Quotable Quotes Part II

#211. அறிவை அறிந்ததும்

கற்குழி தூரக் கனகமுந் தேடுவர்
அக்குழி தூர்க்கை யாவர்க்கு மரியது
அக்குழி தூர்க்கும் அறிவை யறிந்தபின்
அக்குழி தூறும் அழுக்கற்ற வாறே.

பொன்னையும் பொருளையும் தேடுவர் உலகத்தோர்
வயிற்றுக் குழியை உணவால் நிரப்புவதற்காக.
குறையாத வண்ணம் அந்தக் குழியை நிரப்ப இயலாது.
அந்த குழியை நிரப்பும் ஞானம் அடைந்து விட்டால் அப்போது
பிறவிகளுக்குக் காரணமாகிய வினைகள் நீங்கி விடும்.
நிரப்ப முடியாத வயிற்றுக் குழியும் நிரம்பி விடும்.
 
# 212. பசிப்பிணி

தொடர்ந்து எழும் சுற்றம் வினையினும் தீய,
கடந்தது ஓர்ஆவி கழிவதன் முன்னே
உடந்து ஒரு காலத்து உணர்விளக்கு ஏற்றித்
தொடர்ந்து நின்று அவ்வழி தூர்க்கலும் ஆமே.

வினைகளை விடவும் மிகக் கொடியவை நம்மைப்
பிறவிகள் தோறும் தொடர்ந்து வருகின்ற உறவுகளே.
நம் வாழ் நாள் கழிந்து போவதற்கும் முன்பே,
உயிர் உடலினின்றும் நீங்குவதற்கு முன்பே,
உலகப் பொருட்களில் இருந்து மாறுபட்டு நிற்கும்
உண்மைப் பொருளை நாம் நாடவேண்டும்.
அப்போது பிறவிப் பிணி, பசிப் பிணி என்ற
இரண்டு பிணிகளும் ஒருசேர அகன்று விடும்.
 
#213. வாழ்வை வெறுத்தன்

அறுத்தன ஆயினும் ஆனினம் மேவி
அறுத்தனர் ஐவரும்; எண்ணிலி துன்பம்

ஒறுத்தன வல்வினை ஒன்று அல்ல; வாழ்வை
வெறுத்தனன் ஈசனை வேண்டி நின்றானே

உயிர்க் கூட்டம் வினைகளை ஈட்டுகின்றன
வன்னம், பதம், மந்திரம், தத்துவம், கலை, புவனம்
என்னும் ஆறு அத்துவாக்களின் வழியாக.
ஐம் பொறிகள் ஐம் புலன்களை நாடிச் செல்கின்றன.
உயிருக்கு எண்ணற்ற துன்பங்களைத் தருகின்றன.
கொடிய வினைகள் வாழ்வில் வேதனைகள் தருகின்றன.
வாழ்வையே வெறுத்த வறியவன் ஈசனை நாடி நிற்கின்றான்.
 
11. அக்னி காரியம் (வேள்வித் தீ ஓம்புதல்)

# 214. வேள்விப் பயன்கள்

வசை இல் விழுப்பொருள் வானும் நிலனும்
திசையும் திசைபெறு தேவர் குழாமும்
விசையம் பெருகிய வேதம் முதலாம்
அசைவு இலா அந்தனன்ர் ஆகுதி வேட்கிலே.

வேதங்கள் கூறுகின்ற அற வழியில் நின்று,
தளர்ச்சி இல்லாத அந்தணர்கள் செய்யும் வேள்விகளால்,
வானத்தில் வாழ்பவர்கள், நிலத்தில் வாழ்பவர்கள்,
எட்டு திசைகளில் வாழ்பவர்கள், திசைகளின் தேவதைகள்,
என்னும் அனைவருமே மிகுந்த நன்மை அடைவார்கள்.



 
# 215. மெய் நெறியை உணர்வர்

ஆகுதி கேட்கும் அருமறை அந்தணர்
போகதி நாடிப் புறம் கொடுத்து உண்ணுவர்
தாம்விதி வேண்டித் தலைப்படும் மெய்நெறி
தாம் அறிவாலே தலைப்பட்டவாறே.


