• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

#339 to # 342

#339. அந்தகாசுரன்

கருத்து உறை அந்தகன் தன்போல் அசுரன்

வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்
வருத்தம் செய்தான் என்று வானவர் வேண்டக்
குருத்து உயர் சூலம் கைக்கொண்டு கொன்றானே.

அந்தகன் என்னும் கொடிய அசுரன் இயமனைப் போன்றவன். இறைவனிடம் பெற்ற வரத்தினால் அந்தகன் உலகததோரை வருத்தி வந்தான். அவன் செய்யும் கொடுமைகளைப் பொறமாட்டாத வானவர் இறைவனிடம் சென்று முறையிட, சிவபெருமான் கூர்மையான ஞானச் சூலத்தை எடுத்து அந்தகனை அழித்து அருளினான்.

இது நிகழ்ந்த இடம் திருக்கோவலூர்


#340. நான்முகனை அடக்கியது

கொலையின் பிழைத்த பிரசாபதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான் அங்கியிட்து
நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணித்
தலையை அறிந்து இட்டுச் சந்தி செய்தானே.

நான்முகன் ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் இருந்து கொண்டு விந்துவை நாசம் செய்கின்றான். அவன் விந்து நீக்கம் செய்வதைத் தடுத்தும் , அக்னி காரியத்தினால் பக்குவம் வாய்ந்தவர்கள் விந்துவை வெற்றி பெறச் செய்தும், நான்முகனின் குறும்பை அடக்கினான் சிவபெருமான்.

இது நிகழ்ந்த இடம் திருப்பறியலூர்


#341. உலக இன்பம்

எங்கும் பரந்தும் இரு நிலம் தாங்கியும்
தங்கும் படித்து அவன் தாள் உணர் தேவர்கள்
பொங்கும் சினதுள் அயன் தலை முன் அற
அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே.

பக்குவம் அடைந்தவர்கள், எங்கும் பரவி இருக்கும், எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கும், எல்லாம் சென்று ஒடுங்குமிடமாக இருக்கும் இறைவனின் திருவடிகளையே இடைவிடாது சிந்தித்து இருப்பார்கள். அதனால் அவர்களுக்குப் போகத்தில் கவர்ச்சி குறைந்துவிடும். மணி பூரகச் சக்கரத்தில் இருக்கும் திருமாலின் கவர்ச்சியை அவர்கள் வென்று விடுவார்கள்.

இது நிகழ்ந்த இடம் திருக் கண்டியூர்.


#342. அருள் செய்வான்

எங்கும் கலந்து மென் உள்ளத்து எழுகின்ற
அங்க முதல்வன், அருமறை ஓதிபால்
பொங்கும் சலந்தரன் போர் செய்ய நீர்மையின்
அங்கு விரல் குறித்து ஆழி செய்தானே.

உயிரில் கலந்து உள்ளவன் சிவன். உடலின் நாயகன் சிவன். நாதத் தத்துவத்துக்கு உரியவன் சிவன். நீரை முகமாகக் கொண்ட அபானனன் சலந்தரன். அவன் கீழே நோக்கியபடி இருக்க, யோக சாதனையால் அவனை மேலே சென்று சஹஸ்ர தளத்தில் கலநது விரியும்படி அருள் புரிபவன் இறைவன்.

இது நடந்த இடம் திருவிற்குடி
 
#343 to #346

#343. முப்புரம் எரித்தது

அப்பணி செஞ்சடை யாதி புராதனன்
முப்புரஞ் செற்றன னென்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரமெய்தமை யாரறிவாரே.

முப்புரங்களை அழித்தான் கங்கையை அணிந்த செஞ்சடையை உடைய சிவபெருமான் என்பார்கள். முப்புரம் ஆகிய மூன்று கோட்டைகள் நம்முடைய ஆணவம், கன்மம், மாயை என்னும் மும் மலங்கள் ஆகும், இம்மும் மலங்களை சிவன் அழித்த சிறப்பினை அறிய வல்லார் யாருளர்?

பெருமான் திரிபுரங்களை அழித்தது திருவதிகைத் தலத்தில்.


#344. சிவ ஒளி


முத்தீ கொளுவி முழங்கு எரி வேள்வியுள்
அத்தி உரி அரன் ஆவது அறிகிலர்
சத்தி கருதாது ஆம் பல தேவரும்
அத்தீயினுள் எழுந்தன்று கொலையே.


மூன்று வகையான அக்கினியை வளர்த்து செய்யும் வேள்விகளில் யானையைப் போன்ற கரிய இருளைக் கிழித்துக் கொண்டு இறைவன் சிவ ஒளியாக வெளிப்படுவான். இதை எவரும் அறிவதில்லை. அகண்டமாகச் சிவன் வெளிப்படும்போது கண்டமாகிய தேவர்கள் அழிந்து விடுவர்.

சிவபெருமான் கயமுகாசுரனை சம்ஹரித்த தலம் திருவழுவூர்.


#345. இறப்பில்லை


மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்தின் மேல் உறநோக்கி முற்
கால் உற்று காலனைக் காய்ந்து அங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாக இருந்ததே.

மூலாதாரத்தில் கிளம்பி எழும் ஒருவனை சுழுமுனை நாடி வழியே மேலே செலுத்த வேண்டும். தலை உச்சியில் இருக்கும் பிரமரந்திரத்தில் அவன் சென்று பொருந்துமாறு ஊர்த்துவ திருஷ்டியால் நோக்க வேண்டும். அங்கிருந்து கொண்டு ஒருவன் யமனைச் சினந்து அக்னி வழிபாடாக தியானம் செய்து வந்தால், அவன் உடலைக் கடந்து சஹஸ்ரதளத்திலேயே என்றும் அழிவின்றி இருக்க முடியும்.

சிவன் யமனை அழித்த செயல் நடந்தது திருக்கடவூர் தலத்தினில்.


#346. காமனை வெல்வது

இருந்த மனதை இசையப் இருத்திப்
பொருந்தி இலிங்கவழி அது போக்கி,
திருந்திய காமன் செயல் அது அழித்து அங்கண்
அருந்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே
.

கொறுக்கை இருப்பது என்பது என்ன? மனத்தைச் சிவனுடன் சேர்த்து விட வேண்டும். இலிங்க வழி செல்லக் கூடாது. விந்து நீக்கமாகிய காமன் செயலைக் கெடுக்க வேண்டும். இவ்வாறு செய்துவிட்டு வாழ்க்கை துணையுடன் பொருந்தி இருப்பதே கொறுக்கை இருத்தல் எனப்படும்.

மனத்தைச் சஹஸ்ர தளத்தில் பொருத்திக் கொண்ட ஒருவன் பெண்ணுடன் புணர்ந்தால் விந்து நீக்கம் ஏற்படாது. இது காமன் என்னும் மன்மதனை வெல்வது ஆகும். இதனால் சிவ திருஷ்டி என்னும் ஞானக் கண் கிடைக்கும்.

மன்மதனைச் சிவன் வென்ற இடம் திருக் கொறுக்கை என்னும் திருத்தலம்
 
3. லிங்க புராணம்

லிங்கம் என்பது தோற்றம் ஒடுக்கம் இவைகளின் காரணமான அருட்குறி!

#347 to #349

#347. சக்தி வழிபட்டாள்

‘அடிசேர்வேன்’ என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமகனார் மகள் ஆகித்
திடம் ஆர் தவஞ் செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்தி செய்தாளே.

