலும் சிவபெருமானை! கள்ள மனம் கொண்ட, ஒழுக்கம் அற்றவர்களால் சிவனை அறிய இயலாது. இன்பத்தை நாடும்அவர்கள் மனம் ஒரு ஒட்டையான சால் போன்றது. அவர்கள் சிவனை அறிய முயல்வது ஓட்டைச் சாலை வைத்துக் கொண்டு மேட்டுக்கு நீரை இறைப்பதைப் போன்று வீணாகும்.



 
#512 to # 514

#512. தலை உச்சியில் உள்ளது கங்கை நீர்

அறிவு ஆர் அமரர்கள் ஆதிப் பிரானைச்

செறிவான், உறைபதம் சென்று வலங்கொள்
மறியார் வளைக்கை வருபுனல் கங்கைப்
பொறிஆர் புனல் மூழ்கப் புண்ணியர் ஆமே.


ஒளி மண்டலத்தில் வாழ்பவர்கள் அமர்கள். அவர்கள் விந்து மண்டலத்தை அடைந்து, ஆதிப் பிரானாகிய சிவபெருமானை அடைவர். ஐம் பொறிகளை உடைய அன்பர்கள் காமத்தைத் தடுத்து வெற்றி கொண்டால், ஓங்கார நாதத்துடன் தலை உச்சியில் பாயும் கங்கை நீரில் நீராடிப் புனிதர்கள் ஆகிவிடலாம்.


#513. சிவனை உள்ளத்தில் தேடுவீர்

கடலில் கெடுத்துக் குளத்தில் காண்டல்

உடலுற்றுத் தேடுவார் தம்மை ஒப்பார் இல்;
திடம் உற்ற நந்தி திருவருளால் சென்று
உடலில் புகுந்தமை ஒன்று அறியாரே.

கடலில் ஒரு பொருளைப் போட்டு விட்டு அதை குளத்தில் சென்று தேடுவர் சிலர். ஆயினும் நீர்ப்பை என்னும் கடலில் விந்து நீக்கம் ஆவதைக் கெடுத்தவர், அதை நெற்றிப் பகுதியில் உள்ள குளத்தில் ஒளியாகப் பெற முடியும். சிவபெருமான் தன் திருவருளால் நம் உடலில் புகுந்துள்ளதால் இதுவும் சாத்தியமே.

#514. சந்திர மண்டலம்

கலந்தது நீர் அது உடம்பில் கறுக்கும்;

கலந்தது நீர் அது உடம்பில் சிவக்கும்;
கலந்தது நீர் அது உடம்பில் வெளுக்கும்;
கலந்தது நீர், அனல், காற்று அது ஆமே.

சீவன் தாமச குண வயப்பட்டிருக்கும் போது உடலில் கலந்துள்ள நீர் கருமை நிறம் உடையதாக இருக்கும். ராஜச நிலையில் மூல வாயு நெற்றியைச் சென்று அடையும் போது மாதுளம் பூவைப் போன்று சிவந்த நிறத்துடன் இருக்கும். சாத்விக குணத்துடன் சிதாகாசத்தை அடையம் போது வெண்மையான ஒளியுடன் விளங்கும். இவ்வாறு கலந்த நீரில் தீயின் ஒளியும், காற்றியின் இயக்கமும் கலந்து இருக்கும்.



 
19. திருக்கோவில் இழிவு

19. திருக் கோவில் இழிவு

கோவிலுக்குச் செய்யும் இழிவுகளால் விளையும் கேடு!


#515 to #517


#515. தாவர லிங்கம்

தாவர லிங்கம் பறித்தொன்றில் தாபித்தால்
ஆவதன் முன்னே யரசு நிலை கெடுஞ்
சாவதன் முன்னே பெருநோய் அடுத்திடுங்
காவலன் பேர் நந்தி கட்டுரைத் தானே.

சிவலிங்கம் சிவபெருமானுடைய அருவுருவத் திருமேனி ஆகும். ஓரிடத்தில் அமைக்கப் பட்டுள்ள ஒரு லிங்கத்தைப் பெயர்த்து வேறு இடத்தில் வைத்தால் ஆகாது. அவ்வாறு செய்ய எண்ணினால் அது நிகழும் முன்பே அந்த நாட்டின் ஆட்சி அழிந்து போகும். லிங்கத்தைப் பெயர்த்தவனை அவன் இறக்கும் முன்பே தொழுநோய் வந்து பற்றும். இதை உலகுக்கு உரைத்தவன் உலகின் காவலனான சிவபெருமான்.

#516. கோவில் மதில்

கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்

வெட்டுவிக் கும் அபிடேகத் தரசரை
முட்டுவிக் கும்முனி வேதியராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவ னாணையே.

கோவில் மதிலின் ஒரு கல்லைப் பெயர்த்து எடுத்தால் அதன் தீமைப்பயன் முடி சூடிய மன்னனையே வெட்டி வீழ்த்தி விடும். முனிவர்களின் செய்கின்ற தவம் பயன் தராமல் தடுக்கும். அவ்வாறு கல்லைப் பெயர்த்துப் பறித்தவன் அந்தணன் ஆயினும் அவனையும் வெட்டி வீழும்படிச் செய்யும். இது சிவ பெருமானின் ஆணை ஆகும்.

