Quotable Quotes Part II

17. முத்திரை பேதம்
கரணம், கருவி இவற்றின் அறிவை விட்டு மாற்றி முதல் நிலைக்குச் செல்லும் வழி


#1889 to #1891

#1889. புகலே புகல் ஆகும் என்பது ஆமே.

வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்;
தரஇருந் தான் தன்னை, நல்லவர்க்கு இன்பம்;
பொரஇருந் தான் புகலே புகல் ஆக
வரஇருந் தால், அறியான் என்பது ஆமே.


ஈசன் தன்னிடம் நெருங்கி வரும் அன்பர்களின் பாதையின் நின்று உதவுவான். தன் மெய்யடியாருக்குத் ஈசன் தன்னையே இன்ப வடிவில் தந்து உதவுவான். அடியார்கள் அடையும் அடைக்கலமாக அவன் நிற்பான். இங்ஙனம் அன்பர்களின் வரவை எதிர் நோக்கி நின்று அருள் புரியும் ஈசனை ஒருவன் “அவன் என்னை அறியாதவன்!” என்று கூறுவது சரியோ?

#1890. சிவனைத் தலைப்படுவர்

அங்கார் பசியு மவாவும் வெகுளியும்
தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப்
பொங்கார் புவனத்துப் புண்ணிய லோகத்தும்
தங்கார் சிவனைத் தலைப் படுவாரே.


சிவனடியார்கள் தீயைப் போன்றுச் சுடும் கடும் பசி, ஆசை, சினம் போன்ற குற்றங்கள் எதுவும் இல்லாதவர். அவர்கள் உடல் இன்பத்தை நாட மாட்டார்கள். அவர்கள் மண்ணுலகம் விண்ணுலகம் என்ற எவற்றிலும் வாழ விரும்ப மாட்டார்கள். அவர்கள் விரும்புவது ஒன்றே ஒன்று தான். அது சிவனைத் தலைப்படுவது என்ற ஒன்றே.

#1891. வையகம் எல்லாம் வரவிருந்தார்

மெய்யக ஞானம் மிகத்தெளிந் தார்களும்
கையக நீண்டார் கடைத்தலைக் கேசெல்வர்
ஐயம் புகாம லிருந்த தவசியார்
வையக மெல்லாம் வரவிருந்தாரே.


மெய்ஞானம் பெற்று தெளிவடைந்த அடியவர்களும், ஐயம் ஏற்பதற்குக் கொடுக்கும் வள்ளல் தன்மை மிக்க உடையரிடமே செல்வர். ஐயம் ஏற்கச் செல்லாத தவசியருக்கு வையகமே வந்து ஐயம் இடும்
 
#1892 to #1894

#1892. நன்முக்தி கூடும்

நாலேழு மாறவே நண்ணிய முத்திரை
பாலான மோன மொழியுள் பதிவித்து
மேலான நந்தி திருவடி மீது உய்யக்
கோலாகலம் கெட்டுக் கூடும் நன் முத்தியே.


சீவனுக்குக் கிடைத்துள்ள பதினொரு கருவிகள் ஆகும் ஞானேந்திரியங்கள் ஐந்து + கர்மேந்திரியங்கள் ஐந்து + மனம் என்பவை. இவற்றைச் சீவ போதத்திலிருந்து சிவபோதத்திற்கு மாற்ற வேண்டி நண்ணும் முத்திரை சீவனைப் பிரணவத்தில் பதிவிக்கும். மேலான சிவனடிகளில் சேர்த்து உய்விக்கும். வீண் ஆரவாரங்களை அடக்கி நல்ல முத்தியைத் தரும்.

#1893. ஞானத்தைப் பெருக்கும்

துரியங்கள் மூன்றும்சொருகுஇடன் ஆகி,
அரிய உரைத்தாரம் அங்கே அடங்கி
மருவிய சாம்பவி கேசரி உண்மை
பெருகிய ஞானம் பிறழ் முத்திரையே


சீவ துரியம், பர துரியம், சிவ துரியம் என்னும் மூன்று துரியங்களும் உண்ணாக்கருகில் பொருந்தி அடங்கும். அரிய உரைகளை நிகழ்த்தும் நாவினை அங்கே சொருகி அடக்க வேண்டும். சாம்பவி, கேசரி முத்திரைகளில் ஒருவன் இருந்தால் அப்போது மெய்ஞானம் பெருகும்.

சாம்பவி முத்திரை :
கண் பார்வையை நாசித் துவாரங்களின் பக்கமாக மார்பு வரைப் பார்த்தல்.
இந்த முத்திரையினால் வெளியுலகப் பார்வை முற்றிலுமாக நீங்கி விடும்.

கேசரி முத்திரை :
புருவ மத்தியில் தொடங்கி அகநோக்கில் தலை உச்சியை நோக்கிச் செல்லல்.
இந்த முத்திரையினால் மனம் அடங்குவதால் வெளியுலகை அறிய முடியாமல் போய்விடும்.

#1894. மெய் ஞான முத்திரை

சாம்பவி நந்திதன் அருள் பார்வையாம் ;
ஆம்பவம் இல்லா அருட்பாணி முத்திரை
ஓம்பயில் ஓங்கிய உண்மைய கேசரி
நாம்பயில் நாதன் மெய்ஞ்ஞான முத்திரையே.


சாம்பவி முத்திரை குருநாதனின் அருட்பார்வையை நம்மிடம் கொண்டு வரும். அந்த அருள் மிகுந்த முத்திரைச் சங்கிலித் தொடர் போல் தொடர்ந்து வரும் பிறவிப் பிணியை அகற்றி விடும். ‘ஓம்’ என்ற பிரணவத் தியானத்துடன் பொருந்தி இருக்கும் கேசரி முத்திரை, நாம் பயில்கின்ற குருநாதனின் மெய்ஞ்ஞான முத்திரை ஆகும்
 
#1895 to #1898

#1895. மோனத்து முத்திரை

தானத்தின் உள்ளே சதாசிவன் ஆயிடும்
ஞானத்தின் உள்ளே நற்சிவம் ஆதலால்,
ஏனைச் சிவமாம் சொரூபம் மறைந்திட்ட
மோனத்து முத்திரை முத்தாந்த முத்தியே.

ஓர் ஆதாரத்தில் விளங்குவது சதாசிவன். ஆதாரம் எதுவுமின்றி நிராதாரத்தில் ஞானவடிவாக இருப்பது பரசிவம். எனவே உருவம் கொண்ட நான்முகன், திருமால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன் என்ற ஐவர்களைக் கடந்து விட்ட மோன நிலையே முத்தி நிலையாகும். இங்கு அருவமான சதாசிவம் மட்டும் இருப்பார். மற்ற ஐந்து தெய்வங்களும் இரார். இங்கு சீவனின் மனமும் அறிவும் செயல்படா.

#1896. வாக்கும் மனமும் மௌனமாம்

வாக்கும் மனமும் இரண்டும் மவுனமாம்
வாக்கு மவுனத்து வந்தாலும் மூங்கையாம்;
வாக்கும் மனமும் மவுனமாம் சுத்தரே
ஆக்கும் அச் சுத்தத்தை யார்அறி வார்களே.


மோன நிலை என்பது வாக்கு, மனம் என்னும் இரண்டும் தொழில் படாமல் மெளனமாக இருக்கும் உயரிய நிலை. மனம் அடங்காமல் இருக்கையில் வாக்கு மட்டும் தொழில் படாவிட்டால் அது ஓர்ஊமையின் நிலை. வாக்கு மனம் என்னும் இரண்டையும் கட்டுப் படுத்தி வெல்பவரே உண்மையில் தூய்மை உடையவர். அங்ஙனம் அமையும் அந்தத் தூய்மை நிலையை யார் அறிவார்?

#1897. யோக, ஞான முத்திரைகள்

யோகத்தின் முத்திரை யோரட்ட சித்தியா
மேகத்த ஞானத்து முத்திரை யெண்ணுங்கால்
ஆகத் தகுவேத கேசரி சாம்பவி
யோகத்த கேசரி யோகமுத் திரையே.


யோகம் வந்து பொருந்தி விட்டது என்பதைக் காட்டும் முத்திரை அட்ட சித்திகள் வந்து அமையப் பெறுவது ஆகும். இறைவனுடன் ஒன்றாகப் பொருந்தும் ஞான முத்திரைகளை ஆராய்ந்தால் வேதங்கள் சிறப்பாகப் பேசுவது கேசரி, சாம்பவி என்ற இரண்டு முத்திரைகளையே. யோகத்தின் முத்திரை கேசரியே ஆகும்.

#1898. ஒன்றில் எய்தி நின்றான்

யோகி எண் சித்தி அருளொளி வாதனை;
யோகி தன் புத்தி புருடார்த்த நன்னெறி;
ஆகும் நன் சத்தியும் ஆதார சோதனை;
ஏகமும் கண்டு, ஒன்றில் எய்தி நின்றானே.

ஒரு யோகியானவன் எட்டு சித்திகளையும் பெற்றுவிட்டவன்; அவன் அருள் ஒலி வாதனையில் இருப்பவன்; அவன் அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு புருடார்த்தங்களை அறிந்து கொண்டு அனுபவிப்பவன். அவன் தன் குண்டலினி சக்தியை உடலின் ஆறு ஆதாரங்களின் வழியே மேலே ஏற்றியவன். அவன் ஒன்றாகிய சிவனைக் கண்டு அவனுடன் ஒன்றி நிற்பவன் ஆவான்.
 
#1899 to #1901

#1899. நவா அகமோடு உன்னல்
துவாதச மார்க்கம் என் சோடச மார்க்கமாம் என்
அவாவறும் ஈர்ஐ வகை; அங்கம் ஆறும்
தவா அறு வேதாந்த சித்தாந்தத் தன்மை
நவா அகமோடு உன்னல் நற்சுத்த சைவமே
.
துவாதச மார்க்கம் எனப்படும் பன்னிரெண்டு கலைப் பிரசாத நெறியுள்ள யோக மார்க்கம், பிறகு சோடச மார்க்கம் என்னும் பதினாறு கலைப் பிரசாத நெறியாக ஆகும். இதன் பயனாக ஞான இந்திரிங்கள் ஐந்தும் கர்ம இந்திரியங்கள் ஐந்தும் தம் விருப்பத்தை விட்டு நிற்கும். காமம் முதலிய அறு பகைவர்களின் வழியில் செல்லா! இதுவே கேடற்ற வேதாந்த சித்தாந்தத்தின் இயல்பாகும். ஒருவன் தூய்மையான மனத்துடன் ஈசனைச் சிந்தித்திருப்பதே நல்ல சுத்த சைவம் ஆகும்.

