சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 9
வெள்ளைக் கூடாரங்களிலே கள்ளிச் செடிகள்;
கொள்ளைச் சூடு உள்ளே பாய்ந்து தாக்கியது!
அழகை ரசிக்க வேண்டுமென்றால், வெப்பத்தை
பழகியதுபோல் நாம் தாங்க வேண்டுமல்லவா?
ஆசை தீரப் படங்கள் எடுத்த பின், விடுதிக்குத்
ஆவலுடன் போனோம், பெட்டியை எதிர்பார்த்து!
மார்க்கெட் வரைதான் பெட்டி வருமாம்; அதனை
மார்க்கெட் சென்று நாம்தான் பெற வேண்டுமாம்!
அந்த நேபாளிப் பெண் மிகவும் கெட்டிக்காரிதான்;
வந்து நின்றது டாக்ஸி ஒன்று சில நொடிகளிலே!
ஒருவழியாகப் பெட்டி வந்தது, டென்ஷன் விலக;
ஒரு சொட்டு நல்லெண்ணெயும் ஒழுகிவிடாமல்!
உதய சூரியனைச் சிறைப் பிடிக்க எண்ணி, காலை
உதய நேரத்திற்கு அலாரம் வைத்து எழுந்தேன்!
தன் தரிசனம் தர ஆதவனுக்கு மனமில்லையோ?
தன் கிரணங்களை மேகங்களுக்குள் ஒளித்தான்!
மேகம் விலகாமல் அடம் பிடிக்க, எனது உறக்க
நேரம்தான் குறைந்து போனது; படமே இல்லை!
புறாக்கள் சில விடுதியின் கூரையில் வீடு கட்டி,
சிறார்களைப் போல ஓடித் திரிந்து ஒலி எழுப்ப,
இனிய குரலில் பற்பல பறவைகள் பாடித் திரிந்து
விடியலை இன்னிசையுடன் வரவேற்க, வெண்
மேகங்கள் கூட்டங்களாக எழுந்து எழுந்து வந்திட,
நேரம் போவதே தெரியாமல் நான் மகிழ்ந்தேன்!
தொடரும் ..................