குருப்பெயர்ச்சியில் அவசியம் தரிசிக்க வேண்டிய முருகன் கோயில்கள்... விசேஷ வழிபாடுகள்* .

RSSARMA52

Active member
*குருப்பெயர்ச்சியில் அவசியம் தரிசிக்க வேண்டிய முருகன் கோயில்கள்... விசேஷ வழிபாடுகள்* .....
கடகத்தில் உச்சகுருவாக அமர்ந்து பலன் தரப்போகிறார் குரு பகவான். அவரின் பூரணத் திருவருளைப் பெற, குமரனை வழிபட வேண்டும் என்கின்றன பழம்பெரும் ஞானநூல்கள். குருவுக்கெல்லாம் குருவானவர் ஆயிற்றே குமரக்கடவுள்!

எனவேதான், நவகிரக குருவுக்கு முருகன் அருள்பாலித்த திருச்செந்தூர், தந்தைக்கே குருவாக அமர்ந்து உபதேசம் செய்த சுவாமி மலை போன்ற தலங்களுக்குச் சென்று முருகனை வழிபட்டு, குரு கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வரம் வாங்கி வருவார்கள் பக்தர்கள். அத்துடன், முருகனின் அவதாரம் நிகழ்ந்த புண்ணிய வைகாசி மாதம் இது.

வைகாசி மாதத்தில் - ஞான நட்சத்திரமான விசாகத்தில் முருகப்பெருமான் அவதரித்தார். அதனால் ‘விசாகன்’, ‘விசாகப்பெருமான்’ என்றெல்லாம் அவரைப் போற்றி வழிபடுவார் கள். வைகாசிப் பௌர்ணமியுடன் விசாக நட்சத்திரம் சேர்ந்து வரும் என்பதால், அந்த மாதத்துக்கு ‘வைகாசம்’ அல்லது ‘வைகாசி’ என்ற பெயர் வந்தது. வைகாசிப் பௌர்ணமியை, ‘மதி நாண் முற்றிய மங்கலத் திருநாள்’ என்று போற்றுகிறது மணிமேகலை. இந்தத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு!

அற்புதமான இந்தத் தருணத்தில் முருகன் குடியிருக்கும் ஊர்களைத் தேடிச்சென்று வழிபட்டு வருவதால், குருபலமும் குமரனின் அருளும் ஒருங்கே கிடைக்கும்; இரட்டிப்புப் பலன்கள் உண்டாகும். நாமும், விசேஷமான முருகன் தலங்களைத் தரிசித்து மகிழ்வோம்.

நாகை மாவட்டம் சீர்காழியிலிருந்து சிதம்பரம் நோக்கிச் செல்லும் வழியில் உள்ளது புத்தூர். இங்கிருந்து கிளைபிரியும் சாலையில், சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவு பயணித்தால், திரு மயிலாடி திருத்தலத்தையும் அங்கே முருகப்பெருமான் குடி கொண்டிருக் கும் ஆலயத்தையும் அடையலாம்.

அம்பிகை மயிலாக வந்து வழிபட்டு அருள்பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே குமரக்கடவுள் விசேஷ தெய்வமாக அருள்பாலிக்கிறார். தேவர்களைப் பாடாய்ப்படுத்தி வந்த அசுரன் ஒருவன், அபிசார வேள்வி நடத்தினான். அந்த வேள்வியின் ஹோமத் தீயில் இருந்து ஜுரதேவதை வெளிப்பட்டாள். இந்திரலோகத்துக்குச் சென்றாள்; அங்கேயிருந்த தேவர்கள் சிலருக்கு வெப்பு நோய் வந்தது; இன்னும் சிலரை வைசூரி தாக்கியது; சிலர் ஜுரம் வந்து அவதிப்பட்டனர்; இன்னும் சிலர், அம்மை வந்து படுத்தே விட்டனர்.

