• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

புரட்டாசியில் தரிசிக்க வேண்டிய குணசீலம் திருக்கோவில்

திருச்சிக்கு அருகே குணசீலம் எனும் திருத்தலத்தில் மூலவராக பிரசன்ன வெங்கடாசலபதி அருள்கிறார்.

இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சன்னதி இல்லை.

சுமார் , ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயம் இது. உற்சவரின் திருநாமம் ஸ்ரீநிவாசப் பெருமாள்.

பொதுவாக கோவில்களில் விழாவின் போது மட்டுமே கருட சேவை சாதிப்பார்கள்.

ஆனால், இங்கு ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் கருட சேவை சாதிப்பார்கள்.

மனக்குறையுடன் வரும் பக்தர்கள் மட்டுமல்லாது, நீண்ட நாள் மனநோயாளிகளுக்கும் பூரண நிவர்த்தி பெற இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர்.

இவ்வாலயம் திருச்சி சேலம் பாதையில் மையத்தில் அமைந்துள்ளது.

புரட்டாசி மாதத்தில் தரிசிக்க வேண்டிய திருவேங்கடவன் வீற்றிருக்கும் திருக்கோவில்களில் இதுவும் ஒன்று.

ஓம் நமோ வெங்கடேசாய.

_____________

புகழ்பெற்ற
வைணவத் திருத்தலங்கள்

ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி
குணசீலம்.
திருச்சிநாமக்கல்சாலை

மூலவர்: ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி

உற்சவர்: சீனிவாசர், ஸ்ரீதேவி, பூதேவி

தீர்த்தம்: காவிரி, பாபவிநாஸ தீர்த்தம்

ஸ்தலபெருமை

ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி
இவர் சுயம்பு மூர்த்தி ஆவார்.

குணசீல மகரிஷியின் தவத்தையும் அவரின் வேண்டுகோளையும் ஏற்று குணசீலத்தில் பிரசன்ன வேங்கடாசலபதி ஸ்வாமியாய் அருள்பாலிக்கிறார்

ஊருக்கு மகரிஷியின் பெயரால், குணசீலம் என்றே அழைக்கப்பட்டது.

மனக்குறையை தீர்த்து வைத்து, நல்லருள் தரும் நற்குணவானான பெருமாள் குணசீலத்தில் அருள்கிறார்.
பத்மசக்கரபட்டணம் என்கிற புராண பெயர் குணசீலற்கு உண்டு.
மனநோயாளிகளின் பிரார்த்தனை தலமாகவும் விளங்குகிறது.

திருப்பதி பெருமாளின் திருநாமம்தான் இவருக்கும். ஏனென்றால், திருப்பதிக்கு நிகரான திருத்தலம் என்றே குணசீலம் போற்றப்படுகிறது.

புதன் மற்றும் சனிக்கிழமைகளில், திருவோண நட்சத்திர நாளில், வியாழக்கிழமைகளில் இங்கு வந்து பெருமாளை ஸேவிப்பது மிகுந்த பலன்களைத் தரும்

இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு... மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், இந்தத் தலத்தில் ஒருமண்டலம் தங்கி, இங்கே வழங்கப்படும் தீர்த்தப் பிரசாதத்தை உட்கொண்டு, பெருமாளை ஸேவித்து வந்தால், மன நலம் குணமாகித் திரும்புவர் என்பது ஐதீகம்.

பெருமாளின் திருக்கரத்தில் உள்ள செங்கோல், விசேஷமானது. இந்த செங்கோல் கொண்டு, தீராத நோயையும் தீர்த்தருள்கிறார் பிரசன்ன வேங்கடாசலபதி என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.
வியாழக்கிழமை என்பது குரு வாரம். இங்கே பெருமாளுக்கு வியாழக்கிழமைகளில், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவது, காண்பதற்கு அரிதான ஒன்று. அதேபோல், உச்சிகால பூஜையின் போது, பெருமாளின் துளசி தீர்த்தத்தை வந்திருக்கும் பக்தர்களின் முகத்தில் தெளிப்பார்கள்.

தாயாருக்கு தனிச்சந்நிதியோ பரிவார தெய்வங்களின் சந்நிதியோ இக் கோவிலில் இல்லை.

