• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கவிதையில் யாப்பு

Status
Not open for further replies.
4.7.4.23 அளவியல் வெண்பாப் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. விடை

கொடுத்துள்ள வெண்பா:
பாவியேன்நான் பற்றிலேனே பத்மநாபன் பாதமூலம்
ஆவிசோர்ந்து மேனிசோர்ந்து நல்லறங்கள் நாடிடாமல்
காவியாடை நானுடுத்தும் சாதனைகள் போதவில்லை
சாவியாகச் சோகமாக நான்.

காய்ச்சீர்களே முழுவதும் வருமாறு மாற்றியமைத்த வெண்பா:

பாவிட்டன் பற்றவில்லை பத்மகர்பன் பாதவிணை
ஆவிதளர் மேனியிலே நல்லறங்கள் நாடாமல்
காவியுடை நானுடுத்தும் சாதனைகள் போதவில்லை
சாவியெனச் சோகமுடன் நான்.

ஈரசைச் சீர்கள் இரண்டு மட்டும் வர மாற்றியமைத்த வெண்பா:

பாவிநான் பற்றவில்லை பத்மகர்பன் பாதங்கள்
ஆவிதளர் மேனியிலே நல்லறங்கள் நாடாமல்
காவியுடை நானுடுத்தும் சாதனை போதவில்லை
சாவியெனச் சோகமுடன் நான்.

*****

பயிற்சி 2. இயற்சீர் நிரல்: தேமா புளிமா கருவிளம் கூவிளம்: விடை

அன்பால் தழைக்கும் உலகென எண்ணிடும்
தன்மை மனதில் வளர்ந்திட யாவரும்
நன்மை பெறுவார் உலகினில் தீமைகள்
குன்றும் அறிவோம் இதை.

*****
 
பயிற்சி 3. காய்ச்சீர் நிரல்: தேமாங்காய் கூவிளங்காய்

கலைந்துள்ள சொற்களை நேர்செய்(து) ஒருவெண்பா
தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
என்ற நிரலிலே காய்ச்சீர்கள் நின்று
அடியெதுகை வந்திடக் கட்டு.

நானோய்ந்து தூங்குமுன்நீ நன்றாய்நீ ஆட்டுவதில் ஆராரோ உன்கண்ணை ஆரிரரோ தூங்கு.
பேசினாலும் கண்ணுறங்கு கண்ணுறங்கு நான்தூளி கண்ணேநீ மூடிவைத்து ஆராரோ


பயிற்சி 4. இயற்சீர் முதலில்: தேமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்

கலைந்தசொற்கள் ஒவ்வோர் அடியிலும் நேர்செய்து
தேமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்
என்ற நிரல்வரக் கட்டு.

யார்நீசொல் மானே மலைத்தேனே இப்பொழுதே
நானே கேட்டிடவே நீயென்சொல் உனக்காவேன்
சொன்னதெல்லாம் தெரியாதோ அய்யா முன்பேநீர்
நான். கனியாவேன் கொய்யாக்


பயிற்சி 5. இயற்சீர் இரண்டில்: தேமாங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்

கீழுள்ள சொற்களைப் பின்வரும் வெண்பாவில்
தக்க இடங்களில் இட்டு நிரப்புக
தேமாங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்ச்
சீர்கள் நிரலில் வர.

நடமாடும் காண்டல் எளிதாமோ? விதியென்று போன்றோர் சொல்லே காப்பார்

வல்லூறு ----- ----- வீதியிலே
நல்லாரைக் ----- ----- -- தொல்லுலகில்
செல்வந்தர் ----- ----- ஆகிவிட
இல்லாரைக் ----- எவர்?


*****
 
பயிற்சி 3. காய்ச்சீர் நிரல்:
தேமாங்காய் கூவிளங்காய்: விடை


ஆராரோ ஆரிரரோ கண்ணேநீ கண்ணுறங்கு
ஆராரோ பேசினாலும் உன்கண்ணை மூடிவைத்து
நான்தூளி ஆட்டுவதில் நன்றாய்நீ கண்ணுறங்கு
நானோய்ந்து தூங்குமுன்நீ தூங்கு.

பயிற்சி 4. இயற்சீர் முதலில்:
தேமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய்: விடை


மானே மலைத்தேனே யார்நீசொல் இப்பொழுதே
நானே உனக்காவேன் நீயென்சொல் கேட்டிடவே
அய்யா தெரியாதோ முன்பேநீர் சொன்னதெல்லாம்
கொய்யாக் கனியாவேன் நான்.

பயிற்சி 5. இயற்சீர் இரண்டில்:
தேமாங்காய் தேமா புளிமாங்காய் கூவிளங்காய்: விடை


வல்லூறு போன்றோர் நடமாடும் வீதியிலே
நல்லாரைக் காண்டல் எளிதாமோ? -- தொல்லுலகில்
செல்வந்தர் சொல்லே விதியென்று ஆகிவிட
இல்லாரைக் காப்பார் எவர்?

*****
 
பயிற்சி 6. இயற்சீர் மூன்றில்:
தேமாங்காய் கூவிளங்காய் தேமா புளிமாங்காய்


கீழுள்ள சொற்களைப் பின்வரும் வெண்பாவில்
தக்க இடங்களில் இட்டு நிரப்புக
தேமாங்காய் கூவிளங்காய் தேமா புளிமாங்காய்ச்
சீர்கள் நிரலில் வர.

பொல்லாத கல்லாரைக் விழியசைவில் வல்லாரும் நிறைந்தக்கால் இடமில்லை செல்லாத

----- காமுறுவர் செல்வம் -----
----- இட்டதெல்லாம் செய்வர் -----
----- இம்மனித(ர்) இல்லா -----
----- காசெனவே நாம்.

பயிற்சி 7. இயற்சீர் நான்கில்:
புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமா


கீழுள்ள சொற்களைப் பின்வரும் வெண்பாவில்
தக்க இடங்களில் இட்டு நிரப்புக
புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாச்
சீர்கள் நிரலில் வர.

கோளின்றி கோலோச்சும் கோழையென நாளேறும் ஏழை மக்கள்
பாரதத்தில் வாழ்வு. வாழப் ஆட்சியிலே பஞ்சத்தில்

பணவீக்கம் ----- ----- -----
குணமின்றிக் ----- ----- -----
பணக்காரர் ----- ----- -----
உணவின்றிப் ----- -----

*****
 
பயிற்சி 6. இயற்சீர் மூன்றில்:
தேமாங்காய் கூவிளங்காய் தேமா புளிமாங்காய்: விடை


கல்லாரைக் காமுறுவர் செல்வம் நிறைந்தக்கால்
வல்லாரும் இட்டதெல்லாம் செய்வர் விழியசைவில்
பொல்லாத இம்மனித(ர்) இல்லா இடமில்லை
செல்லாத காசெனவே நாம்.