#1900. முத்திரைகளின் பயன்கள்
மோனத்து முத்திரை முத்தர்க்கு முத்திரை
ஞானத்து முத்திரை நாதர்க்கு முத்திரை
தேனிக்கு முத்திரை சித்தாந்த முத்திரை
கானிக்குமுத்திரை கண்ட சமயமே.
சீவன் முக்தருக்கு உரிய முத்திரை மனம் தொழிற்படாத மோன முத்திரை. குருவாக விளங்குபவருக்கு உரிய முத்திரை ஞான முத்திரை. சித்தாந்த நெறியின் அடையாளம் குண்டலினி யோகம் ஆகும். காற்றை அடக்கும் முத்திரை ஈசனைக் காண உதவும் முத்திரை.

#1901. நீனெறி நின்மலன் ஆக்கும்
தூநெறி கண்ட சுவடு நடுவெழும்
பூநெறி கண்டது பொன்னக மாய்நிற்கும்
மேனெறி கண்ட வெண்மதி மேதினி
நீனெறி கண்டுள்ள நின்மலன் ஆமே.

தூய்மையாகிய கழுத்தை இடமாகக் கொண்டு, உயிர்வளி நடுநாடியின் வழியே உச்சிக்குச் செல்லும். அது பொன்னகமாக விளங்கும் சகஸ்ராரத்தில் சென்று பொருந்தி நிற்கும். அதற்கும் மேலே மதி மண்டலம் வெண்ணிறமாக விளங்கும். இங்ஙனம் உயிர்வளியின் நெறியைக் கண்டு உணர்ந்து கொண்டு ஒருவன் தூயவன் ஆகலாம்.
 
18. பூரணக்குகைநெறி சமாதி
யோகி உடலை விட்ட பின் அடையும் பயன்

#1902 to #1905


#1902. யோகி உடலை விட்டால்…

வளர்பிறையில் தேவர்தம் பாலின் மன்னி
உளர் ஒளி பானுவின் உள்ளே ஒடுங்கித்
தளர்வுஇல் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளது உறும், யோகி உடல் விட்டால் தானே.


வினைப் பயன்களைத் துய்ப்பதற்காகத் தாங்கிய தன் உடலை ஒரு சிவயோகி விட்டு விடும் போது என்ன என்ன நிகழும்? வளர்பிறைக் காலத்தில் அவன் தன் உடலைத் துறந்தால், அவன் ஆன்மா முதலில் தேவர்களுடன் சென்று தங்கும். பின்னர் கதிரவன் மண்டலத்தில் சென்று தங்கும், அதன் பிறகு பித்ருக்கள் உள்ள பூமியைச் சென்று அடையும். அது இறுதியாகச் சந்திர மண்டலத்தைச் சென்று அடையும்.

#1903. அருளின் சார்வு ஆகுவர்.

தானிவை யொக்கும் சமாதிகை கூடாது
போன வியோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வர் அருளின்சார் வாகியே.


சமாதி கை கூடினால் மேற் கூறியபடி அனைத்தும் நிகழும். சமாதி கை கூடாமலேயே சிவயோகி உடலை விட்டு விட்டால் என்ன ஆகும்? அவன் தன் கன்மங்களுக்கு தகுந்த பதவியை அடைவான். அங்கு இருந்து விட்டு வந்து மீண்டும் உலகில் பிறவி எடுப்பான். தன் கன்மகள் தீரும்வரை வினைப் பயன்களைத் துய்த்தும், யோகத்தில் ஈடுபட்டு அதைச் சிவன் அருளால் நிறைவு செய்வான்.

#1904. சித்தி வந்து ஓர் காயம் ஆகும்

தான் இவ்வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத்து ஆம்ஆறு அம் அவ்விந்து
தான தில் அந்தச் சிவயோகி யாகும் முன்
ஊனத்தோர் சித்தி வந்து ஓர் காயம் ஆகுமே.


இவ்வாறு உலகில் வந்து பிறந்த யோகி, மற்றவர்களைப் போலவே உண்டும், உடுத்தும், நடந்தும், கிடந்தும் உலகில் வாழ்வான். அவன் மீண்டும் சிவயோகத்தில் தீவிரமாக ஈடுபடுவான். அவன் பல சித்திகளைப் பெறுவான். சிவயோகப் பயனாக ஓர் ஒழி வடிவம் பெறுவதற்கு முன்பு அவன் எல்லோரும் மதிக்கத்தக்க ஓர் உடலை அடைவான்.

#1905. புவலோகம் போற்றும் புண்ணியர்

சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
தவலோகம் சேர்ந்துபின் றான்வந்து கூடிச்
சிவயோக ஞானத்தாற் சேர்ந்தவர் நிற்பர்
புவலோகம் போற்றுநற் புண்ணியத்தோரே.


சிவயோகம் நிறைவு பெறாமலேயே தன் உடலைத் துறந்து விட்ட ஒரு ஞானியின் ஆன்மா முதலில் தவலோகத்தைச் சென்று அடையும். பின்பு மீண்டும் உலகில் வந்து பிறவி எடுக்கும். சிவயோகத்தில் மீண்டும் முயன்று இவர் சிவஞானம் பெறுவார். இவர்களைப் புவலோக வாசிகளும் புகழ்ந்து போற்றுவர்.
 
#1906 to #1909

#1906. பூலோகம் மீளார்

ஊனம்இல் ஞானிநல் யோகி உடல்விட்டால்
தான்அற மோனச் சமாதியுள் தங்கியே
தான்அவ னாகும் பரகாயம் சாராதே
ஊனமில் முத்தராய், மீளார் உணர்வுற்றே.


குறையில்லாத சிவஞானியாகவும், நல்ல யோகியாகவும் உள்ள ஒருவர் தன் உடலை விட்டுப் பிரிந்தால் என்ன செய்வார்? தான் என்ற நினைவு இல்லாதவராக, மோன நிலையில் இருந்து, சிவம் ஆகும் தன்மையை அடைந்து விடுவார். அவர் வேறு ஒரு உடலைச் சேரார். அவர் மீண்டும் உலகில் பிறவி எடுக்க மாட்டார். அவர் ஒரு நிர்மலமான முக்தராக ஆகி விடுவார்.

#1907. மும்மலங்கள் நீங்கியவர்

செத்தார் பெரும்பய னாவது ஏதெனில்
செத்து நீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்த ரிருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாகி யேசித்தர் தாமே.


இறந்தவர் பெறுகின்ற பெரும் பயன் என்ன என்று தெரியுமா? அது அவர் அதனால் அடையும் சித்தியே ஆகும். சித்தி கைக்கூடிச் சிவனுடன் சேர்ந்துவிட்டால் அவர் இறந்தவர் ஆயினும் இருந்தவர் ஆவார். அவர் மும்மலங்களையும் அழித்துவிட்டவர் ஆவார்.

#1908. பரன் அருட்குலம் பாலிப்பான்

உன்னக் கரு இட்டு, உரவோன் அரன் அருள்
பன்னப், பரனே அருட்குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டி இடு ஞானி
தன் இச்சைக்கு ஈசன் உருச்செய்யும் தானே.


இடையறாது தன்னை உன்னும் ஒருவனுக்கு, வல்லமை படைத்த அரன் மனம் கனிந்து அருள் செய்வான். சிவனே அவனைத் தன் அடியவர் குழுவில் சேர்த்துக் கொள்வான். அவனுக்கு வேண்டியவற்றை எல்லாம் அளித்து அவனையும் தன் உருவைப் பெறச் செய்வான்.

#1909. எங்குமாய் நிற்கும் ஈசன்

எங்கும் சிவமாய், அருளாம், இதயத்துத்
தங்கும் சிவஞானிக்கு எங்கும் ஆம் தற்பரம்
அங்கங்கு என நின்று, சகம் உண்ட வான்தோய்தல்
இங்கே இறந்து எங்குமாய் நிற்கும் ஈசனே.


பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் சிவத்தின் அருளின் நடுவில் நிலைபெற்றுள்ள சிவ ஞானிக்கு, எங்கு எங்கு நோக்கினும் சிவமே காட்சி தரும். பஞ்ச பூதங்களில் வானம் நுண்மையாகக் கலந்துள்ளதைப் போலவே, அந்த சிவஞானியும் தன் உடல் உணர்வை விட்டு விட்டு, உலகப் பொருட்கள் அனைத்திலும் கலந்து நிற்பான்.
 
19. சமாதிக் கிரியை
ஒரு ஞானி தன் உடலைத் துறந்துவிட்ட பின்பு செய்ய வேண்டிய சடங்குகள்

#1910. ஞானியின் உடல் கெடின் கேடு வரும்!

அந்தமில் ஞானிதன் ஆகம் தீயினில்
வெந்திடின் நாடெலாம் வெப்புத் தீயினில்
நொந்தது நாய்நரி நுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்குண வாகும்வை யகமே.


முடிவு இல்லாத ஒரு சிவஞானியின் பூதவுடல் எரியூட்டப் படுமானால், அந்த நாட்டில் உள்ள அனைவரும் வெப்புநோயால் பிடிக்கப் பட்டு நொந்து போவர். சிவஞானியின் உடல் நல்லடக்கம் செய்யப்படாமல் நாயும், நரியும் அவர் பூத விடலைத் தின்றுவிட்டால், நுண்ணிய பகை மூளும். அந்த நாட்டு மக்கள் அனைவரும் அழிந்து படுவர். நாய்கள் நரிகளுக்கு இரையாகி விடுவர்.

#1911. எரி இடக் கூடாது!

எண்ணிலா ஞானி உடலெரி தாவிடின்
அண்ணல் தன் கோவில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழைவீழா வையகம் பஞ்சமாம்
எண்ணரும் மன்னர் இழப்பா ரரசே.


எண்ணுவதற்கு அரிய ஒரு சிவஞானியின் உடலுக்கு எரியிடுவது என்பது, அண்ணல் சிவன் உறையும் திருக் கோவிலுக்கு நெருப்பு வைப்பதற்குச் சமமாகும். அந்த நாட்டில் வானம் பொய்த்து விடும். வரட்சியும் பஞ்சமமும் உண்டாகும். எண்ணுவதற்கு அரிய பெருமை உடைய மன்னன் தன் அரச பதவியை இழந்து நிற்பான்.

