• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கவிதையில் யாப்பு

Status
Not open for further replies.
4.8.13. இணைக்குறள் ஆசிரியப்பா பயிற்சி

நினைவிற் கொள்ள:
அகவலின் இலக்கணம் தகவுற அமைந்து
முதலும் இறுதியும் அளவடி நடுவே
குறளடி சிந்தடி அளவடி
விரவி வருவது இணைக்குறள் ஆசிரியம்.

பயிற்சி 1. கலைந்த சொற்களில் இருந்து கவிதை

கலைந்த சொற்களை ஒழுங்கில் இட்டு
அடிகளின் கொடுத்த அளவினில் அமைய
முதற்சீர் களிலே எதுகை வைத்து
இணைக்குறள் ஆசிரியப் பாவென எழுதுக.

உலகப் அஜென்டா நிழல்களை விஜயம்
சேர்க்கும் மாறவே
சாதித்தே புஜவலி
மாறாதோ? நம்பி கலியுகத்தில்
நிராகரித்து ரஜகுண போக்கின் நிஜங்களை


*****
 
பயிற்சி 1. கலைந்த சொற்களில் இருந்து கவிதை: விடை

நிஜங்களை நிராகரித்து நிழல்களை நம்பி
புஜவலி சாதித்தே
விஜயம் சேர்க்கும்
ரஜகுண உலகப் போக்கின்
அஜென்டா கலியுகத்தில் மாறவே மாறாதோ?

*****
 
பயிற்சி 2. சொற்களில் இருந்து பிறக்கும் கவிதை

கீழ்வரும் சொற்களை அவற்றின் அடிகளில்
சீர்களாய் விரித்து எண்சுட்டும் தளையமைத்து
இணைக்குறள் ஆசிரியப் பாவர எழுதுக
’பொற்பிலே நிலாவினைப்’ என்று விரித்ததை
முதலிரண்டு சீர்களின் சான்றெனக் கொண்டே.

பொற்பு1 நிலா2 பழித்தல்3 பெண்-உன்!4
வில்-புருவம்5 நான்6 வதைத்தல்!7
பற்கள்8 முத்து-ஒளி!9
சொற்கள்10 சிதறுதல்11 சோழிகள்!12
நில்13 சிலையென!14
சிறு-இடை15 துவளுதல்16 நடை17
பலபல18 உவமை19 தெறித்தல்20
கற்பனை21 மீறுதல்22 கவினுறுதல்23 அழகே!


1நிஆ 2நிஆ 3நேஆ 4வெவெ
5வெவெ 6இவெ 7நேஆ
8இவெ 9இவெ
10நிஆ 11நேஆ 12இவெ
13நிஆ 14இவெ
15நிஆ 16இவெ 17நேஆ
18நிஆ 19நிஆ 20நேஆ
21வெவெ 22இவெ 23நிஆ


*****
 
பயிற்சி 2. சொற்களில் இருந்து பிறக்கும் கவிதை: விடை

பொற்பிலே நிலாவினைப் பழிக்கும் பெண்ணேயுன்
விற்புருவம் என்னை வதைக்கும்!
பற்களில் முத்தொளி!
சொற்களில் சிதறும் சோழிகள்!
நிற்பதில் சிலையென!
சிற்றிடை துவளும் நடையில்
பற்பல உவமைகள் தெறிக்கக்
கற்பனையை மீறிக் கவினுறும் அழகே!

*****
 
4.8.14. நிலைமண்டில ஆசிரியப்பா

(நிலைமண்டில ஆசிரியப்பா)
மண்டிலம் எனும்சொல் வட்டம் எனப்பொருள்
மண்டிலம் மையம் இருந்து புறப்படும்
தண்டுகள் யாவும் அளவினில் சமம்போல்
மண்டில அகவற் பாவடி அனைத்தும்
அளவடி யென்று நாற்சீர் நிலைக்க
நிலைமண்டில ஆசிரியப் பாவெனும் பெயரே.

அகவலின் இலக்கணம் தகவுற அமைந்து
அடிகள் அனைத்தும் அளவடி யாகி
அகவலின் முடிவினை ஈற்றசை பெற்றிடும்
வகையே நிலைமண்டில ஆசிரியப் பாவே.


நிலமண் டிலத்தின் இன்னொரு சிறப்பாம்
நிலைபெறும் அளவடி அமைப்பின் நடுவில்
யாப்பில் சேராது பொருளினை விரித்தோ
மாற்றியோ வருகிற தனிச்சொல் என்பதே.
நிலைமண்டில அகவற் பாவகைத் தனிச்சொல்
நிலைமண் டிலத்தில் அருகியே வருமாம்.

கவிஞனின் மனமே மையம் என்றால்
கவிஞன் சொற்களில் அளவடி அமைந்து
கவிதை மண்டிலம் போலப் பரவிக்
கவிதைச் சக்கரம் சுழன்று சுழன்று
கவினுறச் செய்நிலை மண்டில அகவலே.

*****
 
4.8.15. நிலைமண்டில ஆசிரியப்பா சான்றுகள்

சான்று 1.
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சார னாட செவ்வியை யாகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரற்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே.
---கபிலர், குறுந்தொகை 18


(கலிவிருத்தம்)
தலைவனின் களவில் தலைவியின் காதல்
அலைபோ லெழுந்து உயிரை வதைக்கத்
தலைவனிடம் தோழி தலைவியை மணம்கொளத்
தலைப்படு மாறு தெளிவுரை கூறினாளே.

(நிலைமண்டில ஆசிரியப்பா)
வேரல் என்பது மலைவிளை மூங்கில்
சாரல் என்பது மலையினைக் குறிக்கும்
வேரல் மரமே வேர்ப்பலா வேலியாகும்
சாரல் நாட! செவ்விய மதியுடன்
வரைக தலைவியை மணத்தில்! ஏனெனில்
வேர்ப்பலா காம்பென அவளுயிர் சிறிது
வேர்ப்பலா போன்றவள் காதல் பெரிது
பழமது மிகவும் பழுத்து விழுந்தால்
உழன்றிடும் உயிரே நீங்கிடும் அன்றோ?

*****
 
சான்று 2.

ஆக்கப் படுக்கு(ம்) அருந்தளைவாய்ப் பெய்விக்கும்
போக்கப் படுக்கும் புலைநரகத் துய்விக்கும்
காக்கப் படுவன விந்திரிய மைந்தினும்
நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே
---வளையாபதி 13.

பொருள்:
ஆக்கம் தந்திடும் காவலில் தள்ளிடும்
ஊக்கத் துய்த்திடும் நரகத் துழல்விக்கும்
காக்க வேண்டிய கரணம் ஐந்தில்
நாக்கின் அளவு எதுவும் இல்லையே.