சுவர்க்கத்தை விரும்புகின்ற அந்தணர்கள் அதற்குரிய
வேள்விகளைச் செய்து தானங்கள் தந்தபின் தாம் உண்பர்.
( இவர்கள் சுவர்க்க வாழ்வுக்குப் பின் மீண்டும் பிறவி எடுப்பார்.)
தம் விதியைத் தாமே நிர்ணயம் செய்து கொள்ளும் திறன் கொண்டவர்,
உண்மை நெறியை உணர்ந்தவர்கள் வேள்விகள் புரியார்.
இவர்கள் தங்கள் சிரசின் மேல் அறிவைச் செலுத்தி வாழ்வார்.
( இவர்கள் பிறவா வரம் பெற்றுப் பிறவிப் பிணியை அகற்றுவார்கள்.)
 
Last edited:
# 216. தூய நெறி

அணைதுணை அந்தணர் அங்கியுள் அங்கி
அணைதுணை வைத்ததன் உட்பொருள் ஆன
இணைதுணை யாமத்து இயங்கும் பொழுது
துணையணை ஆயது ஓர் தூய்நெறி ஆமே.

இல்லற வாழ்வில் உள்ள அந்தணர்கள் தாங்கள்
புறத்தே செய்யும் வேள்வியைப் போன்றே தங்கள்
அகத்திலும் மனைவியோடு செய்ய வேண்டும்.
சிவ சக்தியரின் இணைப்பாக நினைத்து அதனை
யாமத்தில் செய்வதே மேன்மையான நெறியாகும்.
 
#217. இறையருளை விழைய வேண்டும்


போது இரண்டு ஓதிப் புரிந்து அருள் செய்திட்டு
மாது இரண்டு ஆகி மகிழ்ந்து உடனே நிற்கும்
தாது இரண்டு ஆகிய தண்ணம் பறவைகள்
வேது இரண்டு ஆகி வெறிக்கின்றவாறே.


ஆண் பெண் சேர்க்கை இறையருளை
விரும்பிச் செய்ய வேண்டும்.
அப்போது குண்டலினி மேலேறி விளங்கும்.
சிற்சக்தி இருள் நீங்கி ஒளியுடன் விளங்கும்.
இந்த நிலையை அடையாமல் வெறும் உடல் அளவில்
சுக்கிலம் சுரோணிதக் கலப்பு மட்டும் ஏற்பட்டால்
ஆணும் பெண்ணும் மாற்றம் அடைந்து மன மயக்கம் அடைவார்கள்
 
# 218. புருவ மத்தியில் சுடர்.


நெய்நின்று எரியும் நெடுஞ்சுடரே சென்று
மைநின்று எரியும் வகை அறிவார்கட்கு
மைநின்று அவிழ்தரு மத்தினம் ஆம் என்றும்
செய்நின்ற செல்வம் தீயது வாமே.


ஆண் பெண் கூடலின் போது ஏற்படும் உணர்வுடனே மேலே சென்று
புருவ மத்தியில் உள்ள சுடரின் தன்மையை அறிய முடிந்தவர்களின்
அனைத்து மலங்களும் நீங்கி அகன்று விடும். அந்தச் சுடர் என்ன?
எப்போது உடலில் நிலை கொண்டுள்ள சிவனே அந்த அக்னியே ஆவான்.
 
# 219. வினைகள் அகலும்


பாழி அகலும் எரியும் திரிபோல் இட்டு
ஊழி அகலும் உறுவினை நோய் பல
வாழி செய்து அங்கி உதிக்க அவைவிழும்
வீழி செய்து அங்கி வினை சுடுமாமே.


யோனி என்பது ஒரு ஓம குண்டம் என்றால்
அதில் உள்ள அக்கினியைத் தீப் பந்தம் போல
நாம் மேல் நோக்கி எழச் செய்ய வேண்டும்.
அப்போது வினைகள் அழிந்து போய் விடும்.
உடலை வருத்தும் நோய்களும் அழிந்து போகும்.
கீழே இருக்கும் தீ மேலே நிலை பெற்றால் மேலும்
மேலும் வினைகள் ஏற்படாதவாறு காப்பாற்றும்.


உபநிடதம் கூறும் கருத்து இது:

பெண்ணின் யோனி ஒரு ஓம குண்டம்.
அதில் உள்ள மயிர்கள் தருப்பைப் புற்கள்.
தோல் சோமக் கொடி.
யோனியின் உதடுகள் அக்கினி.
இதை அறிந்தவன் வாஜபேய யாகம் செய்தவன் ஆகின்றான்.
அவன் எல்லாப் பாவங்களையும் அழித்தவன் ஆகின்றான்.
 


# 220. சிவாக்னி

பெருஞ்செல்வம் கேடு என்று முன்னே படைத்த
அருஞ்செல்வம் தந்த தலைவனை நாடும்
வருஞ்செல்வத்து இன்பம் வர இருந்து எண்ணி
அருஞ்செல்வத்து ஆகுதி வேட்க நின்றாரே.