#517. பூசைகள் தவறக் கூடாது


ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்

போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்
கூற்றுதைத் தான்றிருக் கோவில்க ளெல்லாஞ்
சாற்றிய பூசைகள் தப்பிடிற் றானே.

காலனைக் காலால் உதைத்தவன் சிவபெருமான். அவன் திருக் கோவில்களில் மறைகள் விதித்தபடி பூசைகள் நடைபெற வேண்டும். அங்ஙனம் பூசைகள் நிகழவில்லை என்றால் குணப்படுத்த முடியாத பல வியாதிகள் தோன்றும். பருவத்தே மழை பொழியாது பொய்க்கும். மன்னனின் போர் ஆற்றல் குறைந்து விடும்.




 
#518 & #519

#518. பிற கேடுகள்

முன்னவ னார்கோயிற் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வாரி வளங் குன்றுங்
கன்னங் களவு மிகுந்திடுங் காசினி
யென்னரு நந்தி யெடுத்துரைத் தானே.

சிவபெருமான் திருக் கோவில்களில் பூசைகள் தடைப்பட்டால் மன்னனுக்குத் தீமைகள் உண்டாகும். நாட்டின் வளம் குன்றும். கன்னக் கோல் இடும் கள்ளர்கள் அதிகரிப்பர். களவு பெருகும். இங்கனம் உரைத்தது என் சிவபெருமான்.

#519. சிவ தீட்சையின் இன்றியமையாமை

பேர்கொண்ட பார்ப்பான் பிரான் தன்னை அர்ச்சித்தால்

போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாமென்றே
சீர்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே.

பூஜை செய்யும் தகுதியைப் பெறாத அந்தணன் சிவன் கோவிலில் பூசை செய்யலாகாது. அங்கனம் பூசை செய்தால் போருக்குச் செல்லும் மன்னனுக்குக் கொடிய வியாதிகள் தோன்றும். பார் எங்கும் பரவிய நாட்டில் பஞ்சம் உண்டாகும். இவ்வாறு கூறியவன் சிறப்புடைய சிவபெருமானே ஆவான்.



 
20. அதோ முக தரிசனம்

20. அதோ முக தரிசனம்

கீழ் நோக்கிய சிவனின் முகம் அதோ முகம் ஆகும்.
அதைத் தரிசிப்பது அதோ முக தரிசனம்

#520 to #522

#520. ஆறுமுகனுக்கு ஆணையிட்டான்

‘எம்பெருமான் இறைவா முறையோ’ என்று

வம்புஅவிழ் வானவர் அசுரன் வலிசொல்ல,
அம்பவள மேனி அறுமுகன் போய் அவர்
தம்பகை கொல் என்ற தற்பரன் தானே.

சிவபெருமானிடம் சென்று ‘எம் தலைவா! எம் இறைவா! இதுவும் முறையோ?’ என்று துயருற்ற வானவர்கள் அசுரனின் வலிமையைப் புகன்று வருந்தினர். சிவன் ஆறுமுகனை அழைத்து, “அழகிய பவள வண்ணம் கொண்ட பாலகனே! நான் தரும் படையுடன் செல்வாய். அசுரனைக் கொல்வாய். தேவர்கள் துயர் தீர்ப்பாய் ” என்று ஆணையிட்டான். அந்த அருள் மிகுந்த இறைவனே தற்பரன் ஆகிய நம் சிவபிரான்.

#521. கறுத்த கண்டம் கொண்டவன்

அண்டமொடு எண்திசை தாங்கும் அதோமுகம்
கண்டம் கறுத்த கருத்து அறிவார் இல்லை
உண்டது நஞ்சு என்று உரைப்பர் உணர்வு இலோர்;
வெண் தலை மாலை விரிசடையோற்கே.

வெண்ணிறக் கபால மாலையை அணிந்தவன் சிவன். அண்டங்களையும், எட்டு திசைகளையும் தன் அதோ முகத்தால் தாங்குகின்றான். அந்த அதோ முகத்தின் கண்டம் கறுத்து இருப்பது ஏன்? சிவன் நஞ்சை உண்டதால் கண்டம் கறுத்தது என்று கூறுபவர் அறிவற்றவர்கள். கருமை என்பது இருட்டு அல்லது அறியாமை. மேலே இருக்கும் ஒளியை நோக்கிச் செல்லாமல் கீழ் இருளை நோக்கிச் செல்வது அறியாமை என்று உணர்த்துகின்றது அந்தக் கருமை.

#522. பொய்யும் மெய்யும்

செய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப்

பொய்யே உரைத்துப் புகழும் மனிதர்கள்
மெய்யே உரைத்திடில் விண்ணோர் தொழச் செய்வான்
மை தாழ்ந்து இலங்கும் மணி மிடறுடையோனே.