கலங்கிக் கதறிய தேவர்கள், குமரக்கடவுளி டம் ஓடினர். `முருகா காப்பாற்று’ என்று சரண் புகுந்தனர். அவர்களுக்கு அருள்புரிய மனம் கனிந்தார் முருகன். இதையடுத்து பூலோகத்தில் அமைந்திருந்த வில்வாரண்ய க்ஷேத்திரத்துக்கு வந்தார் முருகப் பெருமான். அங்கே, அன்னை பார்வதிதேவிக்குத் திருக் காட்சி தந்த லிங்க மூர்த்தம் இருந்தது. தனது வேலாயுதத்தால் பூமியில் குளம் ஒன்றை உண்டுபண்ணினார் முருகன். அந்தக் குளத்தில் நீராடிவிட்டு, வடக்குதிசை நோக்கி அமர்ந்தபடி, சிவபெருமானை எண்ணிக் கடும் தவம் இருந்தார்.

இந்தத் தவத்தின் பலனாக சீதளாதேவி அங்கே பிரசன்னமானாள். ஜுரதேவதைக்கும் சீதளாதேவிக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. சீதளாதேவி வென்றாள். தேவர்களுக்கு உண்டான பாதிப்புகள் விலகின. அதையடுத்து தைரியமும் உற்சாகமும் பொங்க, முருகப் பெருமானின் அருளோடு, தேவர்கள் அசுரர் களுடன் போரிட்டு வென்றனர்.

நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் மேலிட இந்திரன் ஓடி வந்து, குமரக் கடவுளை வணங் கினான். ‘இந்தத் தலத்தில், வடக்குப்பார்த்தபடி, யோக நிலையில் எப்போதும் இருந்து, எல்லோரையும் காத்தருள வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தான். ‘அப்படியே ஆகட்டும்’ என்றார் முருகப்பெருமான். அதன்படியே இந்த மயிலாடி திருத்தலத்தில், வடக்குப் பார்த்தபடி நின்ற திருக்கோலத்தில், ஶ்ரீபாலசுப்ரமணியராக அருள்பாலிக்கிறார் முருகப்பெருமான்.

இந்த முருகனை நாம் தெற்கு முகமாக நின்றபடி, வணங்கி வழிபட்டால், பில்லி-சூனியம் உள்ளிட்ட பிரச்னைகள் நீங்கும்; யோகமும் ஞானமும் கிடைக்கப்பெறலாம்; எதிரிகள் தொல்லையில் இருந்து விடுபடலாம் என்பது ஐதிகம்.

முருகனின் உற்சவ மூர்த்தியும் சாந்நித்தியத் துடன் காட்சி தருகிறார். இந்தத் தலத்தின் இன்னொரு விசேஷம்... வழக்கமாக மயிலின் மீது அமர்ந்திருப்பார் முருகப்பெருமான். ஆனால் இங்கு, பாத ரட்சைக்குப் பதிலாக மயிலையே அணிந்திருக்கிறார் குமரக் கடவுள். அதாவது... அசுரனை அழித்து, அவனது ஆணவத்தை மயிலாக்கிக் காலின்கீழ் மிதித்தபடி காட்சி தருகிறார்.

இடது காலின் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்குமான இடைவெளியில், தலையைத் தூக்கியபடி, முருகப்பெருமானின் அழகு ததும்பும் திருமுகத்தைப் பார்த்தபடி காட்சி தருகிறது மயில். `வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனம் இது' என்கிறார்கள் பக்தர்கள்.

இங்கே அருளும் சிவனாரின் திருப்பெயர் ஶ்ரீசுந்தரேஸ்வரர். ஶ்ரீசுந்தர விநாயகரும் காட்சி தருகிறார். கண்வ மகரிஷியால் வழிபடப்பட்ட பிள்ளையார் இவர். சுந்தரேஸ் வரர் மற்றும் சுந்தர விநாயகரை வணங்கி வழிபட்டால், முகத்தில் பொலிவு கூடும்; நினைத்ததெல்லாம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோயிலில் ஶ்ரீபெரியநாயகி, ஶ்ரீபிரகதாம்பாள் என இரண்டு அம்பிகையர் சந்நிதிகள் உள்ளன. இவர்களை வணங்கினால், செல்வம் பெருகும்; நல்ல வரன் அமையும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கப்பெறுவர் என்பது ஐதிகம்!

இங்கே தட்சிணாமூர்த்தியும் விசேஷமான வர். மற்ற ஆலயங்களில், கல்லால மரத்தின் அடியில் ஒருகாலை மடித்து வைத்து, ஒரு காலை தொங்கவிட்டபடி காட்சி தருவார் தட்சிணாமூர்த்தி. ஆனால் இந்த மயிலாடி கோயிலில், இரண்டு கால்களையும் மடக்கி வைத்து பத்மாசனத்தில் அருள்கிறார். இவரை வணங்கிட சகல ஞானமும் கைகூடும்; குருவருள் ஸித்திக்கும் என்பது நம்பிக்கை.

