முதல் மழலை (தொடர்ச்சி)
இந்தக் குறும்பு மழலை,' தம்பிப் பாப்பாவை ரொம்பப் பிடிக்கும்!' என்று சொல்லிக்கொண்டு
இருந்தாலும், மனது ஓரத்தில் பொறாமை முளை விடும்! முன்பெல்லாம்
குழந்தைகளுக்குத் தூளி கட்டுவார்கள், புடவையில்தான் நிறைய வீடுகளில். ஆனால்
அம்மா, புதிய ஐடியாவாக, வெள்ளை காடா துணியில் லுங்கிபோலத் தைத்து, இரண்டு
தூளிகள் தயாரித்தார். ஒவ்வொரு முறையும், முடிச்சுப் போட அவசியம் இல்லை;
எளிதாக மாற்றிவிடலாம், குழந்தை நனைத்துவிட்டால்! மூன்று வயது நெருங்கும்
சமயத்திலும், முதல் மழலைக்கு ஆசை வந்தது, தூளியில் தூங்க! அவன் குட்டிப்
பாப்பாவாக இருந்தபோது, அப்படித்தான் தூங்கினான் என்றெல்லாம் சமாதானம்
சொல்லியும், நச்சரிப்புத் தாங்கமுடியவில்லை. 56' ஸ்பெஷல் துணி வாங்கி இவனுக்கும்
ஒரு தூளி தயார் ஆனது! தானே படுத்துக் கொண்டு, தானே ஆட்டிக் கொண்டு (தரையில்
கால் எட்டுமே!) தூங்குவான். சின்னவனைப் பார்க்க வருபவர்களுக்கு, இந்த இரட்டைத்
தூளிகள் விநோதமாக இருக்கும்!
அப்பா, தினம் ஆங்கிலச் செய்தி கேட்பார். இவனுக்கும் அதே போலப் படிக்க ஆசை!
ஹிந்து பேப்பரைத் தலைகீழாக வைத்துக்கொண்டு, தனக்குத் தெரிந்த ஆங்கிலச்
சொற்களை எல்லாம் எடுத்து விடுவான், செய்தி வாசிக்கும் 'ராகம்' மாறாமலே!
அவனுடைய admirer 'சேந்துகிணத்து அம்மா' வந்து பார்த்தவுடனே சொல்லுவார், 'புள்ள
எத்தினி ஜோரா இங்குலீசு படிக்குது! இவிக அப்ப(ன்) பாத்தா சந்தோசப்படு(ம்)' என்று.
அவனுடைய vocabulary யில், எங்கள் மாமாவின் பெயர் மற்றும் டெலிபோன் நம்பர்
எல்லாம் வருவதை அந்த 'அம்மா' கவனிக்கவே மாட்டார்! ஒரு முறை அவன்
வார்த்தைகள் எல்லாம் முடிந்து போகும் நிலையில், 'ராகம்' முடியாததால், கடைசியாக
'மழை and பழம்' என்று படித்து முடித்தான்! அன்றைய best காமெடி அதுதான்!
அப்பா, தன் வயலினை எடுத்து வாசிப்பானோ என்ற பயத்தில், இவனுக்கு எட்டாமல், bow வை
எடுத்து மேசை மேலே வைத்துவிட, இவன் உடனே ஓடிப்போய் காய்கறிக் கூடையிலிருந்த
முருங்கைக்காயைக் கொண்டுவந்து bow ஆக்கி இழுக்க ஆரம்பித்துவிட்டான்!
என் பின்னாலேயே அலைவானே; சினிமாவுக்குச் சென்றால், புகை நாத்தம் குழந்தைக்குத்
தாங்காதே என்று, நானும் தங்கையும் சினிமாவுக்கு இவன் தூங்கும் சமயம் escape
ஆனோம்! தூங்கி எழுந்தவுடன், முகாரி ராகம் ஆரம்பித்துவிட்டான், என்னைக் காணாமல்.
என்ன சமாதானம் சொல்லியும் அடங்காது, கடைசியில், அப்பா வேலை முடித்து வீடு
வந்தவுடன், காரில் இவனையும் எடுத்துக்கொண்டு அம்மா தியேட்டருக்கு வந்தார். அந்த
இருட்டிலும் என்னைக் கண்டுபிடித்தது மழலை! 'அதா, சித்தி' என்றவுடன், அம்மா
கோபத்துடன், 'என்ன அட்டகாசம் பண்ணறான்! இந்தா, வைச்சுக்கோ உன் பிள்ளையை!'
என்று சொல்லி மடியில் வைக்க, இரண்டு கண்களிலும் குளமாகக் கண்ணீருடன், 'ஏண்டா
என்ன விட்டூட்டு வந்த?!' என்று கேட்டது மழலை!
ஒருமுறை தன் அப்பாவைப் 'போடா' என்று சொல்ல, உடனே நாங்கள், 'அப்பாவை
வாங்கோ போங்கோ ன்னு சொல்லணும் கண்ணா' என்றதும், 'போடாங்கோ!' என்றது மழலை!
இனிக்கும் பல நினைவுகளைப் பகிர்ந்ததில் எனக்கு மிக ஆனந்தமே, இன்று! :dance: