நாங்குநேரி தோத்தாத்ரி ஆலய அமைப்பும் வரல

praveen

Life is a dream
Staff member
நாங்குநேரி தோத்தாத்ரி ஆலய அமைப்பும் வரல

நாங்குநேரி தோத்தாத்ரி ஆலய அமைப்பும் வரலாறும்

தீராத சருமநோய், தொழுநோய், வாதம், மூட்டுவலி போன்ற நோய்களையும் தீராத நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும் வல்லமை கொண்டவர் என்ற பெருமை "நாங்குநேரி' தோத்தாத்திரி நாதருக்கு உண்டு.


இவ்வாலயத்தினுள் 25 அடி ஆழமும் 15 அடி அகலமும் கொண்ட எண்ணெய்க் கிணறு உள்ளது. ஒவ்வொரு நாளும் இத்தலத்திலுள்ள மூலவர் பெருமாளுக்குத் தினமும் ஆறுபடி நல்லெண்ணெய்யும் சந்தன எண்ணெய்யும் கலந்து காப்புத் திருமஞ்சனம் செய்வர். பின் அந்த எண்ணெய்யைத் திறந்த வெளி எண்ணெய்க்கிணற்றில் சேர்ப்பர். இந்த எண்ணெய் சகல நோய்களையும் தீர்க்கும் சக்தி கொண்டது. இது சர்வரோக நிவாரணியுமாகும். இந்த எண்ணெய்யைச் சிறிதளவு உண்டு தன் நோயைத் தீர்க்க பக்தர்கள் இங்கு வந்து பெருமாளை வணங்கி அருள்பெறுகின்றனர். இந்த எண்ணெய் குறித்து அகத்தியரும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுவர். பத்மபுராணத்தின் 57,58 சுலோகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.


திருமகள், "ஸ்ரீ வரமங்கை' என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் உறையும் தோத்தாத்திரி நாதரை மணந்ததால் "திருச்சிரீவரமங்கை' என்று இந்த ஊருக்குப் பெயர் வந்ததாகக் கூறுவர்.


இத்தலத்தைச் சுற்றி நான்கு ஏரிகள் இருந்த காரணத்தால் "நான்குஏரி' எனப்பெயர் பெற்று நாளடைவில் "நாங்குநேரி' ஆயிற்று என்பர்.


ஆதிசேஷன் இத்தலத்தில் தவமிருந்து எம்பெருமானுக்குத் திரு அணையாக இருக்கும் பேறு பெற்றார். மேலும் உரோமச முனிவரும் தவமிருந்து இத்தலத்துப் பெருமாளின் தரிசனம் பெற்றார் என, தலவரலாறு தெரிவிக்கிறது. இத்தலம், வடமொழியில் "தோத்தாத்ரி' என்று அழைக்கப்படுவதால் தமிழிலும் "தோத்தாத்திரி ஆலயம்' என்றே அழைக்கப்படுகிறது. அதோடு மலையும் வனமும் சூழ்ந்த இடமாதலால் "வானமாமலை' என்றும் அழைக்கின்றனர்.


மது, கைடபர் எனும் இரு அரக்கர்களால் பிரம்மாவும் தேவர்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாயினர். பிரம்மனின் முறையீட்டிற்கு இணங்கி தன் கதையால் பெருமாள், அரக்கர் இருவரையும் அடித்துக் கொன்றார்.


அப்போது மது, கைடபர்களின் உடலில் இருந்த "மேதினி' எனும் கிருமி பூமாதேவியின் உடல் முழுவதும் பரவி துர்நாற்றம் அடிக்கச் செய்தது. தூய்மையை இழந்த பூமாதேவி இவ்விடத்தில் தவமிருக்க, பெருமான் காட்சி அளித்து, ""மாசு கழுவப்பெற்றாய், மேதினி எனப் பெயரும் பெற்றாய்'' என்று சொல்லி வைகுண்டத்தில் வீற்றிருப்பது போல இத்தலத்திலும் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருவதாகத் தலவரலாறு கூறுகிறது.


ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் விகனச முனிவர் உபதேசப்படி அஷ்டாட்சர மந்திரத்தை ஜெபித்து இத்தலத்தில் தோத்தாத்திரி நாதரை வணங்கி மோட்சம் பெற்றனர். தனது சகோதரன் ஆதிசேஷனைப் போன்று தானும் பெருமாளுக்கு சேவை செய்ய விரும்பிய கருடன் தோத்தாத்திரி நாதரை வணங்கி அப்பேற்றினைப் பெற்றதும் இந்த நாங்குநேரி வானமாமலை ஆலயமே.


வானமாமலை ஆலயம் அஷ்ட சுயம்புத் தலங்களில் ஒன்றாகும். முக்தி அளிக்கும் எட்டுத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் உள்ளது.


இத்தலத்தின் மூலவரான தோத்தாத்திரி நாதர், இங்கு பட்டாபிஷேகத் திருக்கோலத்தில் இரு பிராட்டியார்களுடன் வீற்றிருந்த கோலத்தில் உள்ளார். ஊர்வசி, திலோத்தமை ஆகியோர் கவரி வீச, பிருகு முனிவர், மார்க்கண்டேயர், சந்திர சூரியர்கள், விஸ்வக்சேனர் ஆகியோர் ஏக ஆசனத்தில் இருக்க, ஆதிசேஷன் குடைபிடிக்க, பெருமாள் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். உற்சவர் தெய்வநாயகன், தாயார் ஸ்ரீ வரமங்கைதாயார், உபய நாச்சியார், ஸ்ரீ தேவி, பூதேவி தனிச்சந்நிதியில் அமைந்துள்ளனர். இந்திர தீர்த்தம், சேற்றுத்தாமரைத் தீர்த்தம் ஆகிய இரண்டும் தலத்தீர்த்தங்களாகும். நம்மாழ்வார் இத்திருத்தலத்தை 11 பாசுரங்களால் பாடியுள்ளார்.


இங்கு, ஸ்ரீ உடையவர், பிள்ளை லோகாச்சார்யார், மணவாளமாமுனிகள், நம்மாழ்வார் தவிர்த்து ஏனைய 11 ஆழ்வார்களின் சந்நிதிகள் உள்ளன. நம்மாழ்வார் சடாரி வடிவில் எழுந்தருளியுள்ளார். ராமபிரான், கண்ணன், சக்கரத்தாழ்வார் சந்நிதிகளும் உள்ளன. பிரம்மாண்ட புராணம், கந்த புராணம் போன்ற புராணங்களும் இத்தலத்தின் பெருமை பேசுகின்றன.


இவ்வாலயத்தில் சித்திரையில் பெருமாளும், பங்குனியில் தாயாரும் உற்சவம் காண்கிறார்கள். தை அமாவாசையில் பெருமாளுக்கு ஒரு கோட்டை எண்ணெய் கொண்டு எண்ணெய்க்காப்பு உற்சவம் நடைபெறும். இந்த உற்சவத்தின்போது 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.


ஸ்ரீ மணவாள மாமுனிவரால் ஸ்ரீ வானமாமலை மடம் இத்தலத்தில் அமைந்துள்ளது. இது தென்கலை வைஷ்ணவர்களுக்கானது. ஐப்பசி மூலம் அன்று நடைபெறும் விழாவில் மணவாள மாமுனிவரின் மோதிரத்தினை வானமாமலை ஜீயர் அணிந்து கொள்ளும் வழக்கம் இன்றும் உள்ளது.


திருநெல்வேலி - நாகர்கோவில் சாலையில் திருநெல்வேலியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் நாங்குநேரி தோத்தாத்திரி ஆலயம் அமைந்துள்ளது.
 
Back
Top