#1912. புண்ணியர் உடலைப் புதைக்க வேண்டும்

புண்ணிய மாமவர் தம்மைப் புதைப்பது
நண்ணி யனல் கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியி லலங்கார பங்கமா
மண்ணுலகெல்லாம் மயங்கும் அனல் மண்டியே.

சிவஞானியின் உடலை கண்ணியமாகப் புதைப்பது ஒரு புண்ணியமான செயல் ஆகும். அவர் உடலுக்கு எரியிட்டால் அந்த நாடு அழிந்து விடும். அவர் உடல் மண்ணில் கிடந்தது கெட்டு அழியும் வண்ணம் விட்டு விட்டால் உலகின் அழகு கெடும். காணும் இடம் எங்கும் தீப்பற்றி எரியும்.

#1913. குகையில் அமைக்க வேண்டும்

அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்தவுடல் தான் குகைசெய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும்
அந்தமி லின்ப அருள்பெறு வாரே.


அழிவில்லாத சிவஞானி ஒருவர், சிவன் அருளைப் பெற்ற பிறகு தன்உடலைத் துறந்திருந்தால், அவர் உடலை ஓர் அழகிய குகையை அமைத்து அதில் இருத்த வேண்டும். அப்போது அந்த நாட்டு மன்னனும் அவன் குடி மக்களும் அளவற்ற இறை அருளைப் பெற்று இன்பம் அடைவர்.

#1914. பத்மாசனத்தில் இருத்த வேண்டும்

நவமிகு சாணாலே நல்லாழஞ் செய்து
குவைமிகு சூழவைஞ் சாணாகக் கோட்டித்து
அவ மிகு குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே.


ஒன்பது சாண் ஆழத்துக்கு ஒரு குழியைத் தோண்ட வேண்டும். வெட்டி எடுத்த மண்ணை அந்தக் குழியைச் சுற்றிலும் ஐந்து சாணுக்கு அப்பால் வளைத்துக் கொட்ட வேண்டும். முக்கோண வடிவமாக அந்த குகையைச் செய்ய வேண்டும். அதன் பக்கங்கள் மூன்று சாண் அளவு இருக்க வேண்டும். அதில் அந்த ஞானியின் பூதவுடலைப் பத்மாசனத்தில் இருத்த வேண்டும்.
 
#1915 to #1918

#1915. குகை அமைக்க ஏற்ற இடங்கள்

தன்மனை சாலை குளங்கரை ஆற்றிடை
நன்மலர்ச் சோலை நகரினற் பூ மி
உன்னரும் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக்கு எய்து மிடங்களே.


சிவஞானியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கு அமைக்கும் குகைக்கு ஏற்ற இடங்கள் இவை: குகையை அமைப்பவன் மனை, சாலையின் பக்கம், குளக்கரை, ஆற்றின் படுகை, நந்தவனம், நகரத்தில் நல்ல பூமி, சிறந்த வனம் மற்றும் உயர்ந்த மலைச் சாரல்.

#1916. இன்னொரு வகைச் சமாதி

நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாத நவபாத நேர்விழப்
பொற்பம ரோசமு மூன்றுக்கு மூண்றணி
நிற்பவர் தாம்செய்யு நேர்மைய தாமே
.

குழியின் நான்கு பக்கங்கள் ஒவ்வொன்றும் ஐந்தடி இருக்க வேண்டும். அதன் ஆழம் நேராக ஒன்பது அடி இருக்க வேண்டும். குகையின் குறுக்களவு மூன்றுக்கு மூன்றாக இருக்க வேண்டும்.

#1917. இடவேண்டிய பொருட்கள்

பஞ்ச லோகங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்ததன் மேலா சனமிட்டு
முஞ்சிப் படுத்து வெண்ணீ றிட்டடதன் மேலே
பொன் செய் நற்சுண்ணம் பொதியலுமாமே.

பஞ்ச உலோகங்களையும், ஒன்பது உயர்ந்த மணிவகைகளையும் குகையினுள் மிகுதியாகப் பரப்ப வேண்டும். அதன் மேல் ஆசனத்தை அமைக்க வேண்டும். தர்ப்பைப் புல்லைப் பரப்ப வேண்டும். வெண்ணீறு இட வேண்டும். பொற் சுண்ணப் பொடியைப் போட வேண்டும்.
பஞ்ச லோகங்கள்: பொன், வெள்ளி, செம்பு, ஈயம், இரும்பு.
ஒன்பது மணிகள் : நவ ரத்தினங்கள்.
வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம், முத்து, பவழம், கோமேதகம், புஷ்பராகம், குருவிந்தம்.
பொற்சுண்ணம் : மஞ்சள் பொடி போன்றவற்றின் ஒரு கலவை.

#1918. தூபம் காட்ட வேண்டும்

நள்குகை நால்வட்டம் படுத்தன் மேற்சாரக்
கள்ளவிழ் தாமம் கலாபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.


குகையின் நடுவில் ஒரு சதுர வடிவில் தேன் சிந்தும் மலர்கள், சந்தனம் , கஸ்தூரி, களபச் சாந்து, புனுகு, பன்னீர் இவற்றைக் கலந்து தெளியுங்கள். அதனுள் ஓர் ஒளி வீசும் தீபத்தைக் காட்டுகள்.
 
#1919 to #1922

#1919. வெண்ணீறும் மலரும் அணிவியுங்கள்

ஓதிடும் வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாய
மீதினி லிட்டா சனத்தின் மேல் வைத்துப்
போதறு சுண்ணமு நீறும் பொலிவித்து
மீதில் இருத்தி விரித்திடு வீரே.


ஒரு சட்டை போலத் திருநீற்றை ஞானியின் உடல் மேல் பூச வேண்டும். அவர் உடலை இருக்கையின் மேலே இருத்த வேண்டும். மலர்கள், அறுகம் புல், நறுமணப்பொடி, திருநீறு ஆகியவற்றை உடல் மேல் அணிவிக்க வேண்டும். குகையில் வைத்து நலப் புறங்களிலும் மண்ணை விரித்துச் சமாக்க வேண்டும்.

#1920. குருவைப் போல் அலங்கரியுங்கள்.

விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னாகமிள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல் வட்டம் சாத்திடு வீரே.


இங்ஙனம் நான்கு புறங்களிலும் வெண்ணீறு போன்றவற்றைப் பரப்பிய பின்பு, குருவைப் போன்ற ஒரு உருவத்தை அங்கு அமைத்திடுங்கள். அதற்கு முகம், கண்கள் இவை இருக்க வேண்டும். அந்த உருவத்துக்கு மேலாடையைப் போர்த்த வேண்டும். பின்பு பொரிக்கறி, இளநீருடன் கூடிய உணவை நிவேதனம் செய்ய வேண்டும்.

#1921. உபசாரம் செய்ய வேண்டும்

மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பல கொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தால் மஞ்சனஞ் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன் றணிநிலம் செய்யுமே.

திருநீறு, நறுமணப் பொடிக் கலவை, தர்ப்பைப் புல், வில்வ மலர் கொண்டு பாத்தியம், ஆசமனம், அர்க்கியம் தரவேண்டும். பின்பு மூன்றடிக்கு மூன்றடி மேடை ஒன்றை அங்கே அமைக்க வேண்டும்.

#1922. சிவலிங்கம் அமைக்க வேண்டும்

ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
போதும் இரண்டினி லொன்றைத் தாபித்து
மேதகு சந்நிதி மேவு உத்தரம் பூர்வம்
காதலிற் சோடசம் காண்உப சாரமே.

அந்த மேடை மீது ஒரு சிவலிங்கம் அல்லது ஓர் அரச மரக்கன்றைத் தாபிக்க வேண்டும். சமாதியின் சந்நிதி வடக்கு திசை அல்லது கிழக்கு திசை நோக்கி இருக்குமாறு அமைத்து, அதற்கு அன்புடன் பதினாறு வகையான உபசாரங்களையும் செய்ய வேண்டும்.
 
20. விந்து உற்பனம்

20. விந்து உற்பனம் = விந்துவின் தோற்றம்

#1923. நிவிருத்தி கலை

உதயத்தில், விந்துவில் ஓங்கு குண்டலியும்
உதயக் குடிலை வயிந்தவம் ஒன்பான்
விதியின் பிரமாதி கள் மிகு சக்தி
கதியில் கரணம் கலைவை கரியே.


படைப்பின் உதய காலத்தில் ஓங்கிய குண்டலினி சக்தியும், பரமாகாய மண்டலத்தில் படைப்புக் காரணமான விந்துவின் காரியமாகிய நான்முகன் முதலிய ஒன்பது பேதங்களும், அவரவர்களின் சக்திகளும், இவற்றின் இயக்கத்திலிருந்து நான்கு அந்தக் கரணங்கள், ஐந்து கலைகள், வைகரி முதலிய வாக்குக்களும் தோன்றின.

#1924. முப்பத்தாறு தத்துவங்கள்

செய்திடும் விந்துவின் பேதத்திறன் ஐயைந்தும்
செய்திடும் நாத பேதத்திறன் நாலாறும்
செய்திடும் மற்றவை ஈரிண்டில் திறம்
செய்திடும் ஆறாறு சேர்தத்து வங்களே.

விந்துவில் செயலால் இருபத்தி ஐந்து பேதங்கள் தோன்றும். நாதம் பேதங்களில் பத்தாகப் பிரியும்.
சிவசக்தியர் மாறுபாடு அடைவதில்லை. நாதத்தையும், விந்துவையும் அவர்கள் இயக்குகின்றார்கள்.

#1925. பரவிந்துவில் பொருந்துபவை

வந்திடும் பேதம் எலாம் பரவிந்து;
தந்திடும் மாமாயை ; வாகேசி தற்பரை
உந்து குடிலையோடு ஏமுறு குண்டலினி
விந்துவில் இந்நான்கும் மேவா விளங்குமே.


பேதங்கள் எல்லாம் பரவிந்துவால் ஏற்படுகின்றன. தோற்றத்தைத் தருகின்ற மாமாயை, வாக்குத் திறன், தற்பரை, ஓங்கி உயர்ந்து செல்லும் குண்டலினி சக்தி என்னும் இந்த நான்கும் விந்துவில் பொருந்தி நிற்கும்.
 
