Quotable Quotes Part II

#234 to #237

#234. உண்மை அந்தணர்

அந்தண்மை பூண்ட அருமறையந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துத லில்லை நரபதி நன்றாகும்
அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.


உண்மையான அந்தணர்கள் என்பவர் இவர்களே! எல்லா உயிர்களிடத்தும் கருணை உள்ளம் கொண்டவர்கள். வேதங்களின் முடிவாகிய சிவனை இடையறாது சிந்தை செய்பவர்கள். இவர்கள் இருக்கும் பூமி வளமானது ஆகும்; வளம் குன்றவே குன்றாது! இவர்கள் நாட்டை ஆளும் தலைவனும் நல்லவன் ஆவான். அந்தணர்கள் தினம் தவறாமல் இருமுறை ஆகுதி செய்வார்கள்.

#235. முக்தியும், சித்தியும் எய்துவர்!


வேதாந்த ஞானம் விளங்க விதி இலோர்
நாதாந்த போதம் நணுகிய போக்கது
போதாந்த மாம்பரன் பால்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியும் சித்தியு நண்ணுமே.


வேதாந்த ஞானம் பெறுகின்ற நல்வினைப் பயன் இல்லாதவர்கள் நாதாந்தத்தில் உள்ள முக்தியாகிய பதத்தினை அடைவார்கள். அறிவின் எல்லையாகிய ஞானம் அடைந்தவர்கள் அதன் மூலம் பரத்தை அடைந்தால் அடைவர் நாதாந்த முக்தியுடன் சித்தியும்.

#236. சிவனை நாடுவர்


ஒன்று மிரண்டு மொருங்கிய காலத்து
நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
சென்று வணங்கும் திருவுடையோரே.


பிராணன், உள்வாங்கும் மூச்சு, வெளிவிடும் மூச்சு இவை அடங்கும் போது நன்றாக இருந்து கொண்டு நல்லவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மேலான முக்தியை விழைபவர்கள் எல்லாவற்றையும் கடந்து விளங்கும் சிவனையே நாடுவார்கள்.

#237. பற்று நீங்கும்


தானே விடும் பற்று இரண்டும் தரித்திட
‘நானே’ விடப்படும் ஏது ஒன்றை நாடாது;
பூமேவு நான்முகன் புண்ணியப் போகனாய்
‘ஓம்’ மேவும் ஓராகுதி அவி உண்ணவே.


இறைவனை நினைக்க நினைக்க அகன்று விடும் ‘நான்’ என்ற அகப் பற்றும், ‘எனது’ என்ற புறப்பற்றும். அஹங்காரம் முற்றிலும் அழிந்து போகும். பிறகு பொருட்களில் உள்ள நாட்டம் போய்விடும். தாமரை மலரில அம்ர்ந்துள்ள பிரம்மனைப் போல புண்ணியம் ஒன்றையே நாடி ஆகுதிகள் செய்து, வேள்வி அவியை உண்டால் ஓம் ஆகிய சிவனே வந்து பொருந்துவான்.
 
13. ராச தோடம் (அரசனின் குற்றங்கள்)

#238 to #242


#238. காலன் நல்லவன்!

கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்
கல்லா அரசனிற் காலன் மிக நல்லன்
கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான்
நல்லாரைக் காலன் நணுக நில்லானே.


கற்க வேண்டியவற்றைக் கற்று அறியாத மன்னனும் உயிர்களைப் பறிக்கும் காலனும் ஒப்பானவர்கள் ஆவர். கல்வி அறிவு பெறாத மன்னனைவிடக் காலன் நல்லவன். கல்வி கற்காத மன்னன் அறவழியில் நில்லான். நல்லவர்களைக் கொல் என்று ஆணையிடுவான். காலன் நல்வழியில் நிற்பவர்களை அணுக மாட்டான்.


#239. வளம் குறையும்


நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
நாள்தோறும் நாடி அவநெறி நாடானேல்
நாள்தோறும் நாடு கெட மூடம் நண்ணுமால்
நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே.


மன்னன் நாள்தோறும் நன்நெறியை ஆராய வேண்டும். நாள்தோறும் அவன் நீதி நெறிப்படி ஆட்சி செய்ய வேண்டும்.
அப்படிச் செய்யத் தவறினால் அந்த நாட்டின் வளம் நாள் தோறும் குன்றிக் குறைந்து போய்விடும். மக்களிடம் அறியாமை பெருகிவிடும். மன்னனின் செல்வம் குறைந்து விடும்.


#240. வேடமும் நெறியும்


வேடநெறி நில்லார் வேடம்பூண்டு என்பயன்
வேடநெறி நிற்போர் வேடம் மெய்வேடமே
வேடநெறி நில்லார் தம்மை விறல்வேந்தன்
வேடநெறி செய்தால் வீடுஅது ஆமே.


ஏற்றக் கொண்ட வேடத்துக்கு ஏற்ப ஒருவனின் அகமும் புறமும் ஒத்து இருக்காவிட்டால் அவன் புனைந்து கொண்ட வேடத்தால் என்ன பயன்? ஏற்றுக் கொண்ட வேடத்துக்கு ஏற்ப நிற்பவர் வேடமே உண்மையில் அதற்கேற்ற பயனைத் தருவது கண்கூடுவேடத்துக்கு ஏற்ப நடக்காதவரைக் கண்டித்தும் தண்டித்தும் அவனை நல்வழியில் நிற்கச் செய்யும் மன்னனுக்கு வீடுபேறு கிடைக்கும்.


#241. வேண்டாம் ஆடம்பரம்


மூடங் கொடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
பீடொன் றிலனாகு மாதலாற் பேர்த்துணர்
ந்து
ஆடம் பரநூல் சிகையறுத் தானன்றே.


அறியாமை நீங்கப் பெறாதவர்கள் அந்தணருக்குரிய சிகை, பூணூல் முதலியவற்றை கைக் கொண்டால் அந்தச் செய்கையால் வருந்தும் இந்த மண்ணுலகு! மன்னனின் பெருவாழ்வும், பெருமையும் அழிந்துவிடும். ஏற்கும் வேடத்தின் உண்மைத் தன்மையை நன்கு ஆராய்ந்து அறிந்துகொண்டு, வெறும் ஆடம்பரத்க்காக அணிந்து கொண்டுள்ள பூணூலையும், சிகையையும் துறந்து விடுவது நாட்டுக்கு நன்மை தரும்.


#242. சோதிக்க வேண்டும்


ஞானமி லாதார் சாடி சிகை நூல்நண்ணி
ஞானிகள் போல நடக்கின் றவர்தமை
ஞானிகளாலே நரபதி சோதித்து
ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டுக்கே.


ஞானம் அடையாதவர்கள் வெறுமனே வேடம் அணிந்து கொண்டு, சடை, குடுமி, பூணூல் இவற்றுடன் ஞானிகள் போல நடமாடினால், அரசன் ஞானியரைக் கொண்டே அவர்களை நன்கு சோதிக்க வேண்டும். அவர்களை ஞானம் பெறுமாறு செய்வது நாட்டுக்கு நலம் பயக்கும்.



 
#243 to #247

#243. மீளா நரகம்

ஆவையும், பாவையும், மற்றுஅற வோரையும்,
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன்; காவது ஒழிவானேல்
மேவும் மறுமைக்கும் மீளாநரகமே.


ஆவினம், பெண்கள், அறவழியில் நிற்பவர்கள், தேவர்களும் தொழும் திருவேடம் புனைந்தவர்கள், இவர்களை ஒரு மன்னன் காப்பாற்ற வேண்டும். அங்ஙனம் காக்கத் தவறி விட்ட மன்னன் மீள முடியாத நரகத்தைச் சென்று அடைவான்.


#244. ஆறில் ஒரு பங்கு


திறம்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும்;
சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே.


மறுமையில் முக்தியையும், இம்மையில் செல்வமும், பெற விரும்புகின்ற ஒரு மன்னன் செய்ய வேண்டியது இது. அவன் அறத்தையே எப்போதும் நிலை நாட்ட வேண்டும். கடல் சூழுலகில் மக்கள் செய்யும் நல்வினைகள் தீவினைகள் அனைத்திலும் ஆறில் ஒரு பங்கு அரசனையே சாரும்.


#245. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி!


வேந்தன் உலகைக் மிக நன்று காப்பது
வாய்ந்த மனிதர்கள் அவ்வழியா நிற்பர்;
பேர்ந்து இவ்உலகைப் பிறர் கொள்ளத் தாங்கொள்ளப்
பாய்ந்த புலி அன்ன பாவகத்தானே.


மன்னன் உலகைக் காக்கும் திறன் மிகவும் நன்றாக உள்ளது. அவன் நாட்டு மக்களும் அவனைப் போலவே இருப்பார்கள். பகைமை பூண்ட அயல் நாட்டு மன்னன் இவன் நாட்டைக் கைப்பற்றுவான். அதே போன்று இவன் அயல் நாட்டைக் கைப் பற்றுவான். விளைவுகளை ஆராயாது பாய்கின்ற மன்னனுக்கும் காட்டுப் புலிக்கும் என்ன வேறுபாடு உள்ளது?


#246. வேந்தர் கடன்


கால்கொண்டு கட்டிக் கனல் கொண்டு மேலேற்றிப்
பால் கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
மால்கொண்டு தேறலை யுண்ணும் மருளரை
மேல்கொண்டு தண்டஞ் செய்வேந்தன் கடனே.


மூச்சுக் காற்றின் இயக்கத்தைத் தடுக்க வேண்டும். மூலாதாரத்தில் உள்ள கனலை மேலேற்ற வேண்டும். பால் போன்று நிலவும் வெண்ணிற ஒளியின் உதவியால் மதி மண்டலத்தைக் கண்டு கொள்ள வேண்டும். அங்கு பொழியும் ஆனந்தத் தேனைப் பருக வேண்டும். இதை விட்டு விட்டு ஆனந்தம் தரும் என்று மயங்கி, மயக்கம் தரும் கள்ளை அருந்தி மேலும் மயங்காமல், மக்களைக் காப்பது ஒரு நல்ல மன்னனின் கடமை ஆகும்.


#247. சமயவாதிகள்


தத்தம் சமயத் தகுதி நில் லாதாரை
அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
எத்தண் டமும்செயும் அம்மையில் இம்மைக்கே
மெய்த்தண் டம்செய்வது அவ் வேந்தன் கடனே.


தங்களுக்கு உரிய சமய நெறியில் நிற்காதவர்களைச் சிவபெருமான் ஆகம நெறிப்படி மறு பிறவியில் தண்டனை தந்து திருந்துவான். இந்தப் பிறவிலேயே தகுந்த தண்டனை தந்து அவர்களைத் திருத்துவது ஒரு நல்ல மன்னனின் கடமைகளில் ஒன்று ஆகும்.



 
14. வானச் சிறப்பு.

#248 and #249

#248. அமுதூறு மாமழை

அமுதூறு மாமழை நீரத னாலே
அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.