ஸ்தலவரலாறு - குணசீலர் மகிரிஷி

திருப்பைஞ்சலியில் ஆசிரமத்தில் குரு தால்பியருடன் வசித்து வந்தார் குணசீலர் மகிரிஷி. திருமலை வேங்கடாஜலபதியை சாமான்யர்கள் தரிசிக்க இயலாத க்ருத (முதல் யுகம்) யுகத்திலேயே அனைவருக்காகவும் தமிழகத்தில் இறைவாசம் வேண்டும் என்று நெக்குருக வேண்டியவர், அவர். திருமலை சென்று வேங்கடமுடையானை தரிசித்து அவரை இங்கு வரவழைக்க காவிரி கரையில் தவமியற்றினார்.

பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் பரமாத்மா, தாம் திருவேங்கடமலையில் அர்ச்சாவதாரமாக இருந்து குபேரனிடம்தான் வாங்கிய திருமண கடனை அடைத்துக் கொண்டிருப்பதாகவும், கடன் தீரும் வரை தாம் அங்கிருந்து வர முடியாது என்றும் கூறினார்.

இவரின் தீவிர தவத்தை பார்த்து, தன் பதவிக்கு ஆபத்து என்று அஞ்சிய இந்திரன் கொடுத்த தொல்லைகளை பொருட்படுத்தாமல், வாசுதேவனை நோக்கி நெருப்பாய் வளர்ந்தது குணசீலரின் மனவேள்வி.

அவரின் தவத்தை மெச்சி வேங்கடாசலபதி பெருமாளும் கிருதயுகம், புரட்டாசி மாதம், சனிக்கிழமை, சிரவண நட்சத்திரம் கூடிய சுபதினத்தில், தனுர் லக்னத்தில், சந்திரனுடன் குரு சேர்ந்திருக்கும் வேளையில் எம்பெருமான் திவ்ய மங்கள சொரூபராக பிரசன்னம் ஆகி குடி கொண்டார்.
மேலும் குணசீலர் காவிரிக்கரையில் ஆசிரமம் அமைத்து தவம் புரிய வேண்டும் என்றும், வைகுண்டத்திலிருந்து ஸ்ரீவாசுதேவன்-ஸ்ரீலட்சுமியுடன் பிரசன்ன வெங்கடேசனாக தாம் அங்கு எழுந்தருளுவதாகவும் திருவாய் மலர்ந்தருளினார். அதன்படி குணசீல மகரிஷியும் காவிரி வடகரையில் ஆசிரமம் நிறுவி பிரசன்ன வேங்கடேசப்பெருமாள் எழுந்தருள கடும் தவம் புரிந்தார்.

இவ்வாறு எழுந்தருளிய பிரசன்ன வேங்கடாசலபதியை குணசீல மகரிஷி 3 யுகங்கள் தன் ஆசிரமத்தில் பூஜை புனஸ்காரங்களுடன், எவ்வித குறைபாடும் இன்றி வழிபட்டு வந்தார். இந்நிலையில் குணசீல மகரிஷி குரு
ஸ்ரீதல்பிய முனிவர் பத்ரிகாசிரமம் சென்று தவம் புரிய விரும்பினார்.

தன் ஆத்மார்த்த சீடர் குணசீலரும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற விருப்பம்.
இதை தம் தவ வலிமையால் உணர்ந்த குணசீலருக்கு பெரும் குழப்பம். தவமிருந்து, கிடைத்தற்கரிய செல்வமாய் பெற்ற
பிரசன்ன வேங்கடாசலபதியை விட்டுப் பிரிவதா?
தன்னை இவ்வளவு தூரம் உயர்த்திய குருநாதன் ஸ்ரீதல்பிய முனிவரை விட்டுப் பிரிவதா என்று தெரியவில்லை.

விடை காணமுடியாமல் தவித்த குணசீலர், தனக்கு நல்லதொரு முடிவு தருமாறு எம்பெருமான் பிரசன்ன வேங்கடேசனையே வேண்டினார். பெருமாளும் குணசீலரே, பத்ரிகாசிரமத்திலும் யாமே குடிகொண்டுள்ளோம். குருபக்தி குறைய வேண்டாம். ஸ்ரீதல்பியருடன் சென்று உம் சேவை தொடரட்டும் என்று அருள்பாலித்தார்.