#1926 to #1929

#1926. மனம் அந்தம் ஆகும்

விளங்கு நிவர்த்தாதி மேலக ராதி
வளங்கொள் உகாரம் மகாரத் துள்விந்து
களங்கமில் நாதாந்தம் கண்ணினுள் நண்ணி
உளங்கொள் மனாதியுள் அந்தமும் ஆமே.
நிவிருத்தி முதலிய ஐந்து கலைகள் அகரம் முதலிய கலைகளில் அடங்கும். வளம் மிகுந்த உகரம் மகரத்துக்குள் அடங்கிவிடும். குற்றம் இல்லாத விந்து நாதாந்தத்தை அடைந்து விட்டு மனம் முதலிய நான்கு அந்தக் காரணங்களுக்குள் முடிவை எய்தும்.
#1927. காரண காரியம்

அந்தமும் ஆதியும் ஆகிப் பராபரன்
வந்த வியாபி எனல் ஆய அந்நெறி
கந்தம் அது ஆகிய காரண காரியம்
தந்து ஐந்கருமமும் தான் செய்யும் வீயமே.


ஆதியும் சிவனே! அந்தமும் அவனே! பராபரனாகிய சிவன், எல்லாவற்றையும் ஒரு கிழங்கைப் போலத் தன்னுள்ளே அடக்கிக் கொண்டுள்ளான். எங்கும் வியாபித்துள்ள சிவன், தானே பிரபஞ்ச சிருஷ்டியின் காரணமாகவும் இருக்கின்றான். அவனே பிரபஞ்ச சிருஷ்டியின் காரியமாகவும் விளங்குகின்றான். ஐந்து தொழில்களையும் செய்யும் வித்தாகச் சிவன் இருக்கின்றான்.

விளக்கம்
ஆதியில் பராபரன் ஆகிய சிவன் மட்டுமே இருப்பான். பின்னர் சக்தி சிவனிடம் இருந்து பிரிவாள். பின்பு பரை, மகாமாயை, சுத்த மாயை, மிசிர மாயை, பிரகிருதி மாயை என்று படிப்படியாக விரிவடைவாள். அதிலிருந்து சிருஷ்டி துவங்கும்.

லயம் அடையும் காலத்தில் பிரகிருதி மாயை மிசிர மாயையில் ஒடுங்கும். மிசிர மாயை சுத்த மாயையில் ஒடுங்கும். சுத்த மாயை மகா மாயையில் ஒடுங்கும். மகாமாயை பரையில் ஒடுங்கும். பரை சிவத்தில் ஒடுங்குவாள். சிவம் மட்டுமே எஞ்சி நிற்கும்.

எனவே படைப்பின் ஆதியும் சிவனே. அந்தமும் அவனே!

#1928. அகம் புறம் ஆகும்!

வீயம்அது ஆகிய விந்துவின் சத்தியால்
ஆய அகண்டமும் அண்டமும் பாரிப்பக்
காய ஐம்பூதமும் காரிய மாயையில்
ஆயிட விந்து அகம் புறம் ஆகுமே.


விந்துவே படைப்பின் விதையாகும். அதன் ஆற்றலால் அண்டம் தோன்றியது. அதன் ஆற்றலால் அகண்டமும் தோன்றியது. வானம், காற்று, நெருப்பு, நீர், நிலம் என்ற ஐம் பெரும் பூதங்களும் தோன்றின. இங்ஙனம் விந்து அண்டம், அகண்டம் என்ற இரண்டின் அகத்திலும், புறத்திலும் விளங்கும்.

#1929. வீடு அளிக்கும்

புறம் அகம் எங்கும் புகுந்து ஒளிர் விந்து
நிறம் அது வெண்மை; நிகழ் நாதம் செம்மை,
உற மகிழ் சத்தி சிவபாதம் ஆயுள்
திறனொடு வீடு அளிக்கும் செயல் கொண்டே.


படைப்பில் உள்ளும் பபுறமும் விளங்கும் விந்துவின் நிறம் வெண்மை. நாதத்தின் நிறம் சிவப்பு. இவை இரண்டும் பொருந்துவது சிவசக்தியர் பொருந்துவது ஆகும். இதன் பயனாக சாதகனின் ஆற்றல் பெருகும்; ஆயுள் கூடும்; இறுதியாக வீடுபேறும் கிடைக்கும்.
 
#1930 to #1933

#1930. விந்துவே மகாமாயை

கொண்ட இவ் விந்து பரமம்போல் கோதுஅற
நின்ற படம் கடமாய் நிலை நிற்றலின்,
கண்டு அகல் ஆதியின் காரண காரியத்து
அண்டம் அனைத்துமாய் மாமாயை ஆமே.


விந்து எங்கும் நீக்கமற நிறைந்து அனைத்துப் பொருட்களிலும் நிறைந்து இருக்கும். காரணம் ஆகிய நூலிலிருந்து காரியம் ஆகிய ஆடையும், காரணம் ஆகிய மண்ணிலிருந்து காரியம் ஆகிய குடமும் உருவாவதைப் போன்றே நிலை பெற்ற கலைகள் என்னும் காரணத்திலிருந்து பிரபஞ்சம் என்னும் காரியம் விரியும். உலகம் அனைத்தும் மகா மாயையின் செயல் ஆகும்.

#1931. பொது வித்தில் நின்ற புண்ணியன்

அதுவித்திலே நின்று அங்கு அண்ணிக்கும் நந்தி
இதுவித்திலே உலவாற்றை உணரார்
மதுவித்திலே மலர் அன்னம் அதுஆகிப்
பொதுவித்திலே நின்ற புண்ணியன் தானே
.

அண்டத்தில் வித்தாக இருக்கும் சிவனே பிண்டத்தில் விந்துவாக உள்ளான். இதை மக்கள் அறிந்து கொள்வது இல்லை. இன்பம் பொருந்தும் சுவாதிட்டானத் தாமரை மலரில் பொருந்துகின்ற அன்னப் பறவையும், அண்டத்தில் பொருந்து சிவனும் ஒருவரே ஆவார்.

#1932. வித்தின்றி முளை இல்லை

வித்தினி லன்றி முளையில்லை அம்முளை
வித்தினி லன்றி பெளிப்படு மாறில்லை
வித்து முளையும் உடனல்ல வேறல்ல
அத்தன்மை யாகும் அரனெறி காணுமே
.

வித்தினில் அன்றி முளை வேறு எங்கும் இருக்க முடியாது. வித்தைத் தவிர வேறு எதிலிருந்தும் முளை வெளிப்பட முடியாது. வித்தும் முளையும் ஒன்றி இல்லாமல் இன்னொன்று இருக்க முடியாது. ஆகவே வித்தையும் முளையையும் ஒரே பொருளாகக் கருதலாம். அதைப் போன்றே விந்துவும் சிவமும் ஒன்றே ஆகும்.

#1933. உடலும் மனமும் உணவால் அமையும்

அருந்திய அன்னம் அவை மூன்று கூறாம்
பொருந்தும் உடல், மனம், போமலம் என்ன,
திருந்து முடல் மனமாம் கூறு சேர்ந்திட்டு
இருந்தன முன்னாள் இரதம் அதுஆமே.

நாம் உண்ணும் உணவு மூன்று கூறுகளாகி உடலில் அமையும். ஒரு பகுதி உடலுக்குக் போகும். ஒரு பகுதி மனதுக்குப் போகும்,. ஒரு பகுதி மலமாக வெளியேறும். உடலுக்கும் மனதுக்கும் போகும் பகுதிகள் நாம் முன்பு உண்ட உணவின் சாற்றிலிருந்தே கிடைக்கின்றன அல்லவா?
 
#1934 to #1936

#1934. மருவிய விந்து வளரும்

இரதம் முதலான ஏழ்தாது மூன்றின்
உரிய தினத்தின் ஒருபுல் பனிபோல்
அரிய துளி விந்துஆகும் ஏழ் மூன்றில்
மருவிய விந்து வளரும் காயத்திலே.


உணவின் சாரம் உடலின் ஏழு தாதுக்களுக்கும் போஷாக்கு அளிக்கும். முதலில் உணவின் சாரம் இரத்தமாகும். அதன் பின் ரத்தம் சுக்கிலமாகும். புல் நுனியில் உள்ள பனித் துளி போன்ற விந்து வளர்ந்து இருபத்தொரு நாட்களில் முதிர்ச்சி அடையும்.

#1935. மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியும்

காயத்திலே மூன்று நாளில் கலந்திட்டுக்
காயத்துட்டன் மனம் ஆகும் கலாவிந்து
நேயத்தே நின்றோர்க்கு நீங்கா விடாமையின்
மாயத்தே செல்வோர் மனத்தோடு அழியுமே.

முதிர்ந்த விந்து உடலில் மூன்று நாட்கள் இருந்தால், அது மன மண்டலத்தின் ஒரு பகுதியாகி ஒரு ஒளி மண்டலம் ஆகும். இறையன்புடன் ஒன்றி நின்றோருக்கு விந்துக் கழிவு ஏற்படாது. அதன் ஒளி மண்டலமும் நீங்காமல் நிலையாக இருக்கும். காம காரியத்தில் ஈடுபட்டு உலக இன்பம் தூய்ப்பவருக்கு விந்து கழிந்து விடும். ஒளி மண்டலம் அழிந்து விடும்.

#1936. கழிகின்ற விந்து அழிக்கும்

அழிகின்ற விந்து அளவை அறியார்;
கழிகின்ற தன்னை உள் காக்கலும் தேரார்
அழிகின்ற காயத்து அழிந்து அயர்வு உற்றோர்
அழிகின்ற தம்மை அறிந்தொழி யாரே.


அழிந்து போகும் விந்துவின் அளவை இவர்கள் அறிவதில்லை. இறந்து அழிந்து விடப் போகும் தன்னைக் காத்துக் கொள்வதையும் இவர்கள் அறிவதில்லை. அழியும் உடலில் வாழ்ந்து அழிந்து போகின்றவர்கள் அழிவை ஏற்படுத்துகின்ற விந்து நீக்கத்தை முயன்று அழிப்பது இல்லை. அதிலிருந்து இவர்கள் விலகி நீங்குவதும் இல்லை.
 