அமுதம் போன்ற மழைப் பொழிவினால் உலகம் எங்கும் வளமையும் பசுமையும் பெருகும். சுவையான கனிகள் கொண்ட மரங்கள் வளரும். பாக்கு, இளநீர் தரும் தெங்கு, கரும்பு, வாழை இவற்றோடு சமாதி நிலைக்கான மூலிகை காஞ்சிரையும் தோன்றி வளரும்.


#249. நுரையும் கரையும் இல்லை


வரை இடைநின்றுஇழி வான்நீர் அருவி
உரை இல்லை, உள்ளத்து அகத்து நின்று ஊறும்;
நுரை இல்லை, மாசு இல்லை, நுண்ணிது தெள்நீர்;
கரை இல்லை எந்தை கழுமணி ஆறே.


சிவனின் தலை ஆகிய மலையில் இருந்து பெருகுவது ஒளிமயமான கங்கை. அதன் பெருமையை உரைப்பதற்கு இல்லைப் பொருத்தமான வார்த்தைகள் . உள்ளத்தில் அன்பினால் ஊறுவதனால் அதில் நுரை இருக்காது; மாசு இருக்காது; தெளிந்த அந்த நீர் கரையில்லாதது; பரந்து அகன்று ஓடுவது; பாவங்களை அழிப்பது.



 
15. தானச் சிறப்பு

#250. ஒல்லை உண்ணன்மின்

ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்
பார்த்து இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே.


எல்லோருக்கும் கொடுங்கள். “அவர் உயர்ந்தவர்! இவர் தாழ்ந்தவர்” என்று வேறுபடுத்திப் பேசாதீர்கள். வரும் விருந்தாளியை எதிர் நோக்கி இருங்கள். அவருடன் சேர்ந்து உணவைப் பகிர்ந்து உண்ணுங்கள். பழைய உணவைப் போற்றிக் காவாதீர்கள். இம்மையிலும் மறுமையிலும் விருப்பம் கொண்டவர்களே! விரைவாக உணவை உண்ண வேண்டாம். காகங்கள் கூட உண்ணும் பொழுது தன் இனத்தைக் கரைந்து அழைத்து உணவைப் பகிர்ந்து உண்ணும் என்பதை அறிவீர்.


 
16. அறம் செய்வான் திறம்

#251. தாம் அறிவார்

தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார் அவர்
தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர்;
தாம் அறிவார் சில தத்துவர் ஆவார்கள்;
தாம் அறிவார்க்குத் தமர் பரன் ஆமே.


தம்மை அறிந்தவர் சிவபெருமானது திருவடிகளை வணங்குவர். தம்மை அறிந்தவர் அறத்தை மேற்கொண்டு செய்து செய்து வருவர். தம்மை அறிந்தவர் உண்மையை உணரும் தத்துவர்கள் ஆவர். தம்மை அறிந்தவர்க்கு இறைவனே உறவினன் ஆவான்.

#252. செய்ய முடிந்தவை, செய்ய வேண்டியவை!


யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே.


எல்லோராலும் செய்ய முடிந்த செயல்கள் இவை. உணவு உண்ண அமரும் முன்னர் இறைவனுக்கு ஒரு வில்வத்தைச் சமர்பித்தல்; தினமும் ஒரு பசுவுக்கு ஒரு கைப்பிடி பச்சைப் புல்லை அளித்தல்; தான் உண்ணும் முன்னர் பிறர் ஒருவருக்கு ஒரு கவளம் உணவு அளித்தல், எல்லாரிடமும் இனிய சொற்களைப் பேசுதல். இவற்றை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

#253. பயன் அறியார்.


அற்றுநின்றார் உண்ணும் ஊணே அரன்என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்று நின்று ஆங்கு ஒரு கூவற் குளத்தினில்
பற்றி வந்து உண்ணும் பயன் அறியாரே.


அகப் பற்றும், புறப் பற்றும் நீங்கியவர்கள் சிவஞானியர். உணவை நாடி அவர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள்.
அவர்களைத் தேடிச் சென்று நாம் அளிப்பதே உணவே அறம். இந்த உண்மையை அறிந்த பிறகும் கல்வியில் சிறந்து விளங்குபவர்கள் பலர் ஒரு கிணற்றங் கரையிலோ, குளத்தங் கரையிலோ தங்கி இருக்கும் ஞானியரை வருந்தி வருந்தி அழைத்து வந்து உணவு அளிப்பதிலையே!

#254. அறம் செய்வீர்


அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமம் செய்வீர்
விழித்திருந்து என் செய்வீர் வெம்மை பரந்து
விழிக்க அன்று என் செய்வீர் ஏழை நெஞ்சீரே.


மன மலங்களை அகற்றி அறிவைப் பெருக்கிக் கொள்ளவில்லை. செல்வம் இருந்தபோதிலும் அறச் செயல்களைச் செய்யவில்லை. உலகில் இப்படிக் காலத்தைக் கழிப்பதால் என்ன பயன் விளையும்? நெருப்பில் உடல் எரியும் போது அறம் செய்யாதவர் நிலை என்னவாகும்? அறம் செய்யும் உள்ளத்தைப் பெறாத மனிதர்களே! இதனைச் சிந்தியுங்கள்!

#255. தவம் செய்வீர்.


தன்னை அறியாது, தாம் நல்லார் என்னாது, இங்கு
இன்மை அறியாது, இளையர் என்று ஓராது,
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மையின் நல்ல தவம் செய்யும் நீரே.


உயிர்களைக் கவரும் யமன் இவற்றைச் சிந்திக்க மாட்டான். உன் நிலைமையை பற்றி சிறிதும் சிந்திக்க மாட்டான். நீங்கள் மிகவும் நல்லவர் என்ற சிந்திக்க மாட்டான்.நீங்கள் வறுமையில் வாடுவதையும் சிந்திக்க மாட்டான். நீங்கள் வயதில் இளையவர் என்றும் சிந்திக்க மாட்டான். வலிமை உடைய யமன் வந்து சேரும் முன்பே நீங்கள் உடலை நிலைக்கச் செய்யும் அரிய தவத்தை மேற்கொள்வீர்!
 
Last edited:
#256 to #259

#256. அறம் செய்யும் முறை

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை;
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவு அறியாரே.


அகப் பற்று புறப் பற்று இரண்டையும் துறந்து விட்டால் அவர்களுக்கு இல்லை எந்த விதமான உறவுமுறைகளும். இறந்து விட்டவர்களுக்கு இல்லை எந்த விதமான உலக இன்பமும். அறம் செய்ய மறந்தவனுக்கு வழித் துணையாக வரமாட்டான் ஈசன். இந்த மூன்று வகைப் பட்டவர்களுமே அறம் செய்யும் முறையை அறியார்.

#257. உடலைப் பேணுவீர்!


தான்தவம் செய்வது ஆம் செய் தவத்து அவ்வழி
மான்தெய்வமாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வமாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான் தெய்வம் என்று நமன் வருவானே.


அறிவைத் தெய்வமாக மதிக்கும் மனிதர்கள், தாம் முற்பிறப்பில் செய்த தவத்தின் பயனாக இப்பிறவியிலும் தவம் செய்து மேன்மை அடைவர். உடலே தெய்வம் என்று மதிக்கும் அறிவற்ற மனிதர்கள் தாமே தெய்வம் என்று எண்ணி அறம் செய்யாது வாழ்வர். யமன் வருவதை அறியாது வீணே அழிந்து போவர்.

#258. மறுமைக்குத் துணை


திளைக்கும் வினைக்கடல் தீர்வு உறுதோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு;
கிளைக்கும் தனக்கும் அக்கேடு இல் புகழோன்
விளைக்கும் தவம் அறம் மேல்துணை ஆமே.


நல்வினைகள், தீவினைகள் இரண்டும் கலந்து ஒரு பெரும் கடலாக மாறி நம்மை அதில் அமிழ்த்து விடும். அதில் மூழ்காமல் பத்திரமாகக் கரையேறுவதற்கு நமக்கும் நம் உறவுகளுக்கும் களைப்பைப் போக்கி உதவுகின்ற தோணிகளாக இரண்டு வழிகள் உள்ளன. அழியாப் புகழை உடைய இறைவனைப் பற்றிக் கொண்டு அறச் செயல்களைப் புரிந்து வாழ்வது ஒரு வழி. இல் வாழ்வில் இருந்து கொண்டே அறச் செயல்களைப் புரிந்து கொண்டு வாழ்வது மற்றொரு வழி. இரண்டுமே மறுமைக்குத் துணையாம்.

#259. சிவன் செய்த வழி


பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்ற முரையான் அறநெறிக் கல்லது
உற்றங்க ளாலொன்று மீந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழி கொள்ளு மாறே.


உலகுக்கு ஆதாரமாக இருப்பவன் இறைவன். அவனைக் குற்றம் கூறாமல் இருத்தல் வேண்டும். அறநெறியை விடுத்துப் பிற நெறிகளில் செல்லாது இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு நாம் கொடுப்பதே நமக்குத் துணையாக மாறி வரும். இதுவே சிவன் நாம் முக்தி அடைவதற்கு ஏற்படுத்தியுள்ள வழியாகும்.
 
17. அறம் செய்யான் திறம்

#260 to #264


#260. பயன் அறியார்!

எட்டி பழுத்த, இருங்கனி வீழ்ந்தன,
ஒட்டோய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன் அறியாரே.


எட்டி மரம் பழுத்தது. பெரிய கனிகள் தரையில் வீழ்ந்தன. ஆனால் யாரும் அவற்றை நாடிச் செல்லவில்லை. வட்டி வாங்கி உலகில் பெரும் பொருள் சேர்ப்பவர் அதன் உண்மையான பயனை அறியார். அறம் செய்யார். அவர்கள் செல்வமும் எட்டிக் கனிகள் போன்று பயனற்றவையே.


#261.அறம் அறியார்


ஒழிந்தன காலங்கள்; ஊழியும்போயின;
கழித்தன கற்பனை; நாளும் குறுகிப்
பிழிந்தன போலத் தம் பேரிடர் ஆக்கை
அழிந்தன கண்டும் அறம் அறியாரே.


காலம் கழிந்து சென்றது. ஊழிகள் ஓடிச் சென்றன. கற்பனைகள் எல்லாம் கனவாகி மறைந்து விட்டன. வாழ்நாட்கள் குறுகின. உடல் சாறு பிழிந்த சக்கையானது. பலவிதத் துன்புற்ற பின்னர் அந்த உடல்கள் அழிந்து பட்டன. இவற்றை எல்லாம் கண்ட பிறகும் உலகத்தவர் அறம் என்பதையே அறியாதவர்களாக இருகின்றார்களே!


#262. பிறப்பும், இறப்பும்


அறம் அறியார், அண்ணல் பாதம் நினையும்
திறம் அறியார், சிவலோக நகர்க்குப்
புறம் அறியார் பலர் பொய்ம்மொழி கேட்டு
மறம் அறிவார், பகை மன்னி நின்றாரே.