கரிய நிறம் கொண்ட கழுத்தை உடையவன் சிவபெருமான். உலகங்களைப் படைத்த அவன் பொய்யையும் அறிவான்; மெய்யையும் நன்கு அறிவான். கடல் சூழ்ந்த உலகில் பலர் பொய்க் கதைகளைப் பேசித் திரிகின்றார்கள். அவர்கள் உண்மையான தத்துவத்தைப் பற்றிப் பேசுவார்கள் என்றால் சிவன் அவர்களுக்குத் தேவர்களும் வந்து தொழும்படியான மேன்மையை அருள்வான்.

 
#523 to #525

#523. அதோ முகமே சிவனாக மாறும்.

நந்தி எழுந்து நடுஉற ஓங்கிய

செந்தீ கலந்து உள்சிவன் என நிற்கும்
உந்திக் கலந்து அங்கு உலகம் வலம் வரும்
அந்தி இறைவன் அதோமுகம் ஆமே.

முடிவினைச் செய்பவன் உருத்திரன். அவன் இருப்பிடம் மூலாதாரம். அவனே இறைவனின் அதோ முகம் ஆவான். அவனே சுழுமுனை வழியே மேலே சென்று தலையில் உள்ள செவ்வொளியுடன் கலந்து சிவன் ஆகி விடுவான். உலகங்களின் இயல்பை மாற்றி விட்டு மேல் எழுந்து நிற்பான்.

#524. ஊழித் தலைவனும் சிவனே ஆவான்

அதோமுகம் கீழ்அண்டம் ஆன புராணன்
அதோமுகம் தன்னொடும் எங்கும் முயலும்
சதோமுகத்து ஒண்மலர்க் கண்ணிப்பிரானும்
அதோமுகன் ஊழித் தலைவனும் ஆமே.

அதோமுகம் பிரணவம் என்னும் அண்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முகம். அது நுண்ணுடல் முழுவதும் பரவும் ஆற்றல் படைத்தது. ஒளியை உடைய, பிரணவ வடிவம் கொண்ட, சக்தியுடன் கூடிய அதே சதாசிவன் தான் அதோமுகனாகவும், ஊழித் தலைவனாகவும் இருக்கின்றான்.

#525. நூறு நாடிகள் இணைக்கின்றன

அதோமுகம் மாமலர் ஆயது கேளும்

அதோமுகத்தால் ஒரு நூறாய் விரிந்து
அதோமுகம் ஆகிய அந்தம் இல் சத்தி
அதோ முகம் ஆகி அமர்ந்திருந்தானே.

அதோமுகம் ஓர் ஆயிரம் இதழ்த் தாமரையாக ஆனது என்ன விந்தை? தலையில் கவிழ்ந்துள்ள
சஹஸ்ரதளத்தில் இருந்து நூறு நாடிகள் கீழ் நோக்கி விரிந்து செல்கின்றன. கவிழ்ந்துள்ள நாடிகளில் அழிவற்ற சக்திகளோடு அதோமுகன் ஆன இறைவனும் திகழ்கின்றான்.



 
21. சிவ நிந்தை

#526 to #529

#526. கிளியும், பூனையும்

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே
அழிவு உறுவார் அமராபதிநாடி
எளியன் என்று ஈசனை நீசர் இகழின்
கிளி ஒன்று பூஞையால் கீழது ஆகுமே.

தெளிந்த ஞானம் பெற்ற மேலோர் ஈசனைச் சிந்தையினுள்ளே தேடி அவன் அருளைப் பெறுவர். தெளிந்த அறிவற்ற கீழோர் சிவபிரான் எளியவன் என்று எண்ணி அவனை இகழ்ந்து பேசினால், அவர்கள் கதி பூனையின் கையில் அகப்பட்ட ஒரு கிளியின் கதி போல ஆகிவிடும்.

#527. வானவர் தானவர் சிவனை அறியார்


முளிந்தவர் வானவர் தானவர் எல்லாம்

விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார்
அளிந்து அமுது ஊறிய ஆதிப் பிரானைத்
தளிந்தவர்க்கு அல்லது தாங்க ஒண்ணாதே

நெஞ்சில் அன்பின் ஈரம் இல்லாத வானவர்களும், தானவர்களும் காமத்தால் கெட்டுப் போனவர்கள் ஆவர். அவர்களால் அதோமுகத்தில் விளங்கும் இறைவன் பெருமையை உணர இயலாது. அன்பால் கசிந்து அமுதம் சுரக்கும் ஈசனைத் தம் உடலில் தேக்கித் தாங்குபவர்களால் மட்டுமே அவனை உணர முடியும்.

#528. பகை ஈசனை மறைக்கும்


அப்பகையாலே அசுரரும், தேவரும்

நற்பகை செய்து நடுவே முடிந்தனர்
எப்பகை ஆகிலும் எய்தார் இறைவனைப்
பொய்ப்பகை செய்யினும் ஒன்று பத்து ஆமே.