Last edited:
21. விந்து சயம் – போகசர ஓட்டம்

21. விந்து சயம் – போகசர ஓட்டம்
விந்து சயம் = விந்துவைக் காப்பதால் கிடைக்கும் வெற்றி.
போகசர ஓட்டம் = போகத்தின் போது மூச்சுக் காற்றின் இயக்கம்


#1937 to #1941

#1937. யோகி ஆவதற்குச் செய்ய வேண்டியவை

பார்க்கின்ற மாதரைப் பாரது, அகன்று போய்
ஓர்க்கின்ற உள்ளம் உருக, அழல் மூட்டிப்
பார்க்கின்ற கண், ஆசை பாழ்பட, மூலத்தே
சேர்க்கின்ற யோகி சிவயோகி தானே.


காம விருப்பத்துடன் நம்மை நோக்குகின்ற பெண்களை நாம் நோக்கலாகாது. அவர்களிடமிருந்து அகன்று சென்றுவிட வேண்டும். மூலக் கனலை எழுப்ப வேண்டும். உள்ளத்தை இறை அன்பினால் உருக்க வேண்டும். கண் பார்வையை புருவ மத்தியில் பதிக்க வேண்டும். இவற்றைச் செய்பவன் ஒரு சிறந்த சிவயோகி.

#1938. உயிர் ஓம்பா மாயும்

தானே அருளால் சிவயோகன் தங்காது
தானே அக் காமாதி தங்குவோனும் உட்கும்;
தானே அதிகாரம் தங்கின், சடம் கெடும்;
ஊனே அவற்றுள், உயிர் ஓம்பா மாயுமே.


காமவயப்படுபவன் அடையும் தீமைகள் இவை:
திருவருள் தருகின்ற சிவயோகம் அவனிடம் வந்து பொருந்தாது; காமவயப் பட்டவன் மன உறுதி அழிந்து மிகுந்த அச்சம் கொள்வான்; அவன் உடல் கெட்டு விடும், அவன் உயிர் அழிந்து விடும்.

#1939. மங்கையைச் சேருவதற்கான காலம்

மாயாள் வசத்தே சென்று இவர் வேண்டில்
ஓயா இருபக்கத் துள்வளர் பக்கத்துள்
ஏயா எண் நாள் இன்பமேல் பனி ; மூன்றிரண்டு
ஆய அபரத்துள் ஆதிநாள் ஆறு ஆமே.


பெண்ணிடம் சென்று இவர் கூட விரும்பினால் அதற்கு உரிய காலம் இது. மாதவிடாயின் இரு பக்கங்களையும் வளர் பிறை தேய் பிறை என்று வைத்துக் கொண்டால், வளர்பிறையின் முதல் எட்டு நாட்களும், தேய்பிறையின் இறுதி எட்டு நாட்களும் துன்பத்தைத் தருவன. வளர் பிறையின் பின் ஆறு நாட்களும், தேய் பிறையின் முன் ஆறு நாட்களும் பெண் கருத்தரியாமல் புணர்வதற்கு ஏற்றவை ஆகும்.

#1940. யோகி மங்கையைச் சேர உரிய காலம்

ஆறு ஐந்து பன்னொன்றும் அன்றிச் சக மார்க்கம்
வேறு அன்பு வேண்டுவோர் பூவாரின் பின்னம் தோடு
ஏறும் இருபத்தொரு நாளிடைத் தோங்கும்
ஆறின் மிகுந்து ஓங்கும் அக்காலம் செய்யவே.


வளர்பிறையின் முன் ஆறு நாட்களையும் தேய் பிறையின் பின் ஐந்து நாட்கள் ஆகிய பதினோரு நாட்களை விலக்கி விட வேண்டும். மற்ற நாட்களில் பெண்ணைக் கூடலாம். முதன் ஆறு நாட்கள் சத்தற்றதால் நுரை எனப்படும். இறுதி ஐந்து நாட்கள் தளர்ந்து விடுவதால் திரை எனப்படும். நரையும் திரையும் அற்ற மற்ற நாட்கள் மங்கையுடன் இணைவதற்கு ஏற்றவை.

#1941. நான்முகூர்த்தம் நல்ல நேரம்

செய்யும் அளவில், திருநான் முகூர்த்தமே
எய்யும் கலை, காலம், இந்து பருதிகால்
நையும் இடத்து ஓடி, நன் காமநூல் நெறி
செய்க, வலம் இடம் தீர்ந்து விடுகவே.


பெண்ணுடன் பொருந்துவதற்கு ஏற்ற காலம் பொழுது விடிவதற்கு முன் உள்ள நான்கு முகூர்த்தம் ஆகும். (ஒரு முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேரம்) . பின்னிரவில், சந்திர கலை சூரிய கலையில் அடங்கி விடும். அந்த நேரத்தில் காம நூல் கூறியபடிப் பெண்ணைப் பொருந்திப் புணர வேண்டும். விந்துவை விடுவதானால் மூச்சை வலமோ இடமோ இல்லாமல் சுழு முனையில் பொருத்தி விந்துவை வெளிப்படுத்த வேண்டும்.
 
Last edited:
The traffic in the past 24 hours in this thread has been a whooping 1310 !!!!

Hope it is because of the useful info conveyed by Thirumoolar -

applicable to everyday life by everybody in general!! :)
 
#1942 to #1946

#1942. பற்று அற விட வேண்டும்

விடுங்கால் முனைந்து இந்திரியங்களைப் போல்
நடுங்காது இருப்பானும் ஐ ஐந்தும் நண்ணப்
படும்காதல் மாதின்பால் பற்று அற விட்டுக்
கடுங்கால் காரணம் கருத்துறக் கொண்டே.

விந்துவை விடும் போது செய்ய வேண்டியவை இவை:
புணர்கின்ற பெண்ணிடம் ஆசை கொள்ளாமல் விட்டு விட வேண்டும்; மூல வாயுவை அகமுகமாக்கி விட வேண்டும்; அந்தக் காரணங்களை அகமுகமாக்கிவிட வேண்டும். உடல் நடுங்காது சலனம் இன்றி இருக்க வேண்டும். பொறிகளும் புலன்களும் ஒருமைப்பாடு அடையும்படி விந்துவை விட வேண்டும்.

#1943. அந்தக்கரணம் அகமார்க்கம் ஆகவேண்டும்

கொண்ட குணனே நலனே நற்கோமலம்
பண்டை உருவே, பகர் வாய் பவளமே,
மிண்டு தனமே மிடைய விடும் போதில்,
கண்ட கரணம் உள் செல்லக் கண்டே விடே.


மங்கையர் கொண்ட நற்குணங்கள், அவர்கள் கொண்டுள்ள நலன்கள், அவர்களின் இளமை, வடிவழகு, பவழ வாய், சாயாத தனங்கள் இவற்றின் மீது மனத்தைச் செலுத்தாமல் அந்தக்கரணங்களை அகமார்க்கமாகச் செலுத்தி விந்துவை வெளிப்படுத்த வேண்டும்.

#1944. காலத்தை அறிந்து அனைத்தும் அறியலாம்

விட்டபின், கர்ப்ப உற்பத்தி விதியிலே
தொட்டுஉறும் காலங்கள் தோன்றக் கருதிய,
கட்டிய வாணாள், சாநாள், குணம், கீழ்மை, சீர்ப்
பட்ட நெறி இது என்று எண்ணியும் பார்க்கவே.


விந்துவை விட்ட பின்பு, கர்ப்ப உற்பத்தி விதியின்படிப் பெண்ணுடன் புணர்ந்த நேரத்தை ஆராய்ந்து, சிசுவின் வாழ் நாள், ஆயுட்காலம், குணங்கள், மேன்மை, கீழ்மை போன்றவற்றை ஆராய்ந்து அறிந்து கொள்வாய்.

#1945. கர்ப்ப உற்பத்தி நியதி

பார்த்திட்டு வையத்துப் பரப்பு அற்று, உருப் பெற்று
வார்செற்ற கொங்கை மடந்தையை நீக்கியே
சேர்த்து உற்று, இரு திங்கள் சேராது அகலினும்
மூப்புற்றே பின்னாளில் ஆம் எல்லாம் உளவே .


இவற்றை எண்ணிப் பார்த்துவிட்டு உலகத் தொடர்பை விட்டுவிடு. அந்தப் பெண்ணிடம் மேலும் உடலால் தொடர்பு கொள்ளாதே! இரண்டு மாதங்களில் அவள் கருவில் உள்ள சிசு வளரத் தொடங்கும். உரிய காலத்தில் உலகில் பிறவி எடுக்கும். அதன் பின்பு நீ சிந்தித்தவை எல்லாம் கிரமப்படி நடக்கும்.

#1946. மத்தில் இருக்கும் ஓர் மாங்கனி

வித்து இடுவோர்க்கு அன்றி மேல் ஒர்விளைவு இல்லை
வித்து இடுவோர்க்கு அன்றி மிக்கு ஓர் அறிவு இல்லை
வித்தினில் வித்தை விது அற உணர்வரேல்
மத்தில் இருந்தது ஓர் மாங்கனி யாமே.


வித்தை விதைப்பவருக்கு அன்றி மற்றவருக்கு அதன் விளைவினால் பயன் இல்லை. விந்துவின் பயனை அறிந்து கொண்டவர்களுக்கு அன்றிப் பிறருக்கு அதன் பயனாகிய அறிவு கிடைப்பது இல்லை. விந்துவே ஒளியாக மாறுவதை உணர்ந்து கொண்டு, சலனம் இன்றி, அமைதியாக உண்பவருக்குத் தயிரிலிருந்து மத்து வெளிப்படுத்தும் வெண்ணையைப் போல உயிரிலிருந்து சிவம் வெளிப்படும்.
 
#1947 to #1951

#1947. கருவில் பதிவாகும் எதிர்காலம்

கருத்தினில் அக்கரம், ஆயவும், யாவும்;
கருதுளன் ஈசன் கரு உயிரோடும்;
கருத்து அது வித்தாயக் காரண காரியம்
கருத்து உருமாறு இவை கற்பனை தானே.


‘தலையெழுத்து’ எனப்படும் பிரமன் எழுதும் எழுத்து, சிசுவின் ஆயுட்காலம், அதில் நடைபெறப் போகின்ற நிகழ்வுகள் முழுவதையும் நிச்சயிக்கும். இதை ஈசன் சாலப் பரிவோடு சிசு தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போதே பதிவிகின்றான். அப்படி இருக்கையில், சிசு பிறந்து வளரும் போது வாழ்வில் நிகழ்பவற்றுக்குக் காரண காரியங்களை ஆராய்ச்சி செய்வது வீண் கற்பனையே அன்றி உண்மை அல்ல.