அறம் என்பதையே அறியாமல் பலர் உலகில் வாழ்கின்றனர். இறைவனைத் துதிக்கும் திறன் என்பதையும் இவர் அறியார்.
சிவலோகத்தின் பக்கமான சுவர்க்கம் போன்றவற்றையும் அறியார். லௌகீக வாழ்வில் பற்பல பொய்மொழிகளைக் கேட்கின்றனர். பலவிதமான பாவச் செயல்களை இவர்கள் செய்கின்றனர். அதனால் பிறப்பு இறப்பு என்றவற்றில் இவர்கள் பொருந்தி நிற்கின்றனர்.


#263. அறம் செய்யாவிட்டால்…


இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
தருமம் செய்யாதவர் தம்பாலது ஆகும்;
உரும், இடி, நாகம், உரோணி, கழலை
தருமம் செய்வார் பக்கல் தாழகிலாவே.


அறம் செய்யாதவர்க்கு வந்து விளையும் இருமல், சோகை, கோழை, ஜுரம் போன்றவை. மின்னலும் , இடியும், பாம்பும், தொண்டை நோயும், கட்டிகளும் அறம் செய்பவர்களை ஒரு நாளும் அண்டாது.


#264. நரகத்தே நிற்றிரோ?


பரவப் படுவான் பரமனை ஏத்தார்,
இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார்,
கரகத்தால் நீர் அட்டிக் காவை வளர்க்கார்
நரகத்தே நிற்றிரோ நல்நெஞ்சி னீரே.


தன் புகழையே என்றும் விரும்பி வாழ்வார். இறைவனைப் பணிந்து வணங்க மாட்டார். தன்னை அண்டி இரந்து நிற்பவற்கு ஏதும் ஈயார். குடத்தால் நீர் ஊற்றி வழிப் போக்கர்கள் தங்குவதற்குக் குளிர்ந்த சோலைகளையும் வளர்க்க மாட்டார்கள். இத்தகைய நல்ல மனம் படைத்தவர்களே! நீங்கள் நரகத்தில் நிலையாக இருக்க விரும்புகின்றீர்களோ?



 
#265 to #269

#265. வினைகளைக் கடப்பார்.

வழி நடப்பார், இன்றி , வானோர் உலகம்
கழி நடப்பார்; நடந்தார் கரும்பாரும்
அழி நடக்கும் வினை ஆசு அற ஓட்டிட்டு
ஒழி நடப்பார், வினை ஓங்கி நின்றாரே.


அறவழியில் நிற்பவர் அடைவர் தேவர் உலக இன்பம். தீய நெறியில் நடப்பவர்களுக்குக் கிடைக்காது இந்த இன்பம். அவர்கள் இருள் மிக்க நரகத்தில் நடப்பவர்கள் ஆவார்கள். காமம், கோபம், மயக்கம் போன்ற மன மலங்களை ஒழித்து விட்டு நல்ல வழியில் நடப்பவர்கள் வினைகளைக் கடந்து நிற்பார்கள்.


#266. துறக்கம் ஆள்வர்!


கனிந்தவர் ஈசன் கழல்அடி காண்பர்;
துணிந்தவர் ஈசன் துறக்கம் அது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும் ஒன்று இன்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்து ஒழிந் தாரே.


கனிந்த மனதுடன் எல்லா உயிர்களிடத்தும் கருணை செய்பவர் இறைவனின் திருவடிகளின் தரிசனம் பெறுவார். உலகப் பற்றினை ஒழித்துவிட்டு மனம் துணிந்து தவம் செய்பவர் இறைவனுடன் இணையும் சாயுஜ்ய நிலையை அடைவர்.
உலக வாழ்வில் இருந்துகொண்டு அறம் அற்ற செயல்களைச் செய்தால் இறைவன் ஆசி கிடைக்காது. காலனின் சினம் கிடைக்கும். அஞ்சத் தகுந்த நரகத்தில் இடம் கிடைக்கும்.


#267. அறம் அறியாரே


இன்பம் இடர் என்று இரண்டு உற வைத்தது
முன்பு அவர் செய்கையினாலே முடிந்ததும்
இன்பம் அது கண்டும் ஈகிலாப் பேதைகள்
அன்பு இலார் சிந்தை; அறம் அறியாரே.


இன்பமும், துன்பமும் பொருந்தியுள்ளன உலகினில். முற்பிறப்பில் செய்த அறச் செயல்கள் இன்பம் தரும். முற்பிறப்பில் செய்த மற்றச் செயல்கள் துன்பம் தரும். இதைக் கண்ட பிறகும் பிறருக்கு எதையும் கொடுக்காத மனிதர்கள் அன்பு என்பதே இல்லாதவர்கள். அவர்கள் அறத்தை அறியாதவர்கள்.


# 268. தீமை செய்பவன் ஒரு விலங்கு


கெடுவதும் ஆவதும் கேடுஇல் புகழோன்
நடு அல்ல செய்து இன்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவது எண்ணுமின் இன்பம்
படுவது செய்யின் பசு அது ஆமே.


ஒருவன் கேட்டை அடைவதும் ஆக்கத்தை அடைவதும் இறைவன் இச்சைப் படி நடக்கின்ற செயல்கள் ஆகும். நேர்மை இல்லாத செயல்களைச் செய்பவன் இன்பம் அடைவதை இறைவன் ஒருநாளும் அனுமதிக்க மாட்டான். எனவே பிறருக்கு அன்புடன் கொடுப்பதையும் வறியவர்க்கு மனம் கனிந்து இடுவதையும் சிந்தனை செய்யுங்கள். பிறர் இன்பத்தைக் கெடுப்பவன் ஒரு விலங்குக்குச் சமம்.


#269. புன் மக்களைப் போற்றன்மின்


செல்வம் கருதிச் சிலர் பலர் வாழ்வு எனும்
புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
இல்லம் கருதி இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கு எய்த விற்குறி ஆமே.


செல்வம் கருதி அறிவற்ற புன்மக்களைப் போற்றிப் புகழாதீர்கள். அவர்கள் தரக் கூடிய அழிகின்ற செல்வத்தை நாடி வாடாதீர்கள். அழியாத செல்வம் ஆகிய வீடு பேறைத் தரவல்லவன் இறைவன். அவனையே என்றும் நாவாறப் போற்றிப் புகழுங்கள். வில் வீரனின் அம்பு இலக்கைத் தவறாது அடையும். அது போன்றே உங்கள் வார்த்தைகள் இறைவனை அடையும். அவன் உங்கள் வறுமையை நீக்கி வாழ்வில் இன்பம் தருவான்.



 
18. அன்புடைமை

#270 to #274


#270. அன்பே சிவம்

அன்பு சிவமிரண் டென்ப ரறிவிலார்
அன்பே சிவமாவ தாரு மறிகிலார்
அன்பே சிவமாவ தாரு மறிந்தபின்
அன்பே சிவமா யமர்ந்திருந்தாரே.


அன்பாகிய சக்தி தேவியும், அறிவாகிய சிவபிரானும், இரண்டு ஆகும் என்பர் அனுபவம் அறிவும் அற்றவர்கள். அன்பு முதிர்ச்சி அடைந்தால், சிவம் ஆகிய அறிவு விளங்கும். இந்த உண்மையை உலகில் எவருமே அறிவதில்லை. அன்பின் முதிர்ச்சி அறிவை விளங்கச் செய்வதை அறிந்த பின் அன்பே வடிவாக மாறி அறிவாகிய சிவத் தன்மையை அடைவர்.


#271. அன்பு செய்ய வேண்டும்


பொன்னைக் கடந்து இலங்கும் புலித் தோலினன்
மின்னிக் கிடந்து மிளிறும் இளம் பிறை
துன்னிக் கிடந்த சுடுபொடி ஆடிக்குப்
பின்னிக் கிடந்ததுஎன் பேரன்பு தானே.


பொன்னை வெல்லும் ஒளியுடைய புலித் தோல் அணிந்தவன்; மின்னல் போல் ஒளிரும் அழகிய பிறைச் சந்திரனைச் சூடியவன்; பிறை நிலவு பொருந்திய வெண்ணீ ற்றின் ஒளியில் விளங்குபவன். அந்தப் பெருமானிடத்தே சென்று பொருந்தியுள்ளது எனது பேரன்பு.


#272. என்பே விறகு!


என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க்கு அன்றி
என்போன் மணியினை எய்த ஒண்ணாதே.


தன் எலும்புகளையே விறகாக எரிக்கலாம். தன் இறைச்சியையே அறுத்து
இடலாம். கனலில் அதைப் பொன் போல வறுக்கலாம். ஆனால் அன்போடு தன் உள்ளம் உருகி மனம் நெகிழ்பவர்களால் மட்டுமே என் போல் இறைவனை அடைய முடியும்.


#273. ஈரம் உடையவர்


ஆர்வம் உடையவர் காண்பார் அரன் தன்னை
ஈரம் உடையவர் காண்பார் இணை அடி
பாரம் உடையவர் காண்பார் பவம் தன்னை
கோர நெறி கொடு கொங்கு புக்காரே.


இறைவனைக் காணும் அன்பு மனம் கொண்டவர் இறைவனைக் காண்பார் தான் விரும்பியபடியே. அன்பான மனம் நெகிழும் ஈரத் தன்மை கொண்டவர் இறைவன் திருவடிகளைத் தலையில் சூடுவர். சம்சார பாரத்தைச் சுமப்பவர் பிறவிப் பெருங்கடலில் மூழ்கி பெரும் துன்பம் அடைவர். அன்பு என்பதையே அறியாதவர் கொடிய கானகத்தில் போகும் வழி தெரியாமல் மிகவும் துன்புறுவர்.


#274. அன்போடு வழிபடுங்கள்


என்அன்பு உருக்கி இறைவனை ஏத்துமின்
முன்அன்பு உருக்கி முதல்வனை நாடுமின்
பின்அன்பு உருக்கிப் பெருந்தகை நந்தியும்
தன்அன்பு எனக்கே தலை நின்றவாறே.


அன்பு கொண்ட உள்ளத்தை உருக்கி இறைவனை ஏத்துங்கள். முதன்மையான அன்பினை உருக்கி முதல்வனை நாடுங்கள். அப்போது இறைவனும் தன் அன்பைக் காட்டி நம் பந்த பாசங்களை அகற்றி விடுவான். அவன் அருளைத் தரும் விதம் இதுவே.



 
#275 to #279

#275. அன்பு வலை

தான்ஒருகாலம் சயம்பு என்று ஏத்தினும்
வான்ஒரு காலம் வழித் துணையாய் நிற்கும்
தேன்ஒரு பால் திகழ் கொன்றை அணிசிவன்
தான்ஒரு வண்ணம் என் அன்பில் நின்றானே.


சிவபெருமானை ஸ்வயம்பு என்று எண்ணிப் புகழ்ந்தால் அது வானத்தில் பொருந்தி வழிபடுபவருக்கு ஒரு நல்ல துணை ஆகும். தேன் போன்ற இன்மொழி பேசும் உமை அன்னையைத் தன் இடப் பக்கத்தில் கொண்டு, கொன்றை மலர்களை அணிந்த சிவன், என் அன்பு வலையில் வந்து அகப்பட்டுக் கொண்டான். இன்னதென்று கூற முடியாத வண்ணத்துடன் நின்றான்.