குறமகளாக அவதரித்த வள்ளியை மணந்துகொண்டு, திருமணக் கோலத்தில் திருத்தணி நோக்கி மயில் வாகனத்தில் சென்ற முருகப்பெருமானை ஓர் இடம் மிகவும் கவர்ந்தது. அங்கே சற்று இளைப்பாற ஆசைப் பட்டவர், வள்ளியுடன் அங்கிருந்த வெப்பாலை மர நிழலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். இத்தகைய சிறப்புமிக்க தலம்தான் ஞானமலை.

சென்னை-வேலூர் தேசிய நெடுஞ் சாலையில் சுமார் 90 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள காவேரிப்பாக்கத்தில் இருந்து சோளிங்கர் செல்லும் வழியில், சுமார் 14-வது கி.மீ. தொலைவில் உள்ள மங்கலம் என்கிற கிராமத்தை அடுத்துள்ள கோவிந்தசேரியில் அமைந்துள்ளது ஞானமலை.

இங்கே பிரம்மசாஸ்தா கோலத்தில் - பிரம்மனின் சிருஷ்டி தொழிலை மேற் கொண்ட கோலத்தில், வள்ளி-தெய்வானை தேவியருடன் அருள்கிறார் மூலவர். முருகனின் பின் இரு கைகளில் பிரம்மாவின் கமண்டலம் மற்றும் ஜபமாலை; முன் இரு கைகளில் ஒன்று அபய ஹஸ்தமாகவும், மற்றொன்று இடுப்பில் வைத்தபடியும் திகழ்கிறது. இங்கு முருகனின் திருநாமம் ஞானபண்டித ஸ்வாமி. குருவருளைப் பெற்றுத்தரும் அற்புத வடிவம் என்று ஆன்றோர்கள் போற்றுவார்கள்.

அருணகிரிநாதருக்கு முருகன் திருவடி தரிசனம் தந்த தலம் என்பது கூடுதல் சிறப்பம்சம். அவரது பாதச் சுவடுகளை நாமும் இங்கே தரிசிக்கலாம். அந்த இடம் தற்போது ‘திருவடிப் பூங்கோயில்’ என்று அழைக்கப்படுகிறது. ஞானமலை கோயிலில், விசேஷ தரிசனத்துக்கு உரியவர் ஶ்ரீகுறமகள் தழுவிய குமரன். இவரின் உத்ஸவ மூர்த்தம் மலை அடிவாரத்தில் ஞானாஸ்ரமத்தில் உள்ளது. இவரை வழிபட்டால் கல்யாணப் பிராப்தம் உண்டாகும் என்பது நம்பிக்கை!

திருப்பூர் மாவட்டம் - தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது ஶ்ரீசுப்ரமணிய ஸ்வாமி திருக்கோயில். சில நூறு வருடங்களுக்கு முன்பு, இந்த இடத்தில் வன்னி மரம் ஒன்று இருந்தது. திடீரென ஒருநாள், அந்த மரத்தின் கீழே சிறியதொரு கல் வடிவில் சுயம்பு மூர்த்தம் தோன்றியதாம்!

ஆரம்பத்தில் அந்தக் கல்லையே கடவுளாகப் பாவித்து, சிறிதான ஓலைக்குடிசை அமைத்து வழிபடத் தொடங்கினர் ஊர்மக்கள். பிறகு ஊர்ப் பெரியவர்கள், ‘இது முருகப்பெருமான்தான். எனவே அவருக்கு விக்கிரகம் அமைத்து வழிபடுவோம். இந்தச் சுயம்புக்கும் சந்நிதி வைப்போம்’ என்று சொல்ல... அழகே உருவெனக் கொண்டு முருகப்பெருமானின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

முன்னதாக, `விக்கிரகம் அமைக்கலாமா அல்லது சாமி குத்தம் ஏதும் நிகழுமா’ என்று பழநி முருகப்பெருமானிடம் உத்தரவு கேட்கப் பட்டதாம். அசரீரியாக அனுமதி கிடைத்ததும், பழநியில் இருந்து பிடிமண் எடுத்து வந்து இங்கே ஆலயம் எழுப்பி, வழிபடத் தொடங்கினார்கள் மக்கள்.