சான்று 3.
தனிச்சொல் பெற்றுவந்த நிலைமண்டில ஆசிரியப்பா


வெற்றி கூறுமின்! வெண்சங் கூதுமின்!
கற்றவ ராலே உலகுகாப் புற்றது;
...
இற்றைநாள்
பாரி லுள்ள பலநாட் டினர்க்கும்
பாரத நாடு புதுநெறி பழக்கல்
...
கற்றோர் தலைப்படக் காண்போம் விரைவிலே.
---பாரதியார், பாரத மாதா நவரத்தின மாலை

*****
 
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அடிகள் தோறும் அகவற் பாவில்
ஈரடிக் கொருமுறை எதுகை வருதல்
செய்யுள் ஓசை சிறக்க உதவுமே.
அத்துடன்
அகவற் பாவின் அடிகள் தன்னின்
தகவுற மோனை சீரொன்றில் மூன்றில்
வந்திடச் செய்யுளின் ஓசை சிறக்கும்
அந்த வகையில் அமைவது இன்றேல்
சீர்கள் ஒன்றிலும் மூன்றிலும் எதுகை
நேர்வர மோனைக் குறைவு நீங்கும்
இப்படி அமைந்த சான்றுகள் கீழே.

சான்று 4.
(நிலைமண்டில ஆசிரியப்பா)

வருணன் சேர்ப்பன் விரிதிரைப் புலம்பன்
பரும அல்குற் பரத்தி நுளைச்சி
நுளையர் நுளைச்சியர் பரதர் பரத்தியர்
அளவர் அளத்தியர் அலைகடற் காக்கை
சுறவம் பாக்கம் பெறலரும் பட்டினம்
உவர்நீர்க் கேணி கவர்நீர் நெய்தல்
கண்டகக் கைதை முண்டகம் அடம்பு
கண்டல் புன்னை வண்டிமிர் ஞாழல்
புலவ மீனுப்பு விலைகளிற் பெற்றன
நளிமீன் கோட்பறை நாவாய்ப் பம்பை
விளரியாழ் செவ்வழி மீனுப்புப் படுத்தல்
உணங்கவை விற்றன்மீன் உணக்கல்புள் ளோப்பல்
நெடுங்கட லாடல் நெய்தற்கருப் பொருளே.
--நெய்தலின் கருப்பொருள் நிரல்,
அகப்பொருள் விளக்கம், நாற்கவிராச நம்பி


கபிலர், குறிஞ்சிப் பாட்டு:
விரிமல ராவிரை வேரல் சூரல்
குரீ*இப் பூளை குறுநறுங் கண்ணி
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங்
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்த
றாழை தளவ முட்டாட் டாமரை .... 80

*****
 
4.8.16. நிலைமண்டில ஆசிரியப்பா பயிற்சி

பயிற்சி 1. பொழிப்பு எதுகை அடிகள்

கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
சிலப்பதி கார அடிகள் ஐந்தும்
கலந்தரு முதற்சொல் இறுதியாய் வீதியும்
நலம்பட அமைத்து ஒவ்வொரு அடியிலும்
பொழிப்பு எதுகை வருவது கண்டு
விழிப்புடன் அமைத்து எழுதுக நன்றே.

பூவும் வண்ணமுஞ் கலந்திருந் சுண்ணமுந்
துறையும் திரிதரு நகர வரைப்பும்
புகையும் தண்ணறுஞ் புலம்பெயர் விரையும்
இலங்குநீர் வீதியும் மாக்கள் கலந்தரு
சாந்தமும் பகர்வனர் திருவிற் மேவிய


பயிற்சி 2. பொழிப்பு மோனை அடிகள்

கலைந்த சொற்களை ஒழுங்கில் அமைத்து
பாரதி யாரின் அடிகள் நான்கும்
புதியது முதற்சொல் இறுதியாய் வீழ்வாய்
விதியுடன் அமைத்து ஒவ்வொரு அடியிலும்
பொழிப்பு மோனை வருவது கண்டு
விழிப்புடன் அமைத்து எழுதுக நன்றே.

அடிக்கடி விரும்புவாய் பழமையாம் வண்டுபோல்
பரிந்துபோய் புலனழிந் அணுகிடும் காணிற்
திடுவாய் புதியது மதுவினை பொருளிற்
புதியதை வீழ்வாய் அஞ்சுவாய் புதியது


*****
 
4.8.16. நிலைமண்டில ஆசிரியப்பா பயிற்சி: விடைகள்

பயிற்சி 1. பொழிப்பு எதுகை அடிகள்: விடை

கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்
வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும்
பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும்
--சிலப்பதிகாரம் 1.5.11-15

பயிற்சி 2. பொழிப்பு மோனை அடிகள்: விடை

புதியது காணிற் புலனழிந் திடுவாய்
புதியது விரும்புவாய் புதியதை அஞ்சுவாய்
அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல்
பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்
--மஹாகவி பாரதியார், மனப்பெண்

*****
 
4.8.17. அடிமறிமண்டில ஆசிரியப்பா

(அடிமறிமண்டில ஆசிரியப்பா)
மறித்தல் என்றால் தடுத்தல் திரும்புதல்
நிலைமண் டிலத்தில் நிலைத்த அடிகள்
அடிமறி மண்டிலம் எவ்வடி எங்குமே
அடிகள் மாறினும் பொருள் மாறாது
அடிகள் மறித்தும் ஓசை வழுவாது

அகவலின் இலக்கணம் தகவுற அமையுமே
அடிகள் யாவும் அளவடி யாகுமே
அகவலின் முடிவினை ஈற்றசை பெறுமே
யாதொரு அடியும் எங்கும் வருமே
அடிகள் மாறினும் பொருள்மா றாதே
அடிகள் மாறினும் ஒலிவழு வாதே
அடிகள் எதுகையில் ஒன்றுதல் சிறப்பே
அடிகளில் பொழிப்பு மோனை சிறப்பே


சான்று 1.
சூரல் பம்பிய சிறுகான் யாறே
சூரர மகளிர் ஆரணங் கினரே
சாரல் நாட நீவரல் ஆறே
வாரல் எனினே யானஞ் சுவளே.
--யா.கா.மேற்கோள்


சான்று 2.
தீர்த்த மென்பது சிவகங் கையே
மூர்த்தி யம்பலக் கூத்தன துருவே
ஏத்த ருந்தல மெழிற் புலியூரே.
--குமரகுருபரர், சிதம்பர செய்யுட் கோவை 26


*****
 
4.8.18. அடிமறிமண்டில ஆசிரியப்பா முயற்சி

(அடிமறிமண்டில ஆசிரியப்பா)
அடிமறி மணிடில அகவல் புனையவே
அடிகள் தோறும் பொருளது முடியுமே
அடிகள் எதுகையில் ஒன்றுதல் சிறப்பே