“சிவபெருமானின் திருவடிகளைச் சென்று அடைவேன்!” என்று உறுதி பூண்டாள் சக்தி தேவி. உடலின் உச்சியில் விளங்கும் சிற்சக்தி ஆனாள் அவள். சிவனை அடைவதற்கு ஒளி மண்டல வாசிகள் காணும்படி முறையாக வழிபட்டுத் தவம் செய்தாள்.

மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி மேலே சென்று சிரசில் இருக்கும் சிற் சக்தியுடன் ஒன்றாகச் சேருவதே தவம் எனப்படும்.

#348. ஆட்கொள்வான் சிவன்


திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை
ரியன் என்று எண்ணி அயர்வுற வேண்டா;
புரிவுடையாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறிவானே.


உலவும் திறன் பெற்ற மும்மலக் கோட்டைகளை அழித்த பிரான் அடைவதற்கு அரியவன் என்று எண்ணி அயர்வுற வேண்டியதில்லை. அன்புடையவரிடம் அவன் பொய்க்க மாட்டான். பெருமான் அன்பர்களுக்கு அருள் புரிந்து கருணை காட்டுவான.

#349. மூவருக்கும் தருபவன் சிவன்


ஆழி வலம் கொண்டு அயன் மால் இருவரும்
ஊழி வலம் செய்ய ஒண் சுடர் ஆதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி
வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே.

சுவாதிஷ்டன, மணிபூரகச் சக்கரங்களில் உறையும் நான்முகனும், திருமாலும் மூலாதாரத்தை முறைப்படி வலம் வந்தனர்.
அங்கே ஒளி வடிவாக விளங்கும் ருத்திரன் சஹஸ்ர தளத்தில் விளங்கும்படி திருமாலுக்கு அருள் செய்தான்.
நான்முகனுக்கும் ஒளி தந்து நான்முகன்சுவாதிஷ்டானத்திலிருந்து உற்பத்தியைப் பெருக்காமல் இருக்கும்படிச் செய்தான்

 
#350 to #352

#350. சிவன் வெளிப்படுவான்

தாங்கி இருபது தோளும் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெருவலி
ஆங்கு நெரித்து ‘அமரா’ என்று அழைத்தபின்
நீங்கா அருள் செய்தான் நின்மலன் தானே.


பத்துத் தலைகளும் இருபது தோள்களும் கொண்ட ராவணன் தன் முயற்சியால் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்தான். அவன் ஆற்றலை முற்றிலுமாக அழித்து, ” இறைவா! என்னைக் காப்பாற்று!” என்று கெஞ்ச வைத்து அவனுக்கு நீங்காத பக்தியை அளித்தான் சிவபெருமான்.

ராவணனுக்குப் பத்துத் தலைகள். அவைகள் காமம், குரோதம், உலோபம், மோஹம், மதம், மாச்சர்யம், டம்பம், தர்ப்பம், அசூயை, ஈரிஷை.

ஞான இந்திரியங்கள் ஐந்து, கர்ம இந்திரியங்கள் ஐந்து, இவைகள் சுவைக்கும் புலன்கள் பத்து என்ற இருபதும் அவனது தோள்க
ள்

#351. உடல் நினைவு மறையும் வழி


உறுவது அறிதண்டி ஒண்மணல் கூட்டி

அறுவகை ஆன் ஐந்தும் ஆட்டத் தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழுவால் வெட்டி மாலை பெற்றானே.

தனக்கு நேர்வதைக் காரண காரியங்களுடன் அறிய வல்லவன் சீவனான சண்டீசன். அவன் வெள்ளிய ஒளியாகிய மணலால் ஒரு லிங்கத்தைச் செய்தான். பிறவிப் பிணி நீங்கும் வண்ணம் தன் ஐந்து ஞான இந்திரியங்கள் புலன்களில் மேயாமல் தடுத்தான். மாயையால் உண்டான உடலான தந்தை சினம் கொண்டு அவனை ஒடுக்கினான். சண்டீசன் அக்கினிக் கலையாகிய வாளினால் இடை பிங்கலைகளைச் செயலாற்றாமல் செய்து சிவத் தொண்டன் ஆகிவிட்டான்.

#352. தேவர்களுக்கு அருள்வான்


ஓடிவந்து எல்லாம் ஒருங்கிய தேவர்கள்

வாடி முகமும் வருத்தத்துத் தாம் சென்று
நாடி “இறைவா நம” என்று கும்பிட,
ஈடு இல் புகழோன் “எழுக” என்றானே.

தேவர்கள் எல்லாம் சிவபெருமானிடம் ஓடி வந்து மிகுந்த முக வாட்டத்துடன் “இறைவா போற்றி!’ என்று அடைக்கலம் புகுகின்றபோது “எழுந்து வாருங்கள்!” என்று கூறி பெருமான் அருள் செய்தார் .

தேவர்கள் பாற்கடலில் எழுந்த கொடிய நஞ்சைக் கண்டு அஞ்சி சிவனிடம் சென்று அடைக்கலம் புகுந்ததைக் குறிக்கும் இது.
 
4. தக்கன் வேள்வி

ஆண் பெண் கூட்டுறவே தக்கன் வேள்வி ஆகும்.
சிவனை எண்ணாமல் வேள்வி செய்யப்பட்டது.
விந்து ஜெயம் என்ற பயன் கிடைக்க வில்லை.
வேள்வியும் பயன் தராமல் அழிவுற்றது.

#353 to #355


#353. அருள் இன்றேல் ஜெயம் இல்லை!

தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறை கெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.

தக்கன் ஆண் பெண் கூட்டுறவாகிய வேள்வியைச் செய்தான். சிவனை எண்ணாமல் அந்த வேள்வி செய்யப்பட்டது. சிவபெருமான் அது கண்டு மிகுந்த சினம் கொண்டார். அதனால் மிகுந்த காமாக்னி ஏற்பட்டது. விந்து வெளிப்பட்டது. விந்து ஜயம் என்ற பலன் அந்த வேள்விக்குக் கிடைக்கவில்லை. சிவபெருமான் சினந்தவுடன் தேவ காரியம் தடைப்பட்டது.

#354. திருமாலுக்கு அருளல்


சந்தி செயக்கண்டு எழுகின்ற அரிதானும்

“எந்தை இவன் அல்ல யாமே;” உலகினில்
பந்தம் செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தம் இலானும் அருள் புரிந்தானே.

ஆண் பெண் கூட்டுறவைச் செய்வதற்கு தருக்கி எழுபவன் திருமால். அவன் “உலகத்தைப் படைப்பவன் நானே அன்றி சிவன் அல்ல” என்றான். அதனால் பந்தப்படுத்தும் பாசக்கட்டில் விழுந்தான் திருமால். மனம் திருந்தி வருந்திச் சிவனை நோக்கித் தவம் செய்த பின்னர் , அவனுக்கு சிவன் அருள் புரிந்தான்.

#355. நான்முகனுக்கு அருளல்


அப்பரிசே அயனார் பதி வேள்வியுள்

அப்பரிசு அங்கி அதிசயம் ஆகிலும்,
அப்பரிசேயது நீர்மையை உட்கலந்து
அப்பரிசே சிவன் ஆலிக்கின்றானே.