பயிற்சி 7. இயற்சீர் நான்கில்:
புளிமாங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமா: விடை


பணவீக்கம் நாளேறும் பாரதத்தில் மக்கள்
குணமின்றிக் கோளின்றி கோழையென வாழப்
பணக்காரர் கோலோச்சும் ஆட்சியிலே ஏழை
உணவின்றிப் பஞ்சத்தில் வாழ்வு.
 
பயிற்சி 8. மாச்சீர் காய்ச்சீர் இணை:
தேமா புளிமா புளிமாங்காய் தேமாங்காய்


பின்வரும் சொற்களை இட்டு நிரப்பிடத்
தேமா புளிமா புளிமாங்காய் தேமாங்காய்
என்ற நிரல்வரும் ஓர்விகற்ப இன்னிசை
வெண்பா அமைந்து வரும்.

இருந்தால் துளிர்த்து சென்றாலே வழியெல்லாம்

ஆர்வம் ----- கனவெல்லாம் கண்முன்னே
பார்வை சிறந்தால் ----- பூவாகும்
ஆர்வம் மனக்கண் கரங்கோத்துச் -----
தீர்வை வருமே -----.

பயிற்சி 9. காய்ச்சீர் இணையிடை மாச்சீர் இணை:
தேமாங்காய் தேமா புளிமா புளிமாங்காய்


கீழ்வரும் ஓர்விகற்ப இன்னிசை வெண்பாவில்
தாறுமா றென்றுள்ள சீர்களைச் சீர்ப்படுத்த
தேமாங்காய் தேமா புளிமா புளிமாங்காய்
என்ற நிரலில் வரும்.

இருந்தாலும் நெஞ்சில் கருணை வருமோசொல்
பொல்லாதார் சொலும்போது பொல்லாதார் ஏனோ
ரெனவே இரக்கம் பொல்லாப்பு நெஞ்சில்
நல்லா நமக்கு. இல்லாதார்

பயிற்சி 10. காய்ச்சீர் இணையிபின் மாச்சீர் இணை:
புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமா


முதல்வரிச் சொற்களில் பாதி அடுத்ததில்
மீதிவரும் வெண்பாவை நேர்செய்து காண
புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமா
எனும்சீர் நிரலில் வரும்.

வற்றாமல் காப்பாக மாணக் வறியார்க்கு அறியார்க்குக் விளங்கிப் நின்றும் கொடுத்தும்
கைகொள்ளாப் புலவர்க்குக் ஏது? பொன்னும் கர்ணன்போல் கொடுத்த நிலமன்னன்

*****
 
பயிற்சி 8. மாச்சீர் காய்ச்சீர் இணை:
தேமா புளிமா புளிமாங்காய் தேமாங்காய்: விடை


ஆர்வம் இருந்தால் கனவெல்லாம் கண்முன்னே
பார்வை சிறந்தால் வழியெல்லாம் பூவாகும்
ஆர்வம் மனக்கண் கரங்கோத்துச் சென்றாலே
தீர்வை வருமே துளிர்த்து.

பயிற்சி 9. காய்ச்சீர் இணையிடை மாச்சீர் இணை:
தேமாங்காய் தேமா புளிமா புளிமாங்காய்: விடை


இல்லாதார் நெஞ்சில் கருணை இருந்தாலும்
பொல்லாதார் நெஞ்சில் இரக்கம் வருமோசொல்
பொல்லாதார் நல்லா ரெனவே சொலும்போது
பொல்லாப்பு ஏனோ நமக்கு.

பயிற்சி 10. காய்ச்சீர் இணையிபின் மாச்சீர் இணை:
புளிமாங்காய் தேமாங்காய் தேமா புளிமா: விடை

வறியார்க்கு வற்றாமல் மாணக் கொடுத்தும்
அறியார்க்குக் காப்பாக நின்றும் விளங்கிப்
புலவர்க்குக் கைகொள்ளாப் பொன்னும் கொடுத்த
நிலமன்னன் கர்ணன்போல் ஏது?

*****
 
பயிற்சி 11. மாச்சீர் விளச்சீர் முதலில், மூன்றில்
தேமா புளிமாங்காய் கூவிளம் தேமாங்காய்


கீழ்வரும் சொற்களைத் தக்கபடி மாற்றியே
கோடுள்ள சீர்கள் அமைத்திட வெண்பாவே
தேமா புளிமாங்காய் கூவிளம் தேமாங்காய்
என்ற நிரலில் வரும்.

நாமம் பாதம் புகல் செயல்

கண்ணன் ----- எண்ணுவோம் உள்ளத்தில்
கண்ணன் ----- நாடுவோம் வந்திப்போம்
கண்ணன் ----- வழ்வினில் முன்னேற்றம்
திண்ணம் ----- காண்.

பயிற்சி 12 மாச்சீர் விளச்சீர் முதலில், நான்கில்
தேமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம்


கலைந்துள்ள சொற்கள் அடிகள் முதல்மூன்றில்
நேர்செய்ய வந்திடும் வெண்பா அமைவது
தேமா புளிமாங்காய் தேமாங்காய் கூவிளம்
என்ற நிரலிலா நோக்கு.

நான்சொன்னால் வேறு சொன்னதே வழியில்லை
நீசொன்னால் வேறு வழியேதும் ஏற்கிலேன்
சாதுர்யம் விடநானே உன்னை மிக்கவன்
என்று தெளிவாய்நீ இன்று.

பயிற்சி 13 மாச்சீர் விளச்சீர் இரண்டில், நான்கில்
தேமாங்காய் தேமா புளிமாங்காய் கூவிளம்


கலைந்துள்ள சொற்கள் அடிகள் முதல்மூன்றில்
நேர்செய்ய வந்திடும் வெண்பா அமைவது
தேமாங்காய் தேமா புளிமாங்காய் கூவிளம்
என்ற நிரலிலா நோக்கு.

வேளை வெளி நாடு செல்லவே? வாராதோ
வேளை என்நிலை? யார்யாரோ வரப்போக
கணினிப் புலவனுக்(கு) புலம்பும் தன்னுள்
என்றுவரும் நம்பிக்கை யே?

*****
 
4.8. ஆசிரியப்பா

(ஆசிரியத் தாழிசை, ஆசிரியப்பா)

ஆசிரிய(ம்) ஆசிரியப்பா அகவற்பா என்று
மூவகைப் பெயர்பெறும் முதற்பா வகைக்கு
அப்பெயர் அமையக் காரணம் என்ன?

பாக்களில் மிகவும் பழமை யான
ஆக்குதற் கெளிய ஆசிரியப் பாவினில்
அகவல் ஓசை ஒலிப்பதால் அகவற்பா.

அகம்புற நானூறு குறுந்தொகை நற்றிணை
அகமே துறந்து அமுதம் சுரந்த
மணிமே கலைபோல் சங்கப் பனுவலில்
அணிமிகு ஆசிரிய(ம்) அகவிக் கேட்குமே.