தீராத பகைமை பூண்ட அசுரர்களும் அமரர்களும் உய்வு பெறாமலேயே அழிந்து போயினர். எந்த விதமான பகைமை பூண்டாலும் இறைவனை அடைய முடியாது. விளையாட்டாகப் பகைமை பூண்டாலும் அது வினையாக மாறி ஒன்றுக்குப் பத்துத் தீமைகள் செய்து விடும்.

#529. நானே விகிர்தன்!


போகமும் மாதர் புலவி அது நினைந்த

ஆகமும் உள்கலந்து அங்கு உளர் ஆதலில்
வேதியர் ஆயும் விகிர்தன் ஆம் என்கின்ற
நீதியுள் ஈசன் நினைப்பு ஒழிவாரே.

அந்தணராகப் பிறந்திருந்த போதிலும் பெண்ணின் கூடலையும், ஊடலையும் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதாலும், “நானே பிரம்மம்” என்று எண்ணுவதாலும், ஈசனைப் பற்றிய நினைப்புகளை அறவே ஒழித்து விடுவர்.
 
22. குரு நிந்தை

22. குரு நிந்தை
குருவைப் பழித்தல் குரு நிந்தை ஆகும். அது விளைவிக்கும் துன்பங்களைப் பற்றி அறிவீர்.

#530 to #533


#530. ஞானம் வேண்டுமெனில்…

பெற்றிருந் தாரையும் பேணார் கயவர்கள்

உற்றிருந் தாரை யுளைவன சொல்லுவர்
சுற்றிருந் தார்வழி உற்றிருந் தாரவர்
பெற்றிருந் தாரன்றி யார் பெரும் பேறே.

ஞானம் பெற்ற மேலோரையும் கீழ்மக்கள் பேண மாட்டார்கள். தம்முடைய உற்றார்களையும் மனம் வருந்தும்படிச் செய்வார்கள. கற்று அறிந்த குருவிடம் பொருந்தியவரே ஞானம் அடைய முடியும். அவரை அல்லாது வேறு எவரால் ஞானம் அடைய முடியும்?

#531. நாத ஒலியை எழுப்பி விடுவார்

ஓரெழுத்து ஒருபொரு ளுணரக் கூறிய

சீரெழுத்தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்திங் கோருகம்
பாரிடைக் கிருமியாய்ப் பழகுவர் மண்ணிலே.

ஓரெழுத்து மந்திரம் ஆகிய பிரணவத்தின் பொருளை மாணவருக்கு உணர்த்தியவர் குருநாதர். அதன் நாதத்தை அவனுள் எழுப்பியவர் குருநாதர். அத்தகைய குருவின் மனத்தை நோகடிக்கும் மாணவன் ஊர் முழுவது வீணே அலைந்து திரியும் நாயாகப் பிறப்பான். ஒரு யுகம் வரையில் வெறும் ஓரறிவுள்ள ஒரு புழுவாகப் பிறந்து உலகில் உழல்வான்.

#532. ஆவியும் பொருளும் கெடும்!

பத்தினி பத்தர்கள் தத்துவ ஞானிகள்

சித்தங் கலங்கச் சிதைவுகள் செய்தவர்
அத்தமு மாவியும் ஆண்டொன்றில் மாண்டிடுஞ்
சத்தியம் ஈது சதாநந்தி ஆணையே.

இல்லற ஞானிகளும், தத்துவ ஞானிகளும் உள்ளம் வருந்தும்படி நடந்து கொண்டவர்கள் தம் இனிய ஆவியையும் செல்வதையும் ஓர் ஆண்டுக்குள் இழந்து விடுவர். இது சத்தியம். சதாசிவத்தின் மீது ஆணை.

#533. தீச் செயலின் பரிசு!

மந்திரமோ ரெழுத்து துரைத்த மாதவர்

சிந்தையில் நொந்திடத் தீமைகள் செய்தவர்
நுந்திய சுணங்கனாய்ப் பிறந்து நூருறு
வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே.

ஓரேழு மந்திரமாகிய பிரணவத்தை உபதேசித்த தவ சீலரான குருவின் உள்ளத்தை வருத்தம் அடையச் செய்தவன் இழிந்த நாயாக நூறு பிறவிகள் எடுப்பான் . தாழ்ந்த பிறவிகள் பல எடுத்து வீணே மடிந்து போவான்.


 
#534 to #536

#534. பதவி பறி போகும் !

ஈச னடியா ரிதயங் கலங்கிட

தேசமு நாடுஞ் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமு மாமன்னர் பீடமும்
நாச மதாகுமே நந்நந்தி யாணையே.

சிவனடியார் தம் உள்ளம் கலங்கினால் அப்படிக் கலங்கச் செய்தவனின் தேசம், நாடு, போன்ற எல்லாச் சிறப்புகளும் அழிந்து போய் விடும். இந்திரனின் ஆட்சியாயினும், மன்னவன் ஆட்சியாயினும் அது நஷ்டமாகி விடும். இது எம் சிவபெருமான் இட்ட ஆணை.