தக்கன் வேள்விக்குத் தானே தலைவன் என்ற தருக்கு அடைந்தான் நான்முகன். அதனால் காமாக்னி மூண்டு எழுந்த போதிலும், அதன் வகையிலேயே, அதன் தன்மையில் நன்றாகப் பொருந்திய சிவபெருமான் ஆரவாரத்துடன் விளங்கினான்.



 
#356 to #358

#356. நீக்கம் அற நிறைவான்

அப்பரிசே அயன் மால் முதல் தேவர்கள்
அப்பரிசே அவர் ஆகிய காரணம்
அப்பரிசு அங்கியுல நாளும் உள்ளிட்டு
அப்பரிசு ஆகி அலர்ந்திருந்தானே.

நான்முகனும் திருமாலும் தேவர்களும் அத்தன்மையைப் பெறக் காரணம் ஆவான் சிவபெருமான். அக்கினிக் கலையில் நீக்கம் அற நிறைந்திருக்கும் சிவன் அந்த அக்கினிக் கலையை உள்ளே விளங்கச் செய்வான்.

#357. விரைந்து அருள்வான்


அலர்ந்திருந்தான் என்று அமரர் துதிப்பக்
குலம் தரும் கீழ் அங்கி கோளுற , நோக்கிச்
சிவந்த பரம் இது சென்று கதுவ
உவந்த பெருவழி ஓடி வந்தானே.

சிவபெருமானே எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவன். இந்த உண்மையை உணர்ந்த வானவர்கள் அவனிடம் வேண்டினர். அப்போது ஆறு ஆதாரங்களில் கீழாக உள்ள மூலாதாரத்தில் உள்ள
அக்கினிக் கலை மேலே எழுந்தது. சுழுமுனை வழியே சஹஸ்ரதளத்தைச் சென்று பற்றியது அச் சிவந்த ஒளி. அப்போது சிறந்த வழிபாடு இதுவே என்று விரைந்து வந்து அருள் செய்தான் சிவபெருமான்.

#358. நல்லவர்கள் ஆயினர்


அரி, பிரமன், தக்கன், அருக்கனுடனே
வருமதி, வாலை ,வன்னி நல் இந்திரன்
சிரம், முகம், நாசி, சிறந்தகை, தோள் தான்
அரன் அருளின்றி அழிந்த நல்லோரே.

திருமால், நான்முகன், தக்கன், சூரியன், சந்திரன், நாமகள், அக்கினி, இந்திரன் என்பவர் தலை, முகம், மூக்கு, கை, தோள் என்பனவற்றைச் சிவன் அருள் பெறாததால் இழந்தனர். பின்னர் சிவன் அருள் பொருந்தியதால் அவர்கள் நல்லவர்கள் ஆயினர்.
 
#359 to #361

#359. மந்திரம் நல்லதே

செவி மந்திரம் சொல்லும் செய்தவத் தேவர்
அவி மந்திரத்தின் அடுக்களை கோலிச்
செவி மந்திரம் செய்து, தாம் முற நோக்கும்
குவி மந்திரங் கொல் கொடியதுவாமே.

தேவர்கள் ஜெபிக்கத் தகுந்த மந்திரங்களை ஓதி சிவன் அருள் பெற்றவர்கள். வாயினால் கூற இயலாத பிரணவத்தால், மூலாதாரத்தில் உள்ள அக்கினியைத் தூண்டி, அதன் மூலம் நாதம் ஏற்படச் செய்து மனதை ஒருமைப் படுத்தும் ஒரு மந்திரம் கொடியது ஆகுமோ? ஆகாது! அந்த மந்திரம் மிகவும் நல்லதே!

#360. மல நீக்கம் செய்வான்


நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்

பல்லார் அமரர், ‘பரிந்தருள் செய்க’ என,
வில்லார் புரத்தை விளங்குஎரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.

‘எம் உடலில் உள்ள ஒன்பது குண்டங்களும் இன்பம் அடையுமாறு அருள வேண்டும்!” என்று தேவர்கள் சிவனை நோக்கி வேண்டினார்கள். பிரணவம் என்ற வில்லை எடுத்து, ஆணவம் முதலிய மும் மலங்கள் ஆகிய கொடிய அசுரர்களை அழித்துச் சிவன் அவர்களுக்கு அருள் புரிந்தான்

#361. அன்புடன் செய்ய வேண்டும்

தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே

அளிந்தாங்கு அடைவது எம் ஆதிப் பிரானை
விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங்கு அருள்செய்த தூமொழியானே.

நாத வடிவானவன் சிவபெருமான். தன்னை எண்ணாது (தக்கன்) செய்த காம வேள்வியை முதலில் சினந்து அழித்தான். பின்னர் அவனே அருள் செய்தான். இன்ப வடிவான சிவனை அடைவதற்கு அவனை அன்புடன் வழிபட வேண்டும். இதில் நீ எள்ளளவும் மயக்கமோ கலக்கமோ அடையாதே!


 
5. பிரளயம்

#362 to #366

#362. சிவஜோதி

கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்து
இருவரும் கோ என்று இகல, இறைவன்
ஒருவனும் நீர் உற ஓங்கொளி ஆகி,
அருவரையாய் நின்று அருள்புரிந்தானே.

கருவிடும் எல்லையில் உள்ளது மணி பூரகம். அதில் உள்ள நீர் மண்டலத்தில் நான்முகன், திருமால் என்னும் இருவரும் மாறுபட்டு நின்றால் அழிவு ஏற்படும். அது நிகழாமல் இருக்க, மணி பூரகத்தில் இருக்கும் அறிவு மயமான சூரியன் மேலே எழுந்து, சிவ ஒளியாகி, உச்சியின் மேல் நின்று, அருள் செய்வான்.

#363. அஞ்சேல் என அருள்வான்!


அலைகடல் ஊடு அறுத்து அண்டத்து வானோர்

தலைவன் எனும் பெயர் தான் தலை மேற்கொண்டு
உலகார் அழற் கண்டு உள்வீழாது ஓடி
அலைவாயில் வீழாமல் அஞ்சல் என்றானே.

கடல் பகுதியாகிய மணிபூரகத்தைப் பிளந்து கொண்டு எழுவான் சிவன். அண்டத்தின் எல்லையைச் சென்று அடைவான் .அனைவருக்கும் தானே தலைவன் ஆவான். உலகினர் காமத் தீயில் விழுந்து துன்பமயமான உலகில் அழுந்தாமல், “அஞ்சேல்!” என்று உரைத்து அவர்களைக் காப்பான் சிவன்.

#364. பரவெளியில் விளங்குவான்


தண்கடல் விட்டது அமரரும் தேவரும்

எண்கடல் சூழ் எம்பிரான் என்ற இறைஞ்சுவர்
விண்கடல் செய்தவர் மேல் எழுந்து அப்புறம்
கண்கடல் செய்யும் கருத்து அறியாரே.

குளிர்ந்த கடலாகிய மணிபூரகத்தைக் கடந்த அறிவு மயமாகிய சூரியன் சிவன். அமரத் தன்மை பெற்றவன். ஒளி மண்டலத்தினன். கடல் போல் தலையின் மீது எட்டு திக்குகளிலும் பரவியவன். வைச் சிவன் என்று தொழுவர் வானவரும் தேவர்களும். வானத்தைக் கடல் போலச் செய்து சிவன் அகக் கண்களுக்கு பரவெளியாகக் காட்சி அளிப்பதை அவர்கள் அறிகிலர்.

