#743. யோகப்பயிற்சி தொடங்க உகந்த நாள்
திருந்து தினம்அத் தினத்தி னொடு நின்று
இருந்துஅறி நாள்ஒன்று; இரண்டு எட்டு மூன்று
பொருந்திய நாளோடு புக்கு அறிந்து ஓங்கி
வருந்துதல் இன்றி மனைபுக லாமே.
பிறந்த நாள், அதனுடன் பொருந்தி நின்ற பிறவி விண்மீன் கூடிய நாள் ஒன்று, பிறவி விண்மீனுடன் பதினாறு நாட்கள் கூடியப் பதினேழாவது நாளும், ஆறு கூடிய ஏழாவது நாளும் தவிரப் பொருந்திய நாளை ஆராய்ந்து அறிந்து யோகப் பயிற்சியைத் தொடங்க வேண்டும்.
#744. சிவம், சக்தி, நாதம், விந்து
மனைபுகு வீரும் அகத்திடை நாடி
எனஇருபத்தஞ்சும் ஈராறு அதனால்
தனை அறிந்து, ஏறட்டு, தற்குறி ஆறு
வினைஅறி ஆறும் விளங்கிய நாலே.
ஞான யோகத்தை விரும்பி அதைச் செய்கின்றவர்களே! இருபத்து ஐந்து தத்துவங்களையும் பன்னிரண்டு ராசிகளில் செல்கின்ற கதிரவனாகிய அறிவினால் அறிந்து கொள்ள வேண்டும். தன்னை அறிந்து நன்கு பக்குவப்பட வேண்டும். சிவபெருமான் விளங்குகின்ற ஆறு ஆதாரங்கள் செயல்படும் வழிகளை அறிந்து கொள்ள வேண்டும். அவற்றைக் கடந்து செல்லும்போது சிவம், சக்தி, நாதம் விந்து என்ற நான்கும் நன்கு விளங்கும்.
#745. ஆன்மாவை தரிசிக்க வேண்டும்
நாலும் கடந்தது நால்வரும் நால் அஞ்சு
பாலம் கடந்தது பத்துப்பதின் அஞ்சு
கோலம் கடந்த குணத்துஆண்டு மூவிரண்டு
ஆலம் கடந்தது ஒன்று ஆர் அறிவாரே?
நான்முகன் திருமால் உருத்திரன், மகேசுவரன் என்பவை உருவங்கள் நான்கு ஆகும். விந்து, நாதம், சக்தி, சிவம் என்பவை அருவங்கள் நான்கு ஆகும். இவற்றுடன் அருவுருவம் சேரும் போது ஒன்பது பேதங்கள் உருவாகும். ஒன்பது வடிவங்களாக விளங்குகின்றதும், நெற்றியைக் கடந்து இருபத்து ஐந்து தத்துவங்களால் விளங்குவதும், ஆறு ஆதாரங்களையும் தாண்டுகின்றதும் ஆகிய ஆன்மா என்ற கதிரவனைக் காணவேண்டும்.