தீபாவளி நினைவுகள்!
சிறுவயதில் நாங்கள் கொண்டாடிய தீபாவளி நினைவில் நிழலாடுகிறது!
ஒரு மாதம் முன்பே அம்மா எங்கள் புத்தாடைகளைத் தயார் செய்துவிடுவார். தினமும் அதைத் தடவிப் பார்த்து மகிழ்வோம்! பட்டாசு, மத்தாப்பு என்னென்ன வாங்குவது என்ற 'லிஸ்ட்' தயாராகிவிடும். 25 ரூபாய்க்கு, பெரிய பை நிறைய,
ஒரு வாரத்திற்கு முன்பே வாங்கி வந்து, தினமும் மொட்டை மாடியில் வெயிலில்
காய வைத்து, மாலையில் அடுக்கி உள்ளே வைப்போம்!
தீபாவளிப் பலகாரங்களை அம்மா இரண்டு நாட்களுக்கு முன்பு ஆரம்பித்துவிடுவார். வரிவரியாக இட்ட ஒரு மரப் பலகையில், சின்னச் சின்ன உருண்டை மாவைத் தேய்த்து, சங்கு மிட்டாய் செய்வது அம்மாவின் ஸ்பெஷல். ஏழெட்டு வகை இனிப்புக்கள், நான்கைந்து வகைக் காரங்கள் தயாராகும். ஓரிரண்டு வகைகள் ருசிபார்க்கக் கிடைக்கும்! மற்றவை பண்டிகையன்று நிவேதனம் செய்த பின்தான் கிடைக்கும்!
தீபாவளிக்கு முதல் நாள் இரவு, நாங்கள் மத்தாப்பு, பட்டாசு வைத்து மகிழ்வோம். அம்மா நல்லெண்ணெயைக் குறுமிளகு இட்டுக் காய வைத்து, லேகியமும் கிளறி வைப்பார். புத்தாடைகளுக்கு மஞ்சள் தேய்த்து, ஒரு பலகையில் சுவாமி முன்பு அடுக்குவார்.
தீபாவளி விடியலில், எங்கள் உச்சந் தலையில் எண்ணெய் தேய்த்துவிட்டு, ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தந்து, உடம்புக்குத் தேய்த்துக் குளிக்கச் சொல்லுவார். குளித்த பின், பெரிய துண்டைச் சுற்றிக்கொண்டு வந்து, ஸ்வாமி நமஸ்காரம் செய்து, அப்பாவிடம் புத்தாடையை வாங்கி உடுத்துவோம். சின்ன உருண்டை லேகியம்,பின்ப ஒரு ஸ்வீட் வாயில் போட்டுக்கொண்டு, பட்டாசு, மத்தாப்பு ஏற்ற ஓடுவோம். அம்மா எப்போதும் போல அடுப்படி வேலையில் மூழ்குவார்.
இதனிடையில், எங்கள் கோவில் நாதஸ்வர வித்வான், தன் மேளக்காரர் உடன் வாசிக்க, வீடு வீடாக வருவார். தோடி ராகத்தில் "கா ரி ஸ ரி கா ரி ரீ ... ஸா" என்ற ஸ்வரங்களைத் திரும்பத் திரும்ப வாசிப்பார். அதனால், எங்கள் அண்ணன் அவருக்கு "காரிஸரிகாரி" என்று நாமகரணம் செய்துவிட்டான்! அப்பா, ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழத்துடன், பலகாரங்களும், கொஞ்சம் பட்டாசுகளும், பணமும் வைத்து அவர்களுக்குத் தருவார்.
எங்கள் தாத்தாவிற்கு பெண் குழந்தைகள் மீது அளவு கடந்த கரிசனை. மத்தாப்புக்களை ஒரு நுனி பிளந்து வைத்த மூங்கில் குச்சியில் சொருகிக் கொடுத்து, ஏற்றச் சொல்லுவார். படபடவென்று வெடிக்கும் கம்பி மத்தாப்புகளைப் பார்க்க விடமாட்டார். சுவற்றின் மேல் விழும் அதன் வெளிச்சத்தை மட்டுமே பார்க்க வேண்டும்; கண்களைப் பாதுகாக்கும் வழியாம்! பெரிய வெடிகள் வெடிக்கும்போது, காதை மூடிக்கொள்ளச் சொல்லுவார்.
காலை உணவிற்கு அம்மாவின் அழைப்பு வரும்! எல்லா வகை இனிப்புக்களும், காரங்களும், அவற்றுடன் இட்லி, சட்னியும் கிடைக்கும். மீண்டும் சிறிது நேரம் பட்டாசு வெடிப்போம். 56 பட்டாசுகள் இருக்கும் கட்டு பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றாக வெடிக்கப்படும்! நீண்ட நேரம் வெடிக்கலாமல்லவா? வாலுள்ள ஓலைப் பட்டாசுகளை ஏற்றியபின் வீசுவோம். சுவற்றில் அடித்தால் வெடிக்கும் வெங்காய பட்டாசு உண்டு. அவற்றில் வெடிக்காத பட்டாசுகளை எடுத்துத் தனியே வைப்போம். மாலையில் அப்பா வந்து, ஒரு கல்லை வைத்து, அதன்மீது வெடிக்காத பட்டாசை வைத்து, இன்னொரு கல்லை அதன்மீது போடுவார். சத்தம் காதைப் பிளக்கும்! வெடிக்காத மற்ற ஊசிப் பட்டாசுகள், இரண்டாக உடைக்கப்பட்டு புஸ்வாணமாக மாறும்.
இதனிடையில், சில நண்பர்கள் வீட்டிற்கு வருவார்கள். வந்த எல்லோருக்கும் இனிப்பு, காரம் பாக்கெட்டுகள் கிடைக்கும். வேலைக்காரி தாயம்மாவுக்கும் புதுப் புடவை கிடைக்கும். அவளுக்கு ஜாக்கெட் ஏது?
இப்போது நினைத்தால் மனதை நெகிழ வைக்கும் நிகழ்வும் உண்டு. எங்கள் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் அறியாத ஒரு விஷயமாகும். ஆம்! மனிதக் கழிவுகளை அகற்றும் பணியாளரைப் பற்றியது; நாலணா மாதச் சம்பளம்தான் 1960 களில். அதே காசுதான் தீபாவளி போனஸ்! இப்போது நாம் அள்ளித்தரும் வேலைக்காரி சம்பளத்துடன் ஒப்பிட்டால்.......
இன்று இதுபோன்ற வேலைகள் இல்லாது போனதில் மகிழ்ச்சி எய்துவோம்!
வாழ்க வளமுடன்; நலமுடன்!