#365. காமத்தீ


சமைக்க வல்லானைச் சயம்பு என்று ஏத்தி

அமைக்க வல்லார் இவ்வுலகத்து உளாரே
திகைத்ததெண்ணீரில் கடல் ஒலி ஓசை
மிகைக்கொள அங்கி மிகாமை வைத்தானே

அனைத்துத் தத்துவங்களையும் படைப்பவன் சிவன். அவனைத் தனக்கு ஒரு படைப்பு இல்லாதவன் என்று அமைத்துத் துதிப்பர் உலகத்தோர். பொங்கிய நீரில் கடல் ஒலி போன்ற நாதம் மேலிட்டுப் பரவச் செய்து காமத்தீ மிகாத வண்ணம் அமைத்து அருளியவன் சிவன்.

#366. நான்முகன் செயல்


பண் பழிசெய் வழிபாடு சென்று அப்புறம்

கண் பழியாத கமலத்து இருக்கின்ற
நண் பழியாளனை நாடிச் சென்று அச்சிரம்
விண் பழியாத விருத்தி கொண்டானே.

பண்பை அழிப்பது காமச் செயல். அதைச் செய்பவன் சுவாதிஷ்டானத்தில் உள்ள நான்முகன். நட்பை அழிக்கும் அவனைத் தேடிச் சென்று அவன் சேட்டையைக் கெடுத்த சிவன் விண் பழிக்காதபடி அவன் தலைகளில் ஒன்றைக் கொய்தான்.
 
6. சக்கரப் பேறு

#367 to #370

#367. இன்பங்களை அளிப்பவன்

மால் போதகன் என்னும் வண்மைக்கு இங்கு ஆங்காரம்

கால் போதம் கையினோடு அந்தரச் சக்கரம்
மேல்போக வெள்ளி மலை, அமராபதி
பார் போகம் ஏழும் படைத்து உடையானே.

மயக்கத்தைத் தருபவன் திருமால் என்னும் விஷ்ணு தத்துவம். அது உலக அனுபவம் நீங்கும் வண்ணம் சுழுமுனை வழியே மணிபூரகத்தில் உள்ள உணர்வு சஹஸ்ர தளத்தை அடைய வேண்டும். அப்போது அந்த வெண்மையான ஒளியில் திருமால் தேவர்களின் தேவனாக, ஏழு உலகங்களையும் படைத்து, அனைத்து இன்பங்களையும் அளிக்கும் சதாசிவன் ஆகி விடுவான்.

#368. ஆற்றலை அளித்தான்

சக்கரம் பெற்று நல் தாமோதரன் தானும்

சக்கரம் தன்னைத் தரிக்க ஒண்ணாமையால்
மிக்கு அரன் தன்னை விருப்புடன் அர்ச்சிக்கத்
தக்க நல் சக்தியை தான் கூறு செய்ததே.

மேற்கூறியபடி சிவனிடமிருந்து சக்கரத்தைப் பெற்றான் திருமால். அவன் அந்தச் சக்கரத்தைத் தரிக்க ஒண்ணாமல் மிகுந்த விருப்புடன் சிவனை வழிபட்டான். அப்போது சிவன் தன ஆற்றலின் ஒரு பகுதியை திருமாலுக்கு அளித்தான்.

#369. திருமேனியில் பங்கு தந்தான்


கூறு அது ஆகக் குறித்து நல் சக்கரம்

கூறு அது செய்து கொடுத்தனன் மாலுக்குக்
கூறு அது செய்து கொடுத்தனன் சக்திக்குக்
கூறு அது செய்து தரித்தனன் கோலமே.

சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரம் தந்தான். அது போன்றே சக்தி தேவிக்கும் தன் திருமேனியில் ஒரு பாதியை அளித்தான். திருமாலும் சக்தி தேவியும் சிவபெருமான் ஆணைப்படி நடப்பவர்கள் ஆவர்.

#370. திருமாலின் சக்கரம்

தக்கன் தன் வேள்வி தகர்த்த நல் வீரர்பால்

தக்கன் தன் வேள்வியில் தாமோதரன் தானும்
சக்கரம் தன்னைச் சசி முடிமேல்விட
அக்கி உமிழ்ந்தது வாயு உக்கரத்திலே.

தக்கன் வேள்வி என்பது பிரஜா உற்பத்தி. தக்கன் வேள்வியை வீரபத்திரர் அழித்தார். திருமால் அந்த வீரர் மேல் ஆணை என்னும் சக்கரத்தைச் செலுத்தினார். சக்கரத்தை அந்த வீரர் பிறை முடியில் செலுத்தியபோது காம வாயுவின் வேகத்தால் அந்த அக்னியின் பயன் கிட்டாமல் போனது.
 
Relationship doesn't shine by shaking hands in best times,
But it blossoms by holding hands firmly in critical situations

Prosperity brings many friends. :grouphug:
Adversity tests their sincerity! :decision:

P.S


I missed this post since I guess I am becoming more and more a robot
from human being! Some time in the distant future I may become a
full fledged robot and qualify to become an alien ... since aliens are said
to be ancient robots still functioning! :alien: :rofl:
 
7. எலும்பும், கபாலமும்

#371

#371. ஏந்தியது ஏன்?

லும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணி முடி வானவர் ஆதி
எலும்பும் கபாலமும் எந்திலன் ஆகில்
எலும்பும் கபாலமும் இற்று மண் ஆமே.

எலும்பு என்பது மணி முடிதரித்த தேவர்களின் வடிவம். மண்டையோடு என்பது அறிவின் வடிவம். சிவபெருமான் எலும்பையும், மண்டை ஓட்டையும் பிரளய காலத்தில் தாங்குவது ஏன் தெரியுமா ? அவ்வாறு அவன் தாங்கவில்லை என்றால் மீண்டும் பிறவி எடுக்கும் ஜீவர்களின் பழைய வடிவமும் அறிவும் தொடர்பு இன்றிப் போய்விடும்.
 
8. அடி முடி தேடல்

#372 to #374

#372. மால் அயன் அடி முடி தேடல்

பிரமனும் மாலும் , ‘பிரானே நான்’ என்னப்
பிரமன் மால் தங்கள்தம் பேதமையாலே
பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க
அரன் அடி தேடி அரற்றுகின்றாரே.

“நானே பிரம்மம்!” என்று தம் அறியாமையால் நினைத்துக் கொண்டனர் அரியும் அயனும். அதனால் அஹங்காரம் அடைந்தனர். அப்போது சிவபெருமான் அவர்கள் முன்பு ஒரு பேரொளிப் பிழம்பாகத் தோன்றி நிற்கவும் அந்த ஒளிப் பிழம்பின் அடியையும் முடியையும் அவர்கள் தேடித் தேடிக் காண இயலாமல் வாடி நின்றனர்.

#373. நான் கண்டேன் சிவனை!


ஆம்ஏழ் உலகு உற நின்ற எம் அண்ணலும்
தாம்ஏழ் உலகில் தழற்பிழம்பாய் நிற்கும்
வான்ஏழ் உலகு உறும் மா மணிகண்டனை
நானே அறிந்தேன் அவன் ஆண்மையாலே.

ஏழு உலகங்களும் பொருந்தும் வண்ணம் உயர்ந்து நிற்பவன் சிவன். அவன் தானே அக்கினி வடிவாக ஏழு உலகங்களிலும் பரந்து நிற்கின்றான். வானத்தில் ஏழு உலகங்களிலும் விளங்கும் சிவனை, மாலும் அயனும் தேடியும் காண இயலாத சிவனை நான் அவன் அருளால் காணப் பெற்றேன்.