#535. பொய் புகன்றால் துன்பம்!

சன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்

நன்மார்க்க முங்குன்றி ஞானமும் தங்காது
தொன்மார்க்க மாய துறையு மறந்திட்டுப்
பன்மார்க்க முங்கெட்டுப் பஞ்சமுமாமே.

நன்னெறியைப் புகட்டிய நல்ல குருவிடம் பொய் சொல்லல் ஆகாது. ஒருவன் குருவிடம் அவ்வாறு பொய் பேசினால், அவன் பெற்றிருந்த தவம் அழியும். குருவிடம் பெற்ற உபதேசமும் நிலைத்து நிற்காது. பழைய உபதேசங்களும், கற்று அறிந்திருந்த நன்னெறிகளும் மொத்தமாக மறந்து போகும். அவன் ஆன்ம வளர்ச்சியின் அத்தனை வழிகளும் அடைபட்டு விடும். கொடிய வறுமை வந்து சேரும்.

#536. ஞான நெறியே சிறந்தது

கைப்பட்ட மாமணி தானிடை கைவிட்டு
மெய்ப்பட்ட கல்லைச் சுமப்போன் விதி போன்றும்
கைப்பட்ட நெய்பால் தயிர் நிற்கத் தானறக்
கைப்பிட்டுண்பான் போன்றுங் கன்மி ஞானிக்கொப்பே.

கையில் அகப்பட்ட மாணிக்கத்தை எடுத்துக் கொள்ளாமல் காலில் அகப்ட்ட கல்லைச் சுமப்பது அறிவின்மையாகும். கைவசம் உள்ள நெய், பால், தயிர் போன்றவற்றை உண்ணாமல் வெறும் பிட்டை எடுத்து உண்பதும் அறிவின்மையாகும். ஞான நெறியைத் துறந்து விட்டு கன்ம நெறியைத் தேர்ந்தெடுப்பதும் இது போன்ற அறிவின்மையே ஆகும்.
 
23. மயேசுர நிந்தை

23. மயேசுர நிந்தை

மகேசுரரைப் பூசை செய்பவர் மயேசுரர்.
அவரை நிந்தனை செய்வோர் அடையும்
தீமைகளை இப்பகுதி எடுத்துரைக்கின்றது.


#537 & #538

#537. நரகக் குழி

ஆண்டா னடியார்க்கும் விரோதிகள்

ஆண்டான் அடியவ ரையமேற் றுண்பவர்
ஆண்டானடியாரை வேண்டாது பேசினோர்
தாந்தாம் விழுவது தாழ்ந்த நரகாகுமே.

சிவன் அடியவர்கள் உலக இயல்பிலிருந்து மாறுபட்டவர்கள். அவர்கள் வயிறு பசிக்கும் போது மட்டும் ஐயம் ஏற்று உண்பவர்கள். அத்தகைய உயர்ந்த சிவனடியார்களை நிந்திப்பவர்கள் தாழ்ந்த நரகக் குழியை அடைவார்கள்.

#538. சிவ போகம்

ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வா ரவன் வயம்
போன பொழுதே புகுஞ் சிவ போகமே.

சிவஞானியைத் தூற்றுபவன் நல்வினைகளில் இருந்து நீங்கித் துன்பம் அடைவான். சிவஞானியயரை வணங்குபவன் தீவினைகள் நீங்கி இன்பம் அடைவான், . அடியாரிடம் செல்லும் போதே அவர்களுக்குச் சிவபோகம் கைக் கூடி விடும்.





 
24. பொறையுடைமை

24. பொறையுடைமை
பொறுத்துக் கொள்ளும் தன்மை.
உடலில் உள்ள அமுதம் வற்றிடாமல்
பொறுத்தல் பொறை நிலை ஆகும்.


#539 & #540

#539. அமுதம் சுரக்கும்

பற்றிநின்றார் நெஞ்சில் பல்லி தான் ஒன்றுஉ ண்டு

முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும்
தெற்றிக் கிடந்து சிதைக்கின்ற சிந்தையுள்
வற்றாது ஒழிவது மாகமை ஆமே.

யோகியர் மெய் நெறியைப் பற்றிக் கொண்டு அதனின்றும் வழுவாமல் நிற்பார். அவர்கள் உள்ளத்தை ‘மெய்ப்பொருளுடன் கூட வேண்டும்’ என்ற எண்ணம் உடும்பு போலப் பற்றிக் கொண்டு இருக்கும். அது மூக்கு, நாக்கு இவற்றின் செயல்களை அழித்து விடும். பிராண வாயு கீழ் நோக்கிச் செல்லாது தடுக்கும். மன ஓட்டதை ஒடுக்கும். அப்போது அமைதியான மன மண்டலத்தில் அமுதம் சுரக்கும்.

#540. ஞானி மேலானவன்

ஓலக்கம் சூழ்ந்த உலப்பு இலி தேவர்கள்
பால் ஒத்த மேனியன் பாதம் பணிந்துய்ய
“மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் மன்னவன்
ஞாலத்து இவன் மிக நல்லவன்” என்றாரே.