ஆசிரியன் என்பவ(ர்) ஆசான் ஆவதால்
ஆசிரிய நோக்கில் ஆக்கும் பாவாகி
ஆசிரியம் ஆனதோ அகவற் பாவே?

அகம்புற நானூறு குறுந்தொகை நூல்களில்
அகம்புறம் பொருளில் ஆசான் நோக்கினில்
புரவலன் புகழைப் புலவோர் பலரும்
பரவிப் பாடி யாசீர் வதிக்க
அகவற் பாவும் ஆசிரியம் ஆனதே.

ஆசு என்பது பூசுத(ல்) ஆயினும்
மாசு எனவும் மற்றுமோர் பொருளுண்டு.
ஆசினை இரித்தல் என்று சொன்னால்
மாசினை நீக்குதல் என்று பொருள்படும்.
ஆசிரியம் இப்படி ஆசிரித்த பாவாம்.

இலக்கணம் வருமுன் இலக்கியம் இருந்ததால்
இலக்கிய(ம்) இருந்த காலத்தி(ல்) எழுதிய
இலக்கண ஆசுடைப் பாக்களி லிருந்து
ஆசினை இரித்தொரு பாவடி வாக்க
ஆசிரி யப்பா பிறந்த(து) என்று
பேசுவா(ர்) ஒருவர் யோசனை செய்தே.
[http://venbaaeluthalaamvaanga.blogspot.in/2009/08/blog-post_25.html]

ஆசு என்பது சிறிது நுண்ணிது
ஆசிரியப் பாவில் சீரில் பொருளில்
ஓசையில் நுட்பம் ஓர்த்து வந்து ... [ஓர்த்து=எண்ணி, ஆராய்ந்து]
ஆசிரியன் போல அறிவிப்ப தாலே
ஆசிரியம் எனும்பெயர் காரணக் குறியென
யாப்பருங் கலநூல் விளக்கம் கூறும்.

4.8.1. ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்

நாற்சீர் கொண்ட அளவடி கொண்டது
இயற்சீர் பயிலும் அயற்சீர் விரவும்
தன்தளை தழுவும் பிறதளை மயங்கும்
பின்னிரு கனிச்சீர் வருதல் கூடாது
மூன்று முதலாப் பலவடி கொள்ளும்
அகவ(ல்) ஓசை சுகமுற நடக்கும்
தகவுற இந்த இலக்கணம் உகந்தது
அகவற் பாவெனும் ஆசிரியப் பாவே.


அகவற்பா ஏகாரத்தில் முடிவது பெருமரபு
ஏஓஈஆய் ஐஎன் இந்த ஆறு அசைகளும்
காரிகை சொல்லும் ஈற்றசை இறுதி
ஒற்றில் எழுத்தில் வேறு அசையில்
இற்றிடும் பாக்கள் இன்று காணலாம்.

4.8.2. ஆசிரியப்பாவின் சீர்

தேமா புளிமா கருவிளம் கூவிளம்
ஈரசை இயலும் இச்சீர் நான்கும்
அகவற்சீர் என்றும் இயற்சீர் என்றும்
ஆசிரிய வுரிச்சீர் என்றும் பெயர்பெறும்.

இயற்சீர் நான்கும் இயல்வது அகவல்
அயற்சீர் விரவலாம் ஆயினும் நால்வகைக்
கனிச்சீரில் கூவிளங்கனி கருவிளங்கனி ஆகிய
கனிச்சீர் இரண்டும் கூடாது வருதல்.[/color]
தனிச்சீ ராக இயற்சீர் களிருந்தும்
காய்ச்சீர் இடையே விரவி வந்து
காம்பீர ஓசை வருமென்பார் கி.வா.ஜ.

’கண்ணன் கழல்கள் காண்போம் மனதில்’
தேமா புளிமா தேமா புளிமா
மாச்சீர் களேவந்த ஆசிரிய அளவடி.

’கண்ணனின் கழலிணை காணுவோம் மனதிலே’
கூவிளம் கருவிளம் கூவிளம் கருவிளம்
விளச்சீர் களேவந்த ஆசிரிய அளவடி.

’கண்ணன் காலிணை நினைக்கும் உள்ளமே’
தேமா கூவிளம் புளிமா கூவிளம்
மாச்சீர் விளச்சீர் விரவி வந்தது.

’கண்ணாநின் காலிணையைக் காணுவேன் மனதில்’
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளம் புளிமா
இயற்சீர் காய்ச்சீர் விரவி வந்தது.

’கண்ணாநின் காலிணையைக் காணுவேனே என்மனதில்’
தேமாங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய்
சீர்க ளனைத்தும் காய்ச்சீர் ஆகிட
அகவ லோசை வருவ தின்றிச்
செப்ப லோசையே பயில்வ தாகும்.

’மல்லிகைமுகம் தன்னில் விழிச்சுரும்புகள் இரண்டு’
கூவிளங்கனி தேமா கருவிளங்கனி புளிமா
இவ்விரு கனிச்சீரும் வருதல் கூடாது.

*****
 
Last edited:
4.8.3. ஆசிரியப்பாவின் தளை

மாமுன் நேர்வரும் நேரொன் றாசிரியம்
விளமுன் நிரைவரும் நிறையொன் றாசிரியம்
அகவற் பாவின் தகவுறு தளைகள்.


இயற்சீர் பெரிதும் இயலும் அகவலில்
இயற்சீர் வெண்டளை விரவி வருமே.
மூவசைச் சீர்கள் அருகி வருதலால்
வெண்சீர் வெண்டளை அருகி வருமே.

மாமுன் நிரையும் விளம்முன் நேருமென
மாறி வருவது இயற்சீர் வெண்டளை
காய்முன் நேர்வர வெண்சீர் வெண்டளை.

நேரொன் அகவல் நிரையொன் அகவல்
இயற்சீர் வெண்டளை கீழ்வரும் அடிகளில்
அலகிட்ட சீர்களால் அறிந்து கொள்க.

உள்ளார் கொல்லோ தோழி முள்ளிடை
இலவ மேறிய கலவ மஞ்ஞை
எரிபுகு மகரி ரேய்க்கும்
அரிபடு கள்ளியங் காடிறந் தோரே.
---ஐங்குறுநூறு


தேமா தேமா தேமா கூவிளம்
புளிமா கூவிளம் புளிமா தேமா
கருவிளம் புளிமா தேமா
கருவிளம் கருவிளம் கூவிளம் தேமா

4.8.4. ஆசிரியப்பாவின் ஓசை வகைகள்

கூற்றும் மாற்றமும் ஆக ஒருவன்
வேற்றொரு வனுக்கு விடைகூறல் செப்பல்.
கூற்று என்பது வினவிக் கேட்டல்
மாற்றம் என்பது விடையாய்க் கூறுதல்.
கூற்றும் மாற்றமும் இன்றிக் கருதியது
சாற்றல் வரையாது என்பது அகவல்.