எம்பெருமானின் உத்தரவை சிரமேற்கொண்டு நிறைவேற்றப் புறப்படும் முன் குணசீலர் இறைவனிடம் ஒரு வாரம் வேண்டினார். `வேண்டிய வருக்கு வேண்டியதை அருளும் வேங்கடேசா! தங்கள் கட்டளைப்படியே தல்பிய முனிவருடன் பத்ரிகாசிரமம் சென்று குருசேவையை தொடருகிறேன்.

இந்த புண்ணியஸ்தலம் இனி என் பெயரால் விளங்க வேண்டும். தங்களை நாடிவந்து வேண்டுவோரின் முன் `வினைப்பயன்கள் அனைத்தும் நீங்க வேண்டும். தீராத நோய்கள் எல்லாம் தீர வேண்டும். குறிப்பாக சித்தப்பிரமை உடையவர்கள் இங்கு வந்தால் தெளிவு பெற்றுச் செல்ல வேண்டும்.

கேட்டது கிடைக்க வேண்டும். நினைத்தது நடக்க வேண்டும். தென்திருப்பதி என்று மக்கள் போற்றி, பிரார்த்தனை தலமாக விளங்க வேண்டும்
என்று கேட்டார். தனக்காக வேண்டாமல், தரணியில் உள்ள மக்களுக்காக வேண்டிய குணசீலரின் எண்ணத்தை எம்பெருமான் பாராட்டினார்.

`நீர் வேண்டிய படியே நடக்கும். யாம் சங்கு-சக்கரம் தரித்து, செங்கோலுடன் இங்கு காட்சி தருவோம். சகல நோய்களும் தீரும்'என்று அருள்பாலிக்க, குணசீல மகரிஷி பத்ரிகாசிரமம் புறப்பட்டு சென்றார். குணசீலர் போகும்முன்பு எம்பெருமானுக்கு சேவை செய்ய தன்சீடர்களில் ஒருவரை நியமித்து சென்றார்.

ஆற்றில் வெள்ளம் அடிக்கடி வந்ததாலும், வன விலங்குகள் சீடன் இருந்த பகுதியை முற்றுகையிட்டதாலும் பயந்துபோன சீடர் வெங்கடேசப்பெருமாளை தனியே விட்டு, விட்டு ஓடி விட்டார். எம்பெருமானோ தன்னைச் சுற்றி ஒரு புற்றை உண்டாக்கி அதனுள் குடி கொண்டார்.

கலியுக ஆரம்பத்தில் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ஞானவர்மன் என்ற சோழ மன்னனின் கோசாலை, குணசீலம் அருகில் உள்ள கல்லூர் என்ற இடத்தில் இருந்தது. புற்று அமைந்திருந்த புல்வெளியில் மேய்ந்த பசுக்களிடம் பால் கறந்து அரண்மனைக்கு எடுத்துச் செல்வது வழக்கமாயிருந்தது. ஒரு நாள், கறந்து வைக்கப்பட்டிருந்த குடங்கள், பால் இல்லாமல் காலியாக இருந்தன. இந்த மாயத்தைக் கண்ட இடையர்கள் பயந்தபோது, ஒரு வயோதிகருக்கு அருள் வந்து, அவ்விடத்தில் எம்பெருமான் கோயில் கொண்டிருப்பதைச் சொன்னார். விவரம் அறிந்த மன்னன், படைகளுடன் அங்கு வந்தார். புற்றை பால் ஊற்றி கரைக்க வேண்டும் என்று ஒருவர் தெரிவிக்க, அவ்விதமே செய்யப்பட்டது. புற்று கரையக் கரைய, பெருமாளின் திவ்ய அர்ச்சாரூபம் கண்டு மன்னன் ஆனந்தமடைந்தான். தாயார் சமேதராய் காட்சியளித்து அவ்விடத்தில் எளிமையான ஆலயம் நிர்மாணிக்க இறைவன் பணித்தார். குணசீலர் ஆராதனை செய்த அதே முறைப்படி பூஜைகள் நடந்தன.