பெரும் செல்வம் கேடு தரும் என்று முன்னமே கூறி அருளிவன் சிவன்.
நமக்கு அரிய ஞானச் செல்வதைத் தந்த தலைவன் நம் சிவபெருமான்.
அவனையே எப்போது நாடுங்கள். சிவாக்னி தலயில் உள்ளதை உணர்ந்தவர்கள், ஞானச் செல்வதையே விரும்பி, அதற்கேற்ற அக்கினி காரியங்களைச் செய்வார்கள்.
 
# 221. ஓமத் தலைவன்


ஒண்சுடரானை, உலப்பு இலி நாதனை
ஒண்சுடர் ஆகி என் உள்ளத்து இருக்கின்ற
கண்சுடரோன், உலகு எழும் கடந்த அந்
தண்சுடர் ஓமத் தலைவனும் ஆமே.


ஒளி வடிவானவன் இறைவன்; அழிவு இல்லாதவன்.
ஒளி மிக்க சுடராக என் உள்ளத்தில் இருக்கின்றான்.
என் கண்களில் ஒளியாக இருப்பவனும் அவனே!
ஏழு உலகங்களையும் கடந்து விளங்கும் அவன்,
வெம்மையே தராத ஒரு குளிர்ந்த சுடர் ஆவான்.
அவனே ஓமத்துக்கு உரிய தலைவனும் ஆவான்.
 
#222. அக்கினியில் பொருந்துவான்


ஓமத்துள் அங்கியின் உள் உளன் எம்இறை
ஈமத்துள் அங்கி இரதம் கொள்வான் உளன்;
வேமத்துள் அங்கி விளைவி வினைக்கடல்
கோமத்துள் அங்கி குரைகடல் தானே.

மறைந்து இருந்து அக்கினி காரியங்களுக்கு உதவுபவன் சிவன்.
இறந்தவர்களின் சூக்ஷ்ம உடலிலும் அவன் பொருந்தி இருப்பான்.
நெய்யப் பெற்ற நூல் ஆடையாக உருவெடுத்து வலிமையடைகிறது.
வாசனைகள் வடிவான வினைகள் கடலைப்போல பெருகி விடுகின்றன.
ஆன்மாவைச் சிவனை நோக்கிச் செலுத்தினால் நம் சிந்தனை கடையப் பெறும். அப்போது ஒரு நாத ஒலி ஏற்பட்டும். அதனால் நம் வினைகள் எல்லாம் அழியும்.
 
#223. அருந்தவர்


அங்கி நிறுத்தும் அருந்தவர் ஆரணத்து
அங்கி இருக்கும் வகை அருள் செய்தவர்
எங்கும் நிறுத்தி இளைப்ப பெரும்பதி
பொங்கி நிறுத்தும் புகழ் அது ஆமே.


தலைக்கு அக்கினியைக் கொண்டு செல்கின்ற ஆற்றல் கொண்ட
அருந் தவத்தவர், வைதீகத் தீயை பத்தினியுடன் வளர்த்தவர் ஆவார்.
இம்மையில் அவர் புகழ் ஓங்கும், நாற்றிசைகளிலும் பரவும்.
மறுமையில் பிரம்மலோகத்தில் தங்கி இளைப்பாற இடம் கிடைக்கும்.
 
# 224. அந்தணர்


அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுள்ளோர்
செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
தம் தவ நற்கருமத்து நின்றுஆங்கு இட்டுச்
சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே.


பிறவிப் பிணியை ஒழிக்கும் தொழில் செய்பவர் அந்தணர்.
அவர்கள் அக்கினி காரியங்களைத் தவறாமல் செய்பவர்கள்;
மூன்று வேளைகளிலும் தமக்கு விதிக்கப்பட்ட வற்றைத்
நாள் தவறாமல் செய்து வருபவர்கள் அந்தணர்கள்.
சந்தி கால நியமங்களையும் தவறாமல் செய்து வருபவர்கள்.
 
# 225. துரிய நிலையை அடைவர்


வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
போதந்தமான பிரணவத் துள்புக்கு
நாதாந்த வேதாந்த போதாந்த
நாதனை
ஈதாந்தம் எனாது கண்டு இன்புறுவோர்களே.