அகவல் ஓசையில் மூவகை யுண்டு.
நேர்நேர் இயற்றளை நேர்ந்தால் ஏந்திசை
நிரைநிரை இயற்றளை நிறைந்தால் தூங்கிசை
இயற்றளை யிரண்டும் இயன்றால் ஒழுகலிசை.


ஏந்திசை யகவ லோசை வருகிற
யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் கீழே.
ஈற்றுச் சீரில் மூவசை வரினும்
முழுதும் பயில்வது நேரொன் றாசிரியம்.

போது சாந்தம் பொற்ப ஏந்தி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானம் துன்னுவோரே.
---யா.கா. மேற்கோள்


தேமா தேமா தேமா தேமா
தேமா தேமா தேமா தேமா
தேமா தேமா தேமா கூவிளங்காய்

தூங்கிசை யகவ லோசை வருகிற
யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் கீழே.
நிரையொன் றாசிரியம் முழுதும் பயில
ஈற்றய லடியில் மூன்று சீர்வர
நேரிசை அகவற் பாவகை யாகும்.

அணிநிழல் அசோகமர்ந் தருள்நெறி நடாத்திய
மணிதிகழ் அவிரொளி வரதனைப்
பணிபவர் பவநனி பரிசறுப் பவரே.
---யா.கா. மேற்கோள்


கருவிளம் கருவிளம் கருவிளம் கருவிளம்
கருவிளம் கருவிளம் கருவிளம்
கருவிளம் கருவிளம் கருவிளம் புளிமா

ஒழுகிசை யகவ லோசை வருகிற
யா.கா. மே.கோ. கீழே
இயற்சீர் வெண்டளை ஆசிரி யம்வரவே.

குன்றக் குறவன் காதல் மடமகள்
வரையர மகளிர் புரையும் சாயலள்
ஐயள் அரும்பிய முலையள்
செய்ய வாயினள் மார்பினள் கணங்கே.
---யா.கா. மேற்கோள்


தேமா புளிமா தேமா கருவிளம்
கருவிளம் புளிமா புளிமா கூவிளம்
தேமா கருவிளம் புளிமா
தேமா கூவிளம் கூவிளம் புளிமா
---யா.கா. மேற்கோள்
 
4.8.5. ஆசிரியப்பாவின் அடி

ஆசிரியம் என்ற அகவற் பாவாம்
நாற்சீர் கொண்ட அளவடி கொண்டது
பாவின் சிற்றெல்லை அடிகள் மூன்று
பாவின் பேரெல்லை புலவன் உள்ளமே.


நேரிசை அகவற் பாவில் ஈற்றயல்
முச்சீர் கொண்ட சிந்தடி யாய்வரும்
ஈற்றயல் என்றது இறுதிக்கு முன்னடியே.

இணைக்குறள் அகவலில் அடிகள் விரவும்
இடையில் இருசீர் கொண்ட குறளடி
முச்சீர் கொண்ட சிந்தடி யென்று
அச்சீர் அடிகள் ஒன்றொ பலவோ.

4.8.6. ஆசிரியப்பா வகைகள்

அகவற் பாவின் வகைகள் நான்கு
நேரிசை அகவலில் ஈற்றயலடி சிந்தடி
இணைக்குறள் அகவலில் இடையிடைச் சிற்றடி
நிலைமண் டிலத்தில் அனைத்தும் அளவடி
அடிமறி மண்டில அளவடிப் பெருமை
அடிகள் மாறினும் பொருள்மா றாது.


அகவல் என்பது பொதுவில் குறிப்பது
அடிகள் தோறும் அளவடி பயிலும்
நிலைமண் டிலவகைப் பாவென் பதுவே.

4.8.7. ஆசிரியப்பாவில் இயங்கும் நூல்கள்

சங்க காலச் செந்தமிழ் நூல்களில்
பத்துப் பாட்டு நூல்கள் அனைத்தும்
எட்டுத்தொகையில் பரிபாடல் கலித்தொகை தவிரவும்
முற்றும் அகவலில் அமைந்த நூல்களே.

காப்பிய நூல்களின் யாப்பினை நோக்க
மாதவி மகளாம் மணிமே கலைக்கதைக்
காப்பியம் முழுதும் அகவலில் அமைந்தது.

இயலிசை நாடகம் மூன்றும் இயலும்
நயமிகு சிலப்பதி காரப் பனுவலில்
பயிலும் அகவல் இடையிடைத் தொடர்ந்து.

இன்றைய இலக்கிய நூல்கள் நோக்க
கந்த சஷ்டி கவசப் பாக்கள்
பாரதி பாக்களில் அகவல் பயில்வன
மரபின் வழியில் முயலும் பாவலர்
பெரிதும் யாப்பது அகவற் பாவே.
 
4.8.8. நேரிசை ஆசிரியப்பா

அகவலின் இலக்கணம் அமைந்தே ஈற்றயல்
முச்சீர் சிந்தடி வருவது
நேரிசை ஆசிரி யப்பா ஆகுமே


நேரிய இசையினில் நேரிய சொல்லினில்
நுண்ணிதின் பொருளை உரைக்கும்
நேரிசை யகவல் சீரிய வகையாம்

ஈற்றசை பலவித மாக முடியும்
நேரிசை யகவல் சான்றுகள்
பழந்தமிழ் இலக்கிய மரபில் கீழே.

ஏகார முடிவு:
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே
---செம்புலப் பெயனீரார், குறுந்தொகை 40

ஓகார முடிவு:
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னவள்
ஒண்டொடி நெகிழினும் நெகிழ்க
சென்றீ பெருமநிற் றகைக்குநர் யாரோ
---அள்ளூர் நன்முல்லையார், அகநானூறு 46

ஈகார முடிவு:
குவளை உண்கண் இவள்வயிற் பிரிந்து
பெருந்தோள் கதுப்பொடு விரும்பினை நீவி
இரங்குமென் றழுங்கல் வேண்டா
செழுந்தேர் ஓட்டிய வென்றியொடு சென்றீ
---அகநானூறு

ஆய் என்ற முடிவு:
முள்ளி நீடிய முதுநீர் அடைகரைப்
புள்ளிக் கள்வன் ஆம்பல் அறுக்கும்
தண்டுறை ஊரன் தெளிப்பவும்
உண்கண் பசப்ப தெவன்கொல் அன்னாய்
---அகநானூறு

ஐகார முடிவு:
நின்றன நின்று தன்றுணை ஒருசிறைப்
பூந்தண் சிலம்பன் தேந்தழை இவையெனக்
காட்டவும் காண்டல் செல்லாள் கோட்டிப்
பூண்முலை நோக்கி இறைஞ்சி
வாண்முக எருத்தம் கோட்டினள் மடந்தை

இகார முடிவு:
அங்குச பாசமுங் கொம்புந் தரித்தாய்
எங்குல தேவா போற்றி
சங்கரன் மகனே தாளிணை போற்றி!
---பாரதியார், விநாயகர் நான்மணி மாலை 28

*****
 
4.8.9. நேரிசை ஆசிரியப்பா முயற்சி

அகவலின் இலக்கணம் அமைந்தே ஈற்றயல்
முச்சீர் சிந்தடி பயிலும்
நேரிசை அகவல் நாமும் செய்வோம்.