பால் ஒத்த மேனி கொண்ட ஈசனின் பதம் பணிவதற்காக அவன் கொலு மண்டபத்தைச் சூழ்ந்து நின்றனர் அழிவில்லாத அமர்கள். அப்போது ஈசன் அவர்களிடம்,” பொறுமையில் சிறந்த இந்த ஞானி மாலுக்கும் அயனுக்கும் தலைவன் ஆவான். இவன் உலகத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தவன் ” என்ற சொன்னான்.




 
#541 & #542

#541. இறைவனை அடையலாம்

ஞானம் விளைந்தவர் நம்மிட மன்னவர்

சேனை வளைந்து திசைதொறுங் கை தொழ
ஊனை விளைத்திடு மும்பர் தம் மாதியை
யேனை விளைந்தருள் எடடலுமாமே.

மெய்ஞானம் கை கூடப் பெற்ற ஒரு ஞானிக்கு அவர் உடலின் கருவிகள் கரணங்கள் என்னும் படை ஏவல் செய்யும். அவரை அனைவரும் கைதொழுவர். உடலை மாற்றி அளிக்கும் தேவாதிதேவனை அவர் ஞானத்தாலே அடைய முடியும்.

#542. இலயம் உண்டாகும்

வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும்

பல்வகையாலும் பற்றிப் பதம் செயும்
கொல்லையின் நின்று குதி கொள்ளும் கூத்தனுக்கு
எல்லை இலாத இலயம் உண்டாமே.

பல வகையான இன்ப துன்பங்களை உயிர்களுக்குத் தருவான் சிவன். அந்த உயிரின் பக்குவத்துக்கு ஏற்றபடி அதன் உடலிலும் உள்ளத்திலும் பல விதமான அனுபவங்களைத் தந்து மேலும் பக்குவம் அடையச் செய்வான். மூலாதாரத்தில் நின்று கூத்தாடும் பெருமான் ஐந்தொழில்களை நிகழ்த்துவது அந்தக் கூத்தின் ஒருமைப்பாடு ஆகும்.
 
25. பெரியாரைத் துணைக் கோடல்

25. பெரியாரைத் துணைக் கோடல்
ஞானம் மிகுந்தவரைத் தனக்குத் துணையாக ஏற்றுக் கொள்ளல்.

#543 to #545

#543. பெரியவர் துணை

ஓடவல் லார் தமரோடு நடாவுவன்

பாடவல் லார் ஒலி பார்மிசை வழங்குவன்
தேடவல் லார்க்கருள் தேவர் பிரானொடும்
கூடவல் லார் அடி கூடுவன் யானே.

தலப்பயணம் செய்பவர்களோடு சேர்ந்து கொண்டு நானும் தலப்பயணங்கள் செய்வேன்.இன்னிசை பாடுபவர்களின் இசையைக் கேட்டு நான் இன்பம் அடைவேன். உள்ளத்தில் தன்னைத் தேடுபவர்களுக்கு அருளும் சிவனோடு பொருந்தும் திறன் பெற்றவர்களின் திருவடிகளில் நானும் பொருந்துவேன்.

#544. நெஞ்சே நீயும் வா!

தாமிடர்ப் பட்டுத் தளிர்போல் தயங்கினும்

மாமனத் தங்கன்பு வைத்த திலையாகும்
நீயிடர்ப் பட்டிருந்தென் செய்வாய் நெஞ்சமே
போமிடத் தென்னோடும் போது கண்டாயே.

படர்வதற்கு கொழுகொம்பு இல்லாத தளிரைப் போல வாட்டம் அடைந்தாலும், மன உறுதி கொண்டவர் தன் மனத்தின் மீது அன்பு வைத்து அதன் வழிப்படி எல்லாம் செல்வதில்லை!
நீ மட்டும் தனியாயாக இருந்து கொண்டு என்ன செய்வாய் என் நெஞ்சமே? பெரியாரைக் காண நான் போகும் போது நீயும் என்னுடன் வருவாய்!


#545. சான்றோர் சகவாசம்

அறிவார் அமரர் தலைவனை நாடிச்

செறிவார் பெறுவார் சிவதத்துவத்தை
நெறிதான் மிக மிக நின்றருள் செய்யும்
பெரியாருடன் கூடல் பேரின்பமாமே.

உண்மை அறிவு பெற்ற சான்றோர் தேவதேவனை விரும்பி அவனோடு பொருந்தி இருப்பார். அவர்கள் தத்துவங்கள் அனைத்திலும் உயர்ந்த சிவ தத்துவத்தைப் பெறுவார். நல்ல நெறியில் நிற்பவர்களுக்கும் உபதேசிக்க வல்ல பெரியாருடன் சேர்ந்து இருப்பது பெரும் இன்பத்தைத் தரும்.


 
#546 to #548

#546. சிவநெறி

தார்சடை யான் தன் தாமராய் உலகினில்
போர் புகழா எந்தை பொன்னடி சேருவர்.
வாய் அடையா, உள்ளம் தேவர்க்கு அருள் செய்யும்
கோ அடைந்து அந்நெறி கூடலும் ஆமே.