அந்தணர் வேதாந்தம் ஆகிய உபநிடத்தின்
உண்மையை அறியவதற்கு விரும்புவார்கள்.
"தத் த்வம் அஸி" என்ற மூன்று சொற்கள் கூறும்
மெய்ப் பொருளை உணர்ந்து; பிரணவத்தில் புகுந்து;
நாதாந்த, வேதாந்த, போதாந்த நாதனைக் கண்டு;
இதுவே முடிவு என்று எண்ணிவிடாமல்; எப்போதும்
தூய துரிய நிலையில் விளங்குவார்கள்.
 
# 226. காயத்திரி


காயத்திரியே கருது சாவித்திரி
ஆய்தற்கு வப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
நேயத்தேர் ஏறி நினைவுற்று நேயத்து ஆய்
மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.



ஒளியை வேண்டிக் கதிரவனை வணங்குவதற்காக அந்தணர்
அதற்குரிய காயத்திரி மந்திரத்தை
விருப்பத்துடன் ஜபம் செய்வர்.
அன்பாகிய தேரில் ஏறி அமர்ந்து கொண்டு அந்தணர்கள்
சிவம் என்னும் அறிய வேண்டிய பொருளுடன் பொருந்துவார்.
உடல், உலகம் என்னும் காரியங்களை வென்று விளங்குவர்.
 
# 227. அந்தணர் இயல்பு

பெருநெறியான பிரணவ மோர்ந்து
குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
திருநெறியான கிரியை இருந்து
சொரூபமதானோர் துகளில் பார்ப் பாரே.

குற்றம் அற்ற அந்தணர்களின் இயல்புகள் இவை.
முக்தி தரும் பிரணவத்தைத் தெளிவாக அறிவார்கள்.
குரு உபதேசத்தால் 'தத்வமசி' என்ற வாக்கியம்
உணர்த்தும் பொருளைப் புரிந்து கொள்வார்கள்.
அத்வைத நெறியில் நிலை பெற்று நிற்பார்கள்.
அகவழிபாட்டால் பிரம்ம ஸ்வரூபம் அடைவார்கள்.
 
# 228. பந்தம் அறுத்தல்

சத்திய மும்தவம் 'தான் அவன் ஆதலும்'
எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வற்றுப்
பெத்தம் ஆறுத்தலும் ஆகும் பிரமமே.

பிரம்மமாகவே மாறும் வழி இதுவே அறிவீர்.
சத்தியம் தவறாமை, உடலால் தவம் புரிதல்,
தற்போதத்தை அகற்றி விட்டு நடப்பவை
எல்லாம் சிவன் செயல் என்று எண்ணுதல்,
அலைந்து திரிந்து களைப்படையும் இந்திரியங்களைப்
புலன்களின் வழிப் போகாமல் தடுத்து நிறுத்துதல்;
இருவினைகள் அற்றவர்களாக ஞானத்தை அடைதல்,
மற்றும் பந்தங்களை நீக்குதல் என்பவை ஆகும்.
 
# 229. வேதாந்தம்

வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்
வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை யொழிந்திலர்
வேதாந்தமாவது வேட்கை யொழிந்திடம்
வேதாந்தம் கேட்டவர் வேட்கையை விட்டாரே.

வேதத்தின் முடிவான உள்ளவை உபநிடதங்கள்.
வேதாந்தம் எனப்படுவவை இவையே ஆகும்.
வேதாந்தத்தைக் கேட்க விரும்பிய அந்தணர்கள்
வேதாந்தத்தைக் கேட்ட பின்னும் ஆசைகளை விடவில்லை.
வேதாந்தத்தின் முடிவு என்பது ஆசைகளின் அழிவு ஆகும்.
வேதந்தந்தின் பொருளை அறிந்தவர் ஆசைகளைத் துறந்தவர்.
 
# 230. நூலும், சிகையும்

நூலுஞ் சிகையும் நுவலின் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்த நுண்சிகை ஞானமாம்
நூலுடை யந்தணர் காணு நுவலிலே.

பூணூலும், குடுமியும் வைத்துக் கொள்வதால் மட்டும்
ஒருவன் அந்தணன் ஆகிவிட முடியமா என்ன?
பூணூல் என்பது வெறும் பருத்தியின் பஞ்சு ஆகும்.
குடுமி (சிகை) என்பது வெறும் தலை மயிர் ஆகும்.
இடிகலை, பிங்கலை, சுழுமுனை என்னும் உடலின்
மூன்று நாடிகளையும் ஒன்றாக ஆக்கி உணரவேண்டும்.
அதுவே ஆகும் முப்புரி நூலாகிய மெய்யான பூணூல்.
 
Back
Top