காதலில் காமம் இன்பம் தந்தாலும்
காதலின் நெடுமையே பரஸ்பர மதிப்பில்
காதலில் அன்பு சாதனை
காதலின் வெற்றி பெற்றோர் சம்மதமே.


நேரிசை அகவலில் ஈற்றயல் அமையும்
மூவசை அடியில் ஓசை நிறுத்தம்
மேல்வந்த சான்றினைப் போல
நேரிசை அகவலில் நிறைவாய் ஒலிக்குமே.

காலையில் எழுந்தால் கண்சுடும் கதிரோன்
சாலையின் சுழலில் ஊர்ந்து
வேலைக்குச் சென்றால் வீடுவர நள்ளிரவே.


நீதிசார நூலில் கீழ்வரும் வெண்பாவை
நேரிசை அகவல் ஆக்குவோம்
சீரிய பொருளது மாறி விடாமலே.

பெற்றதாய் மட்டுமல்ல கற்பித்தார் இல்லாளும்
கொற்றவன் நாயகியும் மூத்தோன் மனைவியும்
தன்னில்லாள் தாயுமென் றைந்துவகை நங்கையரை
உன்னுவரே தாய்க்கு நிகர்.
---நீதிசாரம் 22


பெற்ற அன்னை கற்பித்தார் இல்லாள்
கொற்றவன் மனைவி மூத்தவன் மனைவி
உற்ற இல்லாளின் அன்னை
சுற்றம் ஆவார் தாயார் ஐவரே.


பின்வரும் அடிகளை நேரிசை யாக்குவோம்
கன்றுக் குட்டி துள்ளிய துள்ளலில்
நன்றாய்ச் சிரித்து மகிழ்ந்த பாப்பா
பன்றியின் உறுமல் கேட்டு பயந்ததோ.

கன்றுக் குட்டி துள்ளிய துள்ளலில்
நன்றாய்ச் சிரித்த பாப்பா
பன்றியின் உறுமல் கேட்டு பயந்ததோ.


*****
 
4.8.10. நேரிசை ஆசிரியப்பா பயிற்சி

நினைவிற் கொள்ள:
அகவலின் இலக்கணம் அமைந்தே ஈற்றயல்
முச்சீர் சிந்தடி வருவது
நேரிசை ஆசிரி யப்பா ஆகுமே

பயிற்சி 1. அலகிட்டறிதல்

கீழ்வரும் குறுந்தொகைச் செய்யுளை அலகிட்டுச்
சீர்கள் தளைகளின் பெயர்கள் குறித்துச்
செய்யுளில் பயிலும் தொடைகளைக் குறித்துச்
செய்யுளின் அகவல் ஓலிநயம் விளக்குக.

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே
---செம்புலப் பெயனீரார், குறுந்தொகை 40

பயிற்சி 2. சீர் நிரல் வர அமைத்தல்

கலைந்த சொற்களை ஒழுங்கில் சேர்த்தால்
இறையனார் இயற்றிய குறுந்தொகைச் செய்யுள்
ஐந்தடி நேரிசை யகவலில் வருமே.

மயிலியற் மொழிமோ நறியவும் தும்பி
வாழ்க்கை உளவோ கூந்தலின் நீயறியும்
கெழீஇய கண்டது செறியெயெற் செப்பாது
காமம் றரிவை பயிலியற் கொங்குதேர்
பூவே அஞ்சிறைத் நட்பின்

*****
 
பயிற்சி 1. சீர் காணல்: விடை

அலகிடல்:
யா/யும் ஞா/யும் யா/ரா கிய/ரோ
எந்தையும் நுந்தையும் எம்/முறைக் கே/ளிர்
யா/னும் நீ/யும் எவ்/வழி யறி/தும்
செம்/புலப் பெயல்/நீர் போ/ல
அன்/புடை நெஞ்/சந் தாங்/கலந் தன/வே

சீர்கள்:
தேமா தேமா தேமா புளிமா
கூவிளம் கூவிளம் கூவிளம் தேமா
தேமா தேமா கூவிளம் புளிமா
கூவிளம் புளிமா தேமா
கூவிளம் தேமா கூவிளம் புளிமா

தளைகள்:
நேரொன்றாசிரியம் நேரொன்றாசிரியம் இயற்சீர்வெண்டளை / நேரொன்றாசிரியம்
இயற்சீர்வெண்டளை இயற்சீர்வெண்டளை இயற்சீர்வெண்டளை / நேரொன்றாசிரியம்
நேரொன்றாசிரியம் நேரொன்றாசிரியம் நிரையொன்றாசிரியம் / நேரொன்றாசிரியம்
நிரையொன்றாசிரியம் நேரொன்றாசிரியம் / நேரொன்றாசிரியம்
இயற்சீர்வெண்டளை நேரொன்றாசிரியம் நிரையொன்றாசிரியம்

ஆசிரியம்: 13 வெண்டளை: 5 மொத்தம்: 19 சீர்களில் 18 தளைகள்

தொடைகள்: மோனை:
அடி 1. யாயும் .. யாரா -- பொழிப்பு மோனை
அடி 2. எந்தையும் .. எம்முறைக் -- பொழிப்பு மோனை
அடி 3. யானும் .. .. யறிதும் -- ஒரூஉ மோனை
அடி 1-3 யாயும் .. யானும் -- அடி மோனை

தொடைகள்: எதுகை:
அடி 1. யாயும் ஞாயும் -- இணை எதுகை
அடி 2. எந்தையும் நுந்தையும் -- இணை எதுகை

அகவலோசை:
செய்யுளில் கேட்பது ஒழுகிசை யகவல்
பெரிதும் பயிலும் ஆசிரியத் தளையுடன்
எளிய சொற்களும் எதுகை மோனையும்
செய்யுளின் அகவல் சீர்க்க உதவுமே.

பயிற்சி 2. சீர் நிரல் வர அமைத்தல்: விடை

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியற் கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயெற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே
---குறுந்தொகை, இறையனார் 2.

*****
 
பயிற்சி 3. ஒரு சீர் ஒரு முறை

கீழ்வரும் விடுபட்ட சொற்களை நிறைத்துப்
பின்வரும் நேரிசை அகவற் பாவில்
ஓவ்வோர் சீரும் ஒவ்வொரு முறையே
அடிகளில் வந்திடு மாறு
அமைத்துச் சீர்களின் பெயர்களைக் குறிக்க.