முயற்சி 1.
ஆடல் நாயகன் தோடுடைச் செவியனே
கூடல் மாநகர்க் கூத்தன் பித்தனே
தேடல் ஓயத் திருவருள் செய்வனே
பாடிப் பரவுவோம் பரமன் புகழையே

முயற்சி 2.
நாளை நடப்பதை யாரே அறிவார்
காளை மாடு கன்றுகள் ஈனலாம்
பாளை பிளைந்து பாறை தோன்றலாம்
கூளம் யாவும் காஞ்சனம் ஆகலாம்

முயற்சி 3.
மழுவும் மானும் மகேச்சுரன் கையிலே
பழுதையும் பாம்பும் பரமன் உருவாம்
கழுதையும் கூடக் கடவுள் வடிவமே
கொழுகொம் பாவது கூத்தனின் அடியே

*****
 
4.8.19. அடிமறிமண்டில ஆசிரியப்பா பயிற்சி

பயிற்சி 1. அடிமறிமண்டில அகவல் அமைத்தல்

(அடிமறிமண்டில ஆசிரியப்பா)
கலைந்த சொற்களை நான்கடி களிலே
மா-யா ஏ-கூ முதற்சீ ராகவே
அடிமறி மண்டில அகவல் ஆக்குக

தனரே காதலர் கட்பனி தோழியான்
வரலா வளைநெகி மென்தோள் ழும்மே
யாறாக் னாவே மாறே மாறாக்
வாழு கூறாய் ஏறா மலைமறந்

பயிற்சி 2. அடிமறிமண்டில அகவல் இயற்றல்

(அடிமறிமண்டில ஆசிரியப்பா)
கீழ்வரும் சொற்களை நான்கடி களிலே
ஒன்-கன் சென்-நின் முதற்சீ ராகவே
அடிமறி மண்டில அகவல் இயற்றுக

தாயில் ஒன்றாய் கன்றில் தாயும்
அன்றும் வந்தது வருமே ஒன்று
என்றும் செல்லுமே சென்றது விளங்குமே
கன்றுமே ஒன்றே நின்றது என்றுமே

*****
 
7.0. கலிப்பா

[நால்வகைப் பாக்களில் இயற்றுதற்குக் கடினமானதும், அமைப்பிலே அழகானதும், பத்துவகைகளில் வந்துநின்று, துள்ளலோசையுடன் பிறவோசைகளும் கலந்துவரும் ஒலிச்சரமே கலிப்பாவாம். நான் பயிலும்வரையில் கலிப்பாவின் இலக்கணத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கலிப்பாவின் வகைகளையே பயன்படுத்தி இங்குப் பதிகிறேன். ஆர்வலர்கள் ஊன்றிப் படித்தும் புலவர்கள் பிழைதிருத்தியும் பின்னூட்டம் இடுவார்களாக.
--ரமணி, 18/02/2013]

(நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா)
தரவு
கலியென்ற பெயர்ச்சொல்லே ஒலியென்ற பொருள்தவிர
வலியாகும் கடலாகும் செருக்காகும் தழைப்பாகும்
கலியென்றால் நடுக்கமுடன் மனவெழுச்சி யெனப்பொருளே
கலித்தலெனும் வினைச்சொல்லில் களித்தலுடன் எழுதலுடன்
ஒலித்தலுடன் தழைத்தலுடன் பெருக்கலுடன் நெருக்கலென்று
பெருகிவரும் பொருள்பலவும் கலிப்பாவில் வரக்காண்பீர்!

[சீரிடை அடியிடை யெங்கும் கலித்தளையே வருவதால்
இங்கு ஏந்திசைத்துள்ளலோசை எழுவது காண்க.]

தாழிசை
கலிப்பாவில் ஒலித்துள்ளல் செழித்தோங்கி வரக்கேட்போம்
கலிப்பாவில் அடிகளிலே எழுச்சியுண்டு வலிமையுண்டு (1)

கலிப்பாவம் போதரங்கம் கடலலைபோல் சுருங்கிவர
அடிபலவே அமைந்துவந்து பொருளதுவின் பெருமைபேசும் (2)

தரவினிலே பொருள்தொடங்கித் தாழிசையி லேவிரிந்து
அராகத்தில் விளக்கியேயம் போதரங்கம் புகழ்கூற (3)

தனிச்சொல்
தனிச்சொல்லுடன்

சுரிதகம் (ஆசிரியச் சுரிதகம்)
சுரிதகம் எனப்படும் முடிவுறும் உறுப்புடன்
துரிதமும் எழுச்சியும் துளக்கமும் தழைத்தலும்
நெருக்கமும் பெருக்கமும் ஒலித்தலும் பெறவரும்
பெருமையை உடையது கலிப்பா என்பதே!

*****
 
7.1. கலிப்பாவின் பொது விலக்கணம்

தரவு (முகப்பு)
வெண்சீரே மிகப்பெற்று விளங்கனிச்சீர் மாச்சீரும்
ஒண்ணாது விலக்கியே இயற்சீரில் விளச்சீர்வரக்
கலித்தளையே கலித்துவந்து அயற்றளையும் விரவிவந்து
தரவுடனே தாழிசையும் அராகமும் வருவதுடன்
அம்போத ரங்கம்பின் தனிச்சொல்லும் சுரிதகமும்
எனுமாறு உறுப்புகளில் ஏற்பதெல்லாம் தேர்ந்தெடுத்து
கலியோசைத் துள்ளலிலே மெலிவின்றித் துலங்கிவர
நாற்சீரின் அளவடியால் நடப்பதுவே கலிப்பாவாம்.


தாழிசை (விளக்கம்)
வெண்பாவின் உரிச்சீராய் விளங்குவது வெண்சீரே
வெண்சீரெனக் காய்ச்சீர்கள் நால்வகையும் பெயர்பெறுமே.
விலக்கிடும் மாச்சீர்கள் தேமாவும் புளிமாவும்
விலக்கிடும் விளங்கனிச்சீர் நிரைநடுவாம் கனிச்சீர்களே. (1)

[நிரைநடுவரும் கனிச்சீர்களாவன: கூவிளங்கனி, கருவிளங்கனி;
இவை கலிப்பாவில் வரக்கூடாது என்பதால் பெயர் குறிக்கவில்லை.]

கலித்தளையில் காய்முன்நிரை வரவொலிக்கும் துள்ளலோசை.
கலித்தளையே பயில்நிரல்கள் கருவிளங்காய் புளிமாங்காய்.
இயற்சீர்க்கூ விளம்-அருகக் கருவிளமே மிக்குவரும்.
அயற்றளையும் கலிப்பாவில் மயங்கிவரும் கலித்தளையுடன். (2)

பத்துவகைக் கலிப்பாவென மொத்தமாக இருப்பதிலே
ஒத்தவகை பொறுத்தாறு உறுப்புகளில் சிலபலவே.
கலிப்பாவின் உறுப்புகளில் அடிகள்பல வரவிவரும்.
கலிச்சுருக்கம் நாலடியே கலிப்பெருக்கம் புலவருளம். (3)

தனிச்சொல்
கலியொலியில்

சுரிதகம் (ஆசிரியச் சுரிதகம்: முடிவு)
கலித்தளை தனிவர ஏந்திசைத் துள்ளலே
கலித்தளை வெண்டளை அகவற் றுள்ளலே
கலித்தளை பிறதளை பிரிந்திசைத் துள்ளலே.

*****
 
7.2. கலிப்பாவின் சீரும் தளையும்

(தரவுக் கொச்சகக் கலிப்பா)
கலிப்பாவில் வரும்சீர்கள் கைவிரித்துக் கூறிடுவோம்.
கலித்தளையே பொதுவில்வரச் கலிச்சீர்கள் அமைந்திடுமே.
கலித்தளையில் காய்முன்நிரை காணுகின்ற நிரல்நோக்கின்
புளிமாங்காய் கருவிளங்காய் எனுமிரண்டு காய்ச்சீரே.

சான்று 1. (கலித்தளை, வெண்டளை, ஆசிரியம்)
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே.
--யா.கா.மே.கோ. 11

சீர்கள்:
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய்
தேமாங்காய் புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய்
கூவிளம் புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய்
கூவிளம் புளிமாங்காய் புளிமாங்காய் கருவிளம்

தளைகள்:
தேமாங்காய் -(கலி)- புளிமாங்காய் -(கலி)- கருவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(வெவெ)-
தேமாங்காய் -(கலி)- புளிமாங்காய் -(கலி)- கருவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(வெவெ)-
கூவிளம் -(நிஆ)- புளிமாங்காய் -(கலி)- கருவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(வெவெ)-
கூவிளம் -(நிஆ)- புளிமாங்காய் -(கலி)- புளிமாங்காய் -(கலி)- கருவிளம்

***

காய்ச்சீர்கள்:
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
மூவசையில் உருவாகும் காய்ச்சீர்கள் நான்கினுள்ளும்
கருவிளங்காய் புளிமாங்காய் கலித்தளையாய் மிகவரினும்
கூவிளங்காய் தேமாங்காய்ச் சீர்களுமே உடன்வரலாம்
கலித்தளையும் வெண்டளையும் கலந்துவரும் கலிப்பாவிலே.

சான்று 2. (கலித்தளை வெண்சீர் வெண்டளை)
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

வெண்ணிலவின் தண்ணொளியில் கண்ணயர்ந்து உறங்குகையில்
கண்ணனவன் பண்ணிசைத்துக் குழலூதக் கனாக்கண்டேன்
வண்ணமயில் இறகணியும் விண்ணவனின் கழலிணைகள்
நண்ணவரும் பேரின்பம் திண்ணனவன் தந்தானே!

சீர்கள்:
கூவிளங்காய் கூவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்
கூவிளங்காய் கூவிளங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்
கூவிளங்காய் கருவிளங்காய் கூவிளங்காய் கருவிளங்காய்
கூவிளங்காய் தேமாங்காய் கூவிளங்காய் தேமாங்காய்

தளைகள்:
கூவிளங்காய் -(வெவெ)- கூவிளங்காய் -(வெவெ)- கூவிளங்காய் -(கலி)- கருவிளங்காய் -(வெவெ)-
கூவிளங்காய் -(வெவெ)- கூவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(கலி)- புளிமாங்காய் -(வெவெ)-
கூவிளங்காய் -(கலி)- கருவிளங்காய் -(வெவெ)- கூவிளங்காய் -(கலி)- கருவிளங்காய் -(வெவெ)-
கூவிளங்காய் -(வெவெ)- தேமாங்காய் -(வெவெ)- கூவிளங்காய் -(வெவெ)- தேமாங்காய்

***

கனிச்சீர்கள்:
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
மூவசையில் உருவாகும் கனிச்சீர்கள் நான்கினுள்ளும்
நிரைநடுவாம் விளங்கனிச்சீர் இருவகையும் கூடாது
தேமாங்கனி புளிமாங்கனி என்றிரண்டு சீர்களுமே
ஏலாத தாகாது என்றாலும் அருகிவரும்.

சான்று 3. (கருவிளங்கனி கூவிளங்கனி வரக் கலித்தளை குன்றி கலிவிருத்தமாதல்)
(கலிவிருத்தம்)

படபடவெனச் சிறகடித்திடப் பறவையொன்று பறந்தபொழுது
தடுமாறியே செயலிழந்தான் குகைமுகப்பினைக் கைப்பிடித்திட.
உடன்வந்த துணைமனிதனும் விடையறிந்திட முடியாமலே
படபடத்திடும் இதயத்துடன் ஒதுங்கிநின்றவன் ஒளிந்துகொண்டான்.

கருவிளங்கனி கருவிளங்கனி கருவிளங்காய் கருவிளங்கனி
புளிமாங்கனி கருவிளங்காய் கருவிளங்கனி கூவிளங்கனி
புளிமாங்காய் கருவிளங்கனி கருவிளங்கனி புளிமாங்கனி
கருவிளங்கனி புளிமாங்கனி கருவிளங்கனி கருவிளங்காய்

(விளங்கனிச் சீர்களை விலக்கக் கலித்தளை மிக்கு கலிப்பாவாதல்)
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
படபடக்கும் சிறகடித்துப் பறவையொன்று பறந்தபோது
தடுமாறியே செயலிழந்தான் குகைமுகப்பைக் கைபற்றிட.
உடன்வந்த துணைவனவன் விடைகாண முடியாமல்
படபடக்கும் இதயத்துடன் ஒதுங்கிநின்றே ஒளிந்துகொண்டான்.

கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய் கருவிளங்காய்
புளிமாங்கனி கருவிளங்காய் கருவிளங்காய் தேமாங்கனி
புளிமாங்காய் கருவிளங்காய் புளிமாங்காய் புளிமாங்காய்
கருவிளங்காய் புளிமாங்கனி கருவிளங்காய் கருவிளங்காய்

***

இயற்சீர்கள்:
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
ஈரசையில் உருவாகும் இயற்சீர்கள் நான்கினுள்ளும்
சேராத சீர்களெனத் தேமாவும் புளிமாவும்.
எஞ்சியுள்ள சீர்களிலே கருவிளமிகக் கூவிளமே
கொஞ்சமாகப் பொதுவினிலே அடிமுதற்சீ ரெனவருமே.
இயற்சீருடன் காய்ச்சீர்கள் உடன்வரவே இயன்றுவரும்
இயற்றளையும் வெண்டளையும் கலித்தளையுடன் கலிப்பாவிலே.