#276. பெருமானை அறிகிலர்


முன் படைத்து இன்பம் படைத்த முதலிடை
அன்பு அடைத்து எம் பெருமானை அறிகிலார்
வன்பு அடைத்து இந்த அகலிடம் வாழ்வினில்
அன்பு அடைத்தான் தன் அகலிடத்தானே.


இறைவன் இந்த உலகினை முதலில் படைத்தான். உயிர்களுக்காக எல்லா இன்பங்களையும் படைத்தான். எல்லா உயிர்களுக்கும் ஒரே தலைவனாகிய அவனிடம் அன்பு செலுத்தாமல் அவனை அறியாமல் இருக்கின்றனரே! உறுதியையும், தனது அன்பினையும் படைத்த பெருமானே இந்த விரிந்து பரந்த உலகமாகவும் விளங்குகின்றான்.


#277. சிவ ஒளி


கருத்து உறு செம்பொன் செய் காய்கதிர்ச் சோதி
இருத்தியும் வைத்தும் இறைவன் என்று ஏத்தியும்
அருத்தியுள் ஈசனை ஆரருள் வேண்டில்
விருத்தி கொடுத்திடும் விண்ணவர் கோனே.


உள்ளத்தில் பொருந்தும் போது உருகிய செம்பொன்னைப் போல ஒளிரும் ஜோதி வடிவானவன் நம் இறைவன்.மனதில் அவனை இருத்துங்கள்; மாறாமல் வையுங்கள். அவனே நம் தலைவன் என்று போற்றிப் புகழுங்கள். அன்பு கொண்ட மனதுடன் அவனை யார் வேண்டிக் கொண்டாலும் தேவர்களின் தலைவன் ஆகிய அவன் அங்கு தன்னுடைய சிவ ஒளியைப் பெருகச் செய்வான்.


#278. அண்ணலை நாடுகிலரே!


நித்தலும் துஞ்சும் பிறப்பையும் செய்தவன்
வைத்த பரிசு அறிந்தேயும் மனிதர்கள்
இச்சையுளே வைப்பர் எந்தை பிரான் என்று
நச்சியே அண்ணலை நாடிகிலரே.


ஜீவனுடைய வினைகளுக்கு ஏற்பப் பிறப்பையும் இறப்பையும் அமைக்கிறான் ஈசன். அவன் வைத்துள்ள முறையை அறிந்த பிறகும் உலக இன்பத்தில் நாட்டம் கொள்கின்றனர். “என் தந்தையே! எம் பிரானே!” என்று அன்புடன் அவனை விரும்பி வணங்குவதில்லை. அவர்கள் செயல் எவ்வளவு அறிவின்மை!


#279. துணையாவான்


அன்பின் உள்ளான் புறத்தான் உடலாய் உள்ளான்
முன்பின் உள்ளான்; முனிவர்க்கும் பிரான் – அவன்
அன்பினுள் ஆகி அமரும் அரும் பொருள்
அன்பினுள்ளார்க்கே அணைதுணை ஆமே.


இறைவன் இருப்பது எங்கெங்கே எப்படி என்று அறிவீரா? அவன் தன்னை அறியும் அறிவு கொண்டவர்களின் தூய அன்பில் இருப்பான். தன்னிடத்தில் இருப்பது போன்றே மற்றவர்களிடத்தும் பொருந்தி நிற்பான். அவன் அன்பையே தன் உடலாகக் கொண்டவன். உலகம் தோன்றுவதற்கு முன்பே உள்ளான். உலகம் அழிந்த பின்னும் அவன் இருப்பான். ஆத்மா ஞானம் தேடுபவர்களின் தலைவன் அவனே. அன்பு பூண்டவரிடம் நிலையாகப் பொருந்தும் அரும் பொருள் அவன். அன்பின் வழியில் தன்னை நாடி வருபவர்களை அவன் உய்விப்பான்.



 
19. அன்பு செய்வோரை அறிவான்

#280 to #284


#280. அன்பு செய்வான்

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்து அருள் செய்திடும் உத்தம நாதன்
கொழுந்து அன்பு செய்து, அருள் கூர வல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் அது ஆமே.


சிவன் அறிவான் தன்னிடம் அன்பு செய்வதை இகழ்பவர் யார்; தன்னிடம் மெய்யான அன்பு செய்பவர் யார் என்பதை நன்றாக. உத்தம நாதன் அவன் அதற்கேற்ப மகிழ்வுடன் அருள் செய்வான். தளிர்த்து வளரும் அன்பைத் தன்னிடன் காட்டுபவர்களுக்கு அவனும் மிகவும் மகிழ்ந்து அன்புடன் அருள் செய்வான்.

#281. பிறவி இன்பமாகும்


இன்பம் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவித் தொழில் பல என்னினும்
அன்பிற் கலவி செய்து ஆதி பிரான் வைத்த
முன்பப் பிறவி முடிவது தானே.


பிறவிகள் இன்பம் பெறுவதற்காகச் சிவபெருமான் அனைத்தையும் அழகாக வகுத்து அமைத்துள்ளான். ஆயினும் பிறவிகளில் வரும் துன்பங்கள் பலப் பல! அவற்றைப் போக்குவதற்காகச் செய்யப்படும் செயல்களும் பலப்பல. எது எப்படியாயினும் சிவபெருமான் மீது நீங்காத அன்பு செய்யவேண்டும். அப்படிச் செய்தால் சிவன் அருளால் இந்தப் பிறவி இன்ப மயம் ஆகும்.

#282. துன்புறு கண்ணிகள் ஐம்பொறிகள்


அன்புஉறு சிந்தையின் மேல்எழும் அவ்ஒளி
இன்பு உறு கண்ணியொடு ஏற்க இசைந்தன
துன்புஉறு கண் இயைந்தாடுந் துடக்கற்று
நண்புஉறு சிந்தையை நாடுமின் நீரே.


அன்பு கொண்ட உள்ளத்தின் மீது ஒளியாக விளங்குவான் சிவன். இன்பம் தரவல்ல விழிகளை உடைய சக்தி தேவியுடன் அவனும் அடியவர்களுக்கு அருள் புரிவதற்குத் திருவுள்ளம் கொள்வான். அப்போது வலை போல ஜீவனைச் சிக்க வைக்கும் ஐம்பொறிகளுடன் ஜீவன் கொண்டிருந்த தொடர்பு அற்றுப் போய்விடும். அப்போது சிந்தையை நட்புணர்வுடன் சிவன் மீது செலுத்தி துன்பம் தரும் பொறிகளில் இருந்து விலகியே நில்லுங்கள்.

#283. பேரின்பம்


புணர்ச்சியுள் ஆயிழைமேல் அன்பு போல
உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்க வல்லார்க்கு
உணர்ச்சி இல்லாது குலாவி உலாவி
அணைத்தலும் இன்பம் அதுஇது ஆமே.


சிற்றின்பம் துய்க்க மங்கையின் மீது அன்பு கொள்ள வேண்டும். அதை போன்ற அன்புடன், தம் சிரசின் உச்சியில் உதிக்கும் ஸ்பரிச உணர்வில் பொருந்தி இருக்க அறிந்தவர்களுக்கு, உணர்வு அழிந்து துவாதசாந்தத்தில் சென்று சிவனுடன் கூடுவது, அந்தச் சிற்றின்பத்தை விடப் பல மடங்கான பேரின்பமாக இருக்கும்.

#284. முன்பு நிற்பான்!


உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்து அறிவார் இல்லை;
பத்திமை யாலே பணிந்து அடியார் தொழ
முத்தி கொடுத்து அவர் முன்பு நின்றானே.


பேரின்பத்தில் திளைப்பவரோடு விளங்கும் சோதியாகிய சிவபிரானைச் சித்திகள் பெற்ற சித்தர்களாலும் ஆராய்ச்சி செய்து அறிந்து கொள்ள முடியாது. பக்தியோடு அவனை வணங்கித் தொழுபவர்களுக்கு அவன் வீடு பேற்றை அளிக்க விரும்பி அவனே அவர்கள் முன்பு வந்து காட்சி அளிப்பான்.


 
#285 to #289

#285. அன்பினால் காணலாம்

கண்டேன் கழல்தரு கொன்றை யினான்அடி,
கண்டேன் கரிஉரி யான்தன் கழல்இணை
கண்டேன் கமல மலர்உறை வான்அடி
கண்டேன் கழல் அது என் அன்பினுள் யானே.


கண்டேன் தன் திருவடிகளைத் தரும் கொன்றை மலர் சூடியவன் இணையடி!
கண்டேன் கரிய ஆணவ யானையின் தோலை அணிந்து கொண்டவன் கழலடி!
கண்டேன் மூலாதாரத்தில் உள்ள தாமரையில் உறைவும் சிவன் திருவடி!
அவன் கழல்கள் என் அன்பினுள் விளங்குவதை நான் கண்டேன்!

#286. அன்பனை அறிகிலர்!


நம்பனை நானா விதப் பொருள் ஆகும்என்று
உம்பரில் வானவர் ஓதும் தலைவனை
இன்பனை இன்பத்து இடை நின்ற இரதிக்கும்
அன்பனை யாரும் அறியகிலாரே.


நம்புவதற்கு உரியவன் சிவபெருமான். நானாவிதப் பொருட்களாகத் திகழ்பவனும் அவனே. வானுலகத் தேவர்கள் போற்றும் தலைவன் அவனே. இன்பமே வடிவான பெருமான் அவனே. ஜீவர்களின் இன்பத்தில் மகிழும் அன்பனும் அவனே. யாருமே இத்தகைய இறைவனை அறியவில்லை.

#287. யாம் அறிவோம் என்பர்!


முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்
அன்பு இல் இறைவனை யாம் அறிவோம் என்பர்;
இன்பப் பிறப்பும் இறப்பும் இல்லான் நந்தி
அன்பில் அவனை அறியகிலாரே.


இன்பத்தினால் வந்த பிறப்பு இல்லாதவன் ஈசன். இறப்பு என்பதும் இல்லாதவன் நம் ஈசன், பிறப்பும் இறப்பும் இல்லாத ஞானியர் இங்ஙனம் கூறுவர். அன்புடன் வழிபட்டு யாம் இறைவனை அறிந்துள்ளோம் என்பர். அப்படி இருந்த போதிலும் மற்றவர்கள் ஈசனை உணர்ந்து தங்கள் பிறப்பு இறப்பைப் போக்கிக் கொள்ள வில்லையே.

#288. ஈசன் ஈட்டி நின்றானே!


ஈசன் அறியும் இராப் பகலும் தன்னைப்
பாசத்துள் வைத்துப் பரிவு செய்வார்களை
த்
தேசு உற்று இருந்து செயல் அற்று இருந்திடில்
ஈசன் வந்து எம் இடை ஈட்டி நின்றானே.


இரவும் பகலும் தன்னிடம் மிகுந்த அன்பு செய்பவரை நன்றாக அறிவான் நம் சிவபெருமான். அவனுடைய ஒளியைப் பெற்று அந்த ஒளியிலேயே இருந்து கொண்டு தனக்கென்று எந்தச் செயலும் இல்லாது இருந்தோம் என்றால் இறைவன் நம்மிடம் வந்து எழுந்தருள்வான்; எப்போதும் பிரியாமல் நம்முடன் தங்குவான்.