நடையில் கந்தல் வெய்யில் பித்தனோ விழிகள்
சாலை நடக்கிறான் தனித்தோர் அன்றிப்

எரித்திடும் ----- ----- மானிடன்
சிரித்தே ----- ----- வழியினில்
உடையெலாம் ----- ----- உந்துதல்
வெறித்திடும் ----- மின்னும்
துறவியோ ----- ----- அறியேனே

பயிற்சி 4. அனைத்தும் ஒரே சீர்: தேமா

கீழ்வரும் விடுபட்ட சொற்களை நிறைத்துப்
பின்வரும் நேரிசை அகவற் பாவில்
எல்லாம் ஒரேசீர் வருமாறு அமைத்துப்
பயிலும் தளையும் ஒலியும் அறிக.

காலம் கோடி வண்ணம் வாராக் பண்ணும்
போமே. வாழும் மண்ணும் விந்தை கட்ட
யாவும் கோடி போயே விட்டுப்

விண்ணும் ----- ----- -----
எண்ணில் ----- ----- -----
விண்ணின் ----- ----- -----
மண்ணில் ----- -----
கண்ணை ----- ----- -----

*****
 
பயிற்சி 3. ஒரு சீர் ஒரு முறை: விடை

எரித்திடும் வெய்யில் தனித்தோர் மானிடன்
சிரித்தே நடக்கிறான் சாலை வழியினில்
உடையெலாம் கந்தல் நடையில் உந்துதல்
வெறித்திடும் விழிகள் மின்னும்
துறவியோ அன்றிப் பித்தனோ அறியேனே

கருவிளம் தேமா புளிமா கூவிளம்
புளிமா கருவிளம் தேமா கருவிளம்
கருவிளம் தேமா புளிமா கூவிளம்
கருவிளம் புளிமா தேமா
கருவிளம் தேமா கூவிளம் புளிமாங்காய்

பயிற்சி 4. அனைத்தும் ஒரே சீர்: தேமா: விடை

விண்ணும் மண்ணும் பண்ணும் விந்தை
எண்ணில் வாராக் கோடி கோடி
விண்ணின் வண்ணம் காலம் கட்ட
மண்ணில் வாழும் யாவும்
கண்ணை விட்டுப் போயே போமே.
[சீர்: அனைத்தும் தேமா; தளை: நேரொன்றாசிரியத் தளை; ஓசை: ஏந்திசை யகவல்]

*****
 
பயிற்சி 5. அனைத்தும் ஒரே சீர்: புளிமா

கீழ்வரும் விடுபட்ட சொற்களை நிறைத்துப்
பின்வரும் நேரிசை அகவற் பாவில்
எல்லாம் ஒரேசீர் வருமாறு அமைத்துப்
பயிலும் தளையும் ஒலியும் அறிக.

கணக்கில் நிறங்கள் நிலமும் வியப்பு பகுக்க
விரியும் பொழுதைப் விடுத்துக் கெடுமே. நிலத்தில்
உயிர்கள் அடங்காக் விழியை நிகழ்த்தும்

விசும்பும் ----- ----- -----
விசியில் ----- ----- -----
விசும்பில் ----- ----- -----
வசிக்கும் ----- -----
கசியும் ----- ----- -----

பயிற்சி 6. அனைத்தும் ஒரே சீர்: கருவிளம்

கீழ்வரும் விடுபட்ட சொற்களை நிறைத்துப்
பின்வரும் நேரிசை அகவற் பாவில்
எல்லாம் ஒரேசீர் வருமாறு அமைத்துப்
பயிலும் தளையும் ஒலியும் அறிக.

பொழுதினைப் நிகழ்ந்திடும் உயிர்களே விழிகளை விரியுமே
நிலத்தினில் விடுத்தவை பகுத்திட கணக்கினில் நிறம்பல
மறையுமே. வியப்புகள் அடங்கிடாக் நிலத்திலும்

விசும்பிலும் ----- ----- -----
விசித்தலில் ----- ----- -----
விசும்பினில் ----- ----- -----
வசித்திடும் ----- -----
கசிந்திடும் ----- ----- -----

பயிற்சி 7. அனைத்தும் ஒரே சீர்: கூவிளம்

கீழ்வரும் விடுபட்ட சொற்களை நிறைத்துப்
பின்வரும் நேரிசை அகவற் பாவில்
எல்லாம் ஒரேசீர் வருமாறு அமைத்துப்
பயிலும் தளையும் ஒலியும் அறிக.

நாட்டிட விந்தைகள் ஆகுமே பார்வையில் நேர்ந்திடும்
நாழிகை வண்ணமே மண்ணிலும் வந்திடாக் கோடிகள்
போகுமே. வாழ்ந்திடும் யாவுமே மாயமாய்ப்

விண்ணிலும் ----- ----- -----
எண்ணிலே ----- ----- -----
விண்ணிலே ----- ----- -----
மண்ணிலே ----- -----
கண்களின் ----- ----- -----

*****
 
பயிற்சி 5. அனைத்தும் ஒரே சீர்: புளிமா: விடை

விசும்பும் நிலமும் நிகழ்த்தும் வியப்பு
விசியில் அடங்காக் கணக்கில் விரியும் ... ... ... [விசி=கட்டு]
விசும்பில் நிறங்கள் பொழுதைப் பகுக்க
வசிக்கும் நிலத்தில் உயிர்கள்
கசியும் விழியை விடுத்துக் கெடுமே.
[சீர்: அனைத்தும் புளிமா; தளை: இயற்சீர் வெண்டளை; ஓசை: தூங்கிசைச் செப்பல்]

பயிற்சி 6. அனைத்தும் ஒரே சீர்: கருவிளம்: விடை

விசும்பிலும் நிலத்திலும் நிகழ்ந்திடும் வியப்புகள்
விசித்தலில் அடங்கிடாக் கணக்கினில் விரியுமே
விசும்பினில் நிறம்பல பொழுதினைப் பகுத்திட
வசித்திடும் நிலத்தினில் உயிர்களே
கசிந்திடும் விழிகளை விடுத்தவை மறையுமே.
[சீர்: அனைத்தும் கருவிளம்; தளை: நிரையொன்றாசிரியத் தளை; ஓசை: தூங்கிசை யகவல்]

பயிற்சி 7. அனைத்தும் ஒரே சீர்: கூவிளம்: விடை

விண்ணிலும் மண்ணிலும் நேர்ந்திடும் விந்தைகள்
எண்ணிலே வந்திடாக் கோடிகள் ஆகுமே
விண்ணிலே வண்ணமே நாழிகை நாட்டிட
மண்ணிலே வாழ்ந்திடும் யாவுமே
கண்களின் பார்வையில் மாயமாய்ப் போகுமே.
[சீர்: அனைத்தும் கூவிளம்; தளை: இயற்சீர் வெண்டளை; ஓசை: தூங்கிசைச் செப்பல்]

*****
 
பயிற்சி 8. தூங்கிசை யகவல்: ஆசிரியத் தளைகள் மட்டும்

நேரும் நிரையும் தன்னுள் ஒன்றும்
நேரொன் றகவல் நிரையொன் றகவல்
ஆகிய தளைகள் அகவற் பாவின
நேரொன் றகவலில் ஏந்திசை கேட்கும்
நிரையொன் றகவலில் தூங்கிசை கேட்கும்
இரண்டும் விரவ ஒழுகிசை கேட்குமே.

