சிந்தை கவர் வடகிழக்கு இந்தியா - 12
பாக்டோக்ரா விமான நிலையம் எட்டும் சமயம்
பாதையில் வேகமாகச் செல்ல விடாது செய்தது
கொட்டும் பெரு மழை! விமான நிலையத்திலோ
கெடுத்தது உடையை, சேற்றை வாரியடித்த கார்!
மனத்தில் @#$%^ என்று அந்த ஓட்டுனனை வைது,
கணத்தில் தேடினேன் ஒப்பனை அறை! வழியில்
ஒரு புத்த பிக்ஷுவிடம்,'Way please, Sir!' எனக் கூற,
ஒரு வினோதப் பார்வையுடன் அவர் பதிலுரைக்க,
அறிந்தேன் அவர் பெண் துறவி என்ற சங்கதியை!
சிரித்து, மழுப்பி, அங்கிருந்து நழுவினேன் நான்!
உடைகளைச் சரி செய்த பின், செக் இன் செய்திட
உடைமைகளை அனுப்பி, சிற்றுண்டி உண்டு, எம்
விமானம் புறப்படும் அழைப்புக்குக் காத்திருந்து,
விமானம் சரியாகப் புறப்பட, டென்ஷன் குறைய,
நான்கு மணிக்குள் கௌஹாத்தி அடைந்ததும்,
அங்கு கிடைத்தது குளு குளு ஷட்டில் பேருந்து!
விடுதியின் வாயிலில் இறங்கி, உடைமைகளை
சடுதியில் அறையில் இட்டுப் பூட்டி, அப்போதே
துள்ளுந்து ஒன்றைப் பிடித்து, விரைந்தோம் என்
உள்ளம் கவர் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்திட!
ஆண் பெயரை உடைய ஒரே நதி 'பிரம்மபுத்ரா'!
தான் சிவந்து, மறைய விழைந்திடும் ஆதவன்!
சிவந்த சூரிய ஒளி நீண்டு நதியில் பிரதிபலிக்க,
உவந்து போனது உள்ளம் அவ்வழகினை ரசிக்க!
தொடரும் ...........................