#1948. விந்து வற்றினால் சித்தி உண்டாகும்

ஒழியாத விந்து உடல் நிற்க நிற்கும்
அழியாத பிராணன் அதி பலம் சத்தி ;
ஒழியாத புத்தி, தவம், செபம், மோனம்
அழியாத சித்தி உண்டாம் விந்து வற்றிலே.


விந்து கழியாமல் உடலிலேயே தங்கி இருந்தால் அப்போது ஒருவனின் பிராணன் அழியாது நிற்கும்; அதிக பலமும் சக்தியும் உண்டாகும்; எல்லையற்ற அறிவு உண்டாகும்; தவம், செபம், மௌனம், அட்ட சித்திகள் இவைத் தோன்றி மேம்படும்.
விளக்கம்
விதை முளையாக மாறும். அது போலவே தூல விந்து ஒளியாக மாறும். ஒரு சாதகன் பன்னிரண்டு ஆண்டுகள் தீவிரப் பயிற்சி செய்தால் அவன் வீரியம் உலர்ந்து, மேலே ஒளி மண்டலம் தோன்றும்.


#1949. அமுதத்தைச் சென்று உண்பார்

வற்ற அனலைக் கொளுவி , மறித்துஏற்றித்
துற்ற சுழியனல் சொருகிச் சுடர் உற்று
முற்றும் மதியத்து அமுதை முறை முறை
சென்று உண்பவரே சிவயோகியாரே.


உண்மையான சிவயோகி செய்வது இவை:
தூல விந்து வற்றிப் போகும் வண்ணம் மூலாதாரத்தில் உள்ள கனலைப் பெருக்குவர்; அது உடலில் கீழ் நோக்கிச் செல்லாதவாறு தடுத்து, அதன் பாதையை மாற்றி, நடுநாடியின் மூலம் மேலே செலுத்துவர்; அங்கு ஞானத் தீயில் பொருந்தி ஒளி பெறுவர். சந்திர மண்டலத்தை அடைந்து அங்கு ஊறும் அமுதை பல முறை பருகுவர்.

#1950. விந்து அழியாத அண்ணல்

யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்
போகியும் ஞான புரந்தரன் ஆவோனும்
மோகம் உறினும் முறை அமிர்து உண்போனும்
ஆகிய விந்து அழியாத அண்ணலே.

யோகியர், ஞானியர், உத்தம சித்தம் படைத்தவர், ஞான புரந்தரன் ஆகிவிட்ட போகி, மோக வயப்பட்ட போதும் முறை அறிந்து அமிர்தம் அருந்த வல்லவர் என்போர் விந்துவை வென்று விட்ட வீரர்கள் ஆவர்.

#1951. அமிர்தமாகி அறிவாகும்

அண்ணல் உடல் ஆகி அவ்வனல் விந்துவும்
மண் இடை மாய்க்கும் பிராணனாம் விந்துவும்
கண்ணும் கனலிடைக் கட்டிக் கலந்து எரித்து
உண்ணில் அமிர்தாகி யோகிக்கு அறிவாமே.


அண்டத்தின் விந்து அண்ணலின் உடல் ஆகும். பிண்டத்தின் விந்து மனிதனை மண்ணிடை மாய்க்கும் வீரியம் ஆகும். இந்த இரண்டு விந்துக்களையும் கலந்து மூலக் கனலில் எரித்து அதை உண்டால் அதுவே யோகிக்கு அமுதத்தையும் அறிவையும் ஒளியையும் தரும்.
 
#1952 to #1956

#1952. செறிவாய் இருந்து சிவனைச் சேருவீர் !

அறியாது அழிகின்றது ஆதலால் நாளும்
பொறிவாய் அழிந்து புலம்புகின் றார்கள்
அறிவாய் நனவில் அதீதம் புரியச்
செறிவாய் இருந்து சேரவே மாயுமே.

‘விந்துவின் கழிவு தரும் அழிவு’ என்பதை அறியாத மாந்தர்கள் நாள்தோறும் அதைக் கழித்து வீணாக்குகின்றார்கள். அவர்கள் பொறிகளின் வசப்பட்டு, ஞானம் அழிந்து, உடல் தளர்ந்து வருத்தம் அடைகின்றார்கள். நனவிலேயே ஒரு யோகி ஞான வடிவாக வேண்டும். துரியாதீதம் என்ற நிலையில் அவன் சிவத்துடன் செறிந்து பொருந்தி இருக்க வேண்டும். அப்போது அவன் வீரியம் மேல் முகமாகி ஒளி மயமாகி விடும். தூல விந்துவோ மாய்ந்து விடும்.

#1953. காமம் அழிந்தால் சாதல் இல்லை

மாதரை மாய வருங் கூற்றம் என்று உன்னக்
காதலதாகிய காம கழிந்திடும்;
சாதலும் இல்லை சதகோடி ஆண்டினும்
சோதியின் உள்ளே துரிசு அறும் காலமே.


பெண்களைப் பார்க்கும்போது அவர்களைக் கொல்ல வருகின்ற யமன் என்று எண்ணிட வேண்டும். அப்போது காமமும் காதலும் தோன்றாமல் மறைந்து போகும். அதனால் காமக் கழிவு இராது. அதனால் நூறு கோடி ஆண்டுகள் சிவ ஒளியில் கலந்து நின்று ஆணவ மலம் என்னும் குற்றம் அழியலாம்.

#1954. விந்துவை வென்றவன் காலத்தை வென்றவன்

காலம் கடந்தவன் காண்விந்து செற்றவன்;
காலம் கடந்துஅழிந் தான்விந்து செற்றவன்;
காலங்களில் விந்து செற்று உற்ற காரிகை
காலின் கண் வந்த கலப்பு அறியாரே.


விந்துவை வென்றவன் காலத்தை வென்று விட்டவன். ஆனால் விந்துவை அழித்தவன் காலத்தால் வெல்லப்பட்டு அழிந்தவன். விந்துவை வென்றவன் அறியும் குண்டலினி சக்தி மூலவாயுவுடன் பொருந்தி மேலே எழுந்து செல்லும் போது உண்டாகும் இன்பத்தை விந்துவை வீணாக்கியவன் சற்றும் அறியமாட்டான்.

#1955. கூடுவதற்குக் குடல் தூய்மை வேண்டும்!

கலக்குநாள் முன்னாள் தன்னிடைக் காதல்
நலத்தக வேண்டின் நாரி யுதரக்
கலத்தின் மலத்தைத்தண் சீதத்தைப் பித்தத்தை
விலக்கு வன செய்து மேலணை வீரே.


மங்கையுடன் கலக்கும் நாளுக்கு முதல் நாள், அவள் வயிற்றைத் தூய்மை ஆனதாக ஆக்க வேண்டும். வாதம், பித்தம், சிலேத்துமம், மலம் இவை அனைத்தையும் விலக்க வேண்டும். அப்போது தான் கலவி இன்பம், மகப் பேறு என்ற காதலின் இரண்டு பயன்களையும் ஒருவன் பெற முடியும்.

#1956. விந்து நாதத்தில் பொருந்த வேண்டும்

மேலா நிலத்தெழு விந்துவும் நாதமும்
கோலால் நடத்திக் குறிவழி யேசென்று
பாலாம் அமிர்துண்டு பற்றறப் பற்றினால்
மாலா னதுமாள மாளுமவ் விந்துவே.


ஆஞ்ஞையில் உள்ளன விந்துவும் நாதமும். பிராணனை நடுநாடியின் வழியே மேல் நோக்கிச் செலுத்த வேண்டும். பிரமரந்திரத்தின் வழியே மேலே செல்ல வேண்டும். பால் போன்ற மதி மண்டலத்தில் ஊறும் அமுதினைப் பருக வேண்டும். உலகப் பற்றுக்களை விட்டு விட்டால் கீழ் முகமாகிய மயக்கம் அழிந்து படும். வீரியம் வற்றி விடும்.
 
#1957 to #1961

#1957. விந்து சயம் ஆகும்

விந்து விளைவும் விளைவின் பயன் முற்றும்
அந்த வழிவும் அடக்கத்தி லாக்கமும்
நந்திய நாதமும் நாதத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.


தூல விந்து உருவாகும் முறை, அது முதிர்வதால் ஏற்படும் நிலை, அது கழிவதால் ஏற்படும் அழிவு, அதை அடக்குவதால் ஏற்படும் பயன் இவற்றை அறியாதவர்கள் வாழ்வில் அழிவை அடைவார்கள். இவற்றை அறிந்தவர்கள் விந்துவை அடக்கி ஆண்டு நாதத்தைப் பெருக்குவர். அதனால் விளையும் பேதத்தையும் உணர்வர். இத்தகையோருக்கு விந்து சயம் உண்டாகும்.

#1958. தண்ணமுதாகும்

விந்துவென் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியி னாலே நயந்தெரித்து
அந்தமில் பானு அதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.

விந்து என்பது உடலின் விதை. அதை மூலாதாரத்தில் கொழுந்து விட்டு எரியும் அக்கினியில் எரித்துவிட வேண்டும். அதில் விளையும் சக்தியை உடலில் மேல் நோக்கிச் செலுத்த வேண்டும். கதிரவ மண்டலத்தை அடைந்து பின்பு அதையும் தாண்டி மதி மண்டலத்தை அடைவதே அங்கு குளிர்ந்த அமுதத்தை ஊறச் செய்யும்.

#1959. அமுதப் பலாவனம் யோகிக்கு உறும்

அமுதச்சசிவிந்து ஆம்விந்து மாள
அமுதப் புனல் ஓடி, அங்கியின் மாள
அமுதச் சிவயோகம் ஆதலால் சித்தி
அமுதப் பலாவனம் ஆங்கு உறும் யோகிக்கே.


தூல விந்து யோக சித்தியால் மாண்டு சந்திர மண்டலத்தில் உள்ள அமுதச் சசிபிந்துவாக மாறிவிடும். மூலக் கனலில் விந்து எரிந்து அழியும் போது, அமுதப் புனல் பெருகி யோகியின் உடல் முழுவதும் பரவும். இங்ஙனம் அமுதப் புனல் ஆடுவதே சிவயோகம் ஆகும். இதனால் பல சித்திகள் யோகிக்குச் சித்திக்கும்.

#1960. விந்து ஒழியாமை சிவயோகம்

யோகம் அவ்விந்து ஒழியாவகை புணர்ந்து,
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்கு உறாப்
போகம் சிவபோகம்; போகி நற்போகமாம்
மோகம் கெட முயங்கார் மூடர் மாதர்க்கே.