உலக வாழ்வில் உழல்பவர்கள் சிவனைத் துதிக்காமல் இருக்கலாம். பெரியவர்களுடன் கூடி இருப்பவர்கள் சிவபெருமானுக்கு உறவினராகி அவன் திருவடிகளையே சென்று அடைவர்.. மெளனமாக சிவனை ஆன்மாவில் துதிப்பவர்களுக்குச் சிவன் அருள் செய்வான். அந்தச் சிவ நெறியில் இணைவது என்பது சான்றோர் சகவாசத்தாலேயே நிகழும்.


#547. சிவபுரம்


உடையான் னடியார் அடியார் உடன்போய்ப்

படையா ரழல்மேனிப் பதி சென்று புக்கேன்
கடையார நின்றவர் கண்டறி விப்ப
வுடையான் வருகென ஓலைமென்றாரே.

எல்லாம் உடையவன் சிவபெருமான். அவன் அடியாருக்கு அடியாராகிச் சிவபுரத்தில், சிவ சோதியில் பொருந்தி நின்றார் ஒருவர். அவர் என்னைக் கண்டதும் சிவபெருமானிடம் விண்ணப்பித்தார். என்னை அழைத்து வருமாறு சிவன் பணித்தான். கடை வாயிலில் நின்றவர் எனக்கு அடைக்கல முத்திரியைக் காட்டினார். என்னை உள்ளே வருமாறு அழைத்தார்.

#548. பெரியார் துணை


அருமைவல் லோன் கலை ஞானத்துள் தோன்றும்;

பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன் உணர்ந்து ஊழி இருக்கும்;
திருமைவல் லாரோடு சேர்ந்தனன் யானே.

சான்றோரோடு கூட வல்லவன் கலை ஞானத்துடன் விளங்குவான். பெருமை உடைய ஞானம் பெற்றவன் பிறவிச் சுழலிலிருந்து வெளிப்படுவான். உரிமையோடு பழகுபவன் சிவனை உணர்ந்து என்றும் அழிவில்லாமலிருப்பான். அருமை பெருமை வாய்ந்த சான்றோர்களின் சிறந்த துணையை அடைகின்ற பெரும் பேற்றைப் பெற்றேன் நான்.

இரண்டாம் தந்திரம் முற்
றுப் பெற்றது.

 
மூன்றாம் தந்திரம் - திருமூலரின் திருமந்திரம்

1. அட்டாங்க யோகம்

இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் எட்டு உறுப்புக்களை உடையது அட்டாங்க யோகம் . இவை இறைவனை அடைவதற்கான வழிகள் ஆகும்.

#549 to #552

#549. யோகம் செய்தல்

உரைத்தன வற்கரி ஒன்று மூடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணி
பிரைச்சதம் எட்டும் பேசியே நந்தி
நிறைத்த இயம நியமம் செய்தானே.


பலவகையாகப் பேசப்படுகின்றது உயிர் மூச்சு. பிராணாயாமத்தில் அது நன்கு கட்டுப்படுத்தப்பட்டு கழுத்துக்கு மேலும் கீழும் பன்னிரண்டு அங்குலங்கள் இயக்கப்படுகின்றது. இதை எடுத்துக் கூறிய குருநாதர் தீமைகளைப் போக்கும் இயமத்தையும், நன்மைகளைத் தரும் நியமத்தையும் கற்பித்தார்.

#550. அட்டாங்க யோகம்


செய்த வியாம நியமஞ் சமாதி சென்று
உய்ய பராசத்தி உத்தர பூருவம்
மெய்த கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரை செய்தவன் இந்நிலை தானே.


இயம, நியமங்களில் முறைப்படி நிற்க வேண்டும். சமாதியில் நன்கு பொருந்த வேண்டும். முன்னால் இருந்து வழி காட்டியும் பின்னல் இருந்து தாங்கிக் கொண்டும் இருக்கும் பராசக்தியின் துணையைப் பெற வேண்டும். கவசம், நியாசங்கள், முத்திரைகள் இவற்றை சரிவரச் செய்ய வேண்டும். உய்வதற்கு இதுவே நல்ல வழியாகும்

#551. பிறவிப் பிணி இல்லை!


அந்நெறி இந்நெறி என்னாது அட்டங்கத்
தந்நெறி சென்று சமாதியில் நின்மின்;
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில்ஏகலாம்;
புல்நெறி ஆகத்தில் போக்கு இல்லை ஆகுமே.


இறைவனை நாடுவதற்கு அது நல்ல வழியா இது நல்ல வழியா என்று மயங்க வேண்டாம். அட்டாங்க யோக நெறியில் நின்று சமாதி நிலையை அடையுங்கள். அந்த நெறியில் சென்று அந்நிலையில் பொருந்தியவர்களுக்குச் சிவப்பேறு கிட்டும். மெய் ஞானமும் கிட்டும். மெய் ஞானம் கிடைக்காமல் போனாலும் மீண்டும் ஓர் உடலில் வந்து பொருந்துகின்ற பிறவிப்பிணி அழிந்து விடும்.

#552. எட்டு நெறிகள்


இயம நியமமே எண்ணிலா வாதனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாராஞ்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறு மட்டாங்கம் ஆவதுமாமே.


இயமம், நியமம், ஆசனங்கள், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்ற எட்டும் அட்டாங்க யோகத்தின் எட்டு அங்கங்கள் ஆகும்.

1. இயமம் = தீயவற்றைச் செய்யாது இருத்தல்.

2. நியமம் = நல்லவற்றைச் செய்தல்

3. ஆசனங்கள் = பலவிதமான உடலின் இருக்கை நிலைகள்

4. பிராணாயாமம் = மூச்சுக் காற்றைக் கட்டுப் படுத்துவது

5. பிரத்தியாகாரம் = மனத்தைக் கட்டுக்குள் அடக்கி வைப்பது.

6. தாரணை = கட்டுக்குள் உள்ள மனத்தை நிலை பெறச் செய்வது.

7. தியானம் = இடையறாது ஒரே பொருளைச் சிந்தனை செய்வது.

8. சமாதி = சிவனும், சீவனும் ஒன்றி இருத்தல்.




 
2. இயமம்

2. இயமம் = தீயவற்றைச் செய்யாது இருத்தல்


#553 & #554

#553. நால்வருக்கு உரைத்தான் சிவன்

எழுந்து நீர் பெய்யினும் எட்டு திசையும்
செழுந்தண் நியமங்கள் செய்மினென் றண்ணல்
கொழுந்தண் பவளக் குளிர் சடையோடே
யழுந்திய நால்வர்க் கருள் புரிந்தானே.


“எட்டுத் திசைகளிலும் மேகங்கள் குழுமிக் கன மழை பொழிந்தாலும் நன்மை தரும் இயமங்களைத் தவறாமல் செய்யுங்கள்!” என்று கொழுவிய, குளிர்ந்த, பவள நிறச் சடையுடைய சிவபெருமான் சனகர் முதலான நால்வருக்கும் உரைத்தான்.

#554. இயமத்தில் நீக்க வேண்டியவை


கொல்லான், பொய்கூறான், களவுஇலான், எண் குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுசெய்ய
வல்லான் பகுத்து உண்பான் மாசு இலான் கள் காமம்
இல்லான் இமயத்து இடை நின்றானே.


ஒரு உயிரையும் கொல்லாதவன், பொய் சொல்லாதவன், களவு செய்யாதவன், ஆராய்ச்சி செய்யும் தன்மை உடையவன், நல்லவன், பணிவு கொண்டவன், நீதி நேர்மைகளிலிருந்து பிறழாதவன், தன் உடமைப் பொருட்களைப் பிறருக்குப் பகிர்ந்து அளிப்பவன், குற்றமற்றவன், கள் காமம் இல்லாதவனே இயமத்தை மேற்கொள்ளத் தகுதி உடையவன் ஆவான்



 
3. நியமம்

3. நியமம் = நல்லவற்றைச் செய்தல்

#555 to #557

#555. நியமத்தில் செய்ய வேண்டியது

ஆதியை வேதத்தின் அப்பொருளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசக்தி யோடு உடன்
நீதி உணர்ந்து நியமத்தனாமே.


நியமத்தை மேற்கொள்பவன் பழமையான சிவனை, நாத வடிவானவனை, பேரொளி வீசுபவனை, மூலாதாரத்தில் அக்கினி வடிவமாக இருப்பவனை, பிரிவில்லாமல் சக்தியுடன் கலந்து நிற்பவனின் இயல்பினை அறிந்து உணர்தல் வேண்டும்.

#556. நியமத்தில் நிற்பதற்குத் தேவையானவை


தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமி யீரைந்து நியமத்தானாமே.


நியமத்தில் நிற்பவன் மேற்கொள்ள வேண்டிய பத்து குணங்கள் இவை :
தூய்மை, அருள், சுருங்கிய உண்டி, பொறுமை, நேர்மை, உண்மை, உறுதியுடைமை என்ற நல்ல குணங்களை வளர்க்க வேண்டும். காமம், களவு, கொலை இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

#557. நியமத்தில் செய்ய வேண்டியவை


தவம் செபம். சந்தோடம் ஆத்திகாந் தானம்
சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
மகஞ்சிவ பூசையொண் மதி சொல்லீர் ஐந்து
நிவம்பல செய்யின் நியமத்தனாமே.


நியமத்தில் உள்ளவன் செய்ய வேண்டியவை இவை:
தவம், செபம், மகிழ்ச்சி, தெய்வ நம்பிக்கை, கொடைத்தன்மை, சிவ விரதம், சிந்தாந்த சிரவணம், வேள்வி செய்தல், சிவபூசை, பேரொளி தரிசனம் என்னும் பத்து ஆகும்


 
Back
Top