#289. மஞ்சனம்


விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்
தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டும் என் ஆருயிராய் நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.


மேலான ஒளிவடிவான ஈசனை விட்டு விடுவது ஏன்? மீண்டும் சென்று இறைவனைப் பிடிப்பது ஏன்? நான் அவனை உறுதியாகப் பற்றிக் கொண்டு தொடர்வேன். என்றும் குறையாத பெருமையைப் பெறுவேன். என் உயிரில் கலந்து விளங்குகின்ற ஈசனுடன் நான் இனிதாகக் கலப்பதே மஞ்சனம் என்னும் நீராடல் ஆகும்.
 
20. கல்வி கற்றல்

#290 to #294

#290. கல்வி கற்றேனே!

குறிப்பு அறிந்தேன் உடல் உயிர் அது கூடிச்
செறிப்பு அறிந்தேன்; மிகு தேவர் பிரானை
மறிப்பு அறியாது வந்து உள்ளம் புகுந்தான்
கறிப்பு அறியா மிகும் கல்வி கற்றேனே.


உடல் தோன்றிய காரணத்தை நான் அறிந்து கொண்டேன். உடலும் உயிரும் பொருந்தியுள்ள காரணத்தை அறிந்து கொண்டேன். எந்த விதமான தடையும் இல்லாததால் இறைவன். தானாகவே என் மனதில் வந்து குடி புகுந்து விட்டான்.
கறிப்பு என்பதே இல்லாத கல்வியை நான் இவ்வாறு கற்றேன்.

#291. கயல் உள ஆக்கும்!


கற்றறி வாளர் கருதிய காலத்துக்
கற்றறி வாளர் கருத்தில்ஓர் கண்உண்டு;
கற்றறிவாளர் கருதி உரை செய்யும்
கற்றறி காட்டக் கயல் உள ஆக்குமே
.

நன்கு கற்றறிந்தவர்கள் கற்றவற்றை எண்ணிப் பார்க்கையில் அவர்கள் கருத்தில் ஒரு ஞானக்கண் உருவாகும்; உண்மை புலனாகும். அவ்வாறு அவர்கள் கண்ட உண்மைகளை சிந்தித்துப் பிறருக்கும் உணர்த்துவார். கல் தூண் போல் சலனம் இல்லாது இருந்து கொண்டு அவர்கள் கூறும் உண்மைகளால் மற்றவர்களுக்கு அதே போன்று ஞானக் கண் உருவாகும்.

#292. மணி விளக்கு


நிற்கின்ற போதே நிலை உடையான் கழல்
கற்கின்ற செய்மின் கழிந்து அறும் பாவங்கள்
சொல் குன்றல் இன்றித் தொழுமின்; தொழுத பின்
மற்று ஒன்று இலாத மணிவிளக்கு ஆகுமே.


உடலுடன் உயிர் பொருந்தி இருக்கும் போதே, இந்த உடல் எப்போதும் நிலைத்து நிற்காது என்ற உண்மையை அறிவீர்.
உயிருக்கு நிலையான் உறு துணை இறைவனே என்று அறிவீர். அவன் திருவடி ஞானத்தைப் பெற்றிட முயற்சி செய்யுங்கள். அப்போது உங்கள் பாவங்கள் எல்லாம் அழிந்து மறைந்து விடும். குற்றம் இல்லாத சொற்களால் இறைவனைத் தொழுவீர். அப்போது ஒப்புவமை இல்லாத சுயம் பிரகாசியாகிய சிவன் தோன்றுவான்.

#293. அழியாத உடல்


கல்வி உடையார் கழிந்து ஓடிப் போகின்றார்
பல்லி உடையார் பாம்பு அறிந்து உண்கின்றார்
எல்லியும் காலையும் ஏத்துமின் இறைவனை
வல்லியுள் வாதித்த காயமும் ஆமே.


மெய்ஞானக் கல்வி கல்லாது உலகிய கல்வி கற்றவர்கள் பிரணவத்தில் இருந்து விலகி வேறு பாதையில் செல்கின்றாகள். உடல் பற்றும், உலகப் பற்றும் உடையவர்கள் குண்டலினி சக்தியைப் பெருக்காமல் வீணாக்குகின்றனர். இரவும் பகலும் இறைவனை ஏத்தி வழி படுங்கள். அப்போது ரசவாதாதால் உருவாகும் பொன்னைப்போல குண்டலினி சக்தியின் ஆற்றலால் அழியாத உடல் அமையப் பெறுவீர்.

#294. துணையாய் வரும்


துணைஅது வாய் வரும் தூய நல் சோதி
துணைஅது வாய் அரும் தூய நல் சொல்லாம்
துணைஅது வாய் வரும் தூய நல் கந்தம்;
துணைஅது வாய் வரும் தூய நற் கல்வியே.

இறைவனை வழிபடுபவருக்குக் கிடைப்பன இவை:
தூய ஜோதி ஒன்று துணையாக உடன் வரும்.
பிரணவம் அவர்களுக்குத் துணையாக வரும்.
சுக்கிலம் கெடாமல் தூய்மை அடையும்.
உடலுக்குத் துணையாகி ஒளி வீசி நிற்கும்.
பிரணவக் கல்வி முக்தியை அளிக்கும்.
 
#295 to #299

#295. மயங்குகின்றார்கள்!

நூல்ஒன்று பற்றி நுனி ஏற மாட்டாதார்
பால்ஒன்று பற்றினால் பண்பின் பயன் கெடும்
கோல் ஒன்று பற்றினால் கூடாப் பறவைகள்
மால் ஒன்று பற்றி மயங்கி கின்றார்களே.


உடலில் உள்ள சுழுமுனை நாடியைப் பற்றிக் கொண்டு, சிரசின் உச்சியில் உள்ள பிரமரந்திரத்தைச் சென்று அடைய வேண்டும். இதைச் செய்ய இயலாமல் காம வயப்பட்டவர்கள் சிவயோகத்தின் பயனை அடையவே முடியாது. முதுகுத் தண்டைப் பற்றி கொண்டு, தலையின் உச்சியை அடைந்து விட்டால் அடங்கி வசப்படும் ஐம்பொறிகளும். இதை அறிந்து கொள்ளாமல் மக்கள் உலக வயப்பட்டு மயங்கி நன்மை அடையாமல் வீணாகின்றார்கள்.

#296. சுழுமுனை நூலேணி ஆகும்


ஆய்ந்து கொள்வார்க்கு அரன் அங்கே வெளிப்படும்
தோய் ந்த நெருப்பு அது தூய் மணி சிந்திடும்
ஏய்ந்த இளமதி எட்ட வல்லார்கட்க்கு
வாய்ந்த மனம் மல்கு நூலேணி ஆமே
.

சுழுமுனை நாடியைப் பற்றிக்கொண்டு மேலே செல்பவர்களுக்கு சிவபெருமான் நாதாந்ததில் வெளிப்படுவான். நாததத்துவத்தில் ஈசன் தூய ஒளியைச் சிந்திக் கொண்டு இருப்பான். இங்ஙனம் சந்திர மண்டலம் விளங்கியவர்களுக்கு சுழுமுனை நாடி ஒரு நூலேணியாக மாறிவிடும்.

#297. வழித்துணை ஆவான்


வழித்துணையாய், மருந்தாய் இருந்தார் முன்
கழித்துனையாம் கற்றில்லாதவர் சிந்தை
ஒழித் துணையாம், உம் பராய் உலகு எழும்
வழித் துணையாம் பெருந்தன்மை வல்லானே.


ஞானத்தைப் பெறுவதற்கு உதவுவது சுழுமுனை ஆகிய நூலேணி. பிறவிப் பிணிக்கு மருந்தாக விளங்குவது சுழுமுனை ஆகிய நூலேணி. இதைப் பற்றிக் கொண்டு மேலே ஏறிச் செல்பவர்களுக்கு அங்கனம் பற்றிக் கொள்ளாதவர்கள் நல்ல துணையாக ஆக முடியாது. சிந்தையை மாற்றி பழைய நிலையை ஒழிப்பவன் சிவன். அந்தப் பெருமானே அவர்களுக்குச் சிறந்த துணை யாவான். தேவ வடிவில் ஏழுலகங்கள் செல்ல வழித் துணை ஆவான்.

#298. பேரின்பம் பெறுவர்


பற்றுஅது பற்றின் பரமனைப் பற்றுமின்
முற்றுஅது எல்லாம் முதல்வன் அருள் பெறில்
கிற்ற விரகின் கிளர்ஒளி வானவர்
கற்றவர் பேரின்பம் உற்று நின்றாரே
.

பற்றுக் கோடாக ஒரு தெய்வம் வேண்டும் என்றால் எல்லாவற்றுக்கும் மேலான சிவனையே பற்றிக் கொள்ளுங்கள். அவன் அருள் பெற்றுவிட்டால் எல்லாம் இனிதாகி விடும். ஒளியும் படைத்த, வல்லமை படைத்த தேவர்களைக் காட்டிலும் அனுபவக் கல்வி கற்றவர்கள பேரின்பம் அடைந்து நிற்பார்கள்.

#299. நெஞ்சத்தில் இருப்பான்


கடல் உடையான் மலையான் ஐந்து பூதத்து
உடல் உடையான், பல ஊழி தொறு ஊழி
அடல்விடை ஏறும் அமரர்கள் நாதன்
இடம் உடையார் நெஞ்சத்து இல்இருந்தானே.

பரந்த கடல் சிவனுக்கு உரிமை உடையது. உயர்ந்த மலை சிவனுக்கு உரிமை உடையது. ஐம் பெரும் பூதங்களும் சிவனுடைய மேனி ஆகும் . ஊழிகள் தோறும் இவை அழிந்து மாறுபடும் காலங்களில் காளையை ஊர்தியாகக் கொண்ட ஒளி வடிவான சிவன் தன்னையே நினைத்துக் கொண்டு இருக்கின்ற தன் அடியவர்களின் உள்ளத்தில் குடி இருப்பான்.
 
21. கேள்வி கேட்டு அமைதல்

#300 to #304

#300. சிவகதி பெறும் வழி

அறம் கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறம் கேட்டும் வானவர் மந்திரம் கேட்டும்
புறம் கேட்டும் பொன் உரைமேனி எம் ஈசன்
திறம் கேட்டும் பெற்ற சிவகதி தானே.


சிவகதி பெறச் செய்ய வேண்டியவை இவை:
அறங்களைக் கேட்டறிய வேண்டும்.
அந்தணர்கள் அறிவுரைகளைக் கேட்க வேண்டும்.
பாவங்கள் இவை என்று கூறும் நீதி நூல்களைக் கேட்க வேண்டும்
தேவர்களை வழிபடும் மந்திரங்களைக் கேட்க வேண்டும்.
மற்ற சமயங்கள் பற்றிய நூல்களையும் கேட்க வேண்டும்.
பொன் வண்ண மேனியன் சிவனை பற்றியும் கேட்க வேண்டும்.

#301. ஓங்கி நின்றார்!


தேவர் பிரான்தனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேள்மின்; உணர்மின்; உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கி நின்றாரே.