2001ம் ஆண்டு (கலியுக வருடம் 5104) இறை உத்தரவுப்படி, தாழ்வாக இருந்த கர்ப்பகிருஹம் ஆறு அடி உயர்த்தப்பட்டது. அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியவை கருங்கல்லால் கட்டப்பட்டு, கற்றளி கோயிலாக உருவாக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இன்றும், குணசீலர் நடைமுறைப்படுத்திய சாஸ்திர முறைப்படி ஆறு கால பூஜைகள் நடந்து வருகின்றன. உச்சி கால மற்றும் அர்த்தஜாம பூஜைகளும் தீர்த்த பிரசாதமும் இங்கு சிறப்பான அம்சங்கள். மனநோய் தீர்க்கும் வல்லவராக இங்குள்ள இறைவன் போற்றப்படுகிறார். திருமணம், சந்தான பாக்கியம் கைகூட, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் நிவர்த்தியாக, இந்த திருத்தலத்தை பக்தர்கள் நாடுகின்றனர்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட மனநல மறுவாழ்வு மையம் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இந்த மையத்தில் ஒரு மண்டலம் தங்கி தீர்த்தம் பெற்று குணமடைந்து வருகின்றனர். பக்தர்கள் அனைவர் மீதும் இந்த நாட்களில் தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. தனித்தனி அறைகள் மற்றும் பிரத்யேக மனநல மருத்துவர் என்று அனைத்து வசதிகளும் இந்த மையத்தில் உண்டு. திருப்பதி வேங்கடேசனே இத்தலத்தில் வாசம் செய்வதாலும், இந்த இறைவனும் அதே பெயரால் வழங்கப்படுவதால் திருப்பதி வேண்டுதலை இங்கு நிவர்த்தி செய்து கொள்ளலாம். உற்சவர் அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் விழாக்காலங்களை சிறப்பிக்கிறார். கலியுக வரதன் என்ற இவரது திருநாமமே, தற்காலத்திய மக்களை வழிநடத்தும் தாரக மந்திரமாக இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் திருப்பதியை போல இங்கும் பிரம்மோற்சவம் நடப்பது குறிப்பிடத் தக்கது

கோவிலை ஒட்டி காவிரி நதியும் பாபவினாச தீர்த்தமும் உள்ளது. உற்சவர் சீனிவாஸர் ஸ்ரீதேவி பூதேவியுடன் தங்க செங்கோலுடன் காட்சி தருகிறார். கருவறை முன்பு உத்ராயண தட்சிணாயன வாசல்கள் உள்ளன. புரட்டாசியில் பெருமாள் காட்சியளித்த வைபவம் நடக்கும்.

பிரார்த்தனை தலம்:

கண் நோயால் பாதிக்கப்பட்ட பரத்வாஜரின் சீடன் சுருத்தேவன் கால் முடத்தால் பாதிக்கப்பட்ட பகுவிராஜ மன்னன் ஆகியோர் வழிபட்டு பலன் பெற்றனர். கூர்ஜர தேசத்து இளவரசன் தேவதாசன் இங்கு வழிபட்டு பேசும் சக்தி பெற்றதோடு பாசுரம் பாடினான். பார்வைக்கோளாறு உடல் குறைபாடு உள்ளவர்கள் உடல் நலம் பெற வேண்டிக்கொள்கின்றனர்.

சிறப்பம்சம்:

கோவில் முகப்பிலுள்ள தீப ஸ்தம்பத்தில் ஆஞ்சனேயர் படைப்புச் சிற்பமாக இருக்கிறார். கொடி மரத்தைச் சுற்றிலும் கோவர்த்தன கிருஷ்ணர் காளிங்க நர்த்தனர் நர்த்தன கண்ணன் அபயஹஸ்த கிருஷ்ணர் உள்ளனர். பிரகாரத்தில் நவ நீத கிருஷ்ணர் நரசிம்மர் வராகர் யக்ஞ நாராயணர் வைகானஸ ஆகமத்தை தோற்றுவித்த விகனஸர் ஆகியோருக்கு சன்னதி உள்ளது

தரிசன நேரம்:

காலை 6.30 முதல் மதியம் 12.30 வரை
மாலை 4 முதல் இரவு 8.30 வரை கோவில் திறந்திருக்கும்.

வழித்தடம்:

கும்போணத்தில் இருந்து 97km.
திருச்சி சேலம் சாலையில் திருச்சியில் இருந்து 24கிமீ தொலைவில் உள்ளது ஆலயம்.
 

Latest ads

Back
Top