தூங்கிசை யகவல் தெளிவாய்க் கேட்க
கூவிளம் கருவிளம் புளிமா தேமா
என்னும் நிரலில் சுழலில் வந்தால்
மன்னும் நிரையொன் றகவற் றளையில்
தூங்கிசை யோசை தெளிவாய்க் கேட்குமே.

கீழ்வரும் விடுபட்ட சொற்களை நிறைத்துப்
பின்வரும் நேரிசை அகவற் பாவில்
கூவிளம் கருவிளம் புளிமா தேமா
என்னும் நிரலில் சீர்கள் அமைந்து
பயிலும் தளையும் ஒலியும் அறிக.

போமே. உயிர்கள் விடுத்தவை காட்ட ஆகும்
கணக்கில் நிறம்பல நிலத்திலும் விந்தை கடிகை
மறைந்து அடங்கிடாக் நிகழும் வசித்திடும்

விண்ணிலும் ----- ----- -----
எண்ணிலே ----- ----- -----
விண்ணிலே ----- ----- -----
மண்ணிலே ----- -----
கண்களை ----- ----- -----

பயிற்சி 9. தூங்கிசை யகவல்: ஆசிரியம் இயற்சீர் வெண்டளை: தேமா கூவிளச் சீர்கள்

கீழ்வரும் விடுபட்ட சொற்களை நிறைத்துப்
பின்வரும் நேரிசை அகவற் பாவில்
தேமா கூவிளம் சீர்களே வந்திடப்
பயிலும் தளையும் ஒலியும் அறிக.

வாழ்ந்திடும் விந்தைகள் பண்ணிடும் நாழிகை மண்ணும்
கட்டவே யாவும் கோடி விட்டு கோடியே
போகுமே. வண்ணம் மாயமாய்ப் வந்திடாக்

விண்ணும் ----- ----- -----
எண்ணில் ----- ----- -----
விண்ணின் ----- ----- -----
மண்ணில் ----- -----
கண்ணை ----- ----- -----

பயிற்சி 10. தூங்கிசை யகவல்: ஆசிரியம் இயற்சீர் வெண்டளை: கருவிளம் புளிமாச் சீர்கள்

கீழ்வரும் விடுபட்ட சொற்களை நிறைத்துப்
பின்வரும் நேரிசை அகவற் பாவில்
கருவிளம் புளிமாச் சீர்களே வந்திடப்
பயிலும் தளையும் ஒலியும் அறிக.

நிலத்திலும் நிகழும் வியப்பு அடங்கிடாக் கணக்கில் விரியும் நிறம்பல பொழுதைப் பகுக்க
நிலத்தினில் உயிர்கள் விழிகளை விடுத்துக் கெடுமே.

விசும்பிலும் ----- ----- -----
விசித்தலில் ----- ----- -----
விசும்பினில் ----- ----- -----
வசித்திடும் ----- -----
கசிந்திடும் ----- ----- -----

*****
 
பயிற்சி 8. தூங்கிசை யகவல்: ஆசிரியத் தளைகள் மட்டும்: விடை

விண்ணிலும் நிலத்திலும் நிகழும் விந்தை
எண்ணிலே அடங்கிடாக் கணக்கில் ஆகும்
விண்ணிலே நிறம்பல கடிகை காட்ட
மண்ணிலே வசித்திடும் உயிர்கள்
கண்களை விடுத்தவை மறைந்து போமே.

[சீர் நிரல்: கூவிளம்-கருவிளம்-புளிமா-தேமா; சீர்கள்: தேமா=4 மற்றவை=3x5=15
தளை: நிரையொன்றாசிரியத் தளை=10 நேரொன்றாசிரியத் தளை=8; ஓசை: ஒழுகிச்

பயிற்சி 9. தூங்கிசை யகவல்: ஆசிரியம் இயற்சீர் வெண்டளை:
தேமா கூவிளச் சீர்கள்: விடை


விண்ணும் மண்ணும் பண்ணிடும் விந்தைகள்
எண்ணில் வந்திடாக் கோடி கோடியே
விண்ணின் வண்ணம் நாழிகை கட்டவே
மண்ணில் வாழ்ந்திடும் யாவும்
கண்ணை விட்டு மாயமாய்ப் போகுமே.
[தேமா=10 கூவிளம்=9 நேரொன்றாசிரியத் தளை=10 இயற்சீர் வெண்டளை=8 ஓசை: ஒழுகிசை யகவல்]

பயிற்சி 10. தூங்கிசை யகவல்: ஆசிரியம் இயற்சீர் வெண்டளை:
கருவிளம் புளிமாச் சீர்கள்: விடை


விசும்பிலும் நிலத்திலும் நிகழும் வியப்பு
விசித்தலில் அடங்கிடாக் கணக்கில் விரியும்
விசும்பினில் நிறம்பல பொழுதைப் பகுக்க
வசித்திடும் நிலத்தினில் உயிர்கள்
கசிந்திடும் விழிகளை விடுத்துக் கெடுமே.
[சீர்: கருவிளம்:10 புளிமா: 9; தளை: நிரையொன்றாசிரியத் தளை:10 இயற்சீர் வெண்டளை:8 ஓசை: ஒழுகிசை யகவல்]

*****
 
4.8.11. இணைக்குறள் ஆசிரியப்பா

அகவலின் இலக்கணம் தகவுற அமைந்து
ஆதியும் அந்தமும் அளவடி யாகி
இடையிடைச் சீர்கள் அடிகளில் குறைந்து
குறளடி யாகவோ
அன்றிச் சிந்தடி யாகவோ
இணைந்து வருவது இணைக்குறளா சிரியமே.


சிந்தடி முச்சீர் குறளடி யிருசீர்
வந்திடும் அடிகள் என்று
தம்முள் பேதம் உடையன ஆயினும்
அளவடி நோக்க
அளவில் இரண்டுமே குறளெனப் பெயர்பெறுமே.

தொல்காப் பியர்தம் இலக்கண நூலில்
குறள்வெண் பாவும்
சிந்தியல் வெண்பா வகையும்
ஒருங்கு சேர்த்துக் குறுவெண் பாட்டெனக்
கூறுதல் இங்கு நோக்கற் பாலதே.

முதலிலும் ஈற்றிலும் அளவடி வரினும்
’இடைபல குன்றின் இணைக்குறள்’ என்பதில்
இடைபல என்று
காரிகை நூற்பா கூறுவ தாலே
இடைவரும் சிற்றடி யோடு
அளவடி இடைவரல் விலக்கல்ல என்று
உளத்தில் இருத்தல் நன்று
உளதே சான்று மேற்படி யடிகளிலே.