தேவர்களுக்குத் தலைவன் ஆவான் சிவபெருமான். திவ்வியமான வடிவம் கொண்டவன் அந்தப் பெருமான். அவன் பெருமைகளை எவர் ஒருவரால் அறிய முடியும்? அவனை உணர்த்தும் நூல்களை நன்கு கற்று அறியுங்கள். அவற்றைக் கற்றவர்களிடம் அவற்றைக் கேட்டறியுங்கள் கற்றவை கேட்டவைகளை அனுபவத்தில் கொண்டுவாருங்கள். அனுபவத்தால் அறிந்து கொண்டபின் நிஷ்டையில் நீங்கள் சிவத்துடன் பொருந்தி உயர்ந்த நிலையை அடைய முடியும்.

#302. நீங்காத பற்று வேண்டும்


மயன்பணி கேட்பது மா நந்தி வேண்டின்;
அயன்பணி கேட்பது அரன் பணியாலே
சிவன்பணி கேட்ப வர் தேவரும் ஆவர்
பயன்பணி கேட்பது பற்றது ஆமே.


சிவனுக்குப் பணி செய்வதன் பயன்கள் இவை:
சிவனை வேண்டினால் திருமால் பணியைச் செய்வான்.
சிவன் ஆணைப்படியே அந்த நான்முகனும் நடப்பான்.
தேவர்கள் அனைவரும் சிவன் ஆணைகளைப் பணிகின்றவர்.
சிவனுக்கு பணியாற்றுவதால் நமக்குக் கிடைப்பது
அவன் திருவடிகளில் என்றும் நீங்காத, மாறாத பற்று.

#302. ஆதிப் பிரான்


‘பெருமான் இவன்’ என்று பேசி இருக்கும்
திருமா னிடர் பின்னைத் தேவரும் ஆவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்து அருள் செய்யும்
அருமா தவத்து எங்கள் ஆதிப் பிரானே.

உண்மை ஞானம் அடைந்து “இவனே தலைவன்” என்று கூறும் மனிதர்கள் பின்னர் தேவர்களாக மாறி விடுவர். மேலான தவம் உடையவர்களுக்குச் சிவபெருமான் மகிழ்ந்து அருள் செய்வது தான் இதன் காரணம்.

# 304. ஒளியாய் நிற்பான்


ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி இருந்து பிதற்றி மகிழ்வு எய்தி
நேசமும் ஆகும் நிகழ் ஒளியாய் நின்று
வாச மலர்க்கந்தம் மன்னி நின்றானே.


பிறப்பையும் இறப்பையும இறைவன் அருள்வது வினைகளின் வழியே. இதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள். பிறருக்கு எடுத்துக் கூறுங்கள். தானே பேசியும் பிதற்றியும் மன மகிழ்ச்சி அடையுங்கள். சிவ ஒளியாக அவன் சுவாதிஷ்டான மலரில், ஒரு மலரின் நறு மணம் போலப் பொருந்தி இருக்கின்றான்.
 
#305 to #309

#305. அளவில்லாமல் அருள்வான்

விழுப்பமும், கேள்வியும், மெய் நின்ற ஞானத்து
ஒழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது,
வழிக்கி விடாவிடில், வானவர் கோனும்
இழுக்கு இன்றி, எண்இலி காலம் அது ஆமே.


சிவபெருமானின் பெருமையைக் கேட்பதும், அப்படிக் கேட்கும் போது அதனால் விளையும் ஞானமும்,சிந்திக்கும் போது உள்ளம் கட்டுக்குள் அடங்கி இருக்கும் பாங்கும், கைவரப் பெற்றுவிட்டால். தேவர்களின் தலைவனாகிய சிவபெருமான் அளவில்லாத காலத்துக்கு நமக்கு தன் அருள் செய்வான்.

# 306. மணல் சோறு


சிறியார் மணல் சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகம் சித்திக்கும் என்னில்
குறியாதது ஒன்றைக் குறியாதார் தம்மை
அறியாது இருந்தார் அவர் அவர் அன்றே.


உலகத்துடன் உள்ள தொடர்பினால் இறைவனின் அனுபோகம் உண்டாகும் என்று கூறுவது சிறு பிள்ளைகள் சமைக்கும் மணல் சோறு பசியைத் தீர்க்கும் என்று சொல்வது போன்றதே. சுட்டிக் காட்ட இயலாது எங்கும் நிறைந்துள்ள வியாபகத் தன்மை கொண்டவன் சிவன். இது உணராதவர்கள் தங்கள் ஆத்மாவின் தன்மையையும் உணராதவர்கள் அன்றோ?

# 307. பிறப்பு இல்லை


உறுதுணை ஆவது உயிரும் உடம்பும் ;
உறுதுணை ஆவது உலகுஉறு கேள்வி;
செறி துணை ஆவது சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கின் பிறப்பு இல்லை தானே.


உடலுக்கு உறுதுணை ஆவது உயிர் என்றால் உயிருக்கு உறுதுணை ஆவது என்னவாக இருக்கும்? ஞானிகளிடம் நாம் பெறும் கேள்விச் செல்வம் ஆகும் அது. சிந்தைக்குச் சிறந்த துணை சிவபிரானின் திருவடிகள். இவ்வரிய துணையைப் பெற்றுவிட்டால் பிறவிப் பிணி நீங்கும்.

# 308. கல்லால் ஆன பசு


புகழ நின்றாக்கும் புராணன் எம் ஈசன்
இகழ நின்றார்க்கும் இடும்பைக்கு இடமாம்;
மகிழ நின்று ஆதியை ஓதி உணராக்
கழிய நின்றார்க்கு ஒருகற்பசு ஆமே.


புகழப்படுகின்ற மும் மூர்த்திகளாகிய பிரமன், திருமால் ருத்திரன் என்ற மூன்று தெய்வங்களுக்கும் மூத்தவன் ஆவான் சிவன். தன்னை இகழ்ந்து பேசுகின்றவர்களுக்குத் துன்பத்துக்கு இடமவான் அவன். ஆதிதேவனாகிய சிவன் பெருமைகளை அறியாமல் விலகி நிற்பவர்களுக்கு அவன் கல்லினால் செதுக்கப்பட்ட ஒரு பசுவைப் போல அமைந்து விடுவான்.
(கற்பசு பால் தராது. சிவனும் தன் அருளைத் தரமாட்டான் என்பது கருத்து.)

# 309. நச்சு உணர்ந்தார்

வைத்து உணர்ந்தான் மனத்தோடும் வாய்பேசி
ஒத்து உணர்ந்தான் உருஒன்றோடு ஒன்று ஒவ்வாது
அச்சுழன்று ஆணி கலங்கினும் ஆதியை
நச்சு உணர்ந்தார்க்கே நணுகலும் ஆமே.


சிவபிரான் அனைத்து ஆத்மாக்களிலும் தன்னைப் பதித்துள்ளான். அவர்களின் மனத்தையும் வாக்கையும் அவற்றோடு
பொருந்தி இருந்து அவன் நன்கு உணர்கின்றான். பிரானின் வடிவம் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடும். உடம்பு என்னும் அச்சிலிருந்து மனம் என்னும் ஆணி கழன்று உருக்குலைந்தாலும், சிவனை நினைந்து அவனை விரும்பி நிற்பவர்கள் மட்டுமே அவனிடம் நெருங்கி அவனை அனுபவிக்க முடியும்.
 
22. கல்லாமை

#310 to #314

#310. இன்பம் காணுகிலார்

கல்லாத வரும் கருத்து அறி காட்சியை
வல்லார் எனில், அருட்கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மை பற்றா நிற்பர், கற்றோரும்
கல்லாதார் இன்பம் காணுகிலாரே.


இறைவன் திருவருள் பெற்றவர்கள் சிலர் ஆசிரியனிடம் சென்று முறைப்படிக் கற்காமல் இருக்கலாம் தமது சீரிய தவத்தினால் அவர்கள் தெய்வக் காட்சியைப் பெற்று அதை உணர்ந்து கொள்ளலாம். இத்தகைய அரிய பெரியவர்கள் உலகத்தைப் பற்றிக் கொள்வதில்லை சிவத்தைப் பற்றிக் கொள்கிறார்கள் ஆசிரியனிடம் சென்று முறைப்படிக் கற்றவர்கள் கூட இந்தக் கல்லாதவர்கள் பெற்ற சிவ அநுபூதியைப் பெறுவதில்லை.

#311. கலப்பு அறியார்


வல்லார்கள் என்றும் வழி ஒன்றி வாழ்கின்றார்,
அல்லாதவர்கள் அறிவுபல என்பார்;
எல்லா இடத்தும் உளன் எங்கள்தம் இறை
கல்லாதவர்கள் கலப்பு அறியாரே.


சிவபெருமானின் அருளைப் பெற்ற அருளாளர்கள் என்றும் உண்மை வழியில் ஒன்றி வாழ்ந்து வருவர். சிவன் அருளைப் பெறாதவர்களோ எனில் உலகில் பல வேறு நெறிகள் உள்ளன என்பார்கள். எல்லா நெறிகளிலும் நிறைந்து விளங்குபவன் சிவன் என்ற உண்மையை இந்த மனிதர்கள் அறிய மாட்டார்கள்.

#312. காண ஒண்ணாது


நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலை என்று உணர்வீர்காள்!
எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காண ஒண்ணாதே.


நிலையற்றைவைகளை நிலையானவை என்றும் நிலையற்ற உடலை அழிவில்லாதது என்றும் உள்ளத்தில் தவறாக எண்ணுகின்றவர்களே! எல்லா உயிர்களுக்கும் அவன் இறைவனே என்றாலும் நிலையான நிலையற்ற பொருட்களைப் பற்றிய உண்மை அறிவு இல்லாதவர்களால் அவனை உணர்ந்து கொள்ள முடியாது.

#313. ஆடவல்லேனே


கில்லேன் வினைக்குத் துயராகும் அயல்ஆனேன்
கல்லேன் அர நெறி அறியாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுட்
கல்லேன் கழிய நின்று ஆடவல்லேனே.


இறை நெறியில் நிற்கும் ஆற்றலை நான் பெறவில்லை.
அதனால் வினைகளுக்கும், துயரங்களுக்கும் ஆளாகின்றேன்.
அரன் கூறும் நெறியில் நிற்பதையும் நான் அறியவில்லை.
அறியாமையால் மயக்குகின்றவற்றைக் கற்கின்றேன்.
அருள் தரும் வள்ளல் சிவனைத் தியானிக்கவும் அறியவில்லை.
புற உலக அனுபங்களில் திளைப்பவனாக நான் இருக்கின்றேன்.

#314. வினைத் துயர்


நில்லாது சீவன் நிலை அன்று என எண்ணி
வல்லார் அறத்தும் தவத்துகளும் ஆயினார்,
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத் துயர் போகம் செய்வரே.


உயிர் உடலில் நிலத்து நிற்காது என்று உணர்ந்து கொண்டவர்கள் செய்வது இதுவே. தர்மத்தைத் தவத்தைச் செய்தும் , துறவறம் பூண்டும் சிவ பெருமான் அருளைப் பெறுவர். இங்ஙனம் அவன் அருளைப் பெற அறியாத கீழான மக்கள் தாம் செய்த வினைகளின் பயன்களை அனுபவித்துத்
துன்பம் எய்துவர்.
 