சான்று 4. (கூவிளம் கருவிளம்; அகவற்றளை, வெண்டளை, கலித்தளை)
(தரவுக் கொச்சகக் கலிப்பா)

தேன்மலர்ப் பொழிலினில் தேமதுரத் தமிழ்ப்பண்ணில்
பாநயம் மிகுந்திட நாயகனின் புகழ்போற்றிக்
கவிமழை பொழிந்திடவே கடைக்கண்ணால் பார்த்தெனை
புவியினில் நிறுத்திடவே பகவானை வேண்டுவேன்.

சீர்கள்:
கூவிளம் கருவிளம் கூவிளங்காய் புளிமாங்காய்
கூவிளம் கருவிளம் கூவிளங்காய் புளிமாங்காய்
கருவிளம் கருவிளங்காய் புளிமாங்காய் கூவிளம்
கருவிளம் கருவிளங்காய் புளிமாங்காய் கூவிளம்

தளைகள்:
கூவிளம் -(நிஆ)- கருவிளம் -(இவெ)- கூவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(வெவெ)-
கூவிளம் -(நிஆ)- கருவிளம் -(இவெ)- கூவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(கலி)-
கருவிளம் -(நிஆ)- கருவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(வெவெ)- கூவிளம் -(நிஆ)-
கருவிளம் -(நிஆ)- கருவிளங்காய் -(கலி)- புளிமாங்காய் -(வெவெ)- கூவிளம்

*****
 
7.3. கலிப்பாவின் ஓசை வகைகள்

(தரவுக் கொச்சகக் கலிப்பா)
கலிப்பாவின் அடிகளிலே வருகின்ற தளைவகைகள்
கலிப்பாவின் துள்ளலினை மூவகையாய்ப் பிரிவுறுத்தும்
ஏந்திசைச் துள்ளலோசை அகவலின் துள்ளலோசை
பிரிந்திசைத் துள்ளலோசை எனமூன்று வகைகளிலே.

கலித்தளையே பயின்றுவரக் கேட்குமொலி ஏந்திசையாம்
கலித்தளையும் வெண்டளையும் விரவிவர அகவலெழும்
கலித்தளையும் பிறதளையும் விரவிவரப் பிரிந்திசையே

கலிப்பாவில் இவ்வாறு மூன்றுவகைத் துள்ளலோசை.

ஏந்திசைத் துள்ளல்
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
முருகவிழ்தா மரைமலர்மேல் முடியிமையோர் புடைவரவே,
வருசினனார் தருமறைநூல் வழிபிழையா மனமுடையார்,
இருவினைபோய் விழமுனியா வெதிரியகா தியையரியா,
நிருமலராய் அருவினராய் நிலவுவர்சோ தியினிடையே
--யா.கா.மே. 22

அகவற் றுள்ளல்
செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்த சினவாழி
முல்லைத்தார் மறமன்னர் முடித்தலையை முருக்கிப்போய்
எல்லைநீர் வியன்கொண்மூ இடைநுழையும் மதியம்போல்
மல்லலோங் கெழில்யானை மருமம்பாய்ந் தொளித்ததே.
--யா.கா.மே.கோ. 11

பிரிந்திசைத் துள்ளல்
குடநிலைத் தண்புறவில் கோவலர் எடுத்தார்ப்ப
தடநிலைப் பெருந்தொழுவில் தகையேற மரம்பாய்ந்து
வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனத் தேறப்போய்க்
கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப
--யா.கா.மே. 22

*****
 
7.4. கலிப்பாவின் அடி

அடி வகைகள்
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
பலவடிகள் பயின்றுவரும் ஒலிச்சரமே கலிப்பாவாம்
கலிப்பாவின் அடியெனவே அளவடியே ஆனாலும்
அம்போத ரங்கத்தில் சிந்தடியும் குறளடியும்
அராகத்தில் அளவடிபின் நெடிலடியும் கழிநெடிலும்
ஆசிரியச் சுரிதகத்தில் ஈற்றயலில் சிந்தடியும்
வெண்பாவடிச் சுரிதகத்தில் ஈற்றடியே சிந்தடியும்
கலிவெண்பா ஈற்றடியில் சிந்தடியும் வந்துநிற்கும்.

சிற்றெல்லை பேரெல்லை
(தரவுக் கொச்சகக் கலிப்பா)
கலிப்பாவின் சிற்றெல்லை நான்கடியாய் இருந்தாலும்
கலிப்பாவின் உறுப்புகளில் அடியெல்லை வேறுபடும்
தரவினிலே மூன்றுமுதல் பன்னிரண்டு அடிகள்வர
தரவதுவே கலிப்பாவின் முகவுரையாய் அமைந்துநிற்கும்.

தாழிசைகள் இரண்டுமுதல் அடிநான்கில் வந்துநின்று
தாழிசையெண் மூன்றுமுதல் ஆறெனவே பெருகிவந்து
தாழிசையே ஒவ்வொன்றும் அடிக்கணக்கில் தரவைவிடத்
தாழ்ந்துவந்து தரவுசொல்லும் பொருள்விரித்துப் பாடிடுமே.

அராகத்தின் சிறுமைநான்கு பெருமையே எட்டடிகள்
அம்போத ரங்கத்தில் அடிகளின்சீர் வேறுபடும்
நாற்சீரடி ஈரடியாய் இரண்டடிகள் முதலில்வர
நாற்சீரடி ஓரடியாய் நான்கடிகள் அதன்பின்வர
முச்சீரடி எட்டடியும் இருசீரடி பதினாறும்
தொடர்ந்துவர அம்போத ரங்கமது முடிவடையும்
சிறுபான்மை இவைநான்கும் அடியெண்ணில் பாதிவரக்
கடலைபோல் எழுந்தோங்கிக் கடைசியிலே சுருங்கிவரும்.

சுரிதகத்தின் இருவகையின் வகைபொறுத்து அடியெல்லை
வெண்பாவிற் கிரண்டடியும் அகவற்கு மூன்றடியும்
அடிச்சிறுமை யாவதாலே வெள்ளைச்சுரி தகம்மற்றும்
ஆசிரியச் சுரிதகத்தின் அடிச்சிறுமை இவையேயாம்
அடிப்பெருமை பொதுவாகப் புலவருளம் எனவுரைப்பர்.