பசுபதி யவர்கள் பேசுதல் போல*
இணைக்குறள் அகவற் பாவின் வடிவம்
இன்றைய புதுக்கவிதை மாதிரி

நன்றே புனைவோம் நாமொரு புதுக்கவிதை
இணைக்குறள் அகவல் வடிவந் தனிலே.
[’கவிதை இயற்றிக் கலக்கு’, பேராசிரிய பசுபதி, பக்.93]

என்னதான் உனக்குப் பிடிக்கும் என்றேன்.
கோபித்துக் கொண்டாள்.
என்னத்தான் உனக்குப் பிடிக்கும்
என்று சொன்னேன் என்றேன்.
ஸ்மார்ட் என்று நினைப்போ?
எனக்கும் என்னத்தான் பிடிக்கும் என்றாள்.
என்முகம் இப்போது
சுருங்குதல் கண்டு
எனக்கும் என்னத்தானைப் பிடிக்கும் என்றேன்
என்றாளே பார்க்கலாம் என்முகம் மலரவே!


*****
 
4.8.12. இணைக்குறள் ஆசிரியப்பா சான்றுகள்

புகழ்மிகு சான்றென இணைக்குறள் அகவலில்
தகவுற ஒலிக்கும் கீழ்வரும் பாடல்
காரிகை தருகிற சான்றாய் வருவது.

சான்று 1.
நீரின் தண்மையும் தீயின் வெம்மையும்
சாரச் சார்ந்து
தீரத் தீரும்
சாரல் நாடன் கேண்மை,
சாரச் சாரச் சார்ந்து,
தீரத் தீரத் தீர்ப்பொல் லாதே.


சிறப்புடை நேரொன் றாசிரி யத்தளை
பெரிதும் பயின்று
ஈற்றய லடிகள் குறளடி சிந்தடி
என்று வந்த சான்றிணைக் குறளிதே.

தலைவனின் பிரிவில் தலைவியின் சொற்களில்
அலையுறும் நெஞ்சின் ஆர்ப்பைக் காட்டும்
இந்தப் பாடலைக் கொஞ்சம் அலசுவோம்.

தொட்டால் சில்லிடும் நீரின் தண்மை
விட்டால் தீர்ந்து மறையும்
அண்மையில் சூடேறும் தீயின் வெம்மை
சேய்மையில் குறைந்து மறையும்
மலைச்சாரல் நாடன் தலைவனின் நட்போ
தலைப்பட்டால் பொல்லாதது!
ஒன்ற ஒன்ற நன்றாய் வளர்ந்து
வந்தபின் பிரிந்தாலோ
தீர்வதே யில்லாமல்
தீயின் வெம்மையால்
நீரின் தண்மையாய்
நெஞ்சினில் சுட்டும் குளிர்ந்தும் நோகுமே!


*****
 
Last edited:
சான்று 2.
இவனினும் இவனினும் இவள்வருந் தினளே
இவளினும் வருந்தினன் இவனே
இவளைக் கொடுத்தோன் ஒருவனும் உளனே
தொடிக்கை பிடித்தோன் ஒருவனும் உளனே
நன்மலை நாடனும் உளனே
புன்னையங் கானற் சேர்ப்பனும் உளனே.

சிறப்புடை நிரையொன் றாசிரி யத்தளை
பயின்று இடையில் சிந்தடி
இரண்டு வந்த சான்றிணைக் குறளிதே.

சான்று 3.
மங்கை மாதவி அரங்கேற்று காதையும் (65)
அந்தி மாலைச் சிறப்புசெய் காதையும்
இந்திர விழவூர் எடுத்த காதையும்
கடலாடு காதையும்
மடலவிழ் கானல்வரியும் வேனில்வந் திறுத்தென
மாதவி இரங்கிய காதையும் தீதுடைக்
...
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
வாழ்த்து வரந்தரு காதையொடு (85)
இவ்வா றைந்தும்
உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இதுபால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்.
---சிலப்பதிகாரம், புகார்க் காண்டம்

சிலம்பின் ஆசிரியப் பாவடிகள் முடிவது
’என்’எனும் ஈற்றசை கொண்ட சீர்களிலே
மேல்வந்த வரிகளிலே
இடையிடைச் சீர்குறைய
இணைக்குறள் ஆசிரியப் பாவென ஆயிற்றே.

4. இணைக்குறள் அகவல் இன்று

பொதுவில் இன்று இணைக்குறள் முயல்வோர்
புதுக்கவிதை போலதை எழுதி
மரபின் தகைமை சேர்த்திட முயல்வரே.

உமா:
http://enathutamilkavithaigal.blogspot.in/

செல்வம் நிலையாமை
இன்றுளது நாளை இல்லா தாகும்
வண்டிச் சக்கரமாய்
வாழ்க்கைச் சுழலும்
வீழ்ச்சியும் எழுச்சியும் என்றும் தொடரும்
மாறும் யாவும்
மனிதர் வாழ்வினில்
வறியர் செல்வர், செல்வர்
வறியர் ஆவர்
அறிவாய் செல்வம் நிற்காது நிலைத்தே!

விழி திறந்து காட்டுவழி
கண்ணை மூடிக் கொண்டது ஏனோ?
கண்ணேயுன் கண்ணின் வெளிச்சமும்
மண்ணின் இருளில்
மறைந்திடா திருக்கவோ?
சொந்த மண்விட்டுன்
செல்லப் பெயர்மறந்(து)
அடையாளங் காட்டி
அழைக்கப் படுதலின் அவலமோ? நீயுன்
அல்லிவிழி மூடிக் கொண்டது?
பதுங்குக் குழியின் இருட்டை சற்றே
மறந்துவிடு கண்ணே!
திறந்துவிடு உன்கண்ணை
பரவவிடு வெளிச்சம்
விழிகளைத் திறந்தே
வழிதனைக் காண்! ஈழத் தமிழர்
இழிநிலை மாற
விலக்குன் கைகளை இலக்கினை எட்டவே!

*****
 
Last edited:
அன்புடையீர் வணக்கம்.

இந்தக் ’கவிதையில் யாப்பு’ தொடரில் நான் அமைத்துள்ள பயிற்சிகள் பற்றி இங்கு ஏதும் பின்னூட்டம் இல்லையெனினும், ஒரு சில ஆர்வலர்களாவது அவற்றை முயன்றுபார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். ஆர்வலர்கள் மேலும் எளிதாக அவற்றை முயலும் வகையின் பரீட்சார்த்த முயற்சியாக ஒரு புதிய வலைதளைத்தைத் தொடங்கியுள்ளேன். முதலிரண்டு தளைப் பயிற்சிகளை அங்கு அமைத்துள்ளேன். இந்தத் தொடரின் வாசகர்கள் அவற்றை முயன்றுபார்த்து இங்குப் பின்னூட்டம் இடுவது எனக்கு மேலும் ஊக்கமும் ஆக்கமும் அளிக்கும்.

http://kavithaiyilyappu.blogspot.in/

அன்புடன்,
ரமணி
 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top