#315 to #319

#315. இளைத்து விட்டார்

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்து அங்கு இருந்தது ;
மண்ணினின் உள்ளே மதித்து மதித்து நின்று
எண்ணி, எழுதி, இளைத்து விட்டாரே.


சிவன் என்னும் விளங்கனி விண்ணிலே விளைந்து நின்றது. அது கண்ணினின் உள்ளே கலந்து பரமாகாயத்தில் நின்றது. இறைவனிலும் உலக இயல்பையே அதிகம் விரும்பும் சிலர். உலக வாழ்வில் இருந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக
இறை நிலையை இழந்து வீணாகிப் போயினர்.


#316. கற்று அறிந்தவர்


கணக்கு அறிந்தார்க்கு அன்றிக் காண ஒண்ணாது;
கணக்கு அறிந்தாற்கு அன்றிக் கைகூடா காட்சி,
கணக்கு அறிந்து உண்மையைக் கண்டு அண்டம் நிற்கும்
கணக்கு அறிந்தார் கல்வி கற்று அறிந்தாரே.


ஞானத்தைத்தேடி சாதனை செய்தவர்களால் மட்டுமே சிவம் என்னும் சிறந்த விளங்கனிப் பெற முடியும். சாதனை செய்தவர்களால் மற்றுமே பெற முடியும் இறைவனின் காட்சி. ஞான சாதனையை அறிந்து கொண்டு, உண்மைப் பொருளையும் உணர்ந்து அதனுடன் பொருந்தி இருப்பவர்களே உண்மையில் கல்வி கற்றார்கள் ஆவர்.


#317. மூடர்களைக் காணாதீர்


கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருது அறியாரே.


கற்றவற்றின் அனுபவம் பெறாத மூடர்களைக் காணவும் கூடாது. கற்றவற்றின் அனுபவம் இல்லாத மூடர்களின் சொல்லைக்
கேட்க வேண்டிய அவசியம் என்று எதுவும் இல்லை. அனுபவ அறிவு பெறாத படித்த மூடர்களை விடவும் எழுத்தறிவே இல்லாத மூடர்கள் நல்லவர்கள். இவர்கள் பிறரைத் தவறான பாதையில் செலுத்த மாட்டார்கள். அனுபவம் இல்லாதவர் உள்ளத்தில் சிவனை உணர முடியாது.


#318. கணக்கு அறிந்தவர்


கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசு அறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்று அன்பில் நிற்போர் கணக்கு அறிந்தார்களே.


பல நூல்களைக் கற்ற பிறகும் அனுபவ ஞானம் பெறாதவர்கள் கன்மம் மாயை இவற்றை தொடர்பை விட்டு விட மாட்டார்கள். தம் குற்றங்களை உணர்ந்து அவற்றைப் போக்கிக் கொள்ளமாட்டர்கள். பல இடங்களில் உள்ள அறிஞர்களிடம் கலந்து உரையாடி அரிய உண்மைகளைத் தெரிந்த கொள்ளவும் மாட்டார்கள். சிவஞானம் பெற்று மாறாத அன்புடன் இருப்பவர் கணக்கு அறிந்தவர்.


#319. தொடர்பு அறியார்!


ஆதிப்பிரான் அமரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந் தெய்வம்
ஓதி உணர வல்லோம் என்பர், உள்நின்ற
சோதி நடத்தும் தொடர்வு அறியாரே.


ஆதிப்பிரான் ஆகிய சிவபெருமான் எல்லோருக்கும் தலைவன். தேவர்களுக்கும் அவன் மங்காத ஒளியாகத் திகழ்கிறான்.
அடியார்கள் தேடி வரும் பெருந் தெய்வமாக இருக்கின்றான். அவனைக் கல்வி கற்பதன் மூலம் அறிந்து கொள்வேன் என்பவன் தனக்குள் இருந்து கொண்டு தன்னை நடத்தும் அந்த சோதிக்கும் தனக்கும் என்ன தொடர்பு என்ற உணமையை அறியாதவன்.



 
23. நடுவு நிலைமை

#320 to #323

#320. ஞானம் பெற்றவர்

நடுவு நின்றார்க்கன்றி ஞானமுமில்லை
நடுவு நின்றார்க்கு நரகமுமில்லை
நடுவு நின்றார் நல்ல தேவருமாவர்
நடுவு நின்றார் வழி நானும் நின்றேனே


சஹஸ்ர தளத்தின் நடுவில் நிற்காதவர்களுக்கு ஞானம் கிடைக்காது.
சஹஸ்ர தளத்தின் நடுவில் நிற்பவர்களுக்கு நரகமும் கிட்டாது.
இங்ஙனம் நடுவில் நின்றவர் நல்ல தேவர்களாக ஆகி விடுவர்.
நடுவே நிற்கும் அடியவர்களின் நடுவே நானும் நின்றேனே.

#321. நடுவு நின்றான் சிவன்


நடுவு நின்றான் நல்ல கார்முகில் வண்ணன்,
நடுவு நின்றான் நல்ல நான் மறை ஓதி
நடுவு நின்றார் சிலர் ஞானியர் ஆவோர்.
நடுவு நின்றான் நல்ல நம்பனும் ஆமே.


காக்கும் தன்மையால் நடுவில் நின்றான் கரிய நிறம் கொண்ட திருமால். படைக்கும் தன்மையால் நடுவில் நின்றான் நான்முகன். நடுவில் நின்றவர்கள் சிலர் சிவஞானிகள் ஆவோர். நடுவு நின்றார் சிவபெருமான் ஆகித் திகழ்வார்.

#322.நானும் நடுவு நின்றேன்


நடுவு நின்றார் சிலர் ஞானிகளாவர்
நடுவு நின்றார் சிலர் தேவருமாவர்
நடுவு நின்றார் சிலர் நம்பனுமாவர்
நடுவு நின்றாரொடு நானும் நின்றேனே.


சிவ நினைவுடன் சஹஸ்ர தளத்தின் நடுவில் நின்றவர்
அதன் பயனாக சிவ ஞானிகளாக ஆகி விடுவார்கள்.
அதன் பிறகு தேவர்களாகவும் ஆகி விடுவார்கள்
அதன் பின்பு சிலர் சிவனாகவே மாறி விடுவர்.
அத்தகையவர்களோடு நானும் கூடி நின்றேனே.

#323. நடுவு நிற்பதன் பயன்


தோன்றிய எல்லாம் துடைப்பன் அவன்றி
ஏன்று நின்ற ரென்று மீசனிணை யடி
மூன்று நின்றார் முதல்வன் திரு நாமத்தை
தான்று நின்றார் நடுவாகி நின்றாரே.


தோன்றிய எல்லாவற்றையும் அழிப்பவன் சிவன். பொருட்களின் முடிவைத் தருபவன் அவனே. என்றும் அவன் இணையடிகளை ஏற்று நிற்கின்றவர்கள் நடுவில் நிற்பவர்கள் ஆவர். அந்தப் பெருமானின் திருநாமத்தைக் கூறுபவர்களும் நடுவில் நின்றவர்களே. அவர்கள் அரிய யோக நித்திரையில் இருக்கும் பயனை அடைவர்.
 
24. கள்ளுண்ணாமை

#324 to #328


#324. சிவானந்தத் தேறல்

கழுநீர் பசுப்பெறில் கயம்தொறும் தேரா;
கழுநீர் விடாய்த்துத் தம் காயம் சுருக்கும்;
முழுநீர்க் கள் உண்போர் முறைமை அகன்றோர்,
செழுநீர்ச் சிவன் சிவானந்தத் தேறலே.


குடிப்பதற்குக் கழுநீர் கிடைத்துவிட்டால் அதன் பிறகு பசுக்கள் குடிநீரைத் தேடிக் குளங்களுக்குச் செல்லா! அவை கழுநீரை வேண்டித் தாகத்தால் காத்திருந்து . உடலை வருத்திக் கொள்ளும். சிவானந்தத் தேறல் வாழ்க்கைக்கு வளமை இனிய தரும் மதுவாகும். அதை அருந்தாமல் மயக்கம் தரும் மதுவை உண்பவர் நல்லொழுக்கத்திலிருந்து பிறழ்ந்தவர்கள் ஆவர்.

#325. தாழ்ந்த செயல்கள்


சித்தம் உருக்கிச் சிவம் ஆம் சமாதியில்
ஒத்த சிவானந்தம் ஓவாத தேறலைச்
சுத்தமது உண்ணச் சிவானந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க்காலே.


சித்தத்தை உருக்கவேண்டும் அதனைச் சிவத்தின் மீது அன்புடன் செலுத்துவதன் மூலம். சமாதி நிலையில் சிவானந்தம் என்னும் மாறாத சுத்தமானத் தேறலை அருந்த வேண்டும். அந்த நிலையில் அந்தப் பேரானந்தம் நம்மை விட்டு நீங்காது நிலைத்து நிற்கும். அதை ஒழித்துவிட்டு சிவனின் நினைவே இல்லாமல் நிற்பதும், நடப்பதும், கிடப்பதும் தாழ்ந்த செயல்கள் ஆகும்.

#326. ஆனந்தத் தேறல்


காமமும் கள்ளும் கலதிகட்கே ஆகும்;
மாமல மும்சமயத்துள் மயல் உறும்
போமதி ஆகும் புனிதன் இணையடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வு உண்டே.


கீழ் மக்களுக்கு உரியவை காமமும் கள்ளும். பெரிய மலமாகிய ஆணவ மலம் ஒருவன் சமயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாதபடி மயக்கத்தை ஏற்படுத்தும். அறிவைக் கெடுத்து விடும். சிவபெருமானின் இணையடிகள் தொடர்பினால் அருந்தும் பிரணவ மயமான தேன் உணர்வைக் கொடுக்கும்; கெடுக்காது.

#327. சிவன் நாம மகிமை


வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்வர்
காமத்தோர் காமக்கள் உண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள்ளொளிக் குள்ளே உணர்வர்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.


வாமாசாரம் என்னும் முறைப்படி சக்தியை வழிபடுகின்றவர்கள் தாமும் மது அருந்தி அழிந்து போவர். காம லீலைகளில் ஈடுபடுவோர் அந்தக் காமத்தின் மயக்கத்திலே அழிந்து போவர். சிவன் நாமங்களைச் சொல்லி ஓமம் செய்கின்றவர்கள் தம் சிரசில் வெளிப்படும் சிவஒளியில் தம் உணர்வைக் கொண்டு நிறுத்தி மகிழ்ச்சி அடைவர். சிவன் நாம மகிமையை அறிந்து கொண்டவர் சிவனிடம் நெருங்கும் இன்பதைப் பெறுவார்கள்.

#328. கருத்து அறியார்


உள்உண்மை ஓரார் உணரார் பசுபாசம்
வல்லன்மை நாதன் அருளினின் வாழ்வுறார்
தெள்உண்மை ஞானச் சிவயோகம் சேர்வுறார்;
கள்உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே.