*****
 
7.5. கலிப்பாவின் உறுப்புகள்
(வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா)

தரவு (பன்னிரண்டடி)
கலிப்பாவின் உறுப்புகளாய்க் குதிர்ந்துவரும் மூவிரண்டில்
ஒலித்துள்ளல் ஒலியகவல் ஒலிச்செப்பல் எழவருமே
தரவொன்றும் தாழிசையும் தனிச்சொல்லும் சுரிதகமும்
உருவாகிப் பொதுவுறுப்பு எனவந்து இயல்வதுடன்
சிறப்புறுப்பாய்ச் சிலவகையில் அம்போதரங் கம்-அராகம்
உறுப்புகளும் இடைவந்து உவகைதர இயன்றிடுமே.
தருவதனால் முதலுறுப்பு தரவென்ற முகப்பாகும்
எருத்தமென்றும் பெயருடைய இவ்வுறுப்பு அளவடியில்
பெரும்பாலும் விளச்சீரும் காய்ச்சீரும் பெறவருமே
சிற்றெல்லை மூன்றடியும் பேரெல்லை பன்னிரண்டும்
பெற்றுவரும் தரவொன்றே பொதுவாக வந்தாலும்
அரிதாக இருதரவும் வருகின்ற கலியுண்டே.

[எருத்தம்=பிடரி]

தாழிசை
தாழிசையில் தரவைவிடக் குறைவடிகள் வரவேண்டும்
தாழிசையின் அடியெல்லை இரண்டுமுதல் நான்குவரை
தாழிசைகள் வழக்கத்தில் மூன்றல்லது ஆறுவரும்
தாழிசைகள் பன்னிரண்டு வரும்கலிகள் அரிதாமே. (1)

இசைதாழ்ந்து ஒலிப்பதனால் இதன்பெயரே தாழிசையாம்
இடைநிலைப் பாட்டென்றும் இவ்வுறுப்புப் பெயர்பெறுமே
இடைநின்று தரவின்பின் சுரிதகம்முன் வரும்தாழிசை
விடைதந்து தரவுரைக்கும் பொருள்விரித்துப் பாடிடுமே. (2)

தாழிசைகள் அடியெண்ணில் ஒத்துவரும் தம்முள்ளே
தாழிசைகள் அடுக்கிவந்து தரவழைத்த பொருள்விரிக்கும்
தரவதுவே தன்னளவில் தனிநபரை அழைப்பதென்றால்
வருபவன்கண் வினாக்கேட்டு விடையளிக்கும் தாழிசையே. (3)

அராகம்
முடுகியல் அடிகளில் கடுகியே நடந்திடும்
அடுக்கியல் வண்ணகம் முடுக்கியல் எனப்படும்
அராகமே கருவிளம் பெரிதுமே பயின்றிடப்
பொருளினைப் புகழ்ந்து வருணணை யில்தரும். (1)

முடுகியல் என்றது முடுகிச் செல்வதால்
அடுக்கியல் என்றது சீர்களின் செறிவினால்
வண்ணகம் என்றது வருணனைப் புகழ்ச்சியால்
பண்ணினைக் குறித்திடும் ராகமே அராகமாம். (2)

அளவடி நெடிலடி கழிநெடி லடிகளில்
சிறுமையில் நான்கும் பெருமையில் எட்டென
அடிகளின் எல்லையில் இயன்றிட வருவதே
முடுகியல் அராகமாம் மூன்றாம் உறுப்பென. (3)

கருவிளச் சீர்களே பெரிதெனப் பயில்வதால்
குறில்களின் தொடர்ச்சியில் முடுகியல் நடந்திட
செறிந்திடும் சீர்களின் ஓசைச் சிறப்பினில்
விரைந்தே பொருளினை வருணிப்ப தராகமே. (4)

அம்போதரங்கம்
(நாற்சீரீரடி: பேரெண்: 2)
அம்பென்றால் கடலாகும் தரங்கமே பேரலையாம்
அம்போ தரங்கம் கடலெழும் பேரலையாம்;

நாலசைச் சீர்ப்பெயராம் அம்-போ தரங்கமே
நேரோங்கி நிரைசுருங்கிக் கரைசேரும் அலையொக்கும்.

(நாற்சீரோரடி: அளவெண்: 4)
ஓரசை வருவதால் அசையடி இதன்பெயர்;
சீரே சொல்லெனச் சொற்சீ ரெனும்பெயர்;
குறளடி பயிவதால் பிரிந்திசைக் குறளாம்;
வரும்சீர் எண்களில் குறைவதால் எண்ணாம்.

(முச்சீர் ஓரடி: இடையெண்: 8)
நாற்சீர் ஈரடி இரண்டு;
நாற்சீர் ஓரடி நான்கு;
முச்சீர் ஓரடி எட்டு;
இருசீர் ஓரடி பதினாறு;
ஈரடி இரண்டும் பேரெண்;
ஓரடி நான்கும் அளவெண்;
ஓரடி எட்டும் இடையெண்;
ஓரடி பதினாறும் சிற்றெண்.

(இருசீர் ஓரடி: சிற்றெண்: 16)
முதலில் பேரெண்;
அடுத்தது அளவெண்;
பின்னர் இடையெண்;
இறுதியில் சிற்றெண்;
தரவில் அறிமுகம்;
தாழிசை விரிப்பு;
அராகம் வர்ணணை;
அசையடி என்செயும்?
ஒன்றினைப் போற்றும்;
அருள்வது பேசும்;
உருவம் பேசும்;
அருவம் பேசும்;
பெருமை பேசும்;
வினைகள் பேசும்;
விளைவுகள் பேசும்;
வீரம் பேசும்;

தனிச்சொல்
எனவாங்கு

சுரிதகம் (நேரிசை ஆசிரியச் சுரிதகம்)
சுரிதகம் முன்வரும் ஐந்தாம் உறுப்பாம்
பொருள்நிறை யொருசொல் தனிச்சொல் என்பது
இரண்டோ மேலோ சீர்கள் பெற்று
சுரிதகத் துடன்பிற உறுப்புகள் இணைத்தும்
அலகினில் வராது ஒலியினிற் சேராது
சுரிதகத் துடனும் முன்னுறுப் புடனும்
தொடர்புக ளின்றித் தனியே நிற்குமே.
இருசொல் லாவதால் தொடர்மொழி யெனப்பெயர்.
ஓரோசை யிலிருந்து மற்றோர் ஓசைவரக்
காரண மாக உள்ளதால் விட்டிசை.
நேர்மையாய் அதுவரை வந்த ஓசை
சுரிதகத் துடனே பொருந்தாது வளையக்
காரண மாக உள்ளதால் கூனாகும்.
நீரது ஓடையில் ஓரிடம் நில்லாது
சார்ந்த இடத்தைச் சுரித்தும் சுழித்தும்
வருவது போலக் கலியொலி வராது
சுரிதகம் அகவல் வெள்ளை ஓசையில்
அகவல் வெண்பா அடிகளில் வந்து
தகவொரு பொருளைத் தாங்கி முடிப்பதில்
வெள்ளைச் சுரிதகம் ஈற்றடி சிந்தடி
நேரிசை யகவல் ஈற்றயல் சிந்தடி.
சுருங்கி முடிவதால் நீர்ச்சுழி போலச்
சுரிதகம் என்னும் பெயரினைத் தாங்கும்.
அடங்கி உள்ளே இசைக்கப் படுவதால்
அடக்கியல் என்றோர் பெயரிதற் குண்டு.
ஈற்றில் வைக்கப் படுவதால் வைப்பு.
வரம்பென உள்ளதால் வாரம் எனும்பெயர்.
செல்லுத லுடையதால் போக்கிய லாகும்.
இத்தனை காரணப் பெயருடன் சுரிதகம்
தத்தம் பாவகை அடிகளும்
அத்தனை யளவே எல்லையும் பெறுமே.