#374. எங்கும் நிறைந்தவன்

ஊனாய், உயிராய் உணர்வு அங்கியாய், முன்னம்
சேணாய் வான் ஓங்கி , திருஉருவாய் அண்டத்
தாணுவும் ஞாயிறும் தண்மதியும் கடந்து
ஆள் முழுது அண்டம் ஆகி நின்றானே.

உடலாகவும், உயிராகவும், அதில் உறையும் உணர்வாகவும், அக்கினியாகவும், அரி அயன் காண இயலாத தொலை தூரத்துப் பொருள் ஆகவும், வானளாவிய ஒரு பேரொளியாகவும், அண்டங்களைத் தாங்கும் ஒரு தூணாகவும் அவற்றை வலம் வரும் சந்திர சூரியர்களைக் கடந்தவனாகவும், தான் ஆளும் அண்டங்கள் அனைத்திலும் முழுமையாக விளங்குகின்றவன் சிவபெருமான்.
 
#375 to #377

#375. சிவனை அறிய இயலாது!

நின்றான் நிலமுழுது அண்டத்துள் நீளியன்

அன்றே அவன் வடிவு அஞ்சினர் ஆய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேல் செல
நன்று ஆம் கழல்அடி நாட ஒண்ணாதே.

எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்கும் சிவபெருமான் அண்டங்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டு உயர்ந்து நின்றான். பேரொளியாக அவன் விளங்கிய போது அவன் ஒளிரும் திருமேனியைக் கண்டு அஞ்சினர் அரியும் அயனும். அந்த ஒளியின் அடி முடிகளைக் ஆராயச் சென்றனர் இருவரும். அரி நிலத்தின் கீழேயும் அயன் வானத்தின் மேலேயும் சென்றனர். எவ்வளவு தேடியும் அடி முடிகளைக் காணாது நாணி மீண்டு வந்தனர்.

#376. அடி முடி காணிலர்


சேவடி ஏத்தும் செறிவுடை வானவர்

மூவடி தாஎன் றானும், முனிவரும்,
பாவடி யாலே பதம் செய் பிரமனும்
தாவடி இட்டுத் தலைப் பெய்துமாறே.

கூட்டமாக இருந்து சிவன் சேவடிகளைப் போற்றுகின்ற தேவர்களும், தானமாக மூன்றடி மண் கேட்ட திருமாலும், முனிவர்களும், இசை வடிவான மந்திரங்கள் மூலம் விரும்பியவற்றை அடையலாம் என்னும் நான்முகனும் அலைந்து திரிந்தாலும் சிவனைக் காண இயலாது அல்லவா?

#377. சிவன் இயல்பை அறிகிலர்


தானக் கமலத்து இருந்த சதுமுகன்

தானக் கருங்கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும் பொருள் தன்மையது ஆமே.

சுவாதிஷ்டானச் சக்கரத்தில் இருக்கும் நான்முகனும், மணிபூரகத்தில் இருக்கும் திருமாலும், ஊனின் உள்ளே இருக்கும் உயிர் போல் உணரவல்ல, தலை உச்சியில் விளங்கும் சதாசிவனுக்கு ஈடு ஆவரோ? ஆக மாட்டார்!


 
#378 to #380

#378. சாதாக்கியம் பெறலாம்

ஆலிங்கனம் செய்து எழுந்த பரஞ்சுடர்

மேல் இங்ஙன் வைத்தது ஓர் மெய்நெறி முன்கண்டு
ஆலிங்கனம் செய்து உலகம் வலம் வரும்;
கோலிங்க அமைஞ்சு அருள் கூடலும் ஆமே

சாதாக்கியம் = சிவதத்துவங்கள் ஐந்தில் ஒன்று.

ஞானமும் செயலும் ஒத்தது சாதாக்கியம்.

கோலிங்கம் ஐந்து :

1. கர்ம சாதாக்கியம், 2. கர்த்துரு சாதாக்கியம், 3. மூர்த்தி சாதாக்கியம்,
4. அமூர்த்தி சாதாக்கியம், 5. சிவ சாதாக்கியம்.


அனைத்திலும் கலந்து விளங்குகின்ற மேலான மெய்ப்பொருள் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை உணர்ந்து கொண்டால், நம்மால் எல்லாத் தத்துவங்களில் கலந்து நிற்கும், அதே சமயம் அவற்றைக் கடந்தும் நிற்கும் பஞ்ச சதாக்கியத்தின் அருளைப் பெறமுடியும்.

சிவனால் வகுக்கப்பட்ட நெறியில் சென்றால் சிவசதாக்கியத்தை எளிதாக அடையலாம்.

#379. தேவர்கள் சிவனைப் பொருந்தார்


வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள்

ஆள் கொடுத்து எம் போல் அரனை அறிகிலர்;
ஆள் கொடுத்து இன்பம் கொடுத்துக் கோளாகத்
தாள் கொடுத்தான் அடி சாரகிலரே.

தேவர்களுக்கு ஒளி தந்தவன் சிவபெருமான். அவனை வணங்குவார்கள் தேவர்கள். ஆயினும் தங்களையே இறைவனுக்கு அடிமையாகத் தந்து, நாம் அறிந்தது போல சிவனை அவர்கள் அறிகிலர். இறைவன் தன்னையே நமக்குத் தருவான். சிவ போகத்தையும் தருவான். நாம் உய்யும் வண்ணம் தன் திருவடிகளைத் தருவான். என்றாலும் தேவர்கள் சிவனைச் சென்று பொருந்துகிலர். பலவேறு ஆசைகளுடன் அவர்கள் சிவனை வழிபடுவதால் அந்த அறியாமை அவனுடன் பொருந்த விடாது.

#380. படைக்கும் தொழிலை அருளினான்.


ஊழி வலம் செய்து அங்கு ஓரும் ஒருவருக்கு

வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்;
‘வீழித் தலை நீர் விதித்தது, தா’ என
ஊழிக் கதிரோன் ஒளியை வென்றானே.

ஊழியைச் செய்பவன் உருத்திரன். அவனை ஆராய்ந்து அறிபவன் சிவன். ” எனக்குத் தாங்கள் இடும் ஆணையை அளித்து அருள்க!” எனப் பிரமன் வேண்டிடப் பேரொளியாக நின்ற இறைவன் பிரமனுக்குப் படைப்புத் தொழிலை அளித்தான்.


 
9. சர்வ சிருஷ்டி

#381 to #383

#381. நாதத் தத்துவம்

ஆதியோடு அந்தம் இலாத பராபரம்
போதம் அது ஆகப் புணரும் பராபரை
சோதி அதனில் பரம் தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரை; அதன் பால் திகழ் நாதமே.

தொடக்கமும் முடிவும் இல்லாதது பரம் பொருள். அறிவு மயமாகப் பிரிக்க இயலாதபடி உள்ள பரம் பொருளிடம் தோன்றுவாள் பரை என்னும் சக்தி. அந்தச் சக்தியிடம் தோன்றும் நாதம்.

#382. நாதத்தில் தோன்றுபவை


நாதத்தில் விந்துவும் நாத விந்துக்களில்
தீதற்றகம் வந்த சிவம் சத்தி என்னவே
பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்
வாதித்த இச்சையில் வந்து எழும் விந்துவே.