வன்னி மரத்தடியில் சுயம்புவாகத் தோன்றிய கல்லை சுமார் 60 அடி ஆழத்தில் அமர்த்தி, அதில் பஞ்சலோகத்தால் ஆன கம்பி ஒன்றை வைத்து, அந்தக் குழியை நவ தானியங்களாலும் மூலிகைகளாலும் நிரப்பி யந்திரப் பிரதிஷ்டை செய்து, அதன் மேல் முருகப்பெருமானுக்கு சந்நிதி அமைக்கப் பட்டுள்ளது. ஆகவே, விசேஷ சாந்நித்தியத் துடன் திகழ்கிறது, இந்த முருகனின் ஆலயம்.

இங்கே, மாசி மாதத்தில் மகா அன்னாபிஷே கம் சிறப்புறக் கொண்டாடப் படுகிறது. பொதுவாக, அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனிக்குச் செய்வார்கள். ஆனால் இங்கே, முருகப்பெருமானுக்கு அன்னாபி ஷேகம் செய்வது சிறப்பு எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர்.

பிள்ளைப் பாக்கியம் இல்லாதவர்களும், தீராத நோயால் அவதிப்படுவோரும் இந்த நாளில் விரதமிருந்து, அபிஷேகம் செய்த அன்னத் தைச் சாப்பிட்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்; நோய்கள் யாவும் நீங்கும் என்பது ஐதிகம். உற்சவர் முருகனும் அற்புதக் கோலத்தில் அருள்கிறார்.

மட்டுமன்றி, ஶ்ரீஅமுதகரேஸ்வரர், ஶ்ரீசனீஸ்வரர் (தனிச் சந்நிதியில்), தேவியருடன் நவக்கிரக மூர்த்திகள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.

வைகாசி விசாக நாளில், இங்கு வந்து முருகனை வழிபட்டால், தீவினை சக்திகள் விலகும்; சத்ரு தொல்லைகள் நீங்கும்; முருகன் அருளால் வியாபாரம் விருத்தியாகும். செவ்வாய்க்கிழமையன்று, தங்கள் ஜாதகத்தை முருகக் கடவுளின் திருவடியில் வைத்து, செவ்வரளிப் பூ சார்த்தி, இரண்டு நெய் தீபமேற்றி வழிபட்டால், விரைவில் கல்யாண வரம் கைகூடி வரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஈரோடு அருகே உள்ளது வெண்ணெய் மலை. இங்கு அருள் புரியும் முருகப்பெருமான் தனது கரங்களில் எந்தவித ஆயுதங்களும் இல்லாமல் தனித்த திருக்கோலத்தில் காட்சித் தருகிறார். வள்ளி - தெய்வானை மற்றும் மயில் வாகனமும் இவருக்கு அருகில் இல்லை. இங்கு இவரது திருநாமம் தண்டாயுதபாணி. முன்னொரு காலத்தில் இங்குள்ள மலை வெண்ணெயாக இருந்ததாம். காலப்போக்கில் வெண்ணெய் இறுகி, வெண்ணிற மலையாக மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்த மலையை வலம் வந்தால், கயிலாய மலையை வலம் வந்த பலன் கிட்டும் என்பது ஐதீகம்.

சிவகங்கை மாவட்டம் - மானாமதுரையில் உள்ள சிவாலயத்தில் தனிச்சந்நிதி கொண்டுள்ள முருகப்பெருமான் நாகசுப்ரமணியராகக் காட்சித் தருகிறார். இவரது தலையில் நாகம் படமெடுத்த நிலையில் காணப்படுகிறது.

புதுக்கோட்டை அருகே உள்ளது, திருவேங்கைவாசல். இங்குள்ள ஶ்ரீவியாக்ரபுரீஸ்வரர் கோயில் பிராகாரத்தை வலம் வரும்போது, தவம் செய்யும் திருக்கோலத்தில் உள்ள முருகப் பெருமானை தரிசிக்கலாம். இவரை வழிபட்டால், எளிதில் தியானம் கைகூடும் என்கிறார்கள்.
🙏🏻👏🙏🏻👏🙏🏻
 
Back
Top