அற்புதமான பாடல்!
அன்னையின் பல்வேறு வடிவங்கள் இதில் போற்றப்படுகின்றன.
இவற்றுள், இந்த "கை நளின பஞ்ச சாயகி" என்னும் சொற்றொடர் மட்டுமே இன்னாரெனக்
குறிப்பிடாத ஒரு பெருமையைப் பெற்றிருக்கிறது.
சிவனாரின் கோபத்தால் எரிந்து மறைந்து போன மன்மதனின், மாறனின் கையிலிருக்கும்
ஐந்து மலர்க்கணைகளையே இவை குறிப்பிடுகின்றன.
அவனே மறைந்து போனதால், அவனைப் பற்றிய குறிப்பையும் மறைமுகமாகவே சொல்லி
ஆனந்திக்கிறார் அபிராமி பட்டர்.
கரும்பு வில்லைக் கைக்கொண்டிருக்கும் மாறனின் கணைகள் ஐந்து.
தாமரை, மா, அசோகம், முல்லை, நீலம் எனும் ஐந்து கணைகள்.
தாமரைக் கணையால் உன்மத்தம் பிறக்கும்
மாவின் கணையால் காதல் விளையும்
அசோகக் கணையால் கூடுதல் நிகழும்
முல்லைக் கணையால் விரகம் விளையும்
நீலக் கணையால் ஈர்த்தல் நிகழும்!
சொல்லும் நினைவும் ஒன்றெனவாகி
ஒருவருக்கொருவர் உயிர்பால் இரங்கி
நினைந்து ஆங்கே சோகம் தழுவி
அவரை நினைந்து பலவாறு பிதற்றி
நினைவொழிந்தங்கே மயக்கம் விளைந்து
ஐவகைக் காதல் நோய்களும் நிகழும்.
இந்த ஐந்து கணைகளையும் தன் வசத்தில் வைத்து ஆட்சி செலுத்துபவளே காமாட்சி!
அவளே ஜகன் நாயகி, நான்முகி, நாராயணி, சாம்பவி, சங்கரி, சாமளை, மாலினி, வாராஹி,
சூலினி, மாதங்கி! அவளே அபிராமி!
சம்பு எனப்படும் சிவனின் சக்தி சாம்பவி என்றும், சங்கரனின் சக்தி சங்கரி எனவும்
அழைக்கப்படும்.