நாதத்திலிருந்து தோன்றும் விந்து. நாத விந்துகளில் இருந்து தோன்றுவர் சிவனும் சிவை என்னும் சக்தியும். சிவன் பேரறிவு கொண்டவன். சிவை என்னும் சக்திதேவி பேராற்றல் கொண்டவள். இங்ஙனம் இருவராகப் பிரிந்த பின்னர் ஞானமும் செயலும் உண்டாகும். அதனால் உலகைத் தோற்றுவிக்கும் இச்சை எழும். இவை அனைத்தும் சுத்த மாயையிலிருந்து தோன்றுபவைகள்.

#383. சக்தியின் பெருமை

இல்லது சத்தி இடம்தனில் உண்டாகிக்
கல் ஒளி போலக் கலந்து உள் இருந்திடும்;
வல்லது ஆக வழி செய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.

தத்துவங்கள் தோன்றும் இடம் ஆவாள் சக்தி தேவி. இவள் நவ மணிகளின் ஒளியுடன் பராசக்தியிடம் தோன்றி நம் ஆவியில் கலந்து பரவி நிற்பாள். ஆற்றலோடு தொழில் செய்ய வல்ல அந்தச் சக்தியின் பெருமைகளை நம்மால் கூறவும் இயலுமோ?



 
#384 to #386

#384. சதாசிவன்

தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு சத்தியாய்,
ஆர்வத்து நாதம் அணைந்து ஒரு விந்துவாய்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்தி ஓர் சாத்துமான் ஆமே.

எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவன் சிவன். அவன் பேரொளி வடிவானவன். அவனே எண்ணத்துக்கு உட்பட்ட சக்தியாகவும், இச்சையினால் நாதத்தைப் பொருந்துகின்ற விந்துவாகவும், பாரமான ஐந்தொழில்களைப் புரிபவனாகவும் ஒப்பற்ற ஆற்றல் கொண்டவனாகவும் உள்ளான்.

#385. பிரபஞ்சம் தோன்றிய விதம்


மானின்கண் வான் ஆகி, வாயு வளர்ந்திடும்

கானின் கண் நீரும் கலந்து கடினமாய்த்
தேனின் கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்ப்
பூவின் கண் நின்று பொருந்தும் புவனமே.

அசுத்த மாயையினின்றும் ஆகாயம் தோன்றும். அதிலிருந்து தோன்றும் வாயு. வாயுவிலிருந்து நெருப்பும் , நெருப்பில் இருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றும். பஞ்சீகரணம் என்னும் முறைப்படி பஞ்ச தன்மாத்திரைகள் கலக்கப்படும் போது பஞ்ச பூதங்கள் இவ்வாறு தோன்றும்.

#386. சிவ சக்தியர்


புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி

புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை ஆயனாய்
புவனம் படைப்பான் அப்புண்ணியன் தானே.

புவனத்தைப் படைப்பது சிவ சக்தியர். அவர்களுக்கு ஐந்து புதல்வர்கள் உள்ளனர். அவர்கள் முறையே நான்முகன், திருமால், ருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆவர். படைக்கும் போது சிவசக்தியர் பிரம்மனிடம் பொருந்தி இருப்பர். நிலம், நீர், தீ, வளி, வெளி, விந்து, நாதம், சக்தி, சிவன் என்ற ஒன்பதையும் படைப்பர்.


 
#387 to #389

#387. உலகினைக் காப்பர்.

புண்ணிய நந்தி பொருந்தி உலகுஎங்கும்

தண்ணிய மானை வளர்த்திடும் சக்தியும்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.

அறிவு மயமாகச் சிவன் அனைத்துப் பொருட்களிலும் பொருந்தி இருப்பான். அவனே குளிர்ச்சி பொருந்திய மாயையும் காக்கின்றான். சக்தி சிவனுடன் பொருந்தி, வெப்பத்தைத் தணிக்கும் குளிர்ச்சி போலச் செயல்படுவாள். சிவனின் தாங்கும் தன்மையில் அவளும் விரிந்து இருப்பாள்.

#388. பிறப்பு உண்டாவது

நீரகத்து இன்பம் பிறக்கும் நெருப்பு இடை

காயத்தில் சோதி பிறக்கும் அக்காற்று இடை
ஓர்வு உடை நல்உயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீர் இடை மண்ணின் நிலைப் பிறப்பாமே

புருஷனுக்கு இன்பம் உண்டாவது நீர்ப் பகுதியாகிய மணிபூரகத்தில் ஆம். அனாகதத்தில் அக்னி விளங்குவதால் அங்கே ஒளி வீசும் கிரணங்கள் உண்டாகும். விசுத்தியில் வாயு விளங்கு உயிர்நிலைபெற்று இருக்கும். நாதமோ எனில் சக்தியியைத் தரும். நீருக்கும் ( மணிபூரகச் சக்கரம்)
மண்ணுக்கும் ( மூலாதாரம்) இடையே உள்ள சுவாதிஷ்டானமே உற்பத்திக்குரிய இடம் ஆகும்.

#389. உலகினைப் படைப்பவன்


உண்டு உலகு எழும் உமிழ்ந்தான் உடன் ஆகி

அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னோடும்
பண்டு இவ்வுலகம் படைக்கும் பொருளே.

உலகு ஏழையும் உண்டு உமிழ்ந்த திருமால் உலகினைக் காக்கும் கடவுள் ஆவான். நான்முகன் உலகினைப் படைக்கும் கடவுள் ஆவான். ஆனால் அண்டங்கங்களில் வாழுகின்ற தேவர்களின் தலைவனாகிய சிவபெருமானே அனைவருக்கும் தலைவனும் முதல்வனும் ஆவான். அவனே உண்மையில் இந்த உலகினைப் படைத்துக் காக்கும் மெய்பொருள் ஆவான்.


 
#390 to #392

#390. சிவனே பிரமன் ஆவான்

ஓங்கு பெருங்கலடலுள்ளுறு வானோடும்

பாங்கார் கயிலைப் பராபரன் தானும்
வீங்குங் கமலா மலர்மிசை மேலயன்
ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந்தானே.

விரிந்த கமல மலர்மீது அமரும் நான்முகன் உடலுடன் உயிரைப் பொருத்தும் செயல் செய்கின்றான். இதன் தன்மையை ஓங்கிய கடற் பகுதியாகிய சுவாதிஷ்டானத்தில் உள்ள திருமாலுடன், தலையின் மீதுள்ள வெண்மையான ஒளியில் விளங்கும் சிவபெருமானும் நன்கு அறிவான்.

#391. சிவனே அனைத்துமாவான்


காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன்

நாரணன் நின்ற நடுவுடலாய் நிற்கும்
பாட அணன்அன்பின் பதம் செய்யும் நான்முகன்
ஆரணமாய் உலகாய் அமர்ந்தானே.

அன்புடன் அனைத்துப் பொருட்களிலும் கலந்து உறைபவன் சிவபெருமான். அவனே படைப்புக்குக் காரணம். அவனே உடலின் நடுப் பகுதியில் நாபிப் பிரதேசத்தில் திருமாலாகவும் அமர்ந்துள்ளான். அவனே உலகங்களைப் படைக்கும் பிரமனாகவும் உள்ளான். அவனே சொற் பிரபஞ்சமாகவும் பொருட் பிரபஞ்சமாகவும் விளங்குகின்றான்.