விந்து கழியாதபடிப் பெண்ணைப் புணருவதே யோக நெறி. ஆண் பெண் இருவர் உடல்கள் கலந்தாலும் அவன் விந்து கழிந்து அந்தப் பெண்ணிடம் சென்று சேராது. இந்த போகமே சிவபோகம் ஆகும். இதுவே யோகி தனக்கு பெண்ணிடம் உள்ள மோகத்தை வெல்லும் நல்ல வழியாகும். இதனை அறிந்து கொண்டு பெண்ணிடம் கொண்ட மோகத்தை வெல்லாதவர் மூடர்.

#1961. விந்து விடார் யோகம் கலந்தவர்

மாத ரிடத்தே செலுத்தினும் அவ்விந்து
காத லினால் விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிராசை கைக்கொண்டே வாடுவர்
காதலர் போன்றங்கன் காதலாம் சாற்றிலே.


மாதரிடம் கலந்தாலும் யோகநெறியில் உள்ளவர், காதலினால் விந்துவை வெளிப்படுத்த மாட்டார். ஆனால் அந்த மாதரோ எனில் யோகியின் மீது கொண்ட காதலும், ஆசையும் நிறைவடையாமல் மிகுந்த மன வருத்தம் அடைவர்.
 
#1962 to #1965

#1962. அமுதை அருந்த விந்து சயம்

சாற்றிய விந்து சயம் ஆகும் சக்தியால்
ஏற்றிய மூலத்தழலை எழ மூட்டி
நால்திசை ஓடா நடுநாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம் அருந்த விந்து ஆகுமே.

முன்பு கூறியபடி விந்து சயம் உண்டாகும். மூலக் கனலைச் சக்தியால் எழுப்பி அதை மேல் நோக்கிச் செலுத்த வேண்டும். அது நான்கு திசைகளிலும் சிதறி ஓடாத வண்ணம் நடுநாடியின் வழியே அதைச் செலுத்த வேண்டும். மேலே சென்று நாதத்துடன் அதைப் பொருந்தச் செய்து அங்கு விளையும் அமுதை உண்டால் உடலில் ஒளி மண்டலம் தோன்றும்.

#1963. சிவன் அகம் ஆக விந்து மாளும்

விந்துவும் நாதமும் மேவ, கனல் மூல,
வந்த அனல் மயிர்கால் தொறும் மன்னிடச்
சிந்தனை மாறாச் சிவம் அகம் ஆகவே
விந்துவும் மாளும் மெய்க்காயத்தில் வித்திலே.


விந்துவும், நாதமும் தலையின் மீது பொருந்தும் போது; மேலே எழும்பி வந்த மூலத் தீயின் வெப்பம் ஒவ்வொரு மயிர்க்காலிலும் நிறைந்திருக்க, சிந்தனைகளை முற்றிலும் ஒழித்து விட்டுச் சிவோகம் ( நானே சிவம்) என்ற பாவனையில் இருந்தால்; மெய்க்காயத்தின் வித்தினில் தூல விந்து மறைந்து விடும்.

#1964. வித்து உண்ணாமல் வித்து வித்தான்

வித்துக்குற்று உண்பான் விளைவு அறியாதவன்;
வித்துக்குற்று உண்ணாமல், வித்துச் சுட்டு உண்பவன்
வித்துக்குற்று உண்பானில் வேறு அலன் ஈற்றவன்
வித்துக்குற்று உண்ணாமல் வித்துவித்தான் அன்றே?

விதையைக் குத்தி அதை உணவாக்கி உண்பவன், விதையினால் வரக் கூடிய விளைச்சலைப் பற்றி அறியாதவன். விதைக் குத்தி உண்ணாமல் விதையை வறுத்து உண்பவனும் முன்னம் கூறியவனைப் போலவே விதையினால் வரக் கூடிய விளைச்சலைப் பற்றி அறியாதவன். மூன்றாமவன் குத்தியோ அல்லது வறுத்தோ விதையை உண்ணாமல் அதை விதைத்து விதையின் பயனைப் பெருக்கிக் கொள்வான்.
வித்துக் குற்றி உண்பவன் = அறியாமையினால் விந்துவை வீணாக்குபவன்
வித்துச் சுட்டு உண்பவன் = யோகத்தின் மூலம் விந்துவை வற்றச் செய்தவன்
ஈற்றவன் = விந்துவை வீணாக்காமலும், அதை வற்றச் செய்யாமலும், உடலில் ஒளி மண்டலத்தை அமைத்துக் கொள்பவன்.


#1965. விந்து மாயும் காயத்திலே

அன்னத்தில் விந்து அடங்கும்படிக் கண்டு,
மன்ன, பிராணனாம் விந்து மறித்திட்டு
மின் ஒத்த விந்து நாதாந்தத்து விட்டிட
வன்னத் திருவிந்து மாயும் காயத்திலே.


பிராண மயமான தூல விந்துவை வழி மறித்துக் கீழே செல்லாது உடலில் மேலே ஏற்ற வேண்டும். மின்னொளி போன்ற நதாந்தத்தில் அதைக் கொண்டு சென்று விட்டு விட்டால் அப்போது தூலவிந்து அன்னம் என்னும் ஒளிமயமான அண்டத்தின் விந்துவில் ஒன்றாகக் கலந்து மறைந்து விடும்.
 
#1967 to #1970

#1967. விந்து சயம் உரைப்பது உபதேசம்

நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்று மகாரம் ஒரு மூன்றோடு ஒன்று அவை
சென்று , பராசத்தி விந்து சயந்தன்னை
ஒன்ற உரைக்க உபதேசம் தானே.


பஞ்சாக்கரத்தில் உள்ள முதல் எழுத்தான ‘சி’காரத்தை இடையறாது நினைக்கும் செயலை உங்கள் உயிர்வளியுடன் மௌனமாக இணைத்துவிட வேண்டும். பிரணவத்தில் உள்ள மூன்று எழுத்துக்களில் திளைத்துப் பராசக்தியை அடைய வேண்டும். இதுவே விந்து சயம். இதை உரைப்பதுவே உபதேசம்.

#1968. சிவகதித் தன்மை ஆம்

தானே உபதேசம், தானல்லாது ஒன்று இல்லை
வானே உயர்விந்து வந்த பதினான்கு
மான் நேர் அடங்க, அதன் பின்பு புத்தியும்,
தானே சிவகதித் தன்மையும் ஆமே.


உண்மையான உபதேசம் என்ன வென்று அறிந்து கொள்வீர். வானாக உயர்ந்த விந்துவாகிய அவனே இங்கு அனைத்திலும் கலந்துள்ளான். அவனன்றி இங்கு வேறு எதுவும் இல்லை. சீவனின் கர்ம இந்திரியங்கள் ஐந்து, ஞான இந்திரியங்கள் ஐந்து, அந்தக்கரணங்கள் நான்கு என்ற பதினான்கும் அடங்கினால், சீவனின் ஆன்ம அறிவும் சிவனின் அகன்ற அறிவும் ஒன்றாகக் கலந்து விடும். அதுவே சீவன் சிவகதி அடைவது ஆகும்.

#1969. விந்து அடங்க விளையும் சிவோகம்

விந்துவும் நாதமும் விளைய விளைந்தது
வந்த இப் பல்லுயிர், மன் உயிர்க்கு எலாம்
அந்தமும் ஆதியுள் ஆம் மந்திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே.


நுண்ணிய விந்துவும், நாதமும் விளைவதால் இந்த உலகில் உள்ள உயிர்கள் எல்லாம் உடலும் வடிவமும் பெற்றன. இந்த விந்து, நாதங்களில் உயிர்களின் தோற்றம் அடங்கியிருப்பதைப் போலவே உயிர்களின் அந்தமும் அடங்கி உள்ளது. மந்திரங்களின் ஆற்றலும் இவற்றில் அடங்கியுள்ளது. அந்த விந்து அடங்கும் போது ‘அகண்ட சிவம்’ மாறிச் ‘சிவம் அகம்’ என்று ஆகிவிடும்.

#1970. அத்திப் பழம் வரும்

வறுக்கின்ற வாறும், மனத்து உலா வெற்றி
நிறுக்கின்ற வாறும் அன்நீள் வரை ஒட்டிப்
பொறிக்கின்ற வாறும் அப்பொல்லா வினையை
அறுக்கின்ற நாள் வரும் அத்திப் பழமே.

மறுபடியும் தோன்றாதபடி விந்துவை வறுக்கும் முறையை அறிந்து கொள்ள வேண்டும். இங்கும் அங்கும் உலாவிகின்ற மனத்தைத் நிறுத்தி வெற்றி கொள்ளும் முறையை அறிந்து கொள்ள வேண்டும். அதை உயரக் கொண்டு சென்று சகசிர தளத்தில் பொறிக்க அறிந்து கொள்ள வேண்டும். உள்ளம் நன்கு பக்குவம் அடைந்த பின்பு கொடிய வினைகளையும் வினைப் பயன்களையும் போக்கும் நாள் வரும். அப்போது பிறவி பிணி நீங்கும். சிவாக்கினி நன்கு பழுத்த ஒரு கனியாகும்.
 
#1971 to #1974

#1971. அந்தர வானத்து அமுதம் வந்தூறும்

விந்துவும் நாதமும் மேவி யுடன் கூடிச்
சந்திர னோடேதலைப் படுமாயிடில்
அந்தர வானத் தமுதம் வந்தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாகுமே.

விந்துவும் நாதமும் மேவி, உடன் கூடி, உயரச் சென்று சந்திர மண்டலத்தில் அமையும் போது அந்தர வானத்தில் அமுதம் ஊற்றெடுக்கும். அங்கு உதிக்கும் பிரணவ மந்திரமே அங்குள்ள சிவாக்கினியில் இடுகின்ற ஆகுதி ஆகும்.

#1972. நாதனை நாடினால் நாதம் அமையும்

மனத்தொடு சத்து , மனம் செவி என்ன
இனைத்து எழுவார்கள் இசைந்தன நாடி;
மனதில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் அக்காமத்தை நாடிலே.