வேதங்கள் ஆகமங்கள் கூறும் மறைந்துள்ள உண்மைகளை அறியாதவர்களால் பசு பதி பாசம் இவற்றின் தொடர்பினைப் புரிந்து கொள்ள முடியாது. விரும்புகின்ற எல்லாவற்றையும் அள்ளித் தரும் வள்ளல் ஆவான் சிவபெருமான். அவன் அருளைத் துணையாகக் கொண்டு வாழ மாட்டார்கள் இவர்கள். தெளிந்த சிவ யோகத்தில் நிலைத்து நிற்கவும் அறியார். மனத்தை மயக்கிக் கெடுக்கும் கள்ளை அருந்துபவர்கள் இந்த கருத்துக்களை அறிய மாட்டார்கள்.
 
#329 to #332

#329. மாமாயை

மயக்கும் சமய மலம் மன்னும் மூடர்
மயக்கும் மது உண்ணும் மாமூடர் தேரார்
மயக்கு உறு மாமாயை மாயையின் வீடும்
மயக்கில் தெளியின் மயக்குறும் அன்றே.

சமயக் கோட்பாடுகள் மனதை மயக்க வல்லவை. சமயக் குற்றங்கள் புரிகின்ற மகா மூடர்கள் சமயத்தின் பெயரில் அறிவை மயக்கும் மதுவை அருந்துகின்றார்கள். இவர்கள் நல்ல வழியை ஆராயும் திறன் அற்றவர்கள். மயக்கத்தைத் தரும் மகாமாயை தான் மாயையின் இருப்பிடம் என்பர். மயக்கத்தை ஒழித்து வெளியே வந்த போதிலும் வாமாசார வழிபாடு மீண்டும் மீண்டும் மயக்கத்தில் அவர்களைக் கொண்டு தள்ளி விடும். உயரிய சிவானந்தத்தை அருளாது.


#330. இடையறா ஆனந்தம்


மயங்கும், தியங்கும், கள் வாய்மை அழிக்கும்,
இயங்கும் மடவார் தம் இன்பமே எய்தி
முயங்கும்; நயம் கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடை அறா ஆனந்தம் எய்துமே.
கள் அருந்தும் பழக்கம் மனிதனின் மனதை மயக்கும்; வீணாகக் கவலை அடையச் செய்யும்; பெண்கள் தரும் இன்பத்தை நாடச் செய்யும்; கள் அருந்துபவர்கள் நல்ல ஞானத்தை அடைய முயல மாட்டார்கள்; இடையறாத சிவானந்தப் பேரின்பம் அவர்களுக்கு கிடைக்குமோ? ஒரு நாளும் கிடைக்காது!


#331. நீங்கா இன்பம்


இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்குஅற ஆனந்தத் தேறல் பருகார்
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டு இடத்தேனே

இரவு பகல் என்ற பேதம் இல்லாத இடம் தன்னை மறந்த சாக்கிரத அதீத நிலை. அங்கே இருந்து கொண்டு வேறு எண்ணங்கள் எதுவும் இல்லாமல் சிவானந்தத் தேனை பருகும் வல்லமை இந்த உலகத்தவருக்கு இருக்காது. இரவும் பகலும் இல்லாத திருவடி இன்பத்தில் நான் திளைத்தேன். சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரவும் பகலும் உள்ளவற்றை நான் நீக்கி விட்டேன்.


#332. ஞான ஆனந்தம்


சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்உண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறந்ததால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே.

சக்தியை வழிபடுவோர் அவள் அருளை வேண்டிக் கள் உண்பர். அவர்கள் மது அருந்தித் தம்மை மறப்பதால்
அறிவு தன் சக்தியை இழந்து விடுகிறது. உண்மையான சக்தியை அடைய விரும்பினால், சிவ ஞானத்தைப் பெற வேண்டும். அதில் நிலையாக இருந்து கொண்டு என்றும் நிலையானதாகிய, அறிவு மயமாகிய, ஆனந்த மயமாகிய ஒரே மெய்ப்பொருளை அடைய வேண்டும்.



 
#333 to #336

#333. அஷ்ட மாசித்தி

சத்தன் அருள் தரின் சத்தி அருள் உண்டாம்;
சத்தி அருள்தரின் சாத்தான் அருள் உண்டாம்;
சத்தி சிவம் ஆம் இரண்டும்தன் உள்வைக்கச்
சத்தியும் எண் சித்தித் தன்மையும் ஆமே.


சக்திதேவியின் நாதன் சிவபெருமான் அருள் செய்தால் சக்திதேவியின் அருள் நமக்குக் கிடைக்கும். சக்திதேவி அருள் செய்தால் சிவன் அருள் கிடைக்கும். சக்தி சிவன் இவர்களின் இருப்பிடமான விந்து நாதத்தில் பொருந்தி இருந்தால், அவர்களுக்குச் சக்தியின் வடிவமும் கிடைக்கும். அஷ்ட மாசித்திகளும் தாமே வந்து பொருந்தும்.


#334. சிவானந்தம்


தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தான்ஆகிப்
பொய்த்தவம் நீக்கி, மெய்ப் போகத்துள் போக்கியே
மெய்த்த சகம் உண்டுவிட்டுப் பரானந்தச்
சித்தி அது ஆக்கும் சிவானந்தத் தேறலே.


சிவானந்தம் என்னும் தேன் முப்பத்தாறு தத்துவங்களையும் கடக்கச் செய்யும். தானே தத்துவங்கள் என்று மயங்கும் அறிவை நீக்கிவிடும். . உபாயத்தினால் சிவத்தை அடையலாம் என்று எண்ணிச் செய்யும் பொய்த் தவங்களில் இருந்து விலக்கி விடும். உண்மையான சிவ யோகத்தில் கொண்டு சேர்க்கும். மெய் போலத் தோற்றம் அளிக்கும் இந்த உலகம் உண்மை இல்லை என்று உணரச் செய்யும். எல்லாவற்றுக்கும் மேலான பரமானந்தம் கிடைக்கச் செய்யும்.


#335. மதத்தால் அழிவர்


யோகிகள் கால்கட்டி ஒண்மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண்சித்தி
யோகியர்கள் உண்டு மூடராய் மோகம் உற்று
ஆகும் மதத்தால் அறிவழிந்தாரே.

சிவயோகிகள் மூச்சுக் காற்றைத் தம் வசப்படுத்துவார்கள். சந்திர மண்டலத்தில் இருந்து கொண்டு அமிர்தம் போன்ற சிவானந்தத்தை அருந்துவார்கள். ஞான அமிர்தம் பருகியதால் மேலும் மேன்மை பெறுவார்கள். ஆனால் எண் சித்திகளை விரும்பும் பிறர், கள்ளை அருந்தும் பற்றுதலால், மூடர்கள் ஆவதுடன் உள்ள அறிவையும் இழந்து நிற்பார்கள்.


#336. சுவாசத்தின் பாதை


உண்ணீர் அமுதம் உறும் ஊறளைத் திறந்து
எண்ணீர் குரவன் இணையடித் தாமரை
நண்ணீர் சமாதியின் நாடி நீரால் நலம்
கண்ஆற்றொடே சென்று கால்வழி காணுமே.


இறப்பினை மாற்றவல்ல அமிர்தம் ஊறும் ஊறலைத் திறந்து உண்ண மாட்டீர்கள் நீங்கள். சிவபெருமானுடைய இணையடிகளைச் சிறிதும் உள்ளத்தில் எண்ண மாட்டீர்கள் நீங்கள். சமாதி நிலையில் சிவஒளியுடன் பொருந்தி நிற்க மாட்டீர்கள் நீங்கள். கண்ணின் காரியமாகிய, நன்மை அளிக்கும் ஒளி நெறியைப் பின் தொடர்ந்தால், தலையில் சுவாசம் புகும் வழியையும் போகும் வழியையும் கண்டறியலாம்.


இத்துடன்
திருமூலரின் திருமந்திரம் - முதல் தந்திரம் முற்றுப் பெற்றது.


 
திருமூலரின் திருமந்திரம்

திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறை ஆகும். தமிழில் முதல் முதலில் தோன்றிய யோக நூல் இது என்பது இதன் தனிச் சிறப்பு. முதல் சித்தர் திருமூலரே ஆவார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர் மட்டுமல்ல. அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் ஒருவர் ஆவார் திருமூலர். திருவாவடுதுரையில் ஓர் அரச மரத்தின் கீழ் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். ஆண்டுக்கு ஒரு பாடல் என்று மூவாயிரம் பாடல்களை இவர் இயற்றினார் என்பர்.


இரண்டாம் தந்திரம்

1. அகத்தியம்

உடலில் உள்ள நாதமே அகத்தியம் ஆகும் .

#337 & #338

#337. “நீ போய் முன் இரு!”

“நடுவு நில்லாது இவ்வுலகம் சரிந்து

கெடுகின்றது எம்பெருமான்” என்ன ஈசன்
“நடுவுள அங்கி அகத்திய, நீ போய்,
முடுக்கிய வையத்து முன்இரு” என்றானே.

“எம்பெருமானே! இந்த உலகத்தோர் நடுவில் உள்ள சுழுமுனையில் பொருந்தி நிற்பதில்லை. உலக முகமாக இருந்து கீழ் நிலைப்பட்டு கெடுகின்றனர்” என்று கூறினேன். உடனே இறைவன் கூறியது இதுவே. “மூலாதாரத்தின் நடுவே உள்ள அக்னி ஸ்வரூபமே! நீ சென்று ஜீவனின் தலையின் முன் பக்கம் பொருந்துவாய். விரைந்து ஒடும் ஜீவனைக் காப்பற்றுவாய்” என்றான்.

#338. இலங்கும் ஒளி தானே!

அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்
அங்கி உதயம் செய் மேல்பாலவனொடும்
அங்கி உதயம் செய் வடபால் தவமுனி
எங்கும் வளங்கொள் இலங்கு ஒளிதானே.


அகத்தியன் என்னும் சாதகன் அக்னிக் கலையின் வடிவாகிய நாதத்தைத் தலையின் முன் பக்கம் விளங்கச் செய்வான் அது அதற்குப் பிறகு தலையின் பின் புறமாகப் பரவி விரவும். தலையின் இடப்புறம் விளங்கும். அப்போது தவ முனிவனின் சிரசு முழுவதுமே ஒளிமயமாகி விடும்.
 
2. பதிவலியில் வீரட்டம் எட்டு

சிவபெருமான் மறக் கருணை காட்டிய எட்டு இடங்கள் இவை.

1. திருவதிகை…முப்புரங்களை அழித்த இடம்

2. திருக் கடவூர் …யமனை வென்ற இடம்

3. திருக்கொறுக்கை …மன்மதனை வென்ற இடம்

4. திருவழுவூர்…கயமுகாசுரனை வென்ற இடம்

5. திருக்கோவலூர் …அந்தகாசுரனை அழித்த இடம்

6. திருப்பறியலூர் …நான்முகனை வென்ற இடம்

7. திருக்கண்டியூர்…திருமாலை வென்ற இடம்

8. திருவிற்குடி …சலந்தராசுரனை வென்ற இடம்
 
Back
Top