#392. சிவன் துணை பயன் தரும்!


பயன்எளி தாம் பரு மாமணி செய்ய

நயன்எளிது ஆகிய நம்பன் ஒன்று உண்டு
அயன்ஒளி யாய் இருந்து அங்கே படைக்கும்
பயன்எளிது ஆம் வயணம் தெளிந்தேனே.

எளிமையாக நன்மைகள் செய்யும் சிவபெருமான் ஒருவன் உளான். பயனை எளிதாக்கும் ஒரு பெரிய மாணிக்கத்தைப் போன்றவன் அவன். அவனே மூலாதாரத்தில் இருந்து கொண்டு நான்முகனுக்கு ஒளியை அளித்துப் படைப்புத் தொழிலில் உதவுகின்றான். அவன் துனையைப் பெற்றால் பயன்களை எளிதாக அடைந்து விடலாம் னென்று நான் உணர்ந்து கொண்டேன்.
 
#393 to #395

#393. முத்தொழில்கள்

போக்கும் வரவும் புனிதன் அருள் புரிந்து
ஆக்கமும் சிந்தையது ஆகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையோடும்
தாக்கும் கலக்கும் தயாபரன் தானே.

படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழில்களையும் உள்ளத்தில் எண்ணிப் பார்க்கும் போது மூலாதாரத்திலிருந்து எழுகின்ற சிவந்த ஒளி மேலே சென்று சிரசைச் சுற்றியுள்ள எட்டு திசைகளிலும் பரவும். அப்போது அங்கே சிவன் வெளிப்படுவான் .

#394. இன்பம் தருவான்

நின்று உயிர் ஆக்கும் நிமலன் என் ஆருயிர்

ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடல் உற
முன்துயர் ஆக்கும் உடற்கும் துணையதா
நன்று உயிர்ப்பானே நடுவு நின்றானே.

குற்றமற்றவன் சிவபெருமான். அவன் உலக உயிர்களுடன் பொருந்தி அவற்றைப் பக்குவம் அடையச் செய்வான். அவன் என் அரிய உயிரை என் உடலில் பொருந்தினான். முன்பு துன்பம் தந்தது இந்த உடல். இன்று அவன் நடுநாடியின் உயிர்ப்பாக இருந்து கொண்டு நன்மை செய்கின்றான்.

#394. உடலும் அவனே!


ஆகின்ற தன்மையின் அக்கு அணி கொன்றையன்

வேகின்ற செம்பொன்னின் மேல் அணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன்
ஆகின்ற தன்மை செய ஆண் தகையானே.

உயிரைச் சிவமாகி ஆள்பவன் சிவன். உருத்திராக்கம் அணிந்து கொன்றை மலர் சூடியவன் சிவன். உருக்கிய பொன் நிற மேனியன். பிறக்கும் எல்லா உயிர்களின் உடலாகவும் அவனே உள்ளான்
 
#396 to #398

#396. மாறுபட்ட பயன்கள்

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்;

இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்;
பருவங்கள் தோறும் பயன் பல ஆன;
திருஒன்றில் செய்கை செகம் முற்றும் ஆமே.

சிவனும் சிவையும் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் விளையாடல்களை விளையாடினர். அவ்விருவர் விளையாடும் விளையாட்டு அனைத்தையும் செய்ய வல்லது. சூரியனின் கதி மாறினால் பருவங்கள் மாறிவிடும். இறைவனின் அருட்தன்மை மாறுபடுவதால் ஜீவன் அடைகின்ற பக்குவம் மாறுபடும். அதனால் விளைகின்ற பயன்களும் வேறுபடும்.

#397. முத் தொழில்களைச் சிவன் அறிவான்


புகுந்துஅறிவான் புவனாபதி அண்ணல்

புகுந்து அறிவான் புரி சக்கரத்து அண்ணல்
புகுந்து அறிவான்மலர் மேல் உரை புத்தேள்
புகுந்து அறியும் முடிக்கு ஆகி நின்றாரே.

சிவபெருமான் உலகத்தின் தலைவனாகிய ருத்திரனிடம் புகுந்து உலகை அழிக்கும் செயலை அறிந்துள்ளான். சக்கரத்தை ஆயுதமாகக் கொண்ட திருமாலிடம் பொருந்தி அப்பெருமான் உலகைக் காக்கும் தொழிலை அறிந்துள்ளான். சுவாதிஷ்டானத்தில் கமலத்தில் வீற்றுள்ள பிரமனிடம் பொருந்தி படைப்புத் தொழிலையும் அவன் அறிந்துள்ளான். அவ்வாறு அவன் அறியும்படி அந்த மூவரும் அவன் ஆளுகைக்கு உட்பட்டே அந்தத் தொழில்களை நிகழ்த்துகின்றனர்.

#398. அதிகார மலம்


ஆணவச் சத்தியும் ஆம் அதில் ஐவரும்
காரிய காரன் ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழிலால் விந்துவில் பிறந்து
ஆணவம் நீங்காதவர் எனல் ஆகுமே.

ஆணவ மலத்தை உடையவர்கள் நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுவரன், சதாசிவன் என்னும் ஐவர். தகுதியால் மேலே உள்ள ஈசனைக் காரண ஈசன் என்றும் கீழே உள்ள ஈசனைக் காரிய ஈசன் என்றும் கூறுவர். சுத்த மாயையில் தோன்றி ஐந்தொழில்கள் புரியும் இவர்கள் ஆணவ மலம் நீங்காதவர்கள் என்றே கருதப் படுவர்.



 
#399 to #401

#399. சிவசக்தியரின் விளையாட்டு

உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதயமாம்

மற்றைய மூன்றும் மாயோதயம் விந்து
பெற்றவன் நாதம் பரையில் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல் விளையாட்டிதே

சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என மாயை மூன்று வகைப்படும். சாதாக்கியம், மகேசுவரம், சுத்த வித்தை என்ற மூன்றும் மாயையின் காரியங்கள் ஆகும். பரையிலிருந்தே தோன்றும் நாதமும், விந்துவும். பரையுடன் சிவன் ஆடுகின்ற விளையாட்டே படைப்பு ஆகும்.

#400. மாயா சக்தி

ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என்

போகாத சத்தியுள் போந்து உடன் போந்தனர்
மாகாய ஈசன் அரண் மால் பிரமனாம்
ஆகாயம் பூமி காண அளித்தலே.

வான் முதலான பூதங்கள் ஐந்து. இவற்றை இயக்குகின்ற சதாசிவன் போன்றவர்களும் ஐவர் ஆவர். மாயையில் பொருந்தி, இவ்வைவரும் என் உடலிலும் உயிரிலும் தொழில் புரிகின்றார்கள். வான் மண் போன்ற உலகங்களைத் தோன்றுமாறு செய்பவர்களும் இந்த ஐவரே!

#401. ஐந்தொழில்கள்

அளியார் முக்கோணம் வயிந்தவம் தன்னில்

அளியார் திரிபுரையாம் அவள் தானே
அளியார் சதாசிவம் ஆகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்தும் செய்வாளே.

தேவியின் முக்கோணப் பீடம் அருளால் நிறைந்தது. அதில் உள்ள விந்துவின் மையத்தில் விளங்குவாள் அருள் மிகுந்தவளும், மண்டலங்களின் தலைவியும் ஆகிய சக்தி தேவி. அருள் மிகுந்த சதாசிவ மூர்த்தியிடம் பொருந்தி இருப்பவளும் அவளே. ஐந்தொழில்களைச் செய்பவளும் அவளே.