மனத்தின் சத்து பாகம் கேள்விப் புலன் உணரும் நாத மயமானது. அது நாதமயமாக விந்துவுடன் சென்று பொருந்தும் போது, மனத்துடன் செவி போன்ற மற்ற புலன்களும் மேலே எழும்பிச் சென்று அங்கு ஈசனை நாடும். மனதின் அசத்து பாகத்தில் தோன்றுகின்ற நுன்மையான, பரு , வைகரி வாக்குகள் கீழான காமத்தை நோக்குமானால், அப்போது அது தூல வீரியமாகத் தோன்றும்.

#1973. ஒத்து அறியுமிடம் அத்தன் இருப்பிடம்

சத்தமும் சத்தமனமும் மனக்கருத்து
ஒத்துஅறி கின்ற இடமும் அறிகிலர் ;
மெய்த்து அறிகின்ற இடம் அறிவாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே.


நாதம், அதை உணரவல்ல மனம், அந்த மனத்தின் கருத்து என்று மூன்றையும் ஒருமித்துச் சிவன் அமைந்துள்ள இடத்தை எவரும் அறிவதில்லை. ஞானிகள், உள்ளத்தை உள்ளபடி அறிபவர்கள், சிவன் அமைந்துள்ள இடம் அதுவே என்ற அறிந்து கொள்வார்கள்.

#1974. பருவுடலில் பஞ்ச பூதங்கள்

உரம் அடி மேதினி; உந்தியில் அப்பாம்
விரவிய தன் முலை மேவிய கீழ் அங்கி
கருமுலை மீமிசை, கைக்கீழில் காலாம்
விரவிய கந்தர மேல்வெளி ஆமே.


வலிமையான பாதம் முதல் சுவாதிட்டானம் வரை நிலம் ஆகும். சுவாதிட்டானத்திலிருந்து நாபிப் பிரதேசம் வரை நீர் ஆகும். நாபியிலிருந்து மார்பு வரை தீயாகும். மார்பு முதல் தோள் வரை காற்றாகும். கழுத்தும் அதற்கு மேலும் வானம் ஆகும். பருவுடலில் பஞ்ச பூதங்கள் இங்ஙனம் அமைந்துள்ளன.
 
22. ஆதித்த நிலை

22. ஆதித்த நிலை – அண்டாதித்தன்
ஆதித்தன் = கதிரவன்
அண்டம் + ஆதித்தன் = அண்டாதித்தன்
அண்டத்தில் கதிரவன் விளங்கும் நிலையைக் கூறுவது

#1975 to #1979

#1975. தாம் சுடராகி ஒளிர்ந்திட வணங்குவர்!

செஞ்சுடரோன் முதலாகிய தேவர்கள்
மஞ்சு உடை மேரு வலம்வரு காரணம்
எம்சுடர், ஈசன், இறைவன் இணையடி
தம்சுட ராக வணங்கும் தவமே.

சூரியன் முதலான ஒளிரும் தேவர்கள், வெண்மேகம் சூழ்ந்த மேருமலையை வலம் வருவதன் காரணம் தெரியமா? சுடர்விட்டு ஒளிரும் ஈசனின் ஒளியைத் தாமும் பெறவேண்டும் என்ற ஆவலே அதற்குக் காரணம். மேரு மலையை வலம் வந்து வணங்குவதே அவர்கள் செய்கின்ற மா தவம்.

#1976. பல்லுயிர்க்கு பகலவன் ஆதி

பகலவன், மாலவன், பல்லுயிர்க் கெல்லாம்
புகல்அவனாய் நின்ற புண்ணிய நாதன்
இகலற ஏழு உலகும் உற ஓங்கும்
பகலவன், பல்லுயிர்க்கு ஆதியும் ஆமே.

கதிரவனே உயிர்களைக் காக்கும் கடவுளாகிய திருமால் ஆவான். கதிரவனே உயிர்களின் புகலிடமாகிய புண்ணிய நாதன் சிவபெருமான் ஆவான். ஏழு உலகங்களும் தழைத்து ஓங்கி வாழ உதவுகின்ற பகலவனே உயிர்களுக்கு முதல்வன் ஆவான்.

#1977. அன்பு பழுக்கின்றவாறே

ஆதித்தன் அன்பினோடு ஆயிர நாமமும்
சோதியின் உள்ளே சுடரொளியாய் நிற்கும்;
வேதியர் வேண்டினும் விண்ணவர் சொல்லினும்
ஆதியில் அன்பு பழுக்கின்ற வாறே.


உள்ளன்புடன் கதிரவனின் ஆயிரம் பெயர்களையும் சொல்லி வணங்கினால் அவன் சீவனின் அண்டகோசத்தில் ஒரு பேரொளியாக நிற்பான். வேதியர்கள் கதிரவனைத் தொழுவதும், தேவர்கள் கதிரவனைத் துதிப்பதும் ஆதிப்பிரானின் அன்பைப் பெறுவதற்காகவே.

#1978. தானே தண்சுடர் ஆகும்

தானே யுலகுக்குத் தத்துவ னாய்நிற்கும்
தானே யுலகுக்குத் தையலு மாய்நிற்கும்
தானே யுலகுக்குச் சம்புவு மாய்நிற்கும்
தானே உலகுக்குத் தண்சுடர் ஆமே.


உ லகின் தத்துவத்தின் தோற்றத்துக்குக் காரணம் ஆண்ட கோசத்தில் விளங்குகின்ற கதிரவனே ஆவான். அந்தக் கதிரவனே ஆன்மாவின் சக்தியும் ஆவான். அவனே ஆன்மாவில் உறையும் சிவனும் ஆவான். அவனே குளிர்ந்த நிலவொளி வீசும் சந்திரனும் ஆவான்.

#1979. அகத்தில் ஆதித்தனின் நிலை

வலையம் முக்கோணம், வட்டம் அறுகோணம்,
துலைஇரு வட்டம் துய்ய விதம் எட்டில்
அலையுற்ற மேல் வட்டத்தில் ஈரெட்டு இதழாம்
மலைவு அற்று உதித்தனன் ஆதித்தனாமே.


வட்டத்தினுள் முக்கோண வடிவம் கொண்ட மூலாதாரச் சக்கரம், வட்டத்தினுள் அறுகோண வடிவம் கொண்ட சுவாதிட்டானச் சக்கரம், தூய அகரக் கலை விளங்கும் மணிபூரகச் சக்கரம் இவற்றுக்கு மேலே அமைந்துள்ள, பதினாறு இதழ்களை கொண்ட விசுத்திச் சக்கரத்தில் உதிப்பான் கதிரவன்.
 
#1980 to #1984

#1980. மூலாதாரத்தில் முக்கோணத்தில்

ஆதித்தன் உள்ளில் ஆன முக்கோணத்தில்
சோதித்து இலங்கும் நற்சூரியன் நாலாம்
கேதமுறுங் கேணி சூரியன் எட்டில்
சோதிதனில் நீட்டில் சோடசம் தானே.


உழலின் உள்ளே உள்ளான் கதிரவன். மூலாதாரத்தின் முக்கோணத்தில் கதிரவன் நான்கு கலைகளுடன் விளங்குவான். அவன் பதினாறு இதழ்களை உடைய விசுத்தியை அடையும் போது பதினாறு கலைகளை உடைய திங்கள் மண்டலம் அமையும்.

#1981. வேதப் பொருள் விளங்கும்

ஆதித்த னோடே அவனி இருண்டது
பேதித்த நாலும் பிதற்றிக் கழிந்தது
சோதிக்குள் நின்று துடியிடை செய்கின்ற
வேதப் பொருளை விளங்குகிலீரே.

கதிரவன் மண்டலத்தை அடைந்தவுடன் உலக அறிவு கெட்டு விடும். உலக அறிவைப் பற்றிய சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்னும் நான்கு வாக்குகளும் பிதற்றல் ஒழியும். சோதியில் இருந்து கொண்டு வேதப் பொருளை உணர்த்துகின்ற சக்தி வெளிப்படுத்துகின்றதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை!

#1982. நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பான்

பாருக்கும் கீழே பகலோன் வரும்வழி;
யாருக்கும் காண ஒண்ணாத அரும் பொருள்
நீருக்கும் தீக்கும் நடுவே உதிப்பவன்
ஆருக்கும் எட்டாத ஆதித்தன் தானே
.

நிலத்துக்கு உரிய சுவாதிட்டானத்துக்குக் கீழே உள்ளது மூலாதாரம். இங்கு கதிரவன் வரும் வழியை யோகியர் தவிர வேறு யாரும் அறியார். எவராலும் காண இயலாத கதிரவன் உடலில் உதிக்கும் இடம் எது தெரியுமா? நீருக்கு உரிய மணி பூரகத்துக்கும் நெருப்புக்கு உரிய அனாகதத்துக்கும் நடுவே யாருக்கும் எட்டாத ஆதித்தன் உதிப்பான்.

#1983. எண்ணும் கிழமைக்கு இசைந்து நிற்பான்

மண்ணை இடந்து அதின் கீழொடும் ஆதித்தன்
விண்ணை இடந்து வெளிசெய்து நின்றிடும்
கண்ணை இடந்து களிதந்த ஆனந்தம்
எண்ணும் கிழமைக்கு இசைந்து நின்றானே
.

கதிரவன், மூலாதாரத்திலிருந்து நிலத்துக்கு உரிய சுவாதிட்டானத்தை இடர்ந்து கொண்டு மேல் நோக்கிச் சென்று, வானத்துக்கு உரிய ஆஞ்ஞையைப் பிளந்து கொண்டு, உடலுக்கு வெளியே பேரொளியாக நிற்பான். கண்ணை இடர்ந்து களி தரும் ஆனந்தத்தைத் தருகின்ற கதிரவன் நாம் எண்ணும் எண்ணங்ங்களுக்கு இசைந்து நிற்பான்.

#1984. ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந்தார்

பாரை இடந்து பகலோன் வரும் வழி
யாரும் அறியார் , அருங்கடை நூலவர்
தீரன் இருந்த திருமலை சூழென்பர்
ஊரை உணர்ந்தார் உணர்ந்திருந்தாரே.


நிலத்தைப் பிளந்து கொண்டு கதிரவன் வரும் வழியை, உலகியல் அறிவைத் தரும் நூல்களை மட்டும் கற்றவர்களால் அறிய முடியாது. அவர்கள் மேரு மலையைக் கதிரவன் வலம் வருகின்றான் என்று கூறுவர். மேருமலையே சிரசு என்றும், சிவன் இருக்குமிடம் அதுவே என்றும், அறிந்து கொண்டவர் மட்டுமே உடலில் கதிரவன் வலம் வரும் முறையை அறிவர்.
 
Back
Top