*****
 
7.6. கலிப்பாவின் வகைகள்

(தரவுக் கொச்சகக் கலிப்பா)
கலிப்பாவே பொதுவாக மூவகையில் இயற்றப்படும்
ஒத்தாழிசைக் கலியென்றும் கொச்சகக் கலியென்றும்
வெண்கலிப் பாவென்றும் மூவகைகள் பெயர்பெறுமே

முதலிரண்டு வகைகளிலே துணைப்பிரிவு களுமுண்டு.
மூன்றுவகைப் பெயர்களுமே காரணக் குறியாகவே
சான்றோர்கள் அமைத்தனரே சால்புகளை விளக்கிடவே.

உறுப்பாலே பெயர்பெற்று அளவொன்றிற் குட்பட்டு
சிறப்பான பொருளொன்றை ஆழமாகச் சொல்வதாலும்
பொதுவான இலக்கணத்தில் ஆழமாக இசைத்தலாலும்
பொருளொன்றின் மேல்மூன்று தாழிசைகள் வருவதாலும்
ஒத்தாழிசை யைத்தனக்குச் சிறப்புறுப்பா(ய்) உடைத்தலாலும்
ஒத்தாழிசைக் கலியென்பது காரணக் குறியாகும்.

வெண்கலிப்பா வென்றவகை ஓசையாலே பெயர்பெறுமே
வெண்பாபோல் ஈற்றடியில் மூச்சீராய் இறுதலானும்
வெண்பாவிற் சிறுவேறாய்க் கலியோசை மிக்குவர
வெண்கலிப்பா காரணப் பெயர்பெற்று வருவதாகும்.

கொச்சகக் கலியென்பது பொருளாலே பெயர்பெறுமே
கொய்சகம் எனும்சொல்லே கொச்சகமென் றாயிற்று
கொய்சகம் எனச்சொன்னால் ஓரங்கொய்து சுருக்கப்பட்டு
புடவையெனப் பெண்மக்கள் உடுத்துகின்ற உடையாகும்
புடவையின் கொசுவம்போல் பிறழ்ந்துறழ்ந்து மிக்குறைந்து
கிடக்கின்ற உறுப்பாகி மாச்சீரகள் வருவதனால்
கலியோசை தடுமாறிக் கொச்சையெனச் சிறப்பழியும்
கலிவகைக்கே கொச்சகக் கலிகாரணப் பெயரானது.

ஒத்தாழிசைக் கலிப்பாவின் துணைப்பிரிவு மூன்றாகும்
நேரிசையொத் தாழிசை அம்போதரங்க வொத்தாழிசை
வண்ணகவொத் தாழிசை என்பனவித் துணைப்பிரிவு.
வெண்கலிப்பா ஒன்றேயாம் துணைப்பிரிவு எதுவுமின்றி.


தரவொன்றும் தரவிணையும் சிஃறாழிசை பஃறாழிசை
மயங்கிசை யென்றைந்து வகைகளிலே கலிப்பாவின்
உறுப்புகள் பெருகியும் அருகியும் மயங்கியும்
வருவனவே கொச்சகக் கலிப்பாவின் உட்பிரிவாம்.

ஒத்தாழிசைக் கலிமூன்று கொச்சகக் கலியைந்து
வெண்கலிப்பா வொன்றென்ற ஒன்பதான வகைகளுடன்
உறழ்கலிப்பா என்பதுமோர் வகையென்று உடன்சேர்த்து
மொத்தமாகக் கலிப்பாவில் பத்துவகை யென்றுரைப்பர்.


*****
 
7.7. கலிப்பா வகைகளின் துணைப்பிரிவுகள்

(தரவுக் கொச்சகக் கலிப்பா)
நேரிசையம் போதரங்கம் வண்ணகவொத் தாழிசையாய்
சீரியமூ வகைகளென ஒத்தாழிசைக் கலியிலுண்டு
வெண்கலிப்பா ஒருவகையே கொச்சகமோ வகையைந்தென
பண்பறிந்த புலவர்கள் பகுத்தறிந்(து) உரைத்தனரே.


தரவுடனே தாழிசையும் தனிச்சொல்லும் சுரிதகமும்
நிரலெனவே அளவுடைத்து நான்குறுப்பு வருவதாலும்
ஒலியினிலே உடன்பட்டுப் பொருள்நுண்மை உரைப்பதாலும்
கலிப்பாவின் வகைகளிலே கீர்த்திமிகக் கொள்வதாலும்
நேரிசையொத் தாழிசையே காரணக் குறியாகும்.

அழகுமிக ஒழுகிவந்து தரங்கமென வருவதாலும்
எழுந்துயர்ந்துச் சுருங்கிவந்து கரைதட்டும் கடலலைபோல்
அம்போத ரங்கமெனும் ஓருறுப்புப் பெறுவதாலும்
அம்போத ரங்கவொத் தாழிசையே காரணப்பேர்.

தேவரது விழுப்பமுடன் வேந்தரது புகழினையும்
பாவினிலே வருணிக்கும் பாட்டெனவே வருவதாலும்
வருகின்ற ஒலிதிரிந்து அராகத்தின் முடுகொலியில்
வருணணைகள் தொடர்ந்துவந்து புகழ்பேச அமைவதாலும்
வண்ணகவொத் தாழிசையே காரணக் குறியாகும்.

நேரிசையம் போதரங்கம் வண்ணகவொத் தாழிசையாய்
ஏனிந்த நிரல்தனிலே அமைந்ததுவோ எனக்கேட்டால்
ஒன்றுக்கொன் றோருறுப்பு மிகப்பெற்று வருவதால்தான்.
நேரிசையில் நான்குறுப்பு அம்போத ரங்கமைந்து
வண்ணகத்தில் அராகமுடன் வருவதுவே ஆறுறுப்பாம்.

முன்னியலில் சொன்னதுபோல் கொச்சகத்தில் ஐந்துவகை
தரவொன்றும் தரவிரண்டும் தாழிசைகள் சிலபலவும்
வருமாறு அவையமைந்து வண்ணங்கள் வேறுபடும்
மயங்கிசைக் கலிப்பாவில் கலியாறு உறுப்புகளே
மயங்கிவந்து பெருகிவந்து அருகிவந்து பிறழ்ந்துவந்து
இயன்மயங்கி வேற்றுப்பா இசைமயங்கி வந்துநிற்கும்.