 
#402 to #404

402. எல்லாமாக இருப்பவள்

வாரணி கொங்கை மனோமனை மங்கலி

காரணி, காரியம் ஆகக் கலந்தவள்;
வாரணி ஆரணிவானவர் மோகினி
பூரணி போதாதி போதமும் ஆமே.

கச்சை அணிந்த ( சூரியன் , சந்திரன் என்னும் இரண்டு) ஸ்தனங்களை உடைய மனோன்மணி ஆவாள் சதாசிவனின் நாயகி; அவளே மங்கலப் பொருள்; அவளே எல்லாவற்றுக்கும் காரணம், அவளே காரியமாகிய ஐந்தொழில்களில் கலந்தவள்; அவளே ஓங்காரத்தின் வடிவம்; அவளே வேதப் பொருள்; அவளே தேவர்களையும் மயக்கும் திரோதான சக்தி; அவளே அறிவாகவும் (ஞானமாகவும்) பேரறிவாகவும் (அனுபவ ஞானமாகவும்) விளங்குபவள்.

#403. சதாசிவனே அனைத்து மூர்த்திகள்


நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்

சென்றங்கு இயங்கும் அரன் திருமாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேல் அயன்
என்ற இவராக இசைந்திருந்தானே.

மகேசுரன் சதாசிவத்துடன் கலந்து இருப்பான். அவனே கீழே சென்று தத்தம் தொழில்களைப் புரியும் உருத்திரனாகவும், திருமாலாகவும் ஆண் பெண்களின் சேர்க்கையைச் சுவாதிஷ்டானச் சக்கரத்தில் இருந்து கொண்டு செய்யும் நான்முகனாகவும் பொருந்தி இருக்கின்றான்.

#404. எல்லாமாக இருப்பவன் சிவனே!


ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான்

ஒருவனுமே உலகு ஏழும் அளித்தான்
ஒருவனுமே உலகு ஏழும் துடைத்தான்
ஒருவனுமே உலகோடு உயிர் தானே.

சிவன் என்னும் ஒருவ தேவனே சதாசிவன் என்னும் தலைவன் ஆகின்றான். அவனே பிரமனுடன் பொருந்தி ஏழு உலகங்களைப் படைக்கின்றான்; அவனே திருமாலுடன் பொருந்தி ஏழு உலகங்களைக் காக்கின்றான்; அவனே ஏழு உலகங்களை உருத்திரனுடன் பொருந்தி அழிக்கின்றான். அவனே உலகமாகவும் அதில் உள்ள உயிர்களாகவும் இருக்கின்றான்.


 
#405 to #407

#405. உலக உற்பத்தி
செந்தாமரை வண்ணன் தீவண்ணன் எம்மிறை
மஞ்சுஆர் முகில் வண்ணன் மாயம் செய்பாசத்தும்
கொந்துஆர் குழலியர் கூடிய கூட்டதும்
மைந்தார் பிறவி அமைத்து நின்றானே.

செந்தாமரை போன்று தீயின் செந்நிறம் உடையவன் உருத்திரன். மேகம் போன்ற கரிய நிறம் கொண்டவன் திருமால். அவனே உலகை மயக்கி, பந்தத்தை ஏற்படுத்தி, பூங் கொத்துக்களை அணிந்த மங்கையர் கூட்டத்தில் பொருந்தி, உலக உற்பத்தியை நிகழ்த்துகின்றான்.

#406. ஊடலும், நாடலும், கூடலும்


தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்

கூடும் பிறவிக் குணம் செய்த மாநந்தி
ஓடும் அவர் தமது உள்ளத்துளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே.

எண் திசைகளிலும் தேடித் திரிபவன் சீவன். அவனை உடலுடன் உயிர் கூடிப் பிறக்கும்படிச் செய்பவன் சிவன். அவனே ஊடுகின்ற மங்கையர், ஆடவர் உள்ளத்தில் இருந்து கொண்டு, அவர்களின் இன்பத்தை நாடலையும் பின் அவர்களின் கூடலையும் ஏற்படுத்துகின்றான்.

#407. சிவ சக்தியர் செயல்கள்


ஓர் ஆயமே உலகு எழும் படைப்பதும்

ஓர் ஆயமே உலகு எழும் அளிப்பதும்
ஓர் ஆயமே உலகு எழும் துடைப்பதும்
ஓர் ஆயமே உலகோடு உயிர்தானே.

சிவ சக்தியரே ஏழு உலகங்களையும் படைக்கின்றனர். சிவ சக்தியரே ஏழு உலகங்களையும் காக்கின்றனர். சிவ சக்தியரே ஏழு உலகங்களையும் அழிக்கின்றனர். சிவ சக்தியரே உலகோடு உயிரை இணைத்து வைக்கின்றனர்.
 
#408 to #410

#408. ஆணையிடுபவன் சிவனே!

நாதன் ஒருவனும் நல்ல இருவரும்

கோது குலதொடும் கூட்டிக் குழைத்தனர்
ஏதுபணி என்று இசையும் இருவருக்கு
ஆதி இவனே அருளுகின்றானே.

தலைவன் ஆவான் சிவபெருமான். சதாசிவன், மகேசுரன் சீவன்களுக்கு நன்மை செய்யும் இருவர்.இவர்கள் சுத்த மாயை அசுத்த மாயை என்ற இரண்டையும் கூட்டிக் குழைத்து காரண நிலையை அமைப்பர். “காரியம் யாது செய்ய வேண்டும்?” என்று வினவும் திருமால் நான்முகன் இருவருக்கும் சிவனே ஆணை இடுகின்றான். அதைச் செய்யும் ஆற்றலையும் அவர்களுக்கு அளிக்கின்றான்.

#409. படைப்பு என்பது பொய்யா?

அப்பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம்
மெய்ப்பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும்
பொய்ப்பரிசு எய்திப் புகலும் மனிதர்கட்கு
இப்பரிசே இருள் மூடி நின்றானே.

சிவபெருமானின் ஆணைப்படி பிரமன் நான்கு வகைத் தோற்றத்தில் ஏழு வகைப் பிறப்பில் எண்பத்து நான்கு லக்ஷம் வேறுபாடுகளுடன் உடல்களைப் படைக்கின்றான். இதைப் பொய் என்று கூறுபர்களை அவனே ஆணவ இருளில் ஆழ்த்துகின்றான்.

#410. மாயையின் விரிவு

ஆதித்தன், சந்திரன், அங்கி, எண்பாலர்கள்
போதித்த வான், ஒலி, பொங்கிய நீர் புவி
வாதித்த சத்து ஆதி, வாக்கு மன ஆதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.

சூரியன்; சந்திரன்; எட்டுத் திக்குப் பாலகர்கள்; போதனை செய்யும் நாதம் நிரம்பியுள்ள வானம்; வாதனை தரும் சப்தம், ஸ்பரிசம், ரூபம், ரசம் கந்தம் என்னும் ஐந்து தன் மாத்திரைகள்; புத்தி, மனம், சித்தம், அஹங்காரம் என்னும் அந்தக் கரணங்கள்; அனைத்துமே மகேசுவரரின் விந்து மண்டலத்தில் நுட்பமாக அமைந்துள்ளன.

 

Latest ads

Back
Top