*****
 
7.8. நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா

(தரவுக் கொச்சகக் கலிப்பா)
தரவொன்றும் தாழிசைகள் மூன்றுடனே தனிச்சொல்லும்
சுரிதகமும் நிரலொன்றின் நேரிசையொத் தாழிசையாம்
நேரிசையொத் தாழிசையில் தரவினில்தா ழிசையினிலே
ஓரிசையாம் கலியோசை சீரியதாய்ப் பயின்றுவரும்
ஆசிரியச் சுரிதகத்தில் அகவலது ஓசைவரும்
வெண்பாவின் சுரிதகத்தில் செப்பலது ஓசைவரும்.

சான்று (ஆசிரியச் சுரிதகம்)
கலித்தொகை: பாலைக்கலி 9
இயற்றியவர்: நல்லந்துவனார்

தரவு
எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும்
நெறிப்பட சுவலசைஇ, வேறுஓரா நெஞ்சத்துக்
குறிப்பேவல் செயல்மாலைக் கொளைநடை அந்தணீர்
வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர் இவ்விடை
என்மகள் ஒருத்தியும், பிறள்மகன் ஒருவனும்
தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியர்
அன்னார் இருவரைக் காணிரோ பெரும
காணே மல்லேம் கண்டனம் கடத்துஇடை
ஆணெழில் அண்ணலோடு அரும்சுரம் முன்னிய
மாணிழை மடவரல் தாயிர்நீர் போறிர்

தாழிசை
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும், மலைக்கவை தாமென்செயும்
நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கனையளே

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க் கல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கவை தாமென்செயும்
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கனையளே

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க் கல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கவை தாமென்செயும்
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கனையளே

தனிச்சொல்
எனவாங்கு

சுரிதகம் (ஆசிரியம்)
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்
அறம்தலைப் பிரியா ஆறும்மற் றதுவே.

கலிப்பாவில் இதன் பொருள் இன்றைய வழக்கில்

தரவு
எறித்திடும் கதிர்தாங்க ஏந்தியுள்ள குடைநிழலில்
உறியிட்ட கமண்டலமும் புகழ்பெற்ற முக்கோலும்
முறையாகத் தோள்தாங்க அறமொன்றே மனம்நினைத்து
பொறியைந்தும் மனமொடுக்கும் நெறிநிற்கும் அந்தணர்காள்!
வெம்மையான வனம்வழிச்செல் வழக்கத்தீர்! இவ்வழியே
என்மகளென் றொருத்தியும் பிறள்மகனென் றொருவனும்
தம்முள்ளமே களவுநின்று பிறரறிய வெளிப்போந்த
அன்னாரென் றிருவரை அறிவீரோ பெருமக்காள்?
காணவில்லை யென்றில்லை கண்டோம்நாம் காட்டுவழி
ஆணெழில் ஒருவனோடு அருங்காட்டில் செலத்துணிந்த
மாணிழைபூண் மடமகளின் தாய்போலத் தெரிகின்றீர்!

தாழிசை
பலபொருள்சேர் நறுஞ்சாந்தம் பூசிடுவோர்க் கல்லாது
மலையினிலே பிறந்தாலும் மலைக்கென்ன பயனதனால்?
நிலையிதுவே நும்மகளின் நினைத்ததைநீர் பார்த்தாலே.

சீர்கெழுமிய வெண்முத்து அணியாவ தல்லாது
நீருள்ளே பிறந்தாலும் நீர்தனக்குப் பயனென்ன?
ஆராய்ந்து இதைநோக்கின் நும்மகளின் நிலையிதுவே.

ஏழ்நரம்பின் இன்னிசையே பாடுவோர்க் கல்லாது
யாழுள்ளே பிறந்தாலும் யாழுக்குப் பயனென்ன?
சூழ்ந்திதைநீர் உணர்ந்தாலே நும்மகளின் நிலைபுரியும்.

தனிச்சொல்
எனவாங்கு

சுரிதகம் (ஆசிரியம்)
சிறந்த கற்பிது வருத்தம் கொளற்க
சிறந்தான் வழிபற்றிச் சென்றனள்
அறமிது இல்லற மாகுமென் றறிவீர்.

*****
 
6.09. செப்பலோசை வெண்பாப் பயிற்சி
????????? ??????: ??????????: ????: 6.09. ????????? ???????? ??????? 1

நினைவிற் கொள்ள:
(இன்னிசை வெண்பா)
ஏந்திசைச் செப்பலாம் வெண்சீரின் வெண்டளை
தூங்கிசைச் செப்பல் இயற்சீரின் வெண்டளை
இவ்விரண்டும் சேர்ந்து ஒழுகிசைச் செப்பலாய்ச்
செவ்விதின் யாப்பில் எழும்.

பயிற்சி 1. மூவகைச் செப்பலோசைக் குறட்பாக்கள்

(பஃறொடை வெண்பா)
மூவகைச் செப்பல் ஒலியின் குறட்பாக்கள்
மூன்று கலைந்துள சொற்களில் கீழுள
ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை
தேர்ந்தின் நிரல்களில் மூன்று குறட்பாவும்
ஓர்ந்து அமைத்தே எழுது.

உள்ளத்தால் உள்ளலும் காணாதாற் பெருமை
கள்ளத்தால் காட்டுவான் பிறன்பொருளைக்
தான்காணான் விடும். கள்வேம் தீதே
மறைமொழி நிலத்து வாறு.
எனல். தான்கண்ட நிறைமொழி காட்டி
மாந்தர் காணாதான் கண்டானாம்


*****
 
6.09. செப்பலோசை வெண்பாப் பயிற்சி விடைகள்
பயிற்சி 1. மூவகைச் செப்பலோசைக் குறட்பாக்கள்: விடை

ஏந்திசைச் செப்பல்
காணாதாற் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
--திருக்குறள் 085:09

தூங்கிசைச் செப்பல்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
--திருக்குறள் 003:08

ஒழுகிசைச் செப்பல்
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
--திருக்குறள் 029:02

*****
 
பயிற்சி 2. திருக்குறள் நிரல்வர அமைத்தல்
????????? ??????: ??????????: ????: 6.09. ????????? ???????? ??????? 2

(இன்னிசை வெண்பா)
மூன்றுகுறட் பாக்கள் கலைந்த நிரல்கீழே
ஏந்திசை தூங்கிசை மற்றும் ஒழுகிசை
என்ற நிரலில் அடிகள் வருமாறு
நன்றே அமைத்து எழுது.

தம்தம் வினையான் வரும்.
அறனன்றோ ஆன்ற வொழுக்கு.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின்
அறம்நாணத் தக்க துடைத